சனி, அக்டோபர் 06, 2007

ராகசுதாவிலிருந்து, நிர்மலானந்தாவுக்கு...

திரையுலகில் பிரபலமாக இருந்துவிட்டு திடீரென்று ஒரு நடிகை சந்நியாசம் மேற்கொண்டால், வழக்கமாக எல்லோருக்கும் ஏற்படும் முதல்கேள்வி ""எதுக்காக வாழ்க்கை மீது அப்படி ஒரு வெறுப்பு?''

மைசூரிலுள்ள பரமஹம்ச நித்தியானந்தரின் நித்தியானந்த பீடத்தில் சந்நியாசியாக இருக்கிறார் நடிகை ராகசுதா, சரியாகச் சொன்னால் சுவாமி நிர்மலானந்தா.
""பலர் என்னிடம் அப்படித்தான் கேட்டார்கள். நான் வாழ்க்கையை வெறுத்து சந்நியாசத்துக்கு வரவில்லை. வாழ்க்கை மீது உள்ள அளவுகடந்த விருப்பத்தால் சந்நியாசி ஆகியிருக்கிறேன்.

வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்து தனிமனித விரக்தி காரணமாகச் சந்நியாசத்தை மேற் கொள்பவர்கள் ஆன்மிகத்தைக் கொச்சைப்படுத்திவிடுகிறார்கள்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற என் கனவு பலித்தது. பல தமிழ்ப்படங்களில் நடித்தேன். "தங்கத்தின் தங்கம்' எனக்குப் பெரிய பிரேக். தொடர்ந்து கன்னடப் பட உலகில் பல வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்தேன். மலையாளத்திலும். கடைசியாக வெளியான "தம்பி' படம் வரை தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தேன். வீடும், காரும் போன்ற லெüகீக கனவுகள் எல்லாம் எனக்குச் சாத்தியமாயிற்று. ஆக, எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போகும் நிலைமை ஏற்படவேயில்லை. நான்கைந்து ஆண்டுகளாக நான் பல தியான வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தேன். பதஞ்சலி யோகா முதல் நான் செல்லாத யோகா வகுப்புகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஞானத்தைத் தேடி அலைந்தேன். தனவணிகன் என்ற ஒரு சிற்றிதழில் மகா அவதார் பாபாவின் தீட்ஷை பெற்றவர் என்ற தலைப்பில் நித்தியானந்தர் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. இயல்பான ஆர்வத்தில் அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் தியான வகுப்பு எடுப்பதாக அறிந்து அங்கு சென்றேன். நித்தியானந்தரை முதலில் நேரில் பார்த்தது அங்குதான். என்னையும் அறியாமல் அவர் பாதத்தைத் தொட்டு வணங்கினேன். தொடர்ந்து திருவண்ணாமலையில் அவருடைய தியான வகுப்புக்குச் சென்றேன்.

ஆன்மிக ஆனந்தம் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என்பது நித்தியானந்தரின் அணுகுமுறையாக இருக்கிறது. அதை அவர் ஆன்மிக விஞ்ஞானம் என்கிறார். எப்படி விஞ்ஞானம் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் அனைவருக்கும் பயனளிக்கக் கூடியதாகவும் பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறதோ அப்படியே ஆன்மிகமும் இருக்கிறது. இது உங்களுக்குப் புரியாது, இது சரிபட்டுவராது என்று யாரையும் ஒதுக்கித் தள்ள முடியாது.

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது யார் கூட்டினாலும் வரக்கூடிய ஒரே விடை போலத்தான் ஆன்மிக ஆனந்தமும். அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். ஐரோப்பியன் கூட்டினாலும் அமெரிக்கன் கூட்டினாலும் ஈரான் காரன் கூட்டினாலும் கிடைக்கக் கூடிய ஒரே பதில் போல ஆன்மிகப் பலனும் கிடைக்கவேண்டியது அவசியம். விஞ்ஞானத்தில் தொழில்நுட்பத்தில் ரிஸர்ச் அண்ட் டெவலப்மென்ட் நடப்பதுபோல ஆன்மிகத்திலும் த & ஈ தேவைப்படுகிறது. நம் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ளாதது இல்லை இப்போதைய பிரச்னை. நம் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளாததுதான் பிரச்னையே.

நான் நைஷ்டீக பிரம்மச்சர்யம் மேற் கொண்டு இங்கு ஆச்சார்யாவாக இருக்கிறேன். தியான வகுப்புகள் எடுக்கிறேன். தியான வகுப்பு எடுப்பவர்களுக்கான வகுப்புகள் எடுக்கிறேன். நான் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை என்னுடைய பெற்றோர், சகோதரி, பெரியம்மா கே.ஆர்.விஜயா, திரைப்படத்துறை நண்பர்கள் நடிகர்கள் சரத், ஸ்ரீமன், நடிகைகள் வினோதினி, மெüனிகா, டைரக்டர் பாலுமகேந்திரா ஆகியோர் நன்றாக அறிவார்கள்.

ஆகவே நான் ஆனந்தமாகத்தான் இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது வாழும் கலையின் ஓர் அங்கம்.

-தமிழ்மகன்

4 கருத்துகள்:

செந்தழல் ரவி சொன்னது…

:)))))

M.RISHAN SHAREEF சொன்னது…

ராகசுதா அண்மையில் வெளியான பார்த்தீபனின் 'அம்முவாகிய நான்'படத்திலும் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.அது சாமியாராகப் போக முன்பு நடித்ததாக இருக்கக்கூடும்.
கொஞ்ச காலம் அவர் சினி உலகத்தை விட்டும் விலகியிருந்தார்.பக்கவாத நோய் தாக்கி உறுப்புக்கள் செயலிழந்த காலத்தில் அவர் ஆன்மிகப் புத்தகங்களையே அதிகம் வாசித்து வந்ததுடன்,யோகாசனம் மூலமே அந்த நோயிலிருந்து மீண்டார்.
எனவேதான் இக்காலத்தில் அவருக்கு இந்த எண்ணம் தோன்றியிருக்கவேண்டும்.ஆனால் இவ்விடயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை என்பதே என் கருத்து.
வேறு ஒரு தொழில் செய்யும் பெண் சாமியாராகப் போனாலோ,ஆன்மிக வகுப்புக்கள் எடுத்தாலோ நாம் பெரிதாக அதைப்பற்றி பேசுவதில்லை.
இங்கும் அதையே கருத்தில் கொள்வோம்.நடிகையென்று பார்க்காமல் தனிமனிஷியாகப் பார்ப்போம்.
அவரது தனிமனித உரிமை அது.தப்பெதுவும் இல்லை.

லக்கிலுக் சொன்னது…

ராகசுதா கே.ஆர். விஜயாவின் உறவினரா?

தமிழ்மகன் சொன்னது…

ஆமாம் லுக்கி லுக்!

LinkWithin

Blog Widget by LinkWithin