திங்கள், பிப்ரவரி 02, 2009

திரைக்குப் பின்னே -18

கதை சொல்லி!
மணிகண்டன் என்றொரு பள்ளித்தோழன். சினிமா பார்த்துவிட்டு வந்தால், மறுநாள் ஏறத்தாழ ஒரு மணிநேரம் அதை அப்படியே கதையாகச் சொல்லுவான். மனத்திரையில் காட்சிகள் ஓடும். ’ஷோலே' படத்தின் கதையை அவன் சொன்னது மாதிரி விறுவிறுப்பில் அந்தப்படம் உருவாக்கப்படவில்லை என்பது என் சொந்த அனுபவம். அவன் நடித்துக்காட்டுவான், பாடுவான். அமிதாப், அந்த ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டிவிடும்போது தியேட்டரில் தன் சீட்டுக்கடியில் சில்லறை விழுந்ததாக எல்லோரும் தேடுவார்கள் என்பான். உண்மையில் பத்துவருடம் கழித்து நான் படம் பார்த்தபோது மணிகண்டன் சொன்ன கதை மனத்திரையிலும் ஜி.பி.சிப்பி எடுத்தபடம் விழித்திரையிலும் ஓடிக் கொண்டிருந்தது. மனதில் இருந்த பிரமாண்டம் திரையில் பல இடங்களில் படுத்துவிட்டது என்பதுதான் நிஜம்.

கதை சொல்லுவது ஒரு பிரமிக்க வைக்கும் கலை.

நிலா வெளிச்சத்தில் பாட்டிகள் சொன்ன பேய்க் கதைகளின் பயங்கரங்கள் சில ஹாலிவுட் பேய்ப் படங்களைப் பார்க்கும்போதுகூட ஏற்படுவதில்லை.

எனக்குத் தெரிந்து இயக்குநர்கள் கே. பாக்யராஜ், சீமான் போன்றவர்கள் கதை சொன்னால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

மைசூர் அரண்மனையில் ’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' படப்பிடிப்பு.

இந்திய அளவில் திரைக்கதை அமைப்பதில் சக்கரவர்த்தி எனப் பாராட்டப்பட்ட கே.பாக்யராஜின் இன்னொரு பாராட்டுக்குரிய அம்சத்தைப் பார்த்தேன். பிரமாண்டமான அந்த அரண்மனையின் படிக்கட்டுகளில் எம்.ஜி.வல்லபன், சினி நியூஸ் செல்வம், ஜெமினி சினிமா வெற்றி உள்ளிட்ட 10,12 பத்திரிகையாளர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து அப் படத்தின் கதையைக் கேட்டது இப்போதும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சிவரை அப்படியே சொன்னார். சொல்லி முடித்துவிட்டு நன்றாக இருக்கிறதா என்றார். படத்தில் எத்தனை கேரக்டர்கள் உண்டோ அத்தனை சுபாவங்களோடும் கதையின் அத்தனை திருப்புமுனையையும் அவர் சொன்னவிதம் எங்கள் அத்தனை பேரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தது. மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றோம்.

ஆனால் கே.பாக்யராஜுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டு படம் தாமதமாகவும் போதிய விளம்பரமின்றியும் வெளியானது. சுமாரான பேச்சுதான். படம் பார்த்தோம். மனதில் இருந்த துல்லியம் திரையில் ஏதோ தொலைந்து போயிருந்தது.புதுமைப் பெண்!
’மகளிர் மட்டும்' படப்பிடிப்பில்தான் முதன் முதலில் ரேவதியைப் பார்த்தேன். விஜய வாகினி ஸ்டுடியோவில் கமலா தியேட்டருக்கு எதிரே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதிலேயே செட் அமைத்துப் படப்பிடிப்பு நடந்தது.

அந்தப் படத்தைத் தயாரித்த கமல்ஹாசனோடு அவர் சிறிய முரண்பாடு கொண்டிருந்த நேரத்தில் நான் அவரைச் சந்தித்தேன். படத்தில் ரேவதி, ஊர்வசி, ரோஹிணி ஆகிய மூவரும் நாசரின் ஆணாதிக்கப் போக்கை எதிர்த்து வியூகம் அமைப்பார்கள். அது தெரியாமல் நாசர் அந்த மூவரும் தன் வழிக்கு வந்துவிட்டதாக நினைத்து "கறவைமாடு மூணு, காளை மாடு ஒண்ணு'' என்று உற்சாகமாகப் பாடுவார். கறவை மாடு என்ற வார்த்தையைப் பாடல் வரியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் ரேவதியின் வாதம்.

ஆணாதிக்கவாதியின் சிந்தனையாக அப்பாடல் வெளிப்படுவதால் இறுதியில் ஒரு வழியாக சம்மதித்தார்.

’பான்யன்' அமைப்பில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் அங்கிருந்து காணாமல் போயிருந்த சமயத்தில் எக்மோர் ரயில் நிலையம் அருகே அவர்கள் இருந்ததை அறிந்து அவரே நேரில் சென்று அவர்கள் இருவரையும் மீட்டு வந்ததை அறிந்து அவர் மீது மேலும் மரியாதை கூடியது. தென்சென்னை மாவட்ட மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிட்டபோது எழுத்தாளர் மற்றும் பத்திரிகைத் தொடர்பாளர் சுராவுடன் சென்று அவரை வாழ்த்திவிட்டு வந்தேன். அவர் நடித்த படத்தின் தலைப்பு போலவே அவர் எப்போதும் புதுமைப் பெண்ணாக இருந்தார்.

சமீபத்தில் அண்ணாநகரில் ஒரு கடையில் அவர் ஏதோ பொருள்கள் வாங்கியிருக்கிறார். அதை ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ரேவதி "கொஞ்ச நேரம் இருங்கள்'' என்று கூறிவிட்டு காரில் இருந்து ஒரு துணிப் பையைக் கொண்டு வந்து கொடுத்து அதில் அந்தப் பொருள்களை எடுத்துச் சென்றார். என் நண்பர் ஒருவர் இதைப் பார்த்துவிட்டு வந்து என்னிடம் சொன்னார்.

புதுமைப் பெண்கள் எந்த இடத்திலும் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.புத்த மீனா!
திரைத்துறையில் பிரபலமாகிற நடிகைகளை நினைக்கும்போதெல்லாம் சிறகுகள் கத்தரிக்கப்பட்டு கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கும் கிளியின் ஞாபகம் வரும். அதிலும் குழந்தையிலிருந்தே பிரபலமாகிவிட்ட நட்சத்திரங்களுக்கு அம்மா சொல்கிற உலகம்தான் தெரியும்.


மீனாவுக்கு இன்னும்கூட மழலை மாறாத குரல்தான். இப்போதுகூட அவர் "ரஜினி அங்கிள்” என்று உச்சரித்தால், ’அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தின் சாயல்தான் தெரியும் அந்தக் குரலில்.

’நாட்டாமை', ’முத்து' என வெள்ளிவிழா நாயகியாக உலாவந்து கொண்டிருந்தபோது அவரைப் பற்றி ஒரு தொடர் எழுதினேன். தினமணியில் எட்டுவாரம் வெளியான அந்தத் தொடருக்கு தில்லானா தில்லானா என்று தலைப்பிட்டவர் அப்போது தினமணியின் இதழாசிரியராக இருந்த ஞாநி.

தொடருக்காக அடுத்தடுத்து மூன்று முறை சந்தித்தேன். ஒவ்வொரு முறையும் அவர் பள்ளி வயது ஞாபகங்கள் பற்றி நிறைய பேசினார். பள்ளியின் மரக்கிளையில் ஏறி விளையாடியதை அவர் கிட்டத்தட்ட நடித்துக் காட்டினார். அதை நினைவுபடுத்திக் கொள்வதில் அத்தனை சந்தோஷம். அவருடைய பள்ளி முதல்வர் அதைப் பார்த்துவிட்டு "ஆர் யூ எ மங்கி?” என்று திட்டியதைச் சொல்லிச் சிரித்தார்.

எவ்வளவு பெரிய நடிகையாக நாடே வியந்து கொண்டிருக்க அவருடைய மகிழ்ச்சி அந்தப் பள்ளி மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பதாகப்பட்டது.

என்னுடைய குறுக்குப் புத்தி விழித்தது. அவரைப் பற்றி வெளியாகிக் கொண்டிருந்த கிசு கிசு பற்றிச் சொன்னேன். அதற்கு அவருடைய ரியாக்ஷனைக் கவனிக்க வேண்டும் என்பது என் நோக்கம்.

சத்தியமாக அதைப்பற்றி அவருக்குத் தெரியவே இல்லை. அவரைப் பற்றி நல்லவிதமாக வெளியாகும் செய்திகள் மட்டுமே அவருடைய பார்வைக்குப் போகும் என்று தெரிந்தது. "என்னைப் பற்றி இப்படியெல்லாமா எழுதுகிறார்கள்? ஏன் அப்படி எழுதுகிறார்கள்'' என்று கேட்டார். அதில் நடிப்பில்லை. முதுமை, நோய், மரணம் பற்றித் தெரியாத சித்தார்த்தன் வாழ்க்கையைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அதையெல்லாம் முதலில் அறிந்த போது அவன் புத்தனானதாக ஒரு கதை உண்டு. மீனாவும் அப்படியொரு நிலையில்தான் இருப்பதாக ஒரு கணம் திகைத்தேன். அடுத்து அவரைச் சந்திக்கவில்லை. தொடரையும் நிறுத்திவிட்டேன்.

4 கருத்துகள்:

vinoth gowtham சொன்னது…

Interesting Collections.

முரளிகண்ணன் சொன்னது…

nice & interesting collections

பெயரில்லா சொன்னது…

thamilbest.com செய்தி, சினிமா, ஆடல், பாடல் அனைத்தினம் கூடல்

Nilofer Anbarasu சொன்னது…

//சினிமா பார்த்துவிட்டு வந்தால், மறுநாள் ஏறத்தாழ ஒரு மணிநேரம் அதை அப்படியே கதையாகச் சொல்லுவான். //
இதே போல் மாவீரன் படம் பார்த்துவிட்டு என் நண்பர்களிடம் கதை சொல்லியிருக்கிறேன். கண் இமைக்காமல் கேட்பார்கள். அதில் எனக்கு ஒரு சந்தோசம்.

//புத்த மீனா//
தலைப்பு சூப்பர்.

LinkWithin

Blog Widget by LinkWithin