திங்கள், அக்டோபர் 25, 2010

அமில தேவதைகள்


அத்தியாயம்-3


அறிவியல் குறுந்தொடர்

மகேஸ்வரி சொன்னதைத்தான் அங்கும் சொன்னார்கள். அபார்ஷன் பண்ணிக் கொள்வதற்காக வந்தாள். ஆனால் திடுதிப்பென்று சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டாள்.

கைனகாலஜி துறையின் தலைமை மருத்துவர் என அறிமுகப்படுத்தப்பட்ட கிழவி அனாவசியத்துக்கு எரிச்சலுற்றாள்.

"சரியான போதை கேஸ்.. இப்ப நாங்க மாட்டிக்கிட்டு முழிக்கிறோம். ஹாஸ்பிடல் பேரைக் கெடுத்துட்டா.''

""போதை கேஸ்னு எப்படி சொல்றீங்க?''

"அவ ரூம்ல சிரிஞ் ஒண்ணு கிடந்தது.. அதையெல்லாம் பத்திரப்படுத்தி எடுத்து வெச்சு வர்றவங்களுக்கெல்லாம் நிரூபிச்சிக்கிட்டு இருக்க முடியுமா?''

"சரி கடைசியா ஆஷாவைப் பார்த்தது யாருன்னு சொல்லமுடியுமா?''

"நான்தான் பார்த்தேன்.. ரூம்ல போய் இருக்கச் சொன்னேன்.''

ஹாஸ்பிடலில் இருந்து இன்ஸ்பெக்டரை அனுப்புவதில்தான் அவளுடைய கவனம் முழுவதும் இருந்தது.தங்கள் மருத்துவமனை சந்தேகத்திற்கான இடமாக மாறுவது அவளை சிரமப்படுத்திக் கொண்டிருந்தது. துல்லியமும் சுத்தமுமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக அவளுடைய நடவடிக்கைகள் இருந்தன. தேவையே இல்லாமல் தன் மேஜையை டிஸ்யூ பேப்பர் மூலமாக நான்காவது முறையாக சுத்தப்படுத்தினாள்.

"சிரிஞ் இருந்ததை யார் பார்த்தது?''

"நீங்க வீணா இங்க டயம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க''

"பரவாயில்ல'' என்றார் பெருந்தன்மையாக.

"நான் சொன்னது, எங்க டயத்தை.''

கருப்பசாமி "இவ்வளவு நேரம் எங்களுக்கு ஒத்துழைப்பு தராததற்கு ரொம்ப நன்றி'' என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு விருட்டென்று வெளியே வந்தார்.

"ஆஷா இதுவரைக்கும் வந்திருக்கிறாள். இங்கிருந்து புறப்பட்டுச் சென்றதும் காணாமல் போயிருக்கிறாள். சுமார் இருபது கி.மீட்டர் தூரம் வந்து ரகசியமாக அபார்ஷன் செய்து கொள்ள நினைத்தவள், திடீரென்று என்ன தீர்மானத்துக்கு வந்திருப்பாள்? வேறு யாராவது வந்து அழைத்துப் போயிருப்பார்களா? சுரேஷ்...? நிர்ப்பந்தித்திருப்பார்களா? சுரேஷைத் தவிர வேறுயாரையும் சந்தேகப்படுவதற்குத் தோன்றவில்லை.... அல்லது தெரியவில்லை.

சுரேஷ் தேறுகிற வரை காத்திருக்காமல் வீணாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோமா? ராமசாமி சந்தேகித்ததுதான் சரியா?

லிஃப்ட் பட்டனை அழுத்திவிட்டுக் காத்திருந்தார். கதவு திறக்கும் நேரத்தில் ஒரு வெள்ளுடை பணியாள் ட்ராலி ஒன்றைத் தள்ளிக் கொண்டு அவசரமாக நுழைந்தான்.

கதவு மூடிக் கொண்டது.

"சார், உங்ககிட்ட ஒரு தகவல் சொல்லணும்... அந்த சிரிஞ்சை எடுத்தது நான்தான்'' மீண்டும் கதவு திறப்பதற்குள் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற தவிப்பு தெரிந்தது அவனிடம்.

கருப்பசாமிக்குத் திகைப்பாகவும் மிகை ஆர்வமாகவும் இருந்தது. பயமுறுத்தாமல் தகவல் பெற வேண்டும் என்ற நிதானத்தோடு, "அது இப்ப உன்கிட்ட இருக்கா?'' என்றார்.

"இல்ல சார்.. அப்பவே குப்பைக் கூடைல போட்டுட்டேன்.''

"...''

"ஆனா.. கொஞ்ச நேரத்திலேயே அதைத் தேடிக்கிட்டு ஒருத்தர் வந்தாரு..''

"அதைத் தேடிக்கிட்டா?''

"ஆர் அண்ட் டி'ல வேல பார்க்கிற டாக்டர் சந்திரசேகர்.''

"ரிஸர்ச் டாக்டரா?'' மேற்கொண்டு ஆச்சர்யப்படுவதற்குள் லிப்ட் தரைத்தளத்துக்கு வந்துவிட்டது. "அவ்வளவுதான் சார் தெரியும். நான் வர்றேன் சார்'' என்று ஏதும் நடவாததுபோல முகத்தை வைத்துக் கொண்டு நகர்ந்தான்.

ரிஸர்ச் அண்டு டெவலப்மெண்ட் பிரிவில் வேலை பார்க்கும் ஒரு டாக்டர் ஆஷா பயன்படுத்திய சிரிஞ்சைத் தேட வேண்டிய அவசியம் என்ன? அது முக்கிய தடயமா? ஆஷா காணாமல் போனது இங்கிருந்து புறப்பட்டபோதா? அல்லது இங்கிருந்தபோதா?

லிஃப்டுக்குப் பக்கத்தில் இருந்த பித்தளைப் பலகையைப் பார்த்தார். தாம் போய் வந்த மாடியிலேயேதான் ஆர் அண்டு டி பிரிவு செயல்படுவது தெரிந்தது.

மறுபடி லிஃப்டைப் பிடித்து மேலே விரைந்தார்.

"சார்... சார்.. பேஷண்டெல்லாம் இந்தப் பக்கம் வரக் கூடாது'' ப்யூன் ஒருவன் தடுப்பதற்காக அவசரப்பட்டான்.

"நான் பேஷண்ட் இல்லை. போலீஸ்.. டாக்டர் சந்திரசேகரைப் பார்க்க வேண்டும்.''

பியூன், முதல் கட்டமாக எப்படி அனுமதி மறுப்பது என்று யோசித்துவிட்டு, காரணம் போதாமல் ""கொஞ்ச நேரம் இருங்க. கேட்டுட்டு வந்து சொல்றேன்'' என தயங்கியபடி போனான்.

சில நிமிடங்களில் திரும்பி வந்து ஒரு விண்ணப்பப் படிவத்தை நீட்டி, " இதை ஃபில் அப் பண்ணுங்க சார்" என்றான்.

வந்திருப்பவரின் பெயர், பார்க்க விரும்பும் நபரின் பெயர், பார்க்க விரும்பும் காரணம், பணியாற்றும் மருத்துவமனை, நோயாளி பற்றிய குறிப்பு, நோய் சம்பந்தமான விவரம் என்று விண்ணப்பம் கருப்பசாமிக்குப் பொருத்தமில்லாமல் இருந்தது.

பெயரை குறிப்பிட்டுவிட்டு, அருகிலேயே இன்ஸ்பெக்டர் என்று இடுக்கி இடுக்கி எழுதினார். பிறகு, பார்க்க விரும்பும் நபர் என்ற இடத்தில்.. ‘டாக்டர் சந்திரசேகர். நோயாளி பற்றிய குறிப்பு என்ற இடத்தில்... ‘ஆஷா காணாமல் போனது சம்பந்தமாக என்று எழுதினார்.

வாங்கிச் சென்ற ப்யூன் பந்து போல திரும்பி வந்து எரிச்சலாக சொன்னான்.. ""ஏன் சார் உயிர் எடுக்கிறீங்க.. ஆஷான்னா யாருனு தெரியாதுனு கத்தறார் சார். அவரு பெரிய டாக்டர் சார்.. தேவையில்லாம தொந்தரவு பண்ணா கோச்சுப்பாரு''

கருப்பசாமி நிதானமிழந்தார்.

"நீ டிஸ்டர்ப் பண்ணாத்தானே கோச்சுப்பாரு.. விடு நானே பண்ணிக்கிறேன்.'' ப்யூனை ஓரமாகத் தள்ளிவிட்டு உயரமான கண்ணாடிக் கதவை உதைத்துத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே சென்றவர் அதிர்ந்தார். எப்பேர்ப்பட்டவர்களையும் அந்த இடம் பணியச் செய்துவிடும்போல இருந்தது. பளிங்கு சுத்தமும் குபீரென்ற அமைதியும் அவரது ஆவேசத்தை சட்டென தணித்துவிட்டது. ஒரு அரை வட்டம் போல இடம். அதில் மூன்று கதவுகள் இருந்தன.

