சனி, ஜூலை 22, 2006

மாண்புமிகு நடிகர்களும் மாண்புமிகு மக்களும்...


மாண்புமிகு நடிகர்களும் மாண்புமிகு மக்களும்...

'சினிமா நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் இல்லையென்றால் இனிமேல் எங்களால் படமெடுக்க முடியாது' என்று ஒற்றைக்காலில் நிற்கிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். 'ஓடுகின்ற குதிரையின் மீதுதானே பணம் கட்டுகிறீர்கள். தரமில்லாத சரக்கு என்றால் எதற்காக அதற்குப் போட்டி போடுகிறீர்கள்?' என்கிறது நடிகர் சங்கம். ஒரு படம் கருவாகி, உருவாகி, வெளியாகி ஓடுவதற்கு எத்தனை பிரிவினரின் உழைப்பு தேவைப்படுகிறது? பட்டியல் இடுவோம். கதாசிரியர், இயக்குநர், வசனகர்த்தா, உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவாளரின் உதவியாளர்கள், லைட்மேன்ஸ், ஆர்ட் டைரக்டர், அவருடைய உதவியாளர்கள், ஸ்டன்ட், நடனக் கலைஞர்கள், துணை நடிகர்கள், புரொடக்ஷன் ஆட்கள், புரொடக்ஷன் மேனேஜர், வாகனம் ஓட்டுபவர்கள், உணவு தயாரிப்பவர்கள், பரிமாறுகிறவர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடுபவர்கள், பேசுபவர்கள், ஆடை வடிவமைப்பவர்கள், பத்திரிகைத் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ஷ¥ட்டிங் ஸ்பாட் ஏஜெண்டுகள்... இன்னும் சொல்ல மறந்த எத்தனையோ பேரின் உழைப்பு சினிமா வெற்றிக்குத் துணை நிற்கிறது.

இவ்வளவு உழைப்புக்கும் பணம் செலவிடுகிற தயாரிப்பாளர், அவருக்குத் துணை நிற்கிற விநியோகஸ்தர்கள், சினிமா தியேட்டர் அதிபர்களின் திரையீடு உத்திகளும், திறமைகளும், பணம் புரட்டப் படும் பாடுகளும் உழைப்பின்றி வேறென்ன? மேலே குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினரின் உழைப்பு, நடிகர்களின் உழைப்புக்குச் சற்றும் சளைத்ததில்லை. அப்படியென்றால் இத்தனை குதிரைகள் இழுத்துக் கரை சேர்க்கும் சினிமா தேரை, நடிகர்கள் மட்டும் இழுத்துக் கரை சேர்த்ததாகச் சித்திரிப்பது, எந்த வகையில் நியாயம்?

லைட்மேன் 'குதிரை'யின் மீதோ, வட இந்திய நடிகர்களுக்குக் குரல் கொடுத்து அந்தப் பாத்திரத்துக்கு உயிரூட்டும் பின்னணிக்குரல் தரும் 'குதிரை'யின் மீதோ யாரும் பணம் கட்டாதது ஏன்? அஜீத்தும், விஜய்யும், ரஜினிகாந்தும், ஜோதிகாவும் மட்டுமே முழுப் படத்தின் வெற்றியைச் சுவைப்பது எப்படி நியாயம்? இது தமிழ் நடிகர்களுக்கு மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் நட்சத்திரங்களுக்குமான நியாயமாகவே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு, பழக்கத்திற்குள்ளாக்கப்பட்டு விட்டது.
ஆம்! வெறும் பழக்கம்தான். வாழ்க்கையே சில பழக்கங்களின் தொகுப்பு எனும்போது இது மட்டும் பழக்கமாக இருக்கக்கூடாதா? நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் பழக்கமும், அவர்களுக்கு விதம்விதமான பெயர்களில் அமைப்புகளை ஏற்படுத்தி விருதுகள் வழங்கும் பழக்கமும், நடிகர்களின் காதல்களையும் கல்யாணங்களையும், விவாகரத்து விவகாரங்களையும் தலைப்புச் செய்திகளாக்கிய பத்திரிகைகளின் பழக்கமும், குழந்தைகளுக்குக் கடவுள், தேசத் தலைவர், மகான்களின் பெயர்களை விட நடிகர்களின் பெயர்களைச் சூட்டி மகிழும் பழக்கமும், அவர்களைப் போலவே ஆடையும், அலங்காரமும் செய்து கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டதுதான் நடிகர்களை முன்னுதாரணப் பிரதிநிதிகளாக்கியிருக்கிறது. அவர்கள் பேசும் சினிமா வசனங்கள் பொன்மொழிகளாக - ஆட்டோ வாசகங்களாக - மனக் கல்வெட்டாக மாறும்போது அந்த உயர்ந்த மனிதர்களுக்கு உயர்ந்த ஊதியமும் வழங்குவதில் தவறு இல்லைதானே? எந்தக் கலெக்டருக்கு, காவல் துறை அதிகாரிக்கு மக்கள் ரசிகர் மன்றம் அமைத்தனர். நல்லவர்கள் போற்றப்படுவதில்லை. ஊழல் செய்யும் ஒன்றிரண்டு அதிகாரிகளைக் கிழிகிழி என்று மீடியாக்கள், லஞ்சமே வாங்காதவர்களுக்குக் 'காலமானார்' பகுதியில் கூட இடம் தருவதில்லையே... நடிகர்கள் சிறந்த நடிகர் விருது வழங்கும் அமைப்புகள்தான் எத்தனை? மத்திய அரசும், மாநில அரசும் மட்டும் இதில் விதிவிலக்கா? சிறந்த விவசாயியையோ, சிறந்த விஞ்ஞானியையோ, சிறந்த எழுத்தாளரையோ இப்படி போட்டி போட்டுக் கொண்டு அமைப்புகள் கெளரவிக்கின்றனவா? நடிகர்களின் வீட்டில் மட்டும் கேடயங்கள் அணிவகுப்பு ஏன்? சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமா நடிகர்களுக்கான விருது வழங்கும் விழாவைப் பற்றிக் குறிப்பிட வேண்டும்.
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பாலிவுட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் எல்லாம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். நகரின் மிகப் பெரிய அரங்கில் விழா. அனைத்துப் பிரபலங்களும் விழாவுக்கு வந்து போக விமான ஏற்பாடுகள், கார் ஏற்பாடுகள்,

''நடிகர்களை இத்தனைச் சிறப்பாகக் கெளரவிப்பதில் இந்த விழாவை நடத்தும் சினிமா பத்திரிகைக்கு என்ன லாபம்?'' என்று என்னிடம் கேட்டார் விழாவில் விருது பெற்ற ஒரு நடிகை.
''பத்திரிகைக்கு பெரிய விளம்பரம் கிடைக்கும்'' என்றேன். ''அதற்காக எவ்வளவு செய்கிறார்கள்?''
''ஏறத்தாழ ஒன்னரை கோடி ரூபாய்" ''அவ்வளவு பணம் திரும்பக் கிடைக்குமா?''
''கிடைத்து விட்டது''
''எப்படி?''
''ஒரு இரண்டு சக்கர வாகனம் தயாரிக்கும் கம்பெனி ஸ்பான்சர் செய்திருக்கிறது"
''அவர்கள் அந்தப் பணத்தைப் திரும்ப எடுத்து விடுவார்களா?''
''இந்நேரம் எடுத்திருப்பார்கள்'' நடிகையின் புருவம் உயர்ந்தது
''எப்படி?''
''ஒன்னரை கோடி என்பது அந்த நிறுவனத்தின் 100 வண்டிகளின் விலை. இந்த விழா விளம்பரங்கள் மூலம் அவர்களுக்கு 500 வண்டிகளாவது விற்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. செலவு செய்தது மாதிரி ஐந்து மடங்காகப் பணம் திரும்பும்...''
''அப்படியானால் இவ்வளவு செலவையும் எற்றுக் கொள்பவர்கள்?...''
''வேறு யார்? மக்கள்'' என்றேன்.
பக்கத்தில் இருந்த என் நண்பர் திருத்தினார் : ''வழக்கம் போல...''
-தமிழ்மகன்

வைரமுத்துவின் சுவாசப் பிரச்சனை...!


தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகளுக்கு ஓயாமல் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் ஒப்பற்ற பணியில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பவர், கவிஞர் வைரமுத்து. 'பொன்மாலைப் பொழுது' என்றும், 'பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ' என்றும் 'வானம் எனக்கொரு போதி மரம்' என்றும் முதல் பாடலிலேயே பல சொற்கோவைகளை உருவாக்கி வியப்பில் ஆழ்த்தியவர். 'அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது', 'உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்', 'விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே... நான் வந்து விழுந்துவிட்டேன் அன்பே' எனக் காதல் பாடல்களில் நம்மைக் கனிந்துருக வைத்தவர். 'மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை', 'பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்' என நம் பார்வையில் பட்டு மனதுக்குள் பதியாமல் போன உலகின் ரசனைக்குரிய பகுதிகளின் இனிய பட்டியலை இவர் தொகுத்தளித்திருக்கிறார். நம்பிக்கையளிக்கும் பாடல்களும் இவரிடம் பொங்கி வழியும். 'பூலோகம் ஆனந்தத்தின் எல்லை... பூமிக்குக் கண்ணீர் சொந்தமில்லை', 'வாழச் சொல்வது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா' என்று மகிழ்ச்சியான விஷயங்களைப் பட்டியலிடுவார். 'மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்' போன்ற புரட்சி வரிகளும் இவருடைய திரைப் பாடல்களில்...
சந்தங்களுக்குள் சங்கதிகளை அடக்குவது சாதாரணமில்லை. புதிய வீச்சுள்ள பாடல் வரிகளால் அதிசயக்க வைத்தவர். கண்ணதாசன் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில் வடுகபட்டியில் இருந்து ஒரு புதிய கவிஞன் புறப்பட்டு வந்து பாடலாசிரியர் பதவியைப் பறிப்பதென்பதே சாதனைதானே? ஆனால், வார்த்தைகளை வசப்படுத்தும் இவரையே வசப்படுத்திச் செல்லும் கடமை பத்திரிகைகளுக்கு இருந்திருப்பதை அவரே ஒப்புக் கொள்ளுவார். வந்த புதிதில் தேவ வார்த்தை, தேவ புன்னகை போன்ற வார்த்தைப் பிரயோகங்களுக்காகச் செல்லமாகக் கண்டிக்கப்பட்டவர் இவர்.

பிறகு அவர் சிக்கிக் கொண்ட இன்னொரு வார்த்தை 'ராஜ'. ராஜ பூவே, ராஜ தேனே, ராஜ ராகம் என்று தொடர்ந்த அவருடைய பிரயோகத்தை மீண்டும் திசை திருப்பி விட்டனர்.
இப்போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் வார்த்தைச் சிக்கல், 'சுவாசம்'. ஒருவேளை இந்தப் பிரச்சினை 'என் சுவாசக் காற்றே...' படம் முதல் ஆரம்பித்திருக்கலாம். "என் சுவாசக் காற்றே...சுவாசக் காற்றே.... நீயடி...'' என்று ஆரம்பித்து வைத்தார். சுவாசம், மூச்சு பற்றி அவர் சமீபத்தில் எழுதிய பாடல்கள் இவை: 'அப்பு'- விட்டுச் சென்ற உன் மூச்சு காற்றினில் இருக்கு... அந்த மூச்சை வாங்கி... வாங்கி... வாங்கி... வாழ்வேனா? 'உயிரே'- பூங்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாகத் தேடிப் பார்த்தேன். 'கண்ணெதிரெ தோன்றினாள்'- உனக்குள் சென்ற காற்று வேண்டும் எனக்கு மட்டும் தருவாயா? 'ரிதம்'- நேற்று நீ எங்கிருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்... சுவாசத்தில் இருந்ததாகச் சொல்லிச் சென்றாய்... - சுவாசம் பற்றி அவர் எழுதியிருக்கும் பாடல் வரிகளில் சிலவற்றை மட்டும் இங்கே சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
திரையிசைப் பாடல்கள் மூலம் அறிவியல் செய்திகளை அதிகமாகச் சொன்னவர் வைரமுத்து. 'செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று தினந்தோறும் விஞ்ஞானம் கவலை கொள்ளும் உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்' என்பார். உடம்பில் நரம்புகள் எத்தனை லட்சம் இருக்கிறது என்பதைக் காதல் பாடலில் சொல்லுவார். ஆனால் சுவாசக் காற்று நச்சுத் தன்மை உடையது. அது கார்பன் டை ஆக்சைடு என்பதைத்தான் வைரமுத்து போன்றவர்கள் கூற வேண்டும். ஏனென்றால் வைரமுத்து ஒரு விஞ்ஞானக் கவிஞர். அதற்கு அவர் எழுதிய 'தண்ணீர் தேசம்' ஒரு நல்ல உதாரணம். அவருடைய கவிதைகளைச் 'சுவாசி'க்கிற வாசகர்கள் சார்பாக வைக்கப்படுகிற விண்ணப்பம் இது
- தமிழ்மகன்

LinkWithin

Blog Widget by LinkWithin