வெள்ளி, ஆகஸ்ட் 01, 2008

வார்த்தைகளால் அல்ல; வாழ்க்கையால்!

நூல்விமர்சனம்: சாமிநாத சர்மாவின் காரல் மார்க்ஸ்தமிழ்மகன்

மறைந்தபோன ஒரு மேதையின் வாழ்க்கை வரலாறை எழுதும்போது உணர்ச்சுவசப்பட்டு மிகைப்படுத்திவிடாமல் எழுத வேண்டிய கட்டாயம் உண்டு. அதே நேரத்தில் அந்த மேதையை இன்னொருமுறை சாகடிக்கும் விபரீதமும் நடந்துவிடக்கூடாது. செய்ய வேண்டியதெல்லாம் உண்மையை எழுத வேண்டும், அது எளிமையாக இருக்க வேண்டும், சுருக்கமாக இருக்க வேண்டும்.

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து தமிழில் நான்கு நூல்களைப் படித்திருக்கிறேன். மார்க்ஸ் பிறந்தார், காரல் மார்க்ஸ் சுருக்கமான வரலாறு} இவை இரண்டும் சோவியத் நாட்டின் வெளியீடுகள். இது தவிர பிரேமா பிரசுரம் வெளியிட்ட சிந்தனையாளர் வரிசை நூலில் இவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றும் வெளியானது. இவையாவற்றிலும் அவருடைய வாழ்க்கையையும் தத்துவங்களையும் சற்றே எளிமையான நடையில் விளக்க முற்பட்டிருப்பதன் மூலம் வெ. சாமிநாத சர்மாவின் "காரல் மார்க்ஸ்' முதலிடத்தைப் பிடித்துவிடுகிறது.

நூல் எழுதப்பட்டதற்கான நோக்கம், அவருடைய வாழ்க்கையையும் அவர் பெற்ற தத்துவார்த்த வளர்ச்சியையும் சொல்வது என்பதில் தெளிவாக இருப்பது இந் நூலின் தனிச் சிறப்பு. மார்க்úஸ அவரைப் பற்றிச் சொல்லியிருப்பது போல் இரண்டு மனிதரின் வாழ்க்கையை வாழ்ந்த அவரை இத்தனைச் சுருக்கமாக விவரிக்க முடிந்திருப்பது மிகப் பெரிய சாதனையாக இருக்கிறது. மார்க்ûஸயும் அவருடைய தத்துவங்களையும் பற்றி பல நூல்களைப் படித்து அதில் இருந்து சாறு பிழிந்த நூலாக இது இருக்கிறது. ஒரு தனி நூலை மொழி பெயர்த்த நூல் இல்லை இது என்பதாலேயே இந்தச் சுருக்கம் சாத்தியமாகியிருக்கிறது.

மார்க்ûஸப் பற்றி அவருடைய பெற்றோர்களின் கனவு எப்படி இருந்தது, மார்க்ஸ் எப்படி மாறுகிறார், ஏன் மாறுகிறார், எதற்காக நாடு கடத்தப்படுகிறார் என்பதைப் படிப்படியாகச் சொல்கிறார் சாமிநாத சர்மா. ஜென்னிக்கும் மார்க்ஸýக்குமான அன்பு எத்தகையது , அவர்களின் காதல் வாழ்க்கை எவ்வளவு பிரிவு நிறைந்ததாக இருந்தது, திருமண வாழ்க்கை எவ்வளவு துயரங்களுக்கிடையே பாசத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது என விவரிக்கிறார். அடுத்து மார்க்ஸýக்கும் ஏங்கெல்ஸýக்குமான நட்பு. இவை நூலின் பிரதான அத்தியாங்கள். இவற்றைப் படிக்க... இப்படியான ஒரு வாழ்க்கையை உணர யாரும் கம்யூனிஸ்டாகவோ அல்லது அதைப் பற்றி முன்னே பின்னே தெரிந்தவராகவோகூட இருக்க வேண்டியதில்லை. படிக்கத் தெரிந்த எந்த மனிதரும் மனதைப் பறிகொடுத்துப் படிக்க இயலும். ஒரு அசல் மனிதனின் சரித்திரம் என்ற அளவிலேயே அது ஒரு சாகா இலக்கியத்தின் அத்தனை பெருமைகளுடனும் இருக்கிறது.

மார்க்ஸின் சமரசமற்ற போக்கு அவருக்கு ஏற்படுத்தும் பல்வேறு இடர்பாடுகள் அவருடைய வாழ்க்கையின் பிரதானமான பின்னணியாக அமைந்துவிடுகிறது. உற்ற தோழராக இருக்கும் ஏங்கெல்ஸிடமேகூட ஆரம்பத்தில் "புரிதல்' பிணக்குகள் ஏற்படுகின்றன. மார்க்ஸின் மேதமைதான் அந்தப் பிணக்குகள் நீங்குவதற்கும் காரணமாகிறது. ஜென்னியிடமோ அந்த மாதிரி "அபுரிதலு'ம் இல்லை. இரவோடு இரவாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பிரெஸ்ஸல்ஸிலிருந்து துரத்தும் போதும் விபச்சாரிகளோடு அடைத்துவைத்து துன்புறுத்தும்போதும் மூன்று குழந்தைகள் பசியாலும் நோயாலும் இறக்கும்போதும் குழந்தையின் காலணிகளை அடகு வைத்து சாப்பிட நேரும்போதும் அவர் மார்க்ஸின் நிலைப்பாடுகளில் அதிருப்தி அடைந்தவராகத் தெரியவில்லை. இந்த ஒவ்வொரு நிகழ்வின் போதும் அவர் யாருக்காவது எழுதிய கடிதங்களில் இந்தச் சோகங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். கூடவே மார்க்ûஸ இந்த உலகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லையே என்ற வருத்தமும் அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருப்பதன் மூலம் அந்த பெருமை மிகு பெண்மணிமீது மார்க்ஸýக்கு நிகரான மரியாதை கூடுகிறது.

ஏங்கெல்ஸின் மனைவி இறந்த செய்தி கேட்டு மார்க்ஸ் ஒரு இரங்கல் கடிதம் எழுதுகிறார். இரங்கல் என்பது பெயருக்குத்தான். அதில் தான்படும் அவஸ்தைகளும் பொருளாதார நெருக்கடிகளையும் அதிகமாக எழுதிவிடுகிறார். ஏங்கெல்ஸýக்கு இது பெரிய வருத்தமாகிவிடுகிறது. நண்பன் தன் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமல் இப்படி ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறானே என்று. ஆனால் ஏங்கெல்ஸின் மனைவி இறந்துவிட்டதைவிடவும் மார்க்ஸ் லண்டனில் குழந்தைகளோடு பட்டினியோடு போராடிக் கொண்டிருந்தது பெருந்துயரமானது என்பது தெரிய வருகிறது. மார்க்ஸ் மன்னிப்பு கேட்கிறார். ஏங்கெல்ஸýம் தான் வருத்தப்பட்டதைத் தவறு என்று உணர்கிறார். உணர்ச்சிகரமான நட்பை உணர முடிகிறது.

புத்தகத்தில் ஒரு இடம் வருகிறது. ஹெகல் சாகும் தறுவாயில் தன் சிஷ்யர்களிடம்: ""என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை. மிஷெலே ஒருவன்தான் அறிந்து கொண்டான். ஆனால் அவனும் என்னைத் தவறாக அறிந்து கொண்டிருக்கிறான்''

"ஒரு தத்துவாதிக்கு இதைவிட வேறென்ன சோகம் இருக்கமுடியும்? ஆனால் மார்க்ஸýக்கு அப்படியொரு வருத்தம் இருக்க வாய்ப்பில்லை எனென்றால் அவனுக்கு ஏங்கெல்ஸ் இருந்தான்' என்று எழுதுகிறார் நூலாசிரியர். அந்த இடத்தில் ஜென்னியை சேர்த்துக் கொள்ளலாம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மூலதனம் ஆகிய நூல்கள் பற்றிய விளக்கங்கள் மிகவும் எளிமையாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இது சற்று மார்க்ஸ் பற்றி தெரிந்தவர்களுக்கான பகுதிதான்.

முக்கியமாக ஹெகலிடமிருந்து மார்க்ஸ் எந்தவிதத்தில் வேறுபடுகிறார் என்ற மகத்தான விஷயத்தைச் சொல்லி "ஹெகலை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறார் மார்க்ஸ்' என்கிறார். அதாவது கருத்து முதல் வாதம் பொருள்முதல்வாதம் என்று அடிக்கடி பிரயோகிக்கும் கம்யூனிஸ சித்தாந்தத்தை கீழ்கண்டவாறு ஒரு உதாரணம் கொடுத்து விளக்கியிருக்கிறார்.

""செடி, கொடிகள் எப்படி வளர்கின்றன என்பதைப் பற்றி நம் மனத்தில் சில கருத்துகள் படிகன்றன. இந்தக் கருத்துகளின் தொகுப்பைத் தாவர சாஸ்திரம் என்று பெயரிட்டு அழைக்கிறோம். சரி; இந்தத் தாவர சாஸ்திரம் முந்தையதா, செடி கொடிகள் முந்தையவையா? தாவர சாஸ்திரம் படித்துவிட்டு செடி கொடிகளை வளர்க்கிறோமா அல்லது செடி கொடிகளைப் பயிரிட்டு வளர்த்துக் கொண்டு பிறகு அதைப் பற்றிய சாஸ்திரத்தை எழுதுகிறோமா? அதாவது பொருள் முந்தையதா அல்லது அந்தப் பொருளைப் பற்றிய கருத்து முந்தையதா?''

ஹெகல் பொருள் தோன்றுவதற்கு முன்பிருந்தே கருத்து இருக்கிறது என்கிறார். மார்க்ஸ் பொருள் தோன்றிய பின்புதான் கருத்து தோன்றியது என்கிறார்.

நூலின் கடைசி சில அத்தியாயங்கள் மார்க்ஸிய இலக்கிய கோட்பாடுகள், மார்க்ஸியத்தின் தவறான புரிதல்கள் போன்றவற்றையும்கூட எடுத்துச் சொல்கின்றன. ""மார்க்úஸô, ஏங்கெல்úஸô குறிப்பிட்ட ஒரு சமுதாய அமைப்பானது, அந்தச் சமுதாயத்தின் பொருளாதார அம்சம் ஒன்றையே கொண்டு இயங்குகிறது என்று சொல்லவில்லை'' என்கிறார் உறுதியாக.

உற்பத்தி உறவு முறை எப்படி மானுட சமுதாயத்தின் எல்லா தர்ம நியாயத்துக்கும் ஒழுக்கத்துக்குமான அடிப்படையாக இருக்கிறது என்பது போன்ற மார்க்ஸியத்தின் அடிப்படைகள் அவருடைய வரலாறினூடே விளக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது.
மார்க்ஸின் தத்துவங்களாவன, பொன்மொழிகளாவன என பிரித்துக் கூறாமல் அவருடைய வாழ்வின் பயணமாகச் சொல்லியிருக்கிறார் சர்மா.

மார்க்ஸ் கல்லூரியில் சேர்ந்தான். அங்கிருந்து பாரிஸýக்குப் போனான். மூலதனத்தை எழுதினான் என்று "ன்' விகுதியில் சொல்லியிருப்பது நெருடலாக இருக்கிறது. "ர்' என்றே போட்டிருக்கலாம். மார்க்ஸினுடைய அப்பாவாக இருந்தாலும் ஜென்னியாக இருந்தாலும் ஏங்கெல்ஸôக இருந்தாலும் இந்தநிலைமைதான் (அவன், அவள்). இப்படி எழுதியிருப்பதால் குறிப்பாக ஒரு நன்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஜென்னி இறந்ததும் மூரும் (மூர் மார்க்ஸýக்கு செல்லப் பெயர்) இறந்துவிட்டார். அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் அவர் உயிருடன் இருந்தார்; ஆனால் வாழ்ந்தார் என்று சொல்ல இயலவில்லை. ஜென்னி மீது அவர் அவ்வளவு காதலாக இருந்தார் என்பது அவருடைய வார்த்தையால் அன்றி, வாழ்க்கையாலேதான் உணர்த்தப்பட்டிருக்கிறது, பிற சமூக உணர்வுகளைப் போலவே. அதாவது அவர் எதை விரும்பினாரோ அதைப் படித்தார். அவருடைய கால சூழலில் ஒரு தத்துவ ஞானி எப்படி இருக்க முடியுமோ அப்படி வாழ்ந்தார். காரல் மார்க்ஸ் ஒரு மூர்க்கராக இருந்திருக்கிறார். அவருடைய காதல் விஷயத்திலும்கூட அவரிடம் ஒரு பித்து இருந்ததற்கான தடயம் குறைவாகவே இருக்கிறது. அவர் முன்கோபியாகவோ, எப்போதும்கோபியாகவோ இருந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. ஆனால் அவருடைய கோபம் எல்லாம் அளவுக்கு அதிகமான அன்பில் இருந்து உதித்தவையாக இருக்கிறது என்று நூலாசிரியர் கூறியிருப்பது நூறு சதவீதம் நிஜமென்று யூகிக்க முடிகிறது.

1 கருத்து:

R A J A சொன்னது…

மார்க்ஸ் பற்றி தனி புத்தகம் எதுவும் படித்ததில்லை, ஆனால் 6 மாதத்திற்கு முன்பு ஆனந்த விகடனில் மார்க்ஸ் ஜென்னி காதல் பற்றியும் ஏங்கல்ஸ் உடனான நட்பு பற்றியும் வந்த ஒரு தொடரை படித்திருக்கிறேன். ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை.....ஆனால் அந்த தொடரும் நன்றாகத்தான் இருந்தது.

LinkWithin

Blog Widget by LinkWithin