வியாழன், மே 08, 2008

முன்னாள் தெய்வம்

சிறுகதை

தமிழ்மகன்


தூரத்தில் லாந்தர் விளக்கின் வெளிச்சம் மினுக், மினுக் என்று தள்ளாடியது.

"வர்றாங்க சாமீ. நீங்க போயி படுங்க'' என்றபடி இனி எல்லாம் சரியாகிவிட்டது என்பதுபோல், இடுப்பில் கட்டியிருந்த துண்டை உதறிக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டான் சுடலை. கோபத்தின் உச்சத்தில் இருந்தார் பெருமாள் ரெட்டியார். சுடலையின் இந்த சால்ஜாப்புக்கெல்லாம் சமாதானமாகி விடுகிற நிலையில் இல்லை அவர்.

"சவுட்டு மண்ணு ஓட்ட வேண்டிய நேரத்தில் சினிமா கொட்டாய்ல படம் பார்த்துட்டு வர்றானுங்களே... பொறுக்கலுங்க. வரட்டும்...''

லாந்தர் விளக்கு வெளிச்சத்தோடு, இப்போது மாட்டு வண்டி மணிச் சத்தமும் கேட்டது. மாட்டு வண்டி நிதானமாக வந்தது. அடியாட்கள் இரண்டு பேரும் வண்டியிலிருந்து இறங்கி, நடந்து வந்துகொண்டிருந்தனர். 'திருட்டுத்தனமா சினிமா பார்த்துட்டு வர்றவனுங்க இவ்வளவு பொறுமையா வரமாட்டாங்களே' கண்களைத் தீட்டிக் கொண்டு பார்த்தார் ரெட்டியார்.

"என்னடா லேட்டு?'' என்று கேட்டுக் கொண்டே மீண்டும் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு வண்டிக்கு எதிரே வந்து நுகத்தடியைப் பிடித்து வண்டியை நிறுத்தினான் சுடலை.

வண்டிக்காரன் பதட்டத்துடன் முன்னால் ஓடிவந்து, ""மண்ணெடுக்குற இடத்தில் சாமி சிலை கெடைச்சது ரெட்டியாரே'' என்றான்.

"என்னடா சொல்றே?'' வண்டியின் பின்புறம் சென்று ஒருவித பக்தி பயத்துடன் நோட்டமிட்டார் பெருமாள் ரெட்டியார்.

உத்தேசமாக மூன்றடி உயரமுள்ள கருங்கல் சிலை . அம்பாள்! "ஆத்தா' என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்... "கீழ் எறக்கி வையுங்கடா... டேய் இந்த இடத்தைச் சுத்தமா பெருக்குங்கடா'' படபடவென கட்டளையிட்டார் ரெட்டியார். ""வீடு கட்ட ஆரம்பிச்ச நேரம்... ஆத்தா என்னைக் கோயில் கட்ட ஆணையிட்டிருக்கா'' என்று அவருக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டார்.

"இல்ல ரெட்டியாரே... புது வாயல்காரனுங்க எங்க ஊர் எல்லைல தான் சிலை கிடைச்சது. அதனால இது எங்களுக்குத்தான் சொந்தம்னுட்டாங்க. நான் விடல "இது ரெண்டு ஊரு எல்லை. இது எங்களுக்குத்தான் சொந்தம்'னு சொல்லி எடுத்துக்கிட்டு வந்துட்டேன். அவனுங்க பெரிய மனுஷங்களோட புறப்பட்டு வர்றோம்னு சொல்லியிருக்கானுங்க.''

"விடக்கூடாது ரெட்டியாரே'' என்று ஆவேசமாகக் குரல் கொடுத்தான் சுடலை.

அம்பாள் சிலையை இப்போதைக்குப் பிள்ளையார் கோவிலிலேயே வைத்திருப்பதென்றும் வருகிற சம்பா பட்டத்துக்குள் அம்பாளுக்குத் தனியாகக் கோவில் கட்டுவதென்றும் ஊரின் பெரிய தலைக்கட்டுகள் ஐந்தாறு பேர் முடிவெடுத்து முடிப்பதற்கும் புதுவாயல்காரர்கள் ஜலஜலவென்று இரண்டு மாட்டு வண்டியில் வந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது.

வீட்டுத் திண்ணையிலேயே ரெண்டு ஜமுக்காளத்தை விரித்துப் போட்டு வந்தவர்கள் அனைவரையும் உட்காரச் சொன்னார்.

புது வாயல்காரர்கள் சார்பாக மாரியப்ப ரெட்டியார் பொறுமையாகப் பேசினார். "சிலை கிடைச்சது எங்க ஊரு எல்லைல. ஏதோ பெருமாள் ரெட்டியார் படியாளுங்களாச்சேன்னு வம்பு பண்ணாம கொடுத்தனுப்பிச்சோம்.''

"இப்ப என்னாங்கறீங்க?'' என்றார் பெருமாள் ரெட்டியார்.

"எங்க ஊரு எல்லைல கிடைச்சது எங்களுக்குத்தான் சொந்தம்னு சொல்றோம்.''

"மொதல்ல அது உங்க ஊரு எல்லை இல்லை. ரெண்டு ஊருக்கும் பொது எல்லை. பொறம்போக்கு நிலம். நாங்க மண்ணெடுக்கும்போது கிடைச்சிருக்கு... ஆத்தா எங்க ஊருக்கு வரணும்னு விருப்பப்பட்டிருக்கா. இல்லாட்டி போன வாரம் முழுக்க பள்ளிக்கூடம் கட்ட உங்க ஊருக்கு மண்ணெடுத்துக் கிட்டிருந்தீங்களே... அப்ப கிடைச்சிருக்க மாட்டாளா?'' கூர்மையாக ஒரு கேள்வியைப் போட்டார் பெருமாள் ரெட்டி.

இதே விஷயத்தை இரு தரப்பினரும் மூன்று மணி நேரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். பெருமாள் ரெட்டியாரின் சம்சாரம் அந்த இரவு நேரத்திலும் ஒரு அண்டா நிறைய காபி போட்டுக் கொண்டு வந்து கோயிலுக்குப் பக்கத்தில் வைத்தாள்.

"டேய் சுடலை ... எல்லாருக்கும் காபி குடுடா''

மாரிமுத்து ரெட்டியார் ரோஷமாக, "காபி இருக்கட்டும். இதுக்கு ஒரு நியாயத்தைச் சொல்லுங்க...'' என்றார்.

இந்த நேரத்தில்தான் ஒருவிதமாக முறுக்கிக் கொண்டு, கண்களை அகல விரித்துக் கொண்டு நிற்க முடியாமல் ஆடினான் சுடலை.

`'டேய் சுடலை'' என்று அவனை உசுப்பினார் பெருமாள் ரெட்டியார்.

"டேய்... பொன்னியம்மாடா நானு... உங்களையெல்லாம் எல்லைல நின்னு காக்கறதுக்காக வந்தேன்டா... டேய் ரெண்டு ஊருக்கும் எல்லைல எனக்குக் கோயில் கட்டுங்கடா...'' சுடலை மீது சாமி வந்திருப்பதை ஒரு வினாடி தாமதத்தில் புரிந்து கொண்ட அனைவரும் கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

ஊர் எல்லையில் கோயில் கட்டுவதில் இரு தரப்பினருக்குமே மாற்று கருத்து இல்லை. புதுவாயல்காரர்களும் சந்தோஷமாகக் காப்பி குடித்துவிட்டுக் கிளம்பினர்.

"டேய் சுடலை, உம்மலே சாமி வருமா?'' என்று விசாரித்தார், பெருமாள் ரெட்டியார்.

"இதுதான் முதத் தடவை ரெட்டியாரே!""

அடுத்த தடவைகளில் தேர்ந்த சாமியாடி ஆகியிருந்தான் சுடலை. ஊர் எல்லையில் பொன்னியம்மன் கோயில் கட்டி முடித்ததும் 5 நாள் திருவிழா. கோவிலுக்கு ஆடு, கோழி பலியிடக்கூடாது என்று சாமியாடி அறிவித்ததுகூட சுடலைதான். ஆத்தாவுக்குக் காவு கொடுப்பது பிடிக்காமல் போனதில் ஜனங்களுக்குச் சின்ன ஏமாற்றம் இருந்தாலும் சுடலை மேல் வந்து சொல்லிவிட்டாளே என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.
திருவிழாவில் முதல் நாளன்று பொங்கல் பானைகளோடு ஊரே திரண்டு நின்றது. உடம்பெல்லாம் மஞ்சளும், குங்குமமுமாக ஆவேசமாக இருந்தான் சுடலை. உடுக்கையின் லயத்துக்குத் தலையைச் சுழற்றி சுழற்றி ஆடிக் கொண்டிருப்பது சாமானிய வேலையாக இல்லை. இயல்பாகவே அவன் திடகாத்திரமானவன். ஒரு கையில் வேப்பிலைக் கொத்தும், இன்னொரு கையில் பிரம்பும் வைத்துக் கொண்டிருந்தான் சுடலை. பம்பை, உடுக்கைக்காரர்களும் அவன் முன்னே செல்ல ஊரே எல்லைக் கோயிலுக்குத் திரண்டது.

எல்லையை நெருங்க, நெருங்க எதிர் திசையில் இருந்து இன்னொரு உடுக்கைச் சத்தமும் கேட்டது. புதுவாயல்காரர்களும் பொங்கல் வைக்க வந்து கொண்டிருந்தனர். எந்த ஊருக்கு முதல் மரியாதை என்பதுபோல் கூட்டத்தினுள் பேச்சு எழுந்தது. இந்த நேரத்தில் சற்றும் எதிர்பார்க்காத விதமாக சுடலை, எதிரே வரும் கூட்டத்தை நோக்கி ஓட ஆரம்பித்தான். சுதாரித்து அவனைப் பின் தொடரக்கூட முடியவில்லை. அப்படியொரு ஓட்டம்.

புதுவாயல் சார்பாகச் சாமியாடிக் கொண்டு வந்தவனை உலுக்கிப் பிடித்து ""யாருடா நீ? சாமின்னு சொல்லி ஊரை ஏமாத்தறயா?... உன்னை...'' தலைமுடியைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றி கையில் இருந்த பிரம்பால் விளாச ஆரம்பித்தான்.

இரண்டு ஊர் மக்களும் திகைத்துப் போய்விட்டனர். இப்படியும் நடக்குமா என்றிருந்தது இரு தரப்பினருக்கும். விளாசிய விளாசலில் கதிகலங்கிப் போய் ஒரு ஓரமாக நின்று விட்டான். புதுவாயலுக்காகச் சாமி ஆடிக் கொண்டு வந்தவன்.

"பொன்னியம்மா இங்கே இருக்கேன்டா... எவனாவது ஏடாகூடமா பண்ணீங்க.... தொலைச்சுருவேன்...''
புதுவாயல் சார்பாக மாரிமுத்து ரெட்டியார் இரண்டடி முன்னே வந்து "மன்னிச்சிடு தாயே'' என்று கற்பூரத்தை ஏற்றி சுடலையின் உள்ளங்கையில் வைத்தார். தகதகவென எரியும் கற்பூரத்தோடு மூன்று முறை சுற்றி வாய்க்குள் போட்டுக்கொண்டான் சுடலை. அதற்குப் பிறகு, யார் மீதும் பொன்னியம்மா சாமியாட வருவதில்லை.

அடுத்த 25 வருஷத்துக்கு பொன்னியம்மா என்றால் அது சுடலை என்று ஆகிவிட்டது.
பெரிய குங்குமப் பொட்டு, உடம்பெல்லாம் விபூதி என மணம் வீசும் மனிதனாகிப் போனான் சுடலை. உழுவதும் மருந்தடிப்பதும், களையெடுப்பதும் அவனுக்கு உகந்த தொழிலாக இல்லாமல் போனது. கோயில், கும்பாபிஷேக வேலைகள், நன்கொடை வசூல் என்று ஒருவித அறப்பணியில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டான்.
கோயிலுக்கு முன்னால் இருந்த புறம்போக்கு நிலத்தில் மின்சார வாரிய துணை மின்நிலையம் வந்ததும் கோயிலுக்கு மவுசு குறைந்து போனது. சப்}ஸ்டேஷன் வந்ததால் ஊருக்கு நிறைய பம்ப் செட் இணைப்பும் ரைஸ் மில்லும், சில கம்பெனிகளும் இயங்க ஆரம்பித்தன. கோயிலுக்கு இரண்டு பக்கமும் வரிசையாக ஃபேக்ட்டரிகள்.

காது குத்துவதற்குப் பிரார்த்தித்துக் கொண்டவர்கள் மட்டும் எப்போதாவது கோயிலுக்கு வந்தார்கள். சுடலையும் கோயிலுக்குச் சற்றுத் தள்ளியிருந்த ப்ளாஸ்டிக் பைப் செய்யும் கம்பெனியில் வாட்ச்மேனாகச் சேர்ந்து விட்டான். எல்லாம் மருமகள் வந்த ராசி!

கோயிலுக்குள் சீட்டாடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து சுடலை ஒரு சமயம் ஆவேசமாகச் சாமி வந்து ஆடியபோது, "இன்னா பெருசு... சும்மா இருக்க மாட்டியா?'' என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டனர். அதன்பிறகு சுடலை மீது சாமி வருவதில்லை.

பொன்னியம்மாளும் அந்தக் கோயிலை விட்டு வெளியேறிவிட்டதாகப் பேசிக் கொண்டார்கள்.

LinkWithin

Blog Widget by LinkWithin