வியாழன், நவம்பர் 13, 2008

திரைக்குப்பின்னே- 7

இது ஒரு தந்திரம்!'பஞ்ச தந்திரம்' படப்பிடிப்பு. பெரிய நட்சத்திரப் பட்டாளம். கமல்ஹாசன் உள்ளிட்ட பிரெஞ்ச் பேட் தாடி வாலாக்கள், சிம்ரன் உள்ளிட்ட மேற்படி ஆசாமிகளின் ஜோடிகள். இன்னும் சில உறவுப் பாத்திரங்கள் என்று படப்பிடிப்பின் பெரும்பான்மையான நேரங்கள் கல்யாண வீடு போல களை கட்டியிருந்தது.
ஒருமுறை அதில் கமல்ஹாசனின் நண்பராக நடித்த ஸ்ரீமனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, கமல்ஹாசனுடன் நடிப்பது பற்றி பெருமை பொங்கப் பேசிக் கொண்டிருந்தார்.
அவரிடம் கேட்பதற்கு எனக்கு ஒரு நீண்ட நாள் கேள்வி இருந்தது. நண்பர்களுக்காக உயிரைத் தருகிற, அல்லது பதறித் துடிக்கிற கதாபாத்திரங்களிலேயே அவர் பெரிதும் நடித்து வந்தார். அதிலும் அவருக்கு உணர்ச்சிவசப்பட்டு பேச முடியாமல் உதடு துடிக்கத் துடிக்க நடிப்பார்.
"நீங்கள் ஏன் எப்போதும் கொடுக்கிற காசுக்கு அதிகமாகவே நடிக்கிறீர்கள்?'' என்றேன்.
அவர் கொஞ்சமும் கோபித்துக் கொள்ளாமல், "அதுக்குப் பேர் மீட்டருக்கு மேல நடிப்பது என்று சொல்வோம். சிலருக்கு அப்படி நடித்தால்தான் ஏற்றுக் கொள்வார்கள். கமல் மாதிரியானவர்களிடம் அப்படி நடிக்க வேண்டியிருக்கவில்லை'' என்றார்.
வெகுநாள் கேள்வியை அவர் அத்தனை அலட்சியமாக வீழ்த்திவிட்டார். வெளியில் இருந்து ஒவ்வொருத்தர் நடிப்பையும் நாம் எவ்வளவோ கிண்டல் செய்திருக்கிறோம். பல நேரங்களில் அந்தக் கிண்டல்களைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
எம்.ஜி.ஆர். எடுத்ததற்கெல்லாம் கையைத் தூக்கி ஆட்டி ஆட்டி சைகைகளால் பேசியபடியே நடித்தார். சிவாஜி கணேசன் தேவைக்கு அதிகமாகவே உதடுகளைக் குவித்துப் பேசி நடித்தார். ரஜினிகாந்த் நடப்பது ,பேசுவது, சிரிப்பது எல்லாவற்றிலுமே படு வேகத்தைப் பின்பற்றுகிறார்.
உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் இது உண்டு.
கமல்ஹாசன் ஒருவரிடம் பேசிக் கொண்டிருப்பார். பேச்சின் நடுவே எதிரில் இருந்த ஆள் நடந்து வேறுபக்கம் வந்துவிடுவார். ஆனால் கமல்ஹாசன் தான் முதலில் பேசிக் கொண்டிருந்த அதே திசையைப் பார்த்து அங்கே அந்த ஆள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைவார். பின்பு, சுதாரித்துப் பார்க்கும்போது அவர் மறுபக்கத்தில் இருப்பதை அறிந்து அந்தப்பக்கமாகத் திரும்புவார். கமல் நடித்த இருநூற்றிச் சொச்சம் படத்தில் இப்படியான காட்சி இல்லாமல் ஒரு படமாவது உண்டா?
இந்த எல்லாப் புகார்களுமே இவர்களில் பலருக்கும் தெரிந்தே இருந்தது. அதையும் மீறி அவர்கள் அப்படி நடித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கான காரணங்கள் இருந்தன. சிலர் தெரிந்து நடித்தார்கள். சிலர் தெரியாமல் நடித்துக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு நடித்தால் போதும் என்று சலிப்பு காரணமாகச் சிலர் நடிக்கிறார்கள். சொல்லப் போனால் நடிப்பில் இது ஒரு தந்திரம் என்றுதான் தோன்றுகிறது.

ஜி.வி. விசாரிப்பு!

இயக்குநர் ராஜகுமாரனை மணந்த பிறகு தேவயானி தயாரித்த படம் "காதலுடன்'. குடும்பத்தைப் பகைத்துக் கொண்ட நேரத்தில் மிகுந்த சிரமத்துக்கிடையில் அவர் தயாரித்த படம் இது. நடிகர்கள் சம்பள பாக்கிக்காகவும் ஃபைனான்ஸியர்கள் வட்டிக்காகவும் அவரைப் படாத பாடு படுத்தினர். படம் தயாரான பிறகும் டெஃபசிட் காரணமாக ரிலீஸாகாமலேயே இருந்தது.மிகுந்த சிரமத்துக்கிடையே படத்தை ரிலீஸ் செய்தார் தேவயானி. பத்திரிகையாளர் காட்சி முடிந்தது. அதே நாளில் மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வி. (ஜி.வெங்கடேஸ்வரன்) மகள் திருமண வரவேற்பு. ஏவி.எம். ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்தது. படம் முடிந்த கையோடு அந்தத் திருமண வரவேற்புக்கு பத்திரிகையாளர்கள் கூட்டமாகக் கிளம்பினோம். மணமக்கள் பக்கத்தில் இருந்தார் ஜி.வி.
பத்திரிகையாளர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக வந்ததைப் பார்த்து "எல்லாரும் எங்கிருந்து வருகிறீர்கள்?'' என்றார்.
சொன்னோம்.
"படம் தப்பிச்சுடுமா?''என்றார். மணமக்களுக்கான வரவேற்புக்கிடையில் வரிசையாக பிரபலங்கள் வந்து கொண்டிருந்த வேளையில் மிகவும் அக்கறையாக 'காதலுடன்' படத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டார்.
எதற்காக 'காதலுடன்' படத்தின் ரிசல்டைப் பற்றி இவ்வளவு விசாரிக்கிறார் என்று அப்போது புரியவில்லை.
அடுத்த சில மாதங்களில் அவர் கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் விசாரித்ததன் முழு அர்த்தத்தையும் வலியுடன் உணர்ந்தேன்.

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...

பழம்பெரும் நடிகர் ஒருவரைப் பேட்டி காண வேண்டும் என்று பணித்திருந்தார்கள். இருந்தவர்களில் பழையவராகத் தோன்றிய வி.கே.ராமசாமியைச் சந்திக்கச் சென்றேன். அவர் அப்போது நடிகர் சங்க செயற்குழு உறுப்பினராக இருந்தார்.

"நாடக உலக அனுபவங்கள் பற்றியெல்லாம் சொல்லுங்கள்'' என்றேன்.
"நான் வந்த காலத்தில் எல்லாம் பெரும்பாலும் மாறிவிட்டது. சினிமா தோன்றுவதற்கு முன்பு நாடக உலகத்துக்கு இருந்த மதிப்பே தனி. அதோ இருக்காம்பாரு (அவர் கைகாட்டிய திசையில் ஒரு கிழவர் சாதாரண லுங்கி கட்டிக் குத்துகாலிட்டு உட்கார்ந்து பீடி பிடித்துக் கொண்டிருந்தார்.) அவன் அந்தக் காலத்து ராஜபார்ட்டு. ராஜபார்ட்டுன்னா என்னன்னு நினைச்சீங்க? ராஜாவா நடிக்கிறவன்னா நினைச்சீங்க... கதைய கெடுத்தீங்க. ராஜாவாவே மாறிட்டதா நினைச்சு வாழ்ந்துகிட்டு இருந்தான். அந்தக் காலத்து ராஜபார்ட்டு எல்லாம் ராஜாவாத்தான் நினைச்சுக்கிட்டு இருந்தானுங்க. ஏய் யாரங்கேனு கூப்பிடாத குறை. அவ்வளவு சுலபத்தில சந்திச்சிட முடியாது. அவங்களுக்குத் தர்ற மரியாதை என்ன, உபசரிப்பு என்ன? திடீர்னு ஒருநாள் சிங்கிள் டீக்கு லாட்டரி அடிக்கும்போதுதான் அவனுங்க ராஜா வேஷம் கலைஞ்சது. எவ்வளவு கொடுமை பாருங்க. தினமும் ராஜாவா நடிச்சுக்கிட்டு இருந்தவன், நாளைல இருந்து மம்பட்டி எடுத்துக் கொத்தணும்னு சொன்னா முடியுமா, மனசுதான் ஒப்புமா? அப்படியே புழுங்கிச் செத்துப் போனானுங்க பாதிப் பேரு... ஏதோ இங்க வந்து உட்கார்ந்து பழைய ஆசாமி யாரையாவது பார்த்துட்டுப் போறதுதான் இப்ப அவனுக்கு இருக்கிற தெம்பு. ஏன்யா இங்க வா'' என அந்தப் பெரியவரை அருகில் அழைத்தார்.
"ராஜபார்ட்டு வசனம் ஒண்ணு சொல்லுவியா இவருக்கு?''
மிகுந்த உற்சாகத்தோடு அந்தப் பெரியவர் வயதின் தடுமாற்றத்தோடு குரலெடுத்துப் பாடிக் காட்டினார்.
பல் இல்லாமல் தடுமாற்றக் குரலுடன் புரியவே இல்லை, அந்தக் கனவு அரசர்களின் வாழ்க்கையைப் போலவே.

5 கருத்துகள்:

Vinitha சொன்னது…

உலகநாயகன் Title is a misnomer. I have met him once, and Kamal said he doesn't believe in titles but his work!

முரளிகண்ணன் சொன்னது…

சுவையான நினைவுத்தொகுப்பு

R A J A சொன்னது…

எப்பவும் திரைக்குப்பின் படிக்கும் போது இருக்கும் சுவாரசியம் இந்த முறை ஏனோ மிஸ்ஸிங். இந்த வார திரைக்குப்பின்னே சுமார்தானுங்கோ...

தமிழ்மகன் சொன்னது…

Dear vinitha, Just precise the word Ulaganayagan thats all. Any actor can done mistake is'nt.

Thanks for muralikannan and Raja.

KADKAT / Qatar சொன்னது…

INTERESTING TO READ "THIRAIKKU PINNE" ARTICLE. THANK YOU TM

LinkWithin

Blog Widget by LinkWithin