வெள்ளி, ஏப்ரல் 03, 2009

திரைக்குப் பின்னே-27

‘துள்ளுவதோ இளமை'?

‘துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமானபோது தன் அழுத்தமான நடிப்பின் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தியவர் ஷெரீன். ’விசில்', ’காப்பி ஷாப்' போன்ற சில படங்களில் நடித்தவர். அவருக்கு அனிமேட்டராகவோ அல்லது பத்திரிகையாளராகவோ ஆகவேண்டும் என்ற ஆசை அதிகமிருப்பதாகச் சொன்னார். இது இரண்டையும் விட சினிமாவில் அதிகம் சம்பாதிக்கலாமே என்று சொன்னேன்.

முகம் சுளித்தார். "எனக்கு போட்டோ ஷாப், த்ரி டி மாக்ஸ், மாயா போன்ற மென்பொருள் பயன்பாட்டில் பரிச்சயம் உண்டு. அனிமேஷன் பயின்றிருக்கிறேன். நான் படித்த இன்ஸ்ட்டிட்யூட்டில் ஜர்னலிஸமும் இருந்தது. எனக்கு அனி மேட்டர் அல்லது பத்திரிகையாளர் ஆவதுதான் லட்சியம்'' என்றார்.

அதற்குள் அவருக்கு ஒரு கவர்ச்சியான நடிகை என்ற முத்திரை ஏற்பட்டுவிட்டது. அவருடன் அவருடைய அம்மா மட்டும் உண்டு. மகளை எப்படியாவது இந்திப் பட உலகுக்குக் கூட்டிச் செல்லவேண்டும் என்பதாக இருந்தது அவருடைய பேச்சு.

ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே தான் தன் அம்மாவை விட்டுப் பிரிந்து வந்துவிட்டதாகச் சொல்லி அவருடைய காதலரோடு இணைந்து போஸ் கொடுத்தார். இணைந்து போஸ் கொடுத்தார் என்பது மிகப் பொருத்தமான வார்த்தை. கை கால் எல்லாம் பின்னிக் கொண்டும் முத்தமழை பொழிந்து கொண்டும் இருந்தனர் இருவரும். ஒரு நட்சத்திர ஒட்டலில் தங்கி இருந்த அவர்கள் இந்தச் செயல்களை பத்திரிகையாளர் முன்னிலையில் நிறைவேற்றுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இருவரின் கையிலும் கோப்பைகள், சிகரெட்கள். ஒருவர் சிகரெட்டை இன்னொருவர் வாங்கிப் புகைத்துக் கொண்டனர்.

இருவரின் செயலும் ஏதோ முற்றும் அறிந்து முடிவுக்கு வந்துவிட்டதாக இருந்தது. ஒரு தீர்மானம் தெரிந்தது. உனக்கு நான், எனக்கு நீ என்பது சொர்க்கத்தில் உறுதியாகிவிட்டது என்பதாக நடந்து கொண்டனர். நீண்ட நாளைக்குத் தாங்குமா என்று பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டோம். இருவரும் சேர்ந்து ஒரு படம் எடுப்பதாகச் சொன்னார்கள். படம் ஒருமாதிரியாக வெளிவந்தது. ஆனால் அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். மீண்டும் தன் தாயோடு வந்துதான் ’காபி ஷாப்' படத்தில் நடித்தார். இனிமேல் எல்லாம் சரியாகிவிட்டதாக அவருடைய அம்மா சொன்னார். மகளை இந்திக்கு அழைத்துச் செல்லும் நோக்கம் அவருக்கு அப்போதும் இருந்தது. பெங்களூரைச் சேர்ந்த அவர்கள் மும்பையில் போய்த் தங்கி சினிமா வாய்ப்பு பெறப் போராடிக் கொண்டிருப்பதாகவும் சில பத்திரிகைத் தொடர்பாளர்கள் சொன்னார்கள். இரண்டு ஆண்டுகளாக அதில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஷெரீன் பற்றி நினைக்கும் போது அவர் நடித்த முதல் படத்தின் தலைப்பும் சேர்ந்துதான் ஞாபகத்துக்கு வருகிறது.

சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!மற்றவர்களைச் சிரிக்க வைப்பவர்கள் பெரும்பாலும் ஒரு விஷயத்தில் ஒத்துப் போவார்கள். மனிதர்கள் எதற்கெல்லாம் சிரிப்பார்களோ அதில் ஒரு அம்சத்தையாவது புரிந்து வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். ஒருவன் தெரியாத்தனமாக கால் இடறி விழுந்தாலும் அவனைப் பார்த்துச் சிரிப்பது சற்றேறத்தாழ மனிதன் குகையில் வசிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். அதை மாற்றிக் கொள்ளவே முடியவில்லை. யாராவது விழுந்துவிட்டால்... சைக்கிளில் ட்யூப் படார் என்று வெடித்தால்.. உடனடியாகச் சிரிக்கிறோம். சொல்லப்போனால் எல்லாரையும் விட முதலாவதாக விழுந்தவர்தான் சிரிக்கிறார்.

சிரிக்க வைப்பதில் இன்னொரு சுலபமான அம்சம், யாரைப் பார்த்தாலும் முந்திக் கொண்டு ஒரு சிரிப்பை உதிர்ப்பது. மதன்பாப் முகம் முழுதும் ஒரு ரெடிமேட் சிரிப்பை வைத்திருப்பார். யார் வந்தாலும் கண்களை இடுக்கி, பற்கள் தெரிய, உடம்பெல்லாம் குலுங்க ஒரு சிரிப்பு சிரிப்பார். அது அவருடைய ட்ரேட் மார்க்.

நண்பர் ஒருவரோடு அவர் வீட்டுக்குப் போயிருந்தபோது, பேச்சோடு பேச்சாக உங்களின் இந்தச் சிரிப்புதான் உங்களுக்கு மைனஸ். இதை விட்டுத் தொலைத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும் என்று நண்பர் கூறிவிட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் அதற்கும் ஒரு சிரிப்பைச் சிரித்து வைத்தார் மதன்பாப்.

அவருக்கு அதில் மிகுந்த வருத்தம். மறு நாள் போனில் "அப்கோர்ஸ் அவர் சொன்னது சரியா இருக்கலாம். இதுக்கப்புறம் நான் அதை விட்டுட்டு வேற ஒண்ணு ட்ரை பண்ணினா.. என்ன இது ஒழுங்காத்தான இருந்தாரு. இப்பல்லாம் முன்னமாதிரி இன்வால்வ்மென்ட் இல்லப்பா அவர்கிட்ட'னு சொல்லிட மாட்டாங்களா?'' என்றெல்லாம் சீரியஸாகப் பேசினார்.

அந்தச் சிரிப்பு அவருக்குப் பெரிய பலமா இல்லையா என்பதைத்தாண்டி அவரிடம் வேறு பலமான விஷயங்கள் இருந்ததைக் கண்டிருக்கிறேன். அவர் வெண்டிலோகிஸம் என்னும் கலையில் வல்லவர். சிறந்த கிடாரிஸ்ட். இசையில் நல்ல ஞானம் இருந்தது. நல்ல படிப்பாளி. ரசனையாக வாழத்தெரிந்தவர்.

ஒரு உதாரணம். அவருடைய அறையில் ஓர் அட்டையில் ’எடுத்ததெல்லாம் தோல்வியிலேயே முடிகிறதா? ... பின் பக்கம் பார்க்க...' என்று ஒரு அட்டை கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அட்டையின் பின் பக்கம் பார்த்தேன்.

’சிம்பிள், இன்னொரு தரம் முயற்சி செய்து பாருங்கள்' என்று எழுதியிருந்தது.

"பார்க்கிறவர்கள் ஏதோ முக்கியமான மந்திர வார்த்தை இருக்கப் போகிறது என்றுதான் திருப்புவார்கள். சிலருக்கு இதுவும் மந்திரச் சொல்லாக அமையலாம். இல்லாவிட்டால் குறைந்த பட்சம் தோல்வியில் துவண்டு போயிருந்தவருக்குச் சின்ன திசைதிருப்பலாகவாவது இருக்கும்'' என்றார் மதன்பாப். சிரிக்காமலேயே வெகுநேரம் என்னிடம் பேசியிருக்கிறார். அவர் சிரிப்பதெல்லாம் இடைவெளியை நிரப்புவதற்காகத்தான். அல்லது என்னடா கஷ்டகாலம் என்பதற்கும் அவருக்குச் சிரிப்புதான் கைகொடுக்கும்.

ஏனென்றால் பலர் நினைத்துக் கொண்டிருப்பது போல் அல்லாமல் சிரிப்பது மட்டும்தான் எளிமையானது.கூட்டு இயக்குநர் குடும்பம்!உதவி இயக்குநர் இயக்குநராக மாறுகிற கட்டம் மிகுந்த தர்மசங்கடமானது. நேற்றுவரை ஒன்றோடு ஒன்றாக மசால் வடைக்கும் டீக்கும் ஒருத்தரோடு ஒருத்தர் சிங்கியடித்துக் கொண்டிருந்துவிட்டு இயக்குநரானதும் ஓர் உயரதிகாரியாக மாற வேண்டிய சூழல். கேப்டன் ஆஃப் த ஷிப், அதிகாரி மாதிரி ஆவதில் தவறில்லை. ஆனால் பெரும்பாலானோர் அந்த நேரத்தில் அவர்கள் படுகிற அவஸ்தை சாதாரணமாக விவரிக்கத் தக்கதல்ல.

எனக்குத் தெரிந்த இயக்குநர் ஒருவர் ஒரே அறையில் தங்கி, ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே படுக்கையில் தூங்கிய தன் நண்பரை, "எங்கேயோ மீட் பண்ணியிருக்கோம்ல'' என்று கேட்டுவிட்டார். பாதிக்கப்பட்ட அந்த நண்பர் கண் கலங்காத குறையாக வருந்தினார். "நான் நல்ல வேலையில்தான் இருக்கிறேன். இயக்குநராகிவிட்ட நண்பரை வாழ்த்துவதற்காகச் சென்றால் இப்படியாகிவிட்டது" என்றார்.

சோதிடக் கிளி சீட்டெடுப்பது மாதிரிதான் யாரோ ஒரு உதவி இயக்குநர் பதவி உயர்வு பெறுகிறார். மற்றவர்களைவிட திறமை குறைந்தவர்கள்கூட முதலில் தேர்வாகிவிடுவதுண்டு. நல்ல திறமைசாலிகள் அவருக்கு உதவியாக இருக்க வேண்டியதிருக்கும்.

இயக்குநர் சீமானும் அவருடைய உதவியாளர்களும் இதற்கு விதிவிலக்கு. தமிழ் சினிமா உலகில் சாலிகிராமம் பக்கத்தில் சீமான் வீட்டைக் கண்டு பிடித்தவர்கள் எல்லோரும் அவருடைய உதவியாளர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். அவருக்கு நூறு உதவியாளர்களாவது இருப்பார்கள். பெரிய வீடொன்றை வாடகை எடுத்துத் தங்கியிருக்கிறார். அந்த வீடு முழுக்க இளைஞர்கள் தங்கியிருக்கிறார்கள். அனைவருமே உதவியாளர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுவார்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை பதினோரு மணி வாக்கில் நான் அவருடைய அறைக்குச் சென்றேன். அப்பத்தான் எழுந்திருந்தார். படுக்கை பாய் எல்லாம் அப்படியே இருக்கிறது. இன்னும் சில உதவி இயக்குநர்கள் உறக்கத்திலேயே இருக்கிறார்கள்.

"அண்ணனுக்குப் பிரியாணி சாப்பிடணும்னு ஆசையா இருக்குடா'' என்றார் பொதுவாக.
கொஞ்ச நேரத்தில் ஆட்டுக்கறி, மசாலா எல்லாம் வந்து இறங்கியது. யார் பணத்தில் என்பது தெரியவில்லை. "யார் பாக்கெட்டில் பணம் இருந்தாலும் அத்தனையும் பொது. தனியாக யாரும் பணத்தைக் கொண்டாடுவதில்லை'' என்றார்.

அநாவசியமான மரியாதைகள், கூழைக் கும்பிடுகள், போலி சம்பிரதாயங்கள் எதுவும் இல்லை. இதெல்லாம் சரியாக வருமா என்று நான் யோசித்தேன். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக அவர் இல்லம் சினிமா இயக்குநர்களால் நிரம்பி வழிந்தபடிதான் இருக்கிறது.

சினிமா சோஷலிஸம்?

3 கருத்துகள்:

மண்குதிரை சொன்னது…

உங்கள் கட்டுரைகளை எல்லாம் உயிரோசையில் படித்துவருகிறேன்.

எளிமையான, சிநேகமான நடையில் இருக்கிறது.

உயிரோசையில் வெளிவந்த உங்களுடைய சிறுகதையும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

ஆகாயமனிதன்.. சொன்னது…

"//இயக்குநர் சீமானும் அவருடைய உதவியாளர்களும் இதற்கு விதிவிலக்கு. தமிழ் சினிமா உலகில் சாலிகிராமம் பக்கத்தில் சீமான் வீட்டைக் கண்டு பிடித்தவர்கள் எல்லோரும் அவருடைய உதவியாளர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். அவருக்கு நூறு உதவியாளர்களாவது இருப்பார்கள். பெரிய வீடொன்றை வாடகை எடுத்துத் தங்கியிருக்கிறார். அந்த வீடு முழுக்க இளைஞர்கள் தங்கியிருக்கிறார்கள். அனைவருமே உதவியாளர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுவார்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை பதினோரு மணி வாக்கில் நான் அவருடைய அறைக்குச் சென்றேன். அப்பத்தான் எழுந்திருந்தார். படுக்கை பாய் எல்லாம் அப்படியே இருக்கிறது. இன்னும் சில உதவி இயக்குநர்கள் உறக்கத்திலேயே இருக்கிறார்கள்.

"அண்ணனுக்குப் பிரியாணி சாப்பிடணும்னு ஆசையா இருக்குடா'' என்றார் பொதுவாக.
கொஞ்ச நேரத்தில் ஆட்டுக்கறி, மசாலா எல்லாம் வந்து இறங்கியது. யார் பணத்தில் என்பது தெரியவில்லை. "யார் பாக்கெட்டில் பணம் இருந்தாலும் அத்தனையும் பொது. தனியாக யாரும் பணத்தைக் கொண்டாடுவதில்லை'' என்றார்.

அநாவசியமான மரியாதைகள், கூழைக் கும்பிடுகள், போலி சம்பிரதாயங்கள் எதுவும் இல்லை. இதெல்லாம் சரியாக வருமா என்று நான் யோசித்தேன். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக அவர் இல்லம் சினிமா இயக்குநர்களால் நிரம்பி வழிந்தபடிதான் இருக்கிறது.

சினிமா சோஷலிஸம்?//"
சீமான் = The Royal Salute

ஆகாயமனிதன்.. சொன்னது…

சீமான் = the ROYAL salute

LinkWithin

Blog Widget by LinkWithin