செவ்வாய், ஜூலை 21, 2009

நிறம்மாறும் மனம்


எனது மின்மலர் சிறுகதை தொகுப்பு குறித்து எழுத்தாளர் பாவண்ணன்...

கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தமிழிலக்கிய உலகில் இயங்கிவரும் ஆளுமைகளில் ஒருவர் தமிழ்மகன். விறுவிறுப்பான கதைகூறல்முறையும் தடையற்ற தமிழ்நடையும் இவருடைய வலிமை.
21 சிறுகதைகள் அடங்கிய மீன்மலர் தொகுப்பு, அவர் வலிமைக்குச் சான்றாக வெளிவந்திருக்கிறது. கதைகளில் அவர் கையாளும் வெவ்வேறு விதமான உத்திகள் நல்ல வாசகஅனுபவத்தை வழங்குகின்றன.

தொகுப்பில் மிகச்சிறந்த கதையாக "அம்மை" அமைந்திருக்கிறது. இக்கதையில் அசைபோடும் உத்தியை வெற்றிகரமான முறையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் தமிழ்மகன். பத்தாவது வகுப்பு தேர்வெழுதுவதற்கு முன்பாக அம்மைபோட்டு படுத்த படுக்கையானதால் பள்ளியைவிட்டு நின்றுபோன மாணவனொருவன் கல்வியை இழந்தாலும் பிற்காலத்தில் சமூகம் மதிக்கிற ஓர் கட்டட ஒப்பந்தக்காரராக வளர்ந்து நிற்கிறான். தான் படித்த அதே பள்ளியின் குடிநீர்த்தேக்கத் தொட்டியைப் பழுதுபார்க்கும் வேலை அவனைத் தேடிவருகிறது. காசோலையைத் தருவதற்கு முன்பாக ஒரு பேச்சுக்காக தலைமையாசிரியர் "நீங்களும் இங்கதான் படிச்சிங்களாமே?" என்று தொடங்குகிற உரையாடல் அவனை பழைய இளமைநாட்களைநோக்கி இழுத்துச் செல்கிறது. கதை இந்தப் புள்ளியில் ஆரம்பமாகிறது. அம்மையும் தழும்பும் பள்ளியைவிட்டு நிற்பதற்கான புறக்காரணம் மட்டுமே என்பதையும் அவன் நெஞ்சில் ஆறாத தழும்பாக நின்றுவிட்ட சம்பவமொன்றே உண்மையான காரணமென்பதையும் படிக்கப்படிக்க புரிந்துகொள்கிறோம். அவன் உள்ளூர ஆசைப்பட்ட ஒரு மாணவியையும் அவன் வகுப்பாசிரியரையும் பார்க்கக்கூடாத கோலத்தில் இணைத்துப் பார்த்ததால் உருவான தழும்பைச் சுமந்துகொண்டு அந்தப் பள்ளிக்குள் நுழைய அவன் மனம் இடம்தரவில்லை. அவன் உடலைத் தாக்கிய அம்மையைவிட அவன் மனத்தைத் தாக்கிய அம்மையின் உக்கிரம் அதிகமானது. ஆசை வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்கிற தன் வயசுப்பையனைவிட, தனக்குப் பாடம் சொல்லித் தருகிற ஆசிரியரின்மீது பிறந்த ஈடுபாடு புரிந்துகொள்ளமுடியாத ஒரு புதிர். தன் அலங்கோலத்தைப் பார்த்துவிட்ட மாணவன்மீது சட்டென ஒரு குற்றத்தைச் சுமத்தி அடிஅடியென்று அடித்து, பள்ளியைவிட்டு விரட்டுகிற ஆசிரியரின் தந்திரம் இன்னொரு புதிர். கதையின் உள்ளடக்கத்திலிருந்து எதிர்பாராத கணத்தில் மனத்தின் விசித்திரத்தன்மையைநோக்கி வாசகனைச் செலுத்துகிறது சிறுகதை.

மனத்தின் விசித்திரத்தன்மையைச் சித்திரப்படுத்துகிற இன்னொரு சிறுகதை "பழையன புகுதலும்". வீடு விற்றுத் தருகிற, கட்டித் தருகிற ஒரு தரகருக்கும் கதைசொல்லும் பாத்திரத்துக்கும் இடையில் நிகழ்ந்த அனுபவம் இக்கதையில் இடம்பெறுகிறது. திருமணச் செலவுக்காக பூர்வீக வீட்டை விற்கவேண்டியிருக்கிறது. வீட்டை விற்றுத் தரும் முயற்சியில் உதவுவதற்கு முன்வரும் தரகர் தானாகவே இன்னொரு திட்டத்தையும் முன்வைக்கிறார். கல்யாணச் செலவுபோக மிச்சமிருக்கும் பணத்தில் புறநகரில் வீட்டுமனையொன்றை குறைந்தவிலையில் வாங்கி புதுசாக வீடொன்றைக் கட்டி விற்றால் ஒன்றுக்கு இரண்டாக லாபம் கிடைக்குமென ஆசை காட்டுகிறார். லாபத்தை நினைத்து மனத்திலெழும் சபலம் தரகர் வார்த்தைகளை சத்தியமென்று நம்புகிறது. வீட்டிலுள்ள மற்ற உறுப்பினர்களுக்கு அதில் உடன்பாடில்லை. வீட்டை விற்றுத் தந்தால் போதும், பணத்தை முதலீடு செய்யும் திட்டமெதுவும் வேண்டாம் என்று கறாராக அறிவித்துவிடுகிறது. தன் திட்டம் புறக்கணிக்கப்படுகிறது என்ற அளவில் தரகர் மனம் நிறம் மாறிவிடுகிறது. வீட்டை வாங்கவிருந்த நபரிடம் ஏதேதோ பொய்க்காரணங்கள் சொல்லி வரவிடாமல் தடுத்துவிட்டு, ஒன்றுமறியாத முகபாவனையோடு, முன்பணத்தோடு அவர் வரக்கூடும் என்று காத்திருக்கிற வீட்டு உறுப்பினர்களோடு தானும் இணைந்து காத்திருக்கிறார். உண்மை அம்பலமாகிற கணத்தில் கொட்டினாத்தான் தேளு, இல்லன்னா புள்ளப்பூச்சிதான் என்று சொல்லிவிட்டு செல்கிறார். உள்ளூர மனம்நிறைய நஞ்சோடும் வாய்நிறைய புன்னகைச்சொற்களோடும் இணைந்து உலவும் மனிதர்கள் புரிந்துகொள்ள முடியாத புதிர்களாக இருக்கிறார்கள்.

மனம்நிறைய நஞ்சைச் சுமந்திருக்கும் மனிதனை அடையாளம் காட்டுகிற இன்னொரு கதை "வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி". அசாமில் சிங்கத்தைத் தேடி வருகிற குழுவைச் சேர்ந்த ஒருவன் பள்ளத்தாக்கில் தடுமாறி மயக்கநிலையில் சிங்கத்தின் குகைவாசலிலேயே விழுந்துவிடுகிறான். சிங்கம் அவனைக் காப்பாற்றுகிறது. காயங்களைக் குணப்படுத்துகிறது. உணவுக்கு ஏற்பாடு செய்கிறது. அதன் சகோதரச் சிங்கங்களும் குட்டிச் சிங்கங்களும் அவனோடு நன்கு உறாவடுகின்றன. காட்டுக்குள் வாழ்ந்த ஸ்டீபன் வழங்கிய பயிற்சியால் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற சிங்கங்கள் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கேட்டு மனிதன் ஆச்சரியத்தில் உறைந்துபோகிறான். சில நாட்கள் தங்கியிருந்ததில் காட்டுவிலங்குகளின் பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்துகொண்டதாக காட்டிக்கொள்கிறான் மனிதன். தான் புரிந்துகொண்டதை, உலக மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக எடுத்துரைக்கப்போவதாக வாக்குறுதியும் அளிக்கிறான். ஆனால் வெளியேறிய மறுகணமே அவன் பேராசைமனம் விழிப்படைந்துவிடுகிறது. அடுத்த நாளே அந்தச் சிங்கங்களை வேட்டையாடி இழுத்துச் செல்ல நண்பர்களின் கூட்டத்தோடு அதே குகைவாசலைத் தேடி ஓடிவருகிறான். அவன் பேராசையை நுட்பமாக முன்னதாகவே அறிந்துகொண்ட சிங்கங்கள் குகையைவிட்டு வெளியேறிவிடுகின்றன. நெகிழ்ச்சியின் உச்சத்தில் வாக்குறுதி தருகிற மனிதன் மறுகணமே நஞ்சுள்ளவனாக மாறுவது பெரிய புதிர். வாழ்வில் ஏதோ ஒரு கணம் பண்புள்ள மனிதனை கொடிய விலங்காகவும் கொடிய விலங்கை பண்புள்ள மனிதனாகவும் தளம்மாற்றி நிறுத்திக் காட்டுகிறது. "சம்பா", "சோறியம்" ஆகிய சிறுகதைகளையும் மனிதமனத்தில் நிறைந்துள்ள நஞ்சை ஓரளவு அடையாளம் காட்டும் நல்ல கதைகளாகக் குறிப்பிடலாம்.

மனத்தின் ஆழத்தையும் அதில் நிறைந்துள்ள பலவிதமான நிறங்களையும் கண்டறிந்து பகிர்ந்துகொள்ள விழையும் தமிழ்மகனின் முனைப்பு அவருடைய மாபெரும் பலம். இந்த பலம்தான் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் அவருக்குரிய இடத்தை வரையறுப்பதில் உதவியாக உள்ளது. பல விதமான களங்களைக் கையாள்கிற கதைகளில் ஒரேவிதமான மொழிநடையையே தமிழ்மகன் பயன்படுத்துவது ஒரு சின்ன பலவீனம். புதுமைக்காக முன்வைக்கப்படுகிற ஒரு விவாதம் அதன் இறுதிபபுள்ளிவரை நகராமல், வேறொரு மெலிதான திருப்பத்fதோடு முடிவடைந்துவிடுவது இன்னொரு பலவீனம். ( வீடு, கடவுள்தொகை). அடுத்தடுத்த தொகுப்புகளில் தமிழ்மகன் இதைத் தவிர்க்கக்கூடும் என்று நம்பலாம்.

( மீன்மலர். சிறுகதைத்தொகுப்பு. தமிழ்மகன். உயிர்மை வெளியீடு. 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம். சென்னை-18. விலை.ரூ.85)



நன்றி: தீராநதி - ஜூலை 09

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin