திங்கள், ஆகஸ்ட் 24, 2009

ஒரு தூக்கு மேடை குறிப்புகலைஞரைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தார் அந்தப் பெரியவர். பார்வைக் கணிப்பிலேயே 80 வயதை மதிப்பிட முடிந்தது. முரசொலி அலுவலகத்தில் அன்று கலைஞரைப் பார்க்க நிறைய பேர் வந்திருந்தார்கள். பெரியவரால் கலைஞரைப் பார்க்க முடியவில்லை. கலைஞர் கார் கிளம்பும்போது எப்படியும் அவர் தம்மைக் கவனித்துவிடுவார் என்ற அவருடைய நம்பிக்கையும் வீணாகிவிட்டது. மற்றவர்கள் போல காரின் கதவுப் பக்கம் ஓடித் தங்கள் முகத்தைத் தெரியப்படுத்திக் கொள்ளும் சாகஸம் எதுவும் அவரிடம் இல்லை. கார் கிளம்பியதும் சோர்ந்து நின்றுவிட்டார்.

அவரை அணுகி பேச்சுக் கொடுத்தேன். "பரவால்ல பட்ட கஷ்டத்துக்கு இப்ப வசதியா இருக்குது.. அது போதும். பாவம் இந்த வயசிலயும் ஓயாத வேலை இதுக்குது அதுக்கு'' என்றார். இதுக்கு, அதுக்கு என்று அவர் சொல்வது கலைஞரை என்பது தெரிந்ததும் ஒருவித அச்சம் வியாபித்து, என் அறைக்கு அழைத்துச் சென்றேன்.

அவர் பெயர் பாஸ்கர். எம்.ஆர்.ராதா நாடக கம்பெனியில் வேலை பார்த்தவர்.
"திருச்சில அண்ணாவோட வேலைக்காரி நாடகம் நடக்கும்போதுதான்.. இதோட தூக்குமேடை நாடகமும் நடந்தது. அண்ணா நாடகத்துக்கு ‘அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி'ன்னு விளம்பரம் பண்ணியிருந்தாங்க.. நாங்க ‘கருணாநிதியின் தூக்குமேடை'னு போட்டிருந்தோம். அன்னைக்கு காலீல எனக்கு ஒரு யோசனை.. அனாவுக்கு அனாவா போட்டதுமாதிரி நாம க'னாவுக்கு க'னா போட்டு "கலைஞர் கருணாநிதி'னு போட்டா என்னனு ராதாண்ணகிட்ட கேட்டேன். அண்ணன் சரிடான்னுட்டாரு.. நான்தான் மொத மொதல்ல சாக்பீஸ்ல இவரை கலைஞர் கருணாநிதினு எழுதினேன்.. ராதா அண்ணனும் இவரை மேடைக்கு வரவழைச்சு கலைஞர்னு சொன்னாரு. என்னை நல்லா தெரியும்.. அதான் ஒருவாட்டி பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்.''

உண்மையா, உயர்வு நவிற்சியா என்ற சந்தேகம் வரவில்லை. ஏனென்றால் அவர் பேசும் தொனி உண்மைக்கு நெருக்கமானதாக இருந்தது. ஒல்லியாக இளம்பிராயத்தில் ஓடியாடி உழைத்தவராகத் தோன்றினார். சுறுசுறுப்பின் மிச்சம் அவருடைய நடுக்கம் நிறைந்த வேகத்தில் வெளிப்பட்டது.
"என்னைப் பார்த்துட்டா வுடவே வுடாது.. எம் மேல அவ்ளோ பிரியம்.. ''
வீட்டில் இவர் சொல்வதை நம்புபவர்களாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. கலைஞரின் நண்பர் என்பதை நிரூபிக்க வேண்டியிருந்திருக்கலாம். முதுமையின் அலைபாயலில் தொலைந்த நட்பைப் புதுப்பிக்க நினைத்திருக்கலாம். ஞாபகம் வைத்திருக்கிறாரா என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்கிற ஆசையாக இருந்திருக்கலாம். ஏதோ உதவி தேவைப்பட்டிருக்கலாம். என்னவாக இருந்தாலும் அவரையும் கலைஞரையும் சந்திக்க வைக்க ஆசைப்பட்டேன். என்னுடைய யூகங்களில் எது சரியானது என்பதைத் தெரிந்து கொள்கிற ஆர்வம்.

இன்னொரு முறை வாருங்கள் எப்படியாவது சந்திக்க வைக்கிறேன் என்று சொல்லி அனுப்பினேன். அவர் இன்னொரு முறை வந்த போது கலைஞர் முரசொலிக்கு வரவில்லை. இன்னொரு முறை போன் செய்துவிட்டு வாருங்கள் என்றேன்.

அதன் பிறகு அவர் அங்கு வரவில்லை. எங்கள் குங்குமம் பிரிவை மயிலாப்பூர் தினகரனுக்கு மாற்றிவிட்டார்கள். எனக்கு வேறு அலுவலக முகவரியும் வேறு தொலைபேசி எண்ணும் அமைந்தது. அவர் என்னைத் தேடியிருப்பாரா... கலைஞரைச் சந்தித்தாரா? வீட்டில் நம்பாமலேயே போய்விட்டார்களா? கலைஞரைச் சந்திக்க வருகிற எத்தனையோ தொண்டர் குவியல்களில் இந்த மாதிரி ஆதாயம் கோராத பல கொடி மரத்து வேர்கள் உண்டு. அவர்களின் எல்லா கதைகளையும் கேட்க நேரம் இருப்பதில்லை.

எல்லோருக்கும் வேறு இடங்களில் வேறு கதைகள் காத்துக் கொண்டே இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin