புதன், மார்ச் 07, 2012

மௌனமே காதலாக..







காலத்தை ரீ வைண்ட் செய்து கண்முன் நிறுத்தியிருக்கிறது ‘தி ஆர்டிஸ்ட்’ திரைப்படம். இனி திரும்பவே முடியாத, கடந்து மறைந்துவிட்ட அன்றைய திரைக்கலைக்கு மீண்டும் உயிர்கொடுத்திருக்கிறார் இயக்குநர் மைக்கேல் அகனாவிக்கியஸ். சற்றேறத்தாழ சதுரமான திரை (1.33:1 திரை), நொடிக்கு 22 ஃப்ரேமில் வேகமான சலன ஓட்டம், அந்தக் காலத்தைய அலங்கார எழுத்தில் சப்& டைட்டில், பியானோவில் வாசித்தது போன்ற பின்னணி இசை.. என மௌனப் படத்துக்கான சகல லட்சணங்களையும் கவனமாகக் கையாண்டு ஒரு காதல் காவியத்தைப் படைத்திருக்கிறார் இயக்குநர்.
1920 &களில் மௌனப்படத்தில் நடிக்கும் கதாநாயகனை மையப்படுத்தியே கதையைப் பின்னியிருப்பதுதான் இயக்குநரின் சாமர்த்தியம்.
ஜார்ஜ் வாலண்டைன் மௌனயுகத்தின் பிரபல கதாநாயகன். சாகஸ ஹீரோ. அவர் பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் ஆட்டோகிராப் வாங்க வந்த ரசிகை பெப்பி மில்லர், அவரை இடித்து விடுகிறாள். திடுக்கிடும் நாயகன், பின்னர் சுதாரித்து, ரசிகையின் தோளில் பாந்தமாக கைபோட்டு போஸ் கொடுக்கிறார். அந்த அசந்த நேரத்தில் பெப்பி அவருடைய கன்னத்தில் முத்தமிட, மறுநாள் வெரைட்டி இதழில் ‘யார் அந்தப் பெண்?’ என்று படத்துடன் பிரசுரமாகிறாள். அந்தப் படமே ஹாலிவுட்டின் கினோகிராப் ஸ்டூடியோவில் நுழைவதற்குத் துருப்புச்சீட்டாக மாறுகிறது. ஜார்ஜ் அவளுக்குச் சிபாரிசு செய்கிறார். அந்தப் படத்தில் துணை நடிகையாக இடம்பெறுவதுடன், ஜார்ஜுடன் ஒரு காட்சியில் நடனமாடவும் வாய்ப்பு கிடைக்கிறது. படப்பிடிப்பு முடிந்ததும் ஜார்ஜின் ஒப்பனை அறையில் தயங்கித் தயங்கி நுழைகிறாள் பெப்பி. அங்கு ஜார்ஜ் இல்லை. அங்கிருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியில் மைதீட்டும் பென்சிலால் தாங்க் யூ என்று எழுதுகிறாள். அவளுக்குப் பரவசமாக இருக்கிறது. அங்கு மாட்டியிருக்கும் ஜார்ஜின் கோட்டின் வலது கையில் தன் இடது கையை நுழைத்து அவளையே அவள் அணைத்துக்கொண்டு மெய்மறந்து நிற்கிறாள். காதலிப்பது எத்தனை அரிய கலை? அந்த நேரத்தில் ஜார்ஜ் அங்கே வர, உங்களுக்கு நன்றி சொல்வதற்காக வந்தேன் என்று தெரிவிக்கிறாள்.
‘‘ஜெயிக்க வேண்டுமானால் எல்லோரும் செய்வதையே நீயும் செய்யக்கூடாது.. பிரத்யேகமாக ஏதாவது செய்ய வேண்டும்’’ என்று ஆலோசனை சொன்னபடியே அந்த மைதீட்டும் பென்சிலால் அவளுடைய உதட்டுக்கு மேலே செயற்கையாக ஒரு மச்சத்தை உருவாக்குகிறார். அந்தப் புள்ளி அவளுக்கு மேலும் வசீகரத்தை ஏற்படுத்துகிறது. அந்தச் செயற்கைப்புள்ளிதான் அவளுடைய நிரந்தர அடையாளமாகிற்து. அவளுடைய வாழ்க்கையே மாறுகிறது. துணை நடிகை என்று திரையில் பெயர்களின் நெரிலில் இடம்பெற்ற அவளுடைய பெயர் மெள்ள மெள்ள முதல் வரிசைக்கு நகர்ந்து முன்னணி நடிகையாகிறாள்.
இந்த நேரத்தில் கினோகிராப் முதலாளி ஜிம்மர் இனி மௌனப்படம் எடுக்கப்போவதில்லை என்ற முடிவை அறிவிக்கிறார். அதிர்ச்சியடைகிறார் ஜார்ஜ். ‘மௌனப்படம் இல்லையென்றால் வேறு என்ன படம் எடுக்க முடியும்?’ என்று கேட்கிறார். சப்தங்கள் கொண்ட சினிமாவைக் கற்பனை செய்யமுடியாமல் தானே சொந்தமாக ஒரு மௌனப் படத்தைத் தயாரித்து, இயக்குகிறார் ஜார்ஜ். பெப்பி நாயகி.
படம் வெளியாகிறது. அதே நாளில் பெப்பி நாயகியாக நடித்த பேசும்படம் சக்கைபோடு போட, ஜார்ஜ் தயாரித்தப்படம் காற்றாடுகிறது. அந்த நேரத்தில் தன்னுடைய பிரபலத்துக்குக் காரணம், தான் பேசும்படத்தில் நடிக்க ஆரம்பித்ததனால்தான் என்ற அர்த்தத்தில் பெப்பி பேசுவதைக்கேட்டு அவள்மீது கோபமாகிறார் ஜார்ஜ். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளமுடியாத ஜார்ஜ் புழுங்குகிறார். கடனாளியாகி, குடிப்பழக்கத்தால் தன் மேல் கோட்டையும் அடகு வைக்கும் நிலைக்குப் போகிறார். அவரும் அவருடைய நாயும் மட்டும் சிறிய வீட்டில் ஒடுங்கிக் கிடக்கிறார்கள். அந்த நாய்க்கும் ஒரு விருது கொடுக்கலாம்.
எந்த விஞ்ஞான வளர்ச்சியும் அந்தத் துறை சம்பந்தப்பட்ட கலைஞனை வாட்டி வதைப்பதை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கமுடிகிறது. சினிமா வந்தபோது, நாடகக் கலைஞர்களையும் வினைல் போர்டு வந்தபோது சைன் போர்டு எழுதுபவர்களையும் கம்ப்யூட்டர் அனிமேஷன் வந்தபோது செல் அனிமேஷன் வரைந்தவர்களையும் விசைத்தறி வந்தபோது கைத்தறியாளர்களையும் காலம் மனரீதியாக ஏற்படுத்திய வலியை, மௌனத்தின் மூலம் காதல் நாடகமாகச் சொல்லியிருப்பது வித்தியாசமான முயற்சி.
பிரிட்டீஷ் அகாடமி ஃபிலிம் அவார்டு கமிட்டியின் ஏழு விருதுகளைத் தட்டிச்சென்ற ‘தி ஆர்ட்டிஸ்ட்’ இப்போது ஆஸ்கார் விருது பரிந்துரையில் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்த வார விருது அறிவிப்பில் கணிசமான விருதுகளை அள்ளப்போவதும் அதுதான் என்று ஹாலிவுட் ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கிறது. (இது விருது அறிவிப்புக்கு முன் எழுதியது... ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றிருக்கிறது) நாயகி பெப்பியாக நடித்திருக்கும் பெரினிஸ் பெஜொ, அர்ஜென்டீனாவில் பிறந்தவர். அவருடைய தந்தை சினிமா தயாரிப்பாளர். ஆனால் உள்நாட்டு யுத்தம் காரணமாக மூன்று வயதிலேயே பிரான்ஸ§க்கு வந்துவிட்டவர். அங்குதான் இப்படத்தின் இயக்குநர் மைக்கேல் அகனா விக்கியஸை காதலித்து மணந்தார். மூன்று குழந்தைகள். இப்போது வயசு 35. சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள். அப்படியரு துறுதுறு. என்னமாக நடிக்கிறார்? ஜார்ஜ் ஏலம்விட்ட அவருடைய பொருட்களையெல்லாம் ரகசியமாக வாங்கி வந்து பாதுகாப்பதில் தொடங்கி, தீ விபத்தில் சிக்கிவிட்டார் என்ற செய்தியறிந்து பதைக்கும்போதுவரை ஒலியின் அவசியம் இல்லாமலேயே நெகிழ வைத்துவிடுகிறார்.
ஜார்ஜ் வாலன்டைனாக நடித்திருக்கும் ழான் டுஜார்டின், பிரான்ஸ் டி.வி.களில் நகைச்சுவை நடிகராக பிரபலமான இவர், உலக சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாகிவிட்டார். படத்தின் மௌனகுருவான ஹீரோ ஜார்ஜ் பேசும் ஒரே ஒரு வசனம் படத்தின் இறுதியில் இடம்பெறுகிறது.
நாயகி பெப்பி தன் அன்பாலும் அக்கறையாலும் தற்கொலைக்குத் துணிந்துவிட்ட ஜார்ஜை மீட்டு மீண்டும் நடிக்க வைக்கிறாள். இருவரும் ஆடும் நீண்ட நடனக் காட்சி ஒரே டேக்கில் ஓகே ஆகிறது. இருவருக்கும் மூச்சிறைக்கிறது. ஜார்ஜ் முதல் முறையாக தன் மூச்சின் சப்தத்தைத் திரையின் மூலமாகக் கேட்கத் தயாராகிறார்.
‘கட்’ என்கிறார் டைரக்டர். அதுதான் படத்தில் ஒலிக்கும் முதல் வசனம். காட்சி ஓகே என்றாலும் நடனத்தை மீண்டும் பார்க்கும் ஆவலில் இன்னொருதரம் ஆடமுடியுமா என்று இயக்குநர் கேட்கிறார்.
‘‘மகிழ்ச்சியாக’’ என்ற முதல் வசனத்தை ஜார்ஜ் பேசுகிறார். மாற்றத்தை ஏற்றுக் கொள்வதைத்தான் அப்படிச் சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.



நன்றி: விகடன் பிப்ரவரி/ 2012

LinkWithin

Blog Widget by LinkWithin