வெள்ளி, அக்டோபர் 11, 2013

தமிழ்ச் சிறுகதை களஞ்சியம்

விகடன் பிரசுரத்தில் நான் தொகுத்த தமிழ் சிறுகதை களஞ்சியம் வெளியாகியுள்ளது. 100 ஆண்டு தமிழ் சிறுகதை உலகில் பல ஆச்சர்யமான சிறுகதைகள் உண்டு. அதில் பத்து ஆண்டுக்கு ஒரு கதை வீதம் தேர்வு செய்து 11 எழுத்தாளர்களின் திருப்புமுனை ஏற்படுத்திய 11 சிறுகதைகளைச் சொல்லியிருக்கிறேன். சிறுகதையின் வடிவம் குறித்து புதுமைப்பித்தன், க.நா.சு., தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுஜாதா, ஜெயமோகன் போன்றவர்களின் கருத்துகளைத் திரட்டித் தந்துள்ளேன். மிக முக்கியமான ஆவணமாக இருக்கும். புதிதாக எழுத வருபவர்களுக்கும், படிக்க வருபவர்களுக்கும் ஒரு முதல்படி. 
ப்னுவல் டாட் காம் அந்த நூலைப் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது.

'' ‘கதைகள்’ என்றாலே நம்மில் பலருக்கும் சுவாரஸ்ய உணர்வுகள் மேலெழுவது இயல்பு. அதிலும் சிறுகதை என்றால், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு திருப்புமுனைகள் அதில் நிறைந்திருக்கும் என்ற ஆர்வம் அநேகருக்கு உண்டு. கடந்த நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் தமிழ் வளர்த்தச் சான்றோர்களின் தலைசிறந்த சிறுகதையையும் சிறுகதை எழுத்தாளர்களையும் தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கும் இந்த நூல், வாசகர்களுக்கான சிறுகதைக் களஞ்சியம்! பாரதியார், வ.வே.சு. ஐயர், அ.மாதவையா, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு, இந்த நூல். தமிழால் இவர்கள் வளர்ந்தனர்; இவர்களால் தமிழ் வளர்ந்தது என்று உணரச் செய்கிறது. தமிழ் எழுத்தாளர்களின் பார்வையில் தமிழ்ச் சிறுகதைகள், சிறுகதைகளின் வகைகள், சிறுகதை எப்படி எழுதுவது, சிறுகதையின் அமைப்பு இருக்க வேண்டிய அலைவரிசை, சிறுகதைக்குரிய அளவு, சிறுகதை பிரிவுகள் என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சிறுகதை எழுத்தாளர்கள் வழியே கிடைத்த சிறப்பான பதில்களை பதிவு செய்திருக்கிறது இந்த நூல். சிறுகதையின் சாரத்தை முதலில் விளக்கி, பின்பு அதன் உயிரோட்டத்தை உணர்வுகள் மேலெழ விளக்கியுள்ளார் தமிழ்மகன். ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இருந்த மொழி நடையை அறிய இந்த நூல் உதவும். வாசகர்களின் நித்திரையைக் கலைத்த முத்திரைப் படைப்புகளை படிக்கும் ஒவ்வொருவருக்கும், சிறுகதைகளின் செழிப்பை இந்த நூல் தெளிவாக எடுத்துச்சொல்லும்.""



வியாழன், அக்டோபர் 03, 2013

இந்திய சினிமாவுக்கு வயது 100 தமிழ் சினிமாவுக்கு வயது 97



தாதா சாகேப் பால்கே மராட்டியத்தில் சினிமா எடுக்கத் தொடங்கிய நேரத்தில் தமிழகத்தில் சென்னையில் தமிழ் சினிமாவுக்கான அச்சாரம் போடப்பட்டது.
சென்னையில் முதல் படப்பிடிப்பை நடத்தியவர் நடராஜ முதலியார். சென்னை வேப்பேரியில் ஸ்டூடியோ. கீசக வதம் என்பது படத்தின் பெயர். மகாபாரதத்தில் கிளைக்கதை அது. 1916&ல் படம் தயாரிக்கப்பட்டது. அது ஒரு மௌனப்படம்.படத்தின் கதாபாத்திரங்கள் வாயசைக்கும் அதில் இருந்து ஒரு குரலும் வராது. ஊமைப்படம் என்பார்கள் கொச்சையாக.
பாஷையற்ற படம் என்றாலும் ஒரு தமிழர், தமிழ் நாட்டில் எடுத்த படம் என்பதால் தமிழ்ப்படம் என்றே அதைச் சொல்ல வேண்டும். இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மூன்பு பாபா சாகேப் பால்கே மராட்டியத்தில் இதே போன்ற பாஷைகளற்ற படங்களை 1913 முதல் தயாரிக்க ஆரம்பித்தார். அந்த நினைவைப் போற்றித்தான் இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையாக தமிழகத்தில்தான் இந்தியாவின் இரண்டாவது படம் தயாரிக்கப்பட்டது.
பொதுவாக தமிழில் வசனங்கள் உச்சரிக்கப்பட்ட படத்தையே முதல் தமிழ்ப்படம் என்று சொல்லி வருகிறோம். அந்த வகையில் 1931&ம் ஆண்டு வெளியான காளிதாஸ் படத்தை முதல் தமிழ்ப் படம் என்றோம். ஆனால் அதற்கு முன்னதாக மௌனப் படத்துக்கும் பேசும் படத்துக்கும் இடையில் 26 தமிழர்கள் சினிமா தயாரித்தார்கள். சுமார் 30 படங்கள் தயாரிக்கப்பட்டன. கீசகவதம் படத்தில் கிருஷ்ணன் அரக்கனை வதம் செய்யும்போது ரத்தம் தெறிக்கும் காட்சிகள் ஏராளமாக இடம்பெற்றன. இன்றைய சினிமாவில் வெளிப்படும் ரத்தத்தில் லட்சத்தில் ஒரு பங்குகூட அதில் இருந்திருக்காது என்றாலும் அன்று அப்படத்தின் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்துக்கு அந்த ரத்தக்காட்சிதான் காரணம் என்று ஸ்டூடியோவையே மூடியது தனிக்கதை.இன்றும் இருக்கும் சினிமா சென்டிமென்டுகளுக்கு பிள்ளையார் சுழி அதுதான்.
அது ஒரு காலகட்டம். மௌனப்படங்கள் திரையிடும் அரங்குகளில் ஒருவர் திரையின் முன் நின்றுகொண்டு படத்தின் கதையையோ, கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களையோ நாடக பாணியில் சொல்லிக்கொண்டு இருப்பார்.
திரையரங்கங்கள் இல்லை. ஆங்காங்கே கொட்டகைகள் ஏற்படுத்தப்பட்டு மின்விசிறிகளோ, காற்று வசதியோ இல்லாமல் படம் திரையிடப்படும். படம் தெளிவாக தெரிவதற்காக வெளிச்சம் வராமல் இருப்பதற்காக எல்லா வெளிச்ச வாய்ப்புகளும் அடைக்கப்பட்டுவிடும். இப்போது போல படத்தைத் திரையில் காட்ட கார்பன் ஆர்க் எலக்ரோடுகளோ, படு சமீபத்தில் வந்த ஷார்ட் ஆர்க் ஷீனான் எலக்ட்ரானிக் ஒளிஉமிழ் சாதனங்களோ அன்று இல்லை. அன்று பயன்படுத்திய எலக்ரோடுகள் அதிக புகைகக்குபவையாகவும் மனிதன் சுவாசிக்கக் கூடாததாகவும் இருந்தது. படம் பார்க்கும் பலர் மயக்கமடைவார்கள். வாந்தி எடுப்பார்கள். ஆனால் தொடர்ந்து படம் பார்ப்பதை மட்டும் நிறுத்த மாட்டார்கள். மனிதன் கண்டுபிடித்த ஆகச் சிறந்த கலைவடிவமாக சினிமா மாறியது. இலக்கியம், இசை, நாட்டியம், நாடகம், ஓவியம் அனைத்தையும் ஒருங்கிணைத்த கலை வடிவமாக சினிமா இருந்ததால் உயிரைக் கொடுத்தாவது அதை ரசிக்க தயாரானான். இன்றும் கூட டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் தற்கொலை செய்துகொள்ளும் ரஜினி ரசிகர்களையோ, தலைவா படம் ரிலீஸ் ஆகாத துக்கத்தில் தூக்குப் போட்டுக்கொள்ளும் விஜய் ரசிகர்களையோ நாம் பார்க்கிறோம்.
அதற்கான ஆரம்ப ஆதாரங்களை நாம் ஊமைப் படக் காலத்திலேயே பார்க்க முடிகிறது.
ஆன் லைனில் புக்கிங் முடித்துவிட்டு ஐனாக்ஸின் சில் ஏஸியில் பெப்ஸி உறிஞ்சியபடி திரி டி படம் பார்க்கும் இன்றைய இளைஞனுக்கு அன்றைய முதல் சினிமாக்களில் இருந்த வலிகள் தெரிய வேண்டியதில்லை. தெரிந்தால் தாங்க மாட்டான்.. அல்லது நம்ப மாட்டான்.
இருந்தாலும் அடுத்த மூன்றாண்டுகளில் நாமும் கொண்டாடுவோம் தமிழ் சினிமா நூற்றாண்டு. 

LinkWithin

Blog Widget by LinkWithin