சனி, அக்டோபர் 24, 2009

புல்லுக்கு இறைத்த நீர்... நெல்லுக்கும் புசிந்து..




எம்.ஜி.ஆர்.- லதா, ரஜினி- ஸ்ரீ ப்ரியா, கமல் ஸ்ரீதேவி என்று எழுதப்பட்ட அந்தச் சிறிய ராட்டினத்தை எத்தனை பேர் கவனிக்கிறோம்? கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் அந்த ராட்டினத்தைத் தள்ளிக் கொண்டு வந்து குழந்தைகளை உட்கார வைத்து கையால் சுழற்றிச் சந்தோஷப்படுத்தும் அந்த நபரை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? இத்தகைய ராட்டனங்கள் தயாராகும் பட்டறை எங்கே இருக்கிறது?
தோளில் சாய்த்திருக்கும் மூங்கில் கொம்பில் ஜவ்வு மிட்டாயைச் சுற்றி விற்றுக் கொண்டிருப்பவனைப் பார்த்திருக்கிறீர்களா? வண்ணப்பட்டைகளாக ஈ மொய்க்கும் அந்த இனிப்பு நினைவில் இனிக்கிறதா இப்போதும்? கையில் ஜவ்வு மிட்டாய் வாட்ச் கட்டிவிட்ட கையோடு சின்னத் துண்டைப் பிய்த்து உங்கள் கன்னத்தில் ஒட்டிவிட்டது நினைவுக்கு வருகிறதா?
பை நிறைய பலூன் வைத்துக் கொண்டு, கேட்கும் குழந்தைகளுக்கு வாய் வலிக்க ஊதித் தரும் முதியவரிடம் உங்களுக்கும் பரிச்சயம்தானே?
திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல தீபாவளி நேர நெரிசலில் ப்ளாஸ்டிக் பை நிறைய பாப் கார்ன் விற்றுக் கொண்டிருக்கும் பாட்டியைக் கொஞ்சம் நினைவுபடுத்தினால் அடையாளம் காண முடிகிறதுதானே?
பரபரப்பான சிக்னல் நடுவே மஞ்சள் துணி விற்கும் சிறுவர் சிறுமியர் தெரிகிறதா?
நான்கு சைக்கிள் சக்கரங்களால் கோர்க்கப்பட்ட நான்கு சக்கர வண்டியில் ஆய்வுச் சாலையில் இருக்கும் பெரிய கண்ணாடிப் பேழை போன்ற புட்டியில் சோன் பப்படி விற்பவர் தெரிகிறதா? அவர் அந்த புட்டியை எங்கே வாங்குகிறார்? யார் தயாரிக்கிறார்கள்... இந்த புட்டி சோன்பப்படி தவிர வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
இந்தத் தொழில்களையெல்லாம் யார் தீர்மானித்தார்கள். யார் வழி மொழிந்தார்கள்? நாம் இந்தத் தொழிலைச் செய்யலாம் என்று இதைச் செய்பவர்களுக்கு எப்படித் தோன்றியது? அப்படித் தோன்றுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டதா... திணிக்கப்பட்டதா?
பலூனும் எம்.ஜி.ஆர்- லதா ராட்டினமும், ஜவ்வு மிட்டாயும் வியாபாரம் ஆகி அதில் குடும்பம் நடத்த முடியும் என்று எப்படி நம்புகிறார்கள்?
என் சிறு வயதில் ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெருவில் ஒருவர் இந்த மாதிரியான தள்ளு மாடல் ராட்டினம் வைத்திருந்தார். அதை நிறுத்துவதற்கு வீட்டின் முன்னால் மூத்திரசந்தின் மூலையில் ஒரு இடம் எப்போதும் இருக்கும். அதை தினமும் சங்கிலி போட்டு பூட்டி வைப்பார். ராட்டினத்தைத் தள்ளிக் கொண்டு செல்வதற்கு உதவும் சிறுவர்களுக்கு இனாமாக சுற்றுவதற்கு அனுமதி. அதாவது காசு கொடுத்து ராட்டினம் சுற்றுபவர்கள் இரண்டு பேர்தான் இருந்தார்கள் என்றால்.. மறுபக்கம் பாலன்ஸ் செய்வதற்கு இரண்டு சிறுவர்களை இனாமாக உட்கார வைப்பார்.
அந்த ராட்டினத்துக்குச் சொந்தம் கொண்டாடி அவரும் அவருடைய தம்பியும் கட்டி உருண்டனர் ஒரு நாள். அது தனக்குத் தான் சொந்தம் என்பதில் இருவருக்கும் கொலைவெறி கரை புரண்டது. ஐந்து ஐந்து பைசாவாகச் சம்பாதித்துக் கொடுக்கும் அந்த ராட்டினத்தை நம்பி இருவர் சண்டை போட்டுக் கொண்டது இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. அது ஒரு குலத் தொழில் போல இருந்தது அவர்களுக்கு. அவருடைய அப்பாவும் அந்த ராட்டினத்தை நம்பித்தான் இவர்களை ஆளாக்கினாரோ என்னவோ? அடுத்த தலைமுறையைத் தயாரிக்க அது இப்போதும் தேவைப்படுவதால்தான் அந்தச் சண்டை நடந்தது என்று தோன்றுகிறது.
பண்டிகை நாள்களில் செல் போன் விற்பவர்களும் போத்தீஸ் கடையிலும் தீபாவளி ஆஃபர் என்ற பெயரில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்த உப தொழில்களுக்கும் கொஞ்சம் ஈரம் பாயப்படுவதை நினைக்கும்போது எந்தப் பண்டிகையையும் மன்னித்துவிடலாம் என்றுதான் தோன்றுகிறது.
--

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin