திங்கள், நவம்பர் 24, 2008

திரைக்குப் பின்னே- 8

தருமி முதல் தசாவதாரம் வரை

நாகேஷ் என்றால் நகைச்சுவை. புத்திசாலித்தனமான பாவனை வெளிப்பாடும் டைமிங் சென்ஸும் உடல் மொழியும் அவருடைய நகைச்சுவைக்குத் தனி ஈர்ப்பைத் தருகின்றன.




திருவிளையாடல், பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை, ஆயிரத்தில் ஒருவன், சர்வர் சுந்தரம் போன்றவை அவருடைய முதல் ரவுண்டு காமெடிகள். உடல் சேட்டைகளும் ஓங்கி ஒலிக்கும் குரலும் பிரதானமாக இருந்தன அதில். அவருடைய இரண்டாவது இன்னிங்ஸ், ஆழ்ந்த அமைதியான உடல் சேட்டைகள் குறைந்த காமெடிகள்.

நான் அவரை இரண்டாவது இன்னிங்ஸ் காலத்தில்தான் சந்தித்தேன். இரண்டொரு முறை பேட்டி கேட்டபோதும் அதை அவர் தவிர்த்துவிட்டார். பேட்டி தருவதில் பெரிய விருப்பம் எதுவுமில்லை அவருக்கு. மிகவும் விருப்பமுள்ளவர்கள் அல்லது ஏற்கெனவே பழகியவர்களிடத்தில் மட்டும்தான் அவர் பேசினார். அப்படிப் பேசும்போது அங்கே தொடர்ந்து நகைச்சுவைப் பட்டாசு வெடிக்கும்.

கமல்ஹாசனின் மகளிர் மட்டும் படத்தில் அவர் நடிப்பதை கமல்ஹாசன் இப்படி அறிவித்தார்:

"இந்தப் படத்தில் நாகேஷ் நடித்திருக்கிறார்.... உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ’இருக்கவில்லை' என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக நடித்திருக்கிறார்'' என்றார்.

ஒரு படத்தில் ஒரு நடிகர் முழுவதும் பிணமாகவே நடித்து சிரிக்க வைத்தது உலக சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்று தோன்றுகிறது.

’அபூர்வ சகோதரர்கள்', 'காதலா காதலா', 'பஞ்சதந்திரம்,' 'தசாவதாரம்' என கமல் பல படங்களில் நாகேஷைப் பயன்படுத்தியிருக்கிறார்.

படத்தில் நடிப்பதில் அவருடைய பங்கு முக்கியத்துவமானது என்பது மட்டுமல்ல. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவர் தரும் பங்களிப்புக்காகவும்தான் அவருக்கு இந்தத் தொடர்ச்சியான வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன்.

'பஞ்சதந்திரம்' படப்பிடிப்பின்போது நடைபெற்ற சிறு சம்பவம் இது.

கமல்ஹாசன் எப்போதும் அதிக காரம் சாப்பிட மாட்டார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிக்கன் துண்டில் ஒட்டியிருந்த மசாலாவைத் தவிர்க்கும் விதமாக அதன் கழுத்துப் பகுதியைப் பிடித்துக் கொண்டு தட்டில் தட்டினார். மசாலா விழுவதாக இல்லை. வேகமாகப் பலமுறை தட்டினார். அருகில் இருந்த நாகேஷ் லேசாகத் திரும்பிப் பார்த்து "என்னப்பா... கோழி சரியா சாகலையா. இந்த அடி அடிக்கிறே?'' என்றார் கூலாக.

கமல் இதையெல்லாம் ரசிப்பார் என்று நாகேஷுக்குத் தெரியும். நாகேஷ் இப்படியெல்லாம் ரசிக்க வைப்பார் என்று கமல்ஹாசனுக்குத் தெரியும்.


பட்டு என்பது பெயர் காரணம்

மோகன் ஸ்டுடியோவில் பிரபு நடித்துக் கொண்டிருந்த ’உழவன்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நான் பிரபுவைப் பார்க்கத்தான் சென்றிருந்தேன். பாதிப் பேட்டியில் வண்ணத்திரையில் அவரைப் பற்றி வந்த கிசுகிசுவைச் சுட்டிக்காட்டி அதே கோபத்தில் பேட்டி போதும் என்று விடைகொடுத்துவிட்டார்.



அதே ஸ்டுடியோவில் ’சில்க்' ஸ்மிதா வேறு ஏதோ படத்துக்காக நடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவ்வளவாகக் கெடுபிடி இல்லாமல் பேசினார். பேட்டி என்றால் பொதுவாக "இத்தனாம் தேதி இந்த இடத்துக்கு இத்தனை மணிக்கு வாங்க” என்பார்கள் பலரும். ஆனால் இவரோ தன் தொடையை மறைக்கும் விதமாக ஒரு சின்னத் துண்டைப் போர்த்திக் கொண்டு "கேளுங்க" என்றார் சாதாரணமாக.

என்னிடம் கைவசம் கேள்விகள் எதுவும் இல்லை. திராபையான கேள்விகளாகக் கேட்டேன். ”இப்போது என்ன படங்களில் நடிக்கிறீர்கள்” என்பது என் முதல் கேள்வி. அப்போது அவர் நடித்துக் கொண்டிருந்த நான்கைந்து படங்களின் பெயர்களைச் சொன்னார். "என்ன வேடத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்” என்பது என் இரண்டாவது கேள்வி. "பிச்சைக்காரியா நடிக்கணும்னு ஆசை” என்றார். "உங்களுக்குப் பிடித்த நடிகை யார்” என்று மூன்றாவது கேள்வி. அவர் ”சாவித்திரி” என்று சொன்னதாக ஞாபகம்.

அவ்வளவுதான் பேட்டி. வண்ணத்திரை போன்ற குட்டிப் பத்திரிகையிலேயே அரைப் பக்கத்துக்கு மேல் அதை இழுக்க முடியாது. அப்படியொரு ரத்தினச் சுருக்கப் பேட்டி அது.

நடிகைகளிடம் நீங்கள் நடிக்க விரும்பும் கேரக்டர் என்று கேட்டால் பிச்சைக்காரியாக நடிக்க விரும்புகிறேன் என்பதும் பைத்தியக்காரியாக நடிக்க விரும்புகிறேன் என்பதும் அப்போது பேஷனாக இருந்தது. கவர்ச்சியாக நடிப்பீர்களா என்றால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். ஆனால் கிளாமராக நடிப்பேன் என்பார்கள். இதெல்லாம் நடிகைகளின் ரெடிமேட் பதில்கள். நாங்களும் இந்தப் பதில்களை விடாமல் கேட்டுப் பிரசுரித்துக் கொண்டிருப்போம். வாசகர்களும் ’நடிகை... யின் பதில் அபாரம்' என்று, வாசித்துக் கடிதம் எழுதுவார்கள். சங்கிலித் தொடர் போன்ற பழக்கம்போல இதைச் செய்து கொண்டிருந்தோம். ஆனால் அவர், அவருடைய தொடர்ச்சியான வேடங்கள் குறித்து அதிருப்தியாகத்தான் இருந்தார் என்று பிறகு தெரிந்தது.

வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை இருந்தது. ஆனால் அவர் மீது இருந்த முத்திரை கடைசி வரை மறையவே இல்லை. அவரை அரைகுறை ஆடையுடன் ஆடுவதற்குத்தான் அழைத்தார்கள். சமீபத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தும் கடையம் ராஜுவைச் சந்தித்தபோது "அனாதை ஆஸ்ரமங்களுக்காகக் கலை நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் நான் இலவசமாகவே நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்'' என்று சில்க் ஸ்மிதா அவரிடம் சொல்லியிருந்ததைக் கூறினார்.

அவர் சொன்ன சில பதில்கள் உண்மையானவையாகவும் இருந்தன என்று முடிவு செய்வதற்கு சமயத்தில் அந்த நபர் உயிரையும் தர வேண்டியிருப்பதாகத் தோன்றுகிறது.

தற்கொலை என்பது சமூகத்துக்குத் தரும் தண்டனை என்பார்கள். பல நேரங்களில் தங்களை நம்ப வைப்பதற்காகச் செய்கிற கடைசிக் கட்ட முயற்சியாகவும் அது இருக்கிறது. சில்க் ஸ்மிதாவை எத்தனை பேர் நம்பினார்கள் என்று தெரியவில்லை. அவருடைய பிணம் ராயப்பேட்டை மருத்துவமனையில் அந்தப் ’பட்டு' மேனி கேட்பாரற்றுக் கிடந்தபோது அவருடைய கடைசிமுயற்சியும் தோற்றுப் போனதாகவே தெரிந்தது.


நடிகைக்காகவே பிறப்பெடுத்த கேள்விகள்

சில்க் ஸ்மிதாவிடம் கேட்டது மாதிரி பல நேரங்களில் கேள்வி கேட்கத்தான் வேண்டியிருக்கிறது. அந்தவிதத்தில் சில நடிகைகள் பிரமிக்க வைக்கவும் செய்திருக்கிறார்கள். அப்படி பிரமிக்க வைத்த ஒரு நடிகையைத் தெரிந்து கொள்வதற்கு முன்... பொதுவாக நடிகை எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள் என்று பார்ப்போம்.




நடிகைகள் என்றதும் ஆணாதிக்கத்தோடு இன்னும் கொஞ்சம் வக்கிரம், கொஞ்சம் அலட்சியம், கொஞ்சம் கவர்ச்சி ஈர்ப்பு எல்லாம்தான் கலந்து கொள்கிறது.

நம் இயக்குநர்களும் அவர்களை அப்படித்தான் பார்க்கிறார்கள். அவர்கள் குறைவான உடையோடு குலுங்கிக் குலுங்கி ஓடுவதற்காகவே பிறந்தவர்களாகப் பாவிக்கிறார்கள். ஆல்ப்ஸ் மலைச் சிகரத்திலும் இமயத்தின் வெள்ளைப் பனி மலையின் மீதுலாவும்போதும் நடிகைக்கு மார்பகமும் தொடையும் தொப்புளும் தெரிகிற மாதிரிதான் உடை. அவர்களும் சந்தோஷமாக பனிக்கட்டி மீது உருண்டு புரண்டு ஆடுவார்கள். உடன் நடிக்கும் நடிகரோ ஜெர்க்கின் போட்டுக் கொண்டு தலையில் விலங்கின் ரோமத்தால் ஆன குல்லா அணிந்து கையில் தோல் கிளவுஸ் மாட்டிக் கொண்டு கம்பீரமான ஆண் மகனாக சிகரெட் புகைத்தபடி ஸ்டைல் காட்டுவார்.

நடிகைகளை வெறியுடன் காமுகிக்கும் எந்திரம்போலச் சித்திரிப்பதில் சினிமாதுறையினரும் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். மக்களுக்கு அவர்கள் கனவுக் கன்னிகளாக மாறவேண்டும் என்பது தலைவிதி.. அல்லது தலையாயவிதி. அப்படிக் கனவுக்கன்னியாக நாம் திகழவேண்டும் என்று சம்பந்தப்பட்ட சில நடிகைகளே விரும்புவது வேறு.

இதில் பத்திரிகையாளர்கள் இந்த இருதரப்புக்கும் இடையே தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டியதாக இருக்கிறது.

நடிகைகள் என்றால் எப்போ கல்யாணம், காதல் கல்யாணமா, கவர்ச்சியாக நடிப்பீர்களா, உங்களுக்கும் அவருக்கும் இதுவாமே, நடிக்க வராமல் இருந்தால் என்ன செய்து கொண்டிருப்பீர்கள், (யாரைப் பிடித்து) எப்படி நடிக்க வந்தீர்கள், உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார், கல்யாணம் ஆன பிறகும் நடிக்க வருவீர்களா, நம்பர் ஒன் நடிகை ஆவது எப்போது, எதற்காக நாய் வளர்க்கிறீர்கள்? (நான் சில்க்கிடம் கேட்ட கேள்விகளையும் சேர்த்துக் கொள்ளலாம்) இந்தக் கேள்விகளைத் தவிர்த்துவிட்டு கேள்விகேட்ட தமிழ் நிருபர் யாரேனும் இருந்தால் அந்தத் தனித் தன்மைக்காக அவரை நோபல் பரிசுக்குக்கூட சிபாரிசு செய்யலாம்.

நடிகை ஜோதிர்மயி என்னை ஆச்சரியப்படுத்திய நடிகை. என்ன மாதிரி பொழுது போக்குவீர்கள் என்று கேட்டேன். படிப்பேன் என்றார். இப்போது படித்துக் கொண்டிருக்கிற புத்தகம் என்ன என்றேன். கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்ஸின் ஹண்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்யூட் என்றார். தொடர்ந்து அவர் லத்தீன் அமெரிக்கப் புனைவுலகம் பற்றி படபடவெனப் பேச ஆரம்பித்துவிட்டார். நான் இந்தக் கேள்விக்கு முந்தைய கேள்வி வரை அவரை எப்போ கல்யாணம் டைப்பில்தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன். சட்டென அவமானமாகிவிட்டது எனக்கு.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். தொழில் கண்டும் எள்ளாமை வேண்டும். இதையும் எங்காவது சொல்லியிருப்பாரோ என்னவோ?

புதன்கிழமை

மற்ற விரலையெல்லாம் மடக்கிக் கொண்டு கட்டை விரலை மட்டும் வாயருகே நீட்டி, "கிடைக்குமா?'' என்றார் பழனிச்சாமி.

வாசு நாயகருக்குப் புரிந்தாலும் ஊர்ஜிதமாகத் தெரிந்து கொள்வதற்காக, ""கள்ளா? சாராயமா?'' என்றார்.

"சாராயம்தான்'' என்றார் அப்படியும் அப்படியும் பார்த்துக் கொண்டு.

"அந்தப் பழக்கம் உண்டா?''

"ஆட்டோ ஓட்றவங்களுக்கு அது இல்லாம முடியாதே'' என்றார் தீர்மானமாக.

"இங்க ஏகப்பட்ட பேர் காச்றாங்க''

"காய்ச்சர்தா? ஆந்திரா சரக்கு கிடைக்காதா?''

"இத்தாண்ட எந்தச் சரக்கும் ஒண்ணும் பண்ண முடியாது... ஒருவாட்டி சாப்டு பாரேன்'' வாசு நாயகர் தெம்பாக நடந்தார்.

வானம் பார்த்த பூமி. சுற்றிலும் அடையாளத்துக்கும் பச்சை இல்லாத வயல்கள். நான்கு மணி வெய்யிலும்கூட இவ்வளவு சூடாக இருந்தது. பழனிச்சாமி குத்தகைப் பணம் வாங்குவதற்காக வருடத்துக்கு ஒருமுறை வருவார். வருடத்தில் இரண்டாவது முறையாக வந்ததன் காரணம் அந்த ஒரு பயணத்தையும் நிறுத்திவிடுவதற்காகத்தான். அவசரமாய் நிலத்தை விற்றுவிட்டு சொந்தமாக ஆட்டோ வாங்கிக் கொள்வதாகத் திட்டம்.

வருஷத்துக்கு நான்கு மூட்டை நெல் என்ற கணக்கில் நிலத்தை வாசு நாயகரிடம் குத்தைக்கு விட்டிருந்தார் பழனிச்சாமி. மூட்டைக்கு இன்ன ரேட் என்று பழனிச்சாமி வந்ததும் எண்ணி வைத்துவிடுவார் வாசு நாயகர். நேர்மை, நாணயம் இவற்றையெல்லாம் அவர் நம்பி வந்தார்.

"கொஞ்ச நாள் கழிச்சு வித்தா கொஞ்சம் வெல ஏறும்'' அபிப்ராயம் சொன்னார் வாசு.

