திங்கள், அக்டோபர் 29, 2007

கையேந்தும் நிலையில் கோட்டை அரசர்கள்!விண்ணப்பப் படிவங்களில் இப்படி ஒரு கட்டம் இருப்பதை நிச்சயம் எல்லோரும் பார்த்திருப்பார்கள்.ரெங்கையா முருகன்


நீங்கள் பழங்குடியினரா? அதில் பெரிய ஆர்வம் இருக்காது பலருக்கும். உண்மையில் பழங்குடியினர் என்பவர் யார்? அவர்களுக்கு எத்தகைய பிரச்சினைகள் இருக்கின்றன. ஏன் பிரச்சினைகள் ஏற்பட்டன என்பது ஆழ்ந்த சமூக ஆய்வுக்குரிய பொறுப்புக்குரிய விஷயமாக இருக்கிறது. சென்னையில் இயங்கிவரும் தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம் அதற்கான மகத்தான ஆய்வுகளை நடத்தி வருகிறது. அதன் நூலகராகவும் ஆய்வாளராகவும் பழங்குடி செயல்பட்டு வருகிறார் ரெங்கையா முருகன். இந்தியா முழுக்க உள்ள பழங்குடியினரின் வாழ்வியல் பிரச்சினைகள் குறித்து அவரிடம் பேசினோம்.

பழங்குடியினர் பற்றிய ஆய்வு ஏன் தேவைப்படுகிறது?

இந்தியாவின் மற்ற குடியினருக்கும் பழங்குடியினருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருக்கிறார்கள். மரங்களை வெட்டாத, கலப்பை கொண்டு நிலத்தை உழுவதைக் குற்றம் என்று கருதும் பழங்குடி வகுப்பினர் இருக்கிறார்கள். அவர்கள் சடங்குகளும் தெய்வங்களும் நம்பிக்கைகளும் இயற்கையோடு இணைந்தவை. இந்திய சமூகம் வளர்ச்சி என்ற பெயரில் நிகழ்த்தும் பசுமை புரட்சி, தொழில் புரட்சி எதுவுமே அவர்களுக்கு முக்கியமில்லாதவை, அதைப்பற்றி அவர்கள் தெரிந்திருக்கவும் இல்லை. ஆனால் நம்முடைய இந்தப் புரட்சிகளை நிகழ்த்துவதற்கு சம்பந்தமுள்ள அடிப்படைப் பொருள்கள் அங்குதான் கிடைக்கின்றன. அவர்கள் வசிக்கும் இடத்தில்தான் நாம் நம் வளர்ச்சிக்கான பாக்சைட்டையும் நிலக்கரியையும் தோண்டுவதற்காக அவர்களை விரட்டிக் கொண்டிருக்கிறோம். இயல்பான இயற்கையான வாழ்க்கையை நாம் கேள்விக் குறியாக்கியிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கை முறையிலிருந்து அவர்களின் வாழ்க்கை முறை எப்படி மாறுபட்டிருக்கிறது என்பதற்காகவும் அவர்கள் வாழ்க்கை ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இத்தகைய ஆய்வுகள் தேவையாக இருக்கிறது.

இத்தகைய ஆய்வுகளில் உங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் எத்தகையவை?
பழங்குடிப் பெண்


இடர்பாடுகள் என்பது அவர்கள் இருக்கும் சூழ்நிலையைப் பொருத்து ஏற்படுகிறது. உதாரணத்துக்கு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழங்குடிகளான ராபா இனத்தவரை ஆய்வு செய்யச் சென்ற போது அவர்கள் உணவுப் பழக்கத்தை ஏற்றுக் கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது. குளிர் காலங்களுக்கான உணவை அவர்கள் ஒரு குடிலின் நடுவே கட்டித் தொங்க வைத்திருக்கிறார்கள். அது காட்டெருமை (மிதுன்) இறைச்சி. பனியின் காரணமாக கெட்டுப் போகாமல் உறைந்த கொழுப்போடு தொங்கிக் கொண்டிருக்கிறது. அதைத் தேவைப்படும் போது அறுத்து எடுத்து வேக வைத்து உண்கிறார்கள். என்னால் அதை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இரண்டு மூன்று நாட்களாக சாப்பிடாமல் ஆரஞ்சு பழச் சுளையை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். மூன்றாம் நாளில் இருந்து பழங்குடி மக்கள் என்னைக் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர்தான் மூன்று நாளாக சாப்பிடாதவர் என்று என்னை ஒவ்வொருவருக்கும் அறிமுகப்படுத்தி ஆச்சர்யமும் வருத்தமும் அடைந்தனர்.

