வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

கவிஞர் மதுமிதாவின் வெட்டுப்புலி விமர்சனம்

சனி, ஆகஸ்ட் 21, 2010

நூற்றாண்டு கதாபாத்திரங்களுடன் ஒரு பயண அனுபவம்'நாட்டியப் பேரொளி பத்மினியுடன் ஒரு சந்திப்பு' என்று எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஆனந்தவிகடனில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவருடைய நண்பர் ஒருவர் பத்மினிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவருடைய தயவில் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க பத்மினி வருகிறார். அப்போது பத்மினிக்கு வயது 70. இந்தச் சமயம் மூன்று நாட்கள் பத்மினி எழுத்தாளார் அ.முத்துலிங்கம் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு. அந்த நாட்களில் நடந்த நிகழ்வின் நினைவினை தன்னுடைய சுவாரஸ்யமான நடையில் பகிர்ந்திருப்பார்.

பத்மினி வந்து கனடா மண்ணில் இறங்கி சரியாக அரை மணி நேரத்துக்குள் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. பத்மினியை சந்திக்க வந்த ஒரு பெண்மணியின் மனதில் இந்தக் கேள்வி முப்பத்தைந்து வருடங்களாக இருந்ததாம். 'நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்துகொள்ளவில்லை?' பத்மினி தங்கியிருந்த மூன்று தினங்களிலும் இதே கேள்வியை அவரிடம் வெவ்வேறு நபர்கள் இருபது தடவைகளாவது கேட்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு வேறு கேள்விகளே இல்லையா? என அ.முத்துலிங்கம் அதிசயப்பட்ட அளவுக்கு பத்மினி ஆச்சரியம் காட்டவில்லை. இந்தக் கேள்விக்கு மிகவும் பழகிப் போனவர்போல இருந்திருக்கிறார்.

இப்படியாகத் தொடர்ந்த கட்டுரையின் கடைசிப் பகுதியில் ஒரு கேள்வி.

சிவாஜியை எப்போது கடைசியாக சந்தித்தீர்கள் ?

அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார். தண்ணீர் கூட அவர் விருப்பத்திற்கு குடிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் தண்ணீர்தான். கொஞ்சம் கூடக் குடித்தாலும் உடம்பில் தண்ணீர் கட்டி உப்பிவிடும். மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சிவாஜி மாடியிலேயே தங்கியிருந்தார். கீழேயே வருவதில்லை. அவரைப் பார்ப்பவர்கள் மேலே போய் பார்த்துவிட்டு அப்படியே போய்விடுவார்கள். சிவாஜி சாப்பாட்டு பிரியர்; என்னைப் போலவே. அவருக்கு விருப்பமான அத்தனை அயிட்டமும் எனக்கும் பிடிக்கும். அன்று மேசை நிறைய சாப்பாட்டு வகைகள். காடை, கெளதாரி, கோழி, ஆடு, மீன், றால் என்று எனக்கு பிடித்தமான அத்தனை கறி வகைகளும் சமைத்திருந்தார்கள்.

அதில் ஒன்றைக்கூட சிவாஜி உண்ண முடியாது. அப்படியும் என் ஒருத்திக்காக அவ்வளவு சமைத்திருந்தார்கள். சிவாஜியை ஒரு நாற்காலியில் உட்காரவைத்து நாலு பேர் அவரை மாடியில் இருந்து தூக்கி வந்தார்கள். அவர் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு 'சாப்பிடம்மா, சாப்பிடு. நல்லா சாப்பிடு ' என்றார். முகம்மது அலி என்ற குத்துச்சண்டை வீரரைப்பற்றி ஒரு காலத்தில் பாடல் இருந்தது. 'வண்ணத்துப் பூச்சிபோல மிதப்பார்; குளவி போல குத்துவார்.' அவருடைய கால்கள் தரையில் பாவாமல் துரிதமாக இயங்குமாம். இன்று அவருக்கு பார்க்கின்ஸன் வியாதி. ஒரு அடி எடுத்து வைக்க ஒரு நிமிடம் எடுக்கிறார். அதுபோல ஒரு கொடுமைதான் இதுவும். உணவின் சுவை அறிந்தவர் அதை ருசிக்க முடியாத கொடுமை. அவருக்கு பிடித்தமான அத்தனை உணவையும், வெறுமனே பார்த்தபடி இருந்தார்.

அதுதான் கடைசி நினைவு. வேறு ஏதாவது நினைவாக இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

சாதிவெறி பற்றி நான் படிக்காத கட்டுரைகள் இல்லை. டானியலின் 'பஞ்சமர்' நாவலில் தொடங்கி, மாதவய்யாவின் 'கண்ணன் பெரும் தூது' சிறுகதையில் இருந்து, சமீபத்தில் ஜெயமோகனின் 'கடைசிவரை' சிறுகதை வரை படித்தவன்தான். ஆனாலும் சில விஷயங்கள் கேட்கும்போது மனதை திடுக்கிட வைத்துவிடுகின்றன.

மாலை ஆறுமணி இருக்கும். பத்மினி மஞ்சள் கரை வைத்த வெள்ளை சுரிதார் அணிந்து காலுக்கு மேல் கால் போட்டு சோபாவில் சாய்ந்து அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அவர் தேநீர், கோப்பி போன்ற பானம் ஒன்றும் அருதுவதில்லை. ஒரு கிளாஸில் பழ ரசம் மெல்லிய மிடறுகளில் சுவைத்தபடி இருந்தார். உடம்பும் மனமும் ஒருமித்து மிதக்கும் ஒரு தருணம் அது. அவருடைய சம்பாஷணை எங்கோ தொடங்கி எங்கோ தொட்டு தொட்டு செல்கிறது. திடீரென்று சொன்னார். 'நான் நாயர் பொண்ணு. அவர் கள்ளர் ஜாதி. நடக்கிற காரியமா?'

நான் திடுக்கிட்டு விட்டேன். கடந்த இரண்டு தினங்களாக இருபது தடவைகளுக்கு மேலாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் கூறுகிறார் என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. அவர் கண்கள் பளபளவென்று மின்னிக் காட்டிக்கொடுத்தன. இப்படி அ. முத்துலிங்கம் அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து முடித்திருப்பார்.

*

'வெட்டுப்புலி' நாவலில் அணைக்கட்டு வேலையில் மண்ணாங்கட்டிகளை உடைத்தும் அதை கூடையில் அள்ளி தலையில் சுமந்தும் செல்லும் குணவதியை நேரில் பார்த்ததும், இளவயது லட்சுமண ரெட்டி தேவதையைப் பார்த்தது போல் பரவசம் கொள்கிறான். சில சந்திப்புகளுக்குப் பிறகு ஒரு நாள் அவளை அவன் அணைத்தபோது, அவள் அவனை விலக்கி 'போங்க ரெட்டியாரே' என்கிறாள். சம்பாஷணை கேலியும் கிண்டலுமாகத் தொடர்கிறது.

'நான் உன் மேல் உயிரே வெச்சிருக்கேன். நீ என்னடான்னா புரிஞ்சுக்கவே மாட்டேங்கறீயே?'

'எம்மேல நீ எதுக்கு ரெட்டியாரே உயிரை வைக்கணும்?' கண்களை இடுக்கிக்கொண்டு குணவதி கேட்கிறாள்.

'மொதல்ல என்னை ரெட்டியாரேன்னு கூப்பிடறதை நிறுத்து. நான் உன்னைக் கல்யாணம் கட்டிக்கணும். உனக்கு சம்மதமான்னு சொல்லிடு'

' நடக்கற கதையா பேசு ரெட்டியாரே.. இந்நேரம் வேற யாராவது நாம பேசிக்கிட்டிருக்கிறதைப் பார்த்தாவே வெட்டி ஏரியில புதைச்சிடுவாங்க.'

'அதுவரைக்கும் நான் தலையை சொறிஞ்சிக்கிட்டு இருப்பேனா'

'ரெட்டியாரே நீ போறயா, இல்லையா?'

'ரெட்டியார்னுலாம் என்னை சொல்லாதே..'

குணவதி தீர்மானமாகப் பார்த்தாள் 'நான் ரெட்டியாருன்னு சொல்லாட்டா எல்லாம் சரியாயிடுமா? நீ எங்க சித்தப்பனை வாடா, போடானு கூப்பிடறே..எங்கம்மாவ பேரிட்டுத்தான் கூப்பிடறே... அதையெல்லாம் நீ வுட்டுட முடியுமா?' அவள் கேட்ட கேள்வி எதிர்பார்க்காத ஈட்டித் தாக்குதலாக இருந்தது. லட்சுமணன் பேதலித்துப்போய் நின்றான் அவள் பேச்சைக் கேட்கும்போதே இவள் இவ்வளவு புத்திசாலித்தனமாக பேசக்கூடியவளா என்று வியப்பில் வீழ்ந்தான். சொல்லி முடித்துவிட்டு அவள் வேதனையோடு லட்சுமணனைப்பார்த்தாள். .....

'என்னை மன்னிச்சுடு ரெட்டியாரே'.... லட்சுமணன் நிலைகுலைந்து போனான்....

குணவதியின் தந்தை இருந்திருந்தாலும் அவளுடைய பாட்டன் இருந்திருந்தாலும் நாம் அவனை வாடா போடா என்று தானே அழைத்திருக்க முடியும்? குணவதி வேண்டுமென்றால் இத்தனை பேரிடமும் நாம் வேறு மாதிரி நடந்துகொள்ள வேண்டியிருக்குமே?

நாகரத்தினத்தை எப்படி அத்தை என்று அழைக்க முடியும்? தருமனை எப்படி மாமன் என்றழைக்க முடியும்? எல்லோரையும் வீட்டுக்குள் சேர்த்துக்கொள்ள முடியுமா? நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு அடாத செயலாக அவன் அந்தக் கணம் உணர்ந்தான்.

பத்மினி பல வருடங்களாக பலமுறை தான் எதிர் கொண்ட கேள்விக்கு கூறிய பதில் வேறு சாதியினரிடையே திருமணம் செய்துகொள்ளலாகாது என்னும் இரத்தத்தில் பதியப்பட்ட பதில். குணவதி கேட்டதோ மேல் சாதி, தாழ்த்தப்பட்டவரிடையே இந்த மனப்பான்மை இருப்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக்கூறி மனம் இருந்தாலும் சமூகத்துக்குக் கட்டுப்பட்ட தன்மையை வெளிப்படுத்துவது. நிதர்சனமான உண்மை.

இந்த இரு உரையாடல்களையும் வாசிக்க நேரும் இன்றைய நகர்ப்புறவாழ் இளம் தலைமுறையினருக்கு, அந்த காலக்கட்டத்தின் இந்த சாதி என்பதன் தீவிரம் எந்த அளவுக்குப் புரியும்.

இந்தியாவை மூன்று இந்தியாக்களாக இந்த வகையில் இன்றும் பிரிக்கலாம். மாநகரம், நகரம், கிராமம். மாநகரங்களில் பேச்சு வழக்கில் வெறும் பெயர் அடையாளங்களாய் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்த சாதிப் பெயர்கள், இப்போது நகர்ப் புறங்களிலும் மறைந்து, சிறு கிராமங்களில் மட்டுமே புழக்கத்தில் இருக்கின்றன. பெயர்களில் சாதிப்பெயர்கள் மறைந்திருக்கலாம். என்றுமே தாழ்த்தப்பட்ட சாதியினராகத் தங்களைக் கருதுபவர்கள் தங்களுக்குள் விளையாட்டாகவும் பெயருக்குப் பின் சாதிப்பெயரை உபயோகிப்பதில்லை என்பது கண்கூடு. ஆனால், மக்கள் இந்திய சுதந்திரத்துக்கு முன்பான காலக்கட்டத்திலும் அதற்கு பின்பும்கூட, பல வருடங்களாக தங்களுக்குள் உரையாடும்போது, சாதிப் பெயர் சொல்லி உரையாடியே வந்தனர். காதல் திருமணம் செய்து கொண்டால் சாதி வெறி குறையும் என்பது கூட இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பும் வெற்றுவாதமாகலாம். அப்படி நீக்கமற நம் மண்ணில் வேரூன்றி உள்ளது.

'வெட்டுப்புலி' யில் கதாபாத்திரங்கள் தங்களுடைய 30 கள், 40கள் என்னும் காலக்கட்டத்தின் இயல்புப்படி, இயல்பாய் ரெட்டியார், செட்டியார், முதலியார் என சாதிப்பெயர்கள் குறிப்பிட்டு பேசிக்கொள்கின்றனர். அப்படி அழைத்துக்கொள்வதில் அவர்களுக்குள் எந்த ஒரு தயக்கமும் இல்லை.

நாவலில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தனது திருமணம் நடக்க வேண்டும் என விரும்பிய தியாகராசன் ஹேமலதாவை சாதி மாறி திருமணம் செய்யும்போது, அவனின் சித்தப்பாவான ஆறுமுகமுதலி போன்றோர் திருமணத்திற்கு வரவில்லை.

1930 களிலிருந்து 2009 வரையிலான காலகட்டம் கண் முன்னே விரிகிறது.

வெட்டுப்புலி பிராண்ட் தீப்பெட்டியில், தன்னை நோக்கிப் பாயும் சிறுத்தையை நோக்கி ஒரு கட்டுமஸ்தான இளைஞன் வெட்டறிவாளை ஓங்கி நிற்கிறான். அவர் தனது கொள்ளுத்தாத்தா எனத் தெரிந்துகொண்ட தமிழ்ச்செல்வன் அந்த வேரினைத் தேடி தனது பயணம் மேற்கொள்கிறான். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் அச்சடிக்கப்பட்ட ஒரே தமிழனின் படம் என்னும் பெருமிதத்தோடு செல்லும் அவனுடன் இரு நண்பர்களும் பயணத்தைத் தொடர்கின்றனர். அவர்கள் செல்லும் பாதையோடு முன்பு லட்சுமண ரெட்டி சென்ற பாதையையும் தொடர்பு படுத்தி பழைய முந்தைய சென்னை, ஜெகநாதபுரம், ஊத்துக்காடு என பல்வேறு இடங்களின் பழைய தோற்றமும், வளர்ச்சியும், புதிதாய் மாறிய தோற்றமும் சித்திரப் படுத்தப்பட்டுள்ளன. துல்லியம் சிறிதும் குறையாமல் நாவல் முழுக்க சிரத்தையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கே கத்தி என்று ஆசிரியர் தமிழ்மகன் குறிப்பிட்டிருப்பார். நமக்கோ வெட்டுக் கத்தி, அரிவாள், வெட்டரிவாள், வீச்சறிவாள் என்றால் தான் புரியும். வெட்டுக் கத்தியையும், கத்தி என்றே குறிப்பிடப்படும் பிரதேசங்கள் இருக்கின்றன என்பதையும் நாம் அறிகிறோம். இது போன்ற நுண்மையாக புதிதாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விபரங்கள் ஏராளமாக அள்ளி அளிக்கப்பட்டிருக்கின்றன.

'மஜிலு கண்மறைவதற்குள்' என்னும் வார்த்தைப் பிரயோகம் ஓரிடத்தில் வருகிறது. கண் முன்னே மாட்டுவண்டிகள் சாரிசாரியாக செல்லும் காட்சிச் சித்திரம் விரிகிறது. இது போன்று பல இடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நாவலின் ஆரம்பமாய் லட்சுமணன் குதிரையில் ஏறி அதைத்தன் வசம் கொண்டு வரும் காட்சி உணர்வு பூர்வமாய் இருக்கும். திரைப்படத்தில் நேரடியாகப் பார்த்துச் சிலிர்ப்பது போன்ற எபெக்ட். இந்த எபெக்ட்டை கடைசி அத்தியாயம் வரை தொடரச் செய்ததில் நாவலாசிரியரின் சிரத்தை தெரிகிறது.

நாவல் அந்தக் காலக்கட்டதின் அரசியலையும், திரைப்படத்தின் வளர்ச்சியையும் சொல்லிச் செல்கிறது. திராவிட இயக்க அநுதாபியாக இருப்பவர் அந்தக் காலக் கட்டத்தை எப்படி பார்த்திருப்பார் என்னும் கண்ணோடத்திலேயே நாவல் சொல்லப்பட்டுள்ளது. கம்யூனிசம், காங்கிரஸ் எல்லாம் கடுகளவே காட்டப்பட்டுள்ளனர்.

பிராமணர் மீதான வெறுப்பில் ஆரம்ப காட்சிகளில் உதிர்க்கப்பட்ட ரௌத்ரமான வார்த்தைகளையும், இடையில் நடைபெறும் சம்பாஷணைகளையும், கடைசி அத்தியாயங்களில் நடராஜன், கிருஷ்ணப்ரியா இருவரிடையே நிகழும் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்கிறார். சாதி அல்லது கட்சி சார்பான விஷயங்களில் மக்களால் அவ்வப்போது எழுப்பப்பட்ட கேள்விகளையும், சாதாரண மக்களே யதார்த்தமாய் அதற்கு சொல்லும் பதிலையும், தன் கதாபாத்திரங்கள் மூலம் பேசுவதாய் எளிய நடையில் விவரிக்கிறார். ஆனால், அந்த கதாபாத்திரங்கள் எங்கும் புகுத்தப்பட்ட பாத்திரங்களாகத் தெரியவேயில்லை. உதாரணமாக ருத்ரா ரெட்டியும், முத்தம்மாவும், தங்கை மங்கம்மா, தசரதரெட்டி வீட்டுக்கு வந்து திரும்பும் போதான, பாதையில் கோயில் வாசலில் ஓய்வெடுக்கும் காட்சி. குருவிக்காரன் வருவதும் மார்வாடி சேட்டுகளுக்கும் தனக்கும் அண்ணன் தம்பி உறவென்று கூறும் காட்சி. இது போன்று நாவல் முழுக்க வரும் எந்த கதாபாத்திரமானாலும் புகுத்தப்படது போன்று தோன்றாமல் புதிதான ஒரு தகவலை கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். மரம், மண், ஏரி, மக்கள் சார்ந்த பல வர்க்கங்களுடைய வாழ்க்கைக்கோளத்தின் ஒரு சிறுபகுதி இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு அரசியல் கட்சியை சாடி மாற்று அரசியல் கட்சியினர் எடுத்து வைக்கும் கருத்துகளை ஒரு குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்கள் பல்வேறு கட்சியைச் சார்ந்து இருப்பதாக சொல்வதன் வாயிலாகச் சொல்லிச் செல்கிறார். அந்த வகையில் நியாயப்படுத்துவதால் இப்போதிருக்கும் ஒரு கட்சியினர் நம் எதிர்கட்சியினரையும் தான் ஏசியிருக்கிறார் என கடந்து போகும் அளவில் சாமர்த்தியமாய் பதிவு செய்துள்ளார். அப்பாவிகளான குடும்ப அங்கத்தினர்கள் அரசியல் சார்ந்து இயங்கியதால் அடைந்த வீழ்ச்சியும், அதற்குப் பிறகான அமைதியைத்தேடி ஆன்மிகம் சாரும் வாழ்க்கையும் சொல்லப்பட்டுள்ளது.

திரைப்படம் சார்ந்து இயங்கிய குடும்பம்பத்தில் சிவகுருவின் வாழ்க்கைப் பாதை சிதிலமடைந்ததையும் பதிவு செய்கிறார். அன்றைய கீற்று சினிமாக்கொட்டகையை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். அரசியல் தலைவர்களும், தலைவிகளும், திரைப்பட நாயகர்களும் நாயகிகளையும் போலவே கண்ணதாசனும், மெல்லிசை மன்னரும், இளையராஜாவும், ரஹ்மானும் வருகின்றனர். கெயிட்டி போன்ற திரையரங்குகளின் பெயர்களும், பாலம் கட்டும் போது ஏற்படும் சாலை மாற்றங்களும் அந்தக் காலகட்டத்தின் கட்டடங்களின் மாற்றங்களையும் சொல்கின்றன.

எம்ஜிஆரின் காலில் அனைவரும் விழுந்து வணங்க ரஜினி மட்டும் கை குலுக்கும் போது அவரின் தோற்றம் சித்தரிக்கப்பட்ட விதம் பார்த்து வாய்விட்டு சிரித்து விட நேர்ந்தது. தொலைக்காட்சி சன் டிவி என குறிப்புகள் வந்தது போல் நாவலில் வானொலியின் முக்கியத்துவம் குறிப்பாகக் காட்டப்படவில்லை. கிரிக்கெட் கமெண்ட்டரிக்கு வானொலியில் காத்துக்கிடந்த காலங்களும்...

வானொலியில் காந்தி இறந்த செய்தி ஒலிபரப்பப்பட்டவுடன் முஸ்லீம்கள் இருக்கும் பகுதி சூறையாடப்பட்டதை எதிர்த்து அன்றைய காங்கிரஸ்காரர்களே முன்னின்று அமைதிப்படுத்திய கதைகள் கேள்விப்பட்டிருக்கிறோம். அதே சமயம் இந்திராகாந்தியின் மறைவுக்குப்பின் தலைமையின் ஆணைப்படி 3000க்கும் மேற்பட்டோர் பலியாக நேர்ந்ததையும் பார்க்கிறோம். இந்த இரண்டையும் கூட ஒரு வரியில் ஆசிரியர் பதிவு செய்திருக்கலாம்.

ஆட்சியாளர்கள் மாற்றி மாற்றி கூட்டணி வைத்துக்கொள்வதைக் கண்டு தொண்டர்கள் மிரள்வதும் நன்றாக உள்ளது.

நூறாண்டுகால கலாசாரம், பண்பாடு மினியேச்சராகப் பதிவாகியுள்ளது. இதை சிறந்த ஆவணப்பதிவு என எழுதிவிட்டு கடந்து போக முடியவில்லை. நாவல் அளவுக்கு வாசிப்பனுபவம் எழுதவும் இயலாது.

எழுத்தாளர் இரா.முருகன் தன்னுடைய ‘அரசூர் வம்சம்’ நாவலில் 1870 களின் சென்னையைப் படம் பிடித்துக் காட்டியிருப்பார்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தனது 'யாமம்' நாவலில் மதராசாபட்டினத்தையும், லண்டனையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். அத்தர் தயாரிப்பு, இரவின் வெளிப்பாட்டினைக் கடந்து அந்த காலக்கட்டத்து சென்னை வரலாறும், பூகோளமும் கண் முன்னே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தனக்கு கிடைத்த அத்துனை ஆராய்ச்சிக் குறிப்புகளையும் துல்லியமாய் பதிவு செய்திருப்பார்.

'வெட்டுப்புலி' நாவலும் தனது காலகட்ட சென்னையைக் கண் முன் கொண்டுவருகிறது. சென்னையின் வளர்ச்சிப்பாதையின் தொடர்ச்சியினைக் கொணர்ந்து சேர்க்கிறது. கதாபாத்திரங்களுக்கிடையேயும் கடைசி வரை முடிச்சிட்டும், முடிச்சுகளை நீக்கியும் ஒன்றுக்கொன்று எங்கேனும் ஒரு தொடர்பு இருக்கும்படி கண்ணுக்குப்புலப்படா சங்கிலிகள் இட்டு அந்த காட்சி வரும்போது மட்டும் புலப்படும்படியாய் கண்ணுக்ககப்படா ஒரு மந்திர சாவியும் புனையப்பட்டு இருப்பது புலப்படுகிறது. எங்கேயெல்லாம் புனைவு எந்த அளவு கலக்கப்பட்டிருக்கிறது

இலக்கியம் சார்ந்து பாரதியார், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஜேகே, சுந்தரரமசாமி, அ.ச.ஞானசம்பந்தன் என பெயர்கள் குறிப்பிடப்பட்ட அதே சமயத்தில் மீனாட்சி பிள்ளைத்தமிழ் சப்பாணி பருவத்தில் குமரகுருபரரின் வர்ணனை குறிப்பிடப்படுகிறது.

வரலாறாக திரைப்பட, அரசியல் வரலாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. புவியியல் ரீதியாக சிறந்த வர்ணனைகள் காணப்படுகின்றன. அறிவியல் வளர்ச்சியாக தொலைக்காட்சியும் கணினியும் சொல்லப்பட்டுள்ளது. விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் குறித்து விபரங்கள் இல்லை. சாமானிய மனிதன் நேசிக்கும், பேச விரும்பும் நிகழ்வுகள் மட்டுமே யதார்த்தமாகப் பேசப்பட்டுள்ளன. அந்தக்கால மருத்துவமுறையும் சின்னாரெட்டியின் மூலமாக அவர் கட்டியை அறுவை செய்யும் காட்சி மூலமாகக் காட்டப்படுகிறது. பேஷண்ட்டும் மயக்க மருந்து இல்லை என்னும் காரணமாக வாயில் துணியையடைத்து வலியைப் பொறுத்துக்கொள்வார். துணியை எடுத்து ஓலமிட்டுவிட்டு மறுபடி மூடிக்கொள்வார்.

ஆக நாவலின் ஒவ்வொரு பக்கமுமே நாம் உடன் பயணித்து ஒவ்வொரு கட்டத்திலும் உடன் இருந்து கதாபாத்திரங்களை பார்க்கும் உணர்வை, மனவெழுச்சியை ஏற்படுத்துகிறது.

தன் வேர்களை நாடிச் செல்லும் ஒருவன் வெட்டுபுலி என்னும் நாவல் வழியாக இத்தனையையும் காண்பதாய் காட்சிகள் மாறி மாறி திரைப்பட பாணியிலேயே ப்ளாஷ் பேக் ஷாட்கள் போலும் அமைந்துள்ளன. ஆரம்ப முப்பதுகளில் மாட்டு வண்டியில் பயணிக்கும் நாவல் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து கடைசி அத்தியாயங்களில் ராக்கெட் வேகம் கொள்கிறது. மொழியும் அதற்கேற்றார் போல் வாகாக மாறி அமைந்துள்ளது.

காதல், காமம் என உறவுகளின் மேன்மையும், மனித மனத்தின் உள்ளத்தின் உள் ஒளிந்திருக்கும் உணர்வின் பல்வேறு சாத்தியகூறும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தசரதரெட்டி மங்கமாவுடன் இணைந்த மனதுடன் வாழ்ந்தாலும், முத்தம்மாவுடன் தோன்றும் ஒன்றுதல் சிறிதும் விரசமின்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் அத்தியாயத்தில் நினைவின்றி இருக்கும் தேவகியின் கணவன் கடைசியில் நினைவின்றி இருப்பதற்கான காரணம் சொல்லப்பட்டு நினைவு பெற்று கண்களில் நீர் வழிய இருக்கும் நடராசனாக வருவார்.

சின்னாரெட்டியின் குடும்பம், ஆறுமுக முதலியாரின் குடும்பம் என கதாபாத்திரங்கள் ரத்தமும் சதையுமாக நம் முன்னே உலவுகின்றனர். லட்சுமண ரெட்டி விசாலாட்சியை மணந்த பிறகும் கடைசி காலம் வரை குணவதியை மறக்கவில்லை. ஆறுமுக முதலி சுந்தராம்பாள், கணேசன் புனிதா அனுசரணை நிறைந்த நல்லதொரு தம்பதிகளாக காணப்படுகின்றனர். தியாகராசன் ஹேமலதா தம்பதியினர் முன்பின் முரணான கருத்துகள் கொண்டவர்கள். அவர்கள் வாழ்க்கையில் சந்திக்க நேர்பவை தனி அவலம். ஹேமலதாவுக்கும் மணிகண்டனுக்கும் பிறக்கும் மகளை தன் மகளாக ஏற்கிறான் தியாகராசன். ஹேமாவோ பல்வேறு அலைச்சலுக்குப்பின் மனம் மாறி தன் கணவனுடன் சேர்கிறாள். மகளின் பெயரை புனிதா என அவள் உச்சரிக்கையில் சாபல்யