செவ்வாய், ஆகஸ்ட் 22, 2006

குறுங்கதை- கடவுளின் கருணை!

குட்டிக் கதை என்றால் அது குழந்தைகளுக்கான கதைகள் என்றும் டெக்காமரான் கதைகளை சொல்ல ஆரம்பித்து அது வேறுமாதிரியான 'குட்டிக் கதைகளாக உறுமாறிப் போனதாலும் இதைக் குறுங்கதை என்று சொல்லியிருக்கிறேன். இவ்வளவு குட்டி கதைக்கு இவ்வளவு நீளமான விளக்கம் தேவையா என்று யோசிக்க வேண்டாம். இனி தொடர்ந்து நான் எழுதப் போகும் எல்லா குட்டிக் கதைகளுக்கும் சேர்த்து இது...

கடவுளின் கருணை!

''கணவன் மனைவிதான் என்று உறுதி செய்துவிட்டீர்களா?'' என்றார் இன்ஸ்பெக்டர்.
''பண்ணிட்டோ ம் சார். ஹஸ்பண்ட் உயிர் இப்பதான் பிரிஞ்சது. சாகறதுக்கு முன்னாடி அவரே சொன்னார்.'' பைக் ஆக்ஸிடண்டில் இறந்தவர்களின் முகத்தைத் திறந்து காட்டியபடியே பதில் சொன்னார் கான்ஸ்டபிள்.லாரி டயருக்கு அடியில் ரத்தம் இன்னும் ஈரம் காயாமல் இருந்தது.
''ஒருத்தர பிரிஞ்சு ஒருத்தர் தவிக்காம ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் செத்துப் போனதும் கடவுளோட கருணைதான்'' ஆகாயத்தைப் பார்த்து நன்றி சொன்னார் இன்ஸ்பெக்டர்.
திடீரென செல்போன் ஒலி. இறந்து கிடந்தவரின் பாக்கெட்டிலிருந்து சப்தம் கேட்டது.
இன்ஸ்பெக்டர் எடுத்தார். ''அரை மணிநேரத்தில வர்றோம்னு சொல்லிட்டு எங்கப்பா போனீங்க? தம்பி இங்க அழுதுகிட்டே இருக்கான்'' என்றது ஒரு சிறுமியின் குரல்.

LinkWithin

Blog Widget by LinkWithin