வியாழன், நவம்பர் 29, 2007

சில்லுன்னு ஒரு 'வெயில்'!


பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது "வெயில்' படம். "சில்' தேசத்தில் "சூடான' படத்தைத் திரையிட்டுவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் நாயகர்களில் ஒருவரான பசுபதியும் விழாவுக்குச் சென்றுவந்தவர்களில் ஒருவர். "தூள்'- "விருமாண்டி' படங்களில் முரட்டுத்தனமான வில்லன், "மஜா'- "மும்பை எக்ஸ்பிரஸ்' படங்களில் அப்பாவித்தனமான காமெடியன், "ஈ' படத்தில்

சமூகப் பொறுப்புள்ள தீவிரவாதி என்று

குறுகிய காலத்தில் பன்முகம் காட்டியவர் பசுபதி. "வெயில்' படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் வாழ்நாள் முழுதும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்ட மனிதனாக மிகச் சிறப்பாகத் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்தச் சிரத்தைதான் அவரை கேன்ஸ் விழாவரை இட்டுச் சென்றது

என்றால் மிகையில்லை. ஒரு கத்திரி வெயில் பொழுதில் அவரைச் சந்தித்தோம்.

படவிழாவுக்குச் சென்று வந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்?

பிரான்ஸில் உள்ள ஒரு சின்ன நகரம்தான் கேன்ஸ். சினிமாவுக்கான விருது என்றால் ஆஸ்கர் விருதுதான் முக்கியமானது என்று மக்கள் நினைக்கிறார்கள். அது ஹாலிவுட்டில் தயாராகும் படங்களுக்கான விருது. ஆனால் கேன்ஸ் படவிழா உலகப் படங்களுக்கான கெüரவம். இது அறுபதாவது ஆண்டு விழா. நாம் சுதந்திரம் அடைந்த ஆண்டில் இருந்து அந்த படவிழாவும் ஆரம்பமானது. இரு நாடுகளுக்குமான 60-ம் ஆண்டு விழாவாக இந்தியப் படங்களின் திரையீடு கொண்டாடப்பட்டது. அறுபது ஆண்டுகளில் முதன் முதலாகத் திரையிடப்பட்ட தமிழ்ப் படம் என்ற பெருமை "வெயிலு'க்குக் கிடைத்தது.

இந்தியாவில் இருந்து மொத்தம் எத்தனை படங்கள் இந்த ஆண்டு கலந்து கொண்டன?

மொத்தம் 8 படங்கள் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்தன. ஒரு மலையாளப் படம், ஒரு வங்காளம், 3 இந்தி, ஒரு தமிழ், ஒரு ஆங்கில மொழிப்படம், இது தவிர இன்னொரு படமும் திரையிடப்பட்டது. எனக்குச் சரியாக நினைவில்லை. மணிரத்னத்தின் "குரு' படம் இந்தி மொழியில் திரையிடப்பட்டது. "வெயிலு'க்காக நான், ஷங்கர், டைரக்டர் வசந்தபாலன் ஆகியோர் கலந்து கொண்டோம். பிரகாஷ்ராஜ் அவருடைய படத்தின் புரமோஷன் பணிகளுக்காக வந்திருந்தார். "குரு'வுக்காக மணிரத்னம் வந்திருந்தார். மற்றும் பிஜு, ரித்து பர்னேஷ் போன்றவர்கள் வந்திருந்தனர்.
சர்வதேச படங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள். நம்முடைய படங்களை அவற்றோடு ஒப்பிட முடிகிறதா?

சர்வதேச படங்களோடு ஒப்பிடும்போது நம்முடைய படங்கள் சவால்விடும்படியாகத்தான் இருக்கின்றன. நான் சொல்வது தொழில்நுட்பத் துறையில். இந்தப் படவிழாவுக்கு வந்த 8 படங்களில் 7 படங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்றிய படங்கள்தான். படத்தின் கதைகளை நாம் கமர்ஷியலாக இருக்க வேண்டும் என்று பார்க்கிறோம். இது போன்ற படவிழாக்களுக்காகத் தயாரிக்கப்பட்டால் நாம் இன்னும் சிறப்பாகவே படங்களை உருவாக்க முடியும்.

