செவ்வாய், அக்டோபர் 27, 2009

'ராஜா' கைய வெச்சா அது 'ராங்காகவும் போவும்!




பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜாவைப் பற்றி யாராவது குறையாகச் சொன்னால் வாய்த் தகராறில் ஆரம்பித்து அது கைத்தகராறில் முடிவதைப் பார்த்திருக்கிறேன். அவர் இசையமைக்கிற எல்லா பாடல்களுமே தேவகானமாக இருந்தது. இப்பவும் இருக்கிறதுதான்.ஒரு சபையில் மிகவும் துணிவான ஆசாமிகள்தான் அவரைத் தாக்கிப் பேச முடிந்தது. கொஞ்சம் இளப்பமான ஆசாமியாக இருந்தால் சுற்றியிருப்பவர்கள் அவரை அடித்தே போட்டுவிடுவார்கள்.


நேற்று என் மகனைத் தேடி வந்திருந்த அவனுடைய நண்பர்கள் சம்பாஷணையின் போது, "இளையராஜாகிட்ட புதுசா ரிசர்ச்சே இல்லடா.. அதே டண்டணக்குத்தான்...'' என்று பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
அவர்களுக்கு இளையராஜாவை மட்டம் தட்ட வேண்டும் என்ற நோக்கமோ ஆர்வமோ இல்லை. மிகவும் இயல்பான விமர்சனமாக இருந்தது. இளையராஜா வந்த போது விஸ்வநாதனை அப்படிச் சொல்வதைக் கேட்டிருந்ததால் இப்போது ரஹ்மான் வந்துவிட்ட பின்பு இளையராஜாவைச் சொல்வதையும் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தாங்கிக் கொண்டேன்.


இந்த மாதிரி காலம் தோறும் தலைமுறைகளுக்கிடையை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட வண்ணம்தான் இருக்கின்றன. வால்காவில் இருந்து கங்கை வரை நூலில், ஆதிநாளில் ஒருவன் ஏர் ஓட்டி உழவு செய்ய ஆரம்பித்த போது ஏற்பட்ட எதிர்ப்பலையைப் பற்றி எழுதியிருப்பார். "நிலத்தைக் கீறுவது மாபெரும் பாவம். தானாக உற்பத்தியாகும் உணவை மட்டுமே புசிக்க வேண்டும். நாமாக பயிர் செய்ய நினைப்பது இறைவனுக்கு எதிரான செயல்'' என்பதாகப் பேசுவார் ஒரு பெரியவர்.எல்லா காலத்திலும் மாற்றத்துக்குத் தடையும் எதிர்ப்பும் இருந்து வந்திருக்கிறது.


இவான் துர்கனேவ் எழுதிய தந்தையும் தனயரும் இந்தத் தலைமுறை இடைவெளியை உணர்த்தும் உன்னதமான நாவல்.தன் மகன் வருகைக்காகக் காத்திருக்கிறார் தந்தை. மகன் அர்க்காதி தன் நண்பன் பஸாரவ் -வுடன் வந்து இறங்குகிறான். சென்ற தலைமுறை ஆசாமிக்கும் பஸாரவ்வுக்கும் முதல் பார்வையிலேயே ஒத்துப் பட்டு வராமல் போவது ஆரம்பிக்கிறது. இரவு நேரத்தில் வனத்தில் ஓடும் ஓடையில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களை ரசிக்கும் வினோதமான ஆர்வங்கள் பஸாரவ்வை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.அவனுடைய சட்டை, தலைமுடி, பேச்சு எதையுமே அர்க்காதியின் பெரியப்பாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இருவருக்குமான வேற்றுமை நாவல் முழுவதும் நீடிக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் ஆளுக்கொரு துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.


யாருக்கு சாமார்த்தியம் இருக்கிறதோ அவர்கள் பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அர்க்காதியின் பெரியப்பா முதலில் சுடுகிறார். அவருடைய குறி தவறிவிடுகிறது. அடுத்தது பஸாரவ். மிகச் சரியாகச் சுட்டுவிடுகிறான். அடுத்த கணம் உயிருக்குப் போராடும் அவரைக் காப்பாற்ற முனைகிறான். அவரோ போட்டியின் விதிப்படி நான் இறப்பதுதான் சரியாக இருக்கும் என்கிறார். பஸாரவ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறான். "போட்டி முடிந்துவிட்டது. இப்போது நான் போட்டியாளன் இல்லை, மருத்துவன்'' என்கிறான்.அவருக்குச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றுகிறான். இப்போது பஸாரவ்வை எதிர்க்கொள்வதற்கு அர்க்காதியின் பெரியப்பாவுக்குச் சங்கடமாக இருக்கிறது.


இதனிடையே பஸாரவ் மீது காதல் கொள்ளும் பெண் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறாள். நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவனைக் காப்பாற்றும் பொருட்டு போதிய தடுப்பு மருந்துகள் இல்லாமலேயே சிகிச்சை செய்ய இறங்கி, பஸôரவ் உயிருக்கே வினையாக வந்து நிற்கிறது. இப்படி ஆகும் என்பதை உணர்ந்தேதான் அந்தச் சிகிச்சை அளிக்க இறங்குகிறான் பஸாரவ். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய நோக்கமாக இருக்கிறது. மரணத்தை சுகமாக ஏற்கிறான். சாகும் முன்னர் அவனால் மறுக்கப்பட்ட காதலியைச் சந்திக்க விரும்புகிறான்.


அவளோடு பேசிக் கொண்டிருக்கிறான். "நோய் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. நான் உளறுவது போல தோன்றினால் பரிதாபம் பார்க்காமல் என்னிடம் சொல்லிவிடு. நான் சாகும்போதும் கவுரவமாகச் சாக விரும்புகிறேன்'' என்கிறான்.அதுதான் பஸாரவ்.


"இந்த நாவலின் பஸாரவ் பாத்திரத்தை உருவாக்குவதற்காக நான் என்னிடம் இருந்த அத்தனை வண்ணங்களையும் இழந்துவிட்டேன்' என்று இவான் துர்கனேவ் கூறியிருக்கிறார்.


ஐரோப்பிய நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இயந்திர யுகம் காரணமாக நிகழ்ந்து கொண்டிருந்த நிலை கொள்ளாத அலைபாயும் மனத் தன்மை நாவலின் பின்னணிக் களமாக இருப்பதை உணர முடியும். அன்றைய இளைஞர்களுக்குள் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்த இஸங்களின் ஆதிக்கத்தையும் நாவலில் பார்க்க முடிகிறது. அதன் காரணமாகவே நாவல் ஒரு நூற்றாண்டின் மனச்சித்திரத்தை உருவாக்கும் தரத்தோடும் மிளிர்கிறது.


பூ. சோமசுந்தரத்தின் மிக நேர்த்தியான மொழி பெயர்ப்பு நம்மை நாவலோடு கட்டிப் போட்டுவிடுகிறது.தலைமுறைகள் கடந்தும் தலைமுறை இடைவெளியை அலசும் இந்த நாவல் சிலாகிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அவருடைய படைப்புகளில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவதன் ரகசியமும் அந்தத் தலைமுறை இடைவெளியில்தான் ஒளிந்திருக்கிறது.


தந்தையரும் தனயரும்

இவான் துர்கனேவ்

சந்தியா பதிப்பகம்,

57, 53-வது தெரு,9-வது அவென்யூ,

அசோக் நகர்,

சென்னை- ௮௩

ரூ. 100

சனி, அக்டோபர் 24, 2009

பறக்கும் குதிரை!


தென்கச்சி சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலில் ஒட்டு மொத்த சாராம்சமாக ஒரு கதையை எப்போதும் நினைவில் கொள்வேன்.

அரசன் ஒருநாள் தன் அமைச்சர் மீது கோபம் கொண்டு அவருக்கு சிரச்சேதம் அளிக்கச் சொல்லி உத்தரவிடுகிறான். அதே நேரத்தில் இவ்வளவு நாள் பழகிய தன் அமைச்சர் மீது அவருக்கு ஒரு மெல்லிய பரிதாபம். அமைச்சருக்குக் கடைசி ஆசை ஏதாவது இருந்தால் அதை நிறைவேற்றும்படி கூறிவிடுகிறார்.
சேவகர்கள் கடைசி ஆசையை விசாரிக்கிறார்கள்.
அமைச்சருக்கு ஒரு திடீர் யோசனை. அங்கே கட்டி வைத்திருக்கும் குதிரையைக் காட்டி, "எனக்கு இந்தக் குதிரைக்குப் பறக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக ஒரு ஆசை இருக்கிறது. அனுமதிப்பீர்களா?'' என்கிறார் அமைச்சர்.
சேவகர்களுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். குதிரை பறக்குமா?
அரசனிடம் விஷயத்தைச் சொல்கிறார்கள். அரசருக்கும் குதிரை பறக்குமா என்று திடீர் ஆர்வம் ஏற்படுகிறது. அமைச்சரின் ட்ரிக்ஸ் ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகம் ஒரு பக்கம்.
"ஆறுமாசம் அவகாசம்.. அதற்குள் பறக்க வைத்துவிட வேண்டும்.. அதன் பிறகு சிரச்சேதம்'' என்கிறார் அரசர்.
எல்லோரும் போன பின்பு சேனாதிபதி வந்து அமைச்சரிடம் கேட்கிறார்.. "அமைச்சரே.. குதிரை பறப்பது சாத்தியமா? என்ன இது வேடிக்கை?'' என்கிறார்.
"சேனாதிபதி.. இந்த ஆறுமாத அவகாசத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் இயற்கையாகவேகூட இறந்துவிடலாம். அல்லது வேறு ஒரு அரசர் நாட்டைப் பிடிக்கலாம். அல்லது அரசர் நான் குற்றமற்றவன் என்பதைப் புரிந்து கொள்ளலாம்... இவ்வளவு ஏன் குதிரையேகூட பறப்பதற்குப் பழகிக் கொண்டுவிடும்..''
-கால அவகாசம் என்ன மாற்றத்தையும் செய்யும் என்பதற்கு உதாரணமாக இதைச் சொன்னார்.
மிகவும் பொறுமையான மனிதராக இருந்தார் அவர். ஒரு முறை அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை எனக்குத் தமிழ் ஊடகப் பேரவையில் வழங்கினார்கள். என்னுடைய பேச்சுத் திறமை ஒரு நிமிடத்தில் பாதி அளவுக்குக்கூட நீடிக்கவில்லை.
தகவல்களை எப்படிப் பெறுகிறேன்? என்ற தலைப்பில் அவர் ஒரு மணிநேரத்துக்குப் பேசினார். ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையில் வரும் பெரும்பான்மையான கதைகளை எடுத்து நாட்டு நடப்புக்கு ஏற்பப் பயன்படுத்துவேன் என்று சொன்னார்.
ஒருமுறை ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியர் கமலாத்மானந்தர், ரேடியோ ஸ்டேஷனுக்குப் போன் செய்து தென்கச்சியைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னாராம். வசமாக மாட்டிக் கொண்டோம் என்று தென்கச்சி சந்திக்கச் சென்றிருக்கிறார். கமலாத்மானந்தர், "உங்கள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறேன்... கதைகள் மிக அருமையாக இருக்கின்றன. அதைப் பிரசுரிப்பதற்கு அனுமதித்தால் விஜயத்தில் தொடர்ந்து வெளியிடுவேன்'' என்றாராம்.
இப்படியாகச் சிரிக்கச் சிரிக்கப் பேசினார்.
நிகழ்ச்சி முடிவில் கேள்வி நேரம்.
ஒரு பதிலுக்கு அவர், "எனக்கு எந்த லட்சியமும் இல்லை. அதனால் நான் ஆனந்தமாக இருக்கிறேன். லட்சியவாதிகள் யாரேனும் அவர்கள் வாழ்க்கையில் அவர்களின் லட்சியத்தை நிறைவேற்ற முடிகிறதா? காந்தியை எடுத்துக் கொள்ளுங்கள், காரல் மார்க்ஸை எடுத்துக் கொள்ளுங்கள், பெரியாரை எடுத்துக் கொள்ளுங்கள்.. ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று முயற்சி செய்யும்போது முதலில் பலியாவது அவனுடைய ஆனந்தம்தான்'' என்றார்.
கூட்டத்துக்கு வந்திருந்த பலருக்கு இதில் உடன்பாடில்லை. பெரியார் மட்டும் இல்லை என்றால் நாமெல்லாம் இப்போது இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்று கூச்சலிட்டனர்.
"அது உண்மைதான். ஆனால் பெரியார் எத்தனை இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதைத்தான் சொல்கிறேன். அதுவுமில்லாமல் நான் என்னுடைய ஆனந்தத்தின் ரகசியத்தைத்தான் சொல்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இப்போதுகூட நீங்களெல்லாம் லட்சியவாதியாக இருப்பதால்தான் கோபப்படுகிறீர்கள்.. இப்போதும் சொல்கிறேன் நான் அலட்சியவாதிதான்'' என்று கூறிவிட்டார்.
அவருடைய கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் ஒரு தனிமனிதனாக எல்லாவற்றுக்கும் மனதைத் திறந்து வைத்திருக்கிற ஒரு மனப்பான்மை என்று எடுத்துக் கொண்டேன். எந்தக் கருத்தையும் அப்படியே நேரடியாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதற்கும்
அது எல்லா விஷயத்திலும் பொருத்தமானதாக நினைக்க வேண்டியதில்லை என்பதற்கும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவரிடம் இதே போல் கேள்வி நேரத்தின்போது விடைகிடைத்தது.
நகைச்சுவைக் கதைகள் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே.. உங்களால் சோகமான கதையைச் சொல்ல முடியுமா? என்று கேட்டார்கள்.
"கதை சொல்ல வேண்டியதில்லை... ஒரு வரியே போதும்... அதைவிட ஒரு சோகக்கதை இருக்க முடியாது...
இலங்கைத் தமிழர்கள்'' என்றார்.

சின்ன.. சின்ன ஊசிகள்!



பத்திரிகையாளர்களின் பீஷ்மராகப் போற்றப்படுபவர் சின்னக்குத்தூசி. இன்டர்நெட் உலகம் தழைத்தோங்கும் முன்னர் அவர்தான் இணைக்கும் தளமாக இருந்தார். எந்தத் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைத்தார்கள். யார் எத்தனை இடங்களில் ஜெயித்தார்கள்... என்று ஒரு போன் காலில் தெரிந்து கொள்ளலாம். புதிய கல்விக் கொள்கை குறித்து கட்டுரை எழுத வேண்டுமா, திராவிட இயக்க வரலாறு குறித்துத் தகவல் தெரியவேண்டுமா, நேரில் போய் அமர்ந்தால் அத்தனை தகவல்களும் சரமாரியாக வந்துவிழும். திருமணம் செய்து கொள்ளாமல் தன்னையே தகவலாகத் தந்து கொண்டிருக்கிறார் அவர்.
ஒரு பத்திரிகையில் வேலை போய்விட்டதா, அடுத்த பத்திரிகையில் சேர வேண்டுமா.. அவரிடம் சிபாரிசு கேட்டு வந்துநிற்பார்கள். தமிழகத்தின் எல்லா பத்திரிகை ஆசிரியரிடமும் அவருக்கு நல்ல நெருக்கம் உண்டு. ஆனால் அந்த அத்தனை நெருக்கத்தையும் முரசொலி நிறுவனருக்காக உதறித் தள்ளக்கூடிய அளவுக்கு அவருக்கு அந்த நிறுவனரிடத்தில் அத்தனை ஈடுபாடு.
இதயம் பேசுகிறது வார இதழ் நடத்திய இளைஞர் ஆண்டு நாவல் போட்டியில் எனது தொடர்கதை முதல் பரிசு தேர்வான அறிவிப்பை ஒரு நபரை வீட்டுக்கு அனுப்பித் தெரிவிக்கச் சொன்னார் ஆசிரியர் மணியன்.
நான் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓட்டேரியில் இருந்து என் நண்பனுடன் கிண்டியில் இருந்த இதயம் அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்தேன். மணியனின் மருமகன் ஸ்ரீராம், இவர்தான் உங்கள் நாவலைத் தேர்வு செய்தார். மொத்தம் இருநூறு நாவல்கள் போட்டிக்கு வந்தன என்றெல்லாம் சொன்னார். என் நாவலைத் தேர்வு செய்தவர் வெள்ளைக் கதர் வேட்டி, சட்டையில் ஒல்லியாக இருந்தார். அவர் பெயரை தியாகராசன் என்று அறிமுகப்படுத்தினார்.
ஆறு ஆண்டுகள் கழித்து கலாநிதி மாறன் முழுக்க வண்ணத்தில் வெளியிட்ட தமிழன் நாளிதழில் வேலைக்குச் சேர்ந்தபோது முரசொலியில் இருந்து சின்னக்குத்தூசி அழைப்பதாகத் தெரிவித்தார்கள். (இரண்டு நாளிதழும் அடுத்தடுத்த மாடியில் இயங்கின) சந்தித்தபோது என்னைத் தெரிகிறதா என்றார். தெரியவில்லை என்று சொன்னேன்.
"நான்தான் உங்கள் நாவலை இதயம் பேசுகிறது இதழில் தேர்வு செய்தவன்'' என்றார்.
"அது தியாகராசன் என்பவர் என்று அறிமுகப்படுத்தினார்களே?''
வேகமாக ஆறு ஆண்டுகளுக்கு முன் சில நிமிடங்கள் பார்த்த அந்த முகத்தை நினைவுபடுத்த முயன்றேன்.
"வெங்கடேசன் என்று உங்களுக்கு இயற்பெயர் இல்லையா? அப்படி எனக்கு தியாகராசன் என்பது இயற் பெயர்''
"மன்னிக்கணும் சார்.. எனக்கு இந்தப் பெயர் குழப்பத்தால தெரியாம போயிடுச்சி'' என்றேன். சொல்லி முடிப்பதற்குள் கூச்சமும் அவமானமும் போட்டி போட்டுக் கொண்டு பிடுங்கித் தின்றன. சின்னக்குத்தூசி என்றால் முரசொலி என்றுதான் யாருக்குமே நினைவு வரும். அவர் எப்படி மணியன் இதழில் நாவல் போட்டி நடுவராக இருக்க முடியும் என்பதால்கூட அவரையும் இவரையும் சேர்த்துப் பார்க்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். அதுவும் இல்லாமல் நாவல் போட்டி தேர்வான சமயத்தில் எனக்கு இருபத்தோரு வயது. மணியனையே சென்று சந்திக்க வேண்டும் என்றுகூட நினைக்கவில்லை. பரிசாக டி.வி.எஸ். 50 பெற்றுக் கொண்டதைக்கூட அவரிடம் தெரிவிக்கவே இல்லை. கையில் ஏழு ரூபாய் இருந்தால் போதும் பெட்ரோல் போட்டுக் கொண்டு ஊர் சுற்றுவதை மட்டுமே பிரதானமாகக் கொண்டிருந்தேன்.
அதன் பிறகு முரசொலியில் இருந்த அத்தனை சந்தர்ப்பங்களிலும் சின்னக்குத்தூசியை எதிர் கொள்ளும் நேரங்களில் குற்ற உணர்வு பொங்க ஒரு வணக்கம் வைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வேன். பல முறை வேலை வாய்ப்புகளை இழந்த சமயங்களிலும் அவரிடமிருந்து ஒரே ஒரு சிபாரிசையும் பெற்றதில்லை. எந்தக் கட்டுரைக்கும் அவரிடமிருந்து தகவல்கள் கோரியதில்லை. அவருடைய மேன்ஷன் எங்கிருக்கிறது என்பதைக்கூட தெரிந்து கொள்ளவில்லை.
ஆனால் இதயம் பேசுகிறது நாவல் போட்டியில் என் நாவலைத் தேர்வு செய்ததன் மூலம் அவர் எல்லா சிபாரிசையும் செய்து முடித்துவிட்டார் என்றே நினைக்கிறேன். இன்னமும் அதுதான் விசிட்டிங் கார்டாகப் பயன்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆண்களுக்கான திருமண வயது 21!



வீட்டுக்குப் புதிதாகக் குடித்தனம் வந்தார் ஒரு பேச்சலர். வயது இருபத்தொன்று முடிந்து சில நாள்களாவதாகச் சொன்னார். வேலை பார்த்தபடியே படிக்க வேண்டியிருப்பதால் தனிமை தேவைப்படுவதாகச் சொல்லி வீடு கேட்டு வந்தார். என்ஜினியரிங் முடித்திருந்த அவருக்குக் கல்லூரியில் படிக்கும்போதே நல்ல வேலைக்குத் தேர்வாகிவிட்டார். படித்தாகிவிட்டது, வேலையும் கிடைத்துவிட்டது, பிறகு என்ன படிக்கிறீர்கள் என்றேன்.
என்ஜினியரிங் படிப்பைவிட இப்போது கேட் படிப்புக்கு அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த ஆண்டு ஐஐஎம் படிப்புக்கு மொத்தம் மூன்று லட்சம் பேர் எழுதுகிறார்கள்... தேர்ந்தெடுக்கப்போவது மூவாயிரம் பேர்கள்தான் என்றெல்லாம் சொன்னார். எனக்கு கேட் பற்றியெல்லாம் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை. படித்து முடித்த பின் என்ன டிகிரி தருவார்கள் என்றேன். எம்.பி.ஏ. என்றார். அஞ்சல் வழிக் கல்லூரியிலேயே இப்போது எம்பிஏ படிக்கும் வசதி வந்துவிட்டதே என்று என் புத்திசாலித்தனத்தைக் காட்டினேன். அவருடைய முகக் குறிப்பில் எனக்கு விளக்குவது தேவையற்றது என்பது அவருடைய முகக் குறிப்பில் கொட்டை எழுத்தில் தெரிந்தது. அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது தன்னியல்பாக என்னுடைய 21 வயது நினைவுக்கு வந்தது.
என்னுடைய இருபத்தொன்றாம் வயதில் கடைசி ஆண்டு பி.எஸ்ஸி. தேர்வுக்கு ஒன்றுக்கும் போகாமல் கன்னிமரா நூலகத்துக்குப் போய் நாவல் எழுதும் வேலையில் தீவிரமாக இருந்தேன். ஏனென்றால் நாவல் போட்டி இருபத்தோரு வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.
கல்லூரிப் பாடம் பாக்கியிருந்ததால் காலையில் எழுந்ததும் எங்கே போவதென்ற பிரச்சினை. லைப்ரரி.. லைப்ரரி என்று போய் வந்து கொண்டிருந்ததால் சும்மாதானே இருக்கிறான் என்று அடுத்த சில மாதங்களிலேயே கல்யாணத்தை முடித்துவிட்டார்கள். ஆண்களுக்கான திருமணத்துக்கான வயது 21 என்ற விளம்பர அறிவிப்பு மட்டுமே என் திருமணத்துக்குத் தகுதியாக இருந்தது. வேண்டாம் வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருக்கும்போதே திருமண நாள் நெருங்கிவிட்டது. சொல்லச் சொல்ல கேட்காமல் கல்யாணம் செய்ததற்காகப் பழி வாங்கும் நோக்கமிருந்தது.
திருமணமான புதிது. வேலைக்குப் போகிற ஆசையெல்லாம் வரவேயில்லை. என்ன மாதிரி அலுவலகத்தில் என்னமாதிரி வேலை செய்யத் தெரியும் என்ற அவதானிப்பும் இருக்கவில்லை. அப்போது பேச்சாளர்களை அழைத்துச் சென்று என் மாமனார் ஊரில் கூட்டங்கள் போடுவதுதான் முழு நேரப் பணியாக இருந்தது. மாதத்துக்கு ஒரு தரம் பெரியார் தாசன், சுப.வீரபாண்டின் போன்றவர்களை ஊருக்கு அழைத்துச் சென்று சீர்திருத்தக் கூட்டங்கள் போட்டுக் கொண்டிருந்தேன். வருகிறவர்களுக்கு வீட்டில் அசைவ விருந்து நடக்கும். இத்தனைக்கும் என் மாமனார் வள்ளலார், ராமகிருஷ்ணர் ஆகியோரின் தீவிர பக்தர்.
வருகிறவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் வேறு. திண்ணையில் அமர்ந்து கடவுளைக் கிண்டலடித்துப் பேசிக் கொண்டிருந்தனர். சமயத்தில் என் மாமனாரும் அவர்களுடன் கடவுள் பற்றிய கிண்டல்களுக்குச் சிரித்துக் கொண்டிருந்தார். என்னால் அவரைப் பழிவாங்கவே முடியவில்லை. சகிப்புத் தன்மையும் பொறுமையும் கடைசியில் எனக்குத் தொற்றிக் கொண்டதுதான் மிச்சம்

புல்லுக்கு இறைத்த நீர்... நெல்லுக்கும் புசிந்து..




எம்.ஜி.ஆர்.- லதா, ரஜினி- ஸ்ரீ ப்ரியா, கமல் ஸ்ரீதேவி என்று எழுதப்பட்ட அந்தச் சிறிய ராட்டினத்தை எத்தனை பேர் கவனிக்கிறோம்? கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் அந்த ராட்டினத்தைத் தள்ளிக் கொண்டு வந்து குழந்தைகளை உட்கார வைத்து கையால் சுழற்றிச் சந்தோஷப்படுத்தும் அந்த நபரை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? இத்தகைய ராட்டனங்கள் தயாராகும் பட்டறை எங்கே இருக்கிறது?
தோளில் சாய்த்திருக்கும் மூங்கில் கொம்பில் ஜவ்வு மிட்டாயைச் சுற்றி விற்றுக் கொண்டிருப்பவனைப் பார்த்திருக்கிறீர்களா? வண்ணப்பட்டைகளாக ஈ மொய்க்கும் அந்த இனிப்பு நினைவில் இனிக்கிறதா இப்போதும்? கையில் ஜவ்வு மிட்டாய் வாட்ச் கட்டிவிட்ட கையோடு சின்னத் துண்டைப் பிய்த்து உங்கள் கன்னத்தில் ஒட்டிவிட்டது நினைவுக்கு வருகிறதா?
பை நிறைய பலூன் வைத்துக் கொண்டு, கேட்கும் குழந்தைகளுக்கு வாய் வலிக்க ஊதித் தரும் முதியவரிடம் உங்களுக்கும் பரிச்சயம்தானே?
திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல தீபாவளி நேர நெரிசலில் ப்ளாஸ்டிக் பை நிறைய பாப் கார்ன் விற்றுக் கொண்டிருக்கும் பாட்டியைக் கொஞ்சம் நினைவுபடுத்தினால் அடையாளம் காண முடிகிறதுதானே?
பரபரப்பான சிக்னல் நடுவே மஞ்சள் துணி விற்கும் சிறுவர் சிறுமியர் தெரிகிறதா?
நான்கு சைக்கிள் சக்கரங்களால் கோர்க்கப்பட்ட நான்கு சக்கர வண்டியில் ஆய்வுச் சாலையில் இருக்கும் பெரிய கண்ணாடிப் பேழை போன்ற புட்டியில் சோன் பப்படி விற்பவர் தெரிகிறதா? அவர் அந்த புட்டியை எங்கே வாங்குகிறார்? யார் தயாரிக்கிறார்கள்... இந்த புட்டி சோன்பப்படி தவிர வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
இந்தத் தொழில்களையெல்லாம் யார் தீர்மானித்தார்கள். யார் வழி மொழிந்தார்கள்? நாம் இந்தத் தொழிலைச் செய்யலாம் என்று இதைச் செய்பவர்களுக்கு எப்படித் தோன்றியது? அப்படித் தோன்றுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டதா... திணிக்கப்பட்டதா?
பலூனும் எம்.ஜி.ஆர்- லதா ராட்டினமும், ஜவ்வு மிட்டாயும் வியாபாரம் ஆகி அதில் குடும்பம் நடத்த முடியும் என்று எப்படி நம்புகிறார்கள்?
என் சிறு வயதில் ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெருவில் ஒருவர் இந்த மாதிரியான தள்ளு மாடல் ராட்டினம் வைத்திருந்தார். அதை நிறுத்துவதற்கு வீட்டின் முன்னால் மூத்திரசந்தின் மூலையில் ஒரு இடம் எப்போதும் இருக்கும். அதை தினமும் சங்கிலி போட்டு பூட்டி வைப்பார். ராட்டினத்தைத் தள்ளிக் கொண்டு செல்வதற்கு உதவும் சிறுவர்களுக்கு இனாமாக சுற்றுவதற்கு அனுமதி. அதாவது காசு கொடுத்து ராட்டினம் சுற்றுபவர்கள் இரண்டு பேர்தான் இருந்தார்கள் என்றால்.. மறுபக்கம் பாலன்ஸ் செய்வதற்கு இரண்டு சிறுவர்களை இனாமாக உட்கார வைப்பார்.
அந்த ராட்டினத்துக்குச் சொந்தம் கொண்டாடி அவரும் அவருடைய தம்பியும் கட்டி உருண்டனர் ஒரு நாள். அது தனக்குத் தான் சொந்தம் என்பதில் இருவருக்கும் கொலைவெறி கரை புரண்டது. ஐந்து ஐந்து பைசாவாகச் சம்பாதித்துக் கொடுக்கும் அந்த ராட்டினத்தை நம்பி இருவர் சண்டை போட்டுக் கொண்டது இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. அது ஒரு குலத் தொழில் போல இருந்தது அவர்களுக்கு. அவருடைய அப்பாவும் அந்த ராட்டினத்தை நம்பித்தான் இவர்களை ஆளாக்கினாரோ என்னவோ? அடுத்த தலைமுறையைத் தயாரிக்க அது இப்போதும் தேவைப்படுவதால்தான் அந்தச் சண்டை நடந்தது என்று தோன்றுகிறது.
பண்டிகை நாள்களில் செல் போன் விற்பவர்களும் போத்தீஸ் கடையிலும் தீபாவளி ஆஃபர் என்ற பெயரில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்த உப தொழில்களுக்கும் கொஞ்சம் ஈரம் பாயப்படுவதை நினைக்கும்போது எந்தப் பண்டிகையையும் மன்னித்துவிடலாம் என்றுதான் தோன்றுகிறது.
--

ஞாயிறு, அக்டோபர் 18, 2009

படுகொலைகளைப் பார்ப்பது எப்படி? -



சாதாரணமாக அலுவலகங்களில் இப்படி ஒரு காட்சியைப் பார்க்கலாம். இரண்டு பேருக்கு மனஸ்தாபம் என்றால் அதை எரியவிட்டுக் குளிர் காய்ந்து ஆதாயம் தேடும் மனிதர்கள் இருப்பார்கள். இரண்டு கிராமங்களுக்கு, இரண்டு மனித இனங்களுக்கு, இரண்டு நாடுகளுக்கு என்று இதை வளர்த்துக் கொண்டே போகலாம். பிரச்சினை ஏற்படும் தளத்துக்கு ஏற்ப ஆதாயமும் பிரச்சினையை எரியவிடும் போக்கும் பிரம்மாண்டமாக இருக்கிறது.


உதாரணத்துக்கு ப்ளூ ஸ்டார் ஆபரேஷனுக்குப் பிறகு சீக்கியர்களுக்கும் இந்திரா காந்திக்கும் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு இந்திராகாந்தி கொல்லப்படுகிறார். சீக்கியர்கள் எண்ணிறந்த பாதிப்புகளுக்கும் விசாரணை என்ற பெயரில் சித்திரவதைகளுக்கும் ஆளானார்கள்.

சிங்களர்களின் கொடுமைகளுக்கு ஆளான இலங்கைத் தமிழர்கள் அமைதி ஏற்படுத்த விரைந்த இந்திய ராணுவமே இலங்கைத் தமிழர்களுக்கு விரோதிகளானார்கள். ராஜீவ் காந்தி படுகொலையில் வந்து முடிகிறது. இப்போது ஒரு லட்சம் தமிழர்கள் வரை பலியாகியிருக்கிறார்கள். இதெல்லாம் நேரடியான ஒற்றைப்படையான நமது பார்வைகள். இந்தப் பிரச்சினைகளை எரியவிட்டுக் குளிர் காய்கிறவர்கள் யார் என்பது அதிர்ச்சியூட்டும் திகில் கதைக்கு ஒப்பானதாக இருக்கிறது.ஜான் பெர்கின்ஸ் எழுதியுள்ள "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற நூல் நாம் மேற்படி விஷயங்களை வேறு மாதிரியாக பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஒரு நாட்டின் அதிபர் திடீரென்று மரணம் அடைவதில் பொதுவாக ஆதிக்க நாடுகளுக்கு ஏற்படும் எண்ணிறந்த ஆதாயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு நாடு தன் நிலைத்தன்மையை, தன்னிறைவை இழக்கும் தருணம்தான் ஆதிக்க நாடுகளுக்கு வரப்பிரசாதம். அவர்களின் கரங்களை சுரண்டுவதற்காக நீட்டுவதற்கான அரிய சந்தர்ப்பம் அது.


பொதுவான லத்தின் அமெரிக்க நாடுகளில், குறிப்பாக ஈகுவாடாரில், இந்தோனேஷியாவில், சவுதி அரேபியாவில் என அமெரிக்கக் கைகூலிகள் எப்படி செயல் பட்டார்கள் என்பதை விவரிக்கிறது இந்த நூல். (கூலிகள் என்பதால் ரயில்வேகூலியை, விவசாயக்கூலியையோ நினைத்துக் கொள்ளக் கூடாது. இவர்கள் உலகின் மிக உயர்ந்த பி.எம்.டபிள்யு காரில் கோட் சூட் அணிந்து பிரயாணிப்பவர்கள்). ஜான் பெர்கின்ஸ் "மெய்ன்' என்ற நிறுவனத்தில் கட்டடப் பொறியாளர் வேலைக்குச் சேருகிறார். இவருடைய திடமான மனமும் உடற்கட்டும் இவருக்கு நிறைய சலுகைகளை வாரி வழங்குகிறது. அடுத்தடுத்து பதவி உயர்வுகள். ஒரு பெண்மணி வந்து சந்திக்கிறார். அவருடைய முதல் பேச்சே ஏன் எதற்கு என்று கேட்கக் கூடாது என்கிறது. அவர்கள் சொல்லும் நாட்டுக்கு உடனடியாக பயணிக்க வேண்டும். அங்கே நிலவும் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளை வேகமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். என்னென்ன கட்சிகள் இருக்கின்றன, யாருக்கு செல்வாக்கு அதிகம்?, எந்த மாதிரியான ஆவேசமான சூழல் நிலவுகிறது? எந்த விஷயத்தைத் தொட்டால் மனிதர்கள் செண்டிமென்ட்டாக பாதிக்கப்படுவார்கள்? என்றெல்லாம் தகவல் தர வேண்டும். இது முதல் கட்டம். (இரண்டாவது பிரச்சினையை உருவாக்க வேண்டும். உதாரணத்துக்கு விநாயகர் ஊர்வலம் போனால் மக்கள் கலவரத்துக்குத் தயாராக இருப்பார்கள் என்றால் அங்கு கலவரத்தை வெடிக்க வைக்க வேண்டும்.. சீக்கியர்களை உசுப்பிவிட்டு இந்திரா காந்தியைக் கொல்ல வேண்டும்) .
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. நேரடியாக இன்னொரு நாட்டில் தனது ஆட்களை இறக்குமதி செய்து பணத்தை அனுப்பிக் காரியம் சாதிக்க முடியாது என்பதால் மெய்ன் போல பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக வேறு நாடுகளுக்குள் இறங்குகின்றன. அது கட்டடம் கட்டும் நிறுவனமாக இருக்கலாம். செல் போன் நிறுவனமாக இருக்கலாம். மெயின் நிறுவனத்தின் மெய்ன் பிஸினஸ் நாட்டைச் சுரண்டுவது... பிரச்சினை ஏற்படுத்துவது... சைடு பிசினஸ்தான் கட்டடம் கட்டுவது. ஜான் பெர்கின்ஸுக்கு இந்த வேலை மிகவும் பிடிக்கிறது. வேகமாக காரியங்களைச் சாதிக்கிறார். பதவி உயர்வுகள்.. ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தின் டைரக்டருக்கு நிகரான சம்பளமே அவருக்கு வழங்கத் தயாராகிறது. ஈகுவடாரிஸ் அணைகள் கட்டி, எண்ணெய் வளத்தைச் சுரண்டி, அங்குள்ள மக்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தையே பாழாக்கி, இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பகுதியை சின்னா பின்னமாக்கி, அந் நாட்டு அதிபரைக் கொன்று.. என இவர் விவரித்துக் கொண்டே போகிறார். நமக்கு அடிவயிற்றைக் கலக்குகிறது. பக்கத்தில் "டயம்" என்ன என்று கேட்டால் கூட ஏதாவது அதில் உள் நோக்கம் இருக்குமா?' என்று அஞ்ச வேண்டியதாக இருக்கிறது. 2001 செப்டம்பர் பதினோரம் தேதி இரட்டைக் கோபுரமும் பென்டகன் நிறுவனமும் தாக்கப்பட்டன. அத்தனை பாதுகாப்புகள் நிறைந்த அமெரிக்காவிலேயே பின்லேடன் உள்ளே நுழைந்துவிட்டானே என்று ஆச்சர்யப்படுவது மேலே குறிப்பிட்டபடி இந்த விஷயத்தை நேரடியாக அணுகுவது. பெர்கின்ஸ் தரும் குறிப்புகளைப் பாருங்கள்..
"ஜார்ஜ் எச். டபிள்யூ புஷ் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக 1971 லிருந்து 1977 வரை பணியாற்றிய காலத்திலும் 76 முதல் 77 வரை சி.ஐ.ஏ.வின் தலைவராகவும் பணியாற்றிய போதும் பின்லேடன் குடும்பத்தினருக்கும் புஷ் குடும்பத்தினருக்கும் உறவுகள் வேர்விட்டு வளர்ந்தன. கடந்த 20 ஆண்டுகளாக வணிக, அரசியல் உறவாக அது நீடித்து வருகிறது. செப்டம்பர் பதினொன்றாம் தேதி தாக்குதலுக்குப் பிறகு பின்லேடன் குடும்பத்தினர் மற்றும் பணம் படைத்த சவுதி அரேபியர்கள் அமெரிக்காவில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அந்த விமானங்களைப் பறக்க அனுமதித்து யார் என்று இதுவரை தெரியவில்லை.''இப்படி உலகத்தின் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளுக்குப் பின்னணியில் பதுங்கியிருக்கும் மற்றொரு அதிர்ச்சியை நூல் முழுக்கச் சொல்லிக் கொண்டே போகிறார் பெர்கின்ஸ்.


தான் செய்யும் தொழில் மீது அவருக்குக் குற்ற உணர்வு ஏற்படுகிறது. எப்படி ஒரு பெண்ணின் மூலம் இந்தத் தொழிலில் இறங்குவதற்குக் காரணமாக இருந்தேனோ அதே போல் இன்னொரு பெண்ணின் மூலமாகத்தான் இந்த இழி செயலைப் புரிந்து கொண்டேன் என்கிறார். எந்த கணத்தில் அவர் அதை உணர்ந்தாரோ அப்போது முதலே அவருடைய நிறுவனத்தில் இருந்து அவருக்கு எதிர்ப்பும் ஆபத்தும் வரும் என்பது புரிந்து போகிறது. தனது உயிருக்கு நாள் குறிக்கப்பட்டு விடும் என்று தெரிந்து கொள்கிறார். நிறுவனமோ அவருக்கு இன்னொரு வாய்ப்பைத் தருகிறது. "நீங்கள் நமது நிறுவனத்துக்கு எதிரான கருத்துத் தொனிக்கும் கட்டுரையை எழுதியிருப்பதாக அறிகிறோம். இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்னும் சலுகைகளும், பதவிகளும் காத்திருக்கின்றன'' என்று எலிக்கு மசால் வடை காட்டி அழைத்துப் பார்க்கிறார்கள். அதிலே மிரட்டலும் ஒளிந்திருக்கிறது. மறுத்தால் அந்த இடத்திலேயே கொன்றுவிடுவார்கள் என்று தெரிந்து போகிறது. சம்மதம் தெரிவித்துவிட்டு வெளியே வருகிறார். அவருக்குத் தான் செய்யும் தொழில் விபசாரத்துக்கு ஒப்பான தொழிலாக கேவலமாகப்படுகிறது. ஆனாலும் வேறுவழியில்லை.


ஆப்ரிக்காவில் தம் செயலால் சுரண்டப்பட்ட பகுதிகளைப் பார்க்கிறார்.அவருடைய நடையிலேயே அப்படியே தருகிறேன்...

"கடலிலிருந்து ஒரு கணம் பார்வையைத் திருப்பியபோது ஆப்ரிக்க இல்லங்களிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட அடிமைகளால் கட்டப்பட்ட சுவர்கள் கண்ணில் பட்டன. அதைக் காணச் சகிக்காமல் அப்பால் திரும்பியபோது தரையில் கிடந்த ஒரு பருமனான தடியைக் கண்டேன். பாய்ந்து அதை எடுத்துக் கொண்டு கல் சுவர்களை அதனால் விளாசத் தொடங்கினேன். உடலில் உள்ள சக்தியெல்லாம் வற்றிப் போகும் வரை சுவர்களை அடித்து நொறுக்கிக் கொண்டே இருந்தேன். பின்பு புல்லில் விழுந்து உயரத்தில் மேகங்கள் நகர்வதை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்.என்ன செய்ய வேண்டுமென்று எனக்குப் புரிந்துவிட்டது. இனி பழைய வாழ்க்கைக்குத் திரும்பிச் சென்றால் அவ்வளவுதான். ஒழிந்தே போக வேண்டியதுதான். சம்பள உயர்வுகளும், சலுகைகளும் லாபங்களும் கட்டிப் போட்டுவிடும். பணியில் நீடிக்க, நீடிக்க வெளியேறுவது மென்மேலும் கடினமாகிவிடும். அடிமையாகிவிடுவேன். தப்பி ஓடிவிட வேண்டும்... இரண்டு நாள் கழித்து பாஸ்டன் திரும்பினேன். 1980 ஏப்ரல் 1 அன்று பால் பிரிட்டியின் அலுவலகத்துக்குச் சென்று வேலையை ராஜினாமா செய்தேன்.''ராஜினாமா செய்த பிறகு பெர்கின்ஸஸுக்குத் தொடர்ந்த மிரட்டல்களும் அதன் பின்பு இந்த நூல் பதிப்பிக்கப்பட்டு வெளியானதும் துப்பறியும் நாவலுக்குரிய இன்னொரு பாகம்.இரா. முருகவேள் சுவாரஸ்யமான காவிய நடையில் இதை மொழி பெயர்த்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது இந்த மொழி பெயர்ப்பு நூல்.நாமிருக்கும் உலகம் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள உதவும் ஒப்பற்ற நூல்.


பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஜான் பெர்கின்ஸ்

தமிழில்:இரா. முருகவேள்

விடியல் பதிப்பகம்,

11, பெரியார் நகர்,

மசக்காளி பாளையம் (வடக்கு),

கோயமுத்தூர்- 641 015.

மின்னஞ்சல்: sivavitiyal@yahoo.co.inphone: 0422 - 25776772

LinkWithin

Blog Widget by LinkWithin