செவ்வாய், ஆகஸ்ட் 07, 2007

ஜுலை - ஆகஸ்ட் 2007
சோவியத் எழுத்தாளர்களின் அறிவியல் புனைகதைகள்

தமிழ்மகன்
ஐசக் அசிமோவ், காரல் சேகன் போன்றவர் விஞ்ஞான புனைகதைகளின் மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள். ராபின் குக், மருத்துவத்துறையை மட்டும் களமாகக் கொண்டு ஜனரஞ்சக சயின்ஸ் பிக்சன் எழுதியவர்களில் முக்கியமானவர்.ஆனால் சோவியத் விஞ்ஞானப்புனைகதைகள், எழுத்துக்கள் மற்ற எல்லா சயின்ஸ் பிக்சன் கதைகளை விடவும் கருத்தாக்கத்தில் வேறுபட்டு விளங்குகின்றன. எதிர்கால மனித சமூகம் குறித்தும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் அதிக அக்கறை இக்கதைகளினூடே மெல்லிய இழையாகச் சொல்லப்பட்டிருப்பது அவர்களின் தனித்தன்மையாக இருக்கிறது.
டால்ஸ்டாய், ஆன்டன்செகாவ், தஸ்தயேவஸ்கி, இவான் தூர்கனேவ், கார்க்கி போன்ற மனித உறவுகள் போற்றும் மகத்தான இலக்கியப் பாரம்பரியம் கொண்டது சோவியத் இலக்கியம். அது இந்த விஞ்ஞானப் புனைகதைகளிலும் வெளிப்பட்டிருப்பதுதான் நம்மை மேலும் ஆச்சர்யப்படுத்துகிறது.ஜார்ஜ் ஆர்வெல் போன்றவர்கள் சோவியத்தில் எழுந்த மகத்தான மாற்றத்தை எதிர்மறை நோக்கோடு கதைகள் புனைவதற்கு (1984) எடுத்துக்கொண்டதில் இருக்கிற எதிர்பிரவா நெடியும் கூட இந்தக் கதைகளில் வீசவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
குறிப்பாக, ‘மர்மப் பகைவர்கள்’. இக்கதையை அரியாத்நா க்ரோமவா எழுதியிருக்கிறார். 1916ல் பிறந்தவர். 1967 வரை விஞ்ஞானக் கதைகள் எழுதி மக்களின் வரவேற்பைப் பெற்றவர்.வேறொரு நட்சத்திர மண்டலத்தில் புதிய கிரகம் ஒன்றில் ஆய்வு மேற்கொள்ளும் ஆறு பேரைச் சுற்றிச் சுழலும் கதை. வீக்தர், காஸிமீர், விளாதில்லாவ், கரேல், தலானவ், யூங்... அந்த ஆறுபேர்.கரேல் ஒரு வித்தியாசமான நோயால் அவதியுறுகிறான். ‘நான், நானாக இல்லை... என்னுள் வேறு யாரோ இருந்து செயல்படுத்துகிறார்கள்’ என்கிறான். அந்த நோயின் கடுமை அவனை தற்கொலை செய்து கொள்ள வைக்கிறது.அது நோய்தானா மனவலிமைக் குன்றியதால் தற்கொலை செய்து கொண்டானா என்று யோசிப்பதற்குள் பூமிக்குத் தரையிரங்குவோமா என்றே எல்லாருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது.கதை சூடுபிடிக்கிறது. விண்வெளித் தோழர்கள் பாதிக்கப்பட்டது ‘கிளேகு’கள் காரணமாக, அந்தக் கிளேகுகளை உருவாக்கி அதை உருவாக்கிவிட்டவர்கள், அந்தக் கிரகத்தில் உள்ள ஒருசாரார்தான் என்பதும் தெரியவருகிறது. கடைசியில் அவர்களே அந்த நோய்க்கு ஆளாகி நிலத்துக்குக் கீழே பதுங்குக் குழியில் ஒளிந்து கிடக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. கொஞ்சம் தம் ‘ஆந்தராக்ஸ்’ பயங்கரத்தைக் கற்பனை செய்து கொண்டால் போதும் பயங்கரம் புரிந்துவிடும்.