வெள்ளி, நவம்பர் 21, 2008

மொத்தத்தில் சுமாரான வாரம்

ஞாயிற்றுக்கிழமை

சுகமும், துக்கமும் மாதிரி குழாயில் தண்ணீர் வராத நாள், தண்ணீர் வருகிற நாள் ஆகிவிட்டது. தண்ணீர் வராத நாள்தான் சுகம். நிம்மதியாய்த் தூங்க முடிகிற நாள். அவசரஅவசரமாய் எட்டு மணிக்கெல்லாம் தூங்க முயன்று, அறைகுறையாய் நடு இரவில் விழித்து, ஏழு குடித்தனங்களுக்குள் போட்டியிட்டுப் பம்ப்பைப் பிடிக்க வேண்டிய அவசியமற்ற நாள்.

அதன்படி இன்று துக்கநாள்.

அதிகம் தூங்கிவிட்டோமோ எனப் பயந்து எழுந்து பக்கத்தில் படுத்திருந்தவளை உசுப்பிவிட்டு, விளக்கைப் போட்டதில், சமீபத்தில் பனிரெண்டு மணியாகியிருந்தது. கடிகாரத்தின் பக்கத்திலே காலண்டர். பனிரெண்டுதான் ஆகிவிட்டதே என நினைத்து, கையோடு கையாய் நேற்றைய நாளை "விசுக்' கென அலட்சியமாய் கிழித்...அட! சிவப்பு நிறத்தில் ஞாயிற்றுக்கிழமை மாயத்துளிராய் மகிழ்ச்சி. முதலிலேயே தெரியாமல் போனதே என்று இருந்தாலும், இப்படி எதிர்பாராத அதிர்ச்சியாய் அமைந்து போனதால் மகிழ்ச்சியோடு மகிழ்ச்சி. முதலிலேயே தெரிந்திருந்தால் மட்டும் என்ன செய்திருப்பான் என்று தெரியவில்லை.

"பம்ப்'பை அடிக்கிற சத்தம் இன்னமும் கேட்கவில்லை. இன்று நாம்தான் முதலில் அடிக்கப் போகிறோம் என்ற பேராசையோடு தயாரானான் கணேசன்.

மாலதி உசுப்பிவிட்டும் எழுந்திருக்காமல் இருந்தாள்.

"மாலு...''

"...ம்?'' என்றாள்.

"சீக்கிரம்''

"போய் "லைன்' போடுங்க வரேன்'' கனவுபோல் பேசிக்கொண்டிருந்தாள்.

"லைன்' லாம் தேவை இல்ல... இன்னைக்கி நாமதான் "பர்ஸ்ட்' ... இன்னும் யாரும் எழுந்துக்கல''

"டயம் இன்ன இப்ப?...'' என்று கடிகாரத்தின் பக்கம் தலையைத் திருப்பி கண்களைத் திறந்தாள்.

"பன்னெண்டுதான் ஆச்சி... அப்புறம் அட்சிக்கிலாம் படுங்க'' என்று போர்வையை இழுத்துப் போர்த்தியவள் போர்வையை அவசரமாய் தூர வீசினாள். போர்வையில் ஈரம்.

குழந்தை சில்லென்ற பரப்பில் தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்து அவனை வேறொரு இடத்தில் சுடச்சுடப் படுக்க வைத்துவிட்டு, "மூத்திரம் பேஞ்சிட்டு இருக்கானே... தூக்கி வேற இடத்தில் படுக்க வெச்சா என்ன?'' என்று முறைத்தான்.

"நா கவனிக்கலையே''

"கவனிக்க மாட்டீங்க.... அப்புறம் சளி புடிச்சா அவஸ்தைப் பட்றது யாரு...?''

"சரி...சரி ஜனங்க எழுந்துட்டா ரிஸ்க்''
எழுந்து புடவையை முழுவதுமாய் இடுப்பிலிருந்து எடுத்து மறுபடி கொசுவ ஆரம்பித்தாள். பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனை, "நீங்க போய் அடிங்க, வரேன்'' என்றாள்.
இரண்டு நாளைக்குமாகச் சேர்த்து இருபத்தைந்து குடங்களாவது அடிக்க வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை, அமாவாசை என்று விசேஷங்கள் வந்துவிட்டால், இரவோடு இரவாய் வீட்டைக் கழுவி, அண்டா, "பைலர்' என்று எடுத்துப் போட்டு துலக்க அதிகமாய் ஐந்து குடம்.
மூன்று குடம் அடிப்பதற்குள் மோகன்தாஸýம் அதற்கடுத்து லட்சுமிபதியும் வந்து "லைன்' போட்டுவிட்டு, ""யார் ஆட்சிக்கு வந்தாலும் நம்ம, நிலம மாறப்போறதில்ல'' என்று நடு இரவில் அரசியல் பேசினார்கள்.

"எங்க சார்... இருவரும் எம்ஜார் ஸ்டைல்ல அரசி குடுக்றேன், முட்டை குடுக்றேன்னு ஆரம்பிச்சிட்டாரே?'' என்றார் லட்சுமிபதி.

"கிருஷ்ணா ப்ராஜக்ட் விஷயமா, என்டியார் கிட்ட பேசியிருக்காரே... என்னமோ கிருஷ்ணா' "வாட்டர் வந்துட்டா பிரச்னை வுட்டுது...''

மோகன்தாஸ் ஆந்திரா பக்கமாகப் பிரச்னையைத் திருப்பினார்.

"தண்ணி பூண்டிக்கி வந்து, ரெட்ஹில்ஸ்ல லிங்க் பண்ணுவாங்க இல்ல சார்?...'' என்று கணேசன் தெரிந்த விஷயத்தையே சும்மானாலும் கேட்டு வைத்தான்.

"யெஸ்...யெஸ்... பூண்டில இருந்து "ரெட்ஹில்'ஸýக்கு ஆல்ரெடி கனெக்ஷன் இருக்குது... பட்' மோகன்தாஸ் அரசியல் விஷயங்கள் பேசும்போது இப்படியாகத் துண்டு, துண்டாய் ஆங்கிலம் பேசுவார். அப்போதுதான் தேர்ந்த அரசியல் நிபுணர் மாதிரி இருக்கும் என்று அவர் முடிவுடன் இருந்தார்.

கீதாவின் அம்மா ஒரு குடத்தைக் கொண்டு வந்து "லைன்ட போட்டுவிட்டுப் படுக்கப் போனார்.
கணேசனுக்கு மூச்சு முட்டி, வேர்த்துப் போய் மயக்கம் வருகிற கட்டத்தில் மாலதி, ""இந்தக் குடத்தோடு அவ்ளதான்'' என்றாள்.

"நீங்க உஷாரா எழுந்து சீக்கிரமா முடிச்சிட்டிங்க...'' என்று மோகன்தாஸ் அன்பாகப் பொறாமைப் பட்டார்.

அடுத்து மோகன்தாஸ் தம்பதியர் தண்ணீர் பணியில் ஈடுபட, மகேஷ் அம்மா குடவரிசையில் குடத்தைக் கொண்டு வந்து வைத்தாள்.

கணேசனும், மாலதியும் முழுவதுமாக விழித்துவிட்டிருந்தாலும், மறுபடி தூங்குகிற மாயையை ஏற்படுத்திக் கொண்டு, பம்பின் தாளலயத்தில் தூங்க முயன்றார்கள்.

வாசல் எப்போதும் காலையில் பரபரப்பாக இருக்கும். வலது புறம் வரிசையாய் மூன்று குடித்தனங்களும் இடது புறம் வரிசையாய் நான்கு குடித்தனங்களும் போக, இடையில் இருந்த நீளமான வெளி, வாசல் என்றழைக்கப்பட்டது. அதன் கடைசியில் வலது, இடது புற வீடுகளின் இடைப் பகுதியில் பாத்ரூமும் அதன் பக்கத்தில் துணி வைக்க, பாத்திரம் துலக்க என்று கொஞ்சம் இருக்கும்.

வாசலில் நெரிசலாய் இருந்தது.

யாராவது ஒருவர் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருப்பார்கள். குளித்துவிட்டுப் போகிறவர்கள், குளிக்கப் போகிறவர்கள், துணி காயப் போடுகிறவர்கள், பாத்திரம் கழுவுகிறவர்கள், முன் பக்கம் மீட்டர் "பாக்ஸ்' பக்கத்தில் சைக்கிளை நிறுத்துகிற இடத்தில் - கொஞ்சம் மண்ணெண்ணை எடுத்துப் போய் வைத்துக் கொண்டு சைக்கிளைத் துடைக்கிறவர்கள், அல்லது அதன் எதிரே கக்கூஸýக்கு "பக்கெட்'டை எடுத்துக் கொண்டு ஓடுகிறவர்கள் இப்படியாக இருக்கும் காலைப் பொழுது. சகலரும் எத்தனை மணிக்குத் தூங்க ஆரம்பித்திருந்தாலும் அல்லது தூங்கவில்லை என்றாலும் காலை என்பது இப்படித்தான் இருக்கும்.
பெண்களில் யாருக்கேனும் ஜவ்வரிசி வத்தல், முறுக்கு வத்தல் போடுகிற ஆசை ஏற்பட்டு விட்டால், அவ்வாசை உடனடியாய் அனைவருக்கும் பரவி, அடுத்தடுத்த நாட்களில் வாசலெல்லாம் வேட்டியாய், வேட்டியெல்லாம் வத்தலாய் பிழியப்படும். ஒரு வாரம், பத்து நாள் ஒரு கூத்துப் போல முடியும்.

வெய்யில் காலம் வந்து இவ்வளவு நாளாகியும் யாரும் அது பற்றி யோசிக்காததை ஒரு முறை லட்சுமிபதியும், கணேசனும் ரகசியமாய்ப் பேசிக் கொண்டார்கள்.

"என்னங்க ராஜேஷ் அம்மா... முடிஞ்சிட்ச்சா?'' என்று மாலதியைக் கேட்டுவிட்டு பக்கெட்டில் புடவையை அலசுகிறேன் பேர்வழி என்று மூர்க்கமாய், முக்கிமுக்கி எடுத்தாள் வசந்தியம்மா. - அதாவது வசந்தியோட அம்மா.

"ஒரு வேலையும் முடியலைங்க...'' என்று பச்சையாய் புளுகிவிட்டு, ""மார்க்கெட் போகும்போது கொஞ்சம் கூப்புடுங்க...'' என்றாள் மாலதி.

வசந்தி அம்மா ஒருவித சீரியலோடு "டி.வி.ல. திரைமலர் போயிடுமே...'' என்றாள்.

"திரைமலர் முடிஞ்சதும் போலாங்க''

"இன்னிக்கின்னா படம்?''

"சாயங்காலமா?'' என்று யோசித்து, "நல்லதங்காள்'' என்றாள் மாலதி.

"அட, இல்லங்க வேற இன்னமோ சொன்னாங்க... பாடும் பறவைகளோ, பறவைகள் பல விதமோ... என்னமோ ஒண்ணு. பறவைனு வரும்.''

"அதெல்லாம் புது படம்... இப்ப போடமாட்டாங்க'' என்று மாலதி உறுதியாய் மறுத்தாள்.
வசந்தியம்மா கொஞ்சம் சத்தமாய் "ஏங்க... முரளியம்மா...'' என்றழைக்க வீட்டு சொந்தக்காரியான அவள் தலையை மட்டும் வெளியே நீட்டி, "என்னதுங்க'' என்று கேட்டாள்.

"டி.வி.ல இன்னைக்கு இன்னா படம்?''

"மத்யானப்படமா? சாயங்காலப் படமா?''

"இன்னிக்கு ரெண்டு படமா?'' என்று வாசலே வியக்க, வேலைக்குப் போகிறவள் என்ற காரணத்தால் அவ்வளவாக வாசலில் வந்து அரட்டை அடிக்காத கீதா கூட உள்ளே இருந்து வெளிப்பட்டாள்.

"மத்யானம் சில நேரங்களில் சில மனிதர்கள், சாயங்காலம் ஏதோ சிவாஜி படம்...'' முரளியம்மாவின் வீட்டில்தான் டி.வி. இருந்ததால் எல்லோரும் தேவ வாக்காய் நம்பினார்கள்.

கீதா, லட்சுமிபதியைப் பார்த்து, "சில நேரங்களில் சில மனிதர்கள்'' ஜெயகாந்தன் எழுதின ஸ்டோரிதானே சார்?'' என்று வாசல் ஜனங்களிலிருந்து வித்தியாசமாய் டி.வி. மீது ஆர்வம் கொண்டாள்.

அவ்வளவெல்லாம் தெரிந்திராத லட்சுமிபதி, "காந்த் நடிச்சது...'' என்று சொல்லிவிட்டு பாத்ரூமில் புகுந்தார்.

டீ.வி. விஷயங்களால் உற்சாகம் புரண்டதால் எல்லோரும் ஜாலியான மன நிலையில் இருக்க, திரைமலர் வேறு நெருங்க, "ஒரு வேலையும் முடியலை'' என்று சலித்துக் கொண்டாள் வசந்தியம்மா.

மாலதி, "வசந்தி என்ன பண்ணுது?'' என்றாள்.

"எங்கன்னே தெரியலை... ஃப்ரண்ட் வூட்டுக்குப் போயிட்டு வரேன்னு போனாள். அவளை ஆறாவதோடு நிறுத்தில்லாம்னு பாக்றேன்....''

"அட படிக்கட்டும்... பத்தாவது வரைக்கும் படிக்க வைங்க'' என்று எல்லை வைத்தாள் மாலதி.

"ஒரு வேலைக்கும் பிரயோஜனம் இல்லீங்க?''

"படிக்கறதுக்குப் போயிருப்பா...''

"வேலைனாதான் படிப்பு ஞாபகம் வரும்... டி.வி. வைக்கட்டும்... எங்க இருந்தாலும் வராளா; இல்லையா? பாருங்களேன்''

"திரைமலர் எட்டுக்குத்தான...? எட்டாயிருக்குமே'' என்றபடி மாலதி உள்ளே போய் கடிகாரத்தைப் பார்த்து விட்டு வர, அதற்குள் முரளியம்மா வாசலுக்கு வந்து, "திரைமலர் போட்டாச்சு... ரஜினிது'' என்று சொல்லி விட்டு ஓட்டமாய் உள்ளே போனாள்.

வாசல் ஆவேசமாய் முரளி வீட்டில் நுழைந்தது.

"டி.வி.னா ஏன் இப்பிடி ஓட்றீங்க?'' என்று கேட்டபடி, டவலை முதுகின் மேல் விரித்துக் கொண்டு டி.வி. பார்க்கப் போனான் கணேசன்.


(தொடரும்)



கணையாழி- 1989
தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வானது

LinkWithin

Blog Widget by LinkWithin