ஞாயிறு, டிசம்பர் 07, 2008

திரைக்குப் பின்னே- 10

காபி தெரியும் டீ தெரியும் காப்பர் டி தெரியாது

நாளெல்லாம் சேற்றில் உழல்கிற விவசாயிக்குக் கிடைப்பதைவிட பல ஆயிரம் மடங்கு மரியாதையும் பணமும் புகழும் நடிகர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. ஆனால் அதே சமயத்தில் அதற்கு அவர்கள் கொடுக்கிற விலைதான் அவர்களைப் பற்றி வெளியாகிற வதந்திகள். ஒரு சாமானியனின் அந்தரங்கம் வெட்டவெளிச்சமாகிறபோது அந்தச் சாமானியனைத் தெரிந்த எல்லோரும் பரவசம் ஊட்டுவதாக இருக்கிறது. நாடறிந்த பிரபலமாக இருந்தால் அவர்களின் அந்தரங்கம் நாட்டையே பரவசமாக்குகிறது. அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பதில் மனிதனுக்குள்ள ஆர்வம் மிகவும் தொன்மையானது. ஆதியில் அது அடுத்தவர் குகையை எட்டிப் பார்ப்பதாக இருந்திருக்கக் கூடும்.அந்த ஆர்வம் சார்ந்த செய்தி இது. நான் தினமணியில் சேர்ந்த புதிது. ஆசிரியர் என்னை அழைத்து "உத்தமன் என்பவரிடம் இருந்து மட்டும் சினிமா கட்டுரை வாங்கி வெளியிடாதே'' என்று கடுமையான முகத்துடன் சொன்னார். அந்தக் கடுமையைக் கண்டு எதற்காக என்றுகூட அவரிடம் தெரிந்து கொள்ள துணிவு வரவில்லை.

விசாரித்ததில் ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவருகிற மாதிரி பேட்டிகள் சூடாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நடிகைகளிடம் கேள்விகள் கேட்பவர் அவர் என்றார்கள். நடிகை சுகன்யாவிடம் அவர், "நீங்கள் கன்னித் தன்மை உள்ளவரா?'' என்று கேட்டு அங்கிருந்து தினமணி அலுவகத்துக்குப் போன் பறக்க, ஆபிஸ் அல்லோலகல்லோபட்டுப் போனதாம்.

ஆனால் வண்ணத்திரை அப்படியில்லை. கேள்விகளில் சூடு இருக்க வேண்டும் என்பார்கள். நான் ஆசிரியப் பொறுப்பில் இருந்த நேரத்தில் நண்பர் அண்ணாதுரை சினேகாவிடம் பேட்டிக்குச் சென்றார். அப்போதைய சினிமா இதழ்களில் சினேகா காப்பர் டி அணிந்திருக்கிறார் என்று செய்திகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருந்தன. நண்பரும் நீங்கள் காப்பர் டி அணிந்திருக்கிறீர்களா என்பதையே முதல் கேள்வியாக ஆரம்பித்திருக்கிறார்.

படப்பிடிப்பில் ஃபிலிம் சிட்டியில் நடந்த உரையாடல் இது. பதறிப் போய்விட்டார் சினேகா. தேம்பி அழ ஆரம்பித்து, அவருடைய அப்பாவிடம் இருந்து எனக்குப் போன். "என்ன இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார் உங்கள் நிருபர்'' என்றார். "இப்போது தொடர்ந்து இப்படி ஒரு செய்தி பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கிறது. அதற்குத்தான் அவர் விளக்கம் கேட்கிறார். எல்லோரும் எழுதுவதுபோல் அவரும் யாரோ சொன்னதை எழுதிவிட்டுப் போயிருக்கலாம். உங்கள் தரப்பில் மறுப்பு இருந்தால் சொல்லுங்கள். அந்தக் கேள்வியும் பதிலும் தேவையே இல்லை என்றாலும் அதைத் தவிர்த்துவிடுகிறேன்'' என்றேன்.

"சினேகாவிடம் பணியாற்றியவர் ஒருவரே இங்கிருந்து நீக்கப்பட்ட கோபத்தில் இப்படியெல்லாம் வதந்தி பரப்புகிறார்'' என்றார் அவருடைய தந்தை.

ஆனால் அந்த நீக்கப்பட்டவரைப் பற்றிச் சொன்னால் அது மேலும் பிரச்சினையை வளர்க்கும் என்று நினைத்து அந்த நபரைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் "காப்பர் டி போட்டிருக்கிறீர்களா' என்ற கேள்விக்குப் பிறகு சினேகா வேடிக்கையாக ஒரு பதிலைச் சொன்னார்.

"எனக்கு காபி போடத்தெரியும், டீ போடத்தெரியும். காப்பர் டி போடத் தெரியாது."


காதல் மன்னன்காதல் மன்னன் என்று ஜெமினியைச் சொல்வார்கள். பெண்களைக் கிண்டலடிப்பதில் அவருக்கு அலாதி ஆர்வம் இருந்தது. நண்பர் வேணுஜி தினமணிக்காக ஜெமினி கணேசனை ஒரு பேட்டி காணச் சென்றார். ஜெமினியிடம் எடுத்த பேட்டியை எழுதித் தந்துவிட்டு அவர் சொன்னதில் எழுதாத பகுதிகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அப்போது ஜெமினி நடித்துக் கொண்டிருந்த அதே படத்தில் மந்த்ரா என்ற இளம் நடிகை ஒருவரும் நடித்துக் கொண்டிருந்தார். பேட்டியின் நடுவே அந்த நடிகையை ஓரக் கண்ணால் கவனித்தபடியே இருந்தாராம் ஜெமினி. "அந்தப் பொண்ணுகூடவே பாதுகாப்புக்கு வந்திருக்கிற அவன் அப்பனைக் கொஞ்சம் பாரேன்'' என்றாராம். "ரொம்ப கஷ்டமான வேலைதான் இல்ல?' கொஞ்சம் அசந்தா கொத்திக்கிட்டுப் போயிடுவாங்கன்னு பயந்து சாகறான்' என்றும் கூறியிருக்கிறார்.

நடிகையின் பாதுகாப்புக்கு வருகிற அப்பாவின் பாடு எத்தகையது என்று விளக்கியிருக்கிறார். இந்த மாதிரி சுமார் நூறு அப்பாக்களையாவது அவர் பார்த்திருப்பார். அவரை மாதிரி காதல் மன்னன்களிடம் இருந்து பெண்களைக் காப்பாற்ற அப்பாக்களுக்கு சிரமமமாகத்தான் இருந்திருக்கும்.

பேச்சின் முடிவில் வாழ்வின் சூத்திரம் போல அவர் சொன்ன செய்தி:

"ஒரு மனிதனுக்கு எப்போது காதலில் நாட்டம் குறைந்து போகிறதோ அப்போதே அவன் வாழத் தகுதியில்லாதவன் ஆகிவிடுகிறான்.''

அதன் பிறகு ஓராண்டு கழித்து அவர் இன்னொரு பெண்ணை மணப்பதாகச் செய்திகள் வெளியாகின. பெரும் பஞ்சாயத்துகள்... அந்தப் பெண்ணிடமிருந்து அவரை ஏறத்தாழ மீட்டெடுத்தனர். அதற்குப் பின் அவர் தன் மகளின் ஜி.ஜி. மருத்தவமனையின் வாசலில் உட்கார்ந்து மாலை வேளைகளில் போகிற வருகிறவர்களை பார்த்துக் கொண்டிருந்தார். அதற்குப் பின் சில நாள்களில் தம் எழுபத்திச் சில்லறை வயதில் காதலிப்பதை நிறுத்திக் கொண்டார்.ரிலாக்ஸ் ரத்னம் !
சென்னை கற்பகம் அவின்யூவில் ஓர் இலக்கியக் கூட்டம். சுந்தர ராமசாமி உரையாற்றுவதாக ஏற்பாடு. சிறிய அரங்கம். கூட்ட நேரத்துக்கு முன்பே நிரம்பிவிட்டது அது. வெளியே நிறைய பேர் நின்று கொண்டிருந்தனர். அதில் முக்கியமாக இயக்குநர் மணிரத்னமும் இருந்தார். இலக்கியவாதிகளில் சிலர் சினிமாகாரனிடம் நாம் போய் பேசுவதா என்ற போக்கும் சிலருக்குச் சாதாரணமாக இருக்கும் தயக்கமும் இருந்தது. ஒரு சிலர் மட்டும் நேருக்கு நேராகப் பார்க்கும் தருணத்தில் புன்னகைத்தனர். பதிலுக்கு அவரும் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

எந்தவித பந்தாவும் இல்லாமல் ரிலாக்ஸாக இருந்தார். சினிமாவின் பரபரப்பை ஒதுக்கி வைத்துவிட்டு ஏற்றுக் கொள்வதற்குத் தயாரான காலி கோப்பையாக அவர் இருந்தார். இருந்தாலும் அவருடைய பிரபலம் அவருக்கு இடையூறாகத்தான் இருந்தது.

நான் அவருடைய இக்கட்டைத் தவிர்க்கும் நோக்கமாக அருகில் சென்று பேச்சுக் கொடுத்தேன். பம்பாய், இருவர், உயிரே படங்களுக்குப் பிறகு அவர் படமெடுப்பதற்கு அடுத்த பிரச்னையைத் தேடிக் கொண்டிருந்தார். எனக்குக் கிடைத்த காற்று வாக்குச் செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக, "அடுத்து இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் படமாக்க இருப்பதாகச் சொல்கிறார்களே?'' என்றேன்.

எப்படித் தெரியும் போல புருவம் உயர்த்தினார். பத்திரிகையாளன் என்ற உண்மையைச் சொல்லாமல் அவரிடம் பேசும் விஷயத்தை நாளைக்குப் பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டியிருந்தால் அது நியாயமாக இருக்காது என்று ஒரு திடீர் குற்ற உணர்வு ஏற்பட்டது. நான் உடனே சொன்னேன். அவர் செல்ல கோபம் போல முகத்தை மாற்றினார். நீங்கள் எழுத வேண்டாம் என்றால் இதை நான் எழுத மாட்டேன் என்று உறுதியளித்தேன். நான் இப்படிச் சொன்னதும் அது அவரைச் சற்றே நெகிழச் செய்துவிட்டது. "அதனாலென்ன பரவாயில்லை'' என்று கூறிவிட்டார்.

தொடர்ந்து பிரச்சினையான படங்களையே எடுத்துவிட்டேன். நடுவில் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக ஒரு படம் எடுக்கிறேன். என்றார். "அக்னி நட்சத்திரம் மாதிரியா?'' என்றேன்.

சற்று யோசித்து ஆமாம் என்று தலையசைத்தார். "கொஞ்சம் வேற மாதிரி'' என்று சிரித்தார்.

"அலைபாயுதே' வந்தது. அதன் பிறகு இலங்கைத் தமிழர் வாழ்வைப் பின்னணியாக வைத்து "கன்னத்தில் முத்தமிட்டால்' வெளியானது. `அலைபாயுதே' அவர் சற்றே ஓய்வெடுத்துக் கொண்ட படம் போல தோன்றியது எனக்கு.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin