புதன், டிசம்பர் 31, 2008

திரைக்குப் பின்னே- 14

நடிகையின் அம்மாக்கள்
நடிகைகளுடன் எப்போதும் அம்மாக்கள்தான் படப்பிடிப்புக்கு வருவார்கள். மிகச் சிலருடன்தான் அப்பாக்கள். தேவயானி, அம்பிகா- ராதா, சுவாதி, விந்தியா, சங்கீதா, த்ரிஷா என இப்போது ஞாபகம் வரும் பலரையும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி அம்மாவின் மடியிலேயே உட்கார்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த நடிகைகள் திடீர் என்று ஒரு நாள் தனியாக வந்து அம்மாக்களை எதிர்த்துப் பேட்டி கொடுத்த சம்பவங்களும் நிறைய இருக்கின்றன.

’சங்கமம்' படத்தில் அறிமுகமான விந்தியாவை ’திருப்பதியில் இருந்து ஒரு லட்டு' என்று அட்டையில் போட்டு அலங்கரித்தது ஆனந்தவிகடன். ஏறத்தாழ எல்லாப் பத்திரிகையிலும் விந்தியாவும் அவர் அம்மாவும் சேர்ந்து அமர்ந்து அளித்த பேட்டிகள் வெளியானது. ஒரு நாள் இரவு அண்ணா சாலையில் தம் காரில் அமர்ந்து பரபரப்பாகப் பேட்டியளித்தார். என் தாய் என்னை தவறான வழியில் திசைதிருப்பப் பார்க்கிறார். அதனால் நான் அவரைப் பிரிந்து வந்துவிட்டேன். இனி எனக்கும் அவருக்கும் எந்த உறவும் இல்லை என்று கூறிவிட்டார். தொடர்ந்து அவருடைய அம்மாவும் "நான் அவளை தலை முழுகிவிட்டேன்" என்று அறிக்கை விட்டார். நடிகை விந்தியா ராத்திரி பத்துமணிக்கு இப்படி நடுரோட்டில் காரில் அமர்ந்து பேட்டியளிக்க வேண்டிய அவசியம் என்ன என்று தோன்றியது எனக்கு.
அதே போல தேவயானி தன் வீட்டு கேட்டை நள்ளிரவில் தாண்டிக் குதித்து ராஜகுமாரனை மணந்த போதும், நடிகை மந்த்ரா தன் பெற்றோரைக் குற்றம்சாட்டிவிட்டு தனியாக தன் சகோதரனுடன் வந்து தனி வீடு எடுத்துத் தங்கியபோதும் ’மாறன்' படத்தில் நடித்த ப்ரீத்தி என்ற நடிகை தன் பெற்றோர் தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறியபோதும் எனக்குள் மிகப் பெரிய வினாக்குறி. இந்தியச் சூழலில் பெண்ணுக்குப் பெற்றோரைவிடப் பாதுகாப்பான உறவு இருக்கமுடியுமா? என.
வேறு எந்தத் தொழிலில் ஈடுபட்ட பெண்களைவிடவும் நடிகை என்று அடையாளப்படுத்தப்பட்ட பெண்ணுக்குத்தான் இது அதிகம் பொருந்தும் வினாவாக இருக்கிறது.

ரஹ்மானின் முதல் படம்!
ஆரம்பம் பிரகாசமாக இருந்தால்தான் எதிர்காலம் நல்லபடியாக இருக்கும் என்று (ஃபர்ஸ்ட் இம்ப்ரஸன் ஈஸ்த பெஸ்ட் இம்பரஷன்) சொல்லுவார்கள். இது எல்லாத் துறைக்கும் பொருத்தமான பொன்மொழியாக இருந்தாலும் சினிமா துறையில் முதல் அடியில் நிரூபிக்காதவர்கள் அடுத்து என்னதான் போராடினாலும் ஜெயிப்பது கல்லில் நார் உரிக்கிற கதைதான்.
சிவாஜிக்கு ’பராசக்தி', இளையராஜாவுக்கு ’அன்னக்கிளி', ரஜினிக்கு ’அபூர்வ ராகங்கள்', மாதவனுக்கு ’அலைபாயுதே' என்று அடித்தளம் அட்டகாசமாக அமைந்தது. பேஸ்மென்ட் ஸ்ட்ராங்காக இருந்தால் பில்டிங் கொஞ்சம் வீக்காக இருந்தாலும் தாக்குப் பிடிக்கும் என்பதற்கு இவர்கள் முக்கிய உதாரணம்.

முதல் படம் சுமார் வெற்றி அடைந்ததாலோ, தோல்வியைத் தழுவியதாலோ காணாமலேயே போய்விட்ட இயக்குநர்களும் நடிகர்களும் எத்தனை பேரோ? நிச்சயம் அது தமிழ் சினிமாவின் எழுபத்தைந்து ஆண்டுக்கால சரித்திரத்தில் வெற்றி கண்டவர்களைவிட மிக மிக மிக மிக மிக நீளமானதாக இருக்கும்.

ஆரம்பத்தில் தடுமாற்றமும் அடுத்தடுத்து வெற்றிகளை மட்டுமே பெற்ற நடிகர் என்றால் அது எம்.ஜி.ஆர். ஒருவர்தான்.

பழம்பெரும் பத்தரிகையாளர் மதிஒளி சண்முகத்தின் சகோதரர் சினி நியூஸ் செல்வம் என்பவர் ஒருமுறை சொன்னார். ஏ.ஆர்.ரஹ்மானின் முதல்படம் முதலில் வெளிவந்திருந்தால் அதன்பிறகு அவருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருந்திருக்குமா? என்றார்.

ரஹ்மான் முதலில் இசையமைத்த படம் ’உழவன்'. இயக்குநர் கதிர் இயக்கிய அந்தப்படம் தோல்விப்படம். "அவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தும் ’ரோஜா' முதலில் வெளியானதுதான் அவருக்கு இந்தத் திருப்பு முனைக்குக் காரணம்'' என்றார்.

மனிதனுடைய முயற்சிக்கும் திறமைக்கும் பின்னால் இப்படியான இடைஞ்சல்கள் இருப்பதைத்தான் விதி என்கிறோம்.


சத்யராஜின் வாக்குமூலம்

கேட்கும்போதெல்லாம் வரம் அருளும் இறைவன் மீது சத்யராஜுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் பேசும்போதெல்லாம் பத்திரிகையாளருக்குச் சுவாரஸ்யமான செய்திகளை அள்ளித் தருவதில் சத்யராஜுக்கு நிகர் சத்யராஜ்தான். மனதில் பட்டதைப் பட்டென்று போட்டு உடைப்பதில் மட்டுமல்ல; தன் சொந்த அனுபவத்தில் இருந்து பெற்ற பாடத்தையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்வார்.

என்ன சார் எப்படி இருக்கீங்க என்று பேச ஆரம்பித்ததுமே அது பேட்டியாக உருமாறிவிடும். "என்னோட அக்கா வீட்டுக்காரர் அமெரிக்காவில சயின்ட்டிஸ்ட்டா இருக்காரு. ஒரு தடவை அவர் என்ன சொன்னார்னா...' இப்படி ஆரம்பிப்பார்.

"என்னோட ரெண்டு பசங்களுக்குமே பிள்ளையார்னா யார்னே தெரியாது. குழந்தைல இருந்தே அப்படி வளர்ந்துட்டாங்க' என்பார்.

ஒரு முறை போன் செய்த போது "நான் கொடைக்கானல்ல இருக்கேன் சார். ஆமா... பத்து நாளா ஷூட்டிங் ஒண்ணுமில்ல. நமக்கு இங்க கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. குடும்பத்தோட வந்து தங்கிட்டேன்...'' இப்படிச் சொல்லிக் கொண்டே போனார். அவர் சொல்கிற ஒவ்வொரு வரியும் எனக்குச் செய்தி.

சத்யராஜின் மாமா அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருக்கிறார்... அவர் என்ன துறையில் விஞ்ஞானி.. அவர் எப்படி சொந்தம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

கொடைக்கானலில் எப்போது கெஸ்ட் ஹவுஸ் வாங்கினீர்கள்... ஏன் பத்து நாள்களாக ஷூட்டிங் இல்லை... மார்க்கெட் டல் ஆனதுக்குக் காரணம் என்ன? முக்கியமாகக் கொடைக்கானலில் சென்று தங்குவது ஏன் என்று கேள்வி அடுக்கலாம்.

பசங்களுக்கு அவங்க அம்மாவோட பக்தியில நாட்டமில்லையா? என்ன படிக்கிறாங்க? எந்த ஸ்கூல்ல படிக்கிறாங்க. படிப்பில எப்படி.. கேட்டுக் கொண்டே போகலாம்.

’தோழர் பாண்டியன்' படப்பிடிப்பில் இருந்தபோது "பத்து வருஷத்துக்குள்ள வாழ்க்கைல எவ்வளோ மாற்றம் சார்...'' என்று ஆரம்பித்தார்.

"எதற்காக இப்படிச் சொல்கிறீர்கள், சார்?''

"பொள்ளாச்சிக்கு ஒரு பங்ஷனுக்குப் போயிருந்தேன். கூட படிச்சவன் ஒருத்தன் விழாவுக்கு வந்திருந்தான். என்னைப் பார்த்து ’அர்ஜென்டா ஒரு நோட்டு வேணும்டா'ன்னான். ’திடீர்னு இப்படி வந்து கேட்டா நான் எங்கடா போவேன். மெட்ராஸுக்கு வாடா'ன்னேன். அவனுக்கு ரொம்ப அவசரம். ’இப்பவே வேணும்டா. பக்கத்தில யார்கிட்டயாவது வாங்கியாவது குடுடா'ன்னான். ’யாரும் அவ்வளவு ரூபா கையில வெச்சிருக்க மாட்டாங்கடா'ன்னு சொல்லிட்டேன். அவனுக்கு முகமே வாடிப்போச்சு. ’சரிடா'ன்னு கிளம்பிட்டான்.... தடுத்து நிறுத்தி ’அப்படி என்ன அவசரம்னு சொல்லேன்..' என்றேன். ’ஆட்டோவை சர்வீஸ் விட்டிருக்கேன்டா... நாளைக்கு முக்கியமான சவாரி. இப்ப காசு கிடைச்சா வண்டிய எடுத்துடுவேன்'. ’ஆட்டோ சர்வீஸுக்கு ஏண்டா அவ்ளோ ரூபா'ன்னு கேட்டேன். இவ்வளவு கேள்வி கேட்பதே அவனுக்குப் பிடிக்கவில்லை. அலுத்துக் கொண்டு ’என்ஜின் போர் பண்ணி... ஆயில் சர்வீஸ் பண்ணதுல ஆயிரம் ரூபா ஆயிடுச்சு' என்றான். எனக்கு ஆடிப் போய்விட்டது. அவன் கேட்டது ஆயிரம் ரூபாய். ஒரு நோட்டுன்னா எனக்கு ஒரு லட்சம் அவனுக்கு ஆயிரம் ரூபா.. ஒண்ணா படிச்சவங்களுக்குள்ள இப்படியொரு கணக்கு வித்தியாசம்.''

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போவார். அவருடன் உரையாடி வாக்குமூலம் என்ற தொடரை உண்மை வார இதழுக்காகத் தொடர்ந்து எழுதினேன். என்னை அவரும் அவர் என்னையும் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருந்தது. முதிர்கன்னிகள் குறித்து நான் எழுதிய திலகமணிந்த விதவைகள் கவிதையின் சில வரிகளை அவர் இயக்கிய ’வில்லாதிவில்லன்' படத்தில் பயன்படுத்தினார். விடுதலை ராஜேந்திரன் விடுதலை நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த நேரம். அப்போது நிகழ இருந்த நாத்திக மாநாட்டுக்கு சத்யராஜை அழைத்து வரமுடியுமா என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். சத்யராஜை மாநாட்டுக்கு அழைத்து வந்தேன். "பெரியார் திடலுக்குப் பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் பெரியார் திடல் மேடையில் என்னை முதன் முதலாக ஏற்றியது நீங்கள்தான்'' என்று சொன்னார் சத்யராஜ். பிறகு பெரியார் திடலில் அவருக்கு ’இனமான நடிகர்' பட்டம் வழங்கப்பட்டது. அதன் பிறகு பொதுச் செயலர் வீரமணிக்கு மிகவும் நெருங்கிய நண்பரானார். ’பெரியார்' படத்தில் பெரியாராக நடித்ததும்கூட வாக்குமூலம் எழுதப்பட்டதன் தொடர் நெருக்கத்தின் ஆதாரமாக இருக்கலாம்.
சில யூகங்கள் உண்மைக்கு நெருக்கமானவை, மகிழ்ச்சியளிப்பவை.

3 கருத்துகள்:

KVR சொன்னது…

ஏ.ஆர்.ஆர் திலீப்குமாராக இருந்தபோது ஒரு மலையாளப் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

shabi சொன்னது…

putthandu vazhthukkal nalla padhivu

Nilofer Anbarasu சொன்னது…

//ரஹ்மான் முதலில் இசையமைத்த படம் ’உழவன்'. இயக்குநர் கதிர் இயக்கிய அந்தப்படம் தோல்விப்படம். "அவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தும் ’ரோஜா' முதலில் வெளியானதுதான் அவருக்கு இந்தத் திருப்பு முனைக்குக் காரணம்'' என்றார்.//

உழவன் 93ல் வெளியான படம். ஆனால் ரோஜா அதற்க்கு முன்பே 91ல் வெளிவந்த படம். எனக்குத் தெரிந்து மணிரத்னம் தான் ரகுமானை அறிமுகப்படுத்தியது.

//ரஹ்மான் முதலில் இசையமைத்த படம் ’உழவன்'. இயக்குநர் கதிர் இயக்கிய அந்தப்படம் தோல்விப்படம். "//
படம் தோல்விப்படம் தான் ஆனால் பாட்டெல்லாம் ரொம்பவே ஹிட். பெண்ணல்ல பெண்ணல்ல, கொடமழை பாட்டெல்லாம் இப்ப கேட்டாலும் சூப்பரா இருக்கும்.

LinkWithin

Blog Widget by LinkWithin