சனி, ஆகஸ்ட் 02, 2008

ரஷ்ய நூல்கள்

சிலர் மனிதர்கள் ஆனார்கள்!


தமிழ்மகன்

உலகத்தின் தலைசிறந்த 100 எழுத்தாளர்களைப் பட்டியலிட்டால் அதில் குறைந்த பட்சம் ஒரு டஜன் எழுத்தாளர்களையாவது ரஷ்யா மொழிக்கு ஒதுக்கித் தரவேண்டியிருக்கும். ஒருவேளை இந்தப் பட்டியலைத் தயாரிக்கும் பணியை ஒரு முரட்டுத்தனமான முதலாளித்துவ சிந்தனையாளனும் கூடவே பிற்போக்குவாதியாகவும் இருப்பவனிடம் காலம் ஒப்படைக்குமாயின் மேலே சொன்ன கணக்கில் ஒன்றிரண்டைத்தான் குறைக்க முடியும்.
வெளிநாட்டு இலக்கியங்கள் என்றாலே ஆரம்ப தரிசனமாக ரஷ்ய இலக்கியங்களை மட்டுமே படிக்க முடிந்த என் போன்ற ஆசாமிகளுக்கு இந்தப் பட்டியல் இன்னமும் நீளமானதாக இருக்கும்.
இந்த மூன்று தரப்பு எழுத்தாளர் பட்டியலிலும் தவிர்க்கமுடியாத படைப்பிலக்கியங்களை அல்லது எழுத்தாளர்களைப் பார்போம்.

"குற்றமும் தண்டனையும்', "வெண்ணிற இரவுகள்', "சூதாடி'} தஸ்தயேவஸ்கி

"போரும் அமைதியும்', "அன்னா கரீனினா', "புத்துயிர்ப்பு', இரண்டு ஹூஸôர்கள்} டால்ஸ்டாய்

செம்மணி வளையல்} அலெக்ஸôண்டர் குப்ரின்

மேல்கோட்டு} நிகோலய் கோகல்

தந்தையும் தனயரும், வசந்த கால வெள்ளம்} இவான் துர்கேனிவ்

அலெக்சேய் டால்ஸ்டாய்} நிகிதாவின் இளம்பருவம்

நாய்க்கார சீமாட்டி உள்ளிட்ட சிறுகதைகளும் குறுநாவல்களும்} ஆன்டன் செகாவ்

புரட்சிக்கு முந்தைய எழுத்தாளர்களில் இந்த ஏழுபேரை தவிர்த்துவிட்டு யாருமே பட்டியல் தயாரிக்க முடியாது. இந்த எழுத்தாளர்களின் கதைகளில் ஒரு பொதுத் தன்மையாக உள்மனசிக்கல்கள், நினைவோட்டம், ஆறா மனத்துயர், நேர்மைக்கும் குற்ற உணர்வுக்குமான போராட்டம் ஆகியவை மிக ஆழ்ந்த தத்துவப் பார்வையோடும் அதே சமயம் தேவையான கிண்டலோடும் சொல்லப்பட்டிருக்கிறது.

தஸ்தயேவஸ்கியின் மன உலகம் வறுமையும் ஏராளமான மனசிக்கலும் நிறைந்ததாக இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாத காதல் பித்து தலைக்கேறித் தவிக்கும் நாயகர்கள் இவருடைய பாத்திரங்களாக இருக்கிறார்கள். காதலியின் அன்புக்காகக் காதலியையே இழக்கத் துணிபவனும் (வெண்ணிற இரவுகள்), காதலிக்காக மலை உச்சியிலிருந்து கீழே குதிப்பதாக வாக்குறுதி தருபவனும் (சூதாடி) இவருடைய கதை மாந்தர்களாக இருக்கிறார்கள்.

டால்ஸ்டாய் மேட்டுக்குடியில் பிறந்து அங்கு நிலவும் போலித்தனமான நாகரீக வேடிக்கைகளையும் பணமிருந்தும் நிராசைகளும் குற்ற உணர்வால் நிம்மதியில்லாமல் இருக்கும் போக்கும் இவரது களம். வேட்கை காரணமாக வாழ்வில் இடறி அதைத் தொடர்ந்து ஏற்படும் சிடுக்குகள் நிறைந்த படிநிலைகளை அன்னா கரீனினாவிலும் புத்துயிர்ப்பிலும் மிகச் சிறப்பாகச் சித்திரித்திருக்கிறார் டால்ஸ்டாய். ஒரு வாழ்க்கை முறை ஒருவரின் குணத்தை எந்த அளவுக்குத் தூக்கிப் போடுகிறது என்பது நெஹ்லூதவ் மீசை அரும்பிய இளைஞனாய் இருக்கும்போது கத்யூஷாவிடம் ஏற்படும் காதலுக்கும் பிறகு ராணுவப் பயிற்சிக்குப் போய் வந்த பிறகு அவளை அவன் எதிர் கொள்வதற்கும் இருக்கும் வேறுபாடு உணர்த்துகிறது. ராணுவம் அவனுக்குள் இருந்த காதலை காமமாக உருமாற்றி அனுப்பும் ரசாயனத்தை என்னவென்பது? கத்யூஷாவும் வேசையாக மாறி மாஸ்லவாவாக மாறும்போது ஒரு மலர் கருங்கல்லாக மாறிப்போனதை உணர முடிகிறது. எப்படிப் பழகிக் கொள்கிறோமோ அதுதான் வாழ்க்கையாகவும் எப்படி வாழ்கிறோமோ அதுதான் பழக்கமாகவும் மாறிப்போகிற விந்தை அது.
"செம்மணி வளையல்', "வசந்தகால வெள்ளம்' கதைகளும் காதலின் வலியைப் பிரிவின் துயரைச் சொல்லும் வலிமையான கதைகள். இந்தக் கதைகளின் இறுதிப்பக்கங்களை ஏதேச்சையாகப் புரட்டும்போதும் மனம் கனத்துப் போய் கண்ணீர் துளிர்ப்பது அனிச்சை செயல்போலவே ஆகிவிட்டது எனக்கு. தந்தையரும் தனயரும் கதையின் நாயகன் பஸôரவ் பாத்திரத்தைப் படைப்பதற்காக என்னிடமிருந்த அனைத்து வண்ணங்களையும் இழந்துவிட்டேன் என்று துர்கேனிவ் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்பது நாவலைப் படித்தோருக்குத் தெரியும். பஸôராவ்வின் மிடுக்கு நம்மை வியப்பில் ஆழ்த்தும். நோய் முற்றி இறக்கும் தறுவாயில் கடுமையான ஜுரத்தில் பேசிக் கொண்டிருப்பான் பஸôரவ். அப்போது, ""ஜுரத்தில் நான் உளறுவதுபோல் இருந்தால் தயவு செய்து எனக்கு நினைவூட்டுங்கள். நிறுத்திக் கொள்கிறேன். எனக்கு உளறுவது பிடிக்காது'' என்பான். நாவலைப் படித்து முடிப்பவர் இரண்டு நாளைக்காவது பஸôரவ் போல இருப்பார்கள். அல்லது இருக்க நினைப்பார்கள். தலைமுறை இடைவெளியை மிகச் சிறப்பாக சித்தரித்த நாவல்களில் இதுவும் ஒன்று.
புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில் கார்க்கியின் "பிறந்தான் மனிதன்', "வழித்துணைவன்', "கிழவி இùஸரிக்கில்' உள்ளிட்ட பல சிறுகதைகளையும் "தாய்' நாவலையும் நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிங்கிஸ் ஐத்மாத்தவ், பாஸý அலியவா, மிகைல் ஷோலகவ் போன்றவர்கள் அன்பையும் காதலையும் போராட்ட வாழ்வையும் சொன்ன மிக முக்கியமான எழுத்தாளர்கள். வஷிலி வஷிலியேவிச் எழுதிய "அதிகாலை அமைதியில்', ஓஸ்திரோவிஸ்கியின் "வீரம் விளைந்தது', மற்றும் "உண்மை மனிதன் கதை', "போர் இல்லாத இருபது நாட்கள்' போன்ற பல நாவல்கள் புரட்சிக்குப் பிந்தைய அல்லது நாஜி படையெடுப்பு காலத்தை ரத்தமும் சதையுமாகக் கண் முன் காட்டுபவை.
அதிலும் அதிகாலை அமைதியில் நாவலில் ஆறு பெண்கள் ஒரு நாஜி ராணுவப் பிரிவை எப்படி எதிர் கொண்டு போராடுகிறார்கள் என்பது உள்ளத்தை உலுக்கும். பார்வை இழந்த ஓஸ்திரோவ்ஸ்கியின் முதல் கையெழுத்துப் பிரதி தொலைந்து போன நிலையில் மீண்டும் எழுதப்பட்டது என்ற செய்தி போரின் கொடுமையினும் கொடுமை. விமானவிபத்தில் காலிழந்து பனியில் தவழ்ந்து வந்து மீண்டும் விமான ஓட்டியாக மாறும் உண்மை மனிதனின் கதை மட்டும் என்னவாம்? உலகின் சிறந்த படைப்புகளைச் சேகரிக்கும் முரட்டு முதலாளித்துவ சிந்தனையாளருக்கு இந்தப் பாராவில் உள்ள சிலரைச் சேர்த்துக் கொள்வதில் சங்கடங்கள் இருக்கலாம்.
என்னுடைய அனுபவத்தில் இன்றைய (40 வயதுக்கு மேற்பட்ட) தமிழ் எழுத்தாளர்களில் இந்தப் படைப்புகளைத் தவறவிட்டவர்கள் சொற்பமானவர்களே இருப்பர். காரணம் இந்த அத்தனைப் புத்தகங்களுமே சோவியத் ரஷ்யாவால் மிகக் குறைந்தவிலையில் மிகத் தரமான புத்தக ஆக்கங்களாக அளிக்கப்பட்டவை. இந்தியாவின் பல மொழிகளில் இந்தப் புத்தகங்களை அவர்கள் மொழியாக்கம் செய்திருப்பதன் காரணமாக இந்தியா முழுவதிலுமே 40 வயதைக் கடந்த எழுத்தாளர்களின் ஆதார நூல்களாக இவை இருக்கும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.
இப்போது அவர்கள் காப்காவையும் கார்ஸியா மார்க்வெஸ்ûஸயும் சார்த்தர், ஆல்பெர் காம்யு, சினுவ ஆச்சிபி, ஓரான் பாமுக் பற்றியும் பேசுபவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்கள் எல்லோரும் (வீக்கோ வஜ்ரதந்தி விளம்பரத்தில் சொல்வதுபோல) இதிலிருந்து வந்தவர்கள்தான். (இல்லை என்பவர்கள் தகுந்த ஆதாரத்துடன் வந்து இந்தக் கூடாரத்திலிருந்து விலகிக் கொள்ளலாம்.)


படைப்பிலக்கியம் மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் ரஷ்ய நூல்களே எனக்குப் பெரிய ஆதரவாக இருந்தன. "இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்', "நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்', "மக்கள் தொகைத் தந்துவத்தின் அடிப்படைகள்' போன்ற நூல்கள் பலமான தத்துவ பலத்தையும் விஞ்ஞான அடிப்படையிலான சமூகப் பார்வையும் எனக்குள் ஏற்படுத்தியது.
"மனித இனங்கள்', "நான் ஏன் என் தந்தையைப் போல இருக்கிறேன்', "தேனிக்கள்', யா.பெரல்மானின் "பொழுது போக்கு பெüதீகம்', "பொழுதுபோக்கு வானவியல்', "சார்பியல் தத்துவம்தான் என்ன?' போன்ற விஞ்ஞான நூல்கள் எனக்கு அறிவியல் மீது இருந்த அச்சத்தைப் போக்கி வாழ்வின் சுவாரஸ்யங்களாக்கின. "ஹிஸ்ட்ரி ஆஃப் த ஏன்ஸியன்ட் வேர்ல்ட்', "குடும்பம் தனிச் சொத்து அரசு' போன்ற நூல்களை கண்ணைத் திறந்துவிட்ட நூல்கள் என்று எப்போதும் சொல்வேன்.


குழந்தைகளுக்கான நூல்களும் ரஷ்யா வெளியிட்டதுபோல் வெறெந்த நாடும் அத்தனை குறைந்த விலையில் வெளியிட்டிருப்பார்களா என்று தெரியவில்லை. நிறைய புத்தகங்கள் 50 காசிலிருந்து ஒரு ரூபாய்க்குள். டால்ஸ்டாய் எழுதிய குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் என்ற சிறுநூல் என் மனதில் ஓவியமாகப் பதிந்து கிடக்கிறது. இரண்டு நண்பர்கள், அக்ரூட் கொட்டை திருடிய சிறுவன், காளான் பொறுக்கும் சிறுமிகள், சிங்கமும் நாய்க்குட்டியும் போன்றவை வார்த்தைகளும் சித்திரங்களுமாக பதிவாகியுள்ளன. இயற்கை விஞ்ஞானிகளின் கதைகள் நூலில் காகங்களுக்கு மூன்றுக்கு மேல் எண்ணத் தெரியுமா? போன்ற சுவாரஸ்யமான சந்தேகங்கள், எலியை வளர்த்த பூனைகள் போன்ற இயற்கை ஆய்வுகள் மறக்கவும் கூடுமோ? சிறுவயதில் "அப்பா சிறுவனாக இருந்தபோது' நூலைப் படிக்கக் கொடுத்து வைக்காதவர்கள் தங்கள் மகிழ்ச்சியின் ஒரு பகுதியை இழந்தவர்கள்தான்.
இப்போது இதில் பல புத்தகங்கள் என்னிடம் கைவசம் இல்லை. பல நூல்கள் படித்து பல ஆண்டுகள் ஆனவை. ஆனால் இந்தக் கட்டுரையை எழுத உட்கார்ந்ததும் அத்தனையும் அந்த நூல்களை வாங்கிய தருணத்திலிருந்து அவற்றை தாகத்தோடு படித்த காலங்கள் வரை கண்முன் வந்துவிட்டுப் போகின்றன. நூலாசிரியரின் பெயரோ, கதாபாத்திரங்களின் பெயரோ, நூலின் பெயரோ சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றுகூட தோன்றவில்லை. அப்படிச் செய்வது என்னை வளர்த்த அந்த நூல்களுக்கு செய்யும் அவமானம் என்று தோன்றியது. இது உணர்ச்சிவசப்பட்ட (உணர்ச்சியை வசப்படுத்த முடியாத?) நிலையில் சொல்லப்படுவதாக நினைக்கவும் வேண்டியதில்லை.
சோவியத் ரஷ்யர்கள் அமெரிக்காவுடன் போட்டியிட்டு அவர்களுக்குச் சவாலாக வானிலிலும் செயற்கை கோள் சாதனைகளிலும் ராணுவக் கருவிகள், நீர் மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றிலும் கல்வியுலும் மின்மயமாக்கல் விஷயத்திலும் அணுக்கரு உலை, ஆகாய விமானம் போன்ற இதர தொழில்நுட்பங்களிலும் அளப்பறிய சாதனை புரிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சாதனையில் எல்லாம் பெரிய சாதனையாக அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் உலகமெங்கும் இருந்த எத்தனையோ பேரை மனிதர்களாக்குவதற்கு அவை உதவியிருக்கின்றன.... உதவிக் கொண்டிருக்கின்றன.

2 கருத்துகள்:

Kalaiyarasan சொன்னது…

It's true. I agree with you.

-Kalaiyarasan
http://kalaiy.blogspot.com

ஆடுமாடு சொன்னது…

ஐயா, வணக்கம்.
கட்டுரை நல்லா இருக்கு.

என் சிறுவயதில் கம்யூனிஸ்ட் நூலகத்தில் வாசிக்க ஆரம்பித்தவன்தான் நானும். புரியாமல், புரியாமல் இரண்டு மூன்று முறை வாசித்த புத்தகங்களும் உண்டு.
முதலில் ஒட்டாமல் பிறகு ஒட்டிக்கொண்ட 'மார்க்சியம் என்றால் என்ன?, 'பொருள் முதல் வாதம்' உள்ளிட்ட புத்தகங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன.
கார்க்கியின் தாய் நாவலில் வருகிற பாவெல் இன்னும் கண்முன் நிற்கிறான். நீங்கள் குறிப்பிட்டிருக்கிற வசந்த கால வெள்ளம்
போரும் அமைதியும்' போன்ற நாவல்கள் என் பால்ய கால ஞாபகங்களை தூண்டுகிறது.( படிக்கறதை விட்டு 5 வருஷம் ஆச்சு. இப்பதான் திரும்பவும் ஆரம்பிச்சிருக்கேன்).

வாழ்த்துகள்ஜி.

LinkWithin

Blog Widget by LinkWithin