வெள்ளி, மே 15, 2009

சினுவா ஆச்சுபியுடன் ஓர் ஆப்ரிக்கப் பயணம்!

ஒரு இனம் அல்லது ஒரு மொழி அதன் தொன்மையை எப்படி பறைசாற்றுகிறது?

அதனுடைய ஆழமான இலக்கியச் செறிவு, உணவுப் பழக்க முறைகள், பண்பாட்டு கூறுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு ஓர் இனத்தின் தொன்மை அளக்கப்படுகிறது. கிரேக்க, எகிப்து, இந்திய பழந்தன்மையைப் பார்த்தால் அவற்றுக்கான இதிகாசங்கள், ஆன்மிக வசாரங்கள், அறிவியல் தேடல்கள், உணவு} உடை } அணிகலன் பழக்கங்கள் என சில பொதுத் தன்மையைக் காண்கிறோம். கலாசார ரீதியில் வளர்ந்த ஒரு நாகரிகத்தோடு இன்னொரு நாகரிகத்துக்கு குறிப்பட்ட அளவிலான தொடர்பு இருந்ததைதையும் சில பரிவர்த்தனை இருந்ததையும் பார்க்க முடிகிறது.

ஆனால் ஆதி இன மக்களிடம் இந்தச் சமரசம் இருந்ததில்லை. அவர்கள் சிறிய குழுவாக இருந்தாலும் அவர்களின் தனித்தன்மையை இழக்காமல் இருப்பதில் பிடிவாதமாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். பல நூறாண்டுகளாக அவர்களிடம் அந்த நம்பிக்கைகள் பிடுவாதங்களோடு இருக்கின்றன. முகத்தில் வண்ணங்களைப் பூசிக் கொள்வது, ஆடையில்லாமல் இருப்பது, தலையில் பறவையின் இறகுகளைச் சொருகிக் கொள்வது என்று அவர்களின் நம்பிக்கை மிகுந்த இயற்கைத் தன்மையோடு இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆப்ரிக்க, அமேசான், அந்தமான், ஆஸ்திரேலிய காடுகளில் இன்னமும் இந்த ஆதி இன மக்கள் மனிதச் சமூக உறவுகள் அறுந்து துண்டுச் சங்கிலிகளாக வாழ்வதைப் பார்க்க முடிகிறது. நம்முடைய கி.மு., கி.பி., இரண்டாம் உலகப் போர், 123, நியூக்ளியர் போர் எதுவும் அவர்களுக்குத் தெரியாது. நம்முடைய பிட்ஸô,
ரவா உப்புமா எதுவும் தெரியாது. தொடர்புகள் துண்டிக்கப்பட்டு அதே சமமயத்தில் அவர்களுக்கான பிரத்யேக அடையாளங்களோடு உலகில் ஏராளமான இனக்குழுக்கள் உள்ளன.

இந்த ஆதி இனக் குழுக்களின் அடையாளம்? அதன் வேடிக்கையான நம்பிக்கைகள்தான் அதன் தொன்மையின் அடையாளமாக இருக்கிறது.

ஆப்ரிக்க எழுத்தாளரான சினுவா ஆச்சுபி தன் 28 வயதில் எழுதிய சிதைவுகள் (ற்ட்ண்ய்ஞ்ள் ச்ஹப்ப் ஹல்ஹழ்ற்) இப்படியான மூர்க்கத்தனமான நம்பிக்கைகள் கொண்ட ஒர் இனக்குழுவின் கதை.

கதையைப் படிக்க ஆரம்பித்ததுமே ஆப்ரிக்க செம்மண் பூமியில் மலைகளும் மரங்களும் சூழ்ந்த ஒரு பொட்டல் பூமியை மனச் சித்திரமாகப் பார்க்கிறோம். நாவல் நம்மை மெல்ல மெல்ல விழுங்க ஆரம்பிக்கிறது. நாமே நாவலின் ஒரு கதாபாத்திரம் போல மாறத் தொடங்குகிறோம். நமக்கு மிகவும் அன்னியப்பட்ட களம்தான். ஆனாலும் மரபார்ந்த நம்முடைய சில நம்பிக்கைகள் நம்மை ஏதோ ஒரு புள்ளியில் நம்மை அவர்களுடன் ஒருங்கிணைக்கிறது. நம் கற்பனையில் ஒரு மலைவாழ் கிராமத்தையும் பழங்குடி மக்களையும் கற்பனை செய்து கொள்ள முடிகிறது. அவர்களுடைய விவசாய முறை, உணவு முறை எல்லாம் நமக்குப் புரிபட ஆரம்பிக்கிறது. பளீரென்ற ஒரு தருணத்தில் நாம் அந்தப் பொட்டல் காட்டில் நிற்கிறோம். அவர்களின் அனைத்து சம்பிராதாயங்களோம் சடங்குகளோடும் ஏற்றுக் கொண்டு உடனிருக்கிறோம்.

ஒக்கொங்வோ என்ற துணிச்சல் மிக்கவனை நாவலின் முதல் வரியிலேயே அறிமுகப்படுத்துகிறார். அவன் ஒரு மல்யுத்த வீரனை வீழ்த்துகிறான். குழுவே அவனைக் கொண்டாடுகிறது. அடுத்து வேறொரு பிரச்னைக்காக பக்கத்தில் இருக்கும் இன்னொரு இனக் குழுவினருடன் மோதி பணயமாக அங்கிருந்து ஒரு சிறுவனையும் ஒரு இளம் பெண்ணையும் பெற்றுவருகிறார்கள். பெண் யாருக்கோ அனுப்பிவைக்கப்பட்டு என்ன ஆனாள் என்பதுகூட இரண்டாம்பட்சமாகிவிடுறது. அதாவது மாற்றுக் குழுவில் இருந்து பிடித்துக் கொண்டு வரப் பட்டவர்களுக்கு அவ்வளவுதான் மரியாதை. அந்தச் சிறுவனை ஓராண்டு வரை வைத்திருக்கும் பொறுப்பு ஒக்கொங்வோவுடையது. என்ன காரணத்தாலோ மூன்றாண்டுகள் வரை அவனை குழுப் பொறுப்பாளிகள் மறந்துவிடுகின்றனர். அவன் ஒக்கொங்வோவின் வீட்டில் குழந்தைகளுடனும் சகோதரனாகவும் அவனுடைய நான்கு மனைவி


மார்களுடனும் மகனைப் போலவும் பழகிவிடுகிறான்.

இந்த நேரத்தில் ஓராண்டு மட்டுமே ஒக்கொங்வோவின் பராமரிப்பில் விடப்பட்ட சிறுவனைப் பற்றி முடிவெடுக்க குழு கூடுகிறது. அவனை எல்லோரும் சேர்ந்து ஓர் இரவில் உமோஃபியா கிராமத்துக்கு வெளியே அழைத்துச் செல்கிறார்கள். பையனுக்கு தம்மை தன் வீட்டில் அழைத்துச் சென்றுவிட்டுவிடுவார்கள் என்று தோன்றுகிறது. பிரிந்து வந்த தன் சொந்த சகோதரியையும் தாயையும் பற்றி ஏகப்பட்ட ஆசைகளோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறான். திடீரென்று எல்லோரும் பின் தங்கி விடுகிறார்கள். அந்தத் தனிமை அவனை அச்சமூட்டுகிறது. குழுவில் இருந்த ஒருவன் பெரிய கத்தியை எடுத்து அவனுடைய கழுத்தை வெட்ட பாய்கிறான். சிறுவன் தப்பி ஓடிவந்து தன்னை வளர்த்த ஒக்கொங்வோவை நோக்கி அபயம் தேடி ஓடிவருகிறான். அருகில் வந்ததும் சுலபமாக அவனை வெட்டிவிடுகிறான் ஒக்கொங்வோ.

இதில் எந்தவித அதிர்ச்சியும் அடையாமல் மேற்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நம்முடைய நீதி மன்றத்தில் அவர்களைப் பொருத்திப் பார்ப்பது அபத்தம். நம்முடைய (இந்த "நம்முடைய' நாகரீகக் குழுக்கள் என்று சொல்கிற உலகத்துக்கானது) கிராம நீதி மன்றத்தில் யார் கற்பழித்தானோ அவனுக்கே பெண்ணைக் கட்டி வைக்கிற தீர்ப்புகளும் பசிக்காகத் திருடியவனைச் சிரச்சேதம் செய்வதும் பிறகொரு காலத்தில் காட்டுமிராண்டித்தனமானதாகக் கட்டம் கட்டப்படும்.

கதைக்கு வருவோம்.

இதே ஒக்கொங்வோ ஒரு கேளிக்கையின் போது தம் இனச் சிறுவனைக் தவறுதலாக உயிர்ச்சேதம் செய்துவிடுகிறான். எந்தவித நோக்கமும் இல்லாமல் தவறுதலாக நேர்ந்த இந்த விபத்துக்கு அவனை ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கிரார்கள். ஏழாண்டுகாலம் அவன் தம் இனத்தைப் பிரிந்து வாழ்கிறான்.

இத்தகைய நம்பிக்கைகளும் ஒழுங்கென வகுக்கப்பட்ட ஒழுக்கங்களும் நிரம்பிய பிராந்தியத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் தேவ பிதாவோடு வருகிறார்கள். இரும்பு குதிரை (சைக்கிள்)யில் வந்த ஒரு பாதிரியாரைக் கட்டி வைத்து உதைக்கிறார்கள். ஆனால் இப்படி அறியாமையில் இருக்கும் மக்களை மீட்க ஒருவர் பின் ஒருவராக பாதிரி மார்கள் வந்து சேர்கிறார்கள். தேவாலயம் எழுப்புகிறார்கள். அங்கே அவர்களுக்கு வேலையும் கல்வியும் புதிய மத அடையாளங்களும் ஏற்படுத்தப்படுகிறது. ஆதி இனக்குழுவின் முதியவர்கள் பாதிரிமார்களையும் ஐரோப்பிய ஆட்சியாளர்களையும் எதிர்க்கிறார்கள். ஐரோப்பியர்கள் நீதி அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. அதாவது அநீதியாக இருக்கிறது.

நீதிமன்ற ஏவலாளை வெட்டிச் சாய்த்த குற்றத்துக்காக ஒக்கொங்வோ தேடப்படுகிறான். ஆனால் நீதி மன்றக் காவலர்களால் அவனைத் தூக்குமரத்தில் இறந்து தொங்கும் நிலையில்தான் கைப் பற்ற முடிகிறது. அவனை கீழே இறக்குவதற்கு அவனுடைய இன மக்கள் யாருமே வரவில்லை. எந்த இனத்துக்காக அவன் தன் வாழ்நாளெல்லாம் போராடினானோ எந்த இனத்துக்காக உயிரை விட்டானோ அந்த இனத்து மக்கள் அவனை மரத்தில் இருந்து கீழே இறக்கவோ, புதைக்கவோ வரவில்லை. ஏனென்றால் அவர்கள் இன வழக்கப்படி தற்கொலை செய்து கொள்வது குற்றம். அது எந்தக் காரணத்துக்காக இருப்பினும். கதை முடிகிறது.

காலனி ஆதிக்கம் அந்த மனிதர்கள் மீது நிகழ்த்தப் போகும் நாகரீகத்தின் திணிப்பு நம்மை திகில் கொள்ள வைக்கின்றன. யேசுவுக்குப் பதிலாக அவர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கிற கடவுளும் ஐரோப்பிய சட்டங்களுக்குப் பதிலாக அவர்களுடைய சட்டங்கள்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றும்கூட அந்த அச்சத்தின் காரணமாக நினைக்கத் தோன்றுகிறது.

அவர்களை ஜீன்ஸ் பேண்ட் போட வைப்பதும் கேக் சாப்பிட வைத்து தேவாலயத்தில் ஆமென் சொல்ல வைப்பது அவ்வளவு முக்கியமா?

ஒரு சிங்கம் அதன் விருப்பம் போல இருப்பதற்கும் ஒரு பூனை அதன் விருப்பப்படி வாழ்வதற்கும் உரிமை உள்ள இந்தப் பூமிப்பந்தில் மனிதனுக்கு மட்டும் தாம் பின்பற்றுவதை எல்லோருமே பின்பற்ற வேண்டும் என்ற அவசரம் இருக்கிறது. ஹிட்லரும் புஷ்ஷும் பின்லேடனும் நரேந்திர மோடியும் இந்த அவசரங்களுக்காக வருத்தப்பட வேண்டிய நிலை வரும். ஆனால் பெரும்பாலும் அந்தச் சந்தர்ப்பங்களில் வருத்தப்பட வேண்டியவர்கள் இருப்பதில்லை.

கதையின் களத்தில் நாமும் ஒரு மனிதராக கலந்து பிரயாணிக்கிற உணர்வைத் தருவதால் நமக்கும்கூட "உமோஃபியா'வின் உரிமைமீது அக்கறை ஏற்படுகிறது. காலனி ஆதிக்கத்தின் மீது "இனம் புரிந்த' கோபம் ஏற்படுகிறது. நாவலின் வெற்றியாக நான் நினைப்பது அதைத்தான்.

(நன்றி புத்தகம் பேசுது இதழ்- மே 2009)

LinkWithin

Blog Widget by LinkWithin