"எங்க ஏறுது? எங்கப்பன் காலத்துல இருந்த மாதிரிதான் இருக்குது''

"உம்..'' என நின்று மறுத்துவிட்டு, மேற்கொண்டு நடந்தார். ""உங்கப்பா காலத்துல ஒரு செண்ட் ஏழு ரூபா... இப்ப என்ன வெல தெரியுமா?''

"எவ்ளோ?''

"எர் நூர் ரூபா''

"ஒரு செண்ட்டா?''

"ஆமா..'' என்றார் ரகசியம்போல்.

பழனிச்சாமி இவ்வளவு எதிர்பார்க்கவில்லை. ஒரு ஏக்கரும் பத்து செண்டும்... நூற்றிப்பத்து செண்ட்டுகள்... இருபத்தி ரெண்டாயிரம். சேட்டிடம் இருபதாயிரம். கொஞ்சம் நகை விற்கலாம். சொந்தமாக ஆட்டோ வாங்க போதும்...

"வருஷத்துக்கு நாலுமூட்டை... ஆட்டோ வாங்கினா கேரண்டியா டெய்லி நூர் ரூபா நிக்கும் கைல''

"வாஸ்தவம்தான். ஆனா நிலத்துக்கு மதிப்பு ஏறிக்னே இருக்குதே? ஆட்டோ அப்படி ஏறுமா?''

"இப்ப பொழைக்கறது எப்படி? வெல ஏர்றத பாத்துக்னு இருந்தா வயிர் ரொம்பிடுமா?''

பழனிச்சாமி இப்படிக் கேட்டுவிடவே வாசு நாயகர் மேற்கொண்டு பதில் சொல்வதற்குக் கொஞ்சம் யோசித்தார்.

"விக்கறதால எனக்கொன்னும் இல்ல... வேணும்னா நாளைக்கேகூட ஏற்பாடு பண்றேன். ரோட்டுமேல இருக்கிற நிலம். இப்பவே கம்பெனிகாரனுங்க வந்து கேட்டுட்டுப் போறானுங்க. ஐநூர் ரூபா வெல வித்தாதான் குடுக்கறதுனு ஊரே ஸ்ட்ராங்கா இருக்குது. உங்ககிட்ட இப்ப இருநூர் ரூபாய்க்கு வாங்கி அடுத்த வருஷம் ஐநூர் ரூபாக்கு வித்தா நாளைக்கு ஏண்டா சொல்லலன்னு கேட்றகூடாது. அதுக்குத்தான் சொல்லிட்டேன் ''

பழனிச்சாமி யோசித்தார்.

"கேரண்டியா அடுத்த வருஷம் ஐநூறு விக்கும்னா காத்துக்குனு இருக்கலாம்''

"விக்கும்''

மோசமான முள்வேலிகளைக் கடந்து ஏறி நின்று ""ஆட்டோ எவ்ளோ?'' என்றார்.

"அம்பதாயிரம் வெச்சா அருமையான வண்டி''

"இப்ப வித்தா அவ்ளோ வராதே?''

"அஞ்சு பைசா வட்டிக்கி சேட்டு கிட்ட கேட்ருக்கேன்''

"வட்டிக்கிலாம் வாங்கி என்னாத்த பண்ணுவே? வேணாம்.. வேணாம். கொஞ்சம் பொறுத்து விக்கலாம். நல்ல வெலவந்தா நானே சொல்றேன்''

பழனிச்சாமி பேசவில்லை. அப்போது ஆட்டோ விலையும் ஏறிவிடுமா? என்ற யோசனை.

ஏரிக்கரையின் பனைமர வரிசையில் ஒருவன் வெளிப்பட்டான்.

"ரெண்டு பேருக்கும் குட்றா'' என்றார் வாசு அவனைப்பார்த்து.

புதரில் முப்பத்தைந்து லிட்டர் கேனில் இருந்து ஒரு தகர டப்பாவில் ஊற்றி ஆளுக்கொரு டம்ளர் நீட்டினான்.

பழனிச்சாமி, "எவ்ளோ?'' என்று பாக்கெட்டில் கையைவிட்டவாறு கேட்டார்.

"ரெண்டு பேருக்கும் சேத்து எட் ரூபா''

"உறையே மூன் ரூபாதான்'' என்றார் பழனி.

"சாப்டீங்களே.. இது எப்பிடி? ஒறை எப்படி?''

"நீயே காச்சுவியா?''

"காச்சுவேன். அதுக்கெல்லாம் கொஞ்சம் துட்டு வேணும். வாங்கியாந்து விக்றேன்''

"காச்சறதுனா எப்பிடி?'' ஆர்வமாக விசாரித்தார் பழனி.

"வேணாம் சார். அதெல்லாம் சொன்னா வெறுத்துடுவீங்க''

"அட சொல்லுப்பா... இனிமேபட்டு நா எங்க வெறுக்கறது?''

கொஞ்சம் தயங்கி "இன்னா ரெண்டு மூட்டை வெல்லம். அழுகல் பழம் ஒரு புட்டுக்கூடை. அப்புறம் பாமா பாஸ் அரை மூட்டை'' என்று சொல்லிக் கொண்டு போனான்.

"அடப்பாவி பயிருக்கு வாங்கி போட்ற மாதிரி இருக்குதே'' என்றார் வாசு.

"பழனி, பாமா பாஸýனா என்ன?''

"பயிறுக்குப் போட்ற மருந்து. பாஸ்பேட்டு..''

"சொல்லாதப்பா... போலிஸ் பிரச்னைலாம் எப்பிடி?''

"காச்சும்போது வந்தா அம்பதோ நூறோ வாங்கினு பூடுவான்''

"புடிக்கமாட்டானா?''

"அதெப்படி புடிச்சுடுவான்? அவனை வெட்டி அடுப்புல போட்ற மாட்டாங்களா?''

பழனிச்சாமி சிரித்தார்.

"ஒருவாட்டி உள்ள தள்ளி இடி இடினு இடிச்சாத்தான்டா புத்திவரும்'' என்றார் வாசு பெருமிதமாகச் சிரித்துக் கொண்டே.

"துன்றதுக்கு எதனா இருக்குதா?'' என்று விசாரித்தார் பழனி.

"இருக்குது. உங்களுக்கு அதெல்லாம் வேணாம்'' என அவனே நல்லெண்ணம் கருதி தவிர்த்தான். தூரத்தில் கூர்ந்து பார்த்துவிட்டு "உங்க வாய் முகூர்த்தம் பலிச்சுடுச்சு. இன்னிக்கு இன்னா கிழம?'' என்றான் வாசுவை.

"புதன்கிழம''

"இன்னிக்கி எதுக்கு வரான் போல்சு?''

"போலீசா? எதா வர்றான்?'' என்றார் பழனி.

"வர்ற சனிக்கிழமதான் மாமூல். இன்னிக்கும் வர்றாம்பாரு...''

"சரி நாங்க வர்றோம்'' என்று இருவரும் நடந்தார்கள். ""எங்க போலீஸ் காணமே?'' என்றார் பழனி.

"நம்ம கண்ணுக்கெல்லாம் தெரியாது. இதே லைன்ல இருக்கவனுக்குத்தான் அதெல்லாம் தெரியும்''

ஆட்டோ ஓட்டும் போதுதான் எப்.சி. பண்ணிட்டியா, டாக்ஸ் கட்டிட்டியானு உயிரெடுப்பானுங்க. இங்கே கூடவா? என்று நினைத்துக் கொண்டே நடந்தார்.

"போலீஸ் மேலயே மரியாதை போய்ட்து'' என்றார் பழனி.

"இன்னா பண்றது ஏதோ இல்லாத கொறைதான் அவனுக்குத் தேவையான்து கெடச்சிட்டா ஏன் இப்டி பண்றான்? திருடங்கூட எதுக்காகத் திருட்றான்?'' என்று கடைசியில் ஒரு கேள்வியைக் கேட்டார், போலீûஸத் திருடனுக்கு ஒப்பிடும் பிரக்ஞை இல்லாமலேயே.

(தொடரும்)

LinkWithin

Blog Widget by LinkWithin