ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2008

நேசம்

தமிழ்மகன்

திடுக்கிட்டு விழித்தபோது கதவை யாரோ தட்டிக் கொண்டிருப்பது கேட்டது. எழுந்திருக்க மனம் இன்றி இன்னொரு முறை தட்டுகிறார்களா என்று காத்திருந்தான் சிவா.

நாய்களும் குலைக்காத அமைதி, இப்படிப்பட்ட அமைதி சாத்தியப்பட வேண்டுமானால், நேரம் இரண்டு மணியாய் இருக்கலாம்.

இந்த முறை கதவு தட்டப்பட்டு கூடவே, ''சிவா... ஆ'' என்ற குரலும் கேட்டது.

கேட்ட குரல் போல இருந்தும், யூகிக்க முடியவில்லை. விளக்கைக் கூடப் போடாமல் ஜன்னலைத் திறந்தான்.

எதிரிலிருக்கும் டீக்கடை மூடப்பட்டிருந்தது. திறந்த ஜன்னலுக்கு எதிரே வந்து நின்றபடி ஒருவன், ''இன்னா சிவா... நல்ல தூக்கமா?'' என்றான்.

யாரென்று தெரியாமலேயே... ''ஆ...ங்'' என்றான் சிவகுமார்.

விஜயா படுக்கையில் புரண்டு, ''யாருங்க. அண்ணாவா?'' என்றாள்.

சிவகுமார் பெருத்த அவசரமாய் நினைவுபடுத்தி பார்த்தான். உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள்... ஒருவரும் தாடி வைத்திருப்பதாய் நினைவில்லை.

''அட்ரஸ் கண்டுபிடிக்கறதுகுள்ள போதும், போதும்னு போச்சப்பா.''

சிவகுமாருக்கு திடீரென்று யாரென்று புரிந்து போய், ''மணி... நீயா? அடையாளமே தெரியலை? இரு கதவு திறக்கறேன்'' என்று பரபரப்பாகிக் கதவைத் திறந்து தெருவுக்கே வந்து கையைப் பிடித்துக் குலுக்கினான்.

''ஊரில் இருந்து எப்ப வந்தே?''

''மெட்ராஸ்ல தாம்ப்பா இருக்கேன்''

''நிஜமாவா?'' என்று கேட்டபடி உள்ளே அழைத்து, கதவைத் தாழிட்டு, நடையின் விளக்கைப் போட்டான்.

பரபரப்பாய் அறையின் டியூப்லைட்டைப் போட்டு விட்டுப் பார்த்தபோது சுவரில் மணி 11.20-

''பத்து மணிக்குக் கிளம்பினேன்''

''எங்க இருந்து?'' நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார வைத்தான்.

''வள்ளுவர் கோட்டம் இல்ல... அதுக்குப் பக்கத்துலதான்... ஒரு ரூம்ல தங்கியிருக்கிறேன்.''

''யார் ரூம்ல?''

''சினிமா டைரக்டர்து''

''பேரு?''

''பழனிராஜ்''

''எத்தன படம் எடுத்திருக்கிறாரு?''

''அட!... அவரால ஒரு படம்கூட எடுக்க முடியாது சிவா... அதவுடு எப்படியிருக்றே எங்க வேல செய்ற?''

''நா அங்கேயேதான் வேல செய்றேன்... பர்மனன்ட் பண்ணிட்டான். ஆயிரத்தி நூர் ரூபா தரான்'' மணி சிரித்தான்.

''எப்படி இருக்கிறே சிவான்னு கேட்டா ஆயிரம் ரூபா தரான்றியே... எப்படி இருக்கே?'' என்றான் மறுபடி.

''பாதி ராத்திரில வந்துருக்கே. நான்தான் உன்னை விசாரிக்கணும். சாப்டியா?''

''பரவால்ல சிவா... பையன் எப்படியிருக்கான்? பேரென்ன சொன்னே?''

''முத்துக்குமார்... டீக்கடை இருந்தா பன்னாவது வாங்கி தருவேன், இந்த ராத்திரில ஏன் வந்தே...?''

''நானா கிளம்பினேன்...? கிளம்பிப் போக சொன்னாங்க'' என்று சிரித்தான்.

''ரூமைக் காலி பண்ணச் சொன்னாங்களா?''

''அதவிடு சிவா... நாளைக்குப் போய் சரி பண்ணி விடுவேன்.''

கல்லூரி வாழ்விலிருந்தே இப்படித்¡ன்... பேச்சுக்குப் பேச்சு ''சிவா''... எல்லா உணர்ச்சிகளையும் அழுத்திக் கொண்டு ஒரு சிரிப்பு.

சிவா எழுந்து சமையல் அறையில் எதையோ உருட்டி விட்டுத் திரும்பி வந்தான்.

''சோத்ல தண்ணி ஊத்திட்டாங்க''

''சாப்பாட்ல பிரச்சனை இல்லை சிவா, நீங்க வேஸ்ட்டா வொர்ரி பண்ணிக்காதீங்க...''

விஜயா எழுந்து வந்து, ''பிழிஞ்சி போடட்டுமான்னு கேளுங்க... இப்பதான் தண்ணி ஊத்தினேன்'' என்றாள்.

மணி, ''நலந்தானே?'' என்றான் விஜயாவை.

இப்படிக் கேட்டதால் விஜயாவிற்குச் சிரிப்பு ஏற்பட்டு, ''ம்...'' என்று சொல்லிவிட்டு அவசரமாய் உள்ளே போனாள்.

''எவ்வளவு நாளா அங்க தங்கியிருக்க?''

''ரெண்டு மாசமாச்சு சிவா.''

''சாப்பாட்டுக்கு என்ன பண்றே?''

மணி இதற்குப் பதில் சொல்லவில்லை. எல்லாம் பேசியானது போல் எதிரில் கிடந்த பழைய தந்திப் பேப்பரை எடுத்துப் படிக்கத் துவங்கினான்.

மணியின் சொந்த ஊர் திருப்பத்தூர். ஹாஸ்டலில் தங்கிப் படித்தான். மூன்று வருடத்தில் மறந்துகூட ஊர்ப்பக்கம் போகவில்லை.

சுரணையற்ற மெஸ் சாப்பாட்டையும், தனிமைச் சிறை மாதிரி இருந்த அந்த மக்கிய ஹாஸ்டலையும் அவன் விரும்பி விடுகிற அளவுக்கு அவனது வீட்டு நிலைமை இருந்தது.

நாற்பது பேர் கொண்ட கூட்டுக் குடும்பம் இப்போதைய அவசர யுகத்தில் கூட்டெல்லாம் சாத்தியமில்லை என்பது புரிந்தும், குடும்பத்தை உடைக்கிற அவலம் நாம் இருக்கிறவரை நிகழ்ந்துவிடக்கூடாதென்று நோக்கம் கொண்ட மணியின் அப்பா... மூத்தவர். அவருக்கு இளையவர்கள் மூவர் ஆளுக்கு அரை டஜன் வாரிசுகள் என்று சராசரியாகக் கொண்டாலும், அவர்களில் பாதி பேருக்குத் திருமணமாகி இனப்பெருக்கம் செய்திருந்தார்கள்.

மணிக்கும் போன ஆகஸ்ட்டில் திருமணம் நடந்தது.

சிவா, ''ஒய்·ப்பையும் கூட்டிக்கிட்டு வந்துட்டியா?'' என்றான்.

''இல்லை...'' என்றான் நிதானமாய்.

''என்னது இல்லையா?... ஊர்ல இருந்து வந்து ரெண்டு மாசமாச்சுன்றே... கல்யாணமான மறுநாளே வந்துட்டியா?''

மணி வேகமாக எழுந்து சிவாவின் வாயைப் பொத்தினான். ''மெதுவா கேளேம்பா.''

''சண்டையா?'' என்றான் மெதுவாய்.

''அதெல்லாம் ஒண்ணுல்ல எங்க ஊர்ல இருந்து யாராச்சும் என்னைத் தேடி வந்தாங்களா?''

''இல்லையே''

''நல்லதாப் போச்சு''

''ஏய்... என்ன விஷயம்னு ஏதாவது சொல்றியா?''

''ஏன் சிவா அவசரப்படறே...? நைட்டு ·புல்லா இங்கதானே இருக்கப்போறேன். நிதானமாப் பேசவும்... அப்பா அம்மால்லாம் செளக்கியம்தானே?''

சிவா சலித்துக் கொண்டான்.

''நல்லாருக்றாங்க... விஷயத்த சொல்லுய்யா''

''மாடிக்கு போய் படுத்துக்கலாமா?''

சிவா யோசித்தான். 'ஏடா கூடாமாய் ஏதோ நடந்திருக்கிறது. மாமியார் மருமகள் சண்டை... சொத்தைப் பிரிக்கச் சொல்லிச் சண்டை... கல்யாணம் பண்ண ஒரு மாதத்தில் ஓடி வந்திருக்கிறான் என்றால்...? இன்னும் சிக்கலான சண்டை ஏதோ நடந்திருக்கிறது. ஹாஸ்டலில் இருந்து ஊருக்கு அனுப்பி வைக்கும்போதே பெரும்பாடாய் இருந்தது.

''எங்க வீட்ல அன்பு பாசம் இதுக்கெல்லாம் இடமே இல்ல சிவா... ஏன்... ஒருத்தர் முகத்திலையும் இயற்கையான சிரிப்பையே பார்க்க முடியாது. வீட்ல இருக்கிற பெண்களுக்கெல்லாம் நாள் முழுக்க சமைக்கிற வேலை.

ஆம்பளைங்களுக்கு, பத்து ஏக்கர் நிலம் பம்ப்-செட்டோட வெலைக்கு வருதான்னு பாக்கிற வேலை. இல்லாட்டி பஸ்-ஸ்டேன்ட் பக்கமா நாலு கிரவுண்டு வாங்கிப் போட்டா பின்னாடி நல்ல விலைக்கு விக்கலாம்... இப்படி... நாள் முழுக்க பணம் பண்ற வேலை.''

''தனித்தனியா சொத்தைப் பிரிச்சிட்டா...?''

''முடியாது சிவா... இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துட்டா... ஒரு தியேட்டர் கட்டி விடலாம்னு ஐடியால இருக்காங்க... பிரிச்சிட்டா சொத்தினுடைய வீரியம் கொறஞ்சிடும்.

அவங்களுக்கு ரெண்டே ரெண்டு எண்ணம்தான் வாழ்க்கைல. ஒண்ணு பணம் சேக்கறது.

இன்னொன்னு சேத்த பணத்தை அதிகப்படுத்தறது'' சிரிப்பான்.

மூணு வருஷக் கல்லூரி வாழ்க்கையில் ஊரிலிருந்து பணம் வருவதில் ஒரு சமயத்திலும் தாமதம் இருந்ததில்லை.

''பணம் மட்டும் கரக்டா வருதே?''

''படிச்ச மாப்பிள்ளைனு சொல்லி எவன் கிட்டயாவது நூறு சவரன் பிடுங்குவானுங்க... சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீன் பிடிப்பானுங்க...''

அவன் வீட்டைப் பற்றி ஒரு முறையும் பெருமைப்பட்டுக் கொண்டதில்லை.

''ஒவ்வொரு மனுசனும் ஒவ்வொரு தூண்டிலைப் போட்டுட்டு ஒக்காந்திருக்கானுங்கப்பா...

சிவா உடனே இப்படிக் கேட்டான்.

''அது சரி... நம்ம முரளி காதலிக்காக உயிரே தருவேன்றானே... உயிர் என்ன சின்ன மீனா?''

மணி பெரிதாகக் கைதட்டிச் சிரித்தான்.

சிவா உள்ளே போய் ஒரு பாயையும், இரண்டு தலையணையைம் அக்குலில் இடுக்கிக் கொண்டு வந்தான்.

மொட்டை மாடியின் நட்ட நடுவே, பாயை விரித்து, தலையணையைப் பொருத்துவதற்குள், சர்ர்... எனத் தீக்குச்சிக் கிழித்தான் மணி.

''பீடியா பிடிக்கிறே?''

''ஆமா... ஒரு கட்டு நாப்பது பைசா...''

''ச்சே...''

''என்னையா பண்றது... சிகரட் விக்கிற வெலைல இதுதான் வசதி''

''சரி சொல்லு ஊர்ல என்னாச்சு?''

மணி, வேறெதொ பேச இருந்தவன், சிவா இப்படிக் கேட்டதில் சட்டென்று அதை நிறுத்திக் கொண்டு விஷயத்தைக் கோர்வைப்படுத்துவது போல் பீடியை ஆழமாக உறிஞ்சினான்.

''என் பெட்டிக்குள்ள உன்னுடைய அட்ரஸ் எங்கயாவது இருக்கறதுக்கு 'சான்ஸ்' இருக்கு... என் பெட்டிய யாராவது கிளறி சப்போஸ் உன் அட்ரஸ¤ம் கிடைச்சா... என்னைப் பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு இங்க வரலாம்...''

''ஊர்ல இருந்தா?''

''ஆமாம்... அப்படி யாராச்சம் வந்தா நாங்க நல்லாருக்கறதா சொல்லணும்...''

''நாங்கன்னா...?''

''நானும் என் ஒய்·பும்''

''...ஒய்·ப்?''

''இப்ப அவ என் ஒய்·ப் இல்ல... பெங்களூர்ல வேறு ஒருத்தர் கூட இருக்கிறா...''

சிவா அதிர்ந்து எழுந்து அவன் தோளைக் குலுக்கி ''சினிமாவுக்கு 'ஒன்லைன்' எதாவது எழுதிறியா?'' என்றான்.

எப்போதும் போன்ற குரலில், ''உண்மையாதான் சிவா... கல்யாணமான மறு வாரமே எனக்கு அவ வேற ஒருத்தரைக் காதலிச்ச விஷயம் தெரிஞ்சு போச்சு... நம்ம நாட்டு வழக்கப்படி காதலர்களை அவசர அவசரமாப் பிரிச்சு எனக்குக் கட்டி வெச்சிருக்காங்க... ஒரு நாள் 'மன்னிச்சுக்க' சொல்லி ஒரு லட்டர் எழுதி வெச்சிட்டு கிளம்பிப் போயிட்டா...'' இந்த இடத்தில் மணி சிறிது நிறுத்தினான்.

சிவாவோ அறையப்பட்டவன் மாதிரி சிந்தனை இயக்கம் இழந்து கிடந்தான்.

''விஷயம் வெளிய தெரியறதுக்கு முன்னாடி... நானும் வீட்டை விட்டுக் கிளம்பிட்டேன். அவ எழுதின லட்டரைக் கிழிச்சுப் போட்டுட்டு 'எங்களுக்கு இந்த வீட்டில் இருக்க விருப்பமில்லை. எங்காவது போய்ப் பிழைத்துக் கொள்கிறோம். எங்களைத் தேட வேண்டாம்'னு ஒரு லட்டர் எழுதி வெச்சிட்டேன்... இப்ப நானும் அவளும் ஒண்ணா இருக்கிறதாதான் எல்லாரும் நினைச்சுக்குனு இருக்காங்க... நா செய்தது சரிதானே சிவா...?

சிவா பிரயோசிக்க நினைத்த வார்த்தைகள் உதட்டருகே மூர்ச்சையாகிப் போகவே, ஆகாயம் நோக்கி வெறித்தான்.

மணி இயல்பாய், ''எங்க வீட்ல தேட ஆரம்பிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்... தினத்தந்தி பேப்பர்ல கால் பக்கத்துல ஒரு விளம்பரம் கொடுத்திருக்காங்க 'எங்க இருந்தாலும் உடனே தகவல் கொடுக்கும்படி'...

அதான் சொல்ல வந்தேன்... அப்படியவங்க உங்கிட்ட விசாரிக்க வந்தா... எங்க ரெண்டு பேரையும் ஒரு தியேட்டர்ல பார்த்ததா சொல்லு... நல்லா இருக்கிறதா சொல்லு... நாங்க நல்லா இருக்கறதுக்கு நீ ஒரு சாட்சி மாதிரியும் இருக்கும்... சொல்லுவியா சிவா?'' என்றான்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin