வியாழன், ஜூலை 31, 2008

ஒரு தேர்தல்.. ஒரு பசு..

இரண்டு பின்னங்கால் மட்டும் வெளியே தெரிவதை நான்தான் முதலில் பார்த்தேன். பசு கன்று போடப் போவதை ஓடிப்போய் தங்கச்சி வீட்டுக்காரரõடம் சொன்னேன்.

கொஞ்ச நேரத்தில் விஷயம் வீடு முழுவதும் பரவி, ஓடி வந்து பசு கன்று போடப் போவதை வேடிக்கைப் பார்த்தார்கள். தங்கையின் மாமியார், "தலைச்சன் கன்னுனா கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்' என்று ஆசுவாசமாகப் புறப்பட்டு வந்தாள்.

அதற்குள் அக்கம்பக்கத்துப் பசங்களெல்லாம் வந்து வேடிக்கை பார்க்கத் துவங்கியிருந்தார்கள். மாமியார்க்காரி முந்தானையை இழுத்துச் சொருகிக் கொண்டு பசங்களை விரட்டினாள். பசங்கள் சற்று தூரம் ஓடிப்போய் நின்று கொண்டு மறுபடியும் பார்த்தார்கள்.

"ஆம்பளைங்க கூடத்தான் ஏன் இங்க நிக்கிறீங்க? வீட்டுக்குள்ள போங்க'' என்றாள்.

"சரி, சுந்தரம் நீங்க வீட்டுக்குள்ள போங்க. நானும் சேரóமனும் இன்னைக்கு வேலூர் வரைக்கும் போறோம். நம்ம ஊருக்கு பஸ் வர்றதுக்காக ஏற்பாடு பண்றதுக்குத்தான்... நா வர்றவரைக்கும் இரு. போயிடாதே'' என்றார்.
சுந்தரத்தோட தங்கை கல்யாணியைத்தான் முருகேசன் ஆறு மாதத்துக்கு முன்பு கல்யாணம் பண்ணினார். ஊர் பிரசிடண்ட் எலக்ஷனில் சுடச்சுட ஜெயித்திருக்கிறார். முருகேசன் கும்பிடுகிற மாதிரி படங்கள் இன்னும் சுவர்களில் வெளுத்துப் போய் இருக்கின்றன.

"ஊருக்கு பஸ் வருமா? எப்போ?'' இவ்வளவு மகிழச்சியாகச் சுந்தரம் கேட்டதற்குக் காரணம், இப்போது கூட பத்து கிலோ மீட்டர் நடந்தேதான் வந்திருந்தார்.

"எல்லாம் உங்க தங்கிச்சி வந்த ராசிதான்.'' முருகேசன் புன்சிரித்தார்.

"நீங்க பிரசிடென்டா ஆனதாலே இதெல்லாம் நடக்குது'' என்றார் சுந்தரம். தம்மை இன்னும் கொஞ்சம் புகழ்வார் என்று முருகேசன் எதிர்பார்த்தார்.

சுந்தரம் அதற்குமேல் பாராட்டுவதாக இல்லை.

"சரி. எனக்கு டயம் ஆவுது. நா போயிட்டு வந்துட்றேன்'' என்று முருகேசன் கிளம்பினார்.

கல்யாணி வந்து, "வாண்ணா சாப்பிடு'' என்று அழைத்தாள்.

சுந்தரம் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னால், பசுவைப் பார்த்தார். உட்கார்ந்து கொண்டிருந்த பசு எழுந்து நின்றது.

"அகைன்ஸ்ட்டா நின்னது யாரு?'' இட்லி சாப்பிட்டுக்கொண்டே கேட்டார் சுந்தரம்.

"நம்ம முருகேஷுதான் ஜெயிச்சிது'' என்றாள் ஆதிலக்ஷ்மி.

சுந்தரத்துக்குச் சங்கடமாகப் போய்விட்டது.

"அப்படியா...? ஆமா, எதிர்த்து நின்னது யாரு?'' என்றார்.

அவ்வளவுதான். எப்படித்தான் அந்த அம்மாளின் முகத்தில் திடீரென்று அப்படி ஒரு விகாரம் ஏற்பட்டதோ தெரியவில்லை.

"அவன்தான்... சிங்காரம்'' என்றாள்.

"நம்ம சிங்காரமா?''

"நம்ம சிங்காரம்... கழுதை ஜாதி புத்திய காமிச்சிடுச்சி பாத்தியா?'' என்றாள்.

சிங்காரம் சேரியைச் சேர்óந்தவன். ஒன்றாவது முதல் பி.யு.சி வரை முருகேசனும், சிங்காரமும் ஒன்றாகவே படித்தார்கள். முருகேசனுடய படிப்பு சம்பந்தமான அத்தனை சந்தேகங்களையும் சிங்காரத்திடம் தீர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதற்குப் பிராய்ச்சித்தமாக அவ்வப்போது பீஸ்கட்டும் போதெல்லாம் சிங்காரத்துக்குக் கடனுதவி செய்ய வேண்டியிருந்தது.

படிப்பு முடிந்ததும் நட்பெல்லாம் முருகேசனுக்கு அவ்வளவாக அவசியம் இல்லாமல் போனது. அப்படியே பழக வேண்டும் என்று நினைத்தாலும் ஊர்க் கட்டுமானங்களை மீற வேண்டியிருந்தது.

ஊரைப் பகைத்துக் கொண்டு சிங்காரத்திடம் பேசி சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் முருகேசன் நினைத்தான். இவர்கள் பேசுவதைப் பார்த்துவிட்டு.

"என்னடா வேலை உனக்கு, அவன்கிட்ட?'' என்று ஊர்ப் பெரியவர்கள் யாராவது கேட்டால், சிங்காரம் என்னோட ஃப்ரண்ட் என்று சொல்வதற்குக் கூச்சமாக இருந்தது. "சும்மாதான்... படிச்சிக்குனு இருந்தோம்' என்று எதையாவது சொல்லிச் சமாளித்து வந்தான்.

இந்த மாதிரி சமயத்தில்தான் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் வந்தது.

பத்து மணிக்கு ஒருமுறை பசுவைப் போய்ப் பார்த்தார். இன்னமும் அப்படியேதான் இருந்தது. வெளியே தெரிந்த முன்னங்கால் குளம்புகள் லேசாக ஆடின.

செய்திகல் முந்தித் தருகிற ஒரே நாளிதழான அதுஇந்த ஊருக்குப் பதினொரு மணிக்கு வந்து சேர்ந்தது. சுந்தரம் செய்திகளைப் புரட்டினார். தமிழ்ச்சினிமா மாதிரி நான்கு கொலை, இரண்டு கற்பழிப்பு , ஒரு எம்.எல்.ஏ. ஊழல்.... அதற்குள் மதியச் சாப்பாடு, சாப்பிட்டுவிட்டு தனõயாக மாடியில் போய்ப் படுத்தபோது, கல்யாணி ஒரு தம்ளர் மோர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு மிகவும் ரகசியமாக அவளுடைய நாத்தனார் எப்படிக் கொடுமைப்படுத்துகிறாள் என்று விளக்கினாள்.

கொஞ்ச நாளானால் சரியாகிவிடுவாள். நாமொன்றும் செய்வதற்கில்லை என்று நினைத்துக்கொண்டே உறங்கிப் போனார்.

நான்கு மணிக்கு எழுப்பி காபி கொடுத்தார்கள். (மண்ணெண்ணெய் வாசனை) முருகேசன் வரவில்லை என்று தெரிந்தது. இனி பொறுப்பதிóல்லை என்று ஊருக்குக் கிளம்ப ஆரம்பித்தார்.

கல்யாணி தனியாக வந்து அம்மாவை ஒருமுறை வரச் சொன்னாள். நாத்தனார் கொடுமைகளை அம்மாவிடம் சொன்னால் நல்ல விளைவுகள் ஏற்படும் என்று நம்பினாள்.

"முருகேசன் வர்ற வரைக்கும் இரேம்பா'' என்றாள் ஆதிலக்ஷ்மி.

"அவசரமா வேலை... இன்னொருமுறை வந்து...'' என்று சொல்லிக்கொண்டே வந்துபோது... அந்தப் பசு.
காலையில் பார்த்த அதே மாதிரியை அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தது.

"இன்னுமா போடலை?''

பசங்கள் யாரும் காணவில்லை. வெறுப்படைந்து போய்விட்டிருக்கிறார்கள்.

"இது கிடேரி பசு... அதான் கஷ்டபடுது'' என்றாள் ஆதிலக்ஷ்மி.

"கிடேரின்னா?''

"அப்படின்னா இதான் பர்ஸ்ட்டு கன்னு போடுதுன்னு அர்த்தம்.''

தூண் மறைவிலிருந்து கல்யாணியின் நாத்தி சொன்னாள். அவளுக்கும் சுந்தரத்துக்கும் திருமணம் செய்துவிட வேண்டும் என்றும் ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. என்ன ஆயிற்றோ தெரியவில்லை.

"இப்ப என்னா பணóறது?'' என்றார் சுந்தரம்.

"டேன்ஜர்}தான்'' என்றாள் மறுபடியும் அவள். எது எடுத்தாலும் ஒரு ரூபா'' மாதிரி கட்டையான குரல். எதற்காகவோ அவளுக்கு மணிமொழி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

பக்கத்தில் எங்காவது வெர்ட்டினரி ஹாஸ்பிடல் இருக்கிறதா என்று தெரியவில்லை.

"கன்னு உள்ளயே செத்துடுச்சி போல இருக்குது'' என்றாள் ஆதி.

யோசிக்க யோசிக்கப் பசுவுக்குக் கஷ்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று உணர்ந்தார் சுந்தரம்.

"மாட்டாஸ்பித்திரி பக்கத்தில் எங்கயாவது இருக்குமா?''

மறுபடியும் மணிமொழிதான் "ம்'' என்றாள்.

"எங்கே?'' என்ற சுந்தரம் பதட்டத்துடன் கேட்கவும், அவள் வெட்கப்பட்டுக் கொண்டு உள்ள ஓடினாள். அவள் அம்மா உள்ளே போய் விசாரித்துக் கொண்டு வந்து,

"சோழவரத்தில் இருக்குதாம்பா... இப்ப டயமாயிடுச்சே, போறதுக்குள்ள மூடிடுவான்'' என்றாள்.

"பின்னே எப்படி?''}இவ்வளவு நேரம் என்ன செய்தீர்கள் முண்டங்களே? என்று கேட்பதற்குப் பதில் இப்படிக் கேட்டார்.

"....மாட்டு வைத்தியமெல்லாம் அவன்தான் செய்வான்'' என்று மெதுவாக முனகினாள்.

"யாரு?''

"யாரு.... அந்த நாகன்தான்''

"எங்க இருக்கு அவர் வீடு''

"அட வேணாம்ப்பா அவன் வரமாட்டான்.''

"பரவால்ல சொல்லுங்க.''

"இனிமே என் வீட்டுப் பக்கமே வராதடான்னு நாக்க பிடுங்கிக்கினு சாகற மாதிரி கேட்டுட்டேன். அவன் வர மாட்டான்.''

"எதுக்கும் நா கூப்பிட்டுப் பாக்கறேன்.''

"நம்ம சிங்காரத்தோட அப்பன்தான்.''என்றாள்.

சிங்காரத்தின் வீட்டுக்கு நான் போயிருக்கிறேன். சேரியில் நுழைந்ததும் ஐந்தாவது வீடோ? ஆறோ?
ஆறுதான். நல்லவேளை நாகன் வீட்டில் இருந்தார்.

"வாப்பா, வாப்பா'' எனóறு திண்ணையைத் துடைத்து உட்கார வைத்தார்.

"நாங்க இன்னாப்பா பாவம் பண்ணோம்? எங்களை இந்தப் பேச்சு பேசிபுட்டாங்களே'' என்றார்.

"சிங்காரம் இóல்லையா?''

"இப்போ அம்பத்தூர்ல வேலை செய்றான்'' என்றார் மெதுவாக.

"óமாடு ஒண்ணு கன்னு போட முடியாம அவஸ்தை படுது... நீங்க கொஞ்சம் வந்து பாருங்க'' என்றார் சுந்தரம்.

"பாத்தாப் போச்சு... நம்மகிட்ட இன்னா இருக்குது? நம்ம முருகேஸý எல்கஷ்ன்ல நிக்குதுனு தெரிஞ்சிருந்தா நாங்க ஏம்பா நிக்கப் போறோம்? பர்ஸ்ட்டு சாமிப்பிள்ளைதான் நிக்கறதா சொன்னாங்க. உனக்குத் தெரியாதா அவரப்பத்தி? ஆளு பணம்னா கொலைகூடப் பண்ணுவாரு''

"முருகேஸýம் நா நிக்க மாட்டேன்னு சொல்லிடுச்சி. சரிதான்னு சேரில இருக்கவங்கெல்லாம் ஒண்ணா சேந்து சிங்காரத்தை நிக்கச் சொன்னாங்க... அப்புறம் பாத்தா முருகேஸý எதிர்த்து நிக்குது... இன்னா... பண்றது? போஸ்டர்லாம் அடிச்சாச்சி. போனா போது... வாபஸ் பண்ணிலாம்னு பாத்தா சேரி ஆளுங்கவுடலை.... ஊரை விட்ட சேரிலதான் ஜனம் தாஸ்தி அந்தத் தைரியம்....''

"அந்தக் கதையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். சீக்கிரம் வாங்க காலைல இருந்து...''

"சரி சரி'' என்று எழுந்து வெளியே வந்தார்.

"நாங்க உங்க உப்பத் தின்னு வளர்ந்தவங்க... உங்களுக்குக் கேடு நினைப்பமா? யாரோ முருகேûஸக் கெடுத்துட்டாங்கப்பா. அதுவே வூட்டுக்கு வந்து ஜாதி, கீதில்லாம் பாக்காம மோர் இருந்தா எடுத்தான்னு கேட்குமே...'' என்று நொந்து கொண்டே நடந்தார்.

"யாரும் கெடுக்கலை முருகேசன் சரியாயிடுவான்'' என்றார் சுந்தரம்.

"எலக்ஷன் நெருங்க, நெருங்க சேரி ஆளுங்களுக்கெல்லாம் சாராயம் வாங்கியாந்து ஊத்திக்கினு பொம்பளைங்களுக்கு ஜாக்கெட் துண்டு வாங்கியாந்து குடுத்து...ம்...வாபஸ் பண்றதுக்கும் முடியாம போச்சி. நேரா முருகேஸýகிட்ட போய், நாங்களும் உனக்கே பிரச்சாரம் பண்றோம். ஏன் "டேய்... தோத்தறப் போறோம்னு பயந்துட்டியா?'னு கேட்குதுப்பா'' கண்களைத் துடைத்துக் கொண்டார்.

வீடு நெருங்கியதும்.
"ஒரு நாலணாவுக்கு விளக்கெண்ணெய் வாங்கியாறச் சொல்லு. ஒரு தாம்புக்கயிறு இருந்தா எடுத்துக்குனு வா...'' துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு துரிதகதியில் இயங்கினார்.

பசுவின் பின்கால், முன் கால் இரண்டையும் கயிற்றில் இறுக்கிக் கட்டி மெதுவாகப் பசுவைக் கீழே தள்ளினார். விளக்கெணóணெய்யை எடுத்து கன்று சுலபமாக வெளியே வருவதற்காகக் துவாரத்தில் நன்றாகப் பூசினார்.

"பொன்னியம்மா நல்லபடியா ஆயிட்டா கற்பூரம் கொளுத்தரண்டி'' என்று வேண்டிக்கொண்டார். கையை உள்ளே நுழைத்து... ப்பா... சுந்தரத்துக்கு உடம்பெல்லாம் தகித்து வியர்வை கொட்டியது. பசுவின் கழுத்தைப் பலமாகப் பற்றிக் கொண்டிருப்பது சுந்தரத்தின் வேலை.

கன்றின் தலையை வெளியே இழுத்தாகிவிட்டது. கன்று சப்புக்கொட்டியது.

"கன்னுக்கு உயிரு இருக்குதுப்பா. நல்லபடியா முடிஞ்சுது...'' வெளியே இழுத்து அதன் நாக்கை நீரால் நனைத்தார். ஆண் மகவு.

பசுவை அவிழ்த்து விட்டதும் துள்ளியெழுந்து கன்றை நக்க ஆரம்பித்தது. நாகனிடம் யாரும் பேசவில்லை.
""ஏம்மா, மூத்திரப்பை விழுந்ததும் பின்னால கொஞ்சம் சுடு தண்ணி ஊத்துங்கோ'' என்றார்.

பதóது ரூபாய் எடுத்துக் கொடுத்தார் சுந்தரம்.

"என்னங்கோ இது...ச்சும்'' என்று மறுத்தார். "ஊருக்கு வரும்போது வந்து பாருப்பா'' என்றார்.
போய்விட்டார்.

சுந்தரத்துக்கும் நேரமாகிவிட்டது. அவசர அவசரமாகக் கிளம்பி தெருப்பக்கம் வந்து வேகமாக நடந்தபோது சண்முக நாடார் கடையில்,

"நாலணாவுக்குக் கற்பூரம் குடு நாட்டாரே'' எனறு நாகன் சந்தோஷமாகக் கேட்டது சுந்தரத்தின காதில் விழுந்தது.


அமரர் கல்கி நினைவுப் போட்டி 1985

அக்கா

தமிழ்மகன்

மனசு கூடத் திரிந்து போய்விடுகிற அளவுக்குக் குப்பென்று அடிக்கிற புளித்த வீச்சத்தைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வேலையில் சேர்ந்த அன்று பயங்கரமாக வாந்தி எடுத்தேன்.

முதலாளி கூப்பிட்டு "ஒத்துக்கலைனா வீட்டுக்குப் போயிருப்பா'' என்றார்.

வாந்தி எடுத்ததற்காக வேலையிலிருந்து அனுப்பி விடுவார்களோ என்று பயமாக இருந்தது. என்னுடன் இன்னும் மூன்று பேர் அந்தச் சாராயக் கடையில் வேலை செய்து வந்தார்கள். அவர்கள் எல்லாம் இலவசமாகக் குடிக்க முடிவதையே ஒரு பாக்கியமாகக் கருதிக் கொண்டிருந்தார்கள்.

எனக்குத்தான் அந்தப் புளித்த நாற்றமே பெரிய போதையாகவும், தாள முடியாத தலைவலியாகவும் இருந்தது.
போதாத குறைக்கு 24 மணி நேரக் குடிகாரன் நாராயணன் வந்தால், சாராயத்தைவிட அதிகமாகவே நாற்றமடிப்பான்.
இன்னொரு சங்கடமும் உண்டு. எங்கப்பா வேலை செய்யறே? என்று யாராவது கேட்டுவிட்டால், இந்த எட்டாம் நம்பர் கடையை எடுத்துச் சொல்லி விளக்குவதற்குள் உடம்பும் உள்ளமும் தத்தளித்துப் போகும்.

அக்கா சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிக் கொண்டு ஓடுவதைப் பார்க்கையில் இது எவ்வளவோ மேல்தான். சின்ன வயசில் தனபாக்கியத்தோடு (அப்போதெல்லாம் பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன்) நானும் சாப்பாட்டுக் கூடை தூக்கிக் கொண்டு போயிருக்கிறேன்.

சாப்பாட்டுக் கூடை என்றால் பஸ்ஸில் ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். சந்தடிச் சாக்கில் ஏற்றிவிட்டாலும் விசலடித்துக் கீழே இறக்கி விடுவார்கள். அக்கா பல்லைக் காட்டி, அப்படி இப்படிச் சோக்கெல்லாம் காட்டி, பஸ் பிடிப்பாள். கண்டக்டர்களின் கிண்டல்களைச் சகித்துக் கொள்வாள்.
லேட் ஆனதால் ஆபீஸர்களிடம் திட்டு வாங்கி, அவர்கள் வைக்கிற மிச்ச மீதியைத் தின்று சே... எட்டாம் நம்பர் கடை கிட்டத்தட்ட கோயில். நாற்றம்தான் நகர வேதனையாக இருக்கிறது. மற்றபடி ஒரு டீக்கடையில் வேலை செய்வது மாதிரிதான்.


குடிகாரர்களைக் கிண்டல் செய்வது முதலாளிக்குப் பிடிக்காது. எவ்வளவு போதையில் இருந்தாலும், அவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்.

இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடிவதில்லை. போதை ஏற, ஏற அவர்கள் வேறொரு மனுசனாக மாறுவதைப் பார்த்து ஒரு புன்முறுவலாவது வராமல் போகாது. ஆறுமுகம் போதை ஏறிவிட்டால், ஏதோ சொல்லப் போவது போல் கையையும் காலையும் உதறிக் கொண்டே வந்து ஆள் காட்டி விரலை நீட்டி, சிறிது யோசனைக்குப் பிறகு "பச்' என்று அலுத்துக் கொண்டு போய் விடுவான். அவனால் ஒரு வாக்கியம்கூட அமைக்க முடியாது. பச் என்பதைக் கூட ஏதோ ஏப்பம்போல விடுவான்.

அப்பா ஒரு தினசு. " எங்கடா போனே?' என்று கேட்க ஆரம்பித்தாரானால், அதையே வெவ்வேறு வகையாகக் கேட்டு உயிரை வாங்கி விடுவார். அக்காதான் எப்படியோ சமாளித்துத் தூங்க வைக்கும்.

மில் சம்பளம் அவருக்குப் போதுவதில்லை. மாதா மாதம் லோன் போடுவார். எனக்கு டி.பி. என்று சொல்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய்க் காண்பித்து லோன் வாங்கியிருக்கிறார். டி.பி.தான் என்று சர்டிபிகேட் கொடுக்கும் வரை என்னை இருமச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒன்றும் தெரியாத வயசு. அப்பா தன் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் நோக்கமாக இருந்தது. டி.பி.யா? அதைவிட மோசமான வியாதியா? என்று சந்தேகம் வரும் அளவுக்கு இருமினேன்.

அக்காவுக்குக் கல்யாணம் என்று கூட சொல்லி லோன் வாங்கிவிட்டார். லோன் அப்ளிகேஷனோடு கல்யாண அழைப்பிதழ் ஒன்றையும் இணைக்கச் சொல்லியிருந்தார்கள். யாரோ ஒருத்தன் பெயரை மணமகன் என்று போட்டு ஒரு பத்து அழைப்பிதழ் அடித்துக் கொண்டு வந்தார்.
மில்லில் சமர்ப்பித்த ஒரு அழைப்பிதழ் போக மீதி அழைப்பிதழெல்லாம் வீட்டில் இங்குமங்குமாக இறைந்து கிடந்தது. பிறகு ஒன்றையும் காணவில்லை. ஒருமுறை அகஸ்மாத்தாக அக்காவோட பெட்டியில் அவற்றைப் பார்த்தேன்.

அக்காவுக்குக் கல்யாண அழைப்பிதழ் அச்சடித்து எட்டு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. கல்யாணம்தான் இன்னமும் ஆகவில்லை. மூன்று வருஷத்துக்கு முன்னால் அம்மா சீக்கில் விழுந்து செத்துப் போன போது அப்பா அவசரமாய் டெத் சர்டிபிகேட் வாங்கி லோன் போட்டார். அக்காதான் எல்லாமாக இருந்து கவனித்துக் கொண்டாள். விடாப்பிடியாக என்னைப் பத்தாவது வரை படிக்க வைத்ததும் அக்காதான்.
காலை முதல் இரவு வரை மாடாக உழைத்தாள். ஒரு சீக்கென்று படுத்தவில்லை. திடீரென்று அவளுக்கு ஒன்றானால், வீடு அதோ கதிதான். இப்படி பத்து மணிக்கு ஷிப்ட் முடிந்து வீட்டுக்குப் போனதும், திடுக்கென்று விழித்து சாப்பாடு போட வருவாள்.

மணி பத்தாகப் பத்து நிமிடம் இருந்தது. குடிகாரர்கள் தீவிரமாக வர ஆரம்பித்தார்கள்.

ராமலிங்கம், "டேய் கணேசா, சினிமாவுக்குப் போலாம் வரியா?'' என்றான்.

"என்ன படம்?''

"ரஜினி...''

"பச்... எனக்குத் தூக்கம் வருது.''

பழனியும், சுரேந்தரும் வந்ததும், கடையை ஒப்படைத்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன். நாற்றமின்றித் தூங்க வேண்டும் என்று வெறியாக இருந்தது.

தெரு வெறிச்சோடி போயிருந்தது. கார்ப்பரேஷன் விளக்குகள் ஆர்வமின்றி ஒளி வீசின. தெரு நாய் ஒன்று குரைத்துக் கொண்டே ஓடிவந்து வாலாட்டியது.

திடீர் பாசம். நாய்க்கு ஒரு பொரையாவது வாங்கித் தர வேண்டும் என்று தோன்றியது. கடைதான் ஒன்றுகூடத் திறந்திருக்கவில்லை. வீட்டின் அருகே டீக்கடை ஒன்று திறந்திருக்கும். நாய் கொஞ்ச தூரம் என்னைப் பின்பற்றிவிட்டு, நம்பிக்கையிழந்து திரும்பிவிட்டது.
ஜூþ என்று கூப்பிட்டாலும், அது அவநம்பிக்கையோடு திரும்பிப் பார்த்துவிட்டு எதிர்திசையில் போய்க் கொண்டிருந்தது.

வீட்டுத் திண்ணையில் அப்பா படுத்திருந்தார். அவரிருந்த கோலத்தைப் பார்த்து அவர் நிதானத்தில் இல்லை என்பது புரிந்தது.

"சாப்டாச்சாப்பா?'' என்றேன்.

எங்கேயோ கேட்ட குரல் போல பார்த்தார். திடுதிப்பென்று என்னிடம் பேச வேண்டும் போல் சிரமப்பட்டார்.
""உங்க அக்கா வன்ட்டாளா?'' எனóறார்.

"எங்க போயிருக்குது?'' என்றபடி வீட்டைப் பார்த்தேன். விளக்கேற்றப்படாமல் இருந்தது. இவ்வளவு வயசில் இதுதான் முதல்முறையாக, வீட்டில் விளக்கெரியாமல் இருப்பதைப் பார்க்கிறேன்.

அப்பா எதுவும் சொல்லாமல் இமைக்காமல் பார்த்தார். முறைத்தார் போலவும் இருந்தது. கண்களிரண்டும் குங்குமமாய்ச் சிவந்திருந்தது. திண்ணையைச் சுற்றிலும் பீடித்துண்டுகளாக இறைந்து கிடந்தன.

"எங்க போயிருப்பா...?'' போயிருக்கிற இடம் அவருக்குத் தெரியும் போல கேட்டார். ""உடம்பு திமிரெடுத்தா சும்மா இருக்குமா... கெடந்து அலையறா... எங்க போவா...? போவட்டும்''

திகைத்துப் போனேன். பயம் பரவியது. என்ன சொல்கிறார்?
"அவ கிடக்றா வுட்றா'' என்றார். "அவ போனா போறா. சனியன் ஒழிஞ்சிதுன்னு வுடு''

அப்பா சொல்வது எந்த அளவுக்கு உண்மையென்று உணர முடியவில்லை. அக்கா இப்படிச் செய்திருப்பாள் என்று நம்ப முடியவில்லை. அக்கா செய்தது சரியா...?

"நீ போய் சாப்புடு'' என்றார்.

அங்கிருந்து அகன்றால் போதும் என்றிருந்தது. உள்ளே நுழைந்து ட்ரங்க் பெட்டியின் மீது சாய்ந்து உட்கார்ந்தேன்.
".... தப்பா?' என்று தீர்மானிக்க முடியவில்லை. அக்கா யாரிடமாவது ஏமாந்துவிட்டாளா? யாருடன் போனாள் என்று தெரியவில்லை. அதைப் பற்றியெல்லாம் முடிவெடுப்பதற்குக்கூட அவளுக்கு யாருமில்லாமல் போய்விட்டது. திரும்பி வந்து விட்டால் நன்றாக இருக்குமே என்று இருந்தது.

அவளுக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்க வக்கில்லாமல் போய் விட்டது. எனக்கு இருபத்தி நாலு என்றால்.. என்னைவிட அஞ்சு வயசு பெரியவள் என்று அம்மா சொல்லியிருக்கிறாள்... அப்படியென்றால் இருபத்தி ஒன்பது. அக்கா வயசுப் பொண்ணுங்களெல்லாம் மூன்று குழந்தை பெற்றுவிóட்டார்கள். பவானியோட பையன் ஆறாவது படிக்கிறான்.

மணி பத்தரைக்கு மேல் இருக்கும் போல் தோன்றியது. சினிமா விட்டுப் போகிற ஜனங்களின் பேச்சுக் குரல்கள் கேட்டன.

கருவாட்டுக் குழம்பும், கொஞ்சம் சோறும் மட்டும் இருந்தது. அப்பா சாப்பிட்டாரா? என்று தெரியவில்லை. இருமிக்க கொண்டிருந்தார். தற்கொலை முயற்சி மாதிரி பீடி பிடித்துக் கொண்டு இருந்தார்.

பசித்தது. சாப்பிட பிடிக்கவில்லை. வயிற்றுக்குள் திராவகத்தை ஊற்றியதுபோல எரிந்தது. திடீரென்று அக்கா வந்து "ஏண்டா இன்னும் சாப்பிடாம இருக்கறே?'' என்று கேட்டால்...
இனி எப்படி வாழ்வதென்று குழப்பமாக இருந்தது. அக்கா வரவே மாட்டாள் என்று நினைப்பது பக்கென்றிருந்தது. கண் கலங்கியது. என்கிட்ட கூட சொல்லிக்காம போறதுக்கு எப்படித்தான் மனசு வந்திச்சோ?

பாயை விரித்துப் போட்டேன். தலையணை காணவில்லை. ட்ரங்க் பெட்டிக்கு அந்தப் பக்கம் இருக்கலாம். அக்காவின் துணிமணிகள் எதையும் காணவிóல்லை.

எங்க போனேக்கா?

"கணேசா...'' என்று சத்தமாகக் கூப்பிட்டார் அப்பா. எதிரில் போய் நின்றேன்.

"சாப்டியா?'' என்றார்.

"ம்...''

அபபாவும் நிலை குலைந்து போயிருந்தார்.

"சாப்டியா நீ?'' என்றார்

"சாப்டம்பா''

"அப்ப எனக்கும் போட்றா... நீ சாப்ட்டாதான் நானும் சாப்புடுவேன்...''

"......''

"நமக்கு யார்றா இருக்கறாங்க'' என்று கலங்கினார். எனக்கும் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. உள்ளே நுழைந்து, சட்டியில் சோற்றைப் போட்டு குழம்பூற்றிக் கொண்டு வந்து அவர் முன்னால் வைத்தேன்.

"உண்டை புடிச்சித் தரேன் சாப்ர்றியா...?''

"நா சாப்ட்ம்ப்பா...''

"உங்க அக்கா...'' என்று ஆரம்பித்து எதுவும் முடிக்காமல் விட்டுவிட்டார். சோற்றைப் பிசைந்து கொண்டே இருந்தார்.

"நா போறேம்ப்பா...''

"எங்கடா வேலைக்கா...?''

"ஆமா... நைட் ஷிப்டு...''

"சரி இதை உள்ளே எடுத்துப்போய் வெச்சிடு'' என்று சாப்பிடாமலே கை கழுவிக்கொண்டார்.

சாராயக்கடை நோக்கி நடந்தேன். பாலாஜி டீ ஸ்டாலில் நின்று டீ குடித்தேன். நாளையிலிருந்து யார் சமைப்பார்கள் என்று தெரியவில்லை. அக்கா நிஜமாகவே வரமாட்டாளா?

டீ சாப்பிட்டு விட்டு வெளியேறும்போது இரண்டு பொரைகள் வாங்கிக் கொண்டேன்.

LinkWithin

Blog Widget by LinkWithin