வியாழன், நவம்பர் 15, 2007

சிறுகதை எழுதுவது எப்படி?

எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டு பேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல் புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும்போது நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம்; மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன் மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை.

கலைஞர் உணர்வு மயமாக ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம் உள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும். ஆனால் மெய் மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.

-எழுத்தாளர் தி.ஜானகிராமன்

தள்ளாத கி.வா.ஜ.

ஒருமுறை எழுத்தாளர்கள் சிலர் வெளியூர் நிகழ்ச்சிக்குக் காரில் சென்று கொண்டிருந்தனர். பாதி வழியில் கார் பழுதடைந்து விட்டது. காரில் இருந்தவர்கள் எல்லாம் கீழே இறங்கி காரைத் தள்ளும் முயற்சியில் இறங்கினர்.

காரில் இருந்த பெரியவர் கி.வா.ஜ. அவர்களும் காரில் இருந்து இறங்கி காரைத் தள்ளுவதாகச் சொன்னார். மற்ற எழுத்தாளர்கள் அவர் வயதில் மூத்தவர் என்பதால் இறங்க வேண்டாமென மறுத்துவிட்டனர். உடனே கி.வா.ஜ. ""நான் என்ன தள்ளாதவனா?'' என்று போட்டாரே ஒரு போடு.

LinkWithin

Blog Widget by LinkWithin