சனி, செப்டம்பர் 29, 2007

நெய்தல் ராஜா!

சினிமாவில் லொகேஷன் தேர்வு செய்வது என்பது முக்கியமான வேலை. படத்தின் ஆதாரம் கதை நடக்கும் களம். அதைச் சரியாகத் தேர்வு செய்துவிட்டால் பாதி சுவாரஸ்யத்தை அதுவே பார்த்துக் கொள்ளும்.

"கடலும் கடல் சார்ந்த' பகுதியில் படப்பிடிப்பு என்றால் மீனவர்களின் ஒத்துழைப்பும் கடலின் ஒத்துழைப்பும் வேண்டும். அதற்கு பட்டினப்பாக்கம் ஜெயராமனின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்கிறது கோலிவுட். சென்னை டூ கன்யாகுமரி வரை உள்ள கடற்பகுதியில் எங்கு படப்பிடிப்பு என்றாலும் இவரைத்தான் அணுகுகிறார்கள். 50- க்கும் மேற்பட்ட கடல்சார் படங்களில் இவருடைய பங்களிப்பு உண்டு. கமல்ஹாசன், மணிரத்னம், ஷங்கர் படங்கள் முதல் பல முக்கிய படங்கள் இவர் தேர்ந்தெடுத்த லொகேஷனில் உருவாகியிருக்கின்றன. தமிழ்நாடு மீனவர் பேரவையின் சென்னை மாவட்டத் தலைவராக இருக்கும் அவரிடம் பேச்சு கொடுத்தோம்.


கடலும் சினிமாவும் நீங்களும் இணைந்த அந்த இனிய சந்திப்பு எப்படி, எப்போது நிகழ்ந்தது?

பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்த மணிவண்ணன், ஜெய்சங்கர் ஆகியோர் சிட்டாடல் வீடியோஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அவர்கள்தான் "சங்கர்லால் துப்பறிகிறார்' தொடர் மூலமாக என்னை கேமிரா முன்னால் நிறுத்தியவர்கள். அதைத் தொடர்ந்து என் வகுப்புத் தோழர் ஆனந்தி ஃபிலிம்ஸ் மோகன் நடராஜன் மூலம் சத்யராஜ் நடித்த "பங்காளி' படத்தில் வில்லனாக நடித்தேன்.

அதில் கடற்கரை ஒட்டிய காட்சிகள் எடுக்கும்போது சில ஏற்பாடுகள் செய்து கொடுத்தேன். அப்படித்தான் நானும் சினிமாவும் கடற்கரையும் இணைந்தோம். முதலில் "நெருப்பு' என்ற படத்துக்காக ஆலம்பரைக் கோட்டை, கோவளம் பகுதியில் காட்சிகள் எடுப்பதற்கு லொகேஷன் தேர்வு செய்து கொடுத்தேன். அன்று தொடங்கிய கடல் லொகேஷன் வேலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் பணியாற்றிய படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய படங்கள் எவை?

"இயற்கை' படத்துக்குப் பணியாற்றியதைச் சொல்லலாம்.

ஷங்கரின் "பாய்ஸ்' படம் பட்டினம்பாக்கம் பகுதியில் பாடல் காட்சிக்காக எடுத்த காட்சிகள் மறக்க முடியாதவை. இடத்தையே வேறொரு இடம் போல மாற்றிக் காட்டிவிட்டார். "செல்லமே' படத்தில் ரீமாசென்னை கொலை செய்வதற்காக நடிகர் பரத் கடலுக்குள் அழைத்துச் செல்லும் காட்சி மிகவும் சிரமப்பட்டு எடுக்கப்பட்ட காட்சி. படக்குழுவினர் ஒரு படகிலும் பரத், ரீமாசென் ஒரு படகிலும் இருந்தனர். அவர்களின் பாதுகாப்புக்காக இருபது மீனவர்களை இன்னொரு படகில் நிறுத்தி வைத்திருந்தேன். மணிரத்னத்தின் "ஆய்த எழுத்து' படத்தில் பாரதிராஜா மீனவர்கள் மத்தியில் பேசுவதுபோல ஒரு காட்சி. சுமார் இரண்டாயிரம் படகுகளின் பின்னணியில் 5000 பேர் திரண்டு நடித்தனர். அதை மிக இயல்பாக எடுக்க முடிந்ததற்குக் காரணம்,

மீனவர்கள் என் மீது வைத்திருக்கும் பாசம்தான். கே.வி. ஆனந்த் இயக்கிய "கனா கண்டேன்' படத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் ஒன்று வரும். அதற்கான ஏற்பாடுகள் செய்ததோடு அந் நிலையத்தின் செக்யூரிட்டியாகவும் நடித்தேன். "கிழக்குக் கடற்கரை சாலை' படத்தில் முழு லொகேஷனுமே நான் தேர்வு செய்ததுதான். விஜய் நடித்த "கில்லி' படத்தில் கபடி ஆட்டத்துக்கான செட், லைட் ஹவுஸ் செட் எல்லாம் போட்டோம். கிளைமாக்ஸில் பெரிதும் பேசப்பட்ட காட்சியாக அது அமைந்தது. கமல் நடித்த "வேட்டையாடு விளையாடு' படத்தின் பாடல் காட்சிக்குக் கடல் நடுவே படகில் பாடிக் கொண்டே லைஃப் ஜாக்கெட்டோடு கடலில் குதிப்பதுபோல காட்சி வரும்.

அதில் கமலும் கமலினி முகர்ஜியும் அணிந்த அந்த லைஃப் ஜாக்கெட்டை அவர்களின் ஞாபகமாக நான் என் வரவேற்பறையில் வைத்திருக்கிறேன். இப்போது "தசாவதாரம்' படத்துக்காக என்னுடைய படகைக் கொடுத்தேன். அதைச் சரித்திரக்கால டைப்பில் மாற்றி படத்துக்குப் படமாக்கினார்கள். அதையும் இப்போது ஞாபகமாக வைத்திருக்கிறேன். சிம்பு நடித்த "தொட்டி ஜெயா', "வல்லவன்'... இப்போது நடித்துவரும் "கெட்டவன்' படங்களுக்கும் நான் கடற்கரை லொகேஷன்கள் பிடித்துக் கொடுத்தேன். இப்படி நிறைய சொல்லலாம்.

லொகேஷன் பிடித்துக் கொடுப்பதோடு படங்களிலும் நடித்து வருவதாகச் சொல்கிறீர்கள்... என்னென்ன படங்களில் நடித்திருக்கிறீர்கள்?

"தர்மசீலன்', "அரிச்சந்திரா', "பவித்ரா', "நினைவிருக்கும் வரை', "நேசம்', "புதுமைப்பித்தன்', "கடவுள்', "மதுர', "திருப்பாச்சி', "சிவகாசி' போன்ற பல படங்களில் நடித்திருக்கிறேன். "கடவுள்' படத்தில் இறைவன் என்னிடம் தோன்றி என் கடையில் சாப்பிட்டுவிட்டு காசு தராமல் போவார். காசு கேட்கும்போது "அப்படீன்னா... அது நடக்குமா பறக்குமா'ன்னு கேட்பார். "இந்த மாதிரி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க?' என்பேன். மிகவும் ரசிக்கப்பட்ட காட்சி அது.

அதேபோல் "புதுமைப்பித்த'னில் போலி அரசியல்வாதியாக நடித்த வடிவேலு எல்லா பொருள்களிலும் கலப்படம் மிகுந்துவிட்டதாக தீக்குளிப்பதாகச் சொல்வார். "அண்ணே கவலைப்படாதீங்க... கலப்படம் இல்லாத பெட்ரோல் வாங்கியாந்திருக்கேன். நல்லா தீக்குளிங்க' என்பேன். இப்படி மக்களுக்கு ஞாபகப்படுத்தும் காட்சிகள் சிலவற்றைச் சொல்லலாம்.

கடல் படப்பிடிப்பில் மிகவும் பயந்து போன சம்பவம் ஏதாவது?

"போக்கிரி' படத்துக்காகக் கடல் நடுவே படப்பிடிப்பு. முதல் நாள் லோகேஷன் பார்த்துவிட்டு வந்த போது கடல் அமைதியாகத்தான் இருந்தது. மறுநாள் படப்பிடிப்பின் போது அலைகள் படுஆவேசமாக இருந்தது. பாதுகாப்புக்காக மீனவர்களை வைத்திருந்தபோதும் இயற்கையின் சீற்றம் அச்சுறுத்தியது. எங்கள் கடல்மீது நாங்களே அச்சம் கொள்ளும் இத்தகைய அனுபவங்கள் சுனாமி திகிலுக்குப் பிறகுதான். காரணம், சுனாமியால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டு நூலிழையில் உயிர் தப்பியவன் நான்.

தமிழ்மகன்

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin