புதன், டிசம்பர் 03, 2008

நிரம்பி வழியும் வீடு

"அபியும் வர்றானாம்'' அழுத்தம் கொடுத்துச் சொன்னாள் செண்பகம். முதலில் சண்முகத்துக்கு அதற்கான முக்கியத்துவம் புரிபடவில்லை. திடுக்கென புரிந்து, இப்போது என்ன செய்வது என்று பரிதாபமாகப் பார்த்தான். ஸ்தம்பித்தான் என்றோ நிலைகுலைந்தான் என்றோ விவரிக்கலாம்.

அபியின் வருகை அவர்களை மிகவும் பயமுறுத்துவதாக இருந்தது. பயப்படும்படியாக அபி முரட்டு மீசையும் வீச்சருவாளும் திரண்ட தோளும் போதை ஏறிச் சிவந்த கண்களும் உடையவன் அல்ல. அவன் இரண்டடி உயரமுள்ள கிண்டர் கார்டன் சிறுவன்.

போன காலாண்டு பரீட்சை விடுமுறைக்கு வந்தான். சண்முகத்தின் தங்கைப் பையன். வந்த சில நிமிடங்கள் வரை அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு அதாலேயே முகத்தை மறைத்துக் கொண்டு இருந்தான். பிருந்தாவும் இரண்டொரு தடவை "மாமாகிட்ட பேசுடா' என்று தன்னிடமிருந்து அவனைப் பிடுங்கி சண்முகத்திடம் தர முயன்றாள். அது அவ்வளவு சுலபமானதாக இல்லை.

"ஏய் குட்டி என்ன படிக்கிறே? கமான்... கமான்...'' கொஞ்சுகிற ஆசையோடு இரண்டொரு முறை அழைத்தபோதும் அவன் இன்னும் இடுக்கிக் கொண்டு பின் வாங்க ஆரம்பித்தான். எந்த வீட்டிலும் குழந்தையை அழைத்துக் கொண்டு விருந்தாளி வந்தால், மொத்த பேரின் பொது இலக்காகி விடும் குழந்தை. சொல்லி வைத்தது மாதிரி எல்லோரும் ஒரே நேரத்தில் கொஞ்சுவார்கள். குழந்தையின் பெருமையை, புத்திசாலித்தனத்தை, ஒருவர் சொல்லி முடித்ததும் இன்னொருவர் ஆரம்பிப்பார்கள். நாமும் நம் பங்குக்குக் குழந்தை குறித்து ஏதாவது பேச வேண்டுமென ""எங்க வீட்ல ரெண்டு வாலு இருக்கு...'' என்று ஆரம்பிப்பார்கள் சிலர். சபை நாகரீகமில்லாமல் "லுல்லு லுல்லு,,, மில்லிம்மா மில்லிக்குட்டி' என்று கொஞ்சுவார்கள்.

சண்முகம் இதற்கெல்லாம் ரொம்ப தூரம். சண்முகம் பேச விரும்புகிற குழந்தை குறைந்தபட்சம் பத்தாவதாவது தேறியிருக்க வேண்டும். குழந்தைகள் ஏதோ தேர்வாணையத்தில் தேர்வாகி இண்டர்வியூ க்கு வந்தது மாதிரிதான் பேசுவான்.
"ஸ்கூல் பேர் என்ன?'' என்று கேட்பது அவனைப் பொறுத்தவரை மழலைகளிடம் கொஞ்சும் வார்த்தை. இந்த மாதிரி நேர்முக வினாக்களுக்கு அபி செவி சாய்க்கவில்லை. "தொல்ல மாட்டன் போ'' என்பதையே எல்லாக் கேள்விக்கும் பதிலாகச் சொன்னான்.

தன்னை மையப்படுத்தியப் பேச்சு மெல்ல மெல்ல மறைந்ததும் அபி ஹாலில் இருந்து மறைந்து உள் அறையில் போய் ஏதோ விளையாட ஆரம்பித்தான்.

அநேகமாக அவனை எல்லோரும் மறந்துவிட்டனர். முதலில் பிருந்தாதான் "அச்' என்று தும்மினாள். அதை இயல்பானதாக எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து செண்பகமும் சண்முகமும் தும்மினார்கள். இது சண்முகத்துக்குச் சற்று யோசிக்கும் விஷயமாகப் பட்டது.
""அபி எங்கே?'' என்று அவசரமாகத் தேடினர். தும்மலுடன் அபியைத் தொடர்புபடுத்தியது சரிதான். உள்ளே கட்டில் மெத்தையைக் கத்திரி கொண்டு கிழித்து உள்ளிருக்கும் பஞ்சை புதையல் பறிக்கும் தீவிரத்தோடு கிளறிக் கொண்டிருந்தான் அபி. அறை முழுதும் பஞ்சு கலந்த காற்று. இரவு படுக்கையில் எப்படிப் படுப்பது, படுக்கையைக் கொண்டுபோய் தைப்பவனிடம் கொடுக்க வேண்டுமா, அல்லது தைப்பவனை அழைத்து வந்து படுக்கையில் விடவேண்டுமா இதற்கு எவ்வளவு செலவாகும், எத்தனை நாள் ஆகும் உள்ளிட்ட குழப்பங்கள் அத்தனையும் ஒரே நேரத்தில் தாக்கியதில் சண்முகம் பிருந்தாவைப் பார்த்தான்.
அவளோ, "ஒரு நிமிஷம்கூட சும்மாவே இருக்க மாட்டான்'' என்பதைச் சான்றிதழ் போல சொன்னாள்.

பீறிட்டு வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு "குழந்தைன்னா அப்படித்தான்'' என்றான் சண்முகம். செண்பகத்துக்கு அவ்வளவு நாகரீகம் போதாது. அவள் ஒரு மாதிரி இறுக்கத்தோடு படுக்கை மீது ஒரு படுக்கை விரிப்பைப் போட்டு மூடிவிட்டு சமையல் கட்டுக்குப் போய்விட்டாள். போதாததற்கு அபி அவளுடைய அக்கா குழந்தையாக இல்லாததும் இந்தப் பல்லைக் கடிக்கும் இறுக்கத்துக்குக் காரணம்.

பையனை படுக்கை அறையில் இருந்து அகற்றி ஹாலில் உட்கார வைத்தார்கள். இந்த முறை அவனை வித்தியாசமாகத்தான் பார்த்தான் சண்முகம். டி.வி.யில் பிரைம் டைம் சீரியல் ஓடிக் கொண்டிருந்தது. பத்து நிமிடம் டி.வி. பார்த்துக்கொண்டே பிருந்தா கிளம்பிப் போனதும் செண்பகம் எப்படி வெடிப்பாள் என்று மனத்திரையில் படம் ஓட்டிக் கொண்டிருந்தான். பையனின் அமானுஷ்யமான மெüனம் சண்முகத்தைத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஜன்னல் ஸ்கிரீன் துணியின் கீழ்ப் பகுதிகளை ரிப்பன் ரிப்பனாக வெட்டிக் கொண்டிருந்தான் அபி. பையனை அறையில் இருந்து அப்புறப்படுத்திய கையோடு அவன் கையில் இருந்த கத்திரியையும் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். சண்முகம் இப்படி நிலைக்குத்தி உட்கார்ந்துவிட்டதைப் பார்த்த பிருந்தா... சனியனே கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டே... என்றபடியே அபியின் பின்புறத்தில் தட்டிவிட்டு அதேவேகத்தில் கத்திரியைப் பிடுங்கி சண்முகத்திடம் கொடுத்தாள். ""கத்திரி கிடைச்சா போதும். எதையாவது வெட்டிக்கிட்டே இருப்பான்''... மீண்டும் சான்றிதழ்.

இந்த முறையும் செண்பகம் எதுவும் சொல்லவில்லை. அதுதான் வயிற்றைக் கலக்கியது. புலி பதுங்குகிறது. எங்கே இது டைவர்ஸ் வரை போய்விடுமோ என்றும்கூட அஞ்சினான். அது அவளே தேர்வு செய்து வாங்கி ரசித்து ரசித்து தைத்து மாட்டிய கர்டெய்ன்.
அது இப்படிக் காற்றாடி வால் மாதிரி அறுந்து தொங்குவது அவளை என்ன பாடு படுத்தியிருக்கும் என்பது புரிந்து கொள்ள முடியாத ரகசியமா?

அந்தக் கணம் முதல் தனக்கு யாரும் கட்டளை இடாதபோதும் சண்முகம் தானாகவே அவனையே கவனிப்பது என்ற பணியை ஏற்றுக் கொண்டான். அவனைக் கவனிக்கப்படுவதை அபியும் கவனித்தான். இது எவ்வளவு நேரம் ஓடுகிறது பார்க்கலாம் என்ற சவால் அவன் முகத்தில் தெரிந்தது. ஆனால் இவ்வளவு இழப்புக்கு மேல் சண்முகம் அலட்சியமாக இருந்துவிட விரும்பவில்லை. மேற்கொண்டு சமாளிக்க முடியாமல் அவன் எழுந்து வெளியே போனான். தன்னுடைய மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் அதை சண்முகம் நினைத்தான்.

