வியாழன், நவம்பர் 27, 2008

சனிக்கிழமை

வசந்தி கணக்கில் கொஞ்சம் வீக். கணக்கு வாத்தியாரோ உடல் ரீதியாக மிகவும் ஸ்ட்ராங். என்ன நடக்கும்? கணபதி வாத்தியார் அடிக்க ஆரம்பித்தால் நிறுத்துவதற்கு மறந்துவிடுவார் அவ்வளவுதான்.

வெள்ளிக்கிழமை மாலை அநேகமாகக் கடைசி பீரியட் சர்குலர் வரும். சனிக்கிழமை பற்றிய செய்தி வாசிக்கப்படும்.அப்படி வாசிக்கப்பட்டது.

"சனிக்கிழமை பள்ளி நாளென்றால் ஐந்து பீரியட் நடக்கும். பள்ளியின் ஏகோபித்த விருப்பம் எதுவாக இருக்குமென்றால் கணபதி வாத்தியார் வகுப்பு ஆறாவது பீரியட், ஏழாவது பீரியட் என வரும் வார நாளின் டயம் டேபிளை வேண்டுவதாக இருக்கும்.''

வசந்தியின் வகுப்பு செவ்வாய்க் கிழமைக்கு ஏங்கியிருந்தபோது "புதன்கிழமை அட்டவணைப்படி வகுப்புகள் நடக்கும்' என்று வாசித்து முடிக்கப்பட்டது.

புதன்கிழமை கணபதி வாத்தியார் மூன்றாவது பீரியட்.

புதன்கிழமை ஒரே ஒரு செüகர்யம் இருந்தது. இரண்டாவது மணியில் ஆங்கிலம். ஜோக்கர் வாத்தியார் வகுப்பு. ஜோக்கர் வாத்தியார் வகுப்பென்றால் கிராஃப் வரைவதற்கும் மேப் ட்ராயிங் புக்கைப் பிரித்து பசிபிக் கடலுக்கு நீல வண்ணம் தீட்டுவதற்கும் இன்னபிற ஆங்கிலம் சம்பந்தப்படாத வேலைகளுக்கும் பாத்ரூம் போய் வருதலுக்கும் வசதியாக இருக்கும். ஜோக்கர் வாத்தியார் வகுப்பென்றால்தான் எல்லோருக்கும் பாத்ரூம் போகிற ஆசை வரும்.

கணபசி அப்படியில்லை. ஒருமுறை மிகவும் உண்மையாக பாத்ரூம் முட்டவே எழுந்து பர்மிஷன் கேட்ட சுந்தரியை அடியோ அடியென்று அடித்ததில் அவள் பயந்து போய் நடு வகுப்பில் சிறுநீர் கழித்து வெட்கம் தாளாமல் பள்ளியைவிட்டு நின்று போனாள். டி.சி. வாங்கக் கூட வரவில்லை.

வாத்தியார் என்ற பெயரில் அவர் நடத்தி வந்த வன்முறைக்குப் பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்களின் பாராட்டும் அதிகம்.

"கணபதி சாரோட கிளாஸ்தான் ரொம்ப கொய்ட்''என்பார் ஹெட்மாஸ்டர்.

சுதந்திர தினம் போன்ற நாள்களில் பள்ளி மைதானத்தில் நடக்கும் விழாவில் பள்ளிக்கூடமே அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும். காக்கையின் கரைதலும் பேச்சாளரின் சுதந்திர தின அறிவுரையும் மட்டும் அங்கே ஒலி அலைகளை ஏற்படுத்துவனவாக இருக்கும்.

கணபதி புறநானூறு என்றால் ஜோக்கர் (நிஜப் பெயர் ஜெ.கே.ராமன்- ஜெ.கே.ஆர். என அழைக்கப்பட்டு ஜோக்கர் என மருவினார்.) புதுக்கவிதை.

"எல்லோரும் கவனிங்க'' என்று அடிக்கடி குரல் கொடுத்துவிட்டு அவர் பாட்டுக்கு இங்கிலீஷ் புத்தகத்தைப் படித்துக் கொண்டு போவார். ரொம்பவும் கோபம் வந்து விட்டால் "பெஞ்சு மேல ஏறி நில்லு..'' என்பார். கணபதி வாத்தியாரோடு ஒப்பிடுகையில் இவர் புறக்கணிக்கத் தக்கவர்.

முதல் பீரியடின்போது செவன்த் பி செக்ஷன் வாசலில் ஏழு பெண்கள் முட்டி போட்டுக் கொண்டிருந்ததை வசந்தி ஆறாம் வகுப்பு ஜன்னல் வழியாகப் பார்த்தாள். "கணபதி சார் வந்துட்டாரா?' என்று விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

பனிரெண்டாவது வாய்ப்பாட்டை இருபது முறை எழுதிக் கொண்டு வரச் சொல்லியிருந்தார். பதினான்கு முறைதான் எழுதியிருந்தாள்.

இரவு ஒளியும் ஒலியும் பார்ப்பதற்கு முன்பு கொஞ்சம் எழுதினாள். பவர் கட் ஆனதால் தூங்க நேர்ந்து மூன்று மணிக்குக் காலை தண்ணீர் நாளாக அமைந்து }அம்மா தலைவாறும்போது கொஞ்சம் எழுத முடிந்தது.

ஜே.கே.ஆர். பீரியட்டைதான் நம்பிக் கொண்டிருந்தாள். பத்து பதினைந்து நிமிடங்கள் போதும். முதலில் வரிசையாக 1,2,3.. என இருபது வரை எழுதிக் கொள்ள வேண்டும். அடுத்து இண்ட்டு.... இண்ட்டு... இண்ட்டு. அடுத்து வரிசையாக ஈக்குவல் குறி. அதற்கடுத்துதான் வாய்ப்பாட்டைப் பார்த்து எழுத வேண்டும். வசந்தி சுலபமாக வாய்ப்பாடு எழுதும் வழி இதுதான்.

முதல் மணி முடித்து அடுத்த வகுப்பு துவங்க, ஆவேசமாக நிறையப் பெண்கள் அவரவர்க்கு இடப்பட்ட கணிதக் கட்டளைகளை முடிக்க ஆயத்தமாயினர்.

ஜே.கே.ஆர். வரவேயில்லை. எந்த வகுப்பிலும் ஆசிரியர்கள் நுழையவில்லை. பள்ளிக்கூடம் காட்டுக் கூச்சலாக இருந்தது.

எல்லா ஆசிரியர்களும் மந்தையாகப் பேசிக் கொண்டு போனார்கள். ஸ்டாப் ரூமில் நுழைந்தவர்கள் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்கள்.

ஆசிரியர்கள் வகுப்புகளில் நுழைய ஆரம்பித்த பின் படிப்படியாகச் சத்தம் குறைந்தது. ஜே.கே.ஆர். வந்தார் வழக்கத்தைவிட நிதானமாக.

"நம்ம கணபதி சாரோட அப்பா இறந்துட்டாராம். இப்பதான் நியூஸ் வந்தது..''

வகுப்பு ஒருமாதிரியாக முழித்தது.

"முதல்ல ஒரு பெல் அடிக்கும் எல்லோரும் எழுந்து நிக்கணும். அவருக்கு மெüன அஞ்சலி செலுத்தறதுக்காக. அப்புறம் ஒரு பெல் அடிக்கும் உக்காரணும்''

பெல் அடித்தது. நின்றார்கள். அடுத்த பெல் அடிப்பதற்கு அரைமணி நேரம் ஆகிவிட்டதுபோன்ற உணர்வு. வசந்திக்குப் பின்னால் யாரோ }மல்லிகாவாக இருக்கலாம்} குபுக் என்று சிரித்த சப்தம் கேட்டது. வசந்திக்கும் சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டாள்.
அடுத்த பெல்.

சலசலப்போடு அமர்ந்தனர்.

வசந்தி மெல்லத் திரும்பி "நீ தான சிரிச்ச?'' என்று மல்லிகாவை விசாரித்தாள்.

"அப்ப இன்னிக்கி வரமாட்டாரு'' பூரித்தாள் குமுதா.

"இன்னும் ஒரு வாரத்துக்கு நம்மளை வாய்ப்பாடே கேட்கமாட்டாரு'' என்று தெம்பூட்டினாள் அங்கயற்கண்ணி.

ஏறத்தாழ எல்லா வகுப்பிலும் லீவு போல பேசிக் கொண்டார்கள்.

"அவங்க வீட்ல வாரம் ஒர்த்தர் செத்துட்டா கணபதி சார் அடிக்கவே மாட்டார் இல்ல?'' என்று யோசனை சொன்னவளைப் பார்த்து, "ச்சீ பாவம்டீ'' என்றாள் வசந்தி.



கணையாழி- 1989
தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வானது

LinkWithin

Blog Widget by LinkWithin