செவ்வாய், மார்ச் 24, 2009

கடைசிப் புத்தகம்

மானுடத்துக்கான கடைசி புத்தகத்தை யாரோ எழுதிவிட்டார்கள் என்று மிக ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால் அவ்வளவு உறுதியாக யாருக்கும் அதைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. எழுதியது யாரென்றோ, எந்த தேசத்தவர் என்றோ, எந்த மொழியினர் என்றோ ஒரு தகவலும் தெரியாமல்.. அதே சமயத்தில் மிகத் தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்தது இந்தச் செய்தி.லிபர்ட்டி சிலை மிக பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. நானிருக்கும் குடியிருப்பில் இருந்து அதை மிக நன்றாகப் பார்க்க முடிந்தது. அறுபத்து நான்காவது மாடியில் இருந்து பார்த்தால் அந்தச் சுதந்திர தேவி ரொம்ப குட்டை. இங்கிருப்பவர்களுக்கு உலகின் அத்தனை தகவல்களும் முதலாவதாகத் தெரிந்துவிடுவதாகச் சொல்வது உயர்வு நவிற்சியாக இருக்கக் கூடும்.

"உருவாவது எந்த இடமாகவும் இருக்கலாம் அதை முதலில் முழுதாக அனுபவிப்பது நாங்கள்தான். ஏனென்றால் நாங்கள் அமெரிக்கர்கள்''என்ற போலி இறுமாப்பு பலருக்கு இருந்தது. ஆனால் இந்த மாதிரி செய்தியை அப்படி நினைத்துக் கோட்டைவிட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.ஸ்டீபனுக்கு அந்தப் புத்தகம் இருக்குமிடம் தெரிந்துவிட்டது என்று எனக்கும் சந்தேகம். அவனுடைய நடவடிக்கைகள் முழுவதுமாக மாறிவிட்டன. இன்டெர் நெட்டில் அதிக நேரம் செலவிடுகிறான். தேடுகிறான். சலித்துக் கொள்கிறான். தனிமையை விரும்புகிறான். வழக்கமாக அவன் அப்படியிருப்பவன் அல்ல. பெண் வேட்கை மட்டுமே பிரதானமாகக் கொண்டு ஒழுகுபவன். சதா நேரமும் கம்ப்யூட்டர், நூலகம், தனிமை என்று மாறிப் போய்விட்டான். கேட்டால் "பரீட்சை நெருங்கிவிட்டது. இன்னும் தாமதித்தால் நான் என் பண்ணைவீட்டுக்கு மூட்டைக் கட்ட வேண்டியதுதான்'' என்கிறான். என்னமாய் சமாளிக்கிறான் பாருங்கள். அவனுடைய திடீர் தாடியும் கண்களின் தீட்சணமும் அந்தப் பொய்யை வெளிச்சம் போட்டுக் காட்டின. உண்மையில் மிகப் பெருவாரியான மக்களுக்கு இந்தச் செய்தியின் முக்கியத்துவம் புரியவில்லை. அவர்கள் பசி, பட்டினி, வறுமை, அல்லது வறுமையை ஒழித்தல், எந்தக் கட்சி ஜெயிக்கும், பெட்ரோல் தட்டுப்பாடு என்பதைப பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். மக்கள் இப்படி அன்றாடப்பாட்டுக்கு அவதிப்படுவது இன்று நேற்று ஏற்பட்ட பழக்கமா? புறக்கணிக்கப்பட்ட பழத்தை உண்ட கணத்திலிருந்தோ, சிந்திக்க ஆரம்பித்த நாள் முதலோ பட்டுக் கொண்டிருப்பது. பிறவியைக் கடப்பது அவர்களுக்கு முன்னோர் போட்ட பாதையில் போவது போல பழக்கமாகிவிட்ட ஒன்று. யாரோ சிலர்தான் காலந்தோறும் ஞானத்தைத் தேடி அலைந்து திரிகிறார்கள். அவர்களில் சிலர் அதைக் கண்டெடுக்கிறார்கள்.

இன்னும் மிகச் சிலர்தான் அதனால் பயனடைகிறார்கள்; பயனளிக்கிறார்கள். ஜன சமுத்திரம் ஒரு போக்கில் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. ஞானத்தைத் தேடும் கூட்டமோ சிறு துளிகளாகச் சிதறிவிழுகிறது. சிறுதுளிதான் பெருவெள்ளம். பெருவெள்ளம் மீண்டும் ஜன சமுத்திரத்தில் கலந்துவிடுகிறதோ...?எதற்கு இந்தக் குழப்பம்? அதைத் தெளிவிக்கும் அருமருந்தாகத்தானே அந்தக் கடைசி புத்தகம் இருக்கிறது என்கிறார்கள். அதன் பிறகு யாரும் புத்தகம் எழுதத் தேவையிருக்காது என்று உறுதியாகப் பேசிக் கொண்டார்கள். மனிதர்கள் புத்தகங்கள் வாயிலாக எதை இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கிறார்களோ அதற்கெல்லாம் சேர்த்து ஒரே ஒரு புத்தகமாக அதைத் தந்திருக்கிறார்கள். ஆனால் யார்?

ஸ்டீபனைத் தொடர்ந்து கண்காணிப்பது விறுவிறுப்பாக இருந்தது. அவன் சரியாகச் சாப்பிடுவதில்லை. சரியாகத் தூங்குவதுமில்லை. இரவும் பகலும் படித்துக் கொண்டிருந்தான். பாடப்புத்தகங்கள்தான் கையில் இருக்கின்றன. ஆனால் அந்தப் புத்தகங்களின் ஓரத்தில் சங்கேத மொழியில் அவன் குறித்து வைப்பவை யாருக்கும் புரிவதில்லை. சில வரிகளை அடிக் கோடிடுவதையும் யாரும் சந்தேகிக்கவில்லை. வழக்கமாகப் பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் செய்வதுதான் என்று நினைக்கிறார்கள். சமையல்கலை புத்தகத்தின் ஒரு ஓரத்தில் அவன் "அதே புத்தகம்' என்று குறித்து வைத்திருந்ததைப் பார்த்தேன். ஹோட்டல் நிர்வாகப் புத்தகத்தில் அவன் அடிக் கோடிட்டிருந்த வரிகள் என் சந்தேகத்தை வலுக்கச் செய்தன. "இறுதி ஆண்டு" என்ற வரியும் "புத்தகம்' என்ற வரியும் வெவ்வேறு வண்ண மையினால் அடிக் கோடிட்டப்பட்டிருந்தன. இதில் ஆண்டு என்பது திசைதிருப்புவதற்காக என்பது எனக்குச் சட்டென புரிந்து போனது. இதைவிட முக்கியமாக மலேசியாவில் உள்ள ஒருவனுடன் அடிக்கடி கடிதத் தொடர்பில் இருந்தான். இ மெயில் வேறு. கேட்டால் அங்கிருக்கும் ஹோட்டல் ஒன்றில் வேலைத் தேடுகிறேன் என்கிறான். அந்த மலேசிய நண்பனின் இ மெயில் முகவரியை நான் எப்போதோ தெரிந்து கொண்டேன் என்பது ஸ்டீபனுக்குத் தெரியாது. இதுதான் அவன் கடைசி புத்தகத்தைத் தேடும் லட்சணம். ஸ்டீபனைப் போல கடைசி புத்தகத்தைத் தேடுபவனில் ஒருவன்தான் அந்த மலேசிய நண்பன் என்பதும் எனக்குத் தோன்றியது. நிச்சயம் கடைசி புத்தகத்தை எழுதியவனாகவோ அல்லது அதை வைத்திருப்பவனாகவோ இருப்பான் எனத் தோன்றவில்லை. ஏனென்றால் அவனுடைய இ மெயில் முகவரி புத்தகப் புழு என்று தொடங்கியது. புத்தகங்களைத் தேடுபவன்தான் புத்தகப்புழு. எழுதியவனோ, அந்தப் புத்தகத்தைக் கண்டெடுத்தவனோ புழு என்று பெயர் வைத்திருக்க மாட்டான்.நான் தைரியமாக அவனுக்கு ஒரு மெயிலை அனுப்பினேன். மிகவும் சுருக்கமாக. "அந்தப் புத்தகத்தை உங்களுக்கு தெரியுமா?' இதுதான் நான் அனுப்பிய செய்தி.ஒரே ஒருவரி. அவனைத் தூக்கி வாரிப் போடச் செய்திருக்கும் அது.
"யார் நீ என்று தெளிவுபடுத்தினால் நல்லது. என்னிடம் நீ கேட்கும் "அந்த'ப் புத்தகம் எதுவும் இல்லை.}இஸ்மாயில்'எனப் பதில் வந்தது சில நொடிகளில். ஒவ்வொரு எழுத்தின் இடையிலும் ஊடுருவும் கண்கள் உட்கார்ந்திருப்பதை உணர்ந்தேன்.நீ புத்தகத்தைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் நான் என் தொலைபேசி எண்ணைத் தருவேன் என மீண்டும் செய்தி அனுப்பினேன்.எந்தப் புத்தகம் என்றான் தெரியாதவன் போல்.என்னை விவரம் தெரியாதவன் என்று நீ சந்தேகிப்பது நியாம்தான். முதலெழுத்தை மட்டும் சொல்கிறேன். "க' } இப்படி ஒரு செய்தியை அனுப்பினேன்.இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை என அவன், "புத்தகத்தைப் பற்றிச் சொல்கிறேன், போன் நம்பரைச் சொல்' என்று செய்தி அனுப்பினான்.கடைசிப் புத்தகத்தைப் பற்றி சின்ன குறிப்பாவது கிடைக்காதா என்ற பேராவல் எரிந்தது உள்ளுக்குள்.ஃபோனில் அவன் கடுமையாகப் பேசினான்.

"ஏன் என் உயிரை எடுக்கிறாய்? என்னிடம் அப்படி எதுவும் இல்லை... நீ என்ன மடையனா? இனிமேல் அந்தப் புத்தகத்தைப் பற்றி என்னிடம் பேசாதே'' என பொரிந்து தள்ளினான். "உலகக் காப்பியங்கள், குவாண்டம் தியரி, கண்டுபிடிப்புகள், வாழ்க்கைத் தத்துவங்கள், உலக அதிசயங்கள், மாற்று எரி பொருள், கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் எல்லாமும் அதில் அடக்கமா? இவையெல்லாம் அல்லாத வெறொன்றா?'' என்ற என் கூர்மையான கேள்வி என்னுடைய தாகத்தை அவனுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

"உனக்காகப் பரிதாபப்படுகிறேன்'' - அதோடு அவனுடைய தொடர்பு முறிந்து போனது. அவன் என் காரணமாகவே அவனுடைய செல் போன் நம்பர், இ மெயில் முகவரி ஆகியவற்றை மாற்றிக் கொண்டுவிட்டான்.

ஸ்டீபன் என்னுடைய நடவடிக்கைகளைக் கண்டு சுதாரித்துவிட்டாதாகத் தெரிந்தது. அவன் என்னைவிட்டு விலகிச் செல்ல ஆரம்பித்ததோடு நான் அவனை மறைமுகமாகப் பின் தொடர்வதைச் சிலரிடம் புகாராகத் தெரிவித்திருந்தான். சில நெருங்கிய நண்பர்கள் என்னைச் சந்தித்து இப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்றனர். நான் அப்போது ஸ்டீபன் கடைசிப் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருப்பதை அவர்களிடம் சொல்லவில்லை. அதில் இரண்டு பிரச்சினைகள் இருந்ததன. கடைசி புத்தகத்தைப் பற்றி அவர்களும் தெரிந்து கொள்வார்கள். போட்டி அதிகமாகும். அதைவிட குழப்பம் அதிகமாகும்.

இரண்டாவது ஸ்டீபன் இன்னமும் அழுத்தமாக மாறிவிடுவான். அதன் பிறகு ஒரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.நூலகத்தில் அவனருகில் அமர்ந்து மெல்லிய குரலில் ஜாடை மாடையாக "மொத்தம் அது எத்தனை பக்கம்' என்றேன். கொஞ்ச நேரம் புரியாதவனாக நடித்தான். பின்னர் சுதாரித்து கையில் இருந்த "உணவு ஓர் ஆயுதம்' என்ற புத்தகத்தைத் திருப்பிப் பார்த்துவிட்டு 326 பக்கம் என்றான். எத்தனை நாளைக்கு இந்த நாடகம் என்று தெரியவில்லை.அதுதான் கடைசிப் புத்தகம் என்றால் அதன் பிறகு யாரும் புத்தகம் எழுத வேண்டிய அவசியமே இருக்காது. அது இன்றுவரை வந்த அத்தனைப் புத்தகங்களின் இறுக்கத்தோடும் வரப்போகும் யுகங்கள் தரும் செய்திகளின் சாறு நிரம்பியும் இருக்கும் என்றும் யூகித்தேன். ஆனால் அது என்ன மொழி? எழுதியவர் எந்தத் தேசத்தவர்? எத்தனை பக்கங்கள் கொண்ட நூல் அது. உண்மையில் அது வழக்கமான புத்தகங்கள் போன்ற அளவில் இருக்குமா? சித்திரகுப்தன் பேரேடு போல அளவில் பெரியதா? சொல்லுக்குள் காப்பியங்களைச் சுருக்கித் தரும் விந்தையா? இல்லை அதைப் படிக்கும் போது வார்த்தைகளுக்குள் இருக்கும் விஸ்வரூபத்தைக் கண்களுக்குப் பதில் மனம் உள்வாங்குமா? எனக்குச் சோர்வாக இருந்தது. இந்தச் சோர்வுக்கு மருந்து அந்தப் புத்தகத்தைக் கண்ணால் காண்பதன் மூலம்தான் கிடைக்கும் என்று தெரிந்தது.

மாலை நியூயார்க்கின் பிரதானமான "புல்லின் இதழ்' குடியறைக்குச் சென்றேன். இந்தியர்களும் வந்து பருகிச் செல்லும் இடம் அது. நான்காவது சுற்றில் புத்தி கிறுகிறுத்துக் கிடந்த போது எனக்கு இரண்டு டேபிள் தள்ளி ஒருவன் இப்படிச் சொன்னது கேட்டது: "அந்த ஒரு புத்தகமே போதும்,''அவன் ஆங்கிலத்தில் சொன்னாலும் அந்த உச்சரிப்பு இந்தியத் தன்மையுடன் இருந்தது. நான் தள்ளாடிச் சென்று, "அது என்ன புத்தகம்'' என்றேன்.அவனும் கண்கள் சொருக, "எந்தப் புத்தகம்?'' என்றான்."அந்த ஒரு புத்தகமே போதும் என்றீர்களே அது''அவன் ஹா... ஹாஹ்... ஹா என்று சிரித்தான்.

"நிச்சயமாக அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?'' என அவன் நண்பர்களைப் பார்த்தான். அவர்களும் சிரித்தனர். நான் தனியாக வந்திருப்பது தெரிந்து உடன் அமரச் சொன்னார்கள். பரஸ்பர அறிமுகம். சித்தார்த், கணேஷ், ராம், பகதூர் சிங். நால்வரும் மென்பொருள் பொறியாளர்கள்.

"அதை ஏன் பதிப்பிக்காமல் இருக்கிறார்கள்?'' என்றேன்.

"விரைவில் பதிப்பிக்க இருக்கிறார்கள்'' சித்தார்த் உறுதியாகச் சொன்னான்.அனைவரும் மெüனமாக அடுத்தச் சுற்றைக் குடித்து முடித்தோம். எனக்குள் பெரும் சூறாவளி. இவ்வளவு நெருங்கியாகிவிட்டது. இனி கண்ட கண்ட புத்தகங்களுக்காக மரங்களை அழிக்க வேண்டியிருக்காது. இந்தப் புத்தகம்தான் சிறந்தது என்று நோபல், புக்கர் பரிசுகள் தேவையிருக்காது. எல்லாம் கையடக்கமாக ஒரே புத்தகத்தில் இடம் பெறப் போகிறது. தாவோயிஸம், நிஹிலிஸம், ஜென், யின்யாங், டாடாயிஸம், மார்க்ஸிஸம், சர்வ மதக் கோட்பாடுகள், ஜாவா, ஐஸ்ன்ஸ்டைன், ரிச்சர்ட் ஃபெய்ன்மேன், மார்க்வெஸ், இஸபெல் அலன்டே, டால்ஸ்டாய், கான்ட், மகாபாரதம், தம்மம், குருநானக், கன்பூசியஸ், ஜேம்ஸ் பாண்ட், காத்தரீனா ஜூலி, புளியங்குடி, ஐபாட், இன்டல், கூகுள், ஆப்ரிக்கா, நைல், லெமூரியா.... எல்லோரும் எழுந்தனர்.

"அதில் எல்லாம் இருக்கிறதா?'' என்றேன்.

"எதில்?'' என்றான். போதை உச்சந் தலையில் குடியிருந்தது.

"சரி நாளைக்கு வருகிறீர்களா இங்கு?'' என்றேன்.அவர்களின் அலுவலக முகவரியோ, செல்பேசி எண்ணோ வாங்கிக் கொள்ளாமல் போனது பெரிய தவறு. மறுநாள் அவர்கள் வரவில்லை. தொடர்ந்து பல நாள் சென்று பார்த்தும் அவர்கள் வரவேயில்லை. பல மென் பொருள் நிறுவனங்களுக்குப் ஃபோன் செய்து பார்த்தேன். கடலில் பெருங்காயம் கரைத்த மாதிரி அவர்கள் கரைந்து போயிருந்தார்கள். கைக்கு எட்டியது மூளைக்கு எட்டவில்லை. ஷேர் மார்க்கெட்டில் சரிந்தவன் மாதிரி நிலைகுலைந்து போனேன்.கடைசிப் புத்தகம் பற்றி எனக்கொரு கருத்துருவம் கிடைத்தது. மரம் என்றதும் எனக்கு மாமரமோ, புளியமரமோ தேக்கு மரமோ, நாற்காலியோ, ஸôமில்லோ ஞாபகத்துக்கு வருவதற்கு முன் கட்டுமரம் ஞாபகத்துக்கு வரும். அது கடலில் இருக்கும் மரம்... சொல்லப் போனால் கடலில் மிதக்கும் மரம். அப்படியான ஒரு கருத்துரு.

கடைசிப் புத்தகம் கருப்பு அட்டைப் போட்டிருக்கும். சுமார் நூறு பக்கங்களுக்குள்தான் இருக்கும். எழுதியவரின் பெயரோ, புத்தகத்தின் பெயரோ அட்டையில் இடம் பெற்றிருக்காது. அதைப் படித்தால் புத்திசாலி ஆவது முக்கியமில்லை. மகிழ்ச்சியாக இருக்கும். புத்திசாலி ஆவதன் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பதுதானே? அதனால் நேரடியாக நோக்கம் நிறைவேறும்.

எல்லாப் புத்தகங்களும் நோக்கத்தை அடைவதற்கான படி நிலைகளைச் சொல்கின்றன. சில படிகள் உயரமானவை. அந்தப் படிக்கே படி தேவைப்படும் அளவுக்கு. சில எங்கெங்கோ வேறு மாடிகளுக்குக் கொண்டு சென்று விட்டுவிடுபவை. சில எத்தனை முறை ஏறினாலும் அதே இடத்துக்குக் கொண்டு வருபவை. சில சுழற்படிக்கட்டுகள் கிறுகிறுக்க வைத்து அச்சுறுத்துகின்றன. சில நடக்க நடக்க முன்னேறிச் செல்வது போல தோற்றமளித்துக் கீழே தள்ளிவிடுபவை. ஒவ்வொரு எழுத்தும் இலக்கை நோக்கியதாக இருப்பதுதான் கடைசிப் புத்தகத்தின் சிறப்பு என்றும் தோன்றியது.ஆனால் அது என்ன மொழியில் எழுதப்பட்டிருக்கும் என்பதில் கருத்துரு எதுவும் ஏற்படவில்லை. ஸ்டீபனோ, இஸ்மாயிலோ, சித்தார்த்-கணேஷ்- ராம்- பகதூர் சிங்கோ பார்த்திருக்கிறார்கள். சிக்கல் என்னவென்றால் அவர்களால் அதைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. அல்லது கிடைத்தற்கரிய ஞானத்தை இன்னொருத்தருக்கு அநாயாசமாகத் தாரை வார்த்துத் தருவதில் அவர்களுக்கு யோசனை இருக்கலாம். கடைசிப் புத்தகத்தாலும் இந்த அற்பத்தனங்களை அகற்ற முடியாதா என்ன? புத்தகத்தின் எல்லையைத் தொட்டவர்களுக்குத்தானே அந்த ஞானம் கைக்கூடும்? இவர்கள் எல்லாம் புத்தகத்தை அறிந்தவர்கள் மட்டுமே. படித்தவர்கள் அல்ல.

கருத்துருவின் அடுத்த கட்டம் இது. படித்தால்தான் அது கைக்கூடும். படிக்காமல் இருக்கும்வரை அது நாய் பெற்ற தெங்கம் பழம்தான்.நகரின் மிகப் பெரிய புத்தகக் கடை அது. நான் அதற்குள் பிரவேசித்தேன். இலச்சினை அணிந்த கடைச் சிப்பந்தி என்னை அணுகி, எனக்கு உதவும் குரலில் என்னப் புத்தகம் வேண்டும் என்றான்.நான் சற்று கிண்டலாகவே "கடைசி புத்தகம்'' என்றேன்.

அவன் சிந்தித்துப் பார்த்துவிட்டு "யார் எழுதியது?'' என்றான்.நான் பதில் சொல்லாமல் நகர்ந்தேன். யார் எழுதியதாம்? என்ன கேள்வி இது. ரிச்சர்ட் ஃபோர்ட் என்றோ குப்புசாமி என்றோ ஒரு பெயர் இருக்க வேண்டும் என்ற அவசியம் கடைசி புத்தகத்துக்கு உண்டா?...அட.. ஒரு கருப்பு அட்டையிட்ட புத்தகம் அங்கே இருந்தது. நினைத்தது போலவே அதன் மேல் புத்தகத்தின் பெயரோ, எழுதியவரின் பெயரோ இல்லை. நூறு பக்கங்களுக்கு அதிகம் இல்லாத கனம்தான். நான் புத்தகத்தின் இரண்டு பக்க அட்டையையும் திருப்பிப் பார்த்தேன். கருப்பு அட்டையைத் தவிர விலைக்கான கோடுகள் மட்டும் இருந்தன. உள் பக்கங்கள் எந்த மொழிக்கும் சொந்த மற்று இருந்தது. ஒவ்வொரு பக்கமும் பிரபஞ்ச வெளியின் கரும்பொருளாக ஆகஷ்கரித்தது. வார்த்தைகள், இலக்கணங்கள் பொருளிழந்து போன அமைதியின் பிரசங்கமாக இருந்தது. சட்டென மூடினேன்.

கோடியுகங்கள் கடந்தோடி முடிந்தது மாதிரியும் இருந்தது. யாருமே சீண்டாமல் ஓர் ஓரமாக அது இவ்வளவு நாளாக இருந்திருக்கிறது. நான் வினாடியில் பரபரப்படைந்துவிட்டேன். படபடப்பாக இருந்தது. இதயம் தாவி தொண்டைக்குழிக்குள் வந்துவிட்டதுபோல இருந்தது. கவுண்டரில் கொடுத்தபோது ``இது மட்டும்தானா?'' என்றான். "இதற்குமேல் வேறொதுவுமே தேவையிருக்காது, யாருக்கும்'' என்றேன். குரல் குழறி யாருடையதோ போல ஓலித்தது.
வரி கோடுகள் அற்ற நூறு பக்க நோட்டு ஒன்று, விலை ஒரு டாலர் என்று அவனுடைய கம்ப்யூட்டரில் ஒளிர்ந்தது. புத்தகத்தை வாங்கிக் கொண்டு வேகமாக அறையை நோக்கி நகர்ந்தேன்.

LinkWithin

Blog Widget by LinkWithin