ஞாயிறு, மே 09, 2010

சேலத்தில் தமிழ்மகனின் வெட்டுப்புலி!

சேலத்தில் நடைபெற்ற வெட்டுப்புலி விமர்சனக்கூட்டத்தில் நண்பர் சிவராமன் எழுதி அளித்த விமர்சனம்.
அனைவருக்கும் வணக்கம்.

இப்படியொரு வாய்ப்பு அமைந்தது தற்செயல்தான் என்றாலும் மனம் முழுக்க நிரம்பி வழியும் துக்கத்தை எந்த சொற்களாலும் விளக்கிவிட முடியாது.

ஆமாம். வெட்டுப்புலி குறித்து பேச வந்திருக்கிறேன்.

வெட்டப்பட்ட புலியின் சரித்திரத்தை பேச வந்திருக்கிறேன்.

இன்னும் 10 நாட்களில் நினைத்துப் பார்க்க முடியாத அழிவின் சோகம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது. இந்தத் தருணத்தில்தான் வெட்டுப்புலி குறித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதிலும் தமிழனால் வெட்டப்பட்ட புலி அது என்பது அழுத்தம்திருத்தமாக குறிப்பிட வேண்டிய விஷயம்.

தலைமுறை தலைமுறையாக வெட்டுப்பட்ட புலியின் சோகத்தை, தீரத்தை, சரித்திரத்தை, சறுக்கலை நாம் கடத்தித்தான் ஆக வேண்டும். ஒரு இனத்தை உயிர்ப்பிக்கும் விஷயமாக அதுவே இருக்கும்.

என்னடா இது... இவன் நாவலை குறித்து பேசாமல் வேறு எதையோ பேசுகிறானே... அதுவும் அரசியல் சார்ந்ததாக இருக்கிறதே... கூட்டத்தில் கலகம் உண்டாக்குவதுதான் இவன் நோக்கமா...

என்று நீங்கள் நினைக்கலாம்.

நினைக்க வேண்டும்.

காரணம், நான் பேசுவது வெட்டுப்புலி நாவல் குறித்து என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை -

ஆரம்பத்தில் நான் பேசியதை வைத்து உங்கள் மனதில் எழுந்த எண்ணங்களும், பிம்பங்களும்.

இது அரசியல் நாவல். ஒரு இனத்தின் தலையெழுத்தையே மாற்றிய ஒரு இயக்கத்தின் வரலாற்றை சொல்லியும், சொல்லாமலும் செல்லும் நாவல். சொல்லப்பட்டதை வைத்து சொல்லப்படாததை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். நிரப்ப வேண்டும் என்பது இந்நாவல் உணர்த்தும் அழுத்தமான செய்தி. அதனால்தான் சாதாரண குடும்பங்களின் வழியே அசாதாரணமான 75 ஆண்டுக் கால சரித்திரம் எழுத்துக்களாக இடைவெளியுடன் கோர்க்கப்பட்டிருக்கிறது.

இறுதி அத்தியாயத்துக்கு முந்தைய அத்தியாயத்தின் இறுதி பத்தி வெட்டுப்பட்ட ஒரு முகத்தின் மீது திரும்பத் திரும்ப மீடியாக்களின் வழியே மக்களின் கவனம் குவிக்கப்பட்டதை சொல்கிறது. அது நம்பிக்கை அளித்த முகம். ஓர் இனத்தின் குறியீடு. சுதந்திரத்துக்கான விதையாக அந்த முகத்தை பலரும் பார்த்தார்கள். நேசித்தார்கள். வழிபட்டார்கள். அந்த முகம் ஒருபோதும் வெட்டப்படும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால், அந்நிகழ்வு நடந்துவிட்டது. அது கொடுத்த அதிர்ச்சி நடராஜனை அழ வைக்கிறது. பல ஆண்டுகளாக நினைவிழந்து பித்துப் பிடித்தது போல் காணப்பட்ட அவனுக்கு நினைவு திரும்பியது... தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்ட அந்த வெட்டுப்பட்ட முகத்தை பார்த்தபோதுதான்.

இதனையடுத்து நாவலின் இறுதி அத்தியாயம், மு.க.அழகிரி மத்திய அமைச்சராவது குறித்து சொல்கிறது.

உண்மையில் நாவல் ஆரம்பமாவது இந்த இடத்திலிருந்துதான். இங்கிருந்து தொடங்கும் நாவலை எழுதும் பொறுப்பு வாசகர்களிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாவல் வெற்றியடையும் பொறி இதுதானா?

வெட்டுப்புலி (Cheeta Fight) தீப்பெட்டியை நாம் பார்த்திருப்போம். சிறுத்தையை ஒரு மனிதன் நேருக்கு நேர் நின்று அரிவாளால் வெட்டும் படத்தைக் கொண்ட தீப்பெட்டி அது. எதற்காக அப்படியொரு படத்தை தீப்பெட்டியில் அச்சிட்டிருக்கிறார்கள் என்று நான் இதுவரை யோசித்ததில்லை. ஒரு கம்பீரத்துக்காக அப்படி வரைந்து பெட்டியில் பொறித்திருக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், அது தமிழ்ச்செல்வனின் தாத்தாவின் பெரியப்பா - அதாவது கொள்ளுத் தாத்தாவின் - நிஜமான புகைப்படம் என்று அறிந்தபோது பிரபாஷ், ஃபெர்னாண்டஸ் போலவே எனக்கும் ஆச்சர்யமும், பதட்டமும் ஏற்பட்டது.

அதனாலேயே தமிழ்செல்வன் தன் கொள்ளுத்தாத்தாவின் வரலாற்றை தேடி பயணப்பட்டபோது அவனது மூன்றாவது நண்பனாக நானும் எனது வேலையை எல்லாம் விட்டுவிட்டு பயணம் செய்தேன். அதற்கு காரணம் இருக்கிறது.

சிறுத்தையை - கவனிக்க நான் மட்டுமல்ல தமிழ்ச்செல்வனும் புலி என்று குறிப்பிடவில்லை - கத்தியால் வெட்டிய சின்னா ரெட்டி உண்மையில் தமிழ்ச்செல்வனின் அப்பா வழி சொந்தமல்ல. அம்மா வழி சொந்தம்.

இந்த உண்மை தமிழ்ச்செல்வனை மட்டுமல்ல, என்னையும் திடுக்கிட வைத்தது. மனதளவில் ஏற்பட்ட நெகிழ்வில் சட்டென்று தமிழ்ச்செல்வனின் தோள் மீது ஆதரவாக கைபோட்டேன். அவன் என் இனம். தாய்வழி சமூகத்தை தேடி புறப்படும் ஆதித் தமிழனின் வேர் என்னைப் போலவே அவனிடமும் இருக்கிறது.

நாங்கள் கை கோர்த்தபடி சின்னா ரெட்டியின் வரலாற்றை அறிய புறப்பட்டோம். எங்கள் கண்முன்னால் விரிந்தது இரு குடும்பங்களின் கதை. அந்தக் கதையினுள் நான் நுழைய நுழைய எனக்குள் உணர்ச்சிப்பூர்வமான மாறுதல்கள்.

ஓவென்று அலறி தமிழ்ச்செல்வனை கட்டிப் பிடித்து நான் கதறியதை பிரபாஷும், ஃபெர்னாண்டஸும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். தமிழ்ச்செல்வனாலேயே என்னுள் நிகழ்ந்த மாற்றங்களை புரிந்துக் கொள்ள முடியாதபோது மற்ற இருவரால் எப்படி உணர முடியும்?

உண்மையில் நாங்கள் அறிந்தது தமிழ்ச்செல்வனின் தாய்வழி கொள்ளுத் தாத்தாவின் வரலாற்றை அல்ல. எனது கொள்ளுத் தாத்தா, தாத்தா, மாமா, பெரியப்பா, பெரியம்மா... என சகலரின் சரித்திரமும் அதில் அடங்கியிருக்கிறது. ஆமாம், இது என் குடும்பத்தின் கதை...

இப்படி இக்கதையை வாசிக்கும் ஒவ்வொருவருமே உணர முடியும் என்பதுதான் இந்நாவலின் பலம்.

தமிழக அரசியலோடு நம் ஒவ்வொருவரின் குடும்பமும் பிணைக்கப்பட்டிருக்கிறது. சின்னா ரெட்டி, லட்சுமண ரெட்டி, தசரத ரெட்டி, நடராசன், தியாகராசன், ஹேமலதா, விசாலாட்சி, நாகம்மை... என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்கிறார்கள்.

இந்நாவல் சொல்லப்பட்ட முறையிலும் சரி, சொன்ன களனிலும் சரி... புதிதாக இருக்கிறது. சென்னை குறித்த தமிழ்ப் புனைகதைகள் திருவல்லிக்கேணி, தங்கச்சாலை, மயிலாப்பூர் மிஞ்சிப் போனால் பட்டாளம், ஓட்டேரி என குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றியபோது -

இந்நாவல் செங்குன்றத்துக்கு அடுத்துள்ள சோழவரம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் வாழும் மக்களைக் குறித்து பதிவு செய்துள்ளது. சென்னையின் குடிநீர் விநியோகத்துக்காக வெள்ளையனிடம் தங்கள் நிலத்தைப் பறிகொடுத்ததோடு, பிழைப்புக்காக தன் நிலத்தை தானே வெட்டும் குடிமக்களின் சோகத்தை இந்நாவல் கண்ணீருடன் பதிவு செய்திருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் இந்திய விடுதலைக்கு ஆதரவான காங்கிரசும் அதனை இன மற்றும் மொழி ரீதியாக விமர்சித்த நீதிக்கட்சியும் செல்வாக்கு பெற்றிருந்தன. நீதிக்கட்சி பின்னர் பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கமாகியது. இந்த நெடிய வரலாறு... இந்நாவலில் உயிர் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாபத்திரத்துடனும் பின்னிப் பிணைந்திருக்கிறது.

பெரியார், அண்ணா, கலைஞர் மட்டுமல்ல... எம்.ஜி.ஆர்., ரஜினியும் இந்நாவலில் வருகிறார்கள். 'எண்டர் தி டிராகன்' ஏற்படுத்திய அதிர்வை கனவுகள் உதிரும் கட்டமாக நாவல் மாற்றியிருக்கிறது.

பாலச்சந்தரை குறித்து தியாகராசன் பொருமும் இடம் அழுத்தமானது என்றால் -

கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை அளித்த பாஸ்கரனை 'வண்ணத்திரை' அலுவலகத்தில் ரவி சந்தித்து பேசும் இடம் ஆழமானது.

'நாடார் குரல் மித்ரன்' நாளிதழில் வெளிவந்த பெரியார் குறித்த செய்தியை லட்சுமண ரெட்டி அறியும் கட்டமும், அ.ச.ஞானசம்பந்தத்தை விமர்சிக்கும் தியாகராசனின் செயலும், பெரியார்தாசனுடன் தேநீர் பருகும் நடராசனின் உள்ளக் கொந்தளிப்பும் -

எதை உணர்த்துகிறது? அதை ஒவ்வொரு வாசகனும் கண்டறியும்போது -

எழுதப்பட்ட பிரதிகளுக்கு அப்பால் அலைந்தபடி இருக்கும் வரலாற்றை சட்டென பிடிக்க முடியும்.

திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆறுமுக முதலி, டூரிங் டாக்கீஸ் கட்டியதுடன் நின்றுவிடுகிறார். ஆனால், அவரது மகன் சிவகுரு படம் தயாரிக்கிறான். அந்தப்படம் பாதியுடன் நின்றுவிடுகிறது. இறுதியில் கோயில் வாசலில் பிச்சைக்காரனாக சிவகுரு இறந்து போகிறான்.

வனஜா என்னும் நடிகையின் மீது சிவகுரு கொள்ளும் மையல், பின்னால் நடிகை செண்பகாவை ரவி முதன்முதலாக பேட்டி காண்பதுடன் தொடர்புடையது. செண்பகாவின் தாய் பெயர் வனஜா என்று போகிற போக்கில் பதிவான வாக்கியம் தமிழ்ச்செல்வன், பிரபாஷ், ஃபெர்னாண்டஸை மட்டுமல்ல நம்மையும் யோசிக்க வைக்கிறது. எழுதப்படாத வனஜாவின் கதையை - அவளது கனவை - வாசகன் இங்கு எழுத ஆரம்பித்தால் அவனுக்கு இன்னொரு நாவல் கிடைக்கும்.

இந்நாவலில் சில காதல் கதைகள் நுணுக்கமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. லட்சுமண ரெட்டி தாழ்த்தப்பட்ட பெண்ணான குணவதி மீது கொள்ளும் காதல், முதலாவதாக வருகிறது. இந்தக் காதலால் ஒரு சமூகமே எப்படி கருகிப் போகிறது என்பது உணர்ச்சியுடன் விளக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், வாசகனான என்னை மிகவும் பாதித்த காதல் தியாகராசன் - ஹேமலதா வாழ்க்கைதான். கடவுள் மறுப்பாளனாக வளரும் தியாகராசனுக்கு அமைந்த மனைவி தீவிர கடவுள் பக்தை. இந்த முரண்பாடுகள் அவர்களது வாழ்க்கையை எப்படியெல்லாம் கலைத்துப் போடுகிறது என்பது ரத்தமும் சதையுமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் மணிகண்டனுக்கு பிறந்த குழந்தையை தன் குழந்தையாக தியாகராசன் பாவிப்பதும், மருத்துவமனையில் தன் குழந்தையின் பெயராக தன் மாமியாரின் பெயரான புனிதாவின் பெயரை ஹேமலதா உச்சரிப்பதும் தனியாக எழுதப்பட வேண்டிய ஒரு நாவலின் ஹைக்கூ.

பிராமணப் பெண்ணாக இருப்பதாலேயே கிருஷ்ணப் ப்ரியாவின் காதலை ஏற்க மறுக்கும் நடராசன், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தேவகியை மணக்கிறான். ராஜீவ்காந்தியின் மரணத்தை தொடர்ந்து அவனுக்கு சித்தபிரமை பிடிக்கிறது. தொடர்ந்து பல ஆண்டுகள் சுயநினைவின்றி வாழ்கிறான். அப்போதும் தேவகி அவனுடனேயே வாழ்கிறாள். ஆண்டுக்கு ஒருமுறையாவது நட்பின் அடிப்படையில் கிருஷ்ணப் ப்ரியா அவனை பார்த்துவிட்டு செல்கிறாள்.

இந்தப் பகுதியை சற்றே வேறுவிதமாக வாசித்துப் பார்ப்போம். ஒருவேளை கிருஷ்ணப் ப்ரியாவை நடராசன் திருமணம் செய்துக் கொண்டிருந்தால் -

அவனுக்கு சித்த பிரமை பிடித்த நிலையிலும் அவனுடன் கிருஷ்ணப் ப்ரியா வாழ்ந்திருப்பாளா?

இந்தக் கேள்விக்கான விடையில் மறைந்திருக்கிறது 21ம் நூற்றாண்டின் கதை!

வயதான காலத்தில் மருத்துவமனையில் படுத்திருக்கும் லட்சுமண ரெட்டி முணுமுணுப்பது குணவதியின் பெயரைத்தானே? முதல் காதல் இறுதிவரை தொடரவே செய்யும் என்பது எவ்வளவு அனுபவப்பூர்வமான உண்மை?

திராவிட கழக அனுதாபியான லட்சுமணரெட்டி, தன் குடும்பத்தை சாதி மறுப்பு குடும்பமாக மாற்ற முடியாமல் தவிக்கிறார். தன் மகளுக்கு வேறு சாதியில் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பமே அனுமதி தர மறுக்கிறது. அப்போது அவருக்குள் நிகழும் போராட்டம், ஒரு தலைமுறையின் மனப்போராட்டம். அபசகுனம் பிடிச்ச பெண் என உறவினர்கள் குற்றம்சாட்டும் பெண்ணை விடாப்பிடியாக திருமணம் செய்து கொள்வதன் மூலமாக தனது கொள்கையை ஓரளவு காப்பாற்றிக் கொள்கிறார். அவரால் அந்தச் சூழலில் முடிந்தது அவ்வளவுதான்.

திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கியவர்கள் ஒரு கட்டத்தில் அன்னை, சாய்பாபா என்று மாறுவதை வாழ்க்கையின் போக்கிலேயே நாவல் உணர்த்துகிறது.

குறிப்பாக பெரியார், அண்ணா, கருணாநிதி... என ஆண்கள் உயிருள்ள தலைவர்களுக்கு பின்னால் அணி திரள்வதற்கு மாற்றாக -

வாழும் தெய்வங்கள் என சமூகத்தால் மதிக்கப்படும் மனிதர்களுக்கு பின்னால் அவர்களது குடும்பங்கள் அணி திரள்கிறது. இது அந்த குடும்ப ஆணை எதிர்க்க வேண்டும் என்பதற்காக செய்யும் செயல். அதனாலேயே அவன் யாரை மதிக்கிறானோ -

யாரது கோட்பாடுகளை பின்பற்ற துடிக்கிறானோ -

அதற்கு எதிரான பக்கத்துக்கு மூர்க்கத்துடன் செல்கிறார்கள்.

இந்த முரணுக்கு காரணம் எது?

அரசியல் தலைவர்களா?

இயக்கமா?

அல்லது சமூகமா?

வருங்கால தலைமுறை ஆராய வேண்டிய இந்த நிகழ்கால அவலத்தை பதிவு செய்திருக்கும் நாவலின் பகுதி, முக்கியமான விவாதத்தை முன் வைக்கிறது.

பத்து பத்து ஆண்டுகள் கொண்ட பாகமாக இந்நாவல் அச்சிடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பாகத்திலும் அந்தந்த காலத்தில் நடந்த அனைத்து அரசியல் நிகழ்வுகளும் பதிவாகியிருப்பதாக சொல்ல முடியாது. ஆசிரியரின் தேர்வு சார்ந்த விஷயங்களே நாவல் களத்தில் வருகின்றன. அதில் தவறும் இல்லை.

ஆனால், தேர்வு செய்யப்படாத அரசியல் நிகழ்வுகள் இருக்கிறதே... அது முக்கியம்.

அவை ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கான காரணமே, நமது இப்போதைய பிற்போக்குத்தனத்துக்கு காரணம்.

இதைதான் அழுத்தம் திருத்தமாக இந்நாவல் உணர்த்துகிறது.

இந்நாவலை எழுதிய தமிழ்மகனின் நண்பனாக -

சில வருடங்கள் அவருடன் ஒன்றாக பணிபுரிந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.

என் குடும்ப வரலாறாக சொல்லப்பட்ட நிகழ்வுகளின் வழியே அறியப்படாத உறவுகளின் சரித்திரத்தை நான் கண்டடைய உதவியதற்கு நன்றி நண்பா...

வாருங்கள்...

புலிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துவிட்டதற்காக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலைப்படும் இந்த நேரத்தில் -

வெட்டுப்புலியின் சரித்திரத்தை தெரிந்து கொள்வோம்...

வெட்டுப்புலி என்று இப்போது நான் குறிப்பிட்டது நாவலை மட்டுமல்ல....

-------

இன்று சேலத்தில் நடக்கும் 'சொற்கப்பல்' நாவல் விமர்சன அரங்கில் வாசிக்கப்பட உள்ள கட்டுரை இது. தவிர்க்க இயலாத காரணத்தால் என்னால் சேலம் செல்ல முடியவில்லை. ஆனால், கட்டுரையை அனுப்பிவிட்டேன். என் சார்பில் கட்டுரையை வாசிக்கும் நண்பருக்கும், வாய்ப்பளித்த 'சொற்கப்பல்' அமைப்பாளர்களுக்கும் நன்றி. 8-5-2010.

LinkWithin

Blog Widget by LinkWithin