திங்கள், பிப்ரவரி 16, 2009

திரைக்குப் பின்னே- 20

"தெனாலி' டைமண்ட் பாபு!


டைமண்ட் பாபு என்ற பெயரை பலரும் அறிந்திருக்கலாம். "தெனாலி' என்ற படத்தில் ஜோதிகாவுக்கு மாப்பிள்ளையாக வரும் மதன் பாப் என்ற நடிகரின் கதாபாத்திரத்தின் பெயர் என்று சொல்லக்கூடும். இது வெறும் உலகில் இருக்கும் தமிழர்களுக்கு. சினிமா உலகத்தில், டைமண்ட் பாபு என்ற திரைத்துறை பத்திரிகை தொடர்பாளர் மிகவும் பிரசித்தம்.

சினிமாவின் முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் இவர் இருப்பார். சினிமா துறையினரும் விழாவுக்கு இவர் வந்துவிட்டாரா என்று தெரிந்து கொண்டு புறப்படுவதும் நடக்கும். எத்தனை ரசிகர் மத்தியிலும் பிரமுகர்களை இவர் மேடைக்கு அழைத்துவருவதும் மீண்டும் அவர்களை வழியனுப்பி வைப்பதும் அத்தனை லாவகமாக இருக்கும்.

ஒருமுறை பத்திரிகையாளர் சிலருடன் நான் ராதாரவி வீட்டு திருமண விழாவுக்குச் சென்றிருந்தோம். கலைவாணர் அரங்கில் நடைபெறும் அவ்விழாவுக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா வருவதாக இருந்ததால் எல்லா நடிகர்களும் அக் கூட்டத்தில் நீந்தி மேடையை அடைவதற்கு ஒரே ஆபத்பாந்தவனாக டைமண்ட் பாபுவைத்தான் நம்பினார்கள். மனிதர் ஒரு கட்டத்துக்கு மேல் சோர்ந்துவிட்டார்.

"இனி தாக்குப் பிடிக்க முடியாது'' கிளம்பிவிட்டார். நாங்கள் அனைவரும் வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தோம்.

அப்போது இயக்குநர் ஆர்.கே. செல்வமணியிடமிருந்து டைமண்ட் பாபுவுக்கு போன். "பாபு... எங்க இருக்கீங்க? நானும் ரோஜாவும் கல்யாணத்துக்கு வந்திருக்கோம்'' என்றார் செல்வமணி.

"அப்படியா? என்ட்ரன்ஸ்லயே இருங்க. இதோ வந்திட்றேன்'' என்றார் பாபு.

வடபழனியில் இருந்து எப்படி கலைவாணர் அரங்கத்துக்குப் போக முடியும்? எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மறுபடியும் எங்களிடம் ஏதோ பேச ஆரம்பித்தார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் செல்வமணியிடமிருந்து போன்.

"எங்க இருக்க பாபு..? இங்க முரளி வந்தாரு. அவர் கூட உள்ள வந்துட்டேன்''

"அப்படியா? சரி.. சரி. இப்பத்தான் தேவா வந்தாரு... அவரை அனுப்பிவைக்க வெளிய

வந்துட்டேன். சரி போங்க நான் உள்ள வந்திட்றேன்...''

கொஞ்சநேரம் சகஜமாக எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

மீண்டும் செல்வமணி...

"ஸ்டேஜ்லதான் நிக்கிறேன்...''

"நான் உங்களைப் பார்த்துக்கிட்டுத்தான் நிக்கிறேன். இறங்கி வாங்க... உங்க கார்கிட்ட வந்திட்றேன்...''

பாபு மறுபடியும் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

மீண்டும் போன்... "கார் கிட்ட வந்துட்டேன் பாபு'' என்றார் ரோஜா.

"மினிஸ்டர் வந்துட்டார்... ரெண்டு நிமிஷம் நிக்க முடியுமா? இல்ல நீங்க கிளம்பிடுங்க... காலைல வந்து பாக்றேன்.'' என்றார் பாபு கூலாக.

"சரி பாபு. ரொம்ப தாங்க்ஸ்... நாளைக்குப் பேசறேன்'' என்றபடி ரோஜாவும் போனை வைத்தார்.

சம்பவ இடத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் ரோஜாவையும் செல்வமணியையும் அவர் அழகாக அழைத்து வந்து வழியனுப்பி வைத்த அழகு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்படியான ஆதரவுக்காகத்தான் சினிமா உலகினருக்கு டைமண்ட் பாபு தேவைப்படுகிறார். சாரிங்க நான் அப்பவே கிளம்பிட்டேனே என்று அவர் கூறியிருந்தால் ரோஜாவும் செல்வமணியும் அந்தக் கூட்டத்தில் உள்ளே நுழைய பயந்து திரும்பிப் போய் இருக்கலாம். குறைந்த பட்சம் மனதில் தடுமாற்றம் எற்பட்டிருக்கும். உளவியல் ரீதியாக அவர்களை செலுத்தியது பெரிய சாதனைதான். தெனாலி என்ற விகடகவியின் புத்திசாலிதனத்தோடு ஒப்பிட்டால் தப்பில்லைதான்.கூவாத கோழி!"கோழிகூவுது' விஜி என்று அறியப்பட்ட விஜியை முதல் முதலில் சந்தித்தது கோடம்பாக்கத்தில் மாதவன் நாயர் தெருவில் அவருடைய இல்லத்தில். சினிமா நிருபராக என் ஆரம்ப சந்திப்பு அது.

ஒரு சினிமா நடிகையை இவ்வளவு அருகில் நேரில் பார்க்கிறோம் என்ற பரவசம்தான் அதிகமாக இருந்தது. நடிகர்களை வெள்ளித்திரையிலும் மவுண்ட்ரோடு பேனர்களிலும் பிரம்மாண்டமாக 20 அடி 30 அடி உயர உருவங்களாகப் பார்த்துவிட்டு நேரில் அவர்களைப் பார்த்து நம்மைப் போலத்தான் இருக்கிறார்கள் என்கிற வியப்பும் அதில் இருந்தது. பலர் நான் எதிர் பார்த்ததைவிட சிறிய உருவமாக இருந்தார்கள். சுடிதாரில் சின்னப் பெண்ணாக எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இருந்தார் விஜி.

சினிமா நட்சத்திரங்களின் வீடுகளும் "எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் காட்டியது போல ஒரே மாடிக்கு இரண்டு படிவரிசை வைத்துக் கட்டியது போல இல்லாமல் இருந்தது. பலர் அபார்ட்மென்ட்டில் குடியிருந்தார்கள். விஜியும்.

அடுத்த சில ஆண்டுகளில் அவர் முதுகில் அடிபட்டு நடக்க முடியாமல் அவதிபட்டார்.

மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்க பொறுப்பில் இருந்ததால் உடனடியாகத் தலையிட்டு மருத்துவ ரீதியான உதவிகளுக்கு ஏற்பாடு செய்தார். அடுத்து அவர் நடித்த படம் ஒன்றிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார்.

அடுத்தடுத்து விஜிக்கு விஜயகாந்த் செய்த இந்த உதவிகளைத் தொகுத்து விஜி நெகிழ்ந்து போகிற மாதிரி.. ஒரு செய்தி எழுதினேன்.

இதழ் வெளியான அன்று கடுங்கோபமாக அவரிடம் இருந்து போன். இதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே என்றேன். என்னையும் அவரையும் இணைத்து எழுதியிருக்கிறீர்கள் என்றார். உதவி செய்வது எப்படி இணைத்து எழுதுவதாக இருக்கும் என்றேன்.

அடுத்து "விஜயகாந்த் எனக்கு வாய்ப்பு தந்தார் என்று எப்படி எழுதலாம்'' என்று சத்தம் போட்டார். "கொஞ்சம்கூட தகுதி இல்லாதவர்களுக்குத்தான் வாய்ப்பு கொடுத்ததாக எழுதலாம். எனக்கு அந்த வேடம் பொருத்தமாக இருந்ததால் நடிக்க அழைத்திருக்கிறார். நான் நடித்தால் அந்தக் கேரக்டர் பேசப்படும் என்பதால்தான் நடிக்க வைத்திருக்கிறார்.'' என்றார்.

இவ்வளவு சென்ஸிட்டீவாக இருக்கிறாரே என்று நினைத்தேன். சினிமாவில் சில வார்த்தை பிரயோகங்களை அப்படியே எழுதி பழகிவிட்டதுதான் காரணம். "இயக்குநர் அமீர் கஞ்சா கருப்புவுக்கு மீண்டும் வாய்ப்பளித்திருக்கிறார்' என்று எழுதுவது பழக்க தோசமான வாக்கியச் சேர்ப்புதான். விஜி அதற்கு இந்த அளவுக்கு வருத்தப்பட்டது ஆச்சர்யமாக இருந்தது. ஏன் மற்ற நடிகைகள் இப்படி வருத்தமோ, கோபமோ படவில்லை என்று யோசனையாகிவிட்டது.

அடுத்த சில மாதங்களில் விஜி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தந்தை தற்போது திருவண்ணாமலையில் விஜியின் பெயரில் ஆசிரமம் ஒன்று நடத்திவருகிறார்.சண்டையும் சமாதானமும்!

விஜய் நடித்த "மின்சார கண்ணா' படத்தை திருட்டு வீடியோ எடுத்தவரை கையும் களவுமாகப் பிடித்துவிட்டதாக பத்திரிகையாளரிடம் அறிவித்தார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன். திருட்டுவிடியோ எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் இயக்குநர் இமயம் கே. பாலசந்தரின் மருமகன் மீது. அவசரப்பட்டு பழி சுமத்துவதாகச் சொன்ன ஒரு பத்திரிகையாளர் மீது கோபப்பட்டார் சந்திரசேகரன்.

கே.பி.யின் மருமகன் கந்தசாமியோ, தான் சினிமா நிகழ்ச்சிகளை விடியோ எடுத்து வெளிநாட்டில் சில டி.வி. சானல்களில் ஒளிபரப்புவதாகச் சொன்னார். சென்னை உதயம் தியேட்டரில் "மின்சார கண்ணா' திரையிட்ட அன்று ரசிகர்களின் கொண்டாட்டத்தைத் தான் படமாக்கினேன். தியேட்டருக்குள் ரசிகர்கள் விஜய் தோன்றும் காட்சியில் நடனமாடுவதாகக் கூறவே கேமிராமேன் உள்ளே சென்று பதிவு செய்ய ஆரம்பித்தார்'' என்று விளக்கம் அளித்தார்.

யார் சொன்னது உண்மையென்பது ஒரு பக்கம். இதில் தேவையில்லாமல் பாலசந்தர் தலை உருண்டது. பாலசந்தரின் மருமகன் திருட்டு விசிடி தயாரித்ததாகவே எழுதினார்கள். இதனால் பாலசந்தர் கண்டனம் தெரிவிக்க வேண்டியதானது. பதிலுக்கு சந்திரசேகரன் பாலசந்தரைத் தாக்க... இந்த நேரத்தில் பாலசந்தரைச் சந்தித்தபோது, யார் யாரை பழி சொல்வது என்று விவஸ்தை வேண்டாமா.. வேதனைப்பட்டார். சந்திரசேகரனைச் சந்தித்தபோதும் படத்தைத் திருட்டுத்தனமா காப்பி பண்ணிட்டு எப்படிலாம் நாடகம் ஆட்றாங்க என்று கொதித்தார். இரண்டு தரப்பிலும் அப்படியொரு காயம். இணையவே முடியாத இரண்டு துருவங்களாக மாறிப் போய்விட்டதைக் கண்டேன்.

விரைவிலேயே பாலசந்தர் தயாரிப்பில் விஜய் நடித்த "திருமலை' என்ற படம் உருவாவதாக அறிவிப்பு வெளியானது. சண்டைக்கு ஒரு காரணம் இருந்தது போல சமாதானத்துக்கு ஒரு காரணமும் சொல்லப்படவேயில்லை இரண்டு தரப்பிலும்.

7 கருத்துகள்:

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

திரைக்கு பின் இவ்வளவு செய்திகளா.?? விறுவிறுப்புடன் எழுதுகிறீர்கள். நன்றி.

சினிமா உலகம் பற்றிய எனது வலை பார்க்கவும். உங்கள் கருத்துக்காக என் வலை காத்துகிடக்கிறது. Hope you will plz..?

ஆதவன் சொன்னது…

good article.. nalla nadaiyil ezhuthugireergal.. vazhga.. valarga..

if possible please provide your mobile no. to: thamizhstudio.com, i will speak with you.

thanks,
www.thamizhstudio.com

ILA சொன்னது…

\\சண்டைக்கு ஒரு காரணம் இருந்தது போல சமாதானத்துக்கு ஒரு காரணமும் சொல்லப்படவேயில்லை இரண்டு தரப்பிலும். \\
வேறென்னங்க இருக்கப் போவுது? வியாபாரம்தான்.

Nilofer Anbarasu சொன்னது…

டைமண்ட் பாபு - ஜகஜால கில்லாடியா இருப்பாரு போல.

Nilofer Anbarasu சொன்னது…

திரைக்குப் பின்னே 21ல் மறுமொழி இடுவதற்கான லிங்க் காணவில்லை. சற்று பார்த்து சரி செய்யவும்.

venkatramanan சொன்னது…

சுஜாதா நினைவு விருது வென்றமைக்காக வாழ்த்துக்கள் தமிழ்மகன்! வலைப்பதிவில் வந்த குறுகிய காலத்திலேயே தங்களின் வலைப்பதிவைப் பலர் விரும்பிப் படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றெண்ணுகிறேன்! தொடர்ந்து எழுதுங்கள்!

அன்புடன்
வெங்கட்ரமணன்

பெயரில்லா சொன்னது…

சுஜாதா நினைவு விருது வென்றமைக்காக வாழ்த்துக்கள்

A. Mareeswaran

LinkWithin

Blog Widget by LinkWithin