சந்திரசேகர் என்று குறிப்பிட்டிருந்த அறைக்கதவை நோக்கி நடந்தார். வெளியே தள்ளிவிட்டு வந்த ப்யூன் மீண்டும் உள்ளே நுழைந்து இன்ஸ்பெக்டரின் கையை முரட்டுத்தனமாகப் பிடித்துக்கொண்டு "சொன்னா கேளுங்க சார்.. இதுக்குள்ள யாரும் வரக் கூடாதுனு சொல்லியிருக்காரு சார்'' முகத்தில் மிரட்டலும் குரலில் கெஞ்சலுமாக கருப்பசாமியைப் பிடித்து இழுத்தான்.

கருப்பசாமி அவனை இழுத்தபடியே சந்திரசேகர் என்ற எழுத்திட்ட அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.

சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க செக்கச் சிவந்த டாக்டர் ஒருவர் "வாட் நான்ஸென்ஸ்'' என்றார்.

"ஆஷாவோட கொலை சம்பந்தமா உங்ககிட்ட கொஞ்சம் விசாரிக்கணும்'' கருப்பசாமி தீர்மானமாக கொலை என்றே சொன்னார்.

"ஆஷான்னா யாருன்னு தெரியாதுன்னு சொல்லி அனுப்பிச்சேனே.. உங்களுக்கின்னா மூளை கெட்டுப் போச்சா? நான் கமிஷனர் கிட்ட பேசறேன்..''

"ஆஷா உங்களுக்குத் தெரியலைன்னா பரவாயில்லை.. அவ ரூம்ல இருந்த சிரிஞ்சை ரொம்ப பத்திரமா எடுத்து வெச்சிருக்கீங்க.. அது ஏன்னு தெரிஞ்சுக்கணும்''

சந்திரசேகர் வினாடியில் மெல்லிய இழை திடுக்கிட்டதை கருப்பசாமி கவனித்தார். விரலைச் சுண்டி, ப்யூனை வெளியே போகச் சொல்லி சமிக்ஞை செய்தார்.

"சொல்லுங்க.. அந்த சிரிஞ்சை வெச்சு என்ன பண்ண போறீங்க'' அலட்சியமாகக் கேட்டார்.

"என்ன சிரிஞ்? எனக்கு ஒண்ணுமே புரியலை''

"நீங்களே உண்மையச் சொல்லிட்டா நல்லது.'' கருப்பசாமி தோராயமாகத் தன் விசாரணையை ஆரம்பித்தாலும் இடியாப்பச் சிக்கலில் கிடைத்த ஏதோ ஒரு நுனியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

சந்திரசேகர் கண்ணை மூடிப் பெருமூச்சு விட்டுக் கொண்டார். இண்டர்காமை அழுத்தி, "வேகமாக வா'' என்றார்.

சில வினாடிகளில்..

அதே அறையின் ஒரு சுவர் சட்டென்று விரிய, உடம்பெல்லாம் பச்சைப் பசேலென்ற அங்கி அணிந்திருந்த இருவர் வெளிப்பட்டு கருப்பசாமியைக் கேள்விக்குறியுடன் பார்த்தனர்.

சந்திரசேகர், "ஆஷா மர்டர் விஷயமா வந்திருக்காரு... இவரையும் பயன்படுத்திக்கிறதைத் தவிர வேறு வழியில்லை'' என அபிப்ராயம் தெரிவிப்பது போல சொன்னார்.

இரண்டு பசுமைக்காரர்களும் தீர்மானமாக கருப்பசாமியை நெருங்க, ஏதோ வில்லங்கமாக நடக்கப் போவதை உணர்ந்து வேகமாக எழுந்தார்.

சந்திரசேகர் "ரொம்ப அலட்டிக்காதீங்க.. அப்புறம் கஷ்டமாகிடும்.'' ஊசி போட்டுக் கொள்ள அடம்பிடிக்கும் குழந்தைக்கு அறிவுரை போல சொன்னார்.

கருப்பசாமி திரும்பிப் பார்க்க... சந்திரசேகர் கைகளில் துப்பாக்கியோடு தீட்சண்யமாக நின்று கொண்டிருந்தார்.

( தொடரும்)


LinkWithin

Blog Widget by LinkWithin