ஏழு ஆண்டுகளாகப் பதுங்குக் குழியில் போராடிக் கொண்டிருக்கும் அவர்கள், எப்படியாவது எங்களைக் காப்பாற்றுங்கள் என்று பூமியாளர்களிடம் இறைஞ்சுகிறார்கள். பூமியிலிருந்து வந்தவர்களோ அந்த நோய்க்கு ஆளாகித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் காப்பாற்றிக் கொண்டு இரக்கமற்ற முறையில் ‘கிளேகு’களைப் பிரயோகித்துவிட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கும் அந்த ஜீவராசிகளையும் காப்பாற்ற வேண்டிய கடமையோடு அங்கிருந்து அவர்கள் பூமிக்குப் புறப்படுகிறார்கள்.ஒரு குழு இன்னொரு குழுவின் மீது நிகழ்த்தும் உழைப்புச் சுரண்டல் அதனால் அவர்களே மாட்டிக் கொள்ளும் பயங்கரம் போன்றவை விறுவிறுப்பும், அறிவுறுத்தலும் கலந்து சுவாரஸ்யமாகக் கதையை நடத்துகிறது. வேற்று கிரக மொழிகளைப் புரிந்துகொள்ள உதவும் ‘லிங்’ மொழி பெயர்ப்புக் கருவி, எனர்ஜிங் மாத்திரையின் செயல்பாடுகள் அறிவியல் எதிர்காலத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.‘பாறைச் சூறாவளித் துறைமுகம்’
இதே போன்ற நிகழ்வை ஒத்த இன்னொரு புனைகதை, கேன்ரிஹ் அல்த்தோவ் எழுதியது.வேற்று கிரகத்துக்குச் சென்ற ஸோரஹ் அந்தக் கிரகத்தை படம் பிடித்து அனுப்பியதோடு ஏராளமான செய்திகளையும் அனுப்புகிறான். அங்கே பாறைக்குழம்புகள் சூறாவளியாகத் தாவிச் சுழல்கின்றன.ஒரே இடத்தில் மட்டும் ஒரு வட்டம் இந்தப் பாறைக்குழம்புகள் இன்றி இருக்கிறது. கொல்லப்போனால், பாறைக்குழம்புகள் அந்த இடம் வரை வந்துவிட்டுத் திரும்பிவிடுகின்றன. ஸோரஹ் அந்த வட்டத்தால் கவரப் பெற்று விண்களத்தை அங்கே இறக்குகிறான். அதன்பிறகு அவனிடத்தில் இருந்து ஒரு தகவலும் இல்லை.பூமியில் விண்வெளித் தகவல்களை இனம் காணும் ஆராய்ச்சியாளரின் கண்ணோட்டத்தில்தான் கதையே தொடங்குகிறது. அந்த விதத்தில் இது சுவாரஸ்யமான முயற்சியாக இருக்கிறது.என்ன நிகழ்ந்திருக்கலாம் என்பதை தகவல் குறியீடுகளை வைத்து கணிக்க வேண்டிய கடமை. என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதைச் சுவாரஸ்யமான விஞ்ஞான தகவல்களோடு முன்வைக்கிறார் ஆசிரியர். ஸோரஹ் இடம் இருந்து மீண்டும் தகவல்கள் வரும் என்று முடிகிறது கதை.மிஹயீல் விளாதிமீரவ் -வின் ‘கண்ணாடிப் பிரதிபலிப்புத் தீவு? நம் பூமியிலேயே இன்னும் வாழ்ந்தறியாத தீவைப் பற்றியது.ஒரு பத்திரிகை நிருபருக்கு இன்னும் மனிதன் கால்பதிக்காத தீவில் ஒரு மாதம் தங்கியிருந்து அந்த அனுபவத்தை எழுத வேண்டும் என்று ‘அஸைன்மெண்ட்’ கொடுக்கிறார் பத்திரிகை ஆசிரியர்.ரப்பர் போன்ற மீன்களை உண்டு, பற்கள் உள்ள பறவைகள், கடிக்காத கொசுக்கள் எல்லாமே நிருபர் ஜானி மெல்வினை அச்சுறுத்துகின்றன. இரண்டு மூன்று நாட்களிலேயே உடல் ஜீவனற்றுப் போகிறது. விளக்கற்ற கும்மிருட்டும், யாருமற்றத் தனிமையும் வாட்டத் தொடங்குகிறது.வாழ்க்கை வெறுத்து, ஜீவனற்று நடைபோட்ட நேரத்தில் தீவின் மறுமுனையில் கூடாரம் ஒன்றுதென்படுவதைக் காண்கிறான். அதில் ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சியின் முடிவு கட்டத்தில் இறந்துகிடக்கிறார். உலகப் போர் மூண்டுவிட்டால் அவரை அழைத்துச் செல்வதற்கான கப்பல் வராமல் போனது தெரியவருகிறது. அந்தத் தீவில் உள்ள பாக்டீரீயாக்களும் வித்தியாசமானவை. இறந்த உடலை சிதைக்காதவை. அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை நிருபரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. பெரிய ராயல்டி தொகை கிடைக்கிறது.அந்தத் தீவில் உள்ள உயிரினங்களின் வித்தியாசமான தோற்றத்துக்கும் சுவைக்கும் காரணம் ஜீன்களின் கண்ணாடிப் பிரதிபலிப்புத் தன்மைதான் என்று முடிக்கிறார். எல்லா உயிரினங்களும் அதனுடைய இயல்பான தன்மையிலிருந்து மாறுபட்டிருப்பதற்கான சுவாரஸ்யம் ஒரு விஞ்ஞான விளக்கத்தோடு முடிவடையும்போது அது முழுமையான விஞ்ஞான புனைகதையாக மாறுகிறது.
இது தவிர இலியாவர்ஷாவ்ஸ்கிய் எழுதிய வேற்று உலகினர், ‘இருவர் போர்’, அனத்தோலிய் த்னெப்ரோவ் எழுதிய நண்டுகள் தீவில் திரிகின்றன. பொரீஸ், அர்க்காதிய் ஸ்த்ருகாத்ஸ்கிய் (இருவர்) எழுதிய செப்பமாக அமைந்த கிரகம் மிகயீல் யேம்த்ஸெவ், யெரெமேய், பர்னோவ் (இருவர்) எழுதிய ‘வெண்பனிப் பந்து’ ஆகிய புனைகதைகளும் இதில் உள்ளன.சுவாரஸ்யமான எதிர்கால விஞ்ஞானக் கணிப்புகளும் சமூக நோக்கும், விறுவிறுப்பான மொழி நடையும் இந்தக் கதைகளின் ஆதாரபலமாக இருக்கின்றன. அதற்குக் காரணம் மொழி பெயர்ப்பின் பலம்.மொழி பெயர்த்திருப்பவர் சோவியத் இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அந்த மண்ணின் சுவையோடு தமிழ் மண்ணுக்குத் தந்த பூ. சோமசுந்தரம். ருஷ்ய மொழிநடையை மெருகு குலையாமல் தமிழுக்குத் தந்தவர்களில் முக்கியமானவர். ருஷ்ய இலக்கியங்களை அனுபவித்து ரசிக்கும் கவிஞர் யூமா. வாசுகி இந்த நூல் பதிப்புக்கு ஒருங்கிணைப்பு செய்திருக்கிறார்.ஒரு நல்ல நூல் நல்லவிதமாக நாலுபேரிடம் சேருவதற்கு இவர்களின் பங்களிப்பும் முக்கியமாகிறது.பாறைச் சூறாவளித் துறைமுகம்கேன்ரிஹ் அல்த்தோவ்மிஹயீல் விளாதீமிரவ்அரியாத்நா க்ரோமவாஇலியா வர்ஷாவ்ஸ்க்கிய்அனத்தோலிய் த்னெப்ரோவ்பொரீஸ், அர்க்காதிய் ஸ்த்ருகாத்ஸ்கிய்மிஹயீல் யேம்த்ஸெவ், யெரெமேய் பர்னோவ்ஆகிய சோவியத் எழுத்தாளர்களின் அறிவியல் புனைகதைகள்.மொழிபெயர்ப்பு : பூ. சோமசுந்தரம்,வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர், சென்னை - 98, விலை : ரூ. 125/-

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin