வியாழன், அக்டோபர் 06, 2011

வேலைவெட்டி இல்லாத ஹீரோக்கள்!


"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். "படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார். "பாசமலர்', "பாகப்பிரிவினை', "தங்கப்பதக்கம்', "ரிஷிமூலம்', "ரிக்ஷாக்காரன்', "நல்லநேரம்', "அவர்கள்', "அபூர்வ ராகங்கள்', "நினைத்தாலே இனிக்கும்' என எந்தப் படத்தைப் பார்த்தாலும் கதாநாயகன் யார் என்று ஒரு பிடிமானம் இருக்கும். ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். அவர் கல்லூரி மாணவராகவோ, வேலை தேடுபவராகவோ இருப்பதும்கூட கதாபாத்திரத்தின் வேர் எங்கே ஊன்றப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும்.
சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாக்களில் ஹீரோக்கள் வெட்டி ஆபீஸராக வந்து கொண்டிருப்பதுதான் வேதனை.
காதல் செய்வதோ, காதலர்களைச் சேர்த்துவைப்பதோ மட்டுமே முழு நேரப்பணியாகக் காட்டப்படுவதுடன் இந்த வேலைவெட்டி இல்லாதவர்களுக்குக் கல்லூரி மாணவிகள், கல்லூரி பேராசிரியைகள் காதலிகளாக அமைந்திருப்பது அடுத்தக் கட்ட வேதனை.
அமீர் இயக்கிய "பருத்திவீரன்' படத்தில் கார்த்தி ரெüடித்தனம் பண்ணிவிட்டு ஜெயிலுக்குப்போவதைப் பெருமையாக நினைப்பவர். கைது செய்து காவல்துறையினர் போட்டோ எடுக்கும்போது கம்பீரமாகப் போஸ் கொடுப்பவர். அவருக்கு பள்ளிமாணவி பிரியாமணி காதலி!
"சுப்பிரமணியபுரம்' படத்தில் கூலிப்படை ஆசாமி ஜெய்க்கும் பள்ளிமாணவிக்கும் காதல்.
"நாடோடிகள்' படத்தில் சசிகுமாரின் நண்பர்கள் பட்டாளம் அனைவருமே எந்த வேலைவெட்டியும் இல்லாமல் சும்மா பொழுதைப் போக்குபவர்கள்தான். காதலர்களைச் சேர்த்துவைப்பதுதான் இவர்களது முழுநேர வேலை. எங்கும் எப்படி! முழுநேர வேலை.
"களவாணி' படத்தில் வீட்டுக்கு அடங்காமல் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கும் விமல் காதலிப்பது பள்ளிக்குச் செல்லும் மாணவியை.
"ஆடுகளம்' படத்தில் சேவல் சண்டை தனுஷ் காதலிப்பது கல்லூரி மாணவியை. "நந்தா' படத்தில் லைலா காதலிப்பது தாதா சூர்யாவை.
"பிதாமகன்' படத்தில் லைலா காதலிப்பது லேகிய வியாபாரம், சில்லரைத் திருட்டு எனத் திரியும் சூர்யாவை.
"அவன் இவன்' படத்தில் இன்னும் ஒருபடி மேல் திருடன் பெண்போலீஸ் விரட்டி விரட்டிக் காதலிக்கிறான்.
"படிக்காதவன்' படத்தில் படிக்காத தனுஷை காதலிப்பார் கல்லூரி மாணவி தமன்னா. "பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் பிளஸ் டூ பாஸ் பண்ண முடியாமல் பிட் அடித்துக் கொண்டிருக்கும் ஆர்யாவை டுடோரியல் கல்லூரி ஆசிரியை காதலிப்பார்.
படிக்காத, வேலைபார்க்காத அல்லது சமூக விரோத செயல் செய்பவர்களை தமது திரையுலகக் கதாநாயகர்கள் காதலித்துக் கொண்டிருப்பது வேதனையான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தெருவோர ரோமியோக்களுக்கு இத்தகைய படங்கள் கல்லூரி மாணவிகளை காதலிக்கும் அசட்டு தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதியாக இருக்கிறது. இது போன்ற சினிமாக்களை பார்த்துவிட்டு, தெருவில் வேலைவெட்டியில்லாமல் சுற்றும் நபர்களைப் பள்ளி மாணவிகளும், படித்த பெண்களும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொள்ளத் தொடர்கிறார். அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?
சினிமா என்கிற சக்தி வாய்ந்த மீடியம் இதற்குத்தானா பயன்பட வேண்டும்? அசட்டுத்தனமான இத்தகைய காதல்கள் அந்த நேரத்தில் படம் பார்ப்பவர்களுக்கு ஒருவகை நகைச்சுவை உணர்வைத் தருவதோடு சரி. இத்தகைய முரண்பட்ட இருவர் காதலராகிச் சேர்ந்து வாழ்வது பொருத்தமில்லாத பல்வேறு சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர்கள் உணரவேண்டும். திரைப்படக் கதாசிரியர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சமுதாயக் கடமை கிடையாதா? சினிமா பொழுதுபோக்குதான், உண்மை. ஆனால் பொழுதுபோக்கு என்ற பெயரில் சமுதாயத்தைச் சீரழிக்க முற்படுவதுகூட ஒரு சமூகவிரோதச் செயலல்லவா!

சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரை

என்ன ஆனார்கள் இவர்கள்?


தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்களைத் தந்து சிரிக்க வைத்திருக்கிறார்கள், காதல் சித்திரங்களைப் படைத்திருக்கிறார்கள்... ஆனால் அப்படிப் படம் எடுத்த பெரும்பாலோரின் சொந்த வாழ்க்கைகள் என்னவோ கண்ணீர் காவியங்களாகத்தான் முடிந்திருக்கின்றன.
1916 -ஆம் ஆண்டு "கீசகவதம்' என்ற படத்தைத் தயாரித்தவர் நடராஜ முதலியார் என்ற தமிழர். அவருடைய ஸ்டூடியோ எரிந்து போனதால் மகத்தான நஷ்டத்துக்கு ஆளானவர். முதல் படத்திலிருந்தே நஷ்டம் ஆரம்பித்திருந்தாலும் கடந்த 90 ஆண்டுகளில் சுமார் ஆறாயிரம் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகியிருக்கின்றன என்பதுதான் இந்த மாய உலகின் சுவாரஸ்யமான சூதாட்டத்தின் வெற்றி.
இதில் ஐந்தாயிரம் படங்கள் தோல்வி அடைந்திருந்தாலும் இந்தக் கட்டுரை அந்தப் படங்களைத் தயாரித்தவர்கள் பற்றியதல்ல. சுமார் ஆயிரம் மகத்தான வெற்றிப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் பற்றியது. சூப்பர் ஹிட் படங்கள் தந்த பலரின் இறுதி வாழ்க்கையும் அப்படியொன்றும் பிரகாசமாக இல்லை என்பதுதான் சினிமா தரும் வரலாறு.
அதிர்ச்சியூட்டும் இந்த புள்ளிவபரத்தை இந்தத் தலைமுறையினரின் நினைவுக்கு எட்டிய சில தயாரிப்பாளர்களை வைத்தே கணித்துவிடமுடியும்.
தமிழ் சினிமாவின் புதிய அலையாகக் கொண்டாடப்படும் பாரதிராஜா காலத்திலிருந்தே இதைப் பார்க்கலாம்.
"பதினாறு வயதினிலே', "கிழக்கே போகும் ரயில்', "கன்னிப் பருவத்திலே' போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு. அவர் படங்களில் நடித்த ரஜினி, கமல், ஸ்ரீதேவி, ராதிகா, கவுண்டமணி, பாக்யராஜ், வடிவுக்கரசி, ராஜேஷ் ஆகியோர் இன்றும் பிரபலமாக இருக்கிறார்கள். இயக்குநர் பாரதிராஜாவை சினிமா சரித்திரம் பொன்னேட்டில் குறித்துவைத்திருக்கிறது... ஆனால், இவர்களுக்கெல்லாம் திருப்புமுனை தந்த எஸ்.ஏ. ராஜ்கண்ணு?


நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் நடிப்பில் "மகாநதி' படத்தைத் தயாரித்தார். நதி அவரை கரையேறும் வழியைக் காட்டவில்லை. அதற்குப் பிறகு கடைசியாக சூர்யாவை வைத்து பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு படத்துக்குப் பூஜை போட்டார். ஸ்டூடியோ வாசலில் ஒரு யானை நின்றிருந்தது. விழாவுக்கு வரும் விருந்தினர் ஒவ்வொருவரையும் யானை மீது ஏற்றி வாசலில் இருந்து பூஜை நடக்கும் இடம் வரைக்கும் சுமந்து சென்று இறக்கிவிட்டனர். அந்தப் படம் பூஜையோடு நின்று போனது. கடைசி காசையும் ஆனைக்கே செலவழித்துவிட்டு அமைதியாகிவிட்டார். ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது இதைத்தானோ?
தம்மை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற அக்கறையில் எஸ்.ஏ. ராஜ்கண்ணுவுக்கு சில காலம் ராடன் டி.வி.யில் ஒரு பொறுப்பு கொடுத்து சம்பளமும் கொடுத்தார் ராதிகா. வயோதிகம்.. தம் மகள்களின் வாழ்க்கை என காலம் அவரைச் சுழற்றியடித்தது.
அமைதியை மட்டுமே அவசரத் தேவையாக ஆகிப் போனது. பாரதிராஜா, பாக்யராஜ், ராஜேஷ் போன்ற சில அவருடைய அறிமுகங்கள் உதவியோடு செங்கல்பட்டுக்குத் தெற்கே தற்போது ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ராஜ்கண்ணு.


விஜயகாந்துக்கும் எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கும் வெளிச்சம் தந்த படம் "சட்டம் ஒரு இருட்டறை'. தயாரித்தவர் வடலூரான் கம்பைன்ஸ் சிதம்பரம். "சாதிக்கொரு நீதி', "நீறு பூத்த நெருப்பு' என்று சமூகநீதி பேசிய அவருடைய படங்கள் சமுதாயத்தில் வாழ நிதி தரவில்லை. தொழிற்சங்கத் தலைவராக இருந்த அவர், தாம் தலைவராக இருந்த தொழிலாளிகளின் நலனுக்காக ஒரு திரைப்படம் எடுக்க விரும்பினார். நிறைய பேரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருந்தாலும் படம் எடுப்பதற்கு அவர்கள் தயவுமட்டும் போதாதே... பணம் வேண்டுமே.. கடைசி வரை அந்த ஆசை நிறைவேறவே இல்லை.

"பயணங்கள் முடிவதில்லை' திரைப்படம் ஒரு மியூசிக்கல் ஹிட் தந்த படம். நடிகர் மோகன் தன் கையில் மைக் வைத்திருந்தாலே போதும் படம் நூறுநாட்கள் ஓடும் என்று பேச வைத்தது. கோவைத் தம்பி தயாரித்த அந்தப் படம் அதுவரை இசையமைப்பாளர்கள் என்றால் போஸ்டரின் கடைசியில் டைரக்டர் பெயருக்குக் கீழே இடம் பெற்றுவந்த சிஸ்டத்தை மாற்றி போஸ்டரே இசையமைப்பாளர்தான் என இளையராஜாவை முன்னிலைப்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்தியது. "இளமைக் காலங்கள்', "நான்பாடும் பாடல்', "இதயக்கோயில்' போன்றவை ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன் போன்றவர்களோடு மணிரத்னத்தையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது.
"ஆயிரம் பூக்கள் மலரட்டும்', "மண்ணுக்குள் வைரம்' போன்ற படங்களுக்குப் பிறகு திரைப்படங்கள் அவருக்கு லாபத்தைத் தரவில்லை. மீண்டும் அவருடைய பழைய அரசியல் வாழ்க்கைதான் அவருக்கு ஆதரவாக அமைந்தது.
தங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட டெக்னீஷியன்கள் பிரபலமாக இருப்பதும் படத்தைத் தயாரித்த அவர்கள் காணாமல் போவதும் சினிமா சரித்திரத்தில் தொன்று தொட்டு இருக்கும் சாபக்கேடுதான்.


"சூரியன்', "ஜென்டில்மேன்', "காதலன்' போன்ற படங்களுக்குப் பிறகு ஸ்டார் தயாரிப்பாளராக மாறினார் கே.டி. குஞ்சுமோன். தியேட்டர் வாசலில் தயாரிப்பாளருக்கு பேனர் வைக்கப்பட்டது இவருடைய படங்களுக்காகத்தான் இருக்கும். வெள்ளை பேண்ட, வெள்ளை ஷூ அணிந்து கும்பிட்டு வரவேற்கும் இவருடைய படம் அப்போது பிரபலம். பவித்ரன், ஷங்கர் போன்ற நட்சத்திர இயக்குநர்கள் இவருடைய அறிமுகங்கள்தான். "சூரியன்' திரைப்படம் சரத்குமாருக்கு நட்சத்திர அந்தஸ்த்தை உயர்த்திய முக்கியமான திரைப்படமாக இருந்தது. அதே போல் அர்ஜுனுக்கு "ஜென்டில்மேன்'. பிரபுதேவா, நக்மா, ஒளிப்பதிவாளர் ஜீவா போன்றவர்கள் இவருடைய அறிமுகங்களில் முக்கியமானவர்கள்.
"ரட்சகன்' இவருடைய அத்தனை சம்பாத்தியத்தையும் பதம் பார்த்தது. மனம் தளராமல் தன் மகன் எபி குஞ்சுமோனை கதாநாயகனாக்கி "கோடீஸ்வரன்' என்ற படத்தைத் தயாரித்தார். பத்து வருடமாகியும் படம் வெளியாகவே இல்லை. மீண்டும் தன் மகனை வைத்து மூன்றுவருடமாக ஒரு படத்தை முயன்றுவருகிறார். இதுதான் இன்றைய குஞ்சுமோனின் நிலைமை.
"சின்னத்தம்பி' என்ற சூப்பர் ஹிட் படத்தை யாரும் மறக்க முடியாது. பிரபு, குஷ்பு, இயக்குநர் வாசு ஆகியோரின் சினிமா வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட படம். தயாரித்தவர் கே.பி. பிலிம்ஸ் பாலு. அதன் பிறகு அவர் தயாரித்த பல படங்களும் ஏராளமான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தன.
1991-ல் வெளியான இந்தத் திரைப்படம் பத்துகோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்ததாகக் கூறப்பட்டது. பி.வாசுவும், பிரபுவும், குஷ்புவும் அடுத்தடுத்து அடைந்த வெற்றிகளுக்குச் சின்னத்தம்பி காரணமாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர்? அவர் படத் தயாரிப்பில் இறங்கி பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

திரைப்படக் கல்லூரியில் இருந்து வருபவர்கள் எல்லாம் ஆர்ட் ஃபிலிம் எடுக்கத்தான் லாயக்கு என்ற பெயரை மாற்றியவர் ஆபாவாணன். "ஊமைவிழிகள்', "செந்தூரப் பூவே', "இணைந்த கைகள்' போன்ற இவருடைய தயாரிப்புகள் மிகுந்த கவன ஈர்ப்பை ஏற்படுத்தின. எழுத்தாளர் இந்துமதியுடன் சேர்ந்து "கருப்பு ரோஜாக்கள்' என்ற படத்தைத் தயாரித்தார். பல கோடி செலவில் தயாரிக்கப்பட்ட அந்தப்படம் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக அவர் வேறு படம் எதையும் தயாரித்ததாகத் தெரியவில்லை.


"கேப்டன் பிரபாகரன்' என்ற படம் விஜயகாந்த் மறந்தாலும் அவருடைய சினிமா அரசியல் தொண்டர்களாலும் மக்களாலும் மறக்கவே முடியாத படம். நூறு படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் இன்னமும் அவரை கேப்டன் என்றுதான் எல்லோரும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் படத்தைத் தயாரித்தவர் அவருடைய நண்பர் ராவுத்தர். ராவுத்தர் ஃபிலிம்ஸ் என்றால் திரையுலகில் அத்தனை மரியாதை. புலன் விசாரணை என்ற திரைப்படம் மூலம் ஆர்.கே.செல்வமணியை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர். நடிகர் மன்சூரலிகானும் இவருடைய அறிமுகமே.
விஜயகாந்திடம் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்த பின்னர் ஒரே நாளில் அதிரடியாக ஐந்து படங்களுக்குப் பூஜை போட்டார். அவற்றில் ஒன்றோ, இரண்டோ வந்ததும் தெரியாமல் போயின. சில பாதியில் நின்றன. அடுத்து "புலன்விசாரணை-2' என்ற தலைப்பில் பிரசாந்தை வைத்து ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் ஒரு படத்தை ஆரம்பித்தார். அதுவும் பாதியில் நின்றது. தயாரித்த படங்களைவிட தயாரித்துப் பாதியில் நின்ற படங்களின் பட்டியல் அதிகமானதுதான் மிச்சம். கடந்த பத்தாண்டுகளாக இவர் படத் தயாரிப்பு எதிலும் ஈடுபடவில்லை.

எண்பதுகளில் "பாலைவன ரோஜாக்கள்' படம் நட்பையும் காதலையும் சரிவிகிதத்தில் தந்தபடம். ஆண்கள் கூட்டத்தில் ஒரு பெண்ணும் நட்போடு பழகும்பாணி கதைகளுக்கு முன்னோடியாக அமைந்தது இது. சந்திரசேகர், சுகாசினி திரைவாழ்க்கையில் நட்சத்திர புள்ளிகளை உயர்த்திய படம். தயாரித்தவர் ஆர்.வி. கிரியேஷன்ஸ் வடிவேலு. "ராஜாங்கம்' படத்தில் சந்திரசேகரை கதாநாயகனாக்கி சிம்மாசனத்தில் அவர் அமர்ந்திருப்பது போல அண்ணாசாலையில் வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட்-அவுட்டை யாரும் மறந்திருக்க முடியாது.
அதன் பிறகு 'லாட்டரி டிக்கெட்' போன்ற சில படங்களை எடுத்தார். இறுதியில் தன் மகனை ஹீரோவாக்கும் முயற்சியில் இறங்கினார். அந்தப் படம் ரிலீஸ் ஆனதாகத் தெரியவில்லை.

விஜயசாந்தியின் மேக்-அப் மேன் பதவியில் இருந்து அவருக்கு மேனேஜரானவர் ஏ.எம்.ரத்னம். பணத்தைத் தண்ணீராக செலவு செய்வதில் இவர் குஞ்சுமோனுக்கு நேர் மூத்தவர். "வைஜெயந்தி ஐ.பி.எஸ்.' விஜயசாந்தியை ஆக்ஷன் கதாநாயகியாக்கி ஹீரோக்களுக்கு நிகரான மகத்துவத்தை ஏற்படுத்தியது. "இந்தியன்', "தூள்', "கில்லி', "குஷி', "ரன்' போன்ற இவருடைய திரைப்படங்கள் தமிழ்சினிமாவில் உற்சாகத்தைப் பாய்ச்சியவை. ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா, தரணி, லிங்குசாமி ஆகியோரின் இயக்குநர் கனவுகளை நூறு சதவீதம் நிறைவேற்றித் தருகிற தயாரிப்பாளராக இருந்தார். இவருக்கும் குஞ்சுமோனுக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. இவரும் தம் மகனை ஹீரோவாக்க நினைத்ததோடு, இன்னொரு மகனை இயக்குநராக்கவும் முடிவு செய்தார். ஒவ்வொரு மகனுக்கும் தலா ஒரு கோடி முதலீட்டில் படம் எடுத்தார். எத்தனையோ ஹீரோக்களையும் இயக்குநர்களையும் உருவாக்கிய இவர், தம் மகன்களை ஜெயிக்க வைக்க முடியாமல் போனது காலத்தின் கோலம்தான்.




பாலாவுக்கு பெயர் வாங்கித் தந்த "சேது', "நந்தா', "பிதாமகன்' படங்களைத் தயாரித்தவர்கள் இப்போது என்ன ஆனார்கள்? அத்தனை பெரிய வெற்றிப் படங்களுக்குப் பின் அவர்கள் ஏன் காணாமல் போனார்கள்?
மேற்படி பட்டியலில் சொல்லப்பட்டவர்கள் சில சோற்றுப் பதங்கள்தான்.
நினைவில் நிற்கும் இந்தப் படங்களைத் தந்த இவர்களில் பலர் எங்கே இருக்கிறார்கள் என்றே யாருக்கும் தெரியாது. சிலரோ சினிமாவே வேண்டாம் என்று ஊரைப் பார்க்கப் போய்விட்டார்கள். அந்தப் படங்களில் பணியாற்றிய ஹீரோக்களும் இயக்குநர்களும்தான் ரத்த சாட்சியாக இப்போதும் இருக்கிறார்கள்.

பெரிய வெற்றிப்படங்கள் தந்தவர்களின் நிலைமையே இப்படியிருப்பின், தோல்விப்படங்களைக் கொடுத்து அறிமுகமான தயாரிப்பாளர்களின் நிலைமை? ஊரில் நிலபுலன்களை விற்று செல்லுலாய்ட் பிலிம் சுருள்களாகச் சுருட்டி வைத்திருக்கும் அவர்களில் சிலர் பரிதாபத்துக்குரிய பெரியவராக உங்கள் கண்களில் சிக்கலாம். சினிமாவுக்குப் போகிற அவசரத்தில் அவர்களை "ஓரமா போ பெருசு' என்றும் நீங்கள் சொல்லியிருக்கக் கூடும்.
- தமிழ்மகன்
படங்கள் உதவி: ஞானம்

16-30 செப்டம்பர் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரை

LinkWithin

Blog Widget by LinkWithin