வெயிலுக்குப் பிறகு படங்களைத் தேர்வு செய்வதில் அதீத கவனம் செலுத்துகிறீர்கள்... அடுத்து நடிக்கும் படத்தைப் பற்றி அறிவிப்பு வரவில்லையே?

"மும்பை எக்ஸ்பிரஸ்' படத்துக்குப் பிறகே நான் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்துவிட்டேன். "மஜா', "ஈ', "வெயில்' மூன்று படங்கள்தான் நடித்தேன்.

இனிமேல் தேர்வு செய்யப்படும் வேடங்கள் ஹீரோ, அல்லது ஹீரோவுக்கு நிகரான வேடமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

அப்படியில்லை. வெயிலுக்குப் பிறகு 16 பேர் கதாநாயக வேடத்துக்குக் கேட்டார்கள். நான் எதையுமே சம்மதிக்கவில்லை. நல்ல ரோல்தான் தேவை, கதாநாயக அந்தஸ்து இல்லை. என் கதாபாத்திரத்தைக் கேட்டு முதலில் நான் இன்ஸ்பயர் ஆனால்தான் மக்கள் இன்ஸ்பயர் ஆவார்கள். அதற்காகத்தான் காத்திருக்கிறேன்.

வேறு மொழிப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்களா?

சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்தேன். ஆனால் தமிழ்தான் எனக்கு வசதியாக இருக்கிறது. வேறு மொழிகளில் எனக்காக மற்றவர்கள் குரல் கொடுப்பதும் எனக்குச் சரிபட்டு வரவில்லை.
தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து சினிமாவுக்கு வந்தது உங்களுடைய பலம். சினிமாவுக்கும் நாடகத்துக்கும் நீங்கள் உணரும் வித்தியாசம்?

நடிப்பு எல்லா இடத்திலும் ஒன்றுதான். சினிமாவில் மிஷினுக்கு முன்னால் நடிக்கிறோம். நாடகத்தில் மக்களுக்கு முன்னால் நடிக்கிறோம். சினிமாவில் டேக் வாங்கலாம். மக்களுக்கு முன்னால் ரெண்டாவது டேக் வாங்க முடியாது. மற்றபடி நடிப்புக்கு எடுத்துக் கொள்ளும் ஈடுபாடு என்னைப் பொறுத்தவரை இரண்டுக்கும் ஒன்றுதான்.

படவிழாவில் வெயிலுக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?

அது ஒரு சுவாரஸ்யமான கதை. தமிழக அல்லது இந்திய சூழல் பற்றித் தெரியாத பன்னாட்டு திரைக்கலைஞர்களின் கூட்டம் அது. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் படத்தால் ஈர்க்கப்பட்டுப் போனார்கள். படம் ஓடிக் கொண்டிருக்கும்போது பலர் கண்ணீரை கர்ச்சீப்பில் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

படம் முடிந்ததும் பலர் அப்படியே சிலையாக இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஒரு பெண்மணி கண்ணீரோடு வந்து கையைப்பிடித்துக் கொண்டு, "இப்படியெல்லாம் இருக்கிறதா உங்கள் நாட்டில்' என்று பரிதாபம் பொங்க கேட்டார். "எங்கள் நாடு கலவையான பிரச்சினைகள் கொண்ட நாடு. அதில் இப்படியான பிரச்சினைகளும் ஒன்று' என்று விளக்கினேன். பிரச்சினைகள் வேறாக இருக்கலாம். ஆனால் அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் மனதின் அலைவரிசை உலகம் முழுதும் ஒன்றுதானே?

-தமிழ்மகன்

3 கருத்துகள்:

மஞ்சூர் ராசா சொன்னது…

நல்லதொரு பேட்டி. ஆனால் சுருக்கமாக முடித்துவிட்டீர்களோ என்று தோன்றுகிறது.

நல்ல பதிவு.

நன்றி.

பிரதாப் குமார் சி சொன்னது…

இதைப்பற்றறி ஆனந்த விகடனிலும் ஒருமுறை படித்ததாக ஞாபகம்...நல்ல பதிவு

தமிழ்மகன் சொன்னது…

நன்றி... நன்றி

LinkWithin

Blog Widget by LinkWithin