செவ்வாய், ஆகஸ்ட் 04, 2009

மண்ணுளிப் பாம்புகள்!
எங்களூரில் இருந்து சென்னை திரும்புவதற்காக பஸ்ஸýக்குக் காத்திருந்தேன். யூனியன் ஆபிஸ் பக்கம் போடப் பட்டிருந்த கடப்பா கல் திண்டில் இருவர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். முதல் பார்வையில் அவர்களை இரண்டாம் தடவை பார்க்க வேண்டியிருக்காது என்றுதான் தோன்றியது. ஆனால் என்னுடைய கணிப்பை ஒருவினாடியில் அடித்து நொறுக்கிவிட்டனர். காரணம், அவர்கள் பேச்சு.

"என்னால 80 லட்சம் ரூபா வரைக்கும் வாங்கித் தர முடியும்.. அதுக்கு மேல வம்பு பண்ணாதே'' என்று அ தில் ஒருவர் சொன்னார். என்னதான் இருந்தாலும், தூசி பறக்கும் ஒரு எதிர் வெயிலில் லுங்கியும் கட் பனியனும் போட்டுக் கொண்டு ஒருவர் அந்த வார்த்தையைப் பிரயோகிப்பது அதீதமாகப் பட்டது.

மற்றவர் பிடிவாதமாக ஒரு கோடி ரூபாய்க்குக் குறையாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
எனக்கு ஆர்வம் தாளவில்லை. நான் ஒட்டுக் கேட்பதனால் அவர்கள் மேற் கொண்டு பேசாமல் நிறுத்திவிடுவார்களா என்ற தயக்கத்தில் அவர்கள் விஷயத்தில் அக்கறை அற்றவனாக நடித்துக் கொண்டிருந்தேன்.

அவர்கள் சர்வ சாதாரணமாக கோடிகளில் புரண்டு கொண்டிருந்தார்கள். அதிர்ச்சியின் பாதரச மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது.

"இந்தா இந்த ஐநூரை வெச்சுக்கோ... நைட்டு நெப்போலியன் அடிச்சுட்டு வண்ணாந்தொறை, ஏரிக்கரை பக்கம் ஒரு ரவுண்டு வா'.. கிடைச்சா ஒரே அமுக்கு. நம்ம மல்லையன் ஒண்ணு புடிச்சுட்டானாமே நிஜமா?'

"அட அது தத்துனூன்டு.. 300 கிராம்கூட இல்ல..''

"மூணு கிலோ இருந்தாத்தான் அந்த விலை..'' அதாவது எண்பது லட்சத்தைச் சொல்கிறார்.
இப்போது என்னால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. அவர்கள் பேசிக் கொண்டிருப்பது மண்ணுளிப் பாம்பு வியாபாரம் பற்றி. அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் புரியாத சில விஷயங்களையும் இப்போது சேர்த்துவைத்துத் தைத்து விஷயத்தைச் சீராக்கிக் கொண்டேன்.


அவர்களின் வியாபார தலைமையகம் எங்கிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது. பொதுவாக அவர்கள் வெளிநாட்டில் மண்ணுளிப் பாம்பை வாங்குகிறார்கள் என்றும் மருந்து தயாரிக்கிறார்கள் என்றும் சொல்லிக் கொண்டார்கள்.

இயல்பான ஆர்வத்தோடு அவர்களிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

அவர்கள் இருவருமே இதுவரை எந்த பாம்பையும் வியாபாரம் செய்யவில்லை. அண்ணா நகரில் ஏதோ ஒரு இடத்தில் மண்ணுளிப் பாம்பை வாங்கிக் கொள்ளும் ஒருவர் இருப்பதாகவும் அவர்தான் அதை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். என்ன மருந்து என்று தெரிந்திருக்கவில்லை. "கை தடிமன் இருந்தாத்தான் வாங்கிக்குவாங்களாம்'' என்று அவருடைய கையைக் காட்டினார். ஊரில் சிலர் மண்ணுளிப் பாம்பைப் பிடித்து அது மூன்று கிலோவுக்கு மேல் பெருகுவதற்காகத் தீனி போட்டு வளர்த்து வருவதாகச் சொன்னார்.

ஒரு பாம்பின் விலை ஒரு கோடிக்குப் போகிறதென்றால் அந்தப் பாம்பைக் கொண்டு சென்றவன் அதை வைத்து ஒரு கோடியே ஒரு லட்சமாவது சம்பாதிக்க வேண்டியிருக்கும். அது சாத்தியமா என்று கேட்டேன். அப்படி ஒரு மருந்து தயாரிக்க முடிந்தால் இந்திய அரசாங்கமே தயாரிக்குமே? மண்ணுளிப் பாம்பை இனவிருத்தி செய்வதைவிட்டுவிட்டு அதைக் கொன்று குவிக்க வேண்டியதில்லையே என்பதாக சில கேள்விகளைக் கேட்டேன்.

என்னுடைய அசுவாரஸ்யப்படுத்தும் பேச்சு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. "நாங்க சும்மா பேசிக்குனு இருந்தோம் சார்'' என்று போய்விட்டனர்.

சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளெல்லாம் உழைத்தாலும் சம்பாதிக்க முடியாத ஒரு தொகையை ஒரு மண்ணுளி பாம்பின் மூலம் அடைய முடியும் என்பது எப்பேர் பட்ட பேராசை? எத்தனை பேர் இதை நம்பி இரவும் பகலும் பாம்பைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். வதந்திக்கு மட்டும் எப்படி இப்படியொரு வலிமை? எத்தனைபேரின் நம்பிக்கை விரயமாகிறது.. எவ்வளவு பேராசை?

அந்தப் புரளியில் இருந்த பிரம்மாண்டம் ஒரு காரணம். சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் பிரம்மாண்டம். அங்குதான் இருக்கிறது சூட்சுமம்.

இந்தமாதிரி கற்பிதங்களை உருவாக்குகிறவன் அயோக்கியனென்றும் அதை நம்புகிறவன் முட்டாளென்றும் வெளிப்படையாகவே தெரிந்தது.

3 கருத்துகள்:

JesusJoseph சொன்னது…

ஆனா இந்த பாம்புக்கு நல்ல விலை என்று தான் நினைக்குறேன் தினமலர் பேப்பரில் கூட இதை பற்றி படித்தான்

ஜோசப்

அமர பாரதி சொன்னது…

நல்ல கட்டுரை. நீங்கள் சொல்வது 100 சதம் உண்மை. //சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளெல்லாம் உழைத்தாலும் சம்பாதிக்க முடியாத ஒரு தொகையை ஒரு மண்ணுளி பாம்பின் மூலம் அடைய முடியும் என்பது எப்பேர் பட்ட பேராசை// மக்கள் ஒரே இரவில் பணம் சம்பாதித்து விடலாம் என்று எண்ணுவது அதிகரித்து வருகிறது. மேலும் ஒரு மனிதன் உயர்ந்த பிறகே அவனை மக்கள் கவனிக்கிறார்கள். உயர்வதற்கு அவன் எடுத்துக் கொண்ட வருடங்களை அவர்கள் மறந்து விட்டு பொறாமையில் வயிறெறிகிறார்கள். இந்த பேராசையில் தன் உடமையான குறைந்த பட்ச பணத்தையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு இந்த கட்டுரையில் 500 ரூபாய்க்கு குடித்து விட்டு பாம்பத்தேடுவதை விட அதை சேர்த்து வைத்து பெருக்கலாம் என்ற எண்ணம் இல்லை.

நன்றி

பெயரில்லா சொன்னது…

ennal ithai nambavum mudiyavillai nambamal irukkavum mudiyavillai....

LinkWithin

Blog Widget by LinkWithin