திங்கள், நவம்பர் 17, 2008

எதிர்மென் அரக்கன்

அவசரமாக அழைத்தார் அதிகாரி. குரலில் சுவாரஸ்யம் தெரிந்தது. "ஜெயகாந்தனும் ஜெயமோகனும் சேர்ந்து ஒரு கதை எழுதியிருக்கிறார்கள். இப்போதுதான் கேள்விப்பட்டேன். எப்படியாவது அந்தக் கதையைக் கண்டுபிடித்துத் தருவது உன் பொறுப்பு'' என்றார்.



அவர் இப்படிச் சொல்வதற்கு முன்பே, வேறொரு ஆசாமி தந்த தகவல் மூலம் இந்த இருவரும் சேர்ந்தெழுதிய கதையை த் தேட ஆரம்பித்து முடியாமல் விட்டுவிட்டேன். அப்படி ஒரு கதை இருந்தால் அதிகாரியிடம் சொல்லலாம்; இல்லையென்றால் அப்படியே அமுக்கிவிடலாம் என்றுதான் ரகசியமாக தேடிப்பார்த்தேன். மீண்டும் எனக்கே அந்தத் தலைவலி. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த அவர்கள்பற்றிய எல்லாச் செய்திகளையும் புரட்டிப் பார்த்துவிட்டேன். இல்லை, அப்படி ஒரு கதை இல்லவே இல்லை.




அந்தக் காலத்தில் கம்ப்யூட்டர் உதவியோடு எல்லாவற்றையும் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். எது சுலபமோ அதுவே கஷ்டத்தையும் கொடுத்துவிட்டது. இப்போதோ ஒவ்வொரு புத்தகமாகத் தேட வேண்டியிருக்கிறது. இருந்த சஞ்சிகைகள், நூல்கள், ஆவணங்கள், பஸ் டிக்கெட்டுகள் எல்லாமே முக்கியம். காகித வடிவில் எது தென்பட்டாலும் பொக்கிஷம். எல்லாவற்றிலும் தேடியாகிவிட்டது. இருவரும் சேர்ந்து எழுதிய கதையும் இல்லை; குறிப்பும் இல்லை.

மீவெண் அலைவரிசை மார்க்கமாக "அவர்கள்' செலுத்திய "எதிர்மென் அரக்கன்' என்னும் வைரஸ் நெüமென் பொருள் கத்தியின்றி, ரத்தமின்றி உலக ராஜ்ஜியங்கள் எல்லாவற்றையும் ஒரே நாளில் சாய்த்துவிட்டது. இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதைப் போல வேறு ஏதோ வெடிவிபத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது பேரிடி. அமெரிக்கா மட்டுமின்றி உலகில் வல்லரசுளென வாலாட்டிக் கொண்டிருந்த ஜப்பான், சீனா, 2020-யில் வல்லரது கனவு கண்டு கொண்டிருந்த இந்தியா எல்லாமே புஸ்...

இப்படி இடர்வருமென யாருமே எதிர் பார்க்கவில்லை. திடும் என பிரபஞ்சமே இருண்டுவிட்டது. மதவாத அடிப்படைவாதிகளுக்குக் கணிப்பொறி மீதும் இணையத்தின் மீதும் இப்படியொரு கோபம் இருக்கும் என யாரும் கவனம் கொள்ள வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

"மைக்ரோ சிப்கள் தந்த மதிப்பில் பேப்பர்களுக்கான மரங்கள் வெட்டப்படுவது மாபெரும் குற்றம் என்று இயக்கம் ஆரம்பித்தார்கள். புதிதாகப் புத்தகங்களே உருவாக்கக் கூடாது என்று சர்வேச அளவில் தடைபோட்டார்கள். இப்போது என்ன ஆயிற்று? õ}குப்பை என்று மைக்ரோ சிப்புகளையும் டிஸ்க்குகளையும் உலகம் முழுதும்திட்டிக் கொண்டிருக்கிறார்கள்... எதிலும் அவசர முடிவு... அதை நடைமுறைப்படுத்துவதில் அத்தனை தீவிரம்... பொறுமையே இல்லை'' என்று பொதுவாக எல்லா விஞ்ஞான வளர்ச்சி குறித்தும் கவலை தெரிவித்தார், உடன் பணியாற்றும் முத்துவேலர்.

அவருடையில் வேதனையில் ஆழமான நியாயமிருக்கிறது.

"சென்ற செப்டம்பரில் "தினமானி'யில் ஒரு கட்டுரை வெளியானது. கத்திரிக்காயைப் பற்றி... உலகிலேயே பிரயோஜனமில்லாத ஒரு காய்கறி உண்டென்றால், அது கத்திரிக்காயாகத்தான் இருக்கும் என்று விளாவரியாக எழுதியிருக்கிறார்கள். இதோ இந்த ஆகஸ்ட்டில் கத்திரிக்காய் ஒன்றுதான் கேன்ஸருக்கான ஒரே மருந்து. அதைத் தொடர்ந்து உட் கொண்டவர்களுக்கு கேன்ஸர் வருவதில்லை என்கிறார்கள். இத்தனைக்கும் இரண்டையும் எழுதியது ஒருவரே'' என்று அலுத்துக் கொண்டார்.

"பாவம் கத்திரிக்காய்.அதற்கு என்ன தெரியும்?'' என்றபடி "இந்த விஷயத்துக்கு ஜெய" விஷயத்துக்கு 'ஒரு பிரிகாரம் சொல்லுஙகள்'' என்றேன்.

நண்பர் சற்றே சோர்ந்தபடி யோசித்துவிட்டு திடீரென்று பிரகாசித்தார். "புலித்தேவரிடம் பார்த்திருக்கிறேன். ஜெயகாந்தன் படைப்புகள் முழுத் தொகுதி, ஜெயமோகன் படைத்தவை முழுத் தொகுதி... இரண்டுமே அவரிடம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.''

இரவே குரோம்பேட்டையில் இருக்கும் புலித்தேவரின் வீட்டுக்கு மின் புயல் மூலம் கிளம்பினோம். உதவும் மனநிலையில்தான் இருந்தார் அவர். ஆனால் புத்தகங்களை எடுத்துச் செல்லக் கூடாது. அங்கேயே பார்த்துவிட்டு தந்துவிட வேண்டும். என்ற கண்டிப்புடன்தான் அந்த உதவி. கம்ப்யூட்டர் அழிவுக்குப் பின் இலக்கிய ஆய்வாளர்கள் அவரைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்திருப்பது தெரிந்தது. நானும் முத்துவேலரும் ஆளுக்கொரு நூலை ஆராய்ந்தோம்.

இரண்டு பேரில் யாருடைய நூலிலாவது இந்த இருவரும் சேர்ந்து எழுதிய கதை தொகுக்கப்டாமலா போயிருக்கும்?... எங்கள் கண்கள் ஆர்வ மிகுதியால் பக்கங்களை அள்ளிக் குடித்தன. ஆயிரக்கணக்கான பக்கங்களை அங்குலம் விடாமல் அளந்துவிட்டன கண்கள். இல்லை... இல்லவே இல்லை.

"நாட்டுடமை ஆக்கப்பட்ட பின்பு பதிப்பித்த நூல்களில் லாப நோக்கமுó கலந்துவிடுவதால் பல கதைகளை சுருக்கியும் வெட்டியும் அல்லது முழுவதுமாக நீக்கியும் விடுகிறார்கள். நாட்டுடமைக்கு முந்தைய இவர்களின்நூல்களைத் தேடினால் ஒரு வேளை கிடைக்கலாம்'' என்று வழி சொன்னார் புலித்தேவர்.

நள்ளிரவு இருவரும் சென்னை திரும்பும்போது சூப்பர் மார்க்கெட் ஆகிவிட்ட மீனம்பாக்கம் நிலையத்தைப் பார்த்தோம்.

"மீனம் பாக்கம் எவன் பெயரிட்டானோ? கடைசியில் மீன் மார்க்கெட்டாகவே மாறிவிட்டது. விமானநிலையத்தை வேலூருக்கு மாற்றியபின் இந்தப் பகுதியே பொலிவிழந்து போய்வட்டது இல்லையா?'' என்றார் நண்பர். இந்தப் பகுதியைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் அவர் சொல்வதாகத் தோன்றியது.

என்றாவது மீண்டும் கம்ப்யூட்டர் உபயோகத்துக்கு வந்துவிடும் என்ற கனவும் பகல் கனவாகிவிட்டது.

பில்கேட்ஸýக்குப் பிறகு கம்ப்யூட்டர் சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக விளங்கிய ஜேம்ஸ் வில்லியம்ஸ், கம்ப்யூட்டரை சரி செய்வதற்கு பதில் கல்லுடைப்பதற்குக் கற்றுக் கொள்ளலாம்' என்று அலுப்புடன் பேட்டி கொடுத்தார் போன வாரம்.

மீண்டும் மருத்துவம், கணக்கியல், பத்திரிகை துறை, தகவல் தொழில் நுட்பம் அனைத்துமே ஒரு நூற்றாண்டு காலம் பின் தங்கிவிட்டது.

நான் அச்சுத்துறையியல் பணியில்தான் வேலைபார்த்து வருகிறேன். பல்கலைக் கழகத்தின் ஒரு பிரிவாக இது செயல்படுகிறது. மொழிகுறித்த ஆய்வுக் கட்டுரைகள் பதிப்பிப்பது எங்கள் துறையின் வேலை. பழைய ஈய அச்சுக் கோப்பு முறையில் புத்தகங்களை அச்சிட்டு வருகிறோம்.

மீண்டும் அழைத்தார் அதிகாரி. "முடிந்ததா?'' என்றார். நான் என்னத்தைச் சொல்ல?

அக் காலத்தில் வந்த சினிமா விமர்சனம் ஒன்றின் முடிவில் "கமலஹாசன்- ரஜினிகாந்த் சேர்ந்து நடித்த படம் நீ... ஜெயகாந்தன் -ஜெயமோகன் சேர்ந்து எழுதிய கதை நீ'' என்ற பாடல் பிரமாதம்' என்று எழுதிய இருந்த வரிதான் என் அதிகாரிக்குக் கிடைத்த ஆதாரம். வேறு எதில் இந்த வரி இடம் பெற்றிருந்தாலும் அலட்சியப்படுத்திவிடலாம். தினமானியில் வந்திருப்பதால் அது தவிர்க்கமுடியாத ஆய்வுப் பொருளாக இருக்கிறது என்றார் அதிகாரி.

"அவர்கள் இருவரும் சேர்ந்து எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் சேர்ந்து நடித்தார்களா என்று தெரியவில்லை. இரட்டிப்பு சிறப்பு கொண்டவன் (ள்) என்று புகழ்வதற்காக அந்த நாளில் ஒரே துறையில் பிரபலமாக இருந்த இருவரையும் சேர்த்து இப்படி புகழ் எழுதியிருக்கலாம். அந்த நாட்களில் ஒரு பெண்ணை இப்படியெல்லாம் கற்பனையாகப் புகழ்ந்து வர்ணிப்பது புழக்கத்தில் இருந்தது'' என்று முற்றுப் புள்ளி வைத்தேன்.

மூன்றாம் நாள் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைந்து நடித்த படங்களின் பட்டியல் மட்டுமின்றி அவர்கள் இருவரும் தோன்றும் "என்னடி மீனாட்சி நீ சொன்னது என்னாச்சு?' என்ற பாடல் காட்சியைக் கொண்டு வந்து திரையிட்டுக் காண்பித்தார்.

அதன் பிறகு ஜெயகாந்தனும் ஜெயமோகனும் சேர்ந்து கதை எழுதியிருக்க வாய்ப்பில்லை என்று சொல்ல முடியாமல் போனது எனக்கு. அதிகாரியோ இருவரும் சேர்ந்து கதை எழுதியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதற்கான ஆதாரங்களை அடுக்óகிக் கொண்டே போனார். அந்த நாட்களில் இரண்டு புகழ்மிக்க எழுத்தாளர்கள் ஒரு வித்தியாசத்ததுக்காகச் சேர்ந்து எழுதும் வழக்கம் இருந்தது என்றார். "புஷ்பா தங்கதுரை என்பவரும் இந்துமதி என்óபவரும் ஒரு தொடர்கதையை எழுதியிருக்கிறார்கள். அதற்கும் முந்தைய கால கட்டத்தில் இளங்கோவடிகள் எழுதிய "சிலப்பதிகாரம்' என்ற காப்பியத்தைத் தொடர்ந்து அதன் தொடர்காப்பியமான "மணிமேகலை'யை சீத்தலைசாத்தனார் எழுதினார்' என்றார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர்களிடம் இப்படியொரு பழக்கம் இருந்தது என்பதைக் குறித்து நீண்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதுமாறும் என்னை நிர்பந்தித்தார். எனக்கு வேலையே அதுதான். கிடைக்கும் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் கட்டுரை எழுதுவது, அல்லது ஆதாரங்களைத் தேடி அலைவது இதுதான் என் வேலை.

கம்யூட்டர் நிரந்தரமானதென நம்பி ஏராளமான தாள் ஆதாரங்களை அலட்சியப்படுத்தியிருந்தனர். உலகமே இ} புத்தகங்கள் படிக்கும் நிலைக்கு மாறிப் போயிருந்ததால் புத்தகம் வைத்திருப்பவரை ஆதிமனிதன் போல பாவித்தனர். புலித்தேவரின் புத்தகப் பித்தைக் கிண்டலடித்து இ} புத்தகங்களின் நிறைய கட்டுரைகள் வெ ளியாகின. "மின்கொன்றை'இதழில் அவருடைய பரம்பரையையே கொச்சைப்படுத்தி எழுதியிருந்தார் ஜெயசாந்தன். இப்போதோ அந்த ஆதி மனிதர்தான் அதிமுக்கிய மனிதராகிவிட்டார்.

மின்கொன்றையையோ சாந்தனையோ குறை சொல்லி என்ன பயன்? நடுவர்க்கத்தினருக்கு அரசு வழங்கும் "இல்'களில் குறுந்தகடுகளுக்கே இடம் இருப்பதில்லை. இதில் புத்தகத்தை எங்கே வைப்பது?

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். ஒழித்துப் போட்ட நூல்களில் இருந்த வாழ்க்கையைத் தேடுகிறார்கள். வழக்கம்போல ஐரோப்பிய நாடுகளில்தான் இதுபோன்ற மீள் நவீனத்துவ இலக்கியம் ஆரம்பமாகியது. "டிராகுலா'வை எழுதிய பிராம் ஸ்டாகருக்கும் ஆஸ்கர் ஒயில்டுக்கும் ஒரே பெண்ணைக் காதலிப்பது தொடர்பான ஏதோ பிரச்சினை இருந்ததாக ஒருவரிச் செய்தி கிடைத்தது. அதைப்பிடித்துக் கொண்டு ஆஸ்கார் ஒயில்ட் தம் காதலியை அபகரித்துவிடுவாரோ என்ற கவலையில்தான் அவரை டிராகுலா போன்ற கதாபாத்திரத்தில் பிராம் ஸ்டாகர் சித்திரித்தார் என்றும் ஆஸ்கார் ஒயில்டும் ஒரு டிராகுலா வகையைச் சேர்ந்தவரா என்றும் ஆய்வுகள் செய்து வருகிறார்கள்.



கணிப்பொறி யுகம் இப்படி திடுதிப்பென முடிவுக்கு வந்துவிட்டதால் இலக்கியம் சம்பந்தமான எல்லாமே எங்களுக்கு ஆதாரமாகின. நேற்று முக்கரும்பு அருகே (திருவல்லிக்கேணி பின்னாலில் "ட்ரிபில் கேன்' ஆகி, அதை இப்படி தமிழ்ப்படுத்திவிட்டார்கள்.) ஒருவர் நடைபாதையில் எஸ்ராவின் பவுண்டு வால்யூம் என்னிடம் இருக்கிறது என்று பேசிக் கொண்டு போனார். எனக்கு எஸ்ராபவுண்டும் எஸ்.ராமகிருஷ்ணனு(எஸ்.ரா.)ம் ஞாபகத்துக்கு வந்தார்கள். சடாரென மின்னல் வெட்டியது.

"உபபாண்டவம்' எழுதியது ஏஸ்ரா பவுண்டா, எஸ்.ராமகிருஷ்ணனா? என்றெல்லாம் இல் அடையும் வரை குழப்பம் நீடித்தது எனக்கு. நல்லவேளை என் அதிகாரி அருகில் இல்லை. இருந்திருந்தால் நிச்சயம் அது ஒரு ஆய்வுக்கட்டுரை ஆகியிருக்கும்.


(சண்டே இன்டியன்- 2008)

LinkWithin

Blog Widget by LinkWithin