வெளியே அவன் தும்சம் செய்கிற மாதிரி பொருள் எதுவும் இல்லை என்பதால் எல்லோரும் டி.வி. பார்த்துவிட்டு திரும்பி வந்தவனை மடக்கி படுக்க வைத்து தூங்க வைத்தாள் பிருந்தா. இனி ஒரு பயமும் இல்லை என்றுதான் எல்லோரும் தூங்கினர். காலையில் எழுந்து கோலம் போட போன செண்பகம், மிரட்சியோடு உள்ளே ஓடிவந்தாள். அவளது மெüனத்திலேயே ஒருவினாடியில் அத்தனை ஆபத்தையும் புரிந்து கொண்டு வெளியே ஓடிப்போய் பார்த்தான் சண்முகம்.

தொட்டியில் வளர்த்திருந்த அத்தனை பூச்செடியும் குரோட்டன்ஸýம் இலையிலையாகக் கிள்ளி எறியப்பட்டு வேறோடு பிடுங்கி எறியப்பட்டிருந்தது. இரவு ஏற்பட்ட கதி. செண்பகம் செடிகளை அப்படியே முறத்தில் வாரி எடுத்துக் கொண்டு சண்முகத்தை ஒரு முறை "ஒருமுறை' முறைத்தாள். இந்த ஜென்மத்துக்குப் போதுமானதாக இருந்தது.
பிருந்தா பார்த்துவிட்டு, ""டேய்... இப்படியெல்லாம் பண்ணே அப்புறம் வீட்டுக்கே கூட்டிக்கிட்டுப் போகமாட்டேன். இங்கேயே விட்டுட்டுப் போய்டுவேன்'' என்றாள். தண்டனை பையனுக்கா? தமக்கா என்று சண்முகம் வேர்த்து விறுவிறுத்துப் போய்விட்டான்.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கோபமாகத் திட்டிவிடலாமா என்று நினைத்தான். ஆனால் என்னவோ அதற்கான தருணம் வரவில்லை என்று ஒவ்வொரு முறையும் தவிர்த்துவிட்டான்.
எதையாவது உடைப்பது, கிழிப்பது, நொறுக்குவது, அழிப்பது, பாழாக்குவது போன்றவற்றை ஒரு வேள்வி போல கடைப்பிடித்தான் அவன். டி.வி.யின் ரிமோட் கண்ட்ரோலை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு சானைலையும் எத்தனை வேகமாக மாற்ற முடியும் என்பதை நிறைவேற்ற ஆரம்பித்தான். மன்மோகன் சிங், வடிவேலு, சிம்ரன், ரோஜா செடி, மேட்டூர் அணைக்கட்டு, சிங்கம், பிங்க் பாந்தர் எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் மாறிக் கொண்டிருந்தது. ஒன்றையும் உருப்படியாகப் பார்க்க முடியவில்லை. அப்புறம் அது வெறுப்படித்துப் போய் சோபா விட்டு சோபாவுக்குத் தாவினான். குஷனை எடுத்து சுவற்றில் வீசினான். அது ஒரு தடவை டி.வி. மீது விழுந்து டி.வி. கீழே விழப் பார்த்தது. பிருந்தாவிடமிருந்து "டேய் அபிய்ய்'' என்று ஓர் அதட்டல். அதை அவன் ஒரு மைக்ரோ வினாடிகூட மதிக்கவில்லை.

தலையணையை எடுத்துக் கிரிக்கெட் பேட் போல ஆடிக் கொண்டிருந்தான். எவர் சில்வர் டம்ளரைப் பந்தாகப் பாவித்தான். யார் தலை வெட்டுப்படப் போகிறதோ என்ற அச்சத்தில் அடுத்த அரை மணி நேரம் கழிந்தது.

மனசுக்குள் அடிக்கும் களேபரத்தை மறைத்துக் கொண்டு எத்தனை நேரம்தான் அமைதிக் கவசத்தோடு அமர்ந்திருப்பது? சகிப்புத்தன்மையின் எல்லையை வகுக்கும் விளையாட்டாக இருந்தது அது. நல்லவேளையாக சண்முகம் எல்லை தாண்டிய சகிப்புத் தன்மையை எட்டவில்லை.

ஆனால், செண்பகத்தின் அலாதியான மெüனத்தால் அதிருப்தியை ஓரளவுக்குப் புரிந்து கொண்டாள் பிருந்தா. மறுநாள் "அவரு தனியா இருப்பாரு. நா வர்றேன் அண்ணி'' என விடைபெற்றாள்.

ஷேவிங் கிரீமைப் பிசுக்கி ஆபீஸ் ஃபைலில் பூசிவிட்டு அவனும் விடைபெற்றான்.
அபி போன பிறகு தன் கம்ப்யூட்டர் கீ போர்டில் தெப்பக் குளமாக தண்ணீர் நிரம்பியிருந்ததையும், மோட்டர் பைக்கின் இரண்டு சக்கரத்திலும் காற்று இறக்கப்பட்டு இருந்ததையும் சண்முகம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.

பகிர்ந்து கொள்ளவில்லையென்றால் என்ன கஷ்டம் கஷ்டம்தானே? காற்று இல்லை என்பதை மறைப்பதற்காக பைக்கை அப்படியே ஓட்டிச் சென்றதால் இரண்டு ட்யூப் மவுத்தும் பிய்ந்து போய் இரண்டையும் வேறு மாற்ற வேண்டியதானது. கீ போர்டு புதிதாக வாங்கி வந்து மனைவிக்குத் தெரியாமலேயே மாட்டினான்.

ஆனால் இது எல்லாமே செண்பகத்துக்குத் தெரிந்துதான் இருந்தது. தனக்குத் தெரியாமல் புதிய கீ போர்டை மாட்டி, பழைய கீபோர்டை பைக்கின் சைடு பாக்ஸில் வைத்ததை அவள் இரவு ஒரு மணி தூக்கக் கலக்கத்திலேயே பார்த்தாள். பைக் டயரில் காற்று இல்லாமல் அது நெளிந்து நெளிந்து போவதை அவள் "டாடா' காட்டிவிட்டுத் திரும்பும்போது கவனித்தாள். தனக்குத் தெரியக்கூடாது என சண்முகம் படுகிற பாட்டை எண்ணி, அபி சமையல் கட்டில் செய்த சேட்டைகளைக்கூட சண்முகத்திடம் சொல்லவே இல்லை அவள். உதாரணத்துக்கு அவள் சேகரித்து வைத்திருந்த ஆடியோ கேசட்டுகளை எல்லாம் அவன் ஃப்ரிட்ஜின் ஃப்ரீஸருக்குள் வைத்து மூடிவிட்டதைக்கூட அவள் சண்முகத்திடம் சொல்லவே இல்லை. அத்தனை கேசட் டேப்புகளும் ஒரு மாதிரி நெளிநெளியாக முறுக்கிக் கொண்டு பாழாகி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டாள்.

சில நாள்களில் வீடு மீண்டும் அமைதியாகி சகஜநிலைக்கு வந்தது. குழந்தையின் இருப்பு என்பது வீட்டை நிறைத்து வைக்கிற அம்சம்தானோ என்று நினைத்தான் சண்முகம். குழந்தையில்லாமலேயே பழகிவிட்ட வீடு. அதனால்தான் அபியின் சேட்டைகள் தமக்கு வித்தியாசமாக இருந்ததோ என்றும் தேற்றிக் கொண்டான். ஏனென்றால் பிருந்தா எதையும் பொருட்படுத்தாமல் இருந்ததே அதற்கு ஒரு ஆதாரம்தான். என்னதான் சமாதானம் சொல்லிக் கொண்டாலும் அபியை நினைத்து ஒரு பயம் இருக்கத்தான் செய்தது.
முதல்வரியில் "அபியும் வர்றானாம்' என்று செண்பகம் அதிர்ந்தது இந்த அபிக்காகத்தான்.
ஆட்டோவைவிட்டு இறங்கி பிருந்தா உள்ளே நுழைந்ததும் பின்னாலேயே அபியை எதிர்பார்த்தனர். ஆட்டோவில் இருந்து யாரும் இறங்கவில்லை. ஆட்டோ சீட்டைக் கிழித்துக் கொண்டிருக்கிறானோ என்னவோ?

"அபி வர்லயா?'' ரொம்பவும் எதிர்பார்த்துக் காத்திருந்த தொனியில் கேட்க நினைத்து, சந்தோஷத் தொனியில்தான் கேட்க முடிந்தது.

"அவன் வர்லணா... இங்க அவனுக்கு ஒரே போரடிக்குதாம்... உங்க வீட்ல விளையாட்றதுக்கு எதுவுமே இல்லையாம்... பாருங்க, இந்த வயசிலேயே எப்படிலாம் பேசுதுங்க?'' என்றாள்.

இப்படி ஒருவரியில் தம் வீட்டை நிராகரித்துவிட்டானே என்ற தவித்த ஒரு கணத்தை, சீக்கிரத்திலேயே தனியாக அவனிடம் அகப்பட்டுக் கொண்ட வீட்டை நினைத்துத் தேற்றிக் கொண்டான் சண்முகம்.

LinkWithin

Blog Widget by LinkWithin