சனி, அக்டோபர் 24, 2009

பறக்கும் குதிரை!


தென்கச்சி சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலில் ஒட்டு மொத்த சாராம்சமாக ஒரு கதையை எப்போதும் நினைவில் கொள்வேன்.

அரசன் ஒருநாள் தன் அமைச்சர் மீது கோபம் கொண்டு அவருக்கு சிரச்சேதம் அளிக்கச் சொல்லி உத்தரவிடுகிறான். அதே நேரத்தில் இவ்வளவு நாள் பழகிய தன் அமைச்சர் மீது அவருக்கு ஒரு மெல்லிய பரிதாபம். அமைச்சருக்குக் கடைசி ஆசை ஏதாவது இருந்தால் அதை நிறைவேற்றும்படி கூறிவிடுகிறார்.
சேவகர்கள் கடைசி ஆசையை விசாரிக்கிறார்கள்.
அமைச்சருக்கு ஒரு திடீர் யோசனை. அங்கே கட்டி வைத்திருக்கும் குதிரையைக் காட்டி, "எனக்கு இந்தக் குதிரைக்குப் பறக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக ஒரு ஆசை இருக்கிறது. அனுமதிப்பீர்களா?'' என்கிறார் அமைச்சர்.
சேவகர்களுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். குதிரை பறக்குமா?
அரசனிடம் விஷயத்தைச் சொல்கிறார்கள். அரசருக்கும் குதிரை பறக்குமா என்று திடீர் ஆர்வம் ஏற்படுகிறது. அமைச்சரின் ட்ரிக்ஸ் ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகம் ஒரு பக்கம்.
"ஆறுமாசம் அவகாசம்.. அதற்குள் பறக்க வைத்துவிட வேண்டும்.. அதன் பிறகு சிரச்சேதம்'' என்கிறார் அரசர்.
எல்லோரும் போன பின்பு சேனாதிபதி வந்து அமைச்சரிடம் கேட்கிறார்.. "அமைச்சரே.. குதிரை பறப்பது சாத்தியமா? என்ன இது வேடிக்கை?'' என்கிறார்.
"சேனாதிபதி.. இந்த ஆறுமாத அவகாசத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் இயற்கையாகவேகூட இறந்துவிடலாம். அல்லது வேறு ஒரு அரசர் நாட்டைப் பிடிக்கலாம். அல்லது அரசர் நான் குற்றமற்றவன் என்பதைப் புரிந்து கொள்ளலாம்... இவ்வளவு ஏன் குதிரையேகூட பறப்பதற்குப் பழகிக் கொண்டுவிடும்..''
-கால அவகாசம் என்ன மாற்றத்தையும் செய்யும் என்பதற்கு உதாரணமாக இதைச் சொன்னார்.
மிகவும் பொறுமையான மனிதராக இருந்தார் அவர். ஒரு முறை அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை எனக்குத் தமிழ் ஊடகப் பேரவையில் வழங்கினார்கள். என்னுடைய பேச்சுத் திறமை ஒரு நிமிடத்தில் பாதி அளவுக்குக்கூட நீடிக்கவில்லை.
தகவல்களை எப்படிப் பெறுகிறேன்? என்ற தலைப்பில் அவர் ஒரு மணிநேரத்துக்குப் பேசினார். ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையில் வரும் பெரும்பான்மையான கதைகளை எடுத்து நாட்டு நடப்புக்கு ஏற்பப் பயன்படுத்துவேன் என்று சொன்னார்.
ஒருமுறை ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியர் கமலாத்மானந்தர், ரேடியோ ஸ்டேஷனுக்குப் போன் செய்து தென்கச்சியைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னாராம். வசமாக மாட்டிக் கொண்டோம் என்று தென்கச்சி சந்திக்கச் சென்றிருக்கிறார். கமலாத்மானந்தர், "உங்கள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறேன்... கதைகள் மிக அருமையாக இருக்கின்றன. அதைப் பிரசுரிப்பதற்கு அனுமதித்தால் விஜயத்தில் தொடர்ந்து வெளியிடுவேன்'' என்றாராம்.
இப்படியாகச் சிரிக்கச் சிரிக்கப் பேசினார்.
நிகழ்ச்சி முடிவில் கேள்வி நேரம்.
ஒரு பதிலுக்கு அவர், "எனக்கு எந்த லட்சியமும் இல்லை. அதனால் நான் ஆனந்தமாக இருக்கிறேன். லட்சியவாதிகள் யாரேனும் அவர்கள் வாழ்க்கையில் அவர்களின் லட்சியத்தை நிறைவேற்ற முடிகிறதா? காந்தியை எடுத்துக் கொள்ளுங்கள், காரல் மார்க்ஸை எடுத்துக் கொள்ளுங்கள், பெரியாரை எடுத்துக் கொள்ளுங்கள்.. ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று முயற்சி செய்யும்போது முதலில் பலியாவது அவனுடைய ஆனந்தம்தான்'' என்றார்.
கூட்டத்துக்கு வந்திருந்த பலருக்கு இதில் உடன்பாடில்லை. பெரியார் மட்டும் இல்லை என்றால் நாமெல்லாம் இப்போது இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்று கூச்சலிட்டனர்.
"அது உண்மைதான். ஆனால் பெரியார் எத்தனை இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதைத்தான் சொல்கிறேன். அதுவுமில்லாமல் நான் என்னுடைய ஆனந்தத்தின் ரகசியத்தைத்தான் சொல்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இப்போதுகூட நீங்களெல்லாம் லட்சியவாதியாக இருப்பதால்தான் கோபப்படுகிறீர்கள்.. இப்போதும் சொல்கிறேன் நான் அலட்சியவாதிதான்'' என்று கூறிவிட்டார்.
அவருடைய கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் ஒரு தனிமனிதனாக எல்லாவற்றுக்கும் மனதைத் திறந்து வைத்திருக்கிற ஒரு மனப்பான்மை என்று எடுத்துக் கொண்டேன். எந்தக் கருத்தையும் அப்படியே நேரடியாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதற்கும்
அது எல்லா விஷயத்திலும் பொருத்தமானதாக நினைக்க வேண்டியதில்லை என்பதற்கும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவரிடம் இதே போல் கேள்வி நேரத்தின்போது விடைகிடைத்தது.
நகைச்சுவைக் கதைகள் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே.. உங்களால் சோகமான கதையைச் சொல்ல முடியுமா? என்று கேட்டார்கள்.
"கதை சொல்ல வேண்டியதில்லை... ஒரு வரியே போதும்... அதைவிட ஒரு சோகக்கதை இருக்க முடியாது...
இலங்கைத் தமிழர்கள்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin