திங்கள், டிசம்பர் 17, 2012

தமிழ்மகனுக்கு கோவை இலக்கியப் பரிசு


சுப்ரபாரதிணியன்

கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ரங்கம்மாள் விருது இவ்வாண்டு தமிழ்மகனுக்கு அவரின் “ வெட்டுப்புலி “ நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.25,000 ரூபாய் பரிசுத்தொகை கொண்டது அப்பரிசு
( உயிர்மை வெளியீடு. பதிப்பாளருக்கும் பரிசு உண்டு ) இரு ஆண்டுகளுக்கு ஒரு நாவலாசிரியருக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. பிரபஞ்சன், சிவசங்கரி, சுப்ரபாரதிமணீயன், நாஞ்சில்நாடன், சி.ஆர். ரவீந்திரன் , வே சபாநாயகம், மோகனன், நீலபத்மநாபன் போன்றோருக்கு இவ்விருது இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது..

கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளைக்கு இது வெள்ளிவிழா ஆண்டு.நிரந்தரமான ஓவியக்கூடம், நூட்பாலைக்கண்காட்சி, ஆண்டுதோறும் பதினைந்து கூட்டுக் கண்காட்சிகள், ஓவியப்பட்டறைகள்., ஓவிய பயிற்சி முகாம்களை இது நடத்துகிறது. இதன் வெள்ளி விழா கொண்டாட்டம் டிசம்பரில் தொடங்கியது.அவ்விழாவில் தலைமை விருந்தினராக்க் கலந்து கொண்ட கிருஸ்ணராஜ் வாணவராயர் “ வித்தியாசமாக இருப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். எழுத்தாளர்களும் கலைஞர்களும் வித்தியாசமானவர்கள். நான் வித்தியாசமாக இருப்பதை பார்த்து சிரிக்கிறீர்கள். நாம் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதைப் பார்த்துச் சிரிக்கிறேன். என்றார் விவேகானந்தர். ஆன்மீகமும் அறிவுவியலும், பகுத்தறிவும் கலந்த சிந்தனை மிக முக்கியம். நாளைய உலகில் நல்ல பண்பு கொண்ட மனிதர்கள்தான் அதிகம் இருக்கமாட்டார்கள்.அவர்களை உருவாகுவதில் கலைக்கும், எழுத்துக்கும் பங்கு உண்டு என்றார்..
வெட்டுப்புலி நாவலுக்கு பரிசு பெற்ற தமிழ்ம்கன் பாராட்டப்பட்டார். அவரின் உரையிலிருந்து: “ வெற்றி பெற்றவர்களின் வரலாறு வெகு சாதராணமாய் நிறைய எழுதப்பட்டுள்ளன. வெட்டுப்புலி தோல்வியடைந்தவர்களின் கதை.அரசியல், திரைத்துறை, வாழ்க்கை என்று 30களில் பயணம் செய்ய ஆரம்பிக்கிற நாவல்சமீபகாலம் வரை திராவிட இயக்கவரலாறோடு சொல்லப்பட்டிருக்கிறது. உலகின் 6000 மொழிகளில் இந்த நூற்றாண்டில் அழியப் போகிற மொழிகள் 3000க்கு மேலே உள்ளது. பயன்பாட்டில் குறைந்து வருகிற தமிழை புழங்கு மொழியாக வைத்திருக்கவும் மொழியைப்புதுப்பிக்கவும் நாங்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம். புத்தர், யேசு பேசின மொழிகள் இன்று பய்ன்பாட்டில் இல்லை. திருவள்ளுவர் பயன்படுத்திய மொழியை வாழ வைக்க எழுதுகிறோம். மொழியை நவீனப்படுத்தவேண்டும். செய்ய்யுள் வடிவிலேயே தமிழ் இலக்கியம் நெடும்காலம் இருந்திருக்கிறது. தமிழ் சிறுகதைக்கும், நாவலுக்கும் 100 வருடமே ஆகிறது.. எழுத்தாளர்கள் வாழ்க்கையை படைப்பில் முன் மொழியும் போது மொழியையும் முன் மொழிகிறோம்.அது வெவ்வேறு வடிவங்களும், நுட்பமும் கொண்டு இலக்கியத்தை சுவாரஸ்படுத்துகிறது.. ” ஒரு ஊரில் ஒரு பாட்டி “ என்று பாட்டி வடை சுட்டதில், காக்கா திருடிக் கொண்டு போனதினை இரண்டாம் முறை சொன்னாலே அலுப்பு வந்து விடும். அதைப்போக்க சொல்லும் மூறையில் நவீனம் தேவை. நவீன வாழக்கையை கூர்ந்து சொல்லவேண்டும், காப்ரியேல் மார்க்கூஸ்ஸின் “ மறுபடியும் சொல்லப்பட்ட கதையை “கொல்லப்படப் போகிறவன் படகுக்காக்க் காத்திருக்கிறான்.” என்று ஆரம்பிக்கிறார். டால்ஸ்டாய் அன்னாகரினாவில் “ எல்லா சந்தோசமான குடும்பங்களும் ஒரே மாதிரி “ என்று ஆரம்பிக்கிறது.. ”

தமிழ்மகனின் சமீபத்திய ஆண்பால் பெண்பால் நாவல் இப்படி ஆரம்பிக்கிறது:: “ இடைப்பட்ட நீர்ப்ப்ரப்புகள் நீருக்குள் மூழ்கிப் போயின “ தமிழ் மொழி பற்றின படிமமாகக் கூட தமிழ்மகன் இந்த வரிகளை எழுதியிருக்க்க்கூடும்

தமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….


சுப்ரபாரதிமணியன்

Share

பொதுவாக இந்திய  வெகுஜன இதழ்களில் குடும்பம், திருமணம், மணமுறிவு, மன முறிவு, பிரிவு, கூடுதல் சம்பந்தமான லட்சக்கணக்கான தொடர்கதைகள் இது வரை வெளிவந்திருக்கும்.பெரும்பாலும் இந்துவா சிந்தனைகள், சடங்குகளின் மேன்மை, இந்தியர்களின் குடும்ப்ப் பெருமை பற்றி சிலாகிப்பவை . இது தமிழிலும்  சாத்தியமாகியுள்ளது.       தமிழ் மகனின்  “ ஆண்பால் பெண்பால்” நாவலில் மணமுறிவு சார்ந்த நுணுக்கமான உளவியல் சார்ந்த விசயங்கள் ஆக்கிரமித்திருருப்பதைக் குறிப்பிடலாம்.
பலவீனமான குடும்ப அமைப்புகளின் அடையாளம் இந்த மண முறிவு. மேற்கத்திய நாட்டுக்குடுமபங்கள் இந்த பலவீன்ங்களைக்கொண்டவை. எனவே மண விலக்கு அங்கு சாதாரணமாகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில்   5 முதல் 10 ஆண்டுகளே திருமண உறவு பெரும்பான்மையாக நீடிக்கிறது பிறகு மண விலக்கும், மறுமணமும் சாதாரணமாகிறது .இது பல இடங்களில் ஒரு முடிவு என்பதாகிறது. இன்னும் பல விசயங்களில்  புது தொடக்கம் என்றாகிறது. கருக்கலைப்பை அங்கீகாரம் செய்யாத சில கிறிஸ்துவ நாடுகளைப் போல்  மணவிலக்கை அங்கீகரிக்காத சில கிறிஸ்துவ நாடுகளும் உள்ளன. இந்தியாவின் பெருநகரங்களில் மணவிலக்கு  இது சாதாரணமாகி வருகிறது. இடம்பெயர்ந்து வந்து நகரங்களில் வாழும் தொழிலாளி வர்க்கத்தில் இது அதிகரித்து வருகிறது..எனக்குத்தெரிந்த ஒரு இளைஞன் தினமும் காதலிக்கு     நூறு குறுஞ்செய்திகளையாவது அனுப்புவான்.இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பிரிவை ஒரு குறுஞ்செய்தியால் கூட பகிர்ந்து  செய்யாமல் விலகிக் கொண்டார்கள்.
இந்த நாவலின்  மையமான இந்த மணமுறிவு சார்ந்த விசயங்கள் உளவியல் பார்வையோடு சொல்லப்படுவதற்கு ஆதாரமான கதாபாத்திரங்களாக தமிழ்மகனின் முந்திய “ வெட்டுப்புலி “ நாவலில் தியாகராஜன், ஹேமலதா மற்றும் கிருஸ்ணப்பிரியா, நடராஜன் ஆகியவற்றைக் கூறலாம். ரசனை வேறுபாடு , கொள்கை வேறுபாடு அவர்களிடம் பிரிவை உருவாக்குகின்றன.தியாகராஜன் கடவுள் மறுப்பாளன், ஹேமலதா தீவிரமான பக்தை. திருமண உறவில் இது பெரிய சங்கடம் தருகிறது. அவள் வேறு ஆண் நட்பும் கொள்கிறான். தியாகராஜன் புதுவை அரவிந்தரின் பக்தனாகிற சரிவு காட்டப்படுகிறது. தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த நடராஜன் தான் காதலிக்கிற பெண் கிருஸ்ணப்ரியா,  பிராமண ஜாதியைச் சார்ந்தவள் என்பதால் அவளிடமிருது விலகி வேறு பெண்ணை திருமணம் செய்து குடும்பச் சிக்கல்களால் மனப்பிறழ்வு நோய்க்கு ஆளாகிறான்.இரண்டிலும் நிகழும் சரிவுகள் எதார்த்தமாக இருந்தாலும் மனதிற்கு சங்கடம் தருகிறது. காரணம் அதை திராவிட இயக்கச் சரிவாக அடையாளம் கண்டு கொள்ள முடிவதால்தான்.
தமிழ்மகனின் நான்காவது நாவலான “ ஆண்பால் பெண்பாலி”ல் இந்த மணமுறிவு  .ரசனை வேறுபாட்டால், உடல் சார்ந்த குறையால் ( ப்ரியாவிற்கு வெண்புள்ளி, அருணுக்கு ஆண்மையில்லாத் தன்மை) அமைகிறது. அவளின் எம்ஜிஆர் பற்றிய ஈடுபாடு, எம்ஜிஆர் சிவாஜி படப்பாடல் ரசனைமுரண் , சசிரேகா, அருணா என்ற பெண்களுடன் அவனைச் சேர்த்துப் பேசுவது,  தங்க செயின் பறிப்பின் போது அவனின் கதாநாயக ஆவேசமின்மை, புலனாய்வு நிறுவனம் மூலம் அவளின் நடத்தையை அவன் அறிய முயல்வது, குழந்தைப்பேற்றுக்கான புனிதப்  பயணங்கள், எம்ஜிஆர் ஆவி ஆக்கிரமிக்கப்பட்ட ப்ரியா எம்ஜிஆர் தமிழர் எனபதை நிருபிக்க அவளின் பயணங்கள், தோல்வி என்று தொடர்கிறது. எம்ஜிஆர் ஆவியோடு ப்ரியா தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறாள். மனபிரமை. எம்ஜிஆர் படித்தப் பள்ளி, தங்க் பஸ்பம் செய்த இடங்கள், தேர்தல் கால பிரச்சார இடங்கள் என்று தீர்த்த யாத்திரை செல்கிறாள்.   அருண் ஆணின் மன்னிப்பு, பெருந்தன்மை எல்லாம் காட்டுகிறான்.உறவுச் சிக்கல்களும், உளவியல் பாதிப்புகளும் அவளை மன நோயாளியாக்குகிறது. அருண் மனவிலக்கும் பெறுகிறான். அவள் குழந்தைப் பேறு அடைய முடியாதது பற்றி அவனுக்கும் சங்கடங்கள் இருக்கின்றன.
இந்நாவலில் சுமார் 10 சம்பவங்கள் அருண், ப்ரியா  பார்வைகளில் திருமபச் திரும்பச் சொல்லப்படுகின்றன. ப்ரியாவின் பார்வை அழுத்தமாக அமைந்துள்ளது. நேர்கோட்டை சிதைக்கிறது  ப்ரியா சொல்வதாக பிரமிளா எழுதுவது, அருண் சொல்வதாக ரகு எழுதுவது என்று கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நாவலினை எழுதியவன் நானல்ல என்கிறார் தமிழ் மகன். மனுஷ்யபுத்திரனுக்கு ராயல்டி தரவேண்டியதில்லையான  மகிழ்ச்சி. இது விளையாட்டாகிறது. பிரதி மாத்திரம் பிரதானமாகிறது.  பெருங்கதையாடலினை இப்படி . கட்டுடைக்கிற பின்நவீனத்துவ அம்சங்களை இந்த நாவல் அதன் வடிவ அமைப்பில் பெற்றிருக்கிறது.
திராவிட அரசியல், திராவிட திரைப்படம், அதன் முக்கிய பிம்பமான எம்ஜிஆர், ப்ரியா அருண் திருமண வாழ்க்கை,  நவீன வாழ்க்கையின் அம்சங்கள் என்று பல அடுக்குகளை இந்த நாவல் கொண்டிருந்தாலும் அதன் ஊடாக வரும் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை குறைவே. இந்த அடுக்குகளில் இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் இணைந்திருந்து இதை வேறு பரிமாண நாவலாக்கியிருக்கும் போக்கு இல்லாமல் இரு கதாபாத்திரங்களின் குரலில் திரும்பத்திரும்ப ஒலிப்பது பலவீனமே.பல  ஆண்டுகளாக பத்திரிக்கையாளராக தமிழ் மகன் பணிபுரிவதால் கடைசி  வாசகனையும் சென்றடையும் எளிமையும், சுவாரஸ்யமும் இதிலும் உள்ளது, அதுவும் திரைப்படத்துறை சார்ந்த பத்த்ரிக்கையாளனாக இவர் பணியாற்றி பல கட்டுரைகள், நூல்கள் எழுதியிருப்பதால் இங்கு இடம் பெறும்  திரைப்பட உலகம் சார்ந்த தகவல்கள், அனுவங்கள் இந்த நாவலின்  வாசிப்பினை சுவாரஸ்யமாக்குகிறது. சுஜாதாவின் பாதிப்பில் இவரின் சிறுகதைகள் சொல்லும் தன்மை இருப்பதாய் பலர் சொல்வதுண்டு. இந்த சுவாரஸ்யத்தின் மூலம் அது போன்ற உரைநடையாலும் எள்ளலாலும் தொடர்ந்து இந்த நாவலிலும் சாத்தியமாகியிருக்கிறது. சமகால அரசியல் நிகழ்வுகள், பதிவுகளை இந்த நாவலிலும்  சரியாக அனுபவ சாத்தியமாக்கியிருக்கிறார். சரித்திரமும், தத்துவமும், அறிவியலும். சமகால அரசியலின் பதிவுகளும் இவரின் மொத்தப் படைப்புகளின் பலமாக அமைகின்றன.
பத்திரிக்கை உலகம் சார்ந்த அலுப்பான பணிகளை மீறி தமிழ் மகன் தொடர்ந்து படைப்பிலக்கிய முயற்சிகளில்  அதற்காக நேரம் ஒதுக்கி, குடுமபத்தை ஒதுக்கி விட்டு ஈடுபடுவது அவரின் 4 நான்கு நாவல்கள், இரு சிறுகதைத் தொகுப்புகளின் மூலம் வெளிப்ப்ட்டிருக்கிறது. தமிழக அரசின் விருதுகள், கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் சிறந்த நாவலாசிரியருக்கான இவ்வாண்டின் விருது, நாகர்கோவில் மணி நாவல் விருது, ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது  போன்றவை  மூலம் கவுரப்படுத்தப்பட்டிருக்கிறார். இவரின் திரைப்பட அனுபவங்களும் அது சார்ந்த திரைப்பட முயற்சிகளும் இன்னுமொரு பரிமாணமாக வெளிப்படும் சாத்தியங்கள் மகிழ்ச்சியானதே.
( கோவை இலக்கியச் சந்திப்பு  ‘ தமிழ் மகனின் படைப்புலகம்” பற்றிய நிகழ்ச்சியில் ” ஆண்பால் பெண்பால் “ நாவல் பற்றிய சுப்ரபாரதிமணீயனின் உரையின் ஒரு பகுதி இது. ” வெட்டுப்புலி “ நாவல் பற்றி எம். கோபாலகிருஸ்ணன், சி ஆர் இரவீந்திரன் ஆகியோரும், அவரின்
” சிறுகதைகள் ” பற்றி கோவை ஞானியும், அவரின் படைப்பிலக்கிய  செயல்பாடுகள் பற்றி இளஞ்சேரலும் பேசினர். சு.வேணுகோபால், அறிவன், பொதியவெற்பன், நகைமுகை தேவி, காசுவேலாயுதம், அவைநாயகன், ஆத்மார்த்தி, தியாகு உட்பட பலர் கலந்து கொண்டனர்)

திங்கள், டிசம்பர் 03, 2012

அழகான விருது.. கனமான பணமுடிப்பு.. நெகிழவைத்த அன்பு

சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ் தோழருமான ஜி.எஸ். மணி அவர்கள் நினைவாக மார்த்தாண்டம் தோழர்கள் நடத்தும் களம் அமைப்பின் சார்பாக டிசம்பர்2‍, தேதி ஆண்பால் பெண்பால் நாவலுக்கு விருது வழங்கப்பட்டது. தோழர்கள் பாபு, ஹசன், குமரவேல், மைக்கேல் போன்றவர்களின் அன்பு மறக்க முடியாதது.
தோழர் ஜி.எஸ். மணி அவர்களோடு பழகிய தோழர் எம்.எம்.அலி போராட்டக்கால நினைவுகளை பகிர்ந்துகொண்டார். போலீஸ்காரர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மணி அவர்கள் ஆற்றில் குதித்துத் தப்பிச் சென்ற நிகழ்வு சிலிர்க்க வைத்தது. தோழர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், மணிமாறன் ஆகியோர் என் நாவல் பற்றி நன்றாகப் பேசினார்கள். எம்.ஜி.ஆர் என்பது தமிழகத்தைப் பிடித்த ஆவி என்றார். எல்லா நடிகர்களுமே தம் பங்குக்கு நம்மைப் பேயாய் பிடித்து ஆட்டுகிறார்கள் என்றது சுவாரஸ்ய்மாக இருந்தது. அவர் சொன்ன பிறகுதான் அதுவும் சரிதான் என தோன்றியது.

அழகான விருது... தோழர் குமரவேல் வடிவமைத்தது. கனமான பணமுடிப்பு.. ரூ. 15,000/‍ நெகிழவைத்த அன்பு.. என 3-‍ம் தேதி காலை சென்னை வந்து இறங்கினேன். நாள் முழுதும் என்னுடனே இருந்த பாபு அவர்களுக்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டும். சிதாறல் சமணக் குகைக்கும் பேச்சிப்பாறை தொட்டி பாலத்துக்கும் அழைத்துச் சென்று காண்பித்தார். சுமார் 14 மணி நேரம்தான் நான் மார்த்தாண்டத்தில் இருந்தேன். இரண்டு மூன்று நாள் இருந்த நிறைவு.

வெள்ளி, நவம்பர் 30, 2012

முகம் அறியாத ஒரு நண்பரின் பாராட்டு மழையில் நனைவதுதான் எத்தனை ஆனந்தம் தருகிறது. தினேஷ்குமார் என்னைப் பற்றி அவருடைய வலை தளத்தில் இப்படி எழுதி இருக்கிறார்.

தி.ஜா அவர்களும் தமிழ்மகன் அவர்களும்


அம்மா வந்தாள்

தி.ஜா அவர்களின் மோகமுள் படித்து இருக்கிறேன், மனசை போட்டு உலுக்ககூடிய நாவல், படிக்க படிக்க யமுனா மீது காதல் வந்தது, இதற்கு முன்பு ' சுஜாதா' சாரின் உள்ளம் துறந்தவன் படித்த போது மஞ்சரி மீதும், வண்ணத்துபூச்சி வேட்டை படித்த போது ரேகா மீதும், பொன்னியின் செல்வனில் மணிமேகலையின் மீதும்  காதல் வந்தது, இவ்வாறாக நான் பலரை காதலித்து இருக்கிறேன். மோகமுள் படித்த பிறகு அவ்வளவாக தி.ஜா பக்கம் நான் செல்லவில்லை, பின்னர் ஒருநாள் அவரின் சிறு கதைகள் தொகுப்பை பார்த்து எடுத்து கொண்டு வந்து படிக்க ஆரம்பித்தேன்.எனக்கு கு.ப.ரா. அவர்களின் சிறுகதைகள் ரொம்ப பிடிக்கும். தி.ஜா அவர்களின் சிறுகதைகளும் கு.ப.ரா வின் சிறுகதைகள்  போலவே ரொம்ப அருமையாகவும், வாழ்வின் மகத்துவங்களை பளிச்சென்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிற்று. குறிப்பாக 'கடன் தீர்ந்தது' சிறுகதையை படிக்கும் போது ஏன் என் கை நடுங்கியது என்று இன்னமும் எனக்கு தெரியவில்லை.சிலிர்ப்பு,பரதேசி வந்தான், ...ப்பா போன்ற கதைகள் மனசில் இன்னமும் இருக்கின்றன, அந்த தொகுப்பில் அவரின் இரண்டு பயண கட்டுரைகள் இடம்பெற்று இருந்தது, எனக்கு அதில் 'உதயசூரியன்' மிகவும் பிடித்து இருந்தது. அவரின் ஜப்பான் பயணம் குறித்த அந்த கட்டுரை மிகவும் எளிமையாக அதே சமயம் ஜப்பான் குறித்த வர்ணனைகள் மிக அழகாக இருக்கும், அங்கு அவர் சந்தித்த மனிதர்கள் குறித்து எழுதி இருந்தார் ஜப்பானிய மக்களின் பழக்க வழக்கங்கள், தேநீர் விருந்து, அவர்களின் மர வீடுகள், எதையுமே புன் சிரிப்போடு ஏற்று கொள்ளும் அவர்களின் பண்பு, எதை செய்தாலும் எளிதாகவும் அதே சமயம் அழகாவும் செய்யும் அவர்களின் நேர்த்தி, இப்படி பல விஷயங்கள் எனக்கு வாழ்வில் ஒரு முறையாவது ஜப்பானை பார்த்து விட வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்தியது.

பின்னர் அம்மா வந்தாள் நாவலை தேடி படித்தேன் (அந்த சிறு கதைகள் தொகுப்பில் பல முன்னணி எழுத்தாளர்கள் (என் சுஜாதா உட்பட) தி.ஜா பற்றி எழுதி இருந்தார்கள்) அதில் அம்மா வந்தாள் நாவல் வெளிவந்த சமயத்தில் பல விமர்சனங்களை சந்தித்ததாக கூறப்பட்டு இருந்தது, உடனே தேடு தேடு என்று தேடி ஒரே நாளில் படித்து முடித்த பிறகு தான் வேறு வேலை பார்த்தேன் அம்மா வந்தாள் படித்த போது 'இந்து' மீது காதல். இந்து கதாபாத்திரம் அவ்வளவு வலிமையானது. தன கணவனை பற்றி கேக்கும் போது "தனியாக அவரை பற்றி நினைக்க வேண்டுமா என்ன ? அதன் உடம்போட மனசோட போட்டு தச்சு இருக்கே"னு சொல்லும் போது அதோட வீரியம் புரியும், அந்த அம்மா கதாபாத்திரம் தான் முக்கியமானதாக இருந்தாலும் எனக்கு வேத பள்ளியில் நடைபெறும் காட்சிகளே பிடித்து இருந்தது, அம்மாவை குறித்து நான் அவ்வளவாக அலட்டி கொள்ளவில்லை, மொத்தமாக சொல்லவேண்டும் என்றால் மோகமுளில் யமுனா "இதுக்கு தானே ?" என்று கேக்கும் போது பளார் என்று அறைந்தார் போல இருக்கும், அதே போல் அம்மா வந்தாளிலும் பல காட்சிகள் இடம் பெறும் , இதோட இந்த அம்மாவை பார்க்க  வரமாட்டியா என்று அம்மா அப்புவை பார்த்து ரயில்வே ஸ்டேஷன்ல கேக்குற ஒரு காட்சி போதும்.

எட்டாயிரம் தலைமுறை

"மீன் மலர்" சிறுகதை தொகுப்பின் மூலமாகத்தான் எனக்கு தமிழ்மகன் அவர்கள் அறிமுகம், அதில் முதல் கதை அதன் தலைப்பு எனக்கு நினைவு இல்லை, ஆனாலும் அதன் கடைசி வரி எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு, "பெண்கள் யாரை முழுமையாக நம்புகிறார்களோ அவரகளிடம் தான் இப்படி வாய் விட்டு மனம் விட்டு சிரிப்பார்கள்". சத்தியமான உண்மை இது. பெண்களை வெகு சுலபமாக திட்டி இன்றைய சினிமாவில் பாடல் வருகிறது அனால் ஒரு பெண் அவள் பெண் என்பதற்காகவே போற்ற பட வேண்டியவள் என்பது என் எண்ணம்.பெண் எவ்வளவு மிருதுவானவள் என்பதற்கு மேலே  தமிழ்மகனின் கூற்றே சான்று. அதே நூலில் "வார்த்தையில் ஒளிந்திருக்கும் கிருமி" மிக மிக உண்மையான கதை, அதில் அந்த சிங்கத்தின் சமயோசித புத்தி வியக்க வைக்கும், பின்னர் அவரின் "ஆண்பால் பெண்பால்" நாவல் படித்து இருக்கிறேன், அது குறித்து ஏற்கனவே என் ப்ளாகில் எழுதி இருக்கிறேன்
           
நேற்று அவரின் "எட்டாயிரம் தலைமுறை" சிறு கதைகள் தொகுப்பை படித்தேன், கதையின் முடிவு பெரும்பாலும் வாசகர்களின் யுகத்திற்கே விட்டுவிடுவது தனி சிறப்பு, 20 கதைகள், எழுப்பும் கேள்விகள் நிறைய... 'மாமியார் மருமக சண்டையில ஆம்பளைங்க யார் பக்கமும் நிக்காம இருந்தாலே போதும், பாதி பிரச்சனை தீர்ந்ததுனு' ஜெயந்தி சொல்லிட்டு படி இறங்கி போற காட்சி இன்னும் கண்ணுலேயே இருக்கு. அப்பாவின் மரணம் நிகழ்ந்த பிறகு இடுகாட்டில் அந்த மகன் படும் வேதனைகளும், அந்த ஹும்”  தன அப்பாவுடையதாக இருக்குமோ, இருந்து விட கூடாதோ என அவன் ஏங்கும் இடம் கண்ணீரை வரவைக்கும், பின்பு நண்பனுடன் வண்டியில் செல்லும் போது  வாய்விட்டு அழுவதும், அந்த இடத்தில அவன் நண்பன் அவனின் அப்பாவை போல் சித்தரிக்க பட்டதும் அருமை. "ஒரு தேர்தல் ஒரு பசு" கதையில் மனிதம் அந்த கன்று வெளியேறுவது போல அழகாக வெளிப்படுத்தி இருப்பார், தேடல் கதையில் அம்மாவை பார்த்து வேகமாய் பார்க்காததை போல் மவன் ஓடும் போது அவன் மீது கோபமோ கோபம். "அக்கா" இந்த கதை தான் எனக்கு மிகவும் பிடித்த கதை. அந்த தம்பி கதாபாத்திரம் சாராய கடையில் வேலை பார்த்து கொண்டு, கிட்டதட்ட இதும் கோயில்தான் என எண்ணுகிற இடம் அருமை. அக்கா ஓடிவிட்டாள் என தெரிந்ததும் அவன் படுகிற அவஸ்தை சொல்லி மாளாது.. கூட்டத்தின் கடைசியில் ஒருவனல வரும் "ரொம்ப நல்லவனா இருகிறதும் மன நல குறைபாடு தான்" வரிகள் என்னவோ பண்ணுது சார், "நல்லவர்கள் குறைவாகவும் கெட்டவர்கள் அதிகமாக இருப்பதும் தான் பிரச்சனையோ, இருக்கும் கொஞ்ச நஞ்சம் நல்லவர்களையும் கெட்டவர்களாக மாற்றி விடத்தான் இத்தனை மருத்துவமனைகள் இருக்கின்றன" ஒரு நல்லவனை பிறர் சந்தோசத்தை மதிப்பவனை இந்த சமூகம் பைத்தியகாரனாக்கி விடுகிறது. "ரோஜா" எப்படி என்று தோன்றியது குறித்த எட்டாயிரம் தலைமுறை கதை புனைவின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்,முதன்முதலில் ஒரு பெண்ணை ஏக்கபார்வையுடன் பார்த்ததை "பர்ஸ்ட் பர்ஸ்ட் அடிக்க பட்ட பர்ஸ்ட் சைட்" என்ற வர்ணனை சிறந்த நகையுணர்வு. புது மாப்பிள்ளை மாமனார் வீட்டில் படும் அவஸ்தையை சிரிப்பாகவும், கணவன் மனைவி தாம்பத்யத்தை வெகு இயல்பாகவும் சித்தரித்து இருக்கிறார் "அடுத்த பக்கம் பார்க்க" கதையில், எல்லா உணர்ச்சிகளையும் அழுத்திகொண்டு சிரிப்புடனே எதையும் எதிர்கொள்ளும் "நேசம்" மணி கதாபாத்திரம் காலகாலத்துக்கும் மனசுல இருக்கும், பொண்டாட்டி அவங்க காதலன் கூட ஓடிப்போனதை கூட இயல்பாய் எடுத்து கொண்டு அவங்க மேல பழி வரகூடாதுன்னு நினைக்குற மனச நான் மதிக்கிறேன். சதி கதைல "கிஷ்னால்" ஊத்தி கொளுத்திகிட்ட ஜானகி அக்கா ரொம்ப பாவம், வேலையில்லாமல் ஒருவன் தன் வீட்டில் படும் கஷ்டங்களை பாதிப்பு கதையில் துல்லியமாக எழுதி இருக்கார். அதும அவன் கதை எழுதுறவனா இருந்தா போச்சு, சுத்தமா மரியாதை கிடையாது. அவர் அப்பா கடைசியா சொல்ற வார்த்தை தான் ஒரு எழுத்தாளரை வாழவைக்கிறது.
 
 
 
அவருடைய வலைதளம் செல்ல கிளிக் செய்யவும்

புதன், நவம்பர் 14, 2012

கோவை இலக்கியச் சந்திப்பு


  
கோவை இலக்கியச் சந்திப்புகாலம்:  25/11/2012  ஞாயிறு காலை 10 மணி , நரசிம்ம நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவை
இவ்வாண்டின் சிறந்த நாவலாசிரியருக்கான கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின்  “இரங்கம்மாள் விருது“  பெற்ற  “தமிழ் மகனின் படைப்புலகம்“ : ஆய்வரங்கம்
பங்கு பெறுவோர்: கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், நித்திலன், சி.ஆர். ரவீந்திரன், எம்.கோபாலகிருஸ்ணன், இளஞ்சேரல்,பொன் இளவேனில், யாழி, தியாகு. அனைவரும்  வருக! வருக! வருக!

செவ்வாய், நவம்பர் 06, 2012

ஆண்பால் பெண்பால் நாவலுக்கு விருது

ராஜமார்த்தாண்டத்தில் செயல்பட்டுவரும் களம் எனும் இலக்கிய அமைப்பு ஆண்பால் பெண்பால் என்ற என் நாவலை இந்த ஆண்டுக்கான சிறந்த நாவலாகத் தேர்வு செய்திருக்கிறது. கம்யூனிஸ தோழர் ஜி.எஸ்.மணி அவர்களின் நினைவாக விருது வழங்கப்படுகிறது. இதற்கான விழா ராஜமார்த்தாண்டத்தில் டிசம்பர் மாதம் 2‍-ம் தேதி நடைபெறும்.

புதன், செப்டம்பர் 19, 2012

கவாத்துக்கு தப்பிய செடிகள்




இம் மாத ஆரம்பத்தில் ஐந்து நாட்கள் இலங்கையின் மலையக பகுதிகளுக்குச் சென்றுவந்தேன். அதைப் பற்றி கடந்த ஜூனியர் விகடனில் எழுதியிருந்தேன்.


டைட்டானிக் கப்பலில் சென்ற ஆயிரத்துச் சொச்​சம் பேர் கடலில் மூழ்கிப் போனது பற்றி இதுவரை பத்து திரைப்​படங்​கள் வெளிவந்துவிட்டன. மூவாயிரம் புத்தகங்கள் வந்துவிட்டன. இலங்கைக்குத் தேயிலை பறிக்க தமிழக மக்களை ஏற்றிச் சென்று மூழ்கிப்போன ‘ஆதிலட்சுமி’ கப்பலை எத்தனை பேருக்குத் தெரியும்? மலைகளில் ஏறிவிட்டாலும் வாழ்க்கையில் கரை ஏற முடியாத ஏழை மக்களின் துயரம்,  சொல்லால் வடிக்க முடியாத சோகம்.
அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என அறிய சமீபத்தில் இலங்கை சென்று வந்தேன். அப்போதைய மனவோட்டம்தான் இது. இலங்கையில் 2&ம் தேதி இறங்கினேன். தமிழர்ப் பகுதிகளான மட்டக்களப்பிலும் அனுராதபுரத்திலும் 8&ம் தேதி தேர்தல் நடக்க இருந்ததை ஒட்டி எல்லாக் கட்சி​யினரும் மேடைகளில் முழங்கிக்கொண்டு இருந்தனர். தமிழகத்தில் சுற்றுப்பயணம் வந்த சிங்களவர்களைத் திருப்பி அனுப்பிய செய்தி அந்தப் பிரசார மேடைகளில்  விவகாரம் ஆகிவிட்டது. லட்சக்கணக்கில் தமிழர்களைக் கொன்று குவித்த... அந்த ரத்தம் காயாத நிலையில் ராஜபக்ஷே, ‘மக்கள் இனவாதத்தை விட்டுவிட வேண்டும்’ என்று தமிழில் வேண்டுகோள் வைத்தபடி இருந்தார். கடையடைப்பு செய்ய இருப்பதாகத் தகவல்கள். இன விரோதம் தூண்டிவிடப்படுமானால், அது இரண்டு பக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு திருப்பத்திலும் புத்தர் சிலைதோறும் துப்பாக்கியுடன் நிற்கும் ஆர்மிக்காரர்கள் ஏற்படுத்தும் மிரட்சி போதாதென்று இது வேறு. அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. தேர்தல் நேரம் என்பதாலேயே அடக்கிவாசிக்கிறார்கள் என்று பேசிக்கொண்டனர் .
கொழும்பிலிருந்து ஹட்டன் மலையகப் பகுதி சுமார் 150 கி.மீ.  சரிபாதி சிங்களரும் தமிழரும் கலந்து வாழும் பகுதி.  தேயிலைத் தோட்டத்தில் நண்பரின் வீட்டில் மூன்று நாட்கள் தங்கி இருந்த​தால், காலையில் எழுந்ததும் தோட்ட வேலைக்கு செல்லும் மக்களைச் சந்திக்க முடிந்தது. முதுகில்  மூங்கில் கூடைகளுடன் தேயிலைத் தோட்டங்களில் பெண்கள் ஏறிச் சென்றுகொண்டு இருந்தார்கள். சேற்றில் கால் சறுக்கிவிடாமல் இருப்பதற்காக அவர்கள் கையாளும் உத்தி செருப்புப் போட்டுக்​கொள்ளாமல் இருப்பதே. மழையில் நனையாமல் தப்பிக்க பிளாஸ்டிக் கோணிப் பைகள். கடந்த 200 வருடங்களில் ஏற்பட்ட எந்த விஞ்ஞான முன்னேற்றமும் அவர்களின் இந்த உத்திக்கு மேல் உதவவே இல்லை.
குளவி கடித்தால் சுண்ணாம்பு, ரத்தம் உறிஞ்சும் அட்டையை அகற்றுவதற்கு மூக்குப் பொடி... இதற்கு மேல் எந்த வைத்தியமும் இல்லை.
தினம் 20 கிலோ வரை கொழுந்து பறிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு எழுதப்படாத கட்டளை. மாதத்தில் 17 நாட்கள் வேலை பார்த்தாக வேண்டும். உடல் நிலை சரியில்லாமல் படுத்துவிட்டால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஒரு நாள் சம்பளத்தைப் பாதியாக்கி, செய்த நாளுக்கான கூலியைக் கணக்கிட்டுக் கொடுப்பார்கள்.  உரிமை​களுக்​காகக் குரல் கொடுக்கும் ஈழ மக்களுக்கும் உணவுக்காக அல்லல்படும் மலையக மக்களுக்கும் வாழ்க்கை வித்தியாசம் ஏராளம். காலை முதல் கொட்டும் மழையில் கொழுந்து பறித்துவிட்டு குளிரில் வெடவெடத்து நீரில் ஊறிப்போன கை கால்களோடு அந்தி சாயும் நேரத்தில் அவர்கள் வீடு திரும்புகிறார்கள்.
அதன் பிறகு அவர்கள் சமையல் செய்கிறார்கள். குழந்தைகளைக் கவனிக்​கிறார்கள்... கணவனைக் கவனிக்கிறார்கள். ஆண்​களுக்கு வேறு சில தோட்ட வேலைகள்... தேயிலை நாற்றுப் பராமரிப்பு,மருந்து தெளித்தல், கானு வெட்டு​தல், கவாத்து செய்தல், களை வெட்டுதல், குழி தோண்டு​தல் என்று தினம் தினம் வேலைகள் வேறுபடும்.
அவர்களில் சிலரின் களைப்​பைப் போக்க அதிவிசேஷமான பொருள் ஒன்று மாலை ஆனதும் கைகொடுக்கிறது. அங்கு விற்பனையாகும் சாராயத்தின் பெயர் அதிவிசேஷம்.
நான் சந்தித்த தோட்டத்து மக்கள் எல்லோரும் பேசிவைத்துக்கொண்டதுபோல ஒரு கேள்வியைக் கேட்டார்கள். ‘‘எங்களைப் பற்றி ஏன் தமிழக அரசியல் தலைவர்கள் பேசுவதில்லை?’’
மலையகத்தில் இருக்கும் இந்த 15 லட்சம் பேரின் பிரச்னைகள் வேறு. இவர்கள் இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக கடந்த 200 ஆண்டுகளில் இடம் பெயர்ந்தவர்கள். இலங்கைத் தமிழர்கள் என்று அவர்களைப் பொதுமைப்படுத்துவதில் ஒரு நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

குழந்தை பெற்ற பெண்கள் மூன்று மாதங்களுக்குள் தேயிலை பறிக்கச் செல்ல வேண்டி இருந்தது. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ‘பிள்ளை மடுவம்’ என்று ஒன்று தோட்டத்தில் உண்டு. இன்றைய ‘கிரீச்’சின் பண்படாத நூற்றாண்டு வடிவம் அது. ஒரு கூடாரத்தில் வரிசையாகத் தொட்டில்கள் தொங்குகின்றன. குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆயாக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். டார்வின் சித்தாந்தப்படி இயற்கைத் தேர்வு செய்த குழந் தைகள் மட்டுமே இங்கு தப்பிப் பிழைக்கும். இப்போது அங்கு, படித்த பெண்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.
ஒரு முதியவர், மகனும் மருமகளும் இறந்து போய்விட்டதால் தன் இரண்டு பேரக் குழந்தைகளையும் தான்தான் வேலைக்குப்போய் காப்பாற்றி வருவதாகச் சொன்னார். இதுபோன்ற சோகக் கதைகள் வீட்டுக்கு வீடு இருக்கின்றன. வறுமை, நோய், சாதி இழிவு, வந்தேறிகள் என்ற அவமானம் எல்லாம் கலந்த கதைகள் அவை.
காடாய்க்கிடந்த இடத்தில் 200 ஆண்டு உழைப்பில் தோட்​டம் உருவாக்கி தங்கள் ரத்தத் தையும் வேர்வையையும் இட்டு தேயிலை வளர்த்த​வர்​களுக்கு அதைக் குடிக்கும் அனுமதி இல்லை. சோகத்தின் உச்சம் இது.
மலையக மக்களோடு இருந்ததில் ஒரு விஷயம் புரிந்​தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்கள் இந்தியத் தமிழர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் பேச்சு​நடை மாறவில்லை. உணவில் கூட மாற்றம் இல்லை. இனக் கலவரம் வெடித்தபோதெல்லாம் சுலபமாகத் தாக்கப் பட்டவர்களும் இவர்கள்தான்.
வெகு சில தோட்டத் தமிழர்களின் வாரிசுகள் மட்டுமே படித்து வேறு வேலைக்குச் சென்று குடும்பத் தரத்தை உயர்த்தி இருக்கிறார்கள். சிலர் ஆசிரியர் வேலைக்குப் போவதைப் பார்க்க முடிந்தது. அவர்கள் பேன்ட், சட்டை அணிந்து நகரத்துக்குச் சென்று வருகிறார்கள்.
தோட்டத்தைச் சுற்றித் திரிந்த இரண்டு நாட்களில் நண்பர் ஒரு மரத்தைக் காட்டி, ‘‘இது என்ன மரம் என்று தெரிகிறதா?’’ என்று கேட்டார். என் விவசாய அறிவுக்கு எட்டாத மரம். ‘‘தெரியவில்லை’’ என்றேன். ‘‘இது தேயிலைச் செடிதான். தேயிலைச் செடி என்றால் மூன்று அடிக்கு மேல் வளரவிடாமல் அவ்வப்போது கவாத்து செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களால் கொழுந்து பறிக்க முடியும். இது கவாத்துக்குத் தப்பிவிட்ட செடி... மரமாக வளர்ந்துவிட்டது’’

ஆசிரியர் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கும் சிலரும் அப்படி கவாத்துக்குத் தப்பிய செடிகள்தான்!


திங்கள், ஆகஸ்ட் 13, 2012

நினைவின் நிழல்



நான் அமைதியாகக் கண் அயர்ந்து இருந்தேன். எனக்கு உயிர் இருக்கிறதா என்பதை பலரும் நம்பிக்கையே இல்லாமல் பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள். உடலில் ஒரு அசைவும் இல்லை. பத்து குதிரைத்திறன் உள்ள நீர் இறைக்கும் இயந்திரத்தை தோளில் சுமந்து செல்லக்கூடிய என் தோள்கள் துடைத்துப் போட்ட கரிக்கந்தை போல கிடந்தது. இமையைக்கூட அசைக்க முடியவில்லை. என்னைச் சுற்றி நான்கைந்து டாக்டர்கள் நின்றிருப்பதை மிக யோசனைக்குப் பிறகே உணர்ந்தேன். எல்லோருமே நான் பிழைப்பது அரிது என்பதைத் தங்கள் மருத்துவ அறிவைக்கொண்டு தீர்மானமாகச் சொன்னார்கள்.
நெடிய உருவம் கொண்ட ஆங்கிலேயரை நினைவுபடுத்தும் தோற்றம் உள்ள அந்த மருத்துவர்& இது அவருடைய குரலை வைத்து நான் செய்த கற்பனை& என்னை ஏறத்தாழ இறந்துவிட்டதாகவும் இனி எனக்குச் செய்யும் மருத்துவ உதவி வீண்விரயம் என்றும் சொன்னார். என்னால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. நாக்கையோ, உதடுகளையோ அசைக்கும் முயற்சிகள் பயனளிக்கவில்லை. சொல்லப்போனால் அதற்கு எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்பது விளங்கவில்லை. நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை.
என் வாயும் மூக்கும் பிராணவாயு செலுத்துவதற்கான கருவிகளால் மூடப்பட்டிருந்தன. சிரமப்பட்டு சுவாசிக்கிறேன்.
‘‘வென்டிலேஷன் வெக்கணும்னா ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபா ஆகும்னு சொல்லிட்டீங்களா?’’
‘‘சொல்லிடுறோம் சார்.. ’’
‘‘அதை மொதல்ல சொல்லிடுங்க. அட்டண்டர் யாரு இருக்காங்க?’’ என்னைப் பொறுத்தவரை அந்த நேரத்தில் அங்கு இருந்தவர்கள் எல்லோருமே டாக்டர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறேன்.
ஒரு பெண் குரல் ‘‘அவங்க் வொய்ஃப் இருக்காங்க சார்’’& இது நர்ஸாக இருக்கலாம்.
‘‘இப்ப எங்க இருக்காங்க?’’
‘‘வெளிய வரான்டாவுல நிக்கறாங்க சார்’’
‘‘வரச் சொல்லுங்க’’
என் மனைவி வரப்போகிறாள்.. அவளை இவர்கள் அழவைக்கப் போகிறார்கள்... என்னால் எதுவும் செய்ய முடியாது.. எனக்குச் சிந்திப்பதற்கே சோர்வாக இருந்தது. சில நேரங்களில் எங்கிருக்கிறேன் என்பதையே உணர முடியாமல் இருந்தது. எங்கிருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்ளவோ, தெரிவிக்கவோ திராணி இல்லை.
டாக்டர் ஒருவர், ‘‘இதுவரைக்கும் எத்தனை நாளா வென்டிலேஷன்ல வெச்சு இருக்காங்க?’’ என்று விசாரித்தார். அவருடைய கேள்வியில் இருந்து அவர் இப்போதுதான் என்னை முதன்முதலாகப் பார்க்க வந்திருக்கிறார் என்பதை அனுமானித்தேன். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் பெரிய மருத்துவராக இருப்பார்.
‘‘வாம்மா... என்ன ஆச்சு இவருக்கு?’’
‘‘வேலைக்குப் போயிட்டு வந்தாரு.. காலைல இருந்து சாப்படல. கஷ்டமான வேலை சார்... கஷ்டமான குடும்பம் சார்..’’
‘‘அழாதம்மா. விஷயத்தைச் சொல்லுங்க’’
‘‘பசி எடுக்குது. சாப்பாடு போடுன்னு சொன்னாரு. ஒரு வா தான் சாப்புட்டாரு. கை எல்லாம் வலிக்குதுன்னு துடிச்சாரு. வாயெல்லாம் இழுத்துக்குச்சி.. என்னமோ சொல்றாரு. ஆன ஒண்ணுமே புரியலை.. ’’ எனக்கும் அவள் சொல்கிற சம்பவம் நினைவுக்கு வந்தது. கணபதிராமன் நிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சப் மெர்ஸிபிள் மோட்டாரைப் பொருத்தினேன். பூமிக்குள் இறக்கப்பட்டிருந்த குழாயில் லேசாக வளைவு இருந்தது. மோட்டர் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பெரும்பாடு. ஒவ்வொரு முறை மேலே ஏற்றி சர்ஜிங் செய்துவிட்டு மோட்டரை இறக்கி... காலையில் இருந்து வேலை இழுத்துவிட்டது. சரியான டென்ஷன். சாப்பிடவே இல்லை. ஆறு மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன். சாப்பிட உட்கார்ந்தேன். இடது கையில் அப்படி ஒரு வலி. தலை வெடித்துவிடுவதுமாதிரி ஒரு பிரமை. வெடித்துவிட்டதா என்று தெரியவில்லை. தொட்டுப் பார்த்து உறுதி செய்ய நினைத்தேன். அய்யோ என் கை? அது எங்கே இருக்கிறது?
‘‘அப்புறம்..?’’
‘‘ஜி.ஹெச்.சுக்கு தூக்கினு போனோம்... அங்க ஒண்ணும் முடியாதுன்னு சொல்லிட்டாங்க...’’
‘‘எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்தாங்களா?’’
‘‘அங்க எடுக்கலை... இங்க கொண்டுவந்த பிறகுதான் எடுத்தாங்க’’ என்று இன்னொரு டாக்டர் பதில் சொன்னார்.
‘‘இப்பவும் ஒண்ணும் சொல்றதுக்கு இல்லம்மா..’’
‘‘எப்பிடியாவது காப்பாத்திடுங்க சார்...’’
‘‘99 சதவிதம் வாய்ப்பே இல்லம்மா. இப்ப இந்தக் கருவிய எடுத்துட்டா அவர் கதை முடிஞ்சுடும். இதலதான் ஓடிக்கிட்டு இருக்கு..’’
‘‘அப்பன்னா இதை எடுக்காதீங்க சார்...’’ குரல் பதறியது. பயப்படாதே விமலா.
‘‘இதுக்கு ஒரு நாளைக்கு அம்பது ஆயிரம் வாடகை.. அப்புறம் மருந்து, வாடகை, டாக்ட ஃபீஸு எல்லாம் இருக்கு. முடியுமா உங்களால?’’
‘‘எத்தனை நாளிக்கி இப்பிடி வெச்சிருக்கணும்? அப்புறம் நல்லாயிடுமா?’’
‘‘அத சொல்ல முடியாதும்மா.. இதை வெச்சி இருந்தா உயிர் இருக்கும். எடுத்துட்டா சொல்ல முடியாது’’
விசும்பலும் கேவிக் கேவி அழுவதும் கேட்டது. நான் எழுந்து கொள்ள விரும்பினேன். அதை எப்படி செய்வதென்று தெரியவில்லை.
‘‘மனச தேத்திக்கம்மா... இதுவரைக்கும் மூணு நாள் வெச்சிருக்காங்க. ஒன்றை லட்சத்துக்கு மேல ஆகிருச்சு. அதுக்குத்தான் சொல்றேன்’’
மூன்று நாட்களா? அதிர்ச்சியாக இருந்தது. படுக்கையில் மூன்று நாட்களாகவா இருக்கிறேன்? கொடுத்த செக் என்ன ஆனது? கடையை யார் பார்த்துக்கொள்கிறார்கள்? மேனேஜரிடம் ஸ்டாக் வைக்கச் சொன்னார்களா? கதிரேசன் மோட்டர் கேட்டானே? அய்யோ மூன்று நாட்களா..?
‘‘எத்தனை நாள் வேணா இருக்கட்டும் சார்’’ அழுதாள்.
‘‘அழாதம்மா. நீங்க சொன்னாத்தான் எடுப்போம். ரெண்டு நாளைக்கு ஒரு தரம் பணம் கட்டிடுங்க. வேற யாராவது விபரம் தெரிஞ்சவங்க இருந்தா வரச் சொல்லுங்க..’’ ஒவ்வொருவரின் காலடிச் சத்தமும் நின்று நின்று நகருவது கேட்டது. என் மனைவி மட்டும் என் அருகே நின்று அழுது கொண்டிருந்தாள். அவள் என் கையைப் பிடித்துக்கொண்டிருப்பதை உணர முடிந்தது. பதிலுக்கு உணர்த்த முடியவில்லை. அவளுடைய கைச்சூடு இதமாக இருந்தது. ஆனால் அழுதுகொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாள்.
வெகு நேரத்துக்கு யாருமே இல்லை. யாருமற்ற சூனியவெளியில் நான் உருவமற்று இருந்தேன். எடையும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் என்பது ஒரு வெற்றிடம் போல இருந்தது. இதையெல்லாம் நான் சிந்திக்கிறேனா, எனக்காக யாரோ சிந்திக்கிறார்களா? எதாஅவது ஒரு இடத்தில் இருக்கிறேனா, எல்லா இடத்திலும் இருக்கிறேனா? யுகமா, வினாடியா? யாரோ என் நெற்றியில் அழுத்துவது தெரிந்தது. ஓ விமலா விபூதி பூசி விடுகிறாள். விபூதித் துகள்கள் நெற்றியில் நமைக்கின்றன. கடவுள் அருள் வேலை செய்கிறது. கடவுள் துகள்.. ஆஹா..
‘‘நாலு நாலா இப்பிடியேத்தாண்ணா இருக்காரு..’’ கூட வேறு யாரோ நிற்கிறார்கள்.
‘‘என்ன சொல்றாங்க?’’... அட இந்தக் குரல்.. அரசு... திருநாவுக்கரசு.. வந்துவிட்டாயா..? இந்த டாக்டர்களுக்குப் புரிய வை. நான் உயிருடன்தான் இருக்கிறேன். டாக்டர்களுக்குச் சொல். என் மனைவிக்கு நம்பிக்கைக் கொடு.
‘‘நீங்க வந்தா பெரிய டாக்டரு பாக்கணும்னு சொன்னாரு. இருண்ணா இப்ப ரவுண்ட்ஸ் வருவாரு’’
‘‘ரமேஷ்.. ரமேஷ் எழுந்திர்றா... டேய் ரமேஷ்... நான் பேசறது கேக்குதா?’’ அரசு என் காதருகில் கத்தினான்.
கேட்கிறது. நன்றாகக் கேட்கிறது.
‘‘என்னடா எல்லாத்தையும் போட்டது போட்டது மாதிரி இங்க வந்து படுத்துட்ட? எழுந்துரு’’
என்னை மெல்ல உலுக்கினான்.
‘‘சார் அப்பிடிலாம் அசைக்கக் கூடாது...’’
வேறு ஒரு பெண்ணின் குரல். நர்ஸ்.
‘‘கால் அசையுதே...’’ என்றான் ரமேஷ்.
‘‘நாம எந்த எடத்திலயாவது கிள்ளினா, அசைச்சா அந்த இடத்தில மட்டும் ஒரு ஸ்டிமுலேஷன் இருக்கும்.. இத பாருங்க... பாத்தீங்க இல்ல? எங்க கிள்றமோ அந்த இடத்தில அசையும்.. அவ்வளவுதான். அதுக்கும் பிரெய்னுக்கும் சம்பந்தமில்ல.. பல்லி வால் அறுந்து கீழ விழுந்தாலும் துடிக்கும் தெரியுமா? அப்பிடித்தான். மூளை கண்ட்ரோல் இல்லை..’’
அடிப்பாவி எங்கேயோ கிள்ளிக்காட்டி விளக்குகிறாள். சிறிய மவுனமும் மெல்லிய காலடிச் சத்தமும் கேட்டது.
‘‘என்னம்மா முடிவு பண்ணே?’’
‘‘அண்ணா கிட்ட சொல்லுங்க’’
‘‘சொந்த அண்ணனா?’’
‘‘இல்ல சார். சின்ன வயசுல இருந்து ஃப்ரண்ட்...’’
‘‘ரத்த சம்பந்தம் இருந்தாத்தான் சொல்ல முடியும்..’’
‘‘ரிலேஷனும்தான்.. ஊர்ல பங்காளிங்க..’’
நல்லவேளை. நன்றாகச் சமாளித்துவிட்டான்.
‘‘ஓ.கே. இவங்க சொல்லி இருப்பாங்க. பாயிண்ட் ஒன் பர்சன்ட் சான்ஸ்தான் இருக்கு. வென்டிலேஷன் வெச்சி இருக்கறதால மூச்சு போய்கிட்டு இருக்கு.. ரொம்ப கஷ்டம். வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போயிடுறது நல்லது’’
‘‘வேற சான்ஸ் இல்லையா டாக்டர்?’’
‘‘அமெரிக்காவுல இருந்து டாக்டர் வந்தாலும் காப்பாத்த முடியாது.. அப்படி ஒரு சான்ஸ் இருந்தா நாங்களே சொல்லி இருப்போம்’’
‘‘வேற ஏதாவது ரிஸ்க் எடுக்கலாம்னாலும் சொல்லுங்க டாக்டர்’’
‘‘இல்ல சார். எதாவது இருந்தா இன்னேரம் செஞ்சி இருப்போம்... இப்ப ஒரு நாளைக்கு சராசரியா அம்பதாயிரம் ஆகுது. வசதியானவங்க பத்து நாள் இருபது நாள்கூட வெச்சிருக்காங்க’’
‘‘அப்படி வெச்சிருந்தா குணமாகுமா?’’
டாக்டர் எதுவும் சொல்லவில்லை. அவர் உதட்டைப் பிதுக்கி இருக்கலாம். ஆள்காட்டி விரலை வானத்தை நோக்கிக் காட்டி இருக்கலாம்.
‘‘வெச்சுருக்கறது பலனளிக்குமா? எத்தனை பர்ஸென்ட் ஹோப்?’’
‘‘அதான் சொல்லிட்டனே.. நேத்தே இந்த அம்மாகிட்ட வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போறதுதான் நல்லதுன்னு எங்க பி.ஆர்.ஓ. டிபார்ட்மென்ட்ல இருந்து கன்வீன்ஸ் பண்ணியிருக்காங்க... சொன்னாங்களா, இல்லியாம்மா?’’
‘‘சொன்னாங்க சார்’’ அவள் குரல் உடைந்திருந்தது.
‘‘நல்லா யோசிச்சுக்கம்மா. டாக்டர் சொல்றது புரியுதில்ல? தினமும் அம்பதாயிரம் கொடுத்து...’’ அரசுவின் குரல்.
‘‘இன்னும் வீடுகூட கட்டி முடிக்கலையே..’’
‘‘அதுக்குத்தான் சொல்றேன்... வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போறதுதான் புத்திசாலித்தனம்... புரிஞ்சுக்கம்மா’’
டேய் அரசு.. என்னடா இப்படி சொல்லிட்டியே... நான் உயிரோடதான்டா இருக்கேன். நண்பா..
விமலாவின் அழுகை மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தது.
‘‘சார் அப்படின்னா இன்னும் ஒரு நாள் இருக்கட்டும். நான் வேற சில டாக்டர் கிட்ட ஒபீனியன் கேட்டுக்கிட்டு சொல்றேன்’’
‘‘ஓ.கே. உங்க இஷ்டம்..’’
செருப்புகள் தரை உரசும் சப்தம் மெல்ல தேய்ந்து மறைந்தது. அப்புறம் வெகு நேரத்துக்கு யாருமே வரவில்லை. சோர்வில் நினைவு மங்குவதும் திடீரென விழிப்பதும் நர்ஸ் வந்து குளுகோஸ் ஏறும் ஊசியை அழுத்திப் பார்த்துவிட்டுப் போவதுமாக இருந்தது. எத்தனையோ யுகமாக படுத்திருப்பது போல இருந்தது. திடீர் திடீரென நினைவு தப்பிப் போனது.
மீண்டும் சப்தங்கள். யாரோ அருகே வந்து நிற்கிறார்கள். போகிறார்கள்.
‘‘மூளைக்கு ரத்தம் சப்ளை ஆகுற ரெண்டு முக்கியமான நரம்பு பிளாக் ஆகி இருக்கு. மூளைக்கு இப்ப ரத்தம் போகல. அதாவது மினிமம் பங்ஷன் ஆகுற அளவுக்குப் போகுது. ஹார்ட் வேலை செய்யுது. லங்ஸ் வேலை செய்யுது.. கிட்னி வேலை செய்யுது.. ஐ திங்க் செஃட் பிரெய்னுக்கு கொஞ்சூண்டு சப்ளை இருக்கு. இந்த பிளாக்கை சரி பண்ண இன்னும் மருந்து கண்டு பிடிக்கல. அதைக் கரைக்க முயற்சி பண்ணா அது மூளைக்குள்ள போய் இன்னும் காம்பிளிகேஷன் அதிகமாகும். புரியுதுங்களா?’’
டாக்டர் யாருக்கோ விளக்கிக்கொண்டிருந்தார். எதிரில் தலை அசைத்துக்கொண்டிருப்பது யாரென்று தெரியவில்லை.
‘‘நீங்க உடல்தானம் பற்றி யோசிக்கறதுதான் நல்லது’’
‘‘காதுகிட்ட போய் பேசினா கண்ணுக்குள்ள பாவை அசையுது டாக்டர்.’’ &அரசு.
‘‘நீங்க பாத்தீங்களா?’’
‘‘நான் பாத்தன் சார்.. வாயில விபூதி போட்டன். நெஞ்சுக்குழி ஏறி எறங்குச்சு சார்’’
‘‘ஏம்மா இது என்ன ஆஸ்பித்திரியா, மாரியம்மன் கோயிலா? அவரால எதையும் முழுங்க முடியாது. சளியை எல்லாம் ட்யூப் வழியாத்தான் எடுக்குறோம். சளி லங்ஸ்குள்ள போயீ இங்ஃபெக்ஷன் ஆகிடுமோ, நிமோனியா வந்துடுமோன்னு பயந்துகிட்டு இருக்கேன்.. நீ பாட்டுக்கு விபூதிய வாயில போட்டன்னு சொல்றியே... இன்னோரு முறை இப்படி பண்ணா வீட்டுக்கு அனுப்பிடுவேன்... புரியுதா?’’
‘‘எங்க குலசாமி கோயில்ல மந்திரிச்சு எடுத்தாந்தாங்க சார்.. அதனாலதான்... இனிமே குடுக்க மாட்டன்சார்’’
டாக்டர் ஒரு பெருமூச்சை வெளியேற்றி, ‘‘என்ன பண்ணலாம் சொல்லுங்க?’’ என்றார்.
விமலாவும் அரசுவும் மட்டும் இருந்தனர். இருவரில் யார் என்னை என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
‘‘எல்லாரும் கிராமத்து ஆளுங்க. வென்டிலேஷனை எடுத்தா இறந்துடுவாங்கன்னா அதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. சென்டிமென்ட்ஸ்... வீடு வாசல் எல்லாத்தையும் வித்தாவது உசுர காப்பாத்தணும்னு நினைப்பாங்க டாக்டர்..’’
‘‘அதுக்காக எண்டலஸ்ஸா இப்படி வெச்சுக்கிட்டுருந்தா? பணம் இல்ல வேஸ்ட்..? உனக்கு பொண்ணு இருக்கில்லம்மா?’’
‘‘பத்தாவது போவுது’’
இந்திராவை மறந்துவிட்டேனே.. என் இனிய இந்திரா...
‘‘ம் பின்ன?’’
மவுனம்.
எல்லோரும் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள். நான் பிழைப்பேனா, மாட்டேனா என்பது எனக்கும் தெரியவில்லை.
‘‘எடுத்திடலாம்மா...’’ அரசு மெதுவாகச் சொன்னான். சொன்னானா, கேட்டானா?
விமலா அழுவது பிசிறாகக் கேட்டது.
‘‘அமாவாசை வரைக்கும் எடுக்க வேணாம் சார்..’’
‘‘அமாவாசை என்னைக்கு?’’
‘‘ரெண்டு நாள் இருக்கு சார்’’
‘‘உங்க இஷ்டம். மீன் டைம் வென்டிலேஷன் இல்லாம சர்வைவ் ஆகிறாரான்னு ட்ரை பண்ணி பாக்கறம்.. அப்புறம் உங்க லக்.’’
‘‘அதனால ஏதாவது ஆபத்து இருக்குமா?’’
‘‘நோ.. நோ.. கிராஜுவலாத்தான் செய்வோம்... டோன்ட் வொர்ரி’’
எல்லோரும் நகர்ந்தனர். மின்விசிறி சுழலும் சப்தம் கேட்டது. அது குளிரூட்டப்பட்ட அறையும்கூட. அவர்கள் சொல்லும் வென்டிலேஷன் என்ற கருவிதான் என்னைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கருவிதான் சிந்திக்கிறது. கருவி இல்லையேல் உயிர் இல்லை; சிந்தனை இல்லை.
டாக்டர்கள் வருகிறார்கள். நர்ஸுகளுக்குக் கட்டளை இடுகிறார்கள். ரிப்போர்ட் எழுதி என் கட்டில் கம்பியில் அட்டையில் தொங்கவிட்டுவிட்டுப் போகிறார்கள்.
‘‘நாலு லிட்டர் கொடும்மா போதும்’’ என்கிறார்கள். பி.பி., நார்மல் என்றது கேட்டது. டிரக்கியா பண்ணிடலாம் என்கிறார்கள்.
அமாவாசை வந்துவிட்டதா என்று தெரியவில்லை. எல்லா நாளும் அமாவாசை மாதிரி இருந்தது.
யாரோ வருகிறார்கள். விமலா, விமலாவின் அம்மா, அரசு, அரசுவின் மனைவி... எல்லோர் குரலையும் அடையாளம் தெரிந்தது. என் காதருகே வந்து எழுந்திரு.. எழுந்திரு என்று அன்பாகச் சொல்கிறார்கள். நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.
‘‘நீங்க சொல்றது எதுவுமே அவருக்குக் கேட்காது..’’ டாக்டர் மட்டும் பிடிவாதமாக இருந்தார்.
‘‘இல்லை டாக்டர். நான் கூப்பிட்ட போது அவர் அவர் மூச்சை இழுத்து விட்டார்..’’ அரசுவின் மனைவி சொல்வது சரிதான். அவர் சரியாகக் கண்டுபிடித்துவிட்டார். என்னால் மூச்சு விட முடிந்தது. அதையே சைகையாகப் பயன்படுத்தத்தான் அப்படிச் செய்தேன். ‘‘எங்க இன்னொரு வாட்டி கூப்பிடுங்க நானும் பார்க்கிறேன்..’’
‘‘அண்ணா... ரமேஷ் அண்ணா... இங்க பாருங்க... நான் பேசறது கேக்குதா?’’
மூச்சை வேகமாக இழுத்து விடுவதற்கு சக்தி திரளவில்லை. வழக்கமாக விடும் மூச்சே நின்று போனது போல இருந்தது. பெரும் போராட்டத்துக்குப் பின் ஓரளவுக்கு இழுத்துவிட்டேன்.
‘‘பார்த்தீங்க இல்ல சார்?’’
‘‘ஓ.கே. உங்களுக்கு நார்மலா நடக்கிற எல்லாமே அதீதமா தெரியுது.. ஆன ஒரு விஷயம். இப்ப ஓரளவுக்கு முன்னேற்றம் இருக்கு... வென்டிலேஷன் ரிமூவ் பண்ணிட்டோம். ஆக்ஸிஜன் மட்டும் வெச்சிருக்கோம். அது ஒரு சப்போர்ட்டுக்குத்தான். அவரால சுவாசிக்க முடியுது. ஆனா இதனால எல்லாம் பொழைச்சுடுவார்னு சொல்ல முடியாது.’’
‘‘அப்படின்னா இன்னும் ரெண்டு நாள் இருக்கட்டும் சார்..’’
‘‘பத்து நாள் ஆகிடுச்சு.. இத்தனை நாளா மூளைக்கு ரத்தம் போகலைன்னா அந்த செல்லெல்லாம் என்ன கதி ஆகி இருக்கும்னு நினைச்சுப் பாருங்க. பெட் ஷோர் வேற. உடம்பே ஊதினாப்பல ஆகிடுச்சு’’
யாரோ கை அழுத்திப் பார்க்கிறார்கள். பெண்ணின் கை. விமலாவா? அரசுவின் மனைவியா?
டாக்டர் ‘‘உங்க இஷ்டம்’’ என்றார்.

எல்லோரும் போய்விட்டார்கள்.
இரவு கண்ணைத் திறந்தேன். அது அன்று இரவா அடுத்த வருட இரவா என்பது தெரியவில்லை. இரவு என்பது மட்டும் தெரிந்தது. ஏனென்றால் என்னைச் சுற்றி நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. அங்கு ஒரு நிலவும் இருந்தது.


விகடன் இதழில் வெளியான சிறுகதை

புதன், ஆகஸ்ட் 01, 2012

ஆஸ்திரேலிய பண்பலையில் வெட்டுப்புலி



ஜூலை 22‍ம் தேதி ஆஸ்திரேலிய பண்பலையில் வெட்டுப்புலி குறித்த கலந்துரையாடல் நிகழ்ந்தது. அதை எதேச்சையாக இன்று அறிந்தேன். யாரோ, எங்கோ தூரதேசத்தில் கலந்துரையாடியது பரவசமாக இருந்தது. இணைப்பு கீழே



பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் இடம்பெற்ற தமிழ்மகன் எழுதிய வெட்டுப்புலி நாவல் பற்றிய கலந்துரையாடல். 

நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்: 
பார்த்தீபன், சத்யா, முகுந்த், நிமல் 

நூல்: வெட்டுப்புலி 
ஆசிரியர்: தமிழ்மகன் 
வெளியீடு: உயிர்மை பதிப்பகம் 
இணையத்தில் நூலினை வாங்க: http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=262 

 

இந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.

புதன், ஜூலை 25, 2012

வாண்டுமாமா



உங்களுக்கு 40 ‍ஐ கடந்து விட்டது என்றால் இரும்புக்கை மாயவி, ரிபபோர்டர் ஜானி, லாரன்ஸ் டேவிட் போன்ற பல காமிக் ஹீரோக்களை இன்னும் மறந்திருக்க மாட்டீர்கள்.
குழந்தகைகளுக்காக அந்தக் காலத்தில் எழுதிய முல்லை தங்கராசு, வாண்டுமாமா, அழ.வள்ளியப்பா போன்றவர்களையும் மறந்திருக்க மாட்டீர்கள். வாண்டுமாமா பூந்தளிர் ஆசிரியராக இருந்த நேரத்தில் நானும் அதே நிறுவனத்தில் வெளியான போலீஸ் செய்தி வார இதழின் பொறுபபாசிரியராக இருந்தேன், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு.
அவரைச் சந்தித்தேன்.

செவ்வாய், ஜூலை 17, 2012

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதிய மடல்


அன்புள்ள தமிழ்மகனுக்கு,
வணக்கம். நலம்தானே.
சமீபத்தில் உங்களை வீடியோவில் பார்த்தேன். நீங்கள் சுப்பிரபாரதிமணியன் புத்தகவெளியீட்டில் பேசியதை ரசித்தேன். நேற்று உங்கள் ’வெட்டுப்புலி’ நாவலை படித்தேன். முதல்நாள் இரவு தொடங்கி நேற்று மாலை முடிக்கமுடிந்தது. இத்தனைகாலமாக இதை தள்ளிப்போட்டது வருத்தமாக இருந்தது. படித்து பிரமித்துப்போய் இருக்கிறேன். எப்படி உங்களால் 100 ஆண்டு வரலாறையும், அரசியலையும், சினிமாவையும், வாழ்க்கையும் சுவையாக இணைக்க முடிந்தது. 370 பக்க நாவல் என்றால் அதற்கான குறிப்புகள் சேகரிக்க 3700 பக்கங்கள் தேவையாக இருந்திருக்கும். எத்தனை எத்தனை தகவல்கள். எப்படிஅவற்றை சுவாரஸ்யம் கெடாமல் கோர்க்க முடிந்தது. அந்தக் காலங்களில் என்ன காசு புழங்கும், என்ன உணவு, என்ன வேலை பார்த்தனர், என்ன பேச்சுமொழி என்று ஒவ்வொன்றும் பெரிய சவாலாக இருந்திருக்கும்.
ஓர் இடத்தில் தருப்தி என்று வரும்.  ஆப்பிரிக்காவில் இந்தப் பழக்கம் இருந்தது. குழந்தை ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிய பின்னர்தான் அது வாழப் பிறந்தது என்று கணக்கில் சேர்ப்பார்கள். தியாகராஜன் ஹேமலதா பகுதி மிக அழகாக வந்திருக்கிறது. ஆரம்பத்தில் பல இடங்களில் சிரித்தேன். அப்படியே அந்தக் கதையை சினிமாவாக எடுக்கலாம்.
.நான்காம் ஜோர்ஜ் படம் போட்ட ஒரு ரூபாய்தாள்
ஐயர் வூடுகளிலயும் காப்பி குடிக்க ஆரம்பிச்சுட்டான்
இந்தி பேசுது இங்கிலீஸ் பேசுது தமிழ் மட்டும் பேசாதா
இப்படியான இடங்களை எழுதுவதற்கு எத்தனை உழைப்பு தேவைப்பட்டிருக்கும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 (எழுத்தாளர் அ.முத்துலிங்கம் மிகச் சிறந்த படிப்பாளி. உலக அனுபவம் அதிகம் பெற்ற தமிழ் எழுத்தாளர். அவர் எழுத்துக்களைப் பிரமிப்பாக படிப்பேன். அதுவும் என்னைப் பற்றி எழுதியதை படிப்பதென்றால்... எனக்கு எவ்வளவு ந்ம்பிக்கை ஏற்பட்டிருக்கும் என்பதை விளக்குவது கடினம்.)

புதன், ஜூன் 27, 2012

கேள்விகளின் குழந்தைகள் !


ரு வறட்சியான ஞாயிற்றுக்கிழமை. டி.வி. நிகழ்ச்சிகளில் மண்டை காய்ந்து போய்
வீட்டில் இருந்த டி.வி.டி.களை தூசு தட்டினோம். அஜீத் நடித்த ‘காதல் கோட்டை’,
விஜய் நடித்த ‘குஷி’ ஆகிய திரைப்படங்களைத் தேர்வு செய்தோம்..

இருவரும் சந்தித்துவிட மாட்டார்களா என்பதுதான் இரண்டு படங்களிலும்
 நாற்காலி நுனிக்குத் தள்ளிய கிளைமாக்ஸ். இப்போதும் எனக்கு அந்தப் பரபரப்பில்
 மூழ்கிப் போவதில் எந்தவித சுணக்கமும் இல்லை. அஜீத், விஜய் என்ற பேதமும்
எனக்கு இல்லை.

சுமார் பத்தாண்டு இடைவெளியில் என் ரசனையில் எந்த மாற்றமும் இல்லாமல்
அன்று பார்த்தது மாதிரியே ரசித்தேன்..

படங்களைப் பார்த்து முடிந்ததும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த உறவுக்காரின்
 பெண் ஒரு கேள்வி கேட்டாள். ‘‘ஏன் ரெண்டு படத்திலும் ஒருத்தரை ஒருத்தர்
பார்த்துக்க முடியாம இவ்வளோ கஷ்டப்பட்றாங்க? செல்போன்ல ‘நான்
இங்கத்தான் இருக்கேன்.. நீ எங்க இருக்கேனு கேக்க வேண்டியதுதானே?’’

அவள் இந்த பத்தாண்டுகளுக்குள் பிறந்தவள்.

நிறைய பேர் அந்தப் படத்தைப் பார்த்தாலும் குழந்தைக்குத்தான்
அந்த சந்தேகத்தைக் கேட்க முடிந்தது.

அந்த படம் வந்த போது செல்போன் என்பது இங்கு இல்லை என
 சொன்னால், செல்போன் இல்லாம எப்படி இருந்தீங்க என ஆச்சர்யப்பட்டாள்.

குழந்தைகள் ‘மாத்தி யோசி’.. என்பதை இயல்பாக யோசிக்கின்றன.

"நிலாவில் ஆயா வடைசுட்டுக் கொண்டிருக்கிறாள்" என்றதும்,
"சுட்ட வடையை யாருக்கு விற்பாள்?"என்று குழந்தைகள் கேட்கின்றன.

‘‘முயலுக்கும் ஆமைக்கும் ரேஸ் வெச்சாங்களாம்.’’ இந்தக் கதையைச் சொன்னேன்.

தீவிர யோசனைக்குப் பிறகு நண்பரின் பையன் ஒரு கதையைச் சொன்னான்.

‘‘இந்த ரேஸ்ல ஒரு மிஸ்டேக் இருக்கு. முயல் ஃபாஸ்ட்டா ஓடும்.
ஆமை ஸ்லோவா போவும். இது ரெண்டுக்கும் யாராவது ரேஸ் வைப்பாங்களா?
வேணும்னா முயலுக்கும் மானுக்கும் ரேஸ் வைக்கலாம்... எல்.கே.ஜி.
 படிக்கிறவனுக்கும் பிளஸ் டு படிக்கிறவருக்கும் எக்ஸாம் வெச்சா எப்படிப்பா..?
முயலுக்கும் ஆமைக்கும் ரேஸ் வெச்சா ரெண்டுக்கும் ஈக்குவல்
இம்பார்டன்ஸ் கொடுக்கணும்.. பாதி தூரம் ஓடிக் கடக்கணும். நடுவுல
ஒரு ஆறு வரும். அதை நீந்திக் கடக்கணும்.. இந்த ரெண்டையும்
கடந்து யார் மொதல்ல வர்றாங்களோ அவங்களுக்குத்தான்
 பர்ஸ்ட் பிரைஸ்.. இப்ப ஓ.கே.வா?’’

குழந்தைளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், பல சமயங்களில்
 நாம் விடையறியாத கேள்விகளின் குழந்தைகளாகிறோம்.

குழந்தைகள் சொல்லும் கதைகளும் அவர்கள் கேட்கும் சந்தேகங்களும்
சுவாரஸ்யமானவை. நமது பள்ளிக்கூடங்கள் குழந்தைகளின் கதைளுக்குக்
காது கொடுப்பதில்லை. அவர்களின் சந்தேகங்களுக்குக் காது கொடுப்பதில்லை.

மூட்டை மூட்டையாகப் புத்தகங்களைக் கொடுத்து அதை பத்து மாதங்களுக்குள்
படித்து முடித்து 99 மார்க் எடுத்து பாஸ் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறோம்.

இதில் அரசுப் பள்ளிக்கூடம், மெட்ரிக் பள்ளிக்கூடம், சி.பி.எஸ்.ஸி. என்று
விதம்விதமான புத்தகமூட்டைகள் வேறு. எல்லோருக்கும் சமமானதாகவும்
சீரானதாகவும் ஒரு கல்வி அவசியம். அதை யார் உருவாக்கினாலும் சரி.

நன்றி: விகடன்.காம் 

செவ்வாய், மே 22, 2012

இரண்டு அதிர்ச்சிகள்



முன்பெல்லாம் தமிழ்மகன் என்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் என்றொரு படம் வந்தது. அதன் பிறகு நான் அதில் காணாமல் போனேன். எப்போது தேடினாலும் விஜய், ஸ்ரேயா, நமீதா பற்றிய செய்திகள்தான் படும்.
நான் ஆத்திரப்படுவதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் இப்படி இடையூறாகிவிட்டது அவர்களுக்கு ஒரு பொருட்டும் அல்ல.
சில நாட்களுக்கு முன் அழகிய தமிழ்மகன் படத்தின் சில காட்சிகளை டி.வியில் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும் அதிர்ச்சி. கவிஞர் மு.மேத்தா அந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் வந்தார். அதாவது கவிஞர் மு.மேத்தாவாகவே. அவர் என்னுடைய கல்லூரி பேராசிரியர். எனக்கு சந்தோஷமாக இருந்தது. படத்தில் விஜய்யின் கவிதையைப் பாராட்டி அவர் தமிழ்மகன் என்று சிறப்பித்தார். விஜய் அழகாக இருப்பதால் அழகிய தமிழ்மகன் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதில் அதிர்ச்சி அடைவதற்கு எனக்கு ஒரு காரணம் இருந்தது. கல்லூரியில் படித்த காலத்தில் என் கவிதைத் தொகுப்பு வெளியான நேரத்தில் எனக்கு ஒரு புனைப் பெயர் வேண்டும் என்று கோரிய போது எனக்கு அந்தப் பெயரை வைத்தவர் கவிஞ‌ர் மு. மேத்தா அவர்கள்தான்.
என் வாழ்க்கையில் நமீதா, ஸ்ரேயா ஆகியோரைக் குறுக்கிட வைத்தவர் என் ஆசானா?

சரி என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

கலகலப்பு என்று ஒரு படம். சுந்தர்.சி இயக்கி சந்தானம், விமல், அஞ்சலி, ஓவியா போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.
அதில் சந்தானத்தின் பெயர் வெட்டுப்புலி. அது நான் எழுதிய நாவலின் பெயர்.
அதிர்ச்சி அடைவதற்கு ஓரளவுக்கு வாய்ப்பு உண்டு தானே?

என் நாவலில் சிறுத்தையோடு போரிட்ட என் கொள்ளு தாத்தாவின் வீரத்தைச் சொல்லிவிட்டு, அது எப்படி ஒரு தீப்பெட்டிக்கு சின்னமாக மாறியது என்று சொல்லி இருப்பேன். சந்தானமும் தன் பெயர் காரணத்துக்கு அதையேதான் சொல்கிறார்.
படத்தின் இரண்டாவது பாதியில் சந்தானம் பல இடங்களில் வெட்டுப்புலியின் வீர தீரத்தைச் சொல்கிறார்.
எப்போதுமே ஏதாவது ஒரு திரைப்படம் வெளியான பிறகு காமெடி நடிகர்கள் அந்தப் படத்தைப் போலவே காட்சிகள் அமைத்துக் கிண்டல் அடிப்பார்கள். விவேக், சந்தானம் போன்றவர்களிடம் அடிக்கடி சிக்கிக் கொள்பவர்  நடிகர் கமல்ஹாசன். வெட்டுப்புலி நாவலை திரைப்படமாக எடுக்க விரும்பி சில இயக்குநர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது படமாக வருவதற்கு முன்பே சந்தானமும் சுந்தர்.சி யும் முந்திக் கொண்டது ஒரு விதத்தில் ஆச்சர்யம்தான்.

ஞாயிறு, மே 13, 2012

கிருஷ்ணா டாவின்ஸிக்காக சென்னையில் ஒரு இரங்கல் நிகழ்ச்சி நடந்தது. அதைப்
பற்றி ஜூனியர் விக்டனில் நான் ஒரு பக்கத்தில் எழுதினேன்.  அது ...


கிருஷ்ணாவும் டாவின்ஸியும்

கிருஷ்ணா டாவின்சி... பத்திரிகைகள் வாசிக்​கும் பழக்கம் உள்ள அனை
வருக்கும் அறிமுகம் ஆன பெயர்!
இளம்வயதிலேயே மரணத்தைத் தழுவிய அவரை நினைவு கூர்​வதற்கு நிறையச்
செய்திகள் இருந்ததை, ஞாயிற்றுக்​கிழமை சென்னையில் நடந்த அவருக்​​கான
நினைவேந்தல் நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. தமிழில்வெளியாகும் அத்தனை
செய்தி நிறுவனங்​களில் இருந்தும் வந்திருந்து அரங்கை நிறைத்திருந்தனர்
பத்திரிகை​​யாளர்கள்.
கிருஷ்ணாவின் சகோதரியும் எழுத்தாளருமான உஷா, ‘கிருஷ்​ணா​வின் முதல்
பள்ளிநாள் நினை வுகளில் இருந்து அவர் மரணப்படுக்கையில் பயமில் லாமல்
புன்னகைத்தது’ வரை நெகிழ்ச்சியாக எடுத்து ரைத்தார். ‘கிருஷ்ணா
டாவின்சியின் புன்னகை ஒரு ஞானியின் புன்னகையைப் போல இருக்கும்’ என்றார்
எழுத்தாளர் மதன். ‘மரணத்தைக் கண்டு கலங்காத, அதை வாழ்வின் இன்னொரு
தரிசனமாகப் பார்த்தவருக்கு கிருஷ்ணா என்று பெயர் வைத்தது
பொருத்தமானதுதான் ’ என்று, அவருடைய தந்தை பெருமைப்பட்டார்.
தொடர்ந்து பேசிய பலரும் கார்கில் போரின் போது கிருஷ்ணா, நேரடி ரிப்போர்ட்
செய்தது, இலங்கை சென்று பிரபா​கரனின் நேர்காணலை எடுத்து வந்தது, ஒரு
குறிப்பும் இல்லாமல் ரஜினியின் பேட்டியை ஆறு வாரங்களுக்கு எழுதி
ரஜினியிடம் பாராட்டுப் பெற்றது என்று சிலாகித்​தார்கள்.
கிருஷ்ணா டாவின்சியின் குழந்தை நேயா நடனமாட இவர் கிடார் இசைத்துப் பாடும்
வீடியோ ஒன்றைத் திரைஇட்டார்கள். எல்லா நேரமும் குழந்தையுடன் விளையாடி,
குழந்தைக்காகப் பாடி, குழந்தையோடு சுவரெல்லாம் கிறுக்கி மகிழ்ந்த
நினைவுகளை பார்க்க முடிந்தது.  சினிமா, அரசி​யல், சூழலியல், புத்தகங்கள்,
இலக்கியம், விளையாட்டு, பொருளாதாரம், அறிவியல் என அனைத்துத் துறை யிலும்
அவருடைய எழுத்து முத்திரை இருந்தது. இசைப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு
இருந்த இன்னொரு முகம் நெருங்கிப் பழகியவர்களுக்கே தெரியும். இறுதிக்
காலத்தில் இசைபற்றியே அவர் நிறைய எழுதினார். ‘இசையாலானது’ என்ற நூலும்
அக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இயக்குநர் லிங்குசாமி வெளியிட குழந்தை
நேயா பெற்றுக் கொண்டாள். ‘‘நேயாவின் எதிர்காலத்துக்காக எம்மாதிரியான
உதவியும் செய்யக் காத்திருக்கிறேன்’’ என்ற லிங்குசாமியின் அறிவிப்பும்
‘‘கிருஷ்ணா டாவின்சியின் பெயரில் பத்திரிகையாளர் விருது வழங்கப்பட
வேண்டும்’’ என்ற ‘பாலை’ செந்தமிழனின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டிய
ஆத்மார்த்தமான செயல் திட்டங்கள்.
விஜய் டி.வி.யில் நடிகர் சூர்யா நடத்தும் ‘கோடீஸ்​வரன்’ நிகழ்ச்சிக்கான
ஒத்திகையை கிருஷ்ணா டாவின்சியை வைத்தே செய்திருக்கிறார்கள். அதில்
‘உங்கள் பெயரில் டாவின்சி இணைந்ததற்கு என்ன காரணம்’ என்கிறார் சூர்யா.
புன்முறுவலோடு அவருடைய பதில்: ‘‘டாவின்சியை மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்
என்பார்கள். ஜாக் ஆஃப் ஆல் சப்ஜெக்டாக.. அதாவது எல்லாவற்றிலும்
நுனிப்புல்லாவது மேயலாமே என்றுதான் வைத்துக் கொண்டேன்’’
அது, கிருஷ்ணா டாவின்சியின் தன்னடக்கம்.!

LinkWithin

Blog Widget by LinkWithin