வெள்ளி, அக்டோபர் 24, 2008

பழையன புகுதலும்

விகடன் தீபாவளி மலரில் என் சிறுகதை
வாக்கியத்தின் குறுக்கே துருத்திக் கொண்டிருந்த வார்த்தை மாதிரி இருந்தது அவரைப் பற்றிய ஞாபகம். ஒரு வார்த்தையை ஆதாரமாக வைத்துக் கொண்டு வாக்கியத்தையே மாற்றியமைப்பதில்லையா சில சமயம்? எல்லாவற்றையும்விட முக்கியமாக அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஸ்பென்ஸர் ப்ளாஸாவில் சறுக்கு மாடிப்படியில் ஏறிக் கொண்டிருந்தபோது எதிர்ப்புறம் இறங்கிக் கொண்டிருந்தார் அவர். எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று நான் பார்த்தபோதே அவர் என்னைப் பார்த்த பார்வையிலும் அதே தவிப்பை அவதானித்தேன். நாங்கள் இருவரும் நின்று நிதானித்து ஞாபகப்படுத்திக் கொண்டு புன்னகைக்கும் நேரம் வரை பொறுத்திருக்கவில்லை வழுக்கிச் செல்லும் படிக்கட்டு. அவர் ஒரு முனையிலும் நான் ஒரு முனையிலுமாக எதிரெதிர் திசையில் சேர்க்கப்பட்டோம்.
அவர் போயேவிட்டார் கடைசி வரை திரும்பிப் பார்த்தவாறே.

யாராக இருக்கக் கூடும் அவர்?

ஏறிய முன்னெற்றியும் புருவத்தின் மேல் இருந்த தழும்பும் சட்டென ஒரு பரிச்சயத்தை நினைவுபடுத்தியது.

ரொம்ப பழகினவர்தான் ஆனால் பார்த்து ரொம்பநாள் ஆகிவிட்ட ஆசாமி என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. நின்று கேட்டுவிட்டிருக்கலாம் என்ற தவிப்பு நேரத்தோடு சேர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது.

வாங்கிய மறுநாளே பழுதாகிப் போய்விட்ட என் செல்பேசியைத் திருப்பிக் கொடுத்து புதிய ஒன்றை வாங்கிச் செல்வதற்காக நான் வந்திருந்தேன்.

விலை உயர்ந்த செல்பேசி. ஆனால் கடைக்காரன் அதை எடுத்துக் கொண்டு வேறு ஒன்றைத் தர சம்மதிக்கவில்லை. கொடுத்துவிட்டுச் செல்லுமாறும் பழுதுபார்த்துத் தருவதாகவும் சொன்னான். சுளையாக பத்தாயிரம் ரூபாயைக் வாங்கிக் கொண்டு இப்படி அலைய வைப்பதைக் குறித்து ஒரு மூச்சு அழுதுவிட்டு ஓடிடும் மாடிப்படியில் இறங்கி வந்தபோது அவரைப் பற்றிய ஞாபகம் காந்தப் புலத்துக்குள் வந்துவிட்ட குண்டூசி மாதிரி வந்து ஒட்டிக் கொண்டது. எனக்கும் அவரை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பிரதானமாக இருந்தது. இன்று நான் செய்வதாக இருந்த மற்ற வேலைகளுடனோ, தேவைப்பட்டால் அவற்றையெல்லாம் நிறுத்திவிட்டோ அவரைக் கண்டுபிடிக்கலாம் என்று ஆசைப்பட்டேன். எனக்கு இன்று ஓய்வுநாள்தான். அவரைக் கண்டுபிடிப்பது பயனுள்ள வேலையாக இருக்கக்கூடும்.

அப்பு செட்டியார் பள்ளிக் கூடத்தில் ஆறாம் வகுப்பு சேர்ந்ததிலிருந்து அத்தனை வகுப்புத் தோழர்களையும் யோசித்துப் பார்த்தேன்.

ராஜேந்திரன், திருமூர்த்தி, வாசுதேவன், சங்கர், சேகர் , கண்ணன் வாத்தியார் என்று நினைவு பால்ய ஞாபகங்களாக மாறிக் கொண்டிருந்த நேரத்தில் நானே வலுக்கட்டாயமாக அந்த ஞாபகங்களிலிருந்து விடுவித்துக் கொண்டேன். நிச்சயம் பள்ளித் தோழராக இருக்கமுடியாது. கடைசியாக வேலைபார்த்த நிறுவனத்தில் பணியாற்றியவராக இருக்கலாம் என பலரையும் நினைவுபடுத்திப் பார்த்தேன். சுத்தம். அவர் யாரிடமும் ஒப்பிடமுடியாமல் நழுவிக் கொண்டிருந்தார். எனக்கு அவரைக் கண்டுபிடிக்கிற ஆர்வம் மெல்ல மெல்ல சவாலாக மாறிக் கொண்டிருந்தது.

தொண்டைக்குள் மாட்டிக் கொண்ட மீன் முள்ளாக, பல்லிடுக்கில் திக்கிக் கொண்ட மாம்பழ நாராக என்னை வேறு சிந்திக்க விடாமல் தன் வசமாக்கிக் கொண்டார்.

வாழ்க்கையில் எதிர்பட்ட மனிதர்கள் அனைவரையும் வேகமாக ஓட்டிப் பார்த்தேன். கல்லூரி, வேலை பார்த்த இடம், வேலை தேடிய இடம், வாய்த்த அதிகாரிகள், பால் பூத் வரிசையில் நிற்கையில் பழக்கமானவர்கள், சக பயணிகள், கம்பெனி வாசல் டீக்கடைக்காரன், உறவினர்கள், கல்யாணடூ கருமாதி சடங்குகளில் பார்த்தவர்கள், சினிமா தியேட்டரில் வம்பு சண்டை செய்தவன், அவசரத்துக்கு ஸ்கூட்டரில் லிஃப்ட் கொடுத்தவன் , நண்பர்கள், விரோதிகள், துரோகிகள்... அட! ... அடப்பாவி... அவனா?


அடக் கொடுமையே... வாழ்க்கையில் உன்னைச் செத்தாலும் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்று யாரைப் பார்த்துச் சொன்னோமோ அவனா? தண்டையார் பேட்டையில் இருக்கும்போது ஒரு சலூனில் சவரம் செய்து கொள்வதற்காக வந்திருந்த நாங்கள் இருவரும் அவசரத் தேவை நண்பர்களானோம். சவரம் செய்து கொண்டு எழுந்தபோது பாக்கெட்டில் சுத்தமாகக் காசே இல்லை. வேறு சட்டையை மாற்றிப் போட்டுக் கொண்டு வந்தது தெரிந்து ஒருமாதிரி தட்டுத் தடுமாறி கடைக்காரரிடம் விஷயத்தைச் சொன்னேன். கடைக்காரன் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு நம்பலாம்தான் என்று முடிவெடுப்பதற்குள் அடுத்து சவர நாற்காலியில் துண்டைத் தட்டிவிட்டு உட்கார்ந்தவாறே, ``பரவால்ல சார்.. நான் குடுத்திர்றேன். அடுத்த தடவை கொடுங்க'' என்று அறிமுகமாகி நாளாவட்டத்தில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்யும் அவர் என் பூர்வீக வீட்டை விற்றுத்தர முயற்சி எடுத்துக் கொண்டதும் ஜிவ்வென்று ஒரு நொடியில் ஓடியது.

ஞாபக மணல், விரலிடுக்கில் நழுவிக் கொண்டிருந்தது.

என் தங்கைக்குத் திருமண ஏற்பாடு. உமாவுக்கு முடிந்த கையோடு எனக்கு என்று பேச்சு. வீட்டை விற்றுத்தான் எல்லா ஏற்பாடும் செய்ய வேண்டியிருந்தது. காமராஜ் கூட்டி வந்த பார்ட்டிக்கு வீட்டைப் பிடித்துப் போனது. வருகிற புதன் கிழமை ஒரு லட்சம் அட்வான்ஸ் தந்துவிடுவதாகவும். அடுத்த இரண்டு மாதத்தில் கிரயம் செய்வதாகவும் சொல்லிவிட்டுப் போய்விட்டார். கல்யாண பத்திரிகை அச்சடித்தவனுக்கு ஆரம்பித்து 20 பவுன் நகை, கட்டில், பீரோ, வீட்டுச் சாமான்கள் எல்லாம் வீட்டைவிற்றால்தான்.. கல்யாண செலவுக்கு ஒரு லட்ச ரூபாய் போக மீதி மூன்று லட்சம் கையில் நிற்கும். மீதி பணத்தை பாங்கில் பிக்ஸட் டெபாஸிட் போட்டு வைத்துவிடலாம் என்பது தாத்தாவின் திட்டம். நகையாக வாங்கி வைத்தால் பின்னாடி விற்றுக் கொள்ளலாம் என்பது அம்மா சொன்னது. ஏதாவது கடை வைக்கலாம் என்பது எனக்குத் தோன்றிய யோசனை.

``கன்ஸ்ட்ரக்ஷன்ல போட்டீங்கன்னா மூணே மாசத்தில டபுளாக்கிடலாம்'' என்றான் காமராஜ். சவரக்கடையில் கேட்காமலேயே ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்து காலத்தினால் செய்த உதவி செய்ததை நினைத்துப் பார்த்தேன்.

``மீதி மூணுல ட்சத்தில கொளத்தூர் பக்கமா ஒரு இடம் வாங்கி வீடுகட்டி வித்தோம்னா ரெண்டு பங்கா லாபம் கிடைக்கும். அரை கிரவுண்ட்... ஒண்ணரை லட்சம், வீடுகட்றதுக்கு ஒரு ஒண்ணரை லட்சம்... ஏன் ரெண்டே முக்கால்லயே முடிச்சிர்லாம். அரை கிரவுண்ட் வீடு இப்போ தாராளமா அஞ்சரை ஆறு போகுது... வெரட்டி வேலைய முடிச்சா மூணுமாசத்துல வீட்ட எறக்கிட்லாம்.''

திட்டம் சரியாகத்தான் இருந்தது.

இரண்டு பங்கு லாபம் வேண்டாம். அம்பதாயிரம் அதிகமாகக் கிடைத்தாலும் லாபம்தானே? மூணு லட்சம் லாபம் கிடைக்கும் என்று சொல்லும் இடத்தில் அம்பதாயிரமாவது நிச்சயம். கிடைக்கும் என்று சொன்ன லாபத்தில் ஆறில் ஒரு பங்கு. பெரிய மனுஷன் பெயரை வைத்திருக்கிறான். சொன்னபடி நடந்து கொள்வான் என்றும் தோன்றியது. நல்ல உழைப்பாளி. நம்பகமான ஆள். போதாதா?

``சரி. ஜாக்கிரதையா இறங்கணும் ''

``நம்பி பணம் குடுக்கிறீங்க. நீங்க சொல்லணுமா?''

``எனக்கு மூணு லட்சம்கூட வேணாங்க. அம்பதாயிரம் போதும்.''

சிரித்தான்.

``அம்பதாயிரம் போதுமா?... சரி நான் ஒரு அம்பதாயிரம் போட்டு ஒரு லட்சமா தர்றேன். மீதி ரெண்டு லட்சம் எனக்கு போதுமா'' மறுபடி சிரித்தான். நான் போதும் என்று தலையாட்டினேன். ``என்ன சார் இந்தக் காலத்தில இப்படி இருக்கீங்க? டீல் படி உங்களுக்கு ரெண்டு லட்சம், எனக்கு ஒரு லட்சம் சார். இப்படித்தான் எல்லாருக்கும் பண்றேன்.''

``இப்படி நிறைய கட்டி வித்திருக்கீங்களா?''

``பழனி ஆண்டவர் கோவில் தெருவுல சீனிவாசன் தெரியுமா?... அட முன்னாடி கவுன்ஸிலரா இருந்தாரே? விபூதி பட்டை ... குங்குமம்..'''

அவன் குறிப்பிட்டவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை.

``அது பரவால்லங்க. மூணு மாசத்துல பணம் திரும்பிடுமா? ஏன்னா வீட்ல சமாளிக்க முடியாது.''

``சார் கல்யாண செலவைப் பாருங்க. மீதி பாங்க்ல இருக்கிற மாதிரி என்கிட்ட இருக்கட்டும். பிக்ஸட்ல போட்டா மூவாயிரம்கூட குடுக்க மாட்டான். நான் ரெண்டு லட்சம் தர்றேன் போதுமா? வாங்கிற இடத்தை உங்க மேலேயே "பவர்' பண்ணிக்கோங்க. வீடுகட்டும் போது கூட இருந்து வேலை செய்யறவனுங்களுக்குப் பணம் செட்டில் பண்ணுங்க.. யாராவது ஏமாத்திட முடியுமா? வீடு உங்க பேர்ல இருக்கு. பணமும் உங்ககிட்ட இருக்கு. நான் ஓடி ஆடி லாபம் சம்பாதிச்சுத் தரப் போறேன். அதுக்கு ஒரு பங்கு கூலி . பணம் போட்ட உங்களுக்கு ரெண்டு பங்கு லாபம்..''

பேச்சுக்காக ஒரு சந்தேகம் கிளப்பலாம் என்றால்கூட வாய்ப்பே தரவில்லை.

``கண்டிப்பா சேர்ந்து பண்ணுவம் சார்''
மூன்றே மாதத்தில் விற்றவீட்டைவிட பெரியவீடாக வாங்கிவிடவேண்டும் என்று மனதில் ஒரு அவசர சவால்.

வீட்டில் போய் விஷயத்தைச் சொன்னபோது யாரும் ரசித்ததாகத் தெரியவில்லை.

``ஏண்டா... மூணு லட்சத்துக்கு வீட்டை முடிச்சுட்டு ஆறுலட்சம்னு சொன்னா வாங்கிறவன் என்ன இளிச்சவாயனாடா? வாங்கிறவன் அங்க மெனை விலை என்னா, கட்டுமானத்துக்கு எவ்வளோ புடிக்கும்னு கணக்கு போடமாட்டானா? எல்லாரும் கால்குலேட்டர் வெச்சிருக்கான்டா உன்னாட்டம். அப்பிடியே எவனோ ஆறுலட்சம் குடுத்தாலும் அப்பிடி விக்கிறதுதான் நியாயமா?'' என்றார் தாத்தா.

காமராஜைப்போய் சந்தேகிக்கிறார்களே என்று வருத்தமாக இருந்தது.

``ஆறு லட்சம் இல்லைனாலும் அம்பதாயிரம் கிடைச்சாலும் லாபம் தானே?'' என் ஆசையை வெளியிட்டேன்.

``அதெல்லாம் வேண்டாம்பா'' சின்னதாக மறுத்தார் அம்மா.

அப்பா எதுவும் பேசவில்லையென்றாலும் வில்லிவாக்கத்தில் புது வீடு மூன்று லட்சத்தில் விலைக்கு வருவதாகச் சொல்லி அதற்கான வில்லங்க சான்றிதழ் வாங்கும் வேலையில் இறங்கினார் அடுத்த நாளே. தாத்தாவுக்கு வில்லிவாக்கம் வீடு முழு சம்மதம். ``மூணு மாசத்தில் வில்லிவாக்கத்தில் வாங்கிப் போடுகிற வீடே அம்பதாயிரம் விலை ஏறிடும் நீ போட்ட கணக்குப்படி'' என்றார் தாத்தா என்னிடம் கண் சிமிட்டி.

விஷயத்தைச் சொல்லிவிட இரண்டு நாள்களாக காமராஜைத் தேடினேன்.

ஆள் அகப்படவில்லை. மூன்றாம்நாள் பார்த்தபோது, ``செந்தில் நகர்ல கார்னர் ப்ளாட் முக்கா கிரவுண்ட் விலைக்கு வருது. ரொம்ப சீப்பா பேசி முடிச்சிருக்கேன். ரெண் ரூபா. கார்னர் ப்ளாட் வீடுனா ஏழு ரூபாய்க்கு கண்ணை மூடிக்கிட்டு வாங்குவான்'' கண்களில் பெருமிதம் பூரிக்கச் சொன்னான் காமராஜ்.

எப்படி விஷயத்தை உடைப்பதென்று புரியவில்லை. இவ்வளவு சொன்ன பிறகும் நான் மெழ்னமாக இருப்பது அவனுக்கே உறைத்திருக்க வேண்டும்.

``என்ன யோசிக்கிறீங்க ? எதுவா இருந்தாலும் சொல்லுங்க'' என்றான்.
சொன்னேன்.

கையை முதுகுக்குப் பின்னால் இறுக்கிக் கட்டிக் கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்து மூச்சை இழுத்துவிட்டான். கால்கள் விரைத்து அகட்டி நின்றான். மனுஷன் முறுக்கிக் கொண்டான் என்பதைக் கண்கூடாகப் பார்த்தேன். எல்லாவற்றையும் சொன்னபிறகும் ``சரி. எனக்கின்னா சொல்றே?'' என்று பிரத்யேகமாகக் கேட்டான். அழுத்தம் திருத்தமாக ஒருமுறை கேட்டுக் கொள்வதைப் போல்.

``அதான் சொல்லிட்டனே''
``சரி. நீ போ.'' திடீரென அவன் ஒருமையில் விளித்தது ஒரு மாதிரியாக இருந்தது. ``அப்ப புதன்கிழமை அட்வான்ஸ் கொடுக்க காலைல ஒம்போது மணிக்கு வரேன்னு சொல்லியிருக்காங்க. வந்துருவீங்களா?''

நான் இல்லாத பக்கமாகத் திரும்பிக் கொண்டு தலையசைத்தான்.

வருகிறவர்களுக்கு கேசரியும் காபியும் செய்வதாக ஏற்பாடு. நடுவீட்டுத் தரையில் பெரிதாக துப்பட்டா விரித்து சாமி படத்துக்கு விளக்கேற்றி வைத்திருந்தாள் உமா. என்னென்ன டிசைனில் என்னென்ன நகைகள் வாங்க வேண்டும் என்று அவளுக்குக் கனவு.

அட்வான்ஸ் கொடுக்க வருகிறவர் வரும்போது சாப்பிட்டுக் கொள்வதாக தாத்தாவும் அப்பாவும் சொல்லிவிட்டதால் எல்லோரும் அதே முடிவைப் பின்பற்றினோம். காமராஜ் கோபத்தில் வராமல் இருந்துவிடுவான் என்று பார்த்தேன். சரியாக எட்டரைக்கெல்லாம் வந்துவிட்டான்.

ஒரு லட்சம் என்பது சேர்ந்தாற்போல பார்த்ததில்லை யாரும். பத்து நூறு ரூபாய் கட்டுகள். சின்ன ப்ரீப்கேஸில் ஒருமுறை அடுக்கிப் பார்க்க வேண்டும். அப்படியாக சினிமாவில் பார்த்தது. ``ஐநூர் ரூபாயா இருந்தா ரெண்டே கட்டுதான்'' என்று உமா சொன்னபோது அப்படியெல்லாம் ஆகிவிடக்கூடாது என்று மனதுக்குள் விரும்பினேன்.

பட்டுப்புடவை பத்தாயிரத்துக்குக் குறையக் கூடாது என்பது சம்பந்திவீட்டாரின் வேண்டுகோள். அவர்கள் குடும்பத்தில் முதல் இரண்டு மருமகளும்கூட அப்படித்தான் அணிந்து வந்தார்களாம். அதில் அவ்வளவாக உடன்பாடு இல்லை போல உமா அலுத்துக் கொண்டாள். மருமகள் முறுக்கு . கல்யாண வீடு என்றால் இப்படியான இரு தரப்பு முறுக்கல்களுக்கும் பஞ்சம் இருக்காது. எப்படியோ கல்யாணம் முடிந்தால் அடிவயிற்று நெருப்பை இறக்கி வைத்துவிடலாம் என்ற திருப்தி அம்மாவுக்கு.

ஒன்பதரை ஆகி, பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. காமராஜைப் பார்த்துத் தாத்தா கேட்டார். ``வந்துருவாங்கல்ல?''

``போன் பண்ணி பார்க்றேன்'' என்றேன்.

``நீ சாப்பிட்றேம்பா'' என அம்மா காமராஜை வேண்ட, ``எல்லாரும் வந்திடட்டும்'' என்று எழுந்தான். நானும் எழுந்து ``போன் பண்ணிட்டு வந்திட்றேன்'' என்றபடி வெளியே வந்தேன்.

போன் போட்டதும் யாரோ பெண்மணி எடுத்தார். ``அப்சல் சார் இல்லீங்களா?''

``வெளியே போயிருக்காரு''

வைத்துவிடப் போகிறார்கள் என்ற அவசரத்தில் ``ஒரு நிமிஷங்க. தண்டையார் பேட்டையில இருந்து பேசறேன். எங்க வீட்டை வாங்கறதுக்கு அட்வான்ஸ் கொடுக்க வர்றேன்னாரு...''

``அவர் திருத்தணிக்கில்ல போயிருக்காரு..''

``இல்லங்க.. ஒம்போது மணிக்கு இங்க வர்றேன்னு சொல்லியிருக்காரு. வீட்ல சரியா கேட்டு சொல்லுங்க.. எல்லாரும் வெயிட் பண்றோம்.''

``நேத்து அப்படித்தான் சொல்லிக்கிட்டிருந்தாரு. அப்புறம் அதில ஏதோ மாத்தமாயிடுச்சுன்னு சொல்லிட்டுப் போனாரு''

``இல்லங்க.. இது..''

``நீங்க மீடியேட்டர் ராமு கிட்ட பேசுங்க...''

``நம்பர் இருக்குங்களா?''

குறித்துக் கொண்டேன்.

அடுத்து ராமு நம்பரை அழுத்துவதற்கு முன் காமராஜைப் பார்த்தேன். ``இன்னா கேன்சலாமா?'' என்றான் சந்தோஷமாக.

``ஏன் இப்படி சொல்றாங்கனு புரியலையே''

இவன் எதுக்கு இவ்வளவு சந்தோஷமாகக் கேட்கிறான். கேசரி செய்து வைத்துவிட்டு சாப்பிடாமல் காத்திருப்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது?

``சரி. நாளைக்கு நேர்ல போய் பேசிக்கலாம் விடு.'' புன்னகை மாறாமல் சொன்னான்.

``இல்ல. மீடியேட்டர் ராமு நம்பர் கொடுத்திருக்காங்க. பேசிப் பார்க்கலாம்.''

``அவன் யார்யா குறுக்க... வுடு நாளைக்கு காலைல முடிச்சிர்லாம்'' காமராஜ் காத்திருத்தவன் மாதிரி சொன்னதையே சொன்னான்.

நான் அவசரமாக ராமுவின் எண்ணைச் சுழற்றினேன். ரிஸீவரைப் பிடுங்கி வைப்பதில் அவசரமாக இருந்தான் காமராஜ். ``நாளைக்குப் பாத்துடுவோம்''

``ஹலோ ராமு சாருங்களா? நான் தண்டையார் பேட்டைல இருந்து பேசறன் சார்... அப்சல் சார் இன்னைக்கு அட்வான்ஸ் தர்ரேன்னு சொன்னாரு. எல்லாரும் வெயிட் பண்றோம்...''

``இன்னாய்யா விளையாட்றியா? என்னமோ நேத்து ஆளனுப்பி இப்ப வீட்டை விக்றதா இல்லனு சொன்னியாமே?''

``ஸார்... நான் ஏன் சார் அப்படிச் சொல்றேன். பெரியவங்கள்லாம் வெயிட் பண்றாங்க சார். அப்படி சொல்லியிருந்தா வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பமா சார்?''

``காமராஜ்தான் வந்து சொன்னாருப்பா. முதல்ல விக்கிறதா இல்லனு சொன்னாரு... அப்புறம் அஞ்சு லட்சம் தந்தாதான் கொடுக்கமுடியும்னு சொன்னதா சொன்னாரு.. அப்புறம் அவரே அந்த வூடு அந்த வெல போகாதுனு சொல்றாரு .. நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்கன்றாரு... "நீ யார் பக்கம் பேசறே எழுந்து வெளிய போ'னு அனுப்பிட்டோம். இந்த டீலிங்கே வேணாம்னு திருத்தணில ஒரு மாந்தோப்பு வாங்கறதுக்குப் போயிட்டாரு'' தேவையில்லாமல் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதாக நினைத்தானோ, என்னவோ துண்டித்துவிட்டான்.

``ரிஸீவரை இப்படி மூட்டை மேல வெச்சுட்டுப்போறியே... அதனாலதான் நான் யாருக்கும் போன் தர்றதில்ல'' மளிகைக் கடை நாடார் சத்தம் போட்டதும்தான் ரிஸீவரை ஒழுங்காக வைத்தேன். சூழ்நிலைக்குப் பொருந்தாத புன் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான் காமராஜ். அவனே சொல்லட்டும் என்பதுபோல விரக்தியாக நின்றிருந்தேன். ஒருவேளை வந்து அட்வான்ஸ் கொடுத்துவிடுவார்களோ என்ற சந்தேகம் இருந்ததால்தான் வந்ததாகச் சொன்னான்.


``கொட்டினாத்தான் தேளு... இல்லாட்டி புள்ளபூச்சிதான். அதான் கொட்டினேன் '' என்று ஏதோ ஆரம்பித்தான். புள்ள பூச்சி என்றால் என்னவென்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை. தேள் தெரியும். `கொட்டிவிட்டேன்' என்று சொல்வது புரிந்தது.
அவனை ஞாபகப்படுத்துவதற்காக நான் பட்ட அவஸ்தையைவிட மறப்பதற்கு பல மடங்குப் பிரயத்தனத்தனப்பட வேண்டியிருக்கிறது இப்போது.

3 கருத்துகள்:

3434343 சொன்னது…

//அட! ... அடப்பாவி... அவனா?
அடக் கொடுமையே... வாழ்க்கையில் உன்னைச் செத்தாலும் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்று யாரைப் பார்த்துச் சொன்னோமோ அவனா?//
சீரியஸாக துவங்கி...யாராக இருக்கும் என்று எதிர்பார்க்கும் வேளையில் நகைச்சுவையான திருப்பம்....

//``கொட்டினாத்தான் தேளு... இல்லாட்டி புள்ளபூச்சிதான். அதான் கொட்டினேன் '' என்று ஏதோ ஆரம்பித்தான்.//

இடைத் தரகர்களின் செயலை அற்புதமாக எழுத்தில் வடித்துள்ளீர்கள்...கதை அருமை... -;)

ரகுநாதன்

3434343 சொன்னது…

//அட! ... அடப்பாவி... அவனா?
அடக் கொடுமையே... வாழ்க்கையில் உன்னைச் செத்தாலும் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்று யாரைப் பார்த்துச் சொன்னோமோ அவனா?//
சீரியஸாக துவங்கி...யாராக இருக்கும் என்று எதிர்பார்க்கும் வேளையில் நகைச்சுவையான திருப்பம்....

//``கொட்டினாத்தான் தேளு... இல்லாட்டி புள்ளபூச்சிதான். அதான் கொட்டினேன் '' என்று ஏதோ ஆரம்பித்தான்.//

இடைத் தரகர்களின் செயலை அற்புதமாக எழுத்தில் வடித்துள்ளீர்கள்...கதை அருமை... -;)

ரகுநாதன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

தமிழ்மகன்..

மிக அருமை.. இது போன்ற நிகழ்வுகளை கதையாக இருந்தாலும் அல்லது உண்மைச் சம்பவங்களாக இருந்தாலும் எழுத்தில் வடித்துக் கொட்டுவதுகூட ஒரு சமூக உதவிதான்..

இதைப் படித்தாவது யாரோ ஒருவர் காப்பாற்றப்படுவாரெனில் அதுவே புண்ணியம் தேடிய வழிதானே..

இன்றைக்குத்தான் இதனை படித்தேன்..

நன்றிகள்..

LinkWithin

Blog Widget by LinkWithin