முடிந்த அளவு அவர்கள் போலவே நாமும் உடையணிந்து, அவர்கள் போலவே சாப்பிட்டு அவர்கள் போலவே நடனமாடி அவர்களுள் ஒருவராக மாறவேண்டும். அப்போதுதான் அவர்களின் மனதைத் திறக்க முடிகிறது. சில சமயங்களில் கூட்டமாக அமர்ந்து புகைபிடிப்பார்கள். அவர்களோடு நாமும் அமர்ந்து அந்த எச்சில் உக்காவை இழுக்க வேண்டும். அஸ்ஸôம் உல்பா இயக்கத்தினருக்கும் ராணுவத்தினருக்கும் நடக்கும் சண்டைகள் உயிர்பலிகள் பழங்குடிகளை மிகவும் பாதித்திருக்கிறது. டுமில் டுமில் என்று வெடிச்சத்தம். நாமும் அவர்களோடு ஒருவராக ஓட வேண்டியிருக்கிறது. ராணுவத்தினர், இயக்கத்தினர் இருவருமே நம்மை விரோதிகளாக நினைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

பழங்குடியினரிடம் நீங்கள் பிரமிக்கும் அம்சம்?

இயற்கையோடு இணைந்த வாழ்க்கையைத்தான் சொல்ல வேண்டும். நமக்கெல்லாம் 10 தாவர வகைகளின் குண இயல்புகள் தெரிந்திருந்தால் பெரிய விஷயம். அவர்கள் குறைந்தது பத்தாயிரம் தாவரங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். விலங்குகள், பறவைகள் பற்றிய அறிவு பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. பூகம்பம், புயல் பற்றிய நுண்ணுணர்வு மிக்கவர்களாக இருக்கிறார்கள். பாரம்பர்யமிக்க கலையம்சங்கள் அவர்களிடம் இருக்கிறது. பல பழங்குடியினர் சிமெண்ட், கம்பி, ஆணி போன்றவற்றைப் பயன்படுத்தாமலேயே வீடுகள் கட்டுகிறார்கள். உறுதியானவையாகவும் கடும் குளிரைத் தாங்கக் கூடியவையாகவும் இருக்கின்றன அவர்களுடைய தொழில் நுட்பங்கள். அவர்களின் ஆயுதங்களும் எந்த விலங்குகளிடத்தும் போராடும் உறுதி படைத்தவை.

அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் முக்கியமானது?

இந்தியாவில் மொத்தம் 624 பழங்குடி பிரிவினர் இருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் இருக்கிறார்கள். பழங்குடியினர் என்றாலே ஒன்றும் தெரியாதவர்கள் என்ற நினைப்பு இருக்கிறது மக்களுக்கு. ஏதோ கை நிறைய வளையல் போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பவர்கள் என்பதாகத்தான் சினிமாவில் காட்டுகிறார்கள். அணைக்கட்டுகள் கட்டுவதற்காகவும் பாக்சைட், அலுமினியம், வைரச் சுரங்கம், இரும்புத் தாது சுரங்கம் போன்றவற்றுக்காகவும் அவர்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்துகிறார்கள். மாத ஊதியம் செய்தோ, பணத்தைச் சேமித்தோ பழக்கமில்லாதவர்கள் அவர்கள். பலர் பணத்தின் தேவையே இல்லாமல் வாழ்பவர்கள். நம்முடைய நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் அவர்களுக்குத் தேவையற்ற வாழ்க்கையை அவர்களை வாழச் செய்கிறோம். அவர்களுக்குத் தேவையற்ற கல்வியைத் திணிக்கிறோம். அவர்களை அல்ஜீப்ரா படிக்கச் சொல்வதும் ஆர்கமிடிஸ் கோட்பாடு படிக்கச் சொல்வதும் பொருத்தமாக இல்லை.

உதாரணத்துக்கு ஒரிசாவில் உள்ள கோண்டு இன மக்கள் அவர்களின் மொழியைத் தாண்டி ஒரிய மொழியையும் இந்தி மற்றும் ஆங்கில மொழியையும் பயில வேண்டியிருக்கிறது. இத்தனை மொழிகள் அவர்களுக்கு எதற்கு?

அஸ்ஸôமில் நான் பார்த்தவர்கள் பழங்குடிகள் சேமித்த உணவுப் பொருட்களை எல்லாம் ஒரு பொதுவான இடத்தில்தான் வைக்கிறார்கள். ஒரு முக்கியமான விழாநாளில் அந்த உணவுப் பொருட்கள் எல்லாருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அந்தச் சமத்துவ வாழ்க்கை முறையும் நம்மால் பாதிக்கப்படுகிறது இப்போது.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள கோட்டை


அப்படியானால் அவர்கள் அப்படியே இருக்க வேண்டியது தானா?

அவர்கள் 90}100 வயது வரை மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மாலை நேரங்களில் ஒன்றாகக் கூடி அவர்களின் பாரம்பர்யக் கதைகளைப் பேசுகிறார்கள். அவர்களின் வாழ்க்கைத் தேவை, உணவு, சடங்குகள் குறித்து விவாதிக்கிறார்கள். ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதை விடுத்து நாம் வாழ்கிற வாழ்க்கைதான் சிறந்தது என்று நாமாகவே முடிவு செய்து அதைத்தான் அவர்களும் வாழ வேண்டும் என்பது சரியில்லை. உதாரணத்துக்கு கோண்டு இன மக்களின் 52 கோட்டைகள் இப்போதும் இருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் அந்த அரசர்களின் சரித்திரங்கள் கற்பிக்கப்படுவதில்லை. ராஜ்புத் அரசியாக ராணி துர்காவதியைச் சொல்கிறார்கள். ஆனால் அவர் கோண்டு இன அரசன் தல்பத்ஷாவை மணந்தவர் என்பது பாடங்களில் இல்லை. மத்திய பிரதேசத்தில் ராணி துர்காவதி பெயரில் பல்கலைக் கழகம் இருக்கிறது. ஆனால் அவருடைய கணவர் பழங்குடி இனத்தவர் என்பதால் இந்த இருட்டடிப்பு. எதற்காகச் சொல்கிறேன் என்றால் அவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. கோட்டையும் கொத்தளங்களோடு தொழில்நுட்பத் திறன் பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்களை இருட்டடிப்புச் செய்துவிட்டு அவர்கள் எதும் அறியாதவர்கள் என்பது எப்படி நியாயம்? அவர்களின் ஆற்றலை வளர்த்தெடுக்கும் பணியைச் செய்வதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் உதவியாக இருக்க முடியும்.
கிக்ரி இசைக் கருவியுடன் பர்கானியா


80 பழங்குடி கிராமங்களுக்கு ஒரு பர்கானியா (மதகுரு போன்றவர்) இருக்கிறார். அந்த 80 கிராம மக்களின் வீட்டுச் சடங்குகளுக்கு அவர்தான் மதகுரு போல. சடங்குகளின் போது தம் இனத்தின் சரித்திரத்தை அவர் இசைப் பாடலாகச் சொல்கிறார். அவர் கையில் கிக்ரி என்று ஒரு இசைக் கருவியும் உண்டு. ஆனால் இப்போது இந்த வழக்கங்கள் எல்லாம் வழக் கொழிந்து வருகிறது. பலருக்கு அவர்களின் மொழியே பழக்கத்தில் இல்லை. வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடிகள் பலர் கிருத்துவ மிஷினரிகளில் பயிற்சியின் காரணமாக ஆங்கிலத்தைத் தாய் மொழியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி மொழியைத் தொலைத்துவிட்டு நிற்கிற பழங்குடிகளுக்குப் பெண் தராத பழங்குடி மக்களும் இருக்கிறார்கள். மொழியையே காப்பாற்ற முடியாதவன் பெண்ணை எப்படிக் காப்பாற்றுவான் என்பது அவர்களின் வாதம். இத்தனைச் சூழல்களிலும் அவர்களில் யாரும் பிச்சை எடுக்காதவர்களாகவும் உழைத்துப் பிழைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதுதான் பழங்குடி மக்களின் பிரதான அடையாளமாக இருக்கிறது. சமூக வளர்ச்சி என்ற பெயரில் அந்த இயற்கையின் அரசர்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்பதுதான் வருத்தத்துக்குரிய அச்சம்.

தமிழ்மகன்

1 கருத்து:

oru Eelathu thamilan சொன்னது…

அருமையான பதிவு. பல விடயங்களை புதிதாக அறிய முடிந்தது. அவர்கள் கல்வி அறிவு பெறவேண்டும். நாட்டின் வளர்ச்சியில் பங்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அது மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சியால் ஏற்படும் நன்மைகளையும் அவர்கள் பயனடைய வழியேற்படும்.ஒரு ஈழத்து தமிழன்

LinkWithin

Blog Widget by LinkWithin