வெள்ளி, பிப்ரவரி 27, 2009

சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை:

சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை:
எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு

தினமணியில் செய்தி 27.02.09

சென்னை, பிப். 26: மறைந்த எழுத்தாளர் சுஜாதா நினைவாக நடத்தப்பட்ட "அறிவியல் புனைகதை-2009' போட்டியில், எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு (ரூ.20 ஆயிரம்) கிடைத்துள்ளது.
2008-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா நினைவாக அவரது குடும்பத்தினரும், ஆழி பதிப்பகமும் இணைந்து இப்போட்டியை நடத்தின.
இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 தமிழ் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
அறிவியல் புனைகதை எழுத்தாளர் இரா.முருகன், ஊடகவியலாளர் சந்திரன், எழுத்தாளர் அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திவாகர் ஆகியோர் பரிசுக்குரிய கதைகளை தேர்வு செய்தனர்.
அதன்படி, எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய "கிளாமிடான்' சிறுகதை முதல் பரிசு பெற்றது.
தி.தா.நாராயணன் இரண்டாவது பரிசு பெறுகிறார். நளினி சாஸ்திரி, ஆர்.எம்.நெüஷத் (இலங்கை), வ.ந.கிரிதரன் (கனடா), கே.பாலமுருகன் (மலேசியா) ஆகியோர் சிறப்பு ஆறுதல் பரிசு பெறுகின்றனர்.
பரிசளிப்பு விழா மார்ச் 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது.
முதுநிலை உதவி ஆசிரியர்
முதல் பரிசு பெற்றுள்ள தமிழ்மகன் (43), தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது இயற்பெயர் பா.வெங்கடேசன். இவருக்கு திலகவதி என்ற மனைவியும், மாக்சிம், அஞ்சலி ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் காரணை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மகன், க.பாலகிருஷ்ணன்-பார்வதி தம்பதியின் மகன் ஆவார்.

வியாழன், பிப்ரவரி 26, 2009

எனக்குப் பரிசு ௨0,000

அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டிபோட்டி முடிவுகள்


சென்னை, பிப்ரவரி 26, 2009

கடந்த ஆண்டு பி்ப்ரவரி 27 ஆம் தேதி மறைந்த, தமிழ் மக்கள் நன்கறிந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாக, எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அமரர் சுஜாதா நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அறிவியல் புனைகதைப் போட்டியொன்றை நடத்தியது.

உலகம் முழுவதிலுமிருந்து, பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். இவர்களில் பலர் புதியவர்கள்.

அறிவியல் புனைகதை எழுத்தாளர் திரு இரா. முருகன், ஊடகவியலாளர் திரு. சந்திரன், எழுத்தாளர் திரு. அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திரு. திவாகர் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்ட சுமார் 200 கதைகளை அலசி, இறுதி முடிவாக பின்வரும் கதைகளுக்கு பரிசுகளை அளிப்பதென்று முடிவுசெய்திருக்கிறார்கள்:


முதல் பரிசு (ரூ.20,000) திரு. தமிழ்மகன், தமிழ்நாடு

இரண்டாம் பரிசு (ரூ. 10,000) திரு. தி. தா. நாராயணன், தமிழ்நாடு
சிறப்பு ஆறுதல் பரிசுகள் (ரூ.5000 வீதம்)
இந்தியா திரு. நளினி சாஸ்திரி, தமிழ்நாடு
இலங்கை திரு. ஆர். எம். நௌஷத், இலங்கை
வட அமெரிக்கா திரு. வ. ந. கிரிதரன், கனடா
ஆசியா-பசிபிக் திரு. கே. பாலமுருகன், மலேசியா


ஐரோப்பா மற்றும் பிற உலக நாடுகளுக்கான பிரிவில் போதுமான கதைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், அவற்றை அடுத்த ஆண்டு போட்டியுடன் இணைத்துக்கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டிருக்கிறது

பரிசு பெற்றோர்களுக்கான பரிசுகள் சென்னையில் வரும் மார்ச் 7 ஆம் தேதி நடக்கவுள்ள விழாவில் வழங்கப்படவுள்ளன.



மேலதிக விவரங்களுக்கு
ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை
யுனைட்டட் இந்தியா காலனி
கோடம்பாக்கம்
சென்னை 600024
தொலைபேசி: 1-44-4358 7585
செல்பேசி: 91-99401 47473
மின்னஞ்சல்: sujatha.scifi@gmail.com
வலையகம்: www.aazhipublishers.com/sujatha.html

செவ்வாய், பிப்ரவரி 24, 2009

திரைக்கு பின்னே- 21

வழி தவறிய ஆட்டுக்குட்டி!

"ஈரமான ரோஜாவே' படத்தில் தயாரிப்பாளர்; இயக்குநர் கே.ஆர். மூலம் அறிமுகம் செய்யப்பட்டவர் மோகினி.

மைலாப்பூரில் ஒரு ஒண்டுக் குடித்தன வீட்டில் அவரை முதன் முதலாகச் சந்திக்கச் சென்றேன். என் அனுமானத்தில் அங்கு இருந்த அத்தனை குடும்பங்களுமே பிராமணக் குடும்பங்கள்தான். அந்த மாதிரியான சூழலில் ஒரு நடிகை குடியிருப்பது சற்றும் பொருத்தமில்லாததாக இருந்தது. வத்தல், வடாம், துவைத்துப் போட்ட துணிகள் எல்லாம் காயப்போடப்பட்டுக் கொண்டிருந்த இடத்தில் நடிகையா? சரியான முகவரிதானா என்ற ஐயத்தோடு அங்கு குடியிருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டி விசாரித்தேன். அவர் தம் குடியிருப்பில் இப்படியொரு நடிகை குடியிருப்பதையும் அவரைத்தேடி சினிமா கார்களும் சினிமாக்காரர்களும் வந்து போய்க் கொண்டிருப்பதை விரும்பாதவராக இருப்பார்போலும். ஒரு வீட்டைக் கை காட்டிவிட்டு டம்மென்று கதவை அறைந்து சாத்தினார். நான் மேற்கொண்டு எந்தவீட்டுக் கதவையும் தட்டி விசாரிக்காமல் மோகினி வீட்டின் கதவைச் சரியாகக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

நான் தட்டிய கதவுக்கு மறுபுறத்தில் மோகினி நின்றிருந்தார். "ஈஸியா கண்டுபிடிக்க முடிந்ததா?'' என்றார்.

திரையில் இருந்த எந்த ஆடம்பரமும் இல்லாத ஆடை. நெற்றியில் திருநீறு. பவுடர் கூட போட்டிருப்பாரா என்று தெரியவில்லை. அத்தனை எளிமை. கையில் ஒரு வெள்ளை பேப்பரைச் சுருட்டிக் கொடுத்தால் பத்தாம் வகுப்பு முடித்து டைப் ரைட்டிங் இன்ஸ்ட்டிட்யூட் செல்லும் மாணவி போல இருந்தார்.

இவர் எதற்கு நடிக்க வரவேண்டும் என்று இருந்தது. இனம் புரியாத அச்சம்கூட இருந்தது. வழி தவறி வந்துவிட்டவர் மாதிரி தோன்றியது. மறுபடியும் ஸ்கூலில் சேர்ந்து படியுங்கள் என்று சொல்லிவிடுவேன் போல தவித்தேன். நடிகையிடம் வழக்கமாகக் கேட்கும் எந்தக் கேள்வியையும் கேட்க முடியவில்லை. அவரும் இந்தியா ஒரு பழம்பெரும் நாடு என்பதாக எதையோ சொல்லிக்கொண்டிருந்தார்.

கிளம்பும்போது அந்த வீட்டில் தலையில் முக்காடு போட்டு அமர்ந்து எங்களையே பார்த்துக் கொண்டிருந்த மொட்டையடித்த பெண்மணியைப் பார்த்தேன். திடீரென்று அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என்ற தேவையில்லாத பயம் தொற்றியது.

பிறகு என்ன சூழலோ, அவர் ஒரு பிரஸ்மீட் வைத்து "கிளாமராக நடித்தால் என்ன தவறு? ஆனால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்'' என்று அறிவித்தார். நவீன ஆடைகளில் போட்டோ எடுத்து விநியோகித்தார். பெரிதாக வாய்ப்பு எதுவும் வரவில்லை. இந்தியப் பெருமையையும் பண்பாட்டையும் பேசும் அந்த நடிகை திடீரென்று கிருஸ்துவ மதத்தில் சேர்ந்து.. மத சேவை செய்யப் போவதாக அதே மயிலாப்பூரில் அறிவித்தார். நான் எதிர்பார்த்தது போல அவர் டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டிட்யூட் மாணவியாகவே இருந்திருந்தால் இந்த மதமாற்றத்துக்கு அவசியம் இருந்திருக்காதோ?


மணிரத்னம் இயக்கத்தில் ராமராஜன்!


பத்திரிகையில் சுவாரஸ்யமான செய்திகளுக்காக நிருபர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் இது.

மணிரத்னம் இயக்கத்தில் ராமராஜன் என்ற தலைப்பிட்டு ஒரு செய்தியை எழுதித்தந்தார் நிருபர் ஒருவர்.

ராமராஜன் வரிசையான வெற்றிப்படங்களைத் தந்துவிட்டு இளையராஜாவோடு ஏதோ மனஸ்தாபம் எற்பட்டு படங்கள் ஏதும் இல்லாமல் இருந்த நேரம் அது. மணிரத்னமோ, "ரோஜா', "பம்பாய்' என... ஏறுமுகத்தில்.

ஏதோ வித்தியாசமான கதையம்சத்தில் இந்த காம்பினேஷன் இருக்கப் போகிறது என்று செய்தியைப் படித்த பலரும் பேசிக் கொண்டார்கள். சிலர் போனில் தொடர்பு கொண்டு உண்மையா சார் என்றோ... தலைப்பு என்ன சார் என்றோ கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ராமராஜன் அலுவகத்தில் இருந்தே ஒரு போன்... "மணிரத்னம் அறிவித்தாரா?'' என்று அவர்கள் விசாரித்தபோதுதான் விபரீதம் புரிந்தது. ராமராஜனுக்கும் தெரிவிக்காமலா இந்தச் செய்தி வெளியே கசிந்தது? என்ற சந்தேகம். சீக்கிரத்திலேயே மணிரத்னம் அலுவகத்தில் இருந்து தொடர்பு கொண்டார்கள். ராமராஜனை வைத்து படம் எடுக்கப் போவதாக உங்களுக்கு யார் சொன்னது நிறைய பேர் போன் செய்து விசாரிக்கிறார்கள் என்றனர்.

அதன் பிறகுதான் அந்த நிருபரை விசாரித்தேன். முதலில் "யாரோ சொன்னார்கள்.. பேசிக் கொண்டார்கள் என்று சொன்னவர்.. கடைசியில் பரபரப்பா இருக்குமேன்னு எழுதினேன் சார்'' என்று உண்மையை ஒப்புக் கொண்டார். ஒருவாரம் பத்திரிகையைப் பேச வைத்த சந்தோஷம் இருந்தாலும் மேலுக்குக் கடிந்து கொண்டேன்.

"யார் கண்டது சார்... மணிரத்னம் அவரை வெச்சி ஒரு படம் எடுத்தாலும் எடுப்பார் சார்... எடுத்தா நல்லா இருக்கும் சார்'' என்றார்.

"பலிக்கட்டும்'' என்றேன்.



எழுத்துத் திருத்தம்!


பாண்டு என்ற நடிகரை ஞாபகப்படுத்துவது சுலபம். வாயை அஷ்ட கோணலாக்கி "ஆங்', "ஊங்" என்று அவர் செய்கிற சேட்டை அத்தனை பிரபலம்.

பிரபலமில்லாத செய்தி.. அவர் குமுதம் இதழில் நெடுங்காலம் பணியாற்றிய எழுத்தாளர் புனிதனின் மருமகன். கேபிடல் லெட்டர்ஸ் என்ற விளம்பர எழுத்து பலகை நிறுவனம் நடத்தி வருகிறார் அவர். குங்குமம், சன் டி.வி., தினகரன் உள்ளிட்ட பித்தளை எழுத்துககளை உருவாக்கி வடிவம் தந்தவர்.

ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார். கலைஞர் மீது அவருக்கு அதீத பாசம். கலைஞர் மாளிகை என்று ஒரு அரசு நிறுவனத்துக்குப் பெயர்ப் பலகை செய்து தந்ததைச் சொன்னார். ஆனால் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அந்தக் கட்டடத்தில் இருந்து அந்தப் பெயரை நீக்கச் சொல்லிவிட்டு, அதற்குப் பெரியார் மாளிகை என்று பெயரிட்டுவிட்டார்கள். அந்த ஆர்டரும் இவருக்கே வந்தது. நாம் செய்த கலைஞர் பெயரை நாமே நீக்க வேண்டியதாகிவிட்டதே என்று வருத்தமாக இருந்ததாம். "சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. கலைஞர் மாளிகை என்ற அந்த எழுத்துகளை உருக்கி அதையே பெரியார் மாளிகை என்று ஆக்கினேன். பெரியாருக்குள் கலைஞர் அடக்கம்தானே?'' என்றார் சந்தோஷத்தோடு .

ஆங்!

திங்கள், பிப்ரவரி 16, 2009

திரைக்குப் பின்னே- 20

"தெனாலி' டைமண்ட் பாபு!


டைமண்ட் பாபு என்ற பெயரை பலரும் அறிந்திருக்கலாம். "தெனாலி' என்ற படத்தில் ஜோதிகாவுக்கு மாப்பிள்ளையாக வரும் மதன் பாப் என்ற நடிகரின் கதாபாத்திரத்தின் பெயர் என்று சொல்லக்கூடும். இது வெறும் உலகில் இருக்கும் தமிழர்களுக்கு. சினிமா உலகத்தில், டைமண்ட் பாபு என்ற திரைத்துறை பத்திரிகை தொடர்பாளர் மிகவும் பிரசித்தம்.

சினிமாவின் முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் இவர் இருப்பார். சினிமா துறையினரும் விழாவுக்கு இவர் வந்துவிட்டாரா என்று தெரிந்து கொண்டு புறப்படுவதும் நடக்கும். எத்தனை ரசிகர் மத்தியிலும் பிரமுகர்களை இவர் மேடைக்கு அழைத்துவருவதும் மீண்டும் அவர்களை வழியனுப்பி வைப்பதும் அத்தனை லாவகமாக இருக்கும்.

ஒருமுறை பத்திரிகையாளர் சிலருடன் நான் ராதாரவி வீட்டு திருமண விழாவுக்குச் சென்றிருந்தோம். கலைவாணர் அரங்கில் நடைபெறும் அவ்விழாவுக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா வருவதாக இருந்ததால் எல்லா நடிகர்களும் அக் கூட்டத்தில் நீந்தி மேடையை அடைவதற்கு ஒரே ஆபத்பாந்தவனாக டைமண்ட் பாபுவைத்தான் நம்பினார்கள். மனிதர் ஒரு கட்டத்துக்கு மேல் சோர்ந்துவிட்டார்.

"இனி தாக்குப் பிடிக்க முடியாது'' கிளம்பிவிட்டார். நாங்கள் அனைவரும் வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தோம்.

அப்போது இயக்குநர் ஆர்.கே. செல்வமணியிடமிருந்து டைமண்ட் பாபுவுக்கு போன். "பாபு... எங்க இருக்கீங்க? நானும் ரோஜாவும் கல்யாணத்துக்கு வந்திருக்கோம்'' என்றார் செல்வமணி.

"அப்படியா? என்ட்ரன்ஸ்லயே இருங்க. இதோ வந்திட்றேன்'' என்றார் பாபு.

வடபழனியில் இருந்து எப்படி கலைவாணர் அரங்கத்துக்குப் போக முடியும்? எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மறுபடியும் எங்களிடம் ஏதோ பேச ஆரம்பித்தார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் செல்வமணியிடமிருந்து போன்.

"எங்க இருக்க பாபு..? இங்க முரளி வந்தாரு. அவர் கூட உள்ள வந்துட்டேன்''

"அப்படியா? சரி.. சரி. இப்பத்தான் தேவா வந்தாரு... அவரை அனுப்பிவைக்க வெளிய

வந்துட்டேன். சரி போங்க நான் உள்ள வந்திட்றேன்...''

கொஞ்சநேரம் சகஜமாக எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

மீண்டும் செல்வமணி...

"ஸ்டேஜ்லதான் நிக்கிறேன்...''

"நான் உங்களைப் பார்த்துக்கிட்டுத்தான் நிக்கிறேன். இறங்கி வாங்க... உங்க கார்கிட்ட வந்திட்றேன்...''

பாபு மறுபடியும் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

மீண்டும் போன்... "கார் கிட்ட வந்துட்டேன் பாபு'' என்றார் ரோஜா.

"மினிஸ்டர் வந்துட்டார்... ரெண்டு நிமிஷம் நிக்க முடியுமா? இல்ல நீங்க கிளம்பிடுங்க... காலைல வந்து பாக்றேன்.'' என்றார் பாபு கூலாக.

"சரி பாபு. ரொம்ப தாங்க்ஸ்... நாளைக்குப் பேசறேன்'' என்றபடி ரோஜாவும் போனை வைத்தார்.

சம்பவ இடத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் ரோஜாவையும் செல்வமணியையும் அவர் அழகாக அழைத்து வந்து வழியனுப்பி வைத்த அழகு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்படியான ஆதரவுக்காகத்தான் சினிமா உலகினருக்கு டைமண்ட் பாபு தேவைப்படுகிறார். சாரிங்க நான் அப்பவே கிளம்பிட்டேனே என்று அவர் கூறியிருந்தால் ரோஜாவும் செல்வமணியும் அந்தக் கூட்டத்தில் உள்ளே நுழைய பயந்து திரும்பிப் போய் இருக்கலாம். குறைந்த பட்சம் மனதில் தடுமாற்றம் எற்பட்டிருக்கும். உளவியல் ரீதியாக அவர்களை செலுத்தியது பெரிய சாதனைதான். தெனாலி என்ற விகடகவியின் புத்திசாலிதனத்தோடு ஒப்பிட்டால் தப்பில்லைதான்.



கூவாத கோழி!



"கோழிகூவுது' விஜி என்று அறியப்பட்ட விஜியை முதல் முதலில் சந்தித்தது கோடம்பாக்கத்தில் மாதவன் நாயர் தெருவில் அவருடைய இல்லத்தில். சினிமா நிருபராக என் ஆரம்ப சந்திப்பு அது.

ஒரு சினிமா நடிகையை இவ்வளவு அருகில் நேரில் பார்க்கிறோம் என்ற பரவசம்தான் அதிகமாக இருந்தது. நடிகர்களை வெள்ளித்திரையிலும் மவுண்ட்ரோடு பேனர்களிலும் பிரம்மாண்டமாக 20 அடி 30 அடி உயர உருவங்களாகப் பார்த்துவிட்டு நேரில் அவர்களைப் பார்த்து நம்மைப் போலத்தான் இருக்கிறார்கள் என்கிற வியப்பும் அதில் இருந்தது. பலர் நான் எதிர் பார்த்ததைவிட சிறிய உருவமாக இருந்தார்கள். சுடிதாரில் சின்னப் பெண்ணாக எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இருந்தார் விஜி.

சினிமா நட்சத்திரங்களின் வீடுகளும் "எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் காட்டியது போல ஒரே மாடிக்கு இரண்டு படிவரிசை வைத்துக் கட்டியது போல இல்லாமல் இருந்தது. பலர் அபார்ட்மென்ட்டில் குடியிருந்தார்கள். விஜியும்.

அடுத்த சில ஆண்டுகளில் அவர் முதுகில் அடிபட்டு நடக்க முடியாமல் அவதிபட்டார்.

மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்க பொறுப்பில் இருந்ததால் உடனடியாகத் தலையிட்டு மருத்துவ ரீதியான உதவிகளுக்கு ஏற்பாடு செய்தார். அடுத்து அவர் நடித்த படம் ஒன்றிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார்.

அடுத்தடுத்து விஜிக்கு விஜயகாந்த் செய்த இந்த உதவிகளைத் தொகுத்து விஜி நெகிழ்ந்து போகிற மாதிரி.. ஒரு செய்தி எழுதினேன்.

இதழ் வெளியான அன்று கடுங்கோபமாக அவரிடம் இருந்து போன். இதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே என்றேன். என்னையும் அவரையும் இணைத்து எழுதியிருக்கிறீர்கள் என்றார். உதவி செய்வது எப்படி இணைத்து எழுதுவதாக இருக்கும் என்றேன்.

அடுத்து "விஜயகாந்த் எனக்கு வாய்ப்பு தந்தார் என்று எப்படி எழுதலாம்'' என்று சத்தம் போட்டார். "கொஞ்சம்கூட தகுதி இல்லாதவர்களுக்குத்தான் வாய்ப்பு கொடுத்ததாக எழுதலாம். எனக்கு அந்த வேடம் பொருத்தமாக இருந்ததால் நடிக்க அழைத்திருக்கிறார். நான் நடித்தால் அந்தக் கேரக்டர் பேசப்படும் என்பதால்தான் நடிக்க வைத்திருக்கிறார்.'' என்றார்.

இவ்வளவு சென்ஸிட்டீவாக இருக்கிறாரே என்று நினைத்தேன். சினிமாவில் சில வார்த்தை பிரயோகங்களை அப்படியே எழுதி பழகிவிட்டதுதான் காரணம். "இயக்குநர் அமீர் கஞ்சா கருப்புவுக்கு மீண்டும் வாய்ப்பளித்திருக்கிறார்' என்று எழுதுவது பழக்க தோசமான வாக்கியச் சேர்ப்புதான். விஜி அதற்கு இந்த அளவுக்கு வருத்தப்பட்டது ஆச்சர்யமாக இருந்தது. ஏன் மற்ற நடிகைகள் இப்படி வருத்தமோ, கோபமோ படவில்லை என்று யோசனையாகிவிட்டது.

அடுத்த சில மாதங்களில் விஜி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தந்தை தற்போது திருவண்ணாமலையில் விஜியின் பெயரில் ஆசிரமம் ஒன்று நடத்திவருகிறார்.



சண்டையும் சமாதானமும்!

விஜய் நடித்த "மின்சார கண்ணா' படத்தை திருட்டு வீடியோ எடுத்தவரை கையும் களவுமாகப் பிடித்துவிட்டதாக பத்திரிகையாளரிடம் அறிவித்தார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன். திருட்டுவிடியோ எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் இயக்குநர் இமயம் கே. பாலசந்தரின் மருமகன் மீது. அவசரப்பட்டு பழி சுமத்துவதாகச் சொன்ன ஒரு பத்திரிகையாளர் மீது கோபப்பட்டார் சந்திரசேகரன்.

கே.பி.யின் மருமகன் கந்தசாமியோ, தான் சினிமா நிகழ்ச்சிகளை விடியோ எடுத்து வெளிநாட்டில் சில டி.வி. சானல்களில் ஒளிபரப்புவதாகச் சொன்னார். சென்னை உதயம் தியேட்டரில் "மின்சார கண்ணா' திரையிட்ட அன்று ரசிகர்களின் கொண்டாட்டத்தைத் தான் படமாக்கினேன். தியேட்டருக்குள் ரசிகர்கள் விஜய் தோன்றும் காட்சியில் நடனமாடுவதாகக் கூறவே கேமிராமேன் உள்ளே சென்று பதிவு செய்ய ஆரம்பித்தார்'' என்று விளக்கம் அளித்தார்.

யார் சொன்னது உண்மையென்பது ஒரு பக்கம். இதில் தேவையில்லாமல் பாலசந்தர் தலை உருண்டது. பாலசந்தரின் மருமகன் திருட்டு விசிடி தயாரித்ததாகவே எழுதினார்கள். இதனால் பாலசந்தர் கண்டனம் தெரிவிக்க வேண்டியதானது. பதிலுக்கு சந்திரசேகரன் பாலசந்தரைத் தாக்க... இந்த நேரத்தில் பாலசந்தரைச் சந்தித்தபோது, யார் யாரை பழி சொல்வது என்று விவஸ்தை வேண்டாமா.. வேதனைப்பட்டார். சந்திரசேகரனைச் சந்தித்தபோதும் படத்தைத் திருட்டுத்தனமா காப்பி பண்ணிட்டு எப்படிலாம் நாடகம் ஆட்றாங்க என்று கொதித்தார். இரண்டு தரப்பிலும் அப்படியொரு காயம். இணையவே முடியாத இரண்டு துருவங்களாக மாறிப் போய்விட்டதைக் கண்டேன்.

விரைவிலேயே பாலசந்தர் தயாரிப்பில் விஜய் நடித்த "திருமலை' என்ற படம் உருவாவதாக அறிவிப்பு வெளியானது. சண்டைக்கு ஒரு காரணம் இருந்தது போல சமாதானத்துக்கு ஒரு காரணமும் சொல்லப்படவேயில்லை இரண்டு தரப்பிலும்.

திங்கள், பிப்ரவரி 09, 2009

திரைக்குப் பின்னே-19

தோன்றி மறையும் வேடங்கள்

சில திரைப்படங்களில் நம் மனதில் பதித்துக் கொள்ள முடியாத சிறிய வேடத்தில் சில கதாபாத்திரங்கள் வந்து போகும். "அதோ அந்த சிவப்புச் சட்டை' என்று அடையாளம் காட்டுவதற்குள் அந்தக் காட்சி மறைந்துவிடும். நடிக்கும் துடிப்பில் கேமிராமேன் ரவிவர்மன், இயக்குநர் ஷங்கர் என பலர் அப்படி நடித்தவர்கள்தான். படிப்படியாக அப்படி நடித்து நாமும் ஒரு கதாநாயகனாகிவிடவேண்டும் என்றோ காமெடியனாகிவிட வேண்டும் என்றோ அந்தக் குறுகிய காட்சிக்குள் நடிப்புப் பிரயாசையை வெளிப்படுத்துவார்கள்.

விஜய் நடித்த "துள்ளாத மனமும் துள்ளும் ' படத்தில் டவுசர் பாண்டி என்ற படத்தில் நடித்தவரை எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும் என்று தெரியவில்லை. அப் படத்தில் ராயப்பேட்டை மணிகூண்டுக்கு வழி கேட்டவனுக்கு உட்கார்ந்த இடத்திலேயே மெட்ராஸ் பாஷையில் ஊரையெல்லாம் சுற்றிக்காட்டுவார். வேடிக்கை என்னவென்றால் மணிகூண்டுக்கு அருகில் இருந்துதான் வழி கேட்டிருப்பான் அவன். கடைசியில் "இம்மா நேரம் மெட்ராஸ சுத்திக் காட்டினதுக்கு அம்பது ரூபா எடு'' என்பார் டவுசர் பாண்டி.

இரண்டே நிமிடம் இடம்பெற்றாலும் இந்தக் காட்சியில் அவருடைய மெட்ராஸ் பாஷையில் வசீகரிக்கப்பட்டு விமர்சனத்தில் அதை ரசித்து எழுதியிருந்தேன்.

அவருக்கு சந்தோஷம் தாளவில்லை. வெளியூரில் அடுத்து ஏதோ படப்பிடிப்பில் இருந்ததால் அவருடைய நண்பர் பாவை என்பவர் மூலம் நன்றி சொன்னார். சில மாதம் கழித்து பாவை என்ற அந்த நண்பர் வந்தார். ""டவுசர் பாண்டி இறந்துட்டார் ஸர்'' என்றார்.

"அடடா எப்படி?'' என சாதாரணமாகத்தான் விசாரித்தேன்.

"திருநெல்வேலியில் ஏதோ படப்பிடிப்பு. பஸ் நடுவழியில் பிரேக் டவுன். பழுது பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் எப்படியும் காலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேறு பஸ்ஸுக்காக சாலைக்கு வந்திருக்கிறார். ஏதோ லாரியோ,

பஸ்ஸோ அடித்துவிட்டுப் போய்விட்டது சார்'' "அடக்கொடுமையே.. என்றைக்கு நடந்தது? யாருக்குமே தெரியவில்லையே?'' "என்னைக்கு நடந்ததுனு யாருக்குமே தெரியாது சார்'' என்று கூறிவிட்டு அடுத்த தகவலைச் சொன்னார். அவர் பாக்கெட்ல நடிகர் சங்க அடையாள அட்டை இருந்தது. ஆனால் அதில் அவருடைய பழைய வீட்டு முகவரிதான் இருந்தது. அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு இவர் சினிமாவுக்காக டவுசர் பாண்டி ஆன பெயர்தான் தெரியும். அடையாள அட்டையிலோ அவருடைய சொந்த பெயரில்தான் (பட்டாபி என்று நினைக்கிறேன்) தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் போலீஸôர் அங்கு விசாரித்தபோது அப்படி யாரும் அங்கு

இல்லை என்று கூறிவிட்டார்கள். அனாதைப் பிணம் என்று அடக்கம் செய்துவிட்டார்கள். அவருடைய வீட்டிலோ கணவர் படப்பிடிப்பில் இருக்கிறார் என்று இருந்துவிட்டார்கள்.''




இப்படியும் நடக்குமா என்று இருந்தது. "மேற்கு மாம்பலம் பகுதியில் வாடகை தரவே சிரமப்படும் குடும்பம்' என்றார். அடுத்து நான் எஸ்.ஏ. சந்திரசேகரனைச் சந்தித்த போது இந்தத் தகவலைச் சொன்னேன். அவருடைய மகன் படத்தில் நடித்தவர் என்ற முறையில் "ஏதாவது உதவி செய்ய முடியுமா பாருங்கள்' என்றேன். அப்போதுதான் விவரம் தெரிந்து வருத்தப்பட்டார். உடனடியாக ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவினார். மணிகூண்டுக்கு வழிகாட்டியவரின் குடும்பத்துக்கு வழிகாட்டினார் எஸ்.ஏ.சி. என நன்றியால் நெகிழ்ந்தேன்.


ராதிகா அடித்த கமெண்ட்!

பளீர், பளீரென பதில் அளிப்பதில் ராதிகா "அரசி'. துணிச்சலும் நகைச்சுவையும் தொனிக்கும் அதில். அவருடைய சொந்த வாழ்க்கை, பொது பிரச்சினைகள் அனைத்திலும் அவருக்கென திடமான பார்வை உண்டு. தேவாவின் மகள் திருமணத்தின் போது திரையுலகினர் பலரும் நம்ம வீட்டுக் கல்யாணம்போல குழுமியிருந்தனர். பொதுவாக திருமணங்களின் போது உறவினர் சூழ பெண்கள் சந்தோஷமாக கதைத்துக் கொண்டிருக்கும் சந்தோஷத்தை நட்சத்திரங்கள் மத்தியிலும்

பார்த்தேன். ராதிகாவைச் சுற்றி அப்படியொரு கூட்டம். பொதுவாக "ஹேராம்' படம் எப்படியிருக்கிறது என்று ராதிகாவை யாரோ விசாரித்தார்கள். அவரும் "நல்ல படம்தான். ஆனால் தமிழில் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என்று கமெண்ட் அடித்தார்.




எல்லோரும் சிரித்தனர்.

படத்தில் ஆங்கிலம், வங்காளம், உருது, மராட்டி, தெலுங்கு, பஞ்சாபி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளும் இடம்பெற்றிருக்கும். ஒரு தேசிய படம் அதற்கான லட்சணத்தோடு இருந்தது. அதை கமல் தவிர்த்திருக்க முடியாது. அதை ராதிகா கமெண்ட் அடித்ததிலும் தவறு இல்லை. அதற்கு மற்றவர் சிரித்ததிலும் தவறு இல்லை. அதை நான் குமுதத்தில் எழுதியதுதான் தவறு. இதழ் வெளியான அன்று ராதிகா போன் செய்தார். முதலில் "நான் அப்படிச் சொல்லவே இல்லை' என்றார். "அருகிருந்து நான் அதைக் கேட்டேன்' என்று உறுதியாகச் சொன்னேன். "அது நான் அளித்த பேட்டியா? எங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை இப்படி எழுதினால் அது வீணாக சங்கடத்தை ஏற்படுத்துவதாகாதா?' என்றார். அதன் பிறகு அந்தச் செய்திக்கு மறுப்பு வெளியிட்டோம்.



மத்தள இடி!

ஒரு பேட்டிக்கு இரண்டுவிதமான பொல்லாப்புகளைச் சந்திக்க நேரும் என்பதற்கு உதாரணம் இது. யாரைப் பேட்டி கண்டேனோ அவராலும் சபிக்கப்பட்டு, யாரை குறை சொன்னோமோ அவராலும் சபிக்கப்பட்ட சம்பவம் அது. சன் டி.வி.யில் ஒளிபரப்பான

பாலுமகேந்திராவின் "கதை நேரம்' தீவிர பாராட்டுதலுக்கு ஆளாகியிருந்த நேரம். முழுக்க முழுக்க அத் தொடரைப் பாராட்டி பாலுமகேந்திராவிடம் கேள்விகள் கேட்டிருந்தேன். பேட்டி மிகச் சிறப்பாக வெளியாகியிருந்தது.




பத்திரிகை வெளியான அன்று அலுவலகத்தில் பாலுமகேந்திராவிடம் இருந்து போன் என்றதும் பாராட்டு மழையில் நனையப் போகும் ஆயத்தத்தோடு ரிஸீவரை எடுத்தேன். "அதனால்தான் பேட்டிக்குத் தயங்கினேன். இப்படிச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவே

இல்லை. என்னதான் இலக்கியம் பேசினாலும் உங்கள் பத்திரிகை புத்தியைக்காட்டி விட்டீர்கள்'' என்று அடுக்கடுக்காகத் தாக்க ஆரம்பித்தார். "என்ன சார் பேட்டி நன்றாகத்தானே வந்திருக்கிறது எதற்காகக் கோபப்படுகிறீர்கள்?'' என்றேன்.




"எதற்காக அந்தப் போட்டோவை பிரசுரித்தீர்கள். இதனால் என் வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் தெரியுமா?'' என்று போனை வைத்துவிட்டார். அந்த நிமிஷம் வரை நான் இதழைப் பார்க்கவில்லை. நான் எழுதியதைப் பிழைத்திருத்தம் பார்த்து தந்ததோடு சரி. குமுதத்தில் நிருபர்களை டிசைனிங் செக்ஷனுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். நாம் கொடுத்தது என்னவாக வெளிவரப்போகிறது என்கிற தவிப்பு, பிரசவ வார்டில் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் கணவனுக்கு ஒப்பானது. அவசரமாகப் புத்தகத்தைப் புரட்டினேன்.

பாலுமகேந்திராவும் மவுனிகாவும் சேர்ந்திருக்கிற படத்தைப் பிரசுரித்திருந்தார்கள். அதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம். ஏற்கெனவே அவர்களைப் பற்றிய கிசு கிசுக்கள் "போதும்' என்கிற அளவுக்கு எழுதி ஓய்ந்துவிட்ட நிலையில் இது அவருக்குப் பெரிய வேதனையான விஷயம்தான்.போனை வைத்துவிட்டு சோர்வோடு இருக்கையில் அமர்ந்தேன். உடனே அடுத்த போன். செவன்த் சேனல் நாராயணன் பேசினார்.

"ஒரு டி.வி. தொடரும் உருப்படியாக இல்லை என்று எப்படி எழுதலாம். எங்கள் நிறுவனம் தயாரித்த தொடர்களைப் பார்த்திருக்கிறீர்களா?... தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் வித்தியாசமாகத் தொடர்கள் தயாரித்தவர்கள் நாங்கள்தான்... கதை நேரம் மட்டும்தான் சிறப்பான தொடர் என்றால் மீதி பேரெல்லாம் இளிச்சவாயன்களா?'' என்று போடு போடு என போட்டார். பாலுமகேந்திராவின் கோபத்தில் பக்குவப்பட்டுப் போயிருந்ததால் தொடர்ந்து ஏழெட்டு சாரிகளை உதிர்த்துவிட்டு உட்கார்ந்தேன். சில நேரங்களில் ஆபிஸிலிருந்தும் திட்டுகள் விழும். மூன்று பக்கமும் அடிவாங்கும் மத்தளம்போல.

திங்கள், பிப்ரவரி 02, 2009

திரைக்குப் பின்னே -18

கதை சொல்லி!
மணிகண்டன் என்றொரு பள்ளித்தோழன். சினிமா பார்த்துவிட்டு வந்தால், மறுநாள் ஏறத்தாழ ஒரு மணிநேரம் அதை அப்படியே கதையாகச் சொல்லுவான். மனத்திரையில் காட்சிகள் ஓடும். ’ஷோலே' படத்தின் கதையை அவன் சொன்னது மாதிரி விறுவிறுப்பில் அந்தப்படம் உருவாக்கப்படவில்லை என்பது என் சொந்த அனுபவம். அவன் நடித்துக்காட்டுவான், பாடுவான். அமிதாப், அந்த ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டிவிடும்போது தியேட்டரில் தன் சீட்டுக்கடியில் சில்லறை விழுந்ததாக எல்லோரும் தேடுவார்கள் என்பான். உண்மையில் பத்துவருடம் கழித்து நான் படம் பார்த்தபோது மணிகண்டன் சொன்ன கதை மனத்திரையிலும் ஜி.பி.சிப்பி எடுத்தபடம் விழித்திரையிலும் ஓடிக் கொண்டிருந்தது. மனதில் இருந்த பிரமாண்டம் திரையில் பல இடங்களில் படுத்துவிட்டது என்பதுதான் நிஜம்.

கதை சொல்லுவது ஒரு பிரமிக்க வைக்கும் கலை.

நிலா வெளிச்சத்தில் பாட்டிகள் சொன்ன பேய்க் கதைகளின் பயங்கரங்கள் சில ஹாலிவுட் பேய்ப் படங்களைப் பார்க்கும்போதுகூட ஏற்படுவதில்லை.

எனக்குத் தெரிந்து இயக்குநர்கள் கே. பாக்யராஜ், சீமான் போன்றவர்கள் கதை சொன்னால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

மைசூர் அரண்மனையில் ’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' படப்பிடிப்பு.

இந்திய அளவில் திரைக்கதை அமைப்பதில் சக்கரவர்த்தி எனப் பாராட்டப்பட்ட கே.பாக்யராஜின் இன்னொரு பாராட்டுக்குரிய அம்சத்தைப் பார்த்தேன். பிரமாண்டமான அந்த அரண்மனையின் படிக்கட்டுகளில் எம்.ஜி.வல்லபன், சினி நியூஸ் செல்வம், ஜெமினி சினிமா வெற்றி உள்ளிட்ட 10,12 பத்திரிகையாளர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து அப் படத்தின் கதையைக் கேட்டது இப்போதும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சிவரை அப்படியே சொன்னார். சொல்லி முடித்துவிட்டு நன்றாக இருக்கிறதா என்றார். படத்தில் எத்தனை கேரக்டர்கள் உண்டோ அத்தனை சுபாவங்களோடும் கதையின் அத்தனை திருப்புமுனையையும் அவர் சொன்னவிதம் எங்கள் அத்தனை பேரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தது. மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றோம்.

ஆனால் கே.பாக்யராஜுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டு படம் தாமதமாகவும் போதிய விளம்பரமின்றியும் வெளியானது. சுமாரான பேச்சுதான். படம் பார்த்தோம். மனதில் இருந்த துல்லியம் திரையில் ஏதோ தொலைந்து போயிருந்தது.



புதுமைப் பெண்!
’மகளிர் மட்டும்' படப்பிடிப்பில்தான் முதன் முதலில் ரேவதியைப் பார்த்தேன். விஜய வாகினி ஸ்டுடியோவில் கமலா தியேட்டருக்கு எதிரே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதிலேயே செட் அமைத்துப் படப்பிடிப்பு நடந்தது.

அந்தப் படத்தைத் தயாரித்த கமல்ஹாசனோடு அவர் சிறிய முரண்பாடு கொண்டிருந்த நேரத்தில் நான் அவரைச் சந்தித்தேன். படத்தில் ரேவதி, ஊர்வசி, ரோஹிணி ஆகிய மூவரும் நாசரின் ஆணாதிக்கப் போக்கை எதிர்த்து வியூகம் அமைப்பார்கள். அது தெரியாமல் நாசர் அந்த மூவரும் தன் வழிக்கு வந்துவிட்டதாக நினைத்து "கறவைமாடு மூணு, காளை மாடு ஒண்ணு'' என்று உற்சாகமாகப் பாடுவார். கறவை மாடு என்ற வார்த்தையைப் பாடல் வரியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் ரேவதியின் வாதம்.

ஆணாதிக்கவாதியின் சிந்தனையாக அப்பாடல் வெளிப்படுவதால் இறுதியில் ஒரு வழியாக சம்மதித்தார்.

’பான்யன்' அமைப்பில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் அங்கிருந்து காணாமல் போயிருந்த சமயத்தில் எக்மோர் ரயில் நிலையம் அருகே அவர்கள் இருந்ததை அறிந்து அவரே நேரில் சென்று அவர்கள் இருவரையும் மீட்டு வந்ததை அறிந்து அவர் மீது மேலும் மரியாதை கூடியது. தென்சென்னை மாவட்ட மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிட்டபோது எழுத்தாளர் மற்றும் பத்திரிகைத் தொடர்பாளர் சுராவுடன் சென்று அவரை வாழ்த்திவிட்டு வந்தேன். அவர் நடித்த படத்தின் தலைப்பு போலவே அவர் எப்போதும் புதுமைப் பெண்ணாக இருந்தார்.

சமீபத்தில் அண்ணாநகரில் ஒரு கடையில் அவர் ஏதோ பொருள்கள் வாங்கியிருக்கிறார். அதை ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ரேவதி "கொஞ்ச நேரம் இருங்கள்'' என்று கூறிவிட்டு காரில் இருந்து ஒரு துணிப் பையைக் கொண்டு வந்து கொடுத்து அதில் அந்தப் பொருள்களை எடுத்துச் சென்றார். என் நண்பர் ஒருவர் இதைப் பார்த்துவிட்டு வந்து என்னிடம் சொன்னார்.

புதுமைப் பெண்கள் எந்த இடத்திலும் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.



புத்த மீனா!
திரைத்துறையில் பிரபலமாகிற நடிகைகளை நினைக்கும்போதெல்லாம் சிறகுகள் கத்தரிக்கப்பட்டு கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கும் கிளியின் ஞாபகம் வரும். அதிலும் குழந்தையிலிருந்தே பிரபலமாகிவிட்ட நட்சத்திரங்களுக்கு அம்மா சொல்கிற உலகம்தான் தெரியும்.






மீனாவுக்கு இன்னும்கூட மழலை மாறாத குரல்தான். இப்போதுகூட அவர் "ரஜினி அங்கிள்” என்று உச்சரித்தால், ’அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தின் சாயல்தான் தெரியும் அந்தக் குரலில்.

’நாட்டாமை', ’முத்து' என வெள்ளிவிழா நாயகியாக உலாவந்து கொண்டிருந்தபோது அவரைப் பற்றி ஒரு தொடர் எழுதினேன். தினமணியில் எட்டுவாரம் வெளியான அந்தத் தொடருக்கு தில்லானா தில்லானா என்று தலைப்பிட்டவர் அப்போது தினமணியின் இதழாசிரியராக இருந்த ஞாநி.

தொடருக்காக அடுத்தடுத்து மூன்று முறை சந்தித்தேன். ஒவ்வொரு முறையும் அவர் பள்ளி வயது ஞாபகங்கள் பற்றி நிறைய பேசினார். பள்ளியின் மரக்கிளையில் ஏறி விளையாடியதை அவர் கிட்டத்தட்ட நடித்துக் காட்டினார். அதை நினைவுபடுத்திக் கொள்வதில் அத்தனை சந்தோஷம். அவருடைய பள்ளி முதல்வர் அதைப் பார்த்துவிட்டு "ஆர் யூ எ மங்கி?” என்று திட்டியதைச் சொல்லிச் சிரித்தார்.

எவ்வளவு பெரிய நடிகையாக நாடே வியந்து கொண்டிருக்க அவருடைய மகிழ்ச்சி அந்தப் பள்ளி மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பதாகப்பட்டது.

என்னுடைய குறுக்குப் புத்தி விழித்தது. அவரைப் பற்றி வெளியாகிக் கொண்டிருந்த கிசு கிசு பற்றிச் சொன்னேன். அதற்கு அவருடைய ரியாக்ஷனைக் கவனிக்க வேண்டும் என்பது என் நோக்கம்.

சத்தியமாக அதைப்பற்றி அவருக்குத் தெரியவே இல்லை. அவரைப் பற்றி நல்லவிதமாக வெளியாகும் செய்திகள் மட்டுமே அவருடைய பார்வைக்குப் போகும் என்று தெரிந்தது. "என்னைப் பற்றி இப்படியெல்லாமா எழுதுகிறார்கள்? ஏன் அப்படி எழுதுகிறார்கள்'' என்று கேட்டார். அதில் நடிப்பில்லை. முதுமை, நோய், மரணம் பற்றித் தெரியாத சித்தார்த்தன் வாழ்க்கையைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அதையெல்லாம் முதலில் அறிந்த போது அவன் புத்தனானதாக ஒரு கதை உண்டு. மீனாவும் அப்படியொரு நிலையில்தான் இருப்பதாக ஒரு கணம் திகைத்தேன். அடுத்து அவரைச் சந்திக்கவில்லை. தொடரையும் நிறுத்திவிட்டேன்.

LinkWithin

Blog Widget by LinkWithin