திங்கள், மார்ச் 30, 2009

திரைக்குப் பின்னே- 26

படிப்பில் இருந்து நடிப்புக்கு...!

’செந்தமிழ்ப் பாட்டு’ படம் படு தீவிரமாக ஓடிக் கொண்டிருந்த நாளில் அப் படத்தின் கதாநாயகியான கஸ்தூரியைப் பார்க்கப் போனேன். அவருடைய அம்மா ஒரு அட்வகேட். தந்தை பொறியியல் பயின்றவர். கஸ்தூரி ரங்கன் சாலையில் சோவியத் கல்சர் சென்டர் அருகே அவருடைய வீடு இருந்தது. அவருடைய சுடிதாரை அயர்ன் செய்து கொண்டும் டிபன் சாப்பிட்டுக் கொண்டும் அவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
"காலேஜுக்கு ரொம்ப டயமாயுடுச்சு நான் வர்றேன்'' என்று புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு ஓடும் போதுதான் அவர் படித்துக் கொண்டிருக்கிறார் என்ற விஷயமே தெரியும். கல்லூரியில் படித்துக் கொண்டே படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் கஸ்தூரி. 91ஆம் ஆண்டு மிஸ் சென்னையாகத் தேர்வாகி அதே வேத்தில் நடிக்க வந்தவர். நான் பேட்டிக்குச் சென்ற போது அவர் எத்திராஜ் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார்.
ஒரு சினிமா நடிகையாக தன்னை முழுதாக மனதில் நிரப்பிக் கொள்ளாத அந்தத் தருணம் அவரிடம் பேசுவதற்கு சுலபமாக இருந்தது. சினிமா பற்றியில்லாமல் கல்லூரி அரட்டைகள், படிக்கிற புத்தகங்கள் பற்றி நிறைய பேசினார். ஜெஃப்ரி ஆர்ச்சர் என்றால் உடனே அவருடைய நாவல்களில் தனக்குப் பிடித்த நாவல் அதுதான். தமிழில் அப்படியொரு நாவல் சான்ஸே இல்லை என்பார். ஜெஃப்ரி ஆர்ச்சரின் மேட்டர் ஆஃப் ஆனர் பற்றி அப்படி புகழாரம் சூட்டினார். கூட படிக்கிற பசங்களுக்கெல்லாம் நான் ஜோசியம் சொல்வேன் என்றார். உங்க பிறந்த தேதி சொல்லுங்க உங்க ஜாதகத்தைச் சொல்றேன் என்றார் உற்சாகமாக. அப்புறம்தான் ஜோடியாக் ஸேன் ஜோதிடத்தில் நிபுணரான லிண்டா குட்மேன் புத்தகங்கள் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
படப்பிடிப்புத் தளங்களில் பார்த்தாலும்கூட பேட்டிக்காக என்று இல்லாமல் ஏதாவது ஒரு புத்தகம் பற்றி பேச முடிந்தது இவரிடம். ஆரம்பத்தில் கிசுகிசுக்களையும் ஜாலியாகத்தான் எடுத்துக் கொண்டார். அமெரிக்காவுக்குப் போன இந்திய சாமியார் கதையைச் சொன்னது இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அமெரிக்க பத்திரிகையாளர்கள் இந்திய சாமியாரின் வாயைக் கிளறுகிறார்கள். அவரோ படு ஜாக்கிரதையாகப் பேசுகிறார். அமெரிக்காவில் விபசார விடுதிகள் இருக்கும் இடங்கள் பற்றித் தெரியுமா என்பார் பத்திரிகையாளர். சாமியாரும் படு ஜாக்கிரதையாக அதெல்லாம் எனக்குத் தெரியாது என்பார். மறுநாள் பத்திரிகையில் இப்படி செய்தி வெளியாகும்: "விபசார விடுதிகள் எங்கே இருக்கின்றன? இந்திய சாமியார் ஆர்வம்'. இந்தக் கதையை கஸ்தூரிதான் சொன்னார்.
சினிமாவில் இருந்த போட்டியும் தேவையும் அவரை மெதுவாக மாற்றிக் கொண்டிருந்தது. கிசு கிசுக்கள் வர ஆரம்பித்தன. அவருடன் சுற்றுகிறார். இவருடன் சுற்றுகிறார் பாணியில். அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர் மாணவியாக இருந்து நடிகையாக மாறியதைப் பார்த்தேன். புத்தகங்கள் பற்றிப் பேசுவது குறைந்து போனது. பேசுவதற்கு அவருக்கு அதைவிட முக்கியமாக வேறுவிஷயங்கள் உருவாகிவிட்டன.

முதல்வரிடம் மனு!

சினிமாவில் மார்க்கண்டேயர் என்று சிவகுமாரைச் சொல்வார்கள். இன்னொருவரைச் சொல்வதென்றால் முரளியைச் சொல்லலாம். சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் இன்றி ஒரே மாதிரி தோன்றியவர் அவர்.
பெப்ஸி - படைப்பாளி என்று பிரச்சினை வலுத்துக் கொண்டிருந்தபோது படைப்பாளிகள் தனியாகவும் தொழிலாளர்கள் தனியாகவும் முதல்வரைச் சந்தித்து மனு கொடுத்தனர். சினிமா நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போன்றவர்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு இருந்ததால் இவர்கள் தரப்பில் மனு கொடுக்கும்போது பெரிய ஊர்வலமே நடந்தது.
நடிகர்கள் திரளாக வந்திருந்தனர். முதல்வரைச் சந்திக்க செயலகத்தில் காத்திருந்த நேரத்தில் சத்யராஜ், தீவிரமாக ஒரு யோசனையை முன் வைத்தார். முதல்வரிடம் நாம் இன்றைக்கு இன்னொரு கோரிக்கை மனுவையும் முன் வைக்க வேண்டும் என்றார். இருந்த தீவிரத்தில் நடிகர்கள் அனைவரும் சொல்லுங்கள் குறித்துக் கொள்கிறோம் என்றார்கள்.
"நம்ம முரளி இருக்காறே, அவர் பதினைஞ்சு வருஷமா காலேஜ் பையனாவே நடிச்சுக்கிட்டு இருக்காரு. அடுத்த வருஷம் அவருடைய பையன் காலேஜ் போகப் போறார். இன்னமும் இப்படி வம்பு பண்ணிக்கிட்டு இருக்கறது நல்லதில்ல. முதல்வர்கிட்டயே இதுக்கு ஒரு நல்ல முடிவெடுக்கச் சொல்லிடுவோம்'' என்றார்.

முரளிக்கு வெட்கம் தாளவில்லை. "போங்கண்ணே.. நான் ஏதோ சீரியஸா கோரிக்கை சொல்லப் போறீங்கன்னு நினைச்சா...'' என்றார்.
"அட சீரியஸாதாம்பா சொல்லிக்கிட்டு இருக்கேன்'' என்றார் சத்யராஜ்.


திராவிட ராஜேஷ்?

பத்திரிகையாளர்கள் சில நேரங்களில் புதுமுக நடிகர்களுக்கு யோசனைகள் வழங்குவதுண்டு. யாரை மேனேஜராக வைத்துக் கொள்ளலாம், எந்த இயக்குநர் படத்தில் நடிக்கலாம், எந்தத் தயாரிப்பு நிறுவனம் சொன்ன தேதியில் படத்தை எடுத்து முடிப்பார்கள்... இந்த மாதிரி யோசனைகள் சொல்லுவோம். புதிதாக நடிக்க வருபவர்களுக்கு அதெல்லாம் வேதவாக்காக இருக்கும்.
நல்ல யோசனை சொல்வதாக நினைத்து நான் செய்த ஒரு காரியத்தை நினைத்து வருந்துவதற்கும் சிரிப்பதற்கும் ஒரு விஷயம் இருக்கிறது.
’வெயில்' படத்துக்கு முன்பு வசந்தபாலன் இயக்கிய ’ஆல்பம்' படத்தில் கதாநாயகனாக தெலுங்குப் பட உலகின் பிரபல ஹீரோ கிருஷ்ணாவின் மகன் ஆர்யன் ராஜேஷ் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது,
தமிழக அரசியல் சூழ்நிலை பற்றியெல்லாம் விளக்கி, ஆர்யன் என்ற வார்த்தை தமிழர்களுக்குப் பிடிக்காத வார்த்தை என்றும் ஆரிய- திராவிட போர்கள் பற்றியும் சொன்னேன்.
அவர் ஆச்சரியப்பட்டும் பதறியும் போனார். "எனக்கு யாருமே இந்த விஷயத்தைச் சொல்லவே இல்லையே?'' என்றார்.
போதாதா?
கேரளத்தில் மோகன்லால் நடித்து வெளியான ஆர்யன் என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகும்போது திராவிடன் என்று மாற்றி அதில் சத்யராஜ் நடித்தார் என்றேன். மலைப்பின் உச்சிக்கே போய்விட்டார். விட்டால் திராவிட ராஜேஷ் என்று பெயர் வைத்துக் கொள்வார் போல மாறிவிட்டார்.
அடுத்து வந்த பட அறிவிப்புகளில் தன் பெயரை வெறும் ராஜேஷ் என்று மாற்றிக் கொண்டார். பட நிறுவனம், இயக்குநர், தன் தந்தையிடமெல்லாம் என்ன விளக்கம் கொடுத்து இந்த மாற்றத்தைச் செய்தாரோ தெரியாது. என்னுடைய அறிவுரையின்படி அவர் பெயரை மாற்றிக் கொண்டது எனக்கும் பெருமையாக இருந்தது.
பிறகு ஆர்யா என்ற பெயரிலேயே ஒரு நடிகர் வந்து, வெற்றி நட்சத்திரமாக இப்போதைய நான் கடவுளாகவே கோலோச்சிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆர்யன் ராஜேஷ் என்ன நினைக்கிறாரோ? தமிழர்களின் ஆர்ய வெறுப்பும் எப்படி மறைந்ததோ? புதிராகத்தான் இருக்கிறது.

வெள்ளி, மார்ச் 27, 2009

மின்னலா, வெண்ணிலவா?

இளம் நட்சத்திரங்கள்
மின்னலா, வெண்ணிலவா?

கால வேகம், அனைத்தையும் சுருக்கி விட்டது. சோழ சாம்ராஜ்யத்துக்கும் தொண்டை மண்டலத்துக்கும் இடையில் மாதக்கணக்கில் பயணிக்க வேண்டியிருந்தது. இப்போது அதே அவகாசம் பூமிக்கும் செவ்வாய்க் கிரகத்துக்குமாக மாறிவிட்டது. மனிதர்களின் வாழுங்காலம், பிரதமர் பதவிக் காலம் அனைத்துமே சுருங்கி விட்டது. 35 ஆண்டுகளுக்கு மேல் கதாநாயகர்களாக கோலோச்சிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி காலம், கமல் ரஜினி காலத்தில் இன்னும் சற்றுக் குறைந்து இப்போது சொற்ப வருடங்களாக மாறிவிட்டது.
அஜீத்குமார், அப்பாஸ் காலத்தை அது என்னவாக மாற்றப் போகிறது என்று சிந்திக்க வைக்கிறது.


அப்படியானால் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் அரசாட்சி செய்ததற்குக் காரணம். காலச் சூழல் மட்டும்தானா? மற்றெல்லா துறையைப் போலவும் இதையும் பொதுமைப்படுத்தி விட முடியுமா? இப்போது படத்துக்குப் படம் கதாநாயகர்கள் மாறிக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன? பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.



முன்பு போல நடிகர்களுக்குள் அர்ப்பணிக்கும் குணம் அற்றுப்போய்விட்டது. இரண்டு படம் வெற்றி பெற்றுவிட்டால் சம்பளத்தைப் பல லட்சங்களுக்கு உயர்த்திவிடுகிறார்கள். சிவாஜியும், எம்.ஜி.ஆரும் தங்கள் வாழ்நாளில் வாங்காத சம்பளத்தை, இன்றைய இளம் நடிகர் தன் இரண்டாம் படத்திலேயே கேட்கிறார். ஆட்டம் அதிகமாகி விடுகிறது. சரியாக ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை. கால்ஷீட் சொதப்பல்கள்... நடிகர்கள் வந்த வேகத்தில் காணாமல் போவதற்கு இப்படிப் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.
நடிகர்களின் விட்டேற்றியான போக்குதான் அவர்களின் நிலைமைக்குக் காரணம் என்று உறுதியாகக் கூறமுடியாது. நல்ல இயக்குநர்களின் அறிமுகம் கிடைக்காமல் எத்தனை திறமையான நடிகர்கள் வீணாகியிருக்கின்றனர்?
ராசியில்லாத நடிகர் என்ற காரணத்திற்காக ஒரங்கட்டப்பட்டவர்கள் எத்தனையோ பேர். ஆட்டம் போட்ட நடிகர்கள் பலர் நீண்டகாலம் நடித்தும் இருக்கிறார்கள்.
களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல்ஹாசனுடன் சண்டை போடும் சிறுவன்தான் இப்போது ராமன் அப்துல்லா படத்தில் உன் மதமா என் மதமா என்று கிறுக்கன் வேடத்தில் வந்து பாட்டு பாடிய தசரதன்.
சமீபத்தில் மறைந்த தசரதனைப் பற்றி கமல்ஹாசன் ஒரு முறை இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.
களத்தூர் கண்ணம்மா படத்தில் என்னை விடச் சிறப்பாக வசனம் பேசி நடித்தவர் தசரதன். அவர் இன்று நடந்து போய்க் கொண்டிருக்கிறார். நான் பென்ஸ் போட்டோல் போய்க்கொண்டிருக்கிறேன். போட்டோல் போய்க் கொண்டிருப்பதால் அவரைவிட நான்தான் சிறந்த நடிகன் என்று நான் எண்ணியதில்லை. அவரைப் போல பல நடிகர்களை நான் உதாரணம் சொல்ல முடியும். வாய்ப்பு கிடைக்காததாலேயே தங்களை நடிகர்களாக அடையாளம் காட்ட முடியாதவர்கள் அவர்கள்.
மூன்று முறை தேசிய விருது பெற்ற நடிகர் கமல்ஹாசன் தரும் ஆதாரம் இது.
தொடர்ச்சியாக நல்ல வாய்ப்பு முக்கியம். தமிழில் நூறு படங்களைத் தாண்டிய பல நடிகர்களுக்கு இது பொருந்தும். எம்.ஜி.ஆர். காலத்திலேயே ரவிச்சந்திரன் படங்களுக்கு இளைஞர்களின் மத்தியில் வரவேற்பு இருக்கவில்லையா? ரவிச்சந்திரன் என்ன ஆனார்? கமல்ஹாசன், ரஜினி படங்களுக்கு மத்தியில் தொடர்ந்து வெள்ளி விழாப் படங்களைத் தந்த மோகன் என்ன ஆனார்? அவர்களுக்கு இருந்த வரவேற்பு திடீரென்று மங்கிப் போனது ஏன்?


சில தோல்விப் படங்களுக்குப் பிறகு அவர்களின் மவுசு குறைந்து போனது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கனவுக் கன்னியாக ஜொலித்துக் கொண்டிருந்த நாயகிகள் ஒரு சாயங்காலத்தில் ஆட்ட நாயகியாகவும், அக்காவாகவும், அம்மாவாகவும் மாறுவதற்கும் காரணம் இதுதான்.

தொடர்ச்சியான வெற்றிப்படங்கள் - திறமையான இயக்குநர்கள் இல்லாததால்தான் நடிகர்கள் காணாமல் போகிறார்களா?...


ஒரு காலத்தில் அப்படியிருந்திருக்கலாம். இப்போது அப்படிச் சொல்ல முடியாது. ஓர் இளம் நடிகரின் படங்கள் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களாக அமைவதுதான் ஆபத்தாக இருக்கிறது. அவருடைய சம்பளம் ஏடாகூடமாக ஏறிவிடுவதால் உடனடியாக வேறு நடிகரைத் தேட வேண்டியிருக்கிறது. இந்திப் பட உலகம் புதிய புதிய இளம் நடிகர்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பதற்கு அதுதான் காரணம் என்கிறார் விநியோகஸ்தர் ஒருவர். ஆயிரம் இருந்தாலும் முன்புபோல நடிகர்களுக்குப் பயிற்சியில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். சிவாஜி, எம்.ஜி.ஆர்., எம்.ஆர். ராதா, ரங்காராவ், பாலையா போன்ற பல நடிகர்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சியிருந்ததற்குக் காரணம் அவர்கள் எல்லாம் நாடகத்துறையில் இருந்து வந்தவர்கள். நாடகம் அவர்களுக்கு நல்ல பயிற்சிக் களமாக இருந்தது. நடிப்போடு நல்ல பண்பாடும் இருந்தது. பண்பாடு அவர்களை நிலைநிறுத்திக் கொள்ளப் பேருதவியாக இருந்தது. எதிரெதிர் முகாம்களில் இருந்த எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கூட அண்ணன் தம்பி உறவு முறை சொல்லி விளித்துக் கொண்டனர்.

எத்தனை போட்டி பொறமைக்கிடையேயும் மற்றவர்களை அவர்கள் மதிக்கத் தவறியதில்லை.
இப்போது...?
நடிப்பில் எனக்கு ஆர்வமிருந்ததில்லை என்று கூடச் சில அறிமுக நடிகர்கள் பேட்டி கொடுக்கிறார்கள்.


மாடலிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது படத்தின் இயக்குநர் என்னைப் பார்த்து விட்டு நடிக்க அழைத்தார். முதலில் எனக்கு விருப்பமில்லை. நடிக்க வந்த பிறகுதான் இதற்கிருக்கும் வரவேற்பை உணர்ந்தேன் என்று கூறியிருக்கிறார்கள்.

நான் பிஸினஸ் மேன், ஒரு விழாவில் சந்தித்த இயக்குநர் மணிரத்னம் என்னை நடிக்க விருப்பமா? என்று கேட்டார். பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன். தளபதியில் எனக்குக் கிடைத்த கலெக்டர் வேடம் அதன் பிறகு அமைந்ததுதான் என்றார் அரவிந்தசாமி. நடிப்பில் தாகம் குறைந்த பலர் நடிக்க வந்து, அதனால் கிடைத்த புகழுக்கும் பணத்திற்கும் விருப்பம் கொண்டு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். என்னை ஒரு நடிகனாக மக்கள் அங்கீகாரம் செய்வதற்கு நான் 25 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது என்று கூறிய எம்.ஜி.ஆர். எங்கே? கூட்டத்தில் சிப்பாய் வேடம். தாங்கி நடித்தவர், பின்னாளில் மாபெரும் மக்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதற்குக் காரணம் அந்த விடாமுயற்சிதானே? இப்போது வருகிறவர்கள் ஆரம்பத்திலேயே கதாநாயகன் வேடத்தோடு களத்தில் குதிக்கிறார்கள். வரவேற்பு இருக்கும் வரை நடிக்கிறார்கள். இல்லையா... சரி விடு என்று நடையைக் கட்டுகிறார்கள். வாழ்க்கையை லேசாக எடுத்துக் கொள்ளும் இந்த டேக் இட் ஈஸி போக்கு இக் கால இளைஞர்களின் பொதுத் தன்மையாக இருந்தாலும் துறையில் நீடிக்கமால் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். நடிக்க வருபவர்கள் தங்களுக்கென பாணி எதுவும் வைத்துக் கொள்ளாதது மற்றொரு காரணம். சிவாஜியும் எம்.ஜி.ஆரும். கமலும் ரஜினியும் ஒரே காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்தற்கு. அவர்களின் தனித் தன்மை எவ்வளவு உதவி போட்டோந்திருக்கிறது என்பது சுலபமாக விளங்கும். அதை அவர்கள் பிடிவாதமாகக் கடைப்பித்தார்கள். விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் போன்றவர்களும் தங்களுக்குள் இந்த வித்தியாசங்களைக் காட்டினார்கள். இதில் பிரபு, கார்த்திக் ஆகியோருக்காவது பெரிய நடிகர்களின் மகன்கள் என்ற அடையாளம் இருந்தது. கதாநாயகர்களாகவே அறிமுகமானார்கள். அவர்களின் தனித்துவத்தை நிரூபிப்பதற்கு சற்று அவகாசம் எடுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோர் போராடி ஜெயித்து வந்தவர்கள். கதையின் சிறப்பினாலோ, தயாரிப்பின் பிரமிப்பினாலோ வெற்றிகாணும் இளம் கதாநாயகர்கள் அதைத் தனக்குக் கிடைத்த வெற்றியாக நம்பத் தொடங்கி ஏமாறுகிறார்கள். அவர்களின் பெண் ரசிகைகளும் போகிற இடங்களிலெல்லாம் எதிர்ப்படும் விசிறிகளின் குளிர் சாமரமும் ஏதோ சாதித்த திருப்தியை ஏற்படுத்தி கடைசியில் அவர்களை அழிக்கின்றன.
இளம் நடிகைகளின் ஆதிக்கம் குறைவதற்கு இத்தனை நீண்ட காரணம் கூடத் தேவையில்லை. பெரும்பாலும் மும்பை, ஆந்திரம், கேரளம், ஆகிய மாநிலத்தில் இருந்து இறக்குமதியாகும் இவர்களின் பண நோக்கம் அப்பட்டடமாகவே தெரியும். கலைதாகம் என்பது அவர்களுக்கு பத்தாம் பட்சமே. புகழைத் தக்க வைக்க வேண்டுமே என்ற கவலை வேண்டுமானால் சிலருக்குக் கொஞ்ச காலம்வரை இருக்கும். மேற் சொன்ன காரணங்களில் ஒன்றினாலோ அல்லது அத்தனையும் சேர்ந்தோ இளம் நடிகர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
வரிசைப்படுத்துவோமா?
1. காலச்சூழல்
2. அர்ப்பணிக்கும் குணமின்மை
3. நல்ல படங்களில் தொடர் வாய்ப்பின்மை
4. நடிகர்களின் சம்பளப் பிரச்சினை
5. நடிப்பில் தாகமின்மை
6. தனித் தன்மையின்மை
7. பண ஆசையும் புகழ்போதையும்

இந்தக் காரணங்களால் நடிகர்கள் காணாமல் போவது சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே இருப்பதாகக் கூறினாலும் அதன் விகிதாச்சாரம் இப்போது முழுமை அடைந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.

செவ்வாய், மார்ச் 24, 2009

கடைசிப் புத்தகம்

மானுடத்துக்கான கடைசி புத்தகத்தை யாரோ எழுதிவிட்டார்கள் என்று மிக ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால் அவ்வளவு உறுதியாக யாருக்கும் அதைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. எழுதியது யாரென்றோ, எந்த தேசத்தவர் என்றோ, எந்த மொழியினர் என்றோ ஒரு தகவலும் தெரியாமல்.. அதே சமயத்தில் மிகத் தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்தது இந்தச் செய்தி.லிபர்ட்டி சிலை மிக பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. நானிருக்கும் குடியிருப்பில் இருந்து அதை மிக நன்றாகப் பார்க்க முடிந்தது. அறுபத்து நான்காவது மாடியில் இருந்து பார்த்தால் அந்தச் சுதந்திர தேவி ரொம்ப குட்டை. இங்கிருப்பவர்களுக்கு உலகின் அத்தனை தகவல்களும் முதலாவதாகத் தெரிந்துவிடுவதாகச் சொல்வது உயர்வு நவிற்சியாக இருக்கக் கூடும்.

"உருவாவது எந்த இடமாகவும் இருக்கலாம் அதை முதலில் முழுதாக அனுபவிப்பது நாங்கள்தான். ஏனென்றால் நாங்கள் அமெரிக்கர்கள்''என்ற போலி இறுமாப்பு பலருக்கு இருந்தது. ஆனால் இந்த மாதிரி செய்தியை அப்படி நினைத்துக் கோட்டைவிட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.ஸ்டீபனுக்கு அந்தப் புத்தகம் இருக்குமிடம் தெரிந்துவிட்டது என்று எனக்கும் சந்தேகம். அவனுடைய நடவடிக்கைகள் முழுவதுமாக மாறிவிட்டன. இன்டெர் நெட்டில் அதிக நேரம் செலவிடுகிறான். தேடுகிறான். சலித்துக் கொள்கிறான். தனிமையை விரும்புகிறான். வழக்கமாக அவன் அப்படியிருப்பவன் அல்ல. பெண் வேட்கை மட்டுமே பிரதானமாகக் கொண்டு ஒழுகுபவன். சதா நேரமும் கம்ப்யூட்டர், நூலகம், தனிமை என்று மாறிப் போய்விட்டான். கேட்டால் "பரீட்சை நெருங்கிவிட்டது. இன்னும் தாமதித்தால் நான் என் பண்ணைவீட்டுக்கு மூட்டைக் கட்ட வேண்டியதுதான்'' என்கிறான். என்னமாய் சமாளிக்கிறான் பாருங்கள். அவனுடைய திடீர் தாடியும் கண்களின் தீட்சணமும் அந்தப் பொய்யை வெளிச்சம் போட்டுக் காட்டின. உண்மையில் மிகப் பெருவாரியான மக்களுக்கு இந்தச் செய்தியின் முக்கியத்துவம் புரியவில்லை. அவர்கள் பசி, பட்டினி, வறுமை, அல்லது வறுமையை ஒழித்தல், எந்தக் கட்சி ஜெயிக்கும், பெட்ரோல் தட்டுப்பாடு என்பதைப பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். மக்கள் இப்படி அன்றாடப்பாட்டுக்கு அவதிப்படுவது இன்று நேற்று ஏற்பட்ட பழக்கமா? புறக்கணிக்கப்பட்ட பழத்தை உண்ட கணத்திலிருந்தோ, சிந்திக்க ஆரம்பித்த நாள் முதலோ பட்டுக் கொண்டிருப்பது. பிறவியைக் கடப்பது அவர்களுக்கு முன்னோர் போட்ட பாதையில் போவது போல பழக்கமாகிவிட்ட ஒன்று. யாரோ சிலர்தான் காலந்தோறும் ஞானத்தைத் தேடி அலைந்து திரிகிறார்கள். அவர்களில் சிலர் அதைக் கண்டெடுக்கிறார்கள்.

இன்னும் மிகச் சிலர்தான் அதனால் பயனடைகிறார்கள்; பயனளிக்கிறார்கள். ஜன சமுத்திரம் ஒரு போக்கில் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. ஞானத்தைத் தேடும் கூட்டமோ சிறு துளிகளாகச் சிதறிவிழுகிறது. சிறுதுளிதான் பெருவெள்ளம். பெருவெள்ளம் மீண்டும் ஜன சமுத்திரத்தில் கலந்துவிடுகிறதோ...?எதற்கு இந்தக் குழப்பம்? அதைத் தெளிவிக்கும் அருமருந்தாகத்தானே அந்தக் கடைசி புத்தகம் இருக்கிறது என்கிறார்கள். அதன் பிறகு யாரும் புத்தகம் எழுதத் தேவையிருக்காது என்று உறுதியாகப் பேசிக் கொண்டார்கள். மனிதர்கள் புத்தகங்கள் வாயிலாக எதை இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கிறார்களோ அதற்கெல்லாம் சேர்த்து ஒரே ஒரு புத்தகமாக அதைத் தந்திருக்கிறார்கள். ஆனால் யார்?

ஸ்டீபனைத் தொடர்ந்து கண்காணிப்பது விறுவிறுப்பாக இருந்தது. அவன் சரியாகச் சாப்பிடுவதில்லை. சரியாகத் தூங்குவதுமில்லை. இரவும் பகலும் படித்துக் கொண்டிருந்தான். பாடப்புத்தகங்கள்தான் கையில் இருக்கின்றன. ஆனால் அந்தப் புத்தகங்களின் ஓரத்தில் சங்கேத மொழியில் அவன் குறித்து வைப்பவை யாருக்கும் புரிவதில்லை. சில வரிகளை அடிக் கோடிடுவதையும் யாரும் சந்தேகிக்கவில்லை. வழக்கமாகப் பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் செய்வதுதான் என்று நினைக்கிறார்கள். சமையல்கலை புத்தகத்தின் ஒரு ஓரத்தில் அவன் "அதே புத்தகம்' என்று குறித்து வைத்திருந்ததைப் பார்த்தேன். ஹோட்டல் நிர்வாகப் புத்தகத்தில் அவன் அடிக் கோடிட்டிருந்த வரிகள் என் சந்தேகத்தை வலுக்கச் செய்தன. "இறுதி ஆண்டு" என்ற வரியும் "புத்தகம்' என்ற வரியும் வெவ்வேறு வண்ண மையினால் அடிக் கோடிட்டப்பட்டிருந்தன. இதில் ஆண்டு என்பது திசைதிருப்புவதற்காக என்பது எனக்குச் சட்டென புரிந்து போனது. இதைவிட முக்கியமாக மலேசியாவில் உள்ள ஒருவனுடன் அடிக்கடி கடிதத் தொடர்பில் இருந்தான். இ மெயில் வேறு. கேட்டால் அங்கிருக்கும் ஹோட்டல் ஒன்றில் வேலைத் தேடுகிறேன் என்கிறான். அந்த மலேசிய நண்பனின் இ மெயில் முகவரியை நான் எப்போதோ தெரிந்து கொண்டேன் என்பது ஸ்டீபனுக்குத் தெரியாது. இதுதான் அவன் கடைசி புத்தகத்தைத் தேடும் லட்சணம். ஸ்டீபனைப் போல கடைசி புத்தகத்தைத் தேடுபவனில் ஒருவன்தான் அந்த மலேசிய நண்பன் என்பதும் எனக்குத் தோன்றியது. நிச்சயம் கடைசி புத்தகத்தை எழுதியவனாகவோ அல்லது அதை வைத்திருப்பவனாகவோ இருப்பான் எனத் தோன்றவில்லை. ஏனென்றால் அவனுடைய இ மெயில் முகவரி புத்தகப் புழு என்று தொடங்கியது. புத்தகங்களைத் தேடுபவன்தான் புத்தகப்புழு. எழுதியவனோ, அந்தப் புத்தகத்தைக் கண்டெடுத்தவனோ புழு என்று பெயர் வைத்திருக்க மாட்டான்.நான் தைரியமாக அவனுக்கு ஒரு மெயிலை அனுப்பினேன். மிகவும் சுருக்கமாக. "அந்தப் புத்தகத்தை உங்களுக்கு தெரியுமா?' இதுதான் நான் அனுப்பிய செய்தி.ஒரே ஒருவரி. அவனைத் தூக்கி வாரிப் போடச் செய்திருக்கும் அது.
"யார் நீ என்று தெளிவுபடுத்தினால் நல்லது. என்னிடம் நீ கேட்கும் "அந்த'ப் புத்தகம் எதுவும் இல்லை.}இஸ்மாயில்'எனப் பதில் வந்தது சில நொடிகளில். ஒவ்வொரு எழுத்தின் இடையிலும் ஊடுருவும் கண்கள் உட்கார்ந்திருப்பதை உணர்ந்தேன்.நீ புத்தகத்தைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் நான் என் தொலைபேசி எண்ணைத் தருவேன் என மீண்டும் செய்தி அனுப்பினேன்.எந்தப் புத்தகம் என்றான் தெரியாதவன் போல்.என்னை விவரம் தெரியாதவன் என்று நீ சந்தேகிப்பது நியாம்தான். முதலெழுத்தை மட்டும் சொல்கிறேன். "க' } இப்படி ஒரு செய்தியை அனுப்பினேன்.இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை என அவன், "புத்தகத்தைப் பற்றிச் சொல்கிறேன், போன் நம்பரைச் சொல்' என்று செய்தி அனுப்பினான்.கடைசிப் புத்தகத்தைப் பற்றி சின்ன குறிப்பாவது கிடைக்காதா என்ற பேராவல் எரிந்தது உள்ளுக்குள்.ஃபோனில் அவன் கடுமையாகப் பேசினான்.

"ஏன் என் உயிரை எடுக்கிறாய்? என்னிடம் அப்படி எதுவும் இல்லை... நீ என்ன மடையனா? இனிமேல் அந்தப் புத்தகத்தைப் பற்றி என்னிடம் பேசாதே'' என பொரிந்து தள்ளினான். "உலகக் காப்பியங்கள், குவாண்டம் தியரி, கண்டுபிடிப்புகள், வாழ்க்கைத் தத்துவங்கள், உலக அதிசயங்கள், மாற்று எரி பொருள், கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் எல்லாமும் அதில் அடக்கமா? இவையெல்லாம் அல்லாத வெறொன்றா?'' என்ற என் கூர்மையான கேள்வி என்னுடைய தாகத்தை அவனுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

"உனக்காகப் பரிதாபப்படுகிறேன்'' - அதோடு அவனுடைய தொடர்பு முறிந்து போனது. அவன் என் காரணமாகவே அவனுடைய செல் போன் நம்பர், இ மெயில் முகவரி ஆகியவற்றை மாற்றிக் கொண்டுவிட்டான்.

ஸ்டீபன் என்னுடைய நடவடிக்கைகளைக் கண்டு சுதாரித்துவிட்டாதாகத் தெரிந்தது. அவன் என்னைவிட்டு விலகிச் செல்ல ஆரம்பித்ததோடு நான் அவனை மறைமுகமாகப் பின் தொடர்வதைச் சிலரிடம் புகாராகத் தெரிவித்திருந்தான். சில நெருங்கிய நண்பர்கள் என்னைச் சந்தித்து இப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்றனர். நான் அப்போது ஸ்டீபன் கடைசிப் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருப்பதை அவர்களிடம் சொல்லவில்லை. அதில் இரண்டு பிரச்சினைகள் இருந்ததன. கடைசி புத்தகத்தைப் பற்றி அவர்களும் தெரிந்து கொள்வார்கள். போட்டி அதிகமாகும். அதைவிட குழப்பம் அதிகமாகும்.

இரண்டாவது ஸ்டீபன் இன்னமும் அழுத்தமாக மாறிவிடுவான். அதன் பிறகு ஒரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.நூலகத்தில் அவனருகில் அமர்ந்து மெல்லிய குரலில் ஜாடை மாடையாக "மொத்தம் அது எத்தனை பக்கம்' என்றேன். கொஞ்ச நேரம் புரியாதவனாக நடித்தான். பின்னர் சுதாரித்து கையில் இருந்த "உணவு ஓர் ஆயுதம்' என்ற புத்தகத்தைத் திருப்பிப் பார்த்துவிட்டு 326 பக்கம் என்றான். எத்தனை நாளைக்கு இந்த நாடகம் என்று தெரியவில்லை.அதுதான் கடைசிப் புத்தகம் என்றால் அதன் பிறகு யாரும் புத்தகம் எழுத வேண்டிய அவசியமே இருக்காது. அது இன்றுவரை வந்த அத்தனைப் புத்தகங்களின் இறுக்கத்தோடும் வரப்போகும் யுகங்கள் தரும் செய்திகளின் சாறு நிரம்பியும் இருக்கும் என்றும் யூகித்தேன். ஆனால் அது என்ன மொழி? எழுதியவர் எந்தத் தேசத்தவர்? எத்தனை பக்கங்கள் கொண்ட நூல் அது. உண்மையில் அது வழக்கமான புத்தகங்கள் போன்ற அளவில் இருக்குமா? சித்திரகுப்தன் பேரேடு போல அளவில் பெரியதா? சொல்லுக்குள் காப்பியங்களைச் சுருக்கித் தரும் விந்தையா? இல்லை அதைப் படிக்கும் போது வார்த்தைகளுக்குள் இருக்கும் விஸ்வரூபத்தைக் கண்களுக்குப் பதில் மனம் உள்வாங்குமா? எனக்குச் சோர்வாக இருந்தது. இந்தச் சோர்வுக்கு மருந்து அந்தப் புத்தகத்தைக் கண்ணால் காண்பதன் மூலம்தான் கிடைக்கும் என்று தெரிந்தது.

மாலை நியூயார்க்கின் பிரதானமான "புல்லின் இதழ்' குடியறைக்குச் சென்றேன். இந்தியர்களும் வந்து பருகிச் செல்லும் இடம் அது. நான்காவது சுற்றில் புத்தி கிறுகிறுத்துக் கிடந்த போது எனக்கு இரண்டு டேபிள் தள்ளி ஒருவன் இப்படிச் சொன்னது கேட்டது: "அந்த ஒரு புத்தகமே போதும்,''அவன் ஆங்கிலத்தில் சொன்னாலும் அந்த உச்சரிப்பு இந்தியத் தன்மையுடன் இருந்தது. நான் தள்ளாடிச் சென்று, "அது என்ன புத்தகம்'' என்றேன்.அவனும் கண்கள் சொருக, "எந்தப் புத்தகம்?'' என்றான்."அந்த ஒரு புத்தகமே போதும் என்றீர்களே அது''அவன் ஹா... ஹாஹ்... ஹா என்று சிரித்தான்.

"நிச்சயமாக அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?'' என அவன் நண்பர்களைப் பார்த்தான். அவர்களும் சிரித்தனர். நான் தனியாக வந்திருப்பது தெரிந்து உடன் அமரச் சொன்னார்கள். பரஸ்பர அறிமுகம். சித்தார்த், கணேஷ், ராம், பகதூர் சிங். நால்வரும் மென்பொருள் பொறியாளர்கள்.

"அதை ஏன் பதிப்பிக்காமல் இருக்கிறார்கள்?'' என்றேன்.

"விரைவில் பதிப்பிக்க இருக்கிறார்கள்'' சித்தார்த் உறுதியாகச் சொன்னான்.அனைவரும் மெüனமாக அடுத்தச் சுற்றைக் குடித்து முடித்தோம். எனக்குள் பெரும் சூறாவளி. இவ்வளவு நெருங்கியாகிவிட்டது. இனி கண்ட கண்ட புத்தகங்களுக்காக மரங்களை அழிக்க வேண்டியிருக்காது. இந்தப் புத்தகம்தான் சிறந்தது என்று நோபல், புக்கர் பரிசுகள் தேவையிருக்காது. எல்லாம் கையடக்கமாக ஒரே புத்தகத்தில் இடம் பெறப் போகிறது. தாவோயிஸம், நிஹிலிஸம், ஜென், யின்யாங், டாடாயிஸம், மார்க்ஸிஸம், சர்வ மதக் கோட்பாடுகள், ஜாவா, ஐஸ்ன்ஸ்டைன், ரிச்சர்ட் ஃபெய்ன்மேன், மார்க்வெஸ், இஸபெல் அலன்டே, டால்ஸ்டாய், கான்ட், மகாபாரதம், தம்மம், குருநானக், கன்பூசியஸ், ஜேம்ஸ் பாண்ட், காத்தரீனா ஜூலி, புளியங்குடி, ஐபாட், இன்டல், கூகுள், ஆப்ரிக்கா, நைல், லெமூரியா.... எல்லோரும் எழுந்தனர்.

"அதில் எல்லாம் இருக்கிறதா?'' என்றேன்.

"எதில்?'' என்றான். போதை உச்சந் தலையில் குடியிருந்தது.

"சரி நாளைக்கு வருகிறீர்களா இங்கு?'' என்றேன்.அவர்களின் அலுவலக முகவரியோ, செல்பேசி எண்ணோ வாங்கிக் கொள்ளாமல் போனது பெரிய தவறு. மறுநாள் அவர்கள் வரவில்லை. தொடர்ந்து பல நாள் சென்று பார்த்தும் அவர்கள் வரவேயில்லை. பல மென் பொருள் நிறுவனங்களுக்குப் ஃபோன் செய்து பார்த்தேன். கடலில் பெருங்காயம் கரைத்த மாதிரி அவர்கள் கரைந்து போயிருந்தார்கள். கைக்கு எட்டியது மூளைக்கு எட்டவில்லை. ஷேர் மார்க்கெட்டில் சரிந்தவன் மாதிரி நிலைகுலைந்து போனேன்.கடைசிப் புத்தகம் பற்றி எனக்கொரு கருத்துருவம் கிடைத்தது. மரம் என்றதும் எனக்கு மாமரமோ, புளியமரமோ தேக்கு மரமோ, நாற்காலியோ, ஸôமில்லோ ஞாபகத்துக்கு வருவதற்கு முன் கட்டுமரம் ஞாபகத்துக்கு வரும். அது கடலில் இருக்கும் மரம்... சொல்லப் போனால் கடலில் மிதக்கும் மரம். அப்படியான ஒரு கருத்துரு.

கடைசிப் புத்தகம் கருப்பு அட்டைப் போட்டிருக்கும். சுமார் நூறு பக்கங்களுக்குள்தான் இருக்கும். எழுதியவரின் பெயரோ, புத்தகத்தின் பெயரோ அட்டையில் இடம் பெற்றிருக்காது. அதைப் படித்தால் புத்திசாலி ஆவது முக்கியமில்லை. மகிழ்ச்சியாக இருக்கும். புத்திசாலி ஆவதன் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பதுதானே? அதனால் நேரடியாக நோக்கம் நிறைவேறும்.

எல்லாப் புத்தகங்களும் நோக்கத்தை அடைவதற்கான படி நிலைகளைச் சொல்கின்றன. சில படிகள் உயரமானவை. அந்தப் படிக்கே படி தேவைப்படும் அளவுக்கு. சில எங்கெங்கோ வேறு மாடிகளுக்குக் கொண்டு சென்று விட்டுவிடுபவை. சில எத்தனை முறை ஏறினாலும் அதே இடத்துக்குக் கொண்டு வருபவை. சில சுழற்படிக்கட்டுகள் கிறுகிறுக்க வைத்து அச்சுறுத்துகின்றன. சில நடக்க நடக்க முன்னேறிச் செல்வது போல தோற்றமளித்துக் கீழே தள்ளிவிடுபவை. ஒவ்வொரு எழுத்தும் இலக்கை நோக்கியதாக இருப்பதுதான் கடைசிப் புத்தகத்தின் சிறப்பு என்றும் தோன்றியது.ஆனால் அது என்ன மொழியில் எழுதப்பட்டிருக்கும் என்பதில் கருத்துரு எதுவும் ஏற்படவில்லை. ஸ்டீபனோ, இஸ்மாயிலோ, சித்தார்த்-கணேஷ்- ராம்- பகதூர் சிங்கோ பார்த்திருக்கிறார்கள். சிக்கல் என்னவென்றால் அவர்களால் அதைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. அல்லது கிடைத்தற்கரிய ஞானத்தை இன்னொருத்தருக்கு அநாயாசமாகத் தாரை வார்த்துத் தருவதில் அவர்களுக்கு யோசனை இருக்கலாம். கடைசிப் புத்தகத்தாலும் இந்த அற்பத்தனங்களை அகற்ற முடியாதா என்ன? புத்தகத்தின் எல்லையைத் தொட்டவர்களுக்குத்தானே அந்த ஞானம் கைக்கூடும்? இவர்கள் எல்லாம் புத்தகத்தை அறிந்தவர்கள் மட்டுமே. படித்தவர்கள் அல்ல.

கருத்துருவின் அடுத்த கட்டம் இது. படித்தால்தான் அது கைக்கூடும். படிக்காமல் இருக்கும்வரை அது நாய் பெற்ற தெங்கம் பழம்தான்.நகரின் மிகப் பெரிய புத்தகக் கடை அது. நான் அதற்குள் பிரவேசித்தேன். இலச்சினை அணிந்த கடைச் சிப்பந்தி என்னை அணுகி, எனக்கு உதவும் குரலில் என்னப் புத்தகம் வேண்டும் என்றான்.நான் சற்று கிண்டலாகவே "கடைசி புத்தகம்'' என்றேன்.

அவன் சிந்தித்துப் பார்த்துவிட்டு "யார் எழுதியது?'' என்றான்.நான் பதில் சொல்லாமல் நகர்ந்தேன். யார் எழுதியதாம்? என்ன கேள்வி இது. ரிச்சர்ட் ஃபோர்ட் என்றோ குப்புசாமி என்றோ ஒரு பெயர் இருக்க வேண்டும் என்ற அவசியம் கடைசி புத்தகத்துக்கு உண்டா?...அட.. ஒரு கருப்பு அட்டையிட்ட புத்தகம் அங்கே இருந்தது. நினைத்தது போலவே அதன் மேல் புத்தகத்தின் பெயரோ, எழுதியவரின் பெயரோ இல்லை. நூறு பக்கங்களுக்கு அதிகம் இல்லாத கனம்தான். நான் புத்தகத்தின் இரண்டு பக்க அட்டையையும் திருப்பிப் பார்த்தேன். கருப்பு அட்டையைத் தவிர விலைக்கான கோடுகள் மட்டும் இருந்தன. உள் பக்கங்கள் எந்த மொழிக்கும் சொந்த மற்று இருந்தது. ஒவ்வொரு பக்கமும் பிரபஞ்ச வெளியின் கரும்பொருளாக ஆகஷ்கரித்தது. வார்த்தைகள், இலக்கணங்கள் பொருளிழந்து போன அமைதியின் பிரசங்கமாக இருந்தது. சட்டென மூடினேன்.

கோடியுகங்கள் கடந்தோடி முடிந்தது மாதிரியும் இருந்தது. யாருமே சீண்டாமல் ஓர் ஓரமாக அது இவ்வளவு நாளாக இருந்திருக்கிறது. நான் வினாடியில் பரபரப்படைந்துவிட்டேன். படபடப்பாக இருந்தது. இதயம் தாவி தொண்டைக்குழிக்குள் வந்துவிட்டதுபோல இருந்தது. கவுண்டரில் கொடுத்தபோது ``இது மட்டும்தானா?'' என்றான். "இதற்குமேல் வேறொதுவுமே தேவையிருக்காது, யாருக்கும்'' என்றேன். குரல் குழறி யாருடையதோ போல ஓலித்தது.
வரி கோடுகள் அற்ற நூறு பக்க நோட்டு ஒன்று, விலை ஒரு டாலர் என்று அவனுடைய கம்ப்யூட்டரில் ஒளிர்ந்தது. புத்தகத்தை வாங்கிக் கொண்டு வேகமாக அறையை நோக்கி நகர்ந்தேன்.

திங்கள், மார்ச் 23, 2009

திரைக்குப் பின்னே- 25

நடிகைகள் கைது!

சமீபத்தில் தொலைக்காட்சி நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டார். இது போன்ற செய்திகளின் போதெல்லாம் இந்தச் செய்தியின் பின்னணி என்ன என்ற யோசனை ஓடும்.
நடிகைகளை மிரட்டுவதற்கு இது ஒரு வழி என்பார்கள் சிலர். அவர்கள் யாருக்கு இணங்க மறுத்தார்கள் என்பதைப் பொறுத்து அந்த மிரட்டல் அமையும். அது காவல்துறை சம்பந்தமானதா, அரசியல் சம்பந்தமானதா, செல்வந்தர்கள் சம்பந்தப்பட்டதா, இல்லை சினிமா துறையினரே ஒருத்தருக்கு ஒருத்தர் விரோதித்துக் கொண்டு ஏற்பட்டதா என்பது சாவகாசமாகத் தெரியவரும்.
2003 அல்லது 04 என்று நினைக்கிறேன்.
வரிசையாக தமிழ்ப்பட நடிகைகள் விபசார வழக்கில் கைதானார்கள். கோர்ட், பத்திரிகை என்று செய்திகள் ஆளுக்கொரு தினுசாக எழுதித் தீர்த்தார்கள். ‘சின்ன ஜமீன்' படத்தில் அறிமுகமான நடிகை வினிதா. தொடர்ந்து சரத்குமாருடன் ‘வேலுச்சாமி', பிரபுவுடன் ‘வியட்நாம் காலனி' போன்ற அப்போதைய முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். அவரை சாலையில் நின்று விபசாரத்துக்குக் கூவி அழைத்தவர் போல கைது செய்தார்கள். தொடர்ந்து மாதுரி என்ற நடிகையும் பிறகு லாவண்யா, புவனேஸ்வரி, விலாசினி என்று ஆவேசம் வந்தது போல கைது செய்தபடி இருந்தார்கள். பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டம். காவல்துறை லிஸ்டில் அடுத்து இருக்கும் நடிகைகள் என்று கிட்டத்தட்ட அப்போதிருந்த அத்தனை கதாநாயகிகளையும் பட்டியல் போட்டார்கள்.
நடிகைகள்தான் திடீரென்று தொழிலை மாற்றிக் கொண்டார்களா? இல்லை காவல்துறைதான் தீவிர நேர்மையாகிவிட்டதா? வீண்பழி சுமத்தி வலையில் வீழ்த்தும் சதியா, இடைத்தரகர்கள் சரியாக லஞ்சம் தரவில்லையா?
விபசாரம் செய்ததால்தான் கைதானார்களா? விபசாரம் செய்ய மறுத்ததால் கைதானார்களா என்று ஏராளமாக யோசிக்க வைத்தது அந்தக் கைது சம்பவம்.
இவர்களில் சிலர் மீண்டும் நடிப்பதற்கு வரவேயில்லை. பிறந்த நாளுக்கு கேக் வெட்டினார் என்றெல்லாம் தினம் தினம் நாள்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் அதன் பிறகு கொண்டாட்டம் அற்றவர்களானார்கள். அதன் பிறகு வந்த பிறந்தநாள்கள், குடும்ப விழாக்கள் எல்லாமே எந்தத் தடயமும் இல்லாமல் போயின. சினிமா நிகழ்ச்சிகளிலோ, வேறு பொது நிகழ்ச்சிகளிலோகூட அவர்கள் தென்படவில்லை. சிலர் மீண்டு வந்தார்கள். முன்பு போன்ற கலகலப்பான இடங்களைத் தவிர்த்தார்கள். பத்திரிகை என்றால் இன்னும் விலகிப் போனார்கள்.
எதற்கான பலிகடா இவர்கள் என்பது மட்டும் கடைசி வரை புரியவே இல்லை.

பேக் அப்!

சினிமாத் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சினிமாப் படைப்பாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பிரச்சினை வலுத்திருந்த நேரம் 1997-ஆம் ஆண்டு.
இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஒரு தரப்பாகவும் மற்றத் தொழில் பிரிவினர் இன்னொரு பிரிவாகவும் செயல்பட்டனர்.
பாலுமகேந்திரா இயக்கிய ‘ராமன் அப்துல்லா' படத்தில் துணை நடிகர்கள் சங்கத்தில் பதிவு பெறாதவர்கள் நடித்துக் கொண்டிருப்பதாகத் தகவல் வந்து அப்போதைய பெப்ஸி தலைவர் விஜயன் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தார். பாலுமகேந்திராவும் விஜயனும் விவாதித்தனர். விவாதம் வளர்ந்தது. "ஷூட்டிங் பேக் அப்'' என்று அறிவித்தார் விஜயன்.
பேக் அப் சொல்வது இயக்குநரின் உரிமை. படப்பிடிப்பு முடிந்தது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கும் அறிவிப்பு. படத்தின் கேப்டன் சொல்ல வேண்டிய வார்த்தையை அவர் எப்படிச் சொல்லலாம் என்று பிரச்சினை வெடித்தது. "எங்கள் தொழிலாளர்களான லைட்மேன், கேமிராமேன், செட் கலைஞர்கள், போன்றவர்கள் மேற் கொண்டு பணியாற்ற வேண்டாம் என்பதற்கான அறிவிப்பு அது. அதைச் சொல்வதற்கு எனக்கு உரிமை உண்டு'' என்றார் விஜயன்.
இயக்குநரின் பணியில் தலையிட்டது தவறு என்று இணைந்தார்கள் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்.
"யாருமே வேலை செய்யாதீர்கள் என்று சொல்லியிருந்தால் தவறில்லை, பேக் அப் என்று சொல்வதுதான் தவறா? வார்த்தையில் என்ன இருக்கிறது'' என்றார் விஜயன்.
மூன்று ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினையும் சேர்ந்து கொள்ள ஒரு வருடத்துக்கும் மேலாக சினிமா ஸ்ட்ரைக். பத்திரிகையாளர்களுக்கு சினிமாப் பக்கத்தில் பிரசுரிக்க புகைப்படம் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. சினிமாப் பத்திரிகைகள் சிலவற்றைத் தற்காலிகமாக மூடினர்.
படைப்பாளிகள் தனியாக தொழிலாளர் சங்கங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர். டப்பிங், சண்டைப் பயிற்சி, கேமிரா, இசை, லைட் மேன், நடனக் கலைஞர்கள், சமையல் கலைஞர்கள் என எல்லாத் துறையும் உருவாக்கப்பட்டது. விஸ்வாமித்திரர் கடவுளுக்குப் போட்டியாக இன்னொரு உலகத்தைச் சிருஷ்டித்ததாகச் சொல்லுவார்கள். கடவுள் படைத்தது துளசி என்றால் விஸ்வாமித்திரர் படைத்தது நாய்த் துளசி. பார்ப்பதற்கு துளசி மாதிரியே இருக்கும் அதுவும்.
கோபத்தில் தொழிலாளர்கள் பாரதிராஜாவின் காரை அடித்து நொறுக்கினர். ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இறுதியில் தொழிலாளர்கள் - தயாரிப்பாளர்கள் உடன்பாடு ஏற்பட்டு பிரிந்தவர் கூடினர்.
இப்போதும் பேக் அப் என்று ஏதாவது படப்பிடிப்பின் முடிவில் இந்த வார்த்தையைக் கேட்கும் போது இந்த ஓராண்டு பிரச்சினையும் ஓடி மறையும் மனதுக்குள்.

ரவி- ஷங்கர்!

காமெடி நடிகர்களாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டு வேறொரு துறையில் புகழின் உச்சிக்குப் போனவர்கள் இருவரை எனக்கு நன்கு தெரியும். ஒருவர் இயக்குநர் ஷங்கர். இவருடைய அதிக பட்ச ஆசை எஸ்.வி. சேகர் போல நாடகம் போட வேண்டும் என்பதாக இருந்ததாக என்னிடம் கூறியிருக்கிறார். அது போல சில படங்களில் நகைச்சுவை பாத்திரங்களிலும் நடித்தார்.
இன்னொருவர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களைக் கொண்டு வந்து வண்ணத்திரையில் பிரசுரிக்கவும் கேட்டிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் ரவி என்ற பெயரில் எனக்கு அறிமுகம்.
இருவருமே தங்கள் திறமையின் இன்னொரு பக்கத்தை வாழ்வின் முக்கிய முடிவாக திசை திருப்பியவர்கள். உயரத்தின் உச்சிக்குப் போனவர்கள். இருவருக்குமே பொது அம்சமாக தந்தையின் பிரிவு இருந்தது. இளமையில் வறுமையும்.
"இளம் வயதில் பக்கத்துவீட்டு தெலுங்குக் குடும்பத்தினருடன் சேர்ந்து சீட்டு ஆடுவது வழக்கமாக இருந்தது. தினமும் ஜெயிப்பவர்கள் யாராவது பிரியாணியோ, டீ பிஸ்கட்டோ வாங்கித் தருவார்கள். பழங்கள் வாங்கித் தருவார்கள். உலகிலேயே சுகமான வாழ்க்கை அதுதான் என்று நினைத்தேன். தினமும் சீட்டு விளையாட பணம் வேண்டுமே? சொந்த வீட்டிலேயே திருட ஆரம்பித்தேன். கஞ்சா வியாபாரம் செய்ய ஆந்திராவுக்குப் போனேன்'' என்று ஷங்கர் என்னிடம் கூறியிருக்கிறார்.
"வறுமையின் உச்சத்தில் தினமும் சென்னையில் உள்ள கோவில்களில் மதியம் தரும் அன்னதானத்தில் தினமும் கலந்து கொள்வேன். கோடம்பாக்கத்தில் உள்ள கோயில்களில் நான் பலமுறை அப்படிச் சாப்பிட்டு நாள்களை ஓட்டியிருக்கிறேன். ஒருமுறை கோவில் சாப்பாடு கிடைக்காமல் போய்விட்டது. பசி தாளவில்லை. ஒரு டீக்கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை அணுகி ‘பசிக்குது எனக்கு ஒரு பன் வாங்கித் தரமுடியுமா?' என்று கேட்டேன்'' என்று ரவிவர்மன் சொன்னார். இந்த இருவரின் வாழ்க்கைச் சுருக்கத்தையும் நான் பத்திரிகையில் தொடராக எழுதியிருக்கிறேன்.
இருவருமே ஒரு கட்டத்தில் சுதாரித்தார்கள். வெற்றி என்றால் இந்திய அளவில் வெற்றியை நிலை நாட்டினார்கள். நம்மிடம் இருக்கும் திறமையை இனம் காணாமலேயே முயற்சி செய்து கொண்டிருப்பது எத்தனை விரயமானது என்பதற்கு நல்ல உதாரணமாக இருந்தது இந்த இரு தொடர்களும்.

செவ்வாய், மார்ச் 17, 2009

கிளாமிடான்

ஆழி பதிப்பகம் - அமரர் சுஜாதா அறக்கட்டளை நடத்திய போட்டியில்

ரூ.20 ஆயிரம் பரிசு பெற்ற சிறுகதை


யோசனையின் ஊடே ஜன்னலோர மரக்கிளை லேசாக ஆடுவதைக் கவனித்தார் பேராசிரியர் எழிலரசு. காற்று அடிக்காமலேயே மரக்கிளை ஆடுவது வினோதமாக இருந்தது. ஊன்றி பார்த்தபோது மரக்கிளை நகர்ந்தது மாதிரியும் தெரிந்தது. ஜன்னல் ஓரக் கிளையாக இருந்ததால் இன்னும் சற்று நெருங்கிப் பார்த்தார். நகர்ந்தது கிளையில்லை. கிளையின் மீதிருந்த ஓர் உருவம். மனிதன்.. பச்சோந்தி போல மரத்தின் நிறத்துக்கே மாறிப்போயிருந்தான். பேராசிரியருக்கு அதிர்ச்சியாக இருந்தது. "யாரப்பா அது?'' என்றார்.
கிளையில் இருந்தவன் தன்னை யாரோ கவனித்துவிட்டார்கள் என்ற அச்சத்தில் மீண்டும் மரத்தின் நடுக்கிளைக்குப் போய் மறைந்து கொண்டான்.
"களவுக்காரனோ, கலகக்காரனோ.. யாராக இருந்தாலும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டியிருக்கும்... மரியாதையாக இறங்கி வா''
முகத்தை மட்டும் வெளியே காட்டி மிரள மிரள விழித்தான் மரத்தில் இருந்தவன்.
"ஓ.. நீ அந்தக் கிராமத்தான்தானே?... தப்பி வந்தவன் அல்லவா?'' என்றபடி திரைக்காவலருக்குத் தகவல் தர எத்தனித்தார்.
திரைப் பொத்தானை அழுத்துவதற்குள் மரக்கிளையில் ஒரே தாவாகத் தாவி வந்து அவர் முன் வந்து நின்றான் அவன். கிராமத்தான் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் இப்போதுதான் நேரில் பார்த்தார் எழிலரசு. நகரத்தானைவிட பெரிதும் மாறுபட்டிருந்தான்.
"நான் தப்பி வந்தவன் அல்ல. தெரியாமல் வந்துவிட்டவன். திரும்பி கிராமத்துக்குப் போக உதவுங்கள்'' என்றான். அவனுடைய உச்சரிப்பும்கூட வேடிக்கையாக இருந்தது.
நகரத்து ஆடையோ, நகரத்தின் நிறமோகூட இல்லாமல் இருந்தான். சொல்லப்போனால் சேற்றின் நிறத்தில் ஒரு கால் சட்டையும் மேல் சட்டையும் இருந்தது. தைக்கப்பட்டபோது அது வேறு ஏதோ நிறத்தில் இருந்திருக்க வேண்டும். சேற்றின் நிறம் அதற்கு அவர்களின் வேலை தந்த பரிசு. ஒரு வரலாற்றுப் பேராசிரியருக்கான அக்கறை விழித்துக் கொண்டது அவருக்கு. பார்த்ததுமே அவன் மீது பரிதாபம் பொங்கியது.
"மூன்று நாள்கள் ஆயிற்றே.. சாப்பிட்டாயா?'' என்றார் பரிவோடு.
"இல்லை. எனக்கு பசிப்பதில்லை...'' மேற்கொண்டு ஏதோ சொல்ல தயாரானவன் மாதிரி இருந்தாலும் எதுவும் சொல்லவில்லை.
எதற்கும் இருக்கட்டும் என்று குடுவை நீரை அவன் பக்கம் திருப்பினார். அவன் அதைக் குடித்தான் எனக் கூறுவதைவிட வாய்வழியாக உடலின் மேல் ஊற்றிக் கொண்டான் என்பதுதான் சரியாக இருக்கும். படுக்கையில் தூங்குமாறு சொன்னபோதும் தரையில்தான் படுக்கும் பழக்கம் என்றான். விவசாயியாக இருப்பதால் உள்ள தரம்குறைந்த வாழ்க்கையையும் அவன் புரிந்து கொண்டவனாகத் தெரியவில்லை. என்னை கிராமத்துக்கு அனுப்பி வைத்துவிடுங்கள் என்றான் லூப் வாக்கியம் போல. அதைத் தவிர வேறு நோக்கம் அவனுக்கு இல்லை. நகரத்துக்கும் கிராமத்துக்கும் இருக்கிற வித்தியாசம் "பரங்கி' திரைப்படத்துக்கும் "பரட்டை' திரைப்படத்துக்குமான வித்தியாசம் போல இருப்பதாகச் சொன்னான். நகரத்தில் அந்த இரண்டு படமும் திரையிடப்படவில்லை. பிரமிக்க வைக்கும் வித்தியாசங்களோடு கூடிய இரண்டு கிராம திரைப்படங்களை அவன் ஒப்பிட்டுச் சொல்வதாகத் தோன்றியது.
"என்ன நடக்கிறது அங்கே?... விவரிக்க முடியுமா?'' என்றார் எழிலரசு.
"எங்கே?'' கேள்வியின் ஆதாரமே புரியாமல் கேட்டான்.
"இல்லையப்பா இங்கே நாங்கள் வசதியாக வாழ்கிறோம். ஆரோக்கிய உணவு உண்கிறோம். சுகமாக இருக்கிறோம். நீங்கள் இது எதுவும் இல்லாமல் வாழ்வதாகத் தோன்றுகிறது. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? உங்களை எப்படி நடத்துகிறார்கள்?'' என்று விளக்கிச் சொன்னார்.
"நீங்கள் சொன்ன வாக்கியத்தில் எனக்கு சில சொற்கள் புரியவில்லை... வசதி, ஆரோக்கிய, சுகமாக.. இதெல்லாம் என்ன?''
அங்கு எப்படி நடத்துகிறார்கள் என்பது குறித்து அவனை எதையும் விவரிக்க வேண்டியதில்லை என்ற முடிவோடு வேறு விஷயங்களை எளிமையாகவும் ஒவ்வொன்றாகவும் கேட்க ஆரம்பித்தார். "நீ தினமும் என்ன வேலை செய்கிறாய்?''
"நெல் சாகுபடி பிரிவில்...'' சற்றே வெறுமையாகப் பார்த்துவிட்டு "நெல் சாகுபடி.. நெல் சாகுபடி'' என இருதரம் தனக்காகச் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.
"நெல் சாகுபடி சரி.... தினமும் வயலுக்குப் போய் என்ன செய்வாய்?''
ஆழ்ந்த யோசனையில் மூழ்கிப் போனான். நெல் சாகுபடி என்பதைத் தவிர வேறு விளக்கங்களை அவனிடம் யாரும் விசாரித்திருக்க மாட்டார்கள் போலும். பிறகு "பயிர் செய்கிறோம்'' என்றான். திடீர் நினைவு ஏற்பட்டவனாக "நாங்கள் வயலுக்குப் போக மாட்டோம். வயலில்தான் நாங்கள் வசிக்கிறோம்''
"சரி. இங்கு எப்படி வந்தாய்?''
"ம்.. வந்து.. விளைபொருள் வண்டியில் மூட்டைகளை அடுக்கிவிட்டு.. வண்டியிலேயே தூங்கிவிட்டேன்... வண்டியை ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். நான் இறங்கிப் பார்த்தேன். கிராமம் காணாமல் போயிருந்தது. இது நகரம் என்று புரிந்தது. நான் தெரியாமல் வந்துவிட்டேன். தப்பி வந்தவன் அல்ல.'' வெளிச்சத்தில் அவனை உற்று நோக்கினார். அவனின் உடலின் நிறமும்கூட தண்ணீரில் ஊறி பிசுபிசுப்புப் படர்ந்து இருந்தது.
"நெல் மூட்டையை வண்டியில் ஏற்றுவதும் உங்கள் வேலைதானா?''
"ஆமாம். உழவு செய்வது.. நாற்று நடுவது.. களையெடுப்பது.. கதிர் அறுப்பது எல்லாமே நெல் சாகுபடியாளரின் வேலைகள்தான்.''
"காய்கறிகள்...?''
"நான் தப்பி வந்தவன் இல்லை. என்னை கிராமத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்..''
"அதற்காகத்தான் கேட்கிறேன்''
"காய்கறிகள் தோட்டப் பயிர் பிரிவில். தென்னை சாகுபடி, வாழை சாகுபடி, நீர் பாசனப் பிரிவு எல்லாம் தனித்தனியாக இருக்கிறது'' .. என்னிடம் இருக்கும் அத்தனைத் தகவலையும் சொல்லிவிட்டேன், இதற்கு மேல் கேட்காதீர்கள் என்பதாக இருந்தது அவன் பேச்சு.
உ.நா. சபையின் மனித மேம்பாட்டு அமைப்பு போன்றவை கிராமங்களில் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தது. நகர உ.நா.சபையில் இதை முறையிட்டால் என்ன என்று ஆவேசம் கொண்டார். அவனைப் படுத்துக் கொள்ளச் சொன்னார். மிக சோர்வாக இருந்தபோதும்கூட அவன் நின்று கொண்டுதான் இருந்தான். அமரவும் மறுத்தான். படுப்பது, உட்காருவது போன்றவை அவனுக்கு ஆடம்பரமான விஷயமாகவும் உயர் அதிகாரிகள் சம்பந்தபட்டதாகவும் இருந்தது. கிராமத்தில் எல்லோருமே இப்படித்தானா இல்லை அதிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.

உயிரி தொழில்நுட்பப் பேராசிரியர் அமர்நாத் அவனை எல்லா பக்கமும் சோதித்தார். அடையாள மச்சத்தைத் தேடுவது மாதிரி அங்குலம் விடாமல் தேடினார். அந்த இடத்தைப் பரிசோதிக்கும்போதும் அவன் தேவைப்படும் அளவுக்குக் கூச்சம் காட்டவில்லை. அறுத்துவிடுவார்களோ என்ற தயக்கம் கலந்த பயம்தான் அதில் இருந்தது.
தொலைவிசாரணைத் திரையில் என்னவோ நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். "எது எது நேரடி ஒளிபரப்போ எவையெல்லாம் ஒத்திகை பார்த்து உருவாக்கப்பட்டவையோ?' மக்களை இளித்தவாயர்களாக நினைக்கிறார்கள்'' என எழிலரசுவின் சலிப்பு தொடர்ந்தது.

"எல்லாவற்றையும் மீறி நேற்று ஒரு கிராமத்தான் நகரத்துக்கு வந்துவிட்டான். நீங்கள் எல்லாம் என்ன செய்கிறீர்கள்?'' குடியரசுத் தலைவர் மிகுந்த ஆவேசத்தோடு கேட்டார்.
"கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் வழிகள் இரண்டுதான். அவை வாரத்துக்கு ஒரு முறைதான் திறக்கப்படும். அப்போது கண்காணிப்பு வாயிலில் தீவிரமான பரிசோதனை உண்டு. விளைபொருள்களைத் தவிர மனிதர்கள் யாரேனும் அந்த வழியாக வெளியேறினால் அவர்கள் கருகி இறந்து போய்விடுவார்கள். சக்தி வாய்ந்த மின்காணிகள் பொருத்தப்பட்டுள்ளன. யாரும் தப்பித்திருக்க வாய்ப்பே இல்லை''
"அப்படியானால் கிராமத்தில் ஒருவன் மூன்று நாள்களாக அடையாள அட்டை பதிக்காமல் இருக்கிறான். அவன் எங்கே போய் தொலைந்தான் என்று கிராமவாசிகளுக்கும் தெரியவில்லை. அவனுடைய பிரேதமும்கூட கிடைக்கவில்லை.''
"கிராம காவலர்கள்...?''
"அவர்களிடமும் விசாரித்துவிட்டேன். சல்லடைபோட்டுத் தேடிவிட்டார்கள். காணாமல் போனவன் "கிராமத்தான் நெ.சா. லட்சத்து பதிமூன்று' துரிதமாகத் தேடுங்கள்''
"நாளைக்குள் நெல் சாகுபடிக்கு அவனை அனுப்பி வைக்கிறேன்.''

அந்த ஒளிபரப்பைப் பார்த்துவிட்டு கிராமத்தான் அதிர்ச்சியோடு தன் பழைய பல்லவியை ஆரம்பித்தான். "தப்பி வந்தவன் அல்ல, தெரியாமல் வந்தவன்''
கிராமவாசிகள் கிராமங்களிலேயேதான் இருக்க வேண்டும் என்றும் நகரவாசிகள் நகரத்திலேயே இருக்க வேண்டும் என்றும் சட்டம் கொண்டுவரப்பட்டபோதுகூட அதற்கு அமோக வரவேற்பு இருந்தது.
பிறகு நடந்தது அப்படி லகுவாக இல்லை. கிராமத்து மக்கள் நிலத்திலும் நீரிலும் வெயிலிலும் கிடந்து உழலுவதும் நகரத்தில் நிழலிலும் நல்ல ஆரோக்கியமான சூழலில் வாழ்வதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
"நகரத்தில் வேறு உணவும் கிராமத்தில் வேறு உணவும் இருப்பதாகச் சில சதிகாரர்கள் சொல்லுவதை நம்பாதீர்கள்'' என்று குடியரசுத் தலைவர் ஆண்டுதோறும் விழிப்புணர்வு நாள் கூட்டத்தில் முழங்குவார். அதனாலேயே சிலருக்கு அதில் சந்தேகம் வலுத்தது. ஆனால் யாரும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. எல்லோருக்கும் சந்தேகமும் எந்தச் சந்தேகமும் இல்லையே என்ற பாவனையும் பழகிப் போயிருந்தது.
அமர்நாத், கிராமத்தான் முதுகில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டி, "இங்கே பார்த்தீர்களா?'' என்றார். அவர் சுட்டிய இடத்தில் அவன் உடலில் திட்டுத் திட்டாய் தோலின் நிறத்தில் மாற்றமிருந்தது. கொஞ்சம் சமூக அக்கறையும் அரசு அதிருப்தியும் கொண்ட சொற்ப நபர்களில் அவரும் ஒருவர் என்பதால் அவரிடம் விசயத்தை விளக்க அழைத்திருந்தார் எழிலரசு.
"சூரிய ஒளியில் நின்றால் எப்படி இருக்கிறது உனக்கு?'' என்றார் அவனிடம் உறுதிப்படுத்திக் கொள்ளும்விதமாக.
"நாள் முழுக்க எனக்குச் சூரிய ஒளி தேவைப்படுகிறது. வேறு உணவுகூட இரண்டாம்பட்சம்தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு இப்படி இருக்கிறது. இதற்காக எங்களுக்குத் தினமும் ஊசி போடுவார்கள்.. நாங்கள் இனிமேல் சூரிய ஒளிமூலமாகவே வாழ முடியும் என்கிறார்கள். எங்களுக்குத் தனியாக ஆகாரம்கூட தேவையில்லை என்று கூறுகிறார்கள்.'' வகுப்பில் எழுப்பிக் கேள்வி கேட்கப்பட்ட மாணவன் போல சொன்னான்.
"இதனால் உனக்குக் கடினமாக இல்லையா?'' என்றார்.
அவனுக்கு அதில் சொல்வதற்குக் கருத்து எதுவும் இன்றி வார்த்தையைக் கிரகிக்க முடியாமல் பார்த்தான். தரையில் சரிந்து படுத்துக் கொண்டான். மிகவும் களைத்திருந்தான்.
எழிலரசு பக்கம் திரும்பி, "கிளாமிடாமோனாஸ் பற்றிப் படித்திருப்பீர்கள். நகரும் தன்மையும் சூரிய ஒளியால் ஸ்டார்ச் தயாரிக்கவும் முடியக் கூடிய ஒரு செல் உயிரினம் அது. அது தாவரமா, விலங்கினமா என்பதை அறுதியிட்டு வரையறுக்க முடியாததைப் போல ஆறறிவு மனிதனையும் மாற்றியிருக்கிறார்கள்.''
"அடக் கொடுமையே... மனிதர்களைப் பச்சையம் மூலம் ஸ்டார்ச் தயாரிக்கும்படி செய்திருக்கிறார்கள். குளோரோ ப்ளாஸ்ட் தன்மையை விலங்குகளுக்கு ஏற்படுத்தும் விபரீத முயற்சி. கிராமத்து மனிதர்களுக்கு சாப்பாடுகூட இல்லாமல் சூரிய சக்தி மூலமாகவே இயங்கும் ஆர்கனிக் இயந்திரமாக்கும் அநியாயம்.''
"ஐய்யய்யோ அது எப்படி சாத்தியம்?''
"சாத்தியம்தான். கடந்த நாற்பது ஆண்டுகளாக எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ள ஆராய்ச்சியே அதுதான். விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் ஒரே மாதிதரிதான் செல் அமைப்பு. இரண்டுக்குமே நியுக்கிளியஸ், ûஸட்டோப்ளாஸம், டி.என்.ஏ., ஆர்.ஏ. மைட்டோ காண்ட்ரியா, கோல்கி எல்லாம் இருக்கிறது. பொது தோற்றத்தில் விலங்கு சமாசாரம் கொஞ்சம் வட்டமாக இருக்கும். தாவர செல் செவ்வகமாக இருக்கும். தோற்றத்தைப் பொருத்து இரண்டுக்கும் ஒரு சதவீத வித்தியாசம்தான். தாவர செல்லின் முக்கிய வித்தியாசம் அதில் உள்ள குளோரோ ப்ளாஸம். அந்த வித்தியாசத்தை உடைப்பதற்குத்தான் இவ்வளவு ஆராய்ச்சிகள்.''
"அநியாயம்''
"அதைத்தான் நானும் சொல்கிறேன்''
"இதனால் என்ன நடக்கும்?''
"ஒன்று சொல்லட்டுமா? ஐநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் ஒரு "ஒரு செல்" விலங்கும் ஒரு "ஒரு செல்' தாவரமும் தோன்றின. முதலில் தோன்றிய அந்த "ஒரு செல்' தாவரத்தை அப்போது தோன்றிய "ஒரு செல்' விலங்கு ஸ்வாகா செய்தது.. ஹேஸ்யம்தான். ஆனால் அதில் தர்க்கரீதியான வாய்ப்பு இருக்கிறது. எப்போதும் தாவரங்கள் விலங்குகளின் நலனுக்கானவை''
"இதனால் அரசுக்கு என்ன நன்மை?''
"புரியவில்லை? கார்களைச் சூரிய சக்தியில் இயக்குங்கள் என்றால் இவர்கள் மனிதர்களையே சூரிய சக்தியால் இயக்கி லாபமடைய பார்க்கிறார்கள்''
"அது புரிகிறது.. அதற்காகப் பொன் முட்டை வாத்துக்களை இப்படி அறுத்துவிட்டால்.. இன விருத்தியைத் தொடர்வது எப்படி?''
"பதியன் போடுவார்களோ என்னவோ... எந்த அளவுக்குப் போயிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கொஞ்ச நாள்களாகவே தாவர செல், விலங்கு செல் வித்தியாசத்தைப் பகுத்தாயும் ஆராய்ச்சிக்குத்தான் என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.என்.ஏ.வில்தான் அவர்களின் முழு கவனமும். எனக்கு எங்கோ உறைத்தது. ஆனால் இத்தனை மோசமாகப் போவார்கள் என்று யோசிக்கவில்லை. உ.நா. சபையும் இதற்கு உடந்தையாக இருக்குமா?''
"ஆமாம். பொல்லாத உலக நாடு சபை... '' என்றார் எழிலரசு. எப்போதும் போல அரசு முயற்சிகளின் மீது தன் வெறுப்பை வெளிக்காட்டினார்.
"காலப் போக்கில் தாவரத்தன்மை அதிகமாகிவிட்ட காரணத்தால்தான் சாகுபடி விளைபொருள்களோடு கலப்படமாகி மின்காணிக்குத் தப்பி நகரத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறான்''அமர்நாத் அவருக்கே தெளிவுபடுத்திக் கொள்வது போல பேசினார்.
"அப்படியானால் இவன் மூளை, நரம்பு மண்டலம், இருதயம்.. ரத்தமெல்லாம்...?''
"இயற்கை இப்படித்தான் தன்னை தகவமைத்துக் கொள்கிறது. மியூட்டேஷன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். தவளை நீரிலும் நிலத்திலும் வசிப்பதில்லையா? ஆம்பிபியன் போல. ஆல்டர்நேட் எனர்ஜி போல. இரண்டிலும் இயங்கக் கூடியவனாக மாற்றியிருக்கிறார்கள்.''
இவர்கள் அரசு கவனிப்பில் இல்லாதோர் பட்டியலில் இருந்ததால் அவர்களால் இவ்வளவு பேச முடிந்தது. இல்லையென்றால் இன்னேரம் நகரக் காவல் அதிகாரி வந்திருப்பார்.
நெ.சா. மனிதன் கண் இமைப்பது அசாதாரணமாக இருந்தது. வந்ததிலிருந்து இமைக்கவேயில்லையோ என்று நினைத்தார். இவனை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தவர், பிறகு இவர்களை என்று திருத்திக் கொண்டார். கிராமத்துக்குப் போகும் மரபு மருந்துகளில் "குளோரோ ப்ளாஸின்' அளவைக் குறைப்பதன் மூலம் இந்தக் கொடுமைக்கு விடிவு காணமுடியும் என்று தோன்றியது. மனித உடம்பில் ஒளிச்சேர்க்கை விகிதம் அதிகரிக்க, அதிகரிக்க இது சிரமம் என்றும் புரிந்தது. உலக கிராமம் முழுவதிலும் இப்படித்தானா? இங்குமட்டுமா? அல்லது தமிழ்க்குடியரசில் மட்டுமா?
நிலைகுலைந்து கிடந்த கிராமத்து நெ.சா. மனிதனை கவலையோடு பார்த்துவிட்டுப் புறப்பட்டார் அமர்நாத். "இப்போது என்ன பெயரில் இருக்கிறீர்கள்?'' என்றார் கதவுப்பிடியை அழுத்தியபடி.
"ஏன் கேட்கிறீர்கள்? ...எழிலரசு. பெயர் என்பது பதினாறு இலக்க எண் என்று ஆகிப் போனபின்பு இது நம் மனத்திருப்திக்காகத்தானே? பாஸ்வேர்ட் மாற்றும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பெயரையும் மாற்றிக் கொள்வேன். ஆனால் எங்கள் வீட்டில் யாருக்கும் பெயர் விருப்பம் இல்லை..''
"எனக்கும்கூடத்தான்... சொல்லப் போனால் நீங்கள் ஒருவர்தான் என்னை அமர்நாத் என்று ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்... சரி வருகிறேன்''

காலை தேநீரோடு அவனை எழுப்ப முனைந்தார் எழிலரசு. அவன் இரவு கிடந்த வாக்கிலேயே படுத்துக் கொண்டிருந்தான் இன்னமும். அவனுக்கும் ஒரு பெயர் சூட்டலாம் என்ற ஆவல் எழுந்தது எழிலரசுவுக்கு. மெல்லத் தொட்டு உலுக்கிப் பார்த்தார். அவன் சில்லென்று நிலைக்குத்திப் போய் இருந்தான். நாடித்துடிப்பு சுத்தமாக இல்லை. தோல் மரத்துப் போய்... சரியாகச் சொல்வதானால் மரப்பட்டையாய்ப் போயிருந்தது.
அசைவற்றுக் கிடந்தான். இறந்துவிட்டான்... அப்படி அவர் முடிவு செய்த தருணத்தில் அவன் கண் பாவைகள் சற்றே அசைந்ததைக் கவனித்தார். திடுக்கிட்டுப் போனார். பிணம் பார்க்கிறது என்ற அச்சம் எழுந்து அடங்கியது.
"உயிர்.... இருக்கிறது' நிதானமாக முணகினார்.
நேரம் கடத்தாமல் அவனை வேகமாக உலுக்கினார். அவனுடைய கரங்கள் மரத்தின் கிளைபோல ஆடியது. வேகமாக அவனைப் பற்றி இழுத்தபோது தரையில் பதிந்திருந்த அவன் முதுகுக்குக் கீழ் சல்லி வேர்கள் தென்பட்டன

சனி, மார்ச் 14, 2009

திரைக்குப் பின்னே- 24

ஆட்டோராணியின் கதை!

சினிமாவுக்குக் கதை பண்ணுவது தனிக்கலை. அதாவது தமிழ்ச் சூழலில் (தெலுங்குச் சூழலிலும்) அப்படித்தான் நம்பப்பட்டு வருகிறது. நண்பர் புகழேந்திதங்கராஜின் மூலம் மீண்டும் இயக்குநர் வி.சி.குகநாதனுக்கு ஒரு திரைக்கதை செய்வதற்குக் குழுமினோம். எங்களுடன் எழுத்தாளர் பிரபஞ்சனும் இணைந்தார்.

வி.சி.குகநாதன் ஒரு கதையைச் சொன்னார். உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பெண் கதாபாத்திரம். குடும்பமே அவளை நம்பித்தான் இருக்கிறது. அவளை எதிர்க்கும் வில்லன் கூட்டம். அந்தப் பெண்ணின் சகோதரனே வில்லன்களின் வலையில் விழுந்து தன் அக்காவுக்கு எதிராக நிற்கிறான். ஆனால் அந்தப் பெண்ணின் காதலனும் அந்தக் காதலனை ‘ஒருதலை'யாகக் காதலிக்கும் ஆட்டோ ராணி என்ற பெண்ணும் நம் கதாநாயகிக்கு உதவுகிறார்கள். வில்லன்களை வீழ்த்திவிட்டு ஒரு தலைக்காதலோடும் தியாக உணர்வோடும் அந்த ஆட்டோ ராணி பெருந்தன்மையாக விலகிச் செல்கிறாள்.
என் ஞாபகம் சரியாக இருந்தால், இந்த மாதிரி ஒரு கதை. அவர் சொல்லி முடித்ததும் நானும் பிரபஞ்சனும் தற்செயலாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். கதைதான் ரெடியாகிவிட்டதே அப்புறம் எதற்குக் கதை செய்ய வந்திருக்கிறோம் என்ற கேள்வி.
இதைப் புரிந்து கொண்டவர் போல எங்களிடம் அவர் எதிர்பார்ப்பது என்ன என்பதை விளக்கினார்.

கதாநாயகன், நாயகி, ஆட்டோ ராணி போன்றவர்களின் அறிமுகக் காட்சிகளுக்கான சம்பவங்களைக் கேட்டார்.
சொன்னோம்.
முதலில் நாயகி.. "நாயகி கோயிலில் இருந்து வெளியே வருகிறாள். பிச்சைக்காரர்களுக்குக் காசு போடுகிறாள். ஒரு பிச்சைக்காரன் நன்றாக இருக்கும் காலை சட்டென்று ஊனம் போல மடக்கி வைத்துக் கொண்டு நாடகமாடுகிறான். அநீதியைத் தட்டிக் கேட்கும் நம் நாயகி அவன் கன்னத்தில் ஓங்கி அறைவிடுகிறாள்.'

இப்படித்தான் கதையை உருவாக்கினோம். வி.சி.குகநாதன் 150 திரைக்கதைகளுக்கு மேல் உருவாக்கியவர். தெலுங்குப் பட உலகில் அவருக்கு அப்படியொரு மவுசு உண்டு.

'நாயகியின் தம்பி பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுகிறான் என்று சொன்னால் போதாது. அதற்கு ஏதாவது காட்சி வேண்டும்' என்றார்.

"பத்தாம் வகுப்பு பெயில் ஆகிவிட்டு மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்துவரும் தம்பி. சம்பாதிக்கும் காசை வீட்டுக்குத் தருவதில்லை. அவன் செலவுக்கே போதவில்லை. வீட்டிலிருந்தும் திருடுகிறான். அக்கா இரண்டு மூன்று முறை கண்டிக்கிறாள்.''

நான் சொல்லிக் கொண்டிருக்கும்போது குகநாதனின் முகம் பிரகாசிக்கவில்லை. "கதை சொல்லாதீர்கள்.. காட்சி சொல்லுங்கள்'' என்றார்.

சட்டென்று ஒரு காட்சியைச் சொன்னேன். இரவு எல்லோரும் தூங்கிய பிறகு தம்பி வீட்டுக்கு வருகிறான். அக்கா எழுந்து வந்து சாப்பாடு போட வருகிறாள். தம்பி மீது வினோத வாசனை. முகம் சுளித்துக் கொண்டு தட்டை எடுத்துவைத்து சோறு போடுகிறாள். திடீரென்று பவர் கட் ஆகிறது. அக்கா விளக்கேற்றுவதற்குத் தீப்பெட்டி தேடுகிறாள். தம்பி, தம் பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டியை எடுத்து சர்ரென்று கிழிக்கிறான்.

"வெரிகுட்'' என்றார்.

கதையைப் படித்துப் பார்த்துவிட்டு முடித்துவிட்டு "ஆட்டோராணி கேரக்டர் எதற்கு என்பதுதான் புரியவில்லை'' என்றோம்.

"படத்துக்கே ஆட்டோராணி என்று வைக்கலாமா என்று பார்க்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் அந்தக் கேரக்டரே எதற்கு என்கிறீர்களே..? படத்தில் அவளுக்கு மூன்று ஃபைட் இருக்கிறது. இரண்டு கவர்ச்சி நடனம் இருக்கிறது. கடைசியில் நாயகனையும் நாயகியையும் சேர்த்துவைத்துவிட்டுப் பிரிந்து செல்கிற காட்சி டச்சிங்காக இருக்கும்'' என்றார்.
புரியத்தான் இல்லை.

லைலா- விக்ரமன் டிஸ்யூம்!

சினிமா நடிகை என்றால் அதற்கு ஏற்றார் போல பெயர் இருக்க வேண்டும் என்பது சினிமா உலகச் சட்டம். மும்பையில் இருந்து வந்து சேரும் ஒரு பெண்ணுக்கு முதல் கட்டமாக பெயர் வைக்கும் சடங்கு நடக்கும். ‘கள்ளழகர்' படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக அறிமுகமான லைலாவுக்கு இயற்பெயரே அதுதான் என்றார்கள்.. படித்த குடும்பம். அவருடைய அண்ணன் ஒரு பல் மருத்துவர். லைலா பாலே நடனம் கற்றவர். செல்லமாகப் பேசும் இயல்பு அவருக்கு. குழந்தைத்தனம் முகத்தில் அப்படியே இருக்கும். பெரிய வதந்தி எதிலும் சிக்காமல் தப்பிக்க அது அவருக்குக் கை கொடுத்தது.
இதே போல இயக்குநர் விக்ரமன் எந்த விவகாரத்திலும் சிக்காமல் வந்தவர். செலவில்லாமல் படம் எடுப்பவர். அவருடைய படங்களில் வரும் கேரக்டர் போலவே எதையும் பொறுத்துக் கொண்டு செயலாற்றுபவர். விக்ரமன் இயக்கிய ‘உன்னை நினைத்து' படத்தில் நடித்தார் லைலா. அந்தப் படப்பிடிப்பின் போது லைலாவுக்கும் விக்ரமனுக்கும் பிரச்சினை என்றார்கள். ஒரு பாடல் காட்சி படமாகும் வரை படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே வரவில்லையாம் விக்ரமன்.
இவர்களுக்குள் எப்படி பிரச்சினை ஏற்பட முடியும் என்று ஆச்சரியமாக இருந்தது.

அப்படியென்ன கோபம் என்று லைலாவைச் சந்தித்துக் கேட்டேன்.
"அந்தப் பாடல் காட்சிக்கு அவர் சொன்ன காஸ்ட்யூமை நான் போட்டுக் கொள்ளவில்லை என்று அவருக்குக் கோபம்'' என்றார்.
"ஏன் அவர் கொடுத்த காஸ்ட்யூம் ரொம்ப செக்ஸியான தோற்றம் தருவதாக இருந்ததா?''
"இல்லை.. நான் போட்டுக் கொண்டு நடித்த காஸ்ட்யூம் மிகவும் செக்ஸியாக இருந்ததாக அவருக்கு வருத்தம்.''

விவகாரம் புதிதாக இருந்தது. வழக்கமாக நடிகைகள் கவர்ச்சியாக நடிக்க மறுத்து படப்பிடிப்புத் தளங்களில் பிரச்சினை ஏற்படும். லைலா கவர்ச்சியான ஆடையைப் பயன்படுத்தினார் என்பதற்காக விக்ரமன் கோபித்துக் கொண்டு பாடல்காட்சி முடிகிற வரை படப்பிடிப்புத் தளத்துக்கே வராமல் தவிர்த்தது தமிழ்சினிமாவில் முதலும் கடைசியுமான சச்சரவாகத்தான் இருக்கும்.

லைலாவை நான் எடுத்த இந்தப் பேட்டிக்கு, சம்பந்தப்பட்ட அந்த காஸ்ட்யூமில் லைலா தோன்றிய புகைப்படத்தையே தேடிப்பிடித்துப் பிரசுரித்தேன். புகைப்படத்தைப் பார்த்தபோது பெரிய ஏமாற்றமாக இருந்தது. முதுகுப்பக்கம் சற்றே இறக்கித் தைக்கப்பட்ட ஒரு சுடிதார் அது. அதில் என்ன கவர்ச்சி இருந்ததாக விக்ரமன் நினைத்தாரோ? அதைத்தான் அணிவேன் என்று லைலா ஏன் அடம் பிடித்தாரோ?

என்ன செய்வது இரண்டு நல்ல மனசுக்காரர்கள் இணைந்தால் இப்படியான பிரச்சினைதான் வருமோ?


சேரனின் போர் கொடி

சேரன் இயக்குவதாக இருந்த ‘பாரசீக ரோஜா' படத்தின் கதை என்ன என்று பத்திரிகையாளர் பிஸ்மி ஒருமுறை வண்ணத்திரையில் எழுதியதற்காக சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் குழுவினரோடு அலுவலகத்தில் வந்து ஆக்ரோஷப்பட்டார் சேரன்.

உணர்ச்சிவசப்படுதலின் உச்சக்கட்டம் என்றால் நான் அறிந்த வரையில் அது இயக்குநர் சேரன். ‘பொற்காலம்' படப்பிடிப்பு நேரத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது "என்ன ஸார் மீனாவுக்கும் உங்களுக்கும் காதலாமே?" என்று கேட்டதற்கு சட்டென வெடித்து, அழுது பிரஸ் மீட் கேன்சல்.

இன்னொரு முறை நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதம் குறித்து தலா ஒரு சினிமா பிரபலத்திடம் கருத்து கேட்கச் சொல்லியிருந்தார்கள். அஜீத், சுவலட்சுமி, சேரன் என் ஐந்து பேரை அணுகி ஆளுக்கொரு பூதம் பற்றி கேட்டேன். குமுதத்தில் ஆளுக்கொரு பக்கம் சொல்வதாகத் திட்டம். சேரன் நிலம் பற்றிச் சொல்லியிருந்தார். பத்திரிகை வெளியானபோது போன் செய்து ஐந்து நிமிடம் உணர்ச்சி பொங்கப் பேசினார்.
"நிலம் என்பது இப்படி ஒரு பக்கத்தில் முடிகிற விஷயமா?'' என்றார். இது கான்ஸப்ட். தனியாக உங்களுடைய பேட்டி என்றால் மூன்று நான்கு பக்கம் வரும், இது அப்படியானது அல்ல என்று போராடினேன்.

அடுத்து ஒருமுறை நானும் தினமணி இதழாசிரியர் இளையபெருமாளும் சந்திக்கச் சென்றிருந்தோம். என்னைப் பற்றி தினமணியில் ஒரு தலையங்கமாவது எழுதினீர்களா? என்றார். அதிர்ந்து போய் தனி நபர் பற்றியெல்லாம் எழுத மாட்டார்கள் என்றார் இளையபெருமாள். அப்படியென்றால் ‘தேசிய கீதம்' படத்தைப் பற்றியாவது தலையங்கம் எழுதலாமே? என்றார். சேரனின் ஆதங்கமும் அதற்கு இதழாசிரியரின் பதிலும் ஈர்ப்பான விஷயமாக இருந்தது. சினிமாவைப் பற்றியும் தலையங்கம் எழுதுகிற பழக்கமில்லை என்றார் பெருமாள். உரத்தகுரலில் இருவரும் ஆவேசமாக விவாதித்தனர். ஏன் நல்ல விஷயங்களை எழுதினால் என்ன, சினிமா என்றால் எழுதக்கூடாதா? என்றெல்லாம் அவர் கேட்க இவர் பதிலளிக்க... திரும்பி வந்தோம்.

ஏறத்தாழ சேரன் சம்பந்தமாக எப்போதும் எது எழுதினாலும் ஒரு விவாதம் இருக்கும். பத்திரிகை, சமூகம், அரசியல் என்று சகலத்தின் மீதும் அவருக்கு எப்போதும் எரிச்சல் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். அவர் சார்ந்திருக்கிற சினிமாமீதும் அவருக்கு எரிச்சல் இருந்தது. அவர் சொல்வதுதான் நியாயமா? நமக்குத்தான் அவரைப் பற்றி எப்படி எழுதவேண்டும் என்பது தெரியவில்லையா என்றுகூட சில நேரத்தில் எண்ணியதுண்டு.

ஞாயிறு, மார்ச் 08, 2009

திரைக்குப் பின்னே- 23





ஒரு விமர்சனம்!

எனக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் ஏற்பட்ட முதல் பேச்சு வார்த்தை ஒரு சண்டையில் முடிந்தது. அப்போது அவர் மணிரத்னத்தின் உதவியாளராக இருந்தார். ‘உயிரே' வெளியான போது நான் எழுதிய விமர்சனம் அவருக்குக் கடும் கோபத்தை உண்டுபண்ணியது. காலையில் வீட்டுக்குப் போன் செய்து "பேனா கையில இருந்தா என்ன வேணா எழுதிடுவீங்களா?'' என்றார்.

படத்தில் இரண்டு விஷயங்களைக் கண்டித்திருந்தேன். ஷாரூக்கான் மீடியா மனிதராக வருகிறார். திரிபுராவில் ரேடியோவில் செய்தியாளராக வேலைக்கு வரும் அவர், அங்கு ஏன் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடக்கிறது, எதற்காக தீவிரவாதிகளும் ராணுவத்தினரும் மோதிக் கொள்கிறார்கள் என்று ஆச்சரியமாகக் கேட்பார். திரிபுராவில் துப்பாக்கிச் சூடு என்பது ஒரு தினசரிச் செய்தி. அது எதற்காக என்பதும் சாதாரண அளவிலாவது ஒரு செய்தியாளருக்குத் தெரிந்திருக்கும். அதிலும் அந்த மாநிலத்துக்கே செய்தியாளராகச் செல்கிறவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். நாயகனோ ‘சய்யா.. சய்யா' என்று பாட்டு பாடிக் கொண்டு தன் பொறுப்பையும் சூழலையும் புரிந்து கொள்ளாதவராக இருக்கிறார். படத்தின் மிகப் பெரிய தவறு இது என்று எழுதியிருந்தேன்.

இரண்டாவது, படத்தில் இடம் பெறும் ஒரு பாடல். காதலின் சிறப்பைச் சொல்லும் பாடல் வரியில் காதலில் மரணம்தான் உயர்ந்த நிலை என்று சொல்லப்பட்டிருக்கும். காதல் தோல்வி மரணங்கள் நிறைந்த ஒரு நாட்டில், இது ஆபத்துக்கு வழி வகுக்கும் என்று எழுதியிருந்தேன். அவருடைய கேள்விக்கு, பதிலுக்கு நான் ஏதோ சொல்ல, அவர் பதிலடி கொடுக்க.. நான்.. பதி... அவர் படாரென்ற சத்தத்தோடு போனை வைத்துவிட்டார்.

அதன் பிறகு ஒரு நாள் குமுதம் வார இதழின் இயக்குநர் வரதராஜன் என்னைச் சந்திக்க விரும்புவதாக போன். பத்திரிகையாளர் மணா பேசினார். வரதராஜன், மணா இருவரும் அண்ணாசாலை பாலிமர் ஹோட்டலில் சந்தித்துப் பேசினர். வரதராஜன் குமுதம் இதழில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்றார். நான் யோசித்துச் சொல்வதாகச் சொன்னேன். அடுத்து அவர், "நீங்கள் எங்கள் பத்திரிகைக்கு வரவில்லை என்றாலும் உங்களை நேரில் பார்த்ததே எனக்குப் பெருமைதான்'' என்றார். என்னை நேரில் பார்ப்பதில் அவருக்கு அப்படி என்ன பெருமை என்று புரியவில்லை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம் என்று அவருடைய பர்ஸனல் நம்பரைக் கொடுத்தார்.

நெகிழ்ந்து போய்விட்டேன். தமிழகத்தின் முன்னணி வார இதழின் உரிமையாளர் இப்படியொரு வார்த்தை சொன்னால் ஒரு பத்திரிகையாளனுக்கு வேறென்ன மரியாதை வேண்டும்? நான் உடனே வந்து சேருகிறேன் என்று ஒப்புதல் சொல்லிவிட்டேன்.

ஆனால் குமுதத்தில் ஆறேழு மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. வெளியே வந்த பின்னர் மீண்டும் சுசி கணேசனிடம் இருந்து போன். "என்ன தலைவா... உங்களை நான்தான் குமுதத்துக்குச் சிபாரிசு செய்தேன். இப்படி அவசரப்பட்டு வந்துவிட்டீர்களே?'' என்றார் மிகுந்த நட்போடு.

இவர் சண்டைக்காரராயிற்றே... இவர் எப்படி? அவரிடமே கேட்டேன்.

"தலைவா, அப்ப நான் மணி ஸார் அஸிஸ்டென்ட். அவருக்காக வாதாடினேன். அதே சமயத்தில் நானும் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் உங்களைப் போன்ற பத்திரிகையாளனை அடையாளம் காட்ட வேண்டியது என் கடமை'' என்றார். இந்தப் படிப்பினையை என் பாடத்தில் சேர்த்துக் கொண்டேன்.


ஷகிலா என்ற பள்ளி மாணவி!

மலையாளப்படங்களில் மம்முட்டி, மோகன்லால் படங்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த செக்ஸ் குயின் ஷகிலாவைத் தெரிந்திருக்கும். கோடம்பாக்கத்தில் யுனைட்டெட் இந்தியா காலனியில் சிறிய அடுக்குமாடி வீட்டில் பத்தாம் வகுப்பு மாணவியாக இருந்தபோது அவரைப் பற்றி முதன் முதலில் அறிந்தேன். பாப்பாங்குளம் பாரதி என்ற சினிமா நிருபர் அந்தப் பெண்ணின்ஒரு புகைப்படத்தைக் கொடுத்து ஏதோ படத்தில் புதுமுகமாக நடிக்கிறார் என்று ஒரு துணுக்குச் செய்தி தந்தார். முஸ்லிம் குடும்பப் பின்னணி. அவருடைய தந்தை சினிமா துறையில் சம்பந்தப்பட்டவர்தான். ஒல்லியான சின்னப் பெண். அவர் முதலில் நடிப்பதாகச் சொன்ன படம் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அடுத்து வேறு ஏதோ படத்தில் நடிப்பதாகச் செய்தி. படத்தில் துண்டு வேடம். கவுண்டமணிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் என்றெல்லாம் குட்டி, குட்டிச் செய்திகள் வந்தன. குட்டிப் பெண்ணாக இருந்த ஷகிலா சற்றே அகலமாகவும் உருண்டையாகவும் மாறிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அவருடைய தங்கையும் நடிக்கக் களம் இறங்கினார்.



இரண்டு பெண்களிடத்தும் ஏதோ வசீகரம் இருந்தது. ஆனால் ஏனோ எதிர்பார்த்த இடத்தைப் பிடிக்கவில்லை.

கொஞ்ச நாள்கழித்து மிகக் குறைந்த ஆடையில் ஷகிலாவின் புகைப்படங்கள் வெளியாகின. மலையாளப் பட உலகில் பிஸி என்றார்கள்.

கவர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் அதிர்ச்சி பெரிதாக இருந்தது. பத்தாம் வகுப்பு மாணவியாக அறிமுகமான பெண், கண் முன்னாலேயே இப்படி வேறொரு அவதாரம் எடுத்தது ஜீரணிக்க முடியாததாகத்தான் இருந்தது. போஸ்டர்களில் பாவாடையைக் கக்கம் வரை தூக்கிக் கட்டிக் கொண்டு எப்போதும் குளித்துக் கொண்டிருந்தார். வண்ணத்திரையின் நடுப்பக்கத்தின் பிரதான நாயகியானார். அவருடைய பள்ளித் தோற்றம் மெல்ல மனதில் இருந்து மறைந்து அவரை சதைகளால் மட்டும் ஆன பெண்ணாகப் பார்க்கப் பழகிய நாளில் அவருடைய சகோதரி என்ன ஆனார் என்று விசாரித்தேன்.

அவர் நடிக்க வந்த சில நாளிலேயே இறந்து போய்விட்டார் என்றார்கள். எப்படி என்று பதறியபோது அது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.


வைரமுத்து எழுதிய கடிதம்!




சிறுவயதில் புரசைவாக்கம் பகுதியில் குடியிருந்தவன் என்கிற ஒரு காரணமே கவிஞர் வைரமுத்துவின் மீது எனக்கு அதீத ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அவரும் தம் கல்லூரி நாள்களில் புரசை பகுதியில் தங்கியிருந்தார் என்கிற காரணம்தான். கந்தப்ப கிராமிணி தெருவைப் பற்றியும் தாணா தெருவைப் பற்றியும் அவருடைய வாழ்க்கைத் தொடரில் ‘தன் ராத்திரி நேரத்து ராஜ பாட்டை' என்று வர்ணித்தபோது, நான் எழுத வேண்டியதை அவர் எழுதிவிட்டதுபோல சிலிர்த்துப் போனேன்.

அப்போது எஸ்.அறிவுமணி, ஞானராஜ் போன்ற புரசைவாக்கத்துப் பேனாகாரர்களிடம் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தபோதும் நான் வைரமுத்துவைச் சென்று சந்திக்கத் தயங்கினேன். அவர் என்னைவிட வயதில் மூத்தவர் என்பதைவிட நான் சிறிய பையனாக இருந்தேன் என்ற தயக்கம் இருந்தது.

எண்பதுகளின் இறுதியில் பெரியார்தாசனோடு அவரைச் சந்தித்தபோதும் பேச நினைத்தது எதையும் பேசாமலேயே வந்தேன். பத்திரிகை நிருபரான பின்னும் ஏனோ தயக்கம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவருடைய வளர்ச்சி மலைக்க வைக்கும் பிரமாண்டமாக இருந்தது. பத்திரிகை நிருபராக பதினைந்து ஆண்டுக்காலம் ஆனபின்னும் நான் சந்திக்காத திரையுலகப் பிரபலம் வைரமுத்து மட்டும்தான்.

‘திரைப்பாடல் இலக்கியம் ஆகுமா?' ஒரு வாசகரின் கேள்விக்குப் பதில் அளிக்கும்விதமாக வைரமுத்துவின் திரைப் பாடல் ஒன்றை உதாரணம் காட்டி எழுதியிருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பும் இளைஞன் தன் முறைப் பெண்ணுக்கு எழுதும் கடிதம்போல அமைந்த பாடல்வரி அது.

"ஐத்தையும் மாமனும் சுகம்தானா?

ஆத்துல மீனும் சுகம்தானா?

அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சுகம்தானா?''

-என்ற வரியைக் குறிப்பிட்டு இதெல்லாம் இலக்கியச் சுவையுள்ள வரிகள்தான் என்று எழுதினேன். மறுநாள் வைரமுத்து எனக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதியிருந்தார். அப்படியொரு பூரிப்பு.


அவரைச் சந்திக்கும் தைரியம் வந்து, நான் எழுதிய சில புத்தகங்களை அவரிடம் கொடுத்தேன். பார்த்துவிட்டு, "நிறைய எழுதுங்கள். நிறைய படியுங்கள். விதையிலிருந்து ஆரம்பத்தில் இலைகள்தான் வரும். பிறகுதான் பூக்களும் பழங்களும்வர ஆரம்பிக்கும். நம் புத்தகங்கள் பேசப்படவில்லையே என்று வருந்த வேண்டாம். எழுதிக் கொண்டே இருங்கள்'' என்றார். மிகவும் நெருக்கமாக அரைமணி நேரத்துக்கும் அதிகமாகவே பேசிக் கொண்டிருந்தார்.

பதினைந்து ஆண்டு தயக்கம் தீர்ந்தது.

வியாழன், மார்ச் 05, 2009

ஒரு அழைப்பு

அன்புடன் அழைக்கிறேன்


எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்தும்
அமரர் சுஜாதா நினைவுப்புனைவு 2009
அறிவியல் புனைகதைப் போட்டி


பரிசளிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா



இடம்: ஆஷா நிவாஸ், 9, ரட்லண்ட் கேட் 5 ஆவது தெரு
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து காதர் நவாஸ்கான் சாலை முடிவுக்கு சென்று முதலில் வலதுபக்கம் திரும்புக.
நுங்கம்பாக்கம், சென்னை 6
நாள்/நேரம்: காலை 10 மணி, மார்ச் 7, 2009 சனிக்கிழமை


வரவேற்புரை திரு செ.ச. செந்தில்நாதன்
பதிப்பாளர், ஆழி பப்ளிஷர்ஸ்
அறிமுகவுரை திரு. சந்திரன், எழுத்தாளர்/ஊடகவியலாளர்
கலைஞர் தொலைக்காட்சி
சிறப்புரை பரிசுகள் வழங்கி, நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்

மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், பள்ளிக்கல்வித்துறை, தமிழக அரசு
வாழ்த்துரைகள் திரு. கிரேஸி மோகன், இயக்குநர்/நடிகர்
திரு. வஸந்த், இயக்குநர்
திரு. ராஜீவ் மேனன், இயக்குநர்/ஒளிப்பதிவாளர்
திரு. இரா. முருகன், எழுத்தாளர்
ஏற்புரை திருமதி. மாலதி ராகவன், எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை
நன்றியுரை திரு. அய்யப்ப மாதவன், பதிப்பாசிரியர், ஆழி பப்ளிஷர்ஸ்

நன்றி, அனைவரும் வருக!




போட்டி முடிவுகள்


சென்னை, பிப்ரவரி 26, 2009
கடந்த ஆண்டு பி்ப்ரவரி 27 ஆம் தேதி மறைந்த, தமிழ் மக்கள் நன்கறிந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாக, எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அமரர் சுஜாதா நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அறிவியல் புனைகதைப் போட்டியொன்றை நடத்தியது.

உலகம் முழுவதிலுமிருந்து, பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். இவர்களில் பலர் புதியவர்கள்.

அறிவியல் புனைகதை எழுத்தாளர் திரு இரா. முருகன், ஊடகவியலாளர் திரு. சந்திரன், எழுத்தாளர் திரு. அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திரு. திவாகர் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்ட சுமார் 200 கதைகளை அலசி, இறுதி முடிவாக பின்வரும் கதைகளுக்கு பரிசுகளை அளிப்பதென்று முடிவுசெய்திருக்கிறார்கள்:


முதல் பரிசு (ரூ.20,000) திரு. தமிழ்மகன், தமிழ்நாடு
இரண்டாம் பரிசு (ரூ. 10,000) திரு. ;செய்யாறு தி. தா. நாராயணன், தமிழ்நாடு
சிறப்பு ஆறுதல் பரிசுகள் (ரூ.5000 வீதம்)
இந்தியா திரு. நளினி சாஸ்திரி, தமிழ்நாடு
இலங்கை திரு. ஆர். எம். நௌஸாத், இலங்கை
வட அமெரிக்கா திரு. வ. ந. கிரிதரன், கனடா
ஆசியா-பசிபிக் திரு. கே. பாலமுருகன், மலேசியா

ஐரோப்பா மற்றும் பிற உலக நாடுகளுக்கான பிரிவில் போதுமான கதைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், அவற்றை அடுத்த ஆண்டு போட்டியுடன் இணைத்துக்கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டிருக்கிறது

செவ்வாய், மார்ச் 03, 2009

திரைக்குப் பின்னே- 22

சொன்னது நீ தானா?

"கரகாட்டக்காரன்', "தாலாட்டு கேட்குதம்மா' போன்ற படங்களுக்குப் பிறகு கனகாவின் புகழ் உச்சத்தில் இருந்தது. "நெஞ்சில் ஓர்
ஆலயம்', "வானம்பாடி' படங்களைப் பார்த்து தேவிகாவின் மீதிருந்த மயக்கம் சற்றே கனகாவின் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தது.

ராஜ அண்ணாமலைபுரத்தில் உள்ள அவர்களின் வீட்டில் இருவரையும் ஒரே இடத்தில் சந்திக்கிற சந்தர்ப்பம். மிடுக்கான பழைய வீடு.
கதவைத் தட்டியதும் கனகாதான் கதவைத் திறந்தார். ஜீன்ஸ் பேண்டும் டி சர்ட்டும் போட்டிருந்தார். புடவையில் மட்டுமே பார்த்திருந்த
அவரை இப்படி எதிர்பார்க்காததுதான் அதிர்ச்சிக்குக் காரணம். போதாததற்கு மூக்குக் கண்ணாடி வேறு அணிந்திருந்தார். அவர் இப்படி
இருந்திருக்கவே கூடாது என்று நினைத்தேன். ஒரு நடிகை ரசிகனின் எதிர்பார்ப்பைப் புறந்தள்ளிவிட்ட ஏமாற்றம் அது.

உள்ளே வரவேற்பறையில் அமர வைத்தார். தேவிகா வந்தார். கனத்த சரீரம். ""நீ இதுக்கு முன்னாடி வந்திருக்கே இல்லையாப்பா?''
என்றார். பத்திரிகையாளர்களிடம் வழக்கமாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் பாணி அது. கண்களில் துறுதுறுப்பும் நாணமும்
தென்படாத அவருடைய உருவத்தையும் மென்மையற்ற குரலையும் ஒரு வயதான தாய்க்கான அடையாளம் என உடனடியாக ஏற்றுக்
கொள்ள மனம் தயங்கியது.

எதிரில் வந்து அமர்ந்த தேவிகா, நான் கேட்க வந்த கேள்விகளை அலட்சியம் செய்துவிட்டு அவர் ஏதோ பேச ஆரமம்பித்தார். "அந்தப்
படுபாவி. குடிகாரன். இப்ப இது என் பொண்ணு என்கிட்டதான் இருக்கணும்னு சொல்றானே.. நியாயமா சொல்லு? பெத்து வளர்த்து
ஆளாக்கி இவ்வளவு தூரம் வந்த பிறகு எங்க இருந்து வந்தான் அவன். (கனகாவைக் காட்டி) இவ பொறந்தப்ப விட்டுட்டுப் போன
வம்பா. இப்ப நடிகையாகி சம்பாதிக்கிறான்னு தெரிஞ்சதும் பாசம் பொத்துக்கிட்டு வந்துடுச்சாக்கும்.... ஏம்மா அந்த ஸ்டூலை எடுத்து
முன்னாடிப் போடு.. காலை இப்படி கீழே தொங்கவிட்டு வெச்சிருந்தா வீங்கிப் போவுதுப்பா. இப்படி மேல வெச்சுக்கிறேன்... ம்.. என்ன
சொன்னேன்? குடிகாரன்... குடிகாரன். எதுக்குச் சொந்தம் கொண்டாட்றான் இப்ப வந்து?''
அவர் திட்டிக் கொண்டிருப்பது கனகாவின் அப்பாவை என்பது கொஞ்ச நேரம் கழித்துத்தான் புரிந்தது. எந்தவித முன்னறிவிப்பும்
இல்லாமல் திட்ட ஆரம்பித்ததில் எனக்கு நேராகவே காலை நீட்டி உட்கார்ந்திருந்ததில் சற்று நிலைகுலைந்து போனேன். என் கன
வெல்லாம் சரிந்து தரைமட்டமாக விழுந்தது. மாலை ஆறரைக்கு அவர் வீட்டுக்குப் போனவன் இரவு எட்டு மணிக்கு வெளியே
வந்தேன். எனக்குப் பழக்கமில்லாத பகுதி அது.இருண்ட தெருக்கள் வழியாக ஏதோ வாழ்க்கையின் தாத்பர்யம் புரிந்து போனவன் மா
திரி நடந்தேன்.அங்கே இங்கே சுற்றி தேனாம்பேட்டை சிக்னல் வந்ததும்தான் எனக்கு வழி விளங்கியது.
அடுத்த ஆண்டில் தேவிகாவும் இறந்துபோக, கனகாவைப் பேட்டி எடுக்க நினைத்தபோது ஒரு அட்வகேட் எண்ணைக் கொடுத்து
அவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றார்கள். அந்த எண்ணில் பேசினேன். நீங்கள் யார், எதற்காகப் பேச வேண்டும்? என்ன பேச
வேண்டும்? என்று நிறைய கேள்வி கேட்டார்கள். அதன் பிறகு கனகாவை சினிமாவிலும் பார்க்க முடியவில்லை. பொது நிகழ்ச்சிகளி
லும் பார்க்கமுடியவில்லை.
அந்த வீட்டையும் பார்க்கவில்லை.

மணிவண்ணன் அலுவலகத்தில்

சத்யராஜ் சொன்ன விஷயம் இது. "கோயமுத்தூர் கல்லூரியில் பி.எஸ்ஸி. படிக்க விண்ணப்பம் வாங்க வரிசையில் நின்று
கொண்டிருந்தபோது ஒரு மாணவர் எந்த கோர்ஸில் சேருவதென்றே முடிவெடுக்க முடியாமல் நின்று கொண்டிருந்தார். "அட்வான்ஸ்
இங்கிலீஷ் என்கிறார்களே அது என்ன கோர்ஸ்' என்றார் அந்த மாணவர் என்னிடம். ஆளைப் பார்த்தால் என்ன சொன்னாலும் நம்புவார்
மாதிரி இருந்தது. "இப்ப ஒரு வீடு வாங்கணும்னா அட்வான்ஸô கொஞ்சம் பணம் தர்றதில்லையா.. அந்த மாதிரி இங்கிலீஷ்
கத்துக்கறதுக்கு முன்னாடி அட்வான்ஸô கொஞ்சம் இங்கிலீஷ் கத்துக் கொடுப்பாங்க' என்று ஒரு போடு போட்டேன். என்னை ஏற
இறங்க பார்த்துட்டு மனசார நம்பி அதற்கு விண்ணப்பித்தார். ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா என்று ஆங்கில இலக்கியம் ஆரம்பித்ததும்
இரண்டாவது மாசமே படிப்பை மூட்டைக் கட்டிவிட்டு சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார். பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.
இயக்குநர் ஆனார். அவர்தான் டைரக்டர் மணிவண்ணன். அவர் டைரக்டர் ஆனதற்கு நானும் ஒரு காரணம் என்றால் அவர் கோபித்துக்
கொள்ள மாட்டார்.''
ஒரு முறை அவரைச் சந்திக்க அவருடைய தி.நகர். அலுவகத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கு தமிழகத்தில் வெளியாகும்
பெரும்பான்மையான நாளிதழ்கள் இருந்ததைப் பார்த்தேன். டி.வி.யில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. "அப்ப திரிபாதி( திரிபாதியாகவோ
அது போன்றதொரு வட இந்தியத் தலைவராகவோ இருக்கலாம்.) சொன்னது மட்டும் சரிங்கிறீங்களா?'' என அப்ரப்ட்டாக ஆரம்பித்தார்
. எனக்கு சுதாரிக்கச் சில வினாடிகள் ஆயின. டி.வி.யில் அப்போது அவர் சம்பந்தமாக ஏதோ ஓடிக் கொண்டிருந்தது. திரிபாதியைப் பற்றி
எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்; எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்; அவர் என்ன சொல்லியிருந்தார்;
இப்போது டி.வி.யில் அது சம்பந்தமாக என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்... சுத்தம்... ஒன்றுமே விளங்கவில்லை. "ஒரு நியாயம்
இருக்கா பாருங்க.. பேசறதெல்லாம் பேசிட்டு இப்படி பல்டி அடிச்சா ஜனங்க என்ன இளிச்ச வாயனுங்களா?'' என்று ஆவேசமாகக் கூ
றினார். பேந்த, பேந்த விழித்தேன். அவரோ, அது பற்றி என்னுடைய அபிப்ராயத்தை எதிர்பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார். குப்பென்று
அவர் பற்றிய மதிப்பு உயர்ந்தது. சத்யராஜ் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு இவரை எடைபோடக்கூடாது என்று தெரிந்தது.
மிகப்பாதுகாப்பாகப் பேசினேன். அவர் சொல்வதற்கெல்லாம் "ஆமாம் சார். யாருக்கு சார் அக்கறை..? அரசியல்வாதிகிட்ட என்னத்தை
எதிர்பார்க்க முடியும்?' என்று பேசிவிட்டு தப்பித்து வந்தேன்.
இந்திய அரசியல் பற்றி அவருக்கு நல்ல ஞானம் உண்டு. ஓயாமல் படிக்கிறவராக இருக்கிறார். பதிப்பகங்களை நாடி வந்து புத்தகம்
வாங்குகிற பண்பு உள்ளவர் அவர். சினிமா இந்த மாதிரி ஆட்களை கோமாளிகள் போல சித்திரிப்பதும் அதே சமயம் ஹீரோவானவர்
எல்லா சமூக சிக்கலுக்கும் சுலபமாகத் தீர்வு கண்டுவிடுபவராகவும் இருப்பது விபரீதமான முரண்பாடுதான்.


புதுமைப்பித்தன்

பார்த்திபனிடம் நேர்த்தியான ரசனையைப் பார்த்து வியப்பேன். வாழ்த்து சொல்பவர்கள் பொக்கே கொடுத்துப் பார்த்திருக்கிறேன். இவர்
பழங்களால் ஆன பாக்கெட்டை கொடுப்பார். நடிகர்களுக்கும் நண்பர்களுக்கும் இவர் தரும் பரிசுகள் அவருடைய தனி
கைவண்ணத்தோடு இருக்கும். யாருக்கும் அவசர அடியாக கடையில் போய் ஒரு பரிசுப் பொருளை வாங்கித் தருகிற ஆள் இல்லை
அவர். மீனாவுக்கு அவர் தந்த பரிசு ஒன்றை மீனாவின் வீட்டில் பார்த்தேன். மீனாவின் கண்ணை குளோசப்பில் படமாக்கி "கண்ணே
மீனா...' என்று ஆரம்பித்திருந்தார். அதிர்ச்சியாக இருந்தது. கீழே அடுத்த வரி "மீனே கண்ணா?'... இப்படியாக இருக்கும் அவர் வழங்கும்
பரிசுகள். மேடையில் ஒரு நிமிடம் பேசுவதென்றாலும் ஏதாவது புதுமையிருக்கும்.
ஒருமுறை அவருடைய மனைவி சீதாவைப் பேட்டி காணச் சென்றேன். காலையிலேயே வரச் சொல்லியிருந்தார். சீதா தஞ்சாவூர்
ஓவியங்கள் வரைவதில் திறமைசாலி. நிறைய ஓவியங்கள் வரைந்து வைத்திருந்தார். அதைப் பற்றித்தான் பேட்டி காண வந்திருந்தேன்.
எங்கோ படப்பிடிப்பில் இருந்த பார்த்திபனும் ஓடிவந்து பேட்டியைச் சுவாரஸ்யப்படுத்தினார். (திருமதி இயக்குநர் என்ற தலைப்பில்
சீதாவையும் இயக்குநர் வசந்தின் மனைவி ரேணுகாவையும் பேட்டி எடுத்திருந்தேன். ரேணுகா இன்டீரியர் டெகரேஷன் துறையில் தாம்
செய்திருந்த புதுமைகளைப் பற்றிச் சொன்னார்.) அவர் வீட்டில் "கருப்பி' என்றொரு நாய் இருந்தது. பேட்டரியில் ஓடும் காரை
தமிழ்நாட்டில் முதலில் வாங்கியவர் அவராகத்தான் இருக்கும்.
பார்த்திபனின் அலுவலகத்தில் "உங்கள் பாதுகைகளைக் கழற்றித் தாருங்கள்} பரதன்' என்று எழுதியிருக்கும் இடத்தில் செருப்பை விட
வேண்டும். காலிங் பெல்லுக்கு பதில் ஒரு பெரிய காண்டா மணியைக் கட்டித் தொங்கவிட்டிருப்பார். உள்ளே நுழைந்ததும் ஒரு
எலக்ட்ரானிக் சென்ஸர் மூலம் நம் வரவை அறிந்து குருவி பொம்மை ஒன்று கத்தும். வாழ்க்கையை அணுஅணுவாக ரசிப்பது
என்பார்களே அது அவருக்கு மட்டுமே சாத்தியம் என்று பொறாமையாக இருக்கும்.
அடுத்த ஆண்டில் அவரும் சீதாவும் மன வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். அதில் புதுமை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

LinkWithin

Blog Widget by LinkWithin