சனி, ஜூன் 26, 2010

வெட்டுப்புலி – ஒரு பார்வை -ஆர். முத்துக்குமார்

‘வெட்டுப்புலி தீப்பெட்டியின் முகப்பில் இருக்கும் மனிதர் என்னுடைய கொள்ளுத்தாத்தா. அவருடைய வரலாறைத் தேடிச் செல்கிறேன். நண்பர்கள் பிரபாஷும் ஃபெர்ணாண்டஸும் துணைக்கு வருகிறார்கள்’ என்கிறார் தமிழ்ச்செல்வன். தேடலின் வழியே சில குடும்பங்களை, மனிதர்களை நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், மாற்றங்கள் மூலம் முப்பதுகளில் தொடங்கி புத்தாயிரத்தின் முதல் ஒன்பது ஆண்டுகள் வரையிலான சமூக அமைப்பை, பழக்கவழக்கங்களை, சாதிச் சிக்கல்களை, ஏற்றத்தாழ்வுகளை நினைவுபடுத்துகிறார்.

முக்கியமாக, திராவிட இயக்க அரசியலை அதிகமாகப் பேசுகிறது இந்த நாவல். தமிழகம் மற்றும் தமிழினத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட திராவிட இயக்கத்தின் தோற்றத்தை, பரிணாம வளர்ச்சியை கதாப்பாத்திரங்கள் மூலம் நாவல் நெடுக சொல்லிச் செல்கிறார் தமிழ்மகன்.

சமூக ஏற்றத் தாழ்வுகள் அனைத்தும் பிராமணர் – பிராமணர் அல்லாதார் இருவரிடம் மட்டுமே நிலவுகின்றன என்பதை நானும் ஏற்கவில்லை. நாவலும் ஏற்கவில்லை. நாவலின் இந்த அம்சம்தான் என்னை ஈர்த்தது.

முப்பதுகள், நாற்பதுகள் என்று பத்து ஆண்டுகளுக்கு ஒரு பகுதி என்ற உத்தியுடன் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலில் வெறும் தகவல்கள் மட்டும் பதிவாகவில்லை. மனிதர்கள். அவர்களுடைய குணநலன்கள். அவர்களுடைய முக்கியத்துவம். அவர்களுடைய பங்களிப்புகள். தேவைக்கு ஏற்றவகையில் பதிவாகியுள்ளன. தேவைக்கு ஏற்ப என்றால் நாவலாசிரியரின் தேவைக்கு ஏற்ப. அவரைப் பாதித்த, அவருக்குப் பிடித்தமான அல்லது பிடிக்காத மனிதர்களும் அவர்கள் தொடர்பான நிகழ்வுகள் நாவல் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

புனைவு எழுத்தாளருக்கே உரித்தான சில உரிமைகளை அவர் பயன்படுத்திக்கொண்ட விதம் அபுனைவில் மட்டுமே ஆர்வம் செலுத்தும் என்னைப் பொறாமை கொள்ளவைக்கிறது. குறிப்பாக, எம்.ஜி.ஆர் – கலைஞர் பற்றி அப்போது வழக்கத்தில் இருந்த கேலிச் சொற்றொடர்களை அவர் பயன்படுத்திய நாசூக்கு.

நாவலில் என்னைக் கவர்ந்த, என்னை சிலிர்க்க வைத்த, என்னை ஆச்சரியப்படுத்திய சில வசனங்களை, சில வரிகளை இங்கே பதிவு செய்கிறேன். ஏன் என்பதைப் படிக்கும்போதே புரிந்துகொள்ளமுடியும்.

‘என்னென்னமோ பலகாரங்க. ஆகாரமா.. ருசியான்னு ஆகிப்போச்சி. வெள்ளைக்காரனுங்க மாதிரி ஐயர் வூடுகள்லயும் காப்பிக் குடிக்க ஆரம்பிச்சுட்டானுங்களே..’

0

‘காந்தி குசுவுக்கு சமானம்னு சொல்றானே மணி ஐயரு. வெள்ளக்காரனை ஒண்ணும் பண்ண முடியாதுங்கிறது அவன் அபிப்ராயம்’

‘அவன் கிடக்கிறான். அப்புறம் காந்தி ஆட்சிய புடிச்சுட்டா அவர்தான் தெய்வம்னு சொல்லிடுவான்’

0

‘பாரேம்மா என் தம்பியோட தைரியத்தை? வெரிகுட்.. வெரிகுட்.. சினிமாவுக்குத்தான் ஜனங்க ஆளா பறக்குறாங்களே.. நல்ல யோசனைதான். பாப்பானுங்க நுழையறதுக்குள்ள நுழைஞ்சுடு.. ம்ம்..வெரிகுட்’

‘ராஜாஜி வடக்கில் தம் பெண்ணைக் கட்டிக்கொடுத்து விட்டதால் வடக்குத் தெற்கு எல்லாம் இணைந்துவிட்டதாக நினைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்!’

0

‘தருமன் ரெட்டியார்தானா?‘

‘எதுக்குக் கேக்கிற இப்ப? தொட்டுப்புட்டானா?’

‘அதெல்லாம் இல்ல’

‘தொட்டுகிட்டுப் பேசினான்னா சொல்லு.. பிச்சிப்புட்றேன் பிச்சி..’

0

அவனும் அவனுடைய கூட்டாளிகளும் இன்றும் ஒருமுறை ‘மனோகரா’ படம் பார்க்கக் கிளம்பினர். அது அவர்களின் கோபத்தை அணையாமல் பார்த்துக்கொள்ளும் கவசமாகவும் ஊதி அதிகப்படுத்தும் உலைக்களமாகவும் இருந்தது.

0

யாரோ ஒருவன் மேடையைப் பார்த்துக் குரல் கொடுத்தான். பெரியார் மேடையில் இருப்பவர் பக்கம் திரும்பி என்ன சொல்கிறார் அவர் என்று கேட்டார். குத்தூசி குருசாமியோ, யாரோ முதுகுக்குப் பின்னாடி வந்து நின்று ‘நாடகத்தை ஆரம்பிக்கச் சொல்றாங்க’ என்றார்.

பெரியார் கொதித்துப் போனார். ‘அதுக்குத்தான் வெங்காயம் இந்த நாடகம் கூத்தெல்லாம் வேணாம்னு தலையில அடிச்சுக்கிட்டேன். முக்கியமான பேச்சப்போ திசை மாறிட்டான் பாரு? வேணுமா இதெல்லாம்? என்று மைக்கிலேயே முழங்கினார். அண்ணா வெலவெலத்துப் போனார்.

0

கட்டிலில் ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற திராவிடர் கழக வெளியீட்டை ஹேமலதாவின் கையில் கொடுத்துப் படிக்கச் சொல்லக் காத்திருந்தான். அவள், ‘எப்பப் பார்த்தாலும் புக்ஸு புக்ஸு’ என்றபடி அதைப் பிடிங்கி கீழே வைத்தாள்.

‘இது நான் படிக்கறதுக்கு இல்ல, நீ படிக்கறதுக்கு’

‘எனுக்கா? கீழே கிடந்த புத்தகத்தை ஆர்வம் பொங்க எடுத்தாள். ‘அழகுதான்.. எனக்கு அரவம் ஒரு அட்சரம் படிக்கத் தெல்லதே..’ கட்டிலில் அதை வீசிவிட்டு முந்தானையை விலக்கினாள். பேரதிர்ச்சியோடு பார்த்தான். அங்கே தாலி தொங்கிக் கொண்டிருந்தது.

‘அம்மாதான் கழுத்து மூலியா இருக்க ஒத்துனு செப்பி அரை சவ்ரன்ல தாலி எடுத்துக் குடுத்துச்சி’ என்றாள்.

0

‘ஐயர் இன்னா மந்திரம் சொல்றாரு தெரியுமா? உம் பொண்டாட்டிய அக்னி தேவன் தன் அனுபோகத்தில வெச்சிருந்தான்.. வாயு தேவன் வெச்சிருந்தான்.. இப்ப நான் வெச்சிருக்கேன்.. இனிமே நீ வெச்சுக்கோன்னு சொல்றான்.. இந்தக் கருமத்தைச் சொன்னாத்தான் கல்யாணமா? உலகம் ஃபுல்லா இப்பிடித்தான் சொல்லி கல்யாணம் பண்ணிக்கறானா? த பார்ப்பா.. ஐயர் வந்துதான் பண்ணனும்னா எனக்குக் கல்யாணமே வேணாம். சொல்லிட்டேன்’

0

‘அவா, இவா, நேக்கு, நூக்கும்பானுங்க. அதிலதான் இருக்கு அவனுங்க உயிரே.. நல்லா தமிழ்ல பேசிக்கினே இருப்பான். அவனுங்க ஆளுங்கன்னு தெரிஞ்சதும் ஜலம் சாப்பிட்றேளானு மாறிடுவான். லோகம் கெட்டுக் கெடக்குன்னுவான்.. த்தா’

0

‘யாரை நொள்ளைக் கண்ணன்னு சொன்ன? கொன்னுப் போட்டுடுவேன் தெவடியா பசங்களா?’ முகம் சிவக்கப் படபடப்புடன் வெகுண்டார்.

‘த்தா இன்னா? கருணாநிதியதான் சொன்னேன். இன்னா பண்ணிடுவே? கண்ணு நொள்ளையா இருந்தா சொல்லாம இன்னா சொல்லுவாங்க?’

மொத்த பேரையும் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிடுவேன்.. சும்மா என்கிட்ட விளையாடாதீங்க..’‘

‘இன்னா பெரியவரே.. பசங்க ஏதோ கத்திக்கிட்டுப் போறானுங்க.. விடுங்க.. இதுக்கெல்லாம் சண்டைக்கி வந்தா எப்பிடி..உங்க ஆளுங்க கூடத்தான் பொட்டைன்னு கத்தறானுங்க.. நாங்க பதிலுக்கு அடிச்சா சரியாயிடுமா?’

0

‘பொஸ்தகம்னா பிராமின்ஸ் எழுதறதுதானே..? பாரதியார், வ.வே.சு., தி.ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன்.. எல்லாம் யாரு?’

‘எல்லாத்தையும் பெரியார் கண்ணாடி போட்டுக்கிட்டு பாக்காதீங்க.. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன்லா உங்க ஆளுங்கதானே?’

‘உங்களுக்கு ஏத்த மாதிரி எழுதினதால வுட்டு வெச்சிருக்கீங்க’

லட்சுமண ரெட்டி - குணவதி, தியாகராஜன் – ஹேமலதா, நடராசன் – கிருஷ்ணப்ரியா இந்த மூன்று ஜோடிகள் பேசும்போது வெளிப்படும் வார்த்தைகளை உன்னிப்பாகக் கவனிக்கவும். அவற்றில்தான் கடந்த எண்பது ஆண்டுகால சமூக வாழ்க்கையும் அரசியலும் புதைந்துகிடக்கின்றன.

0

எட்டிப் போடா சூத்திரப் பயலே! என்ற ஐயர் பேச்சும் ஆரியம்தான்.

கிட்ட வராதே சேரிப்பயலே என்று பேசும் முதலியார் முடுக்கும் ஆரியம்தான்.

படையாச்சிக்கு இவ்வளவு உயர்வா? என்று கேட்கும் பேச்சும் ஆரியம்தான்.

மறவர் முன்பு மட்டு மரியாதையோடு நட!

தேவர் வருகிறார், எழுந்து நில்!

நாடார் அழைகிறார், ஓடி வா!

செட்டியார் கேட்கிறார், தட்டாமல் கொடு!

- என்று ஆரியம் பலப்பல முறைகளில் தலைவிரித்தாடுகிறது, தம்பி, பல முறைகளில்.

தமிழ்மகன் எழுதிய ‘வெட்டுப்புலி’யைப் படிக்கும்போது அடிக்கடி என் நினைவுக்கு வந்த அண்ணாவின் வரிகள் இவை.


Tags: சாதி, நாவல், வெட்டுப்புலி. திராவிட இயக்கம்
Posted in அரசியல், புத்தகம்

LinkWithin

Blog Widget by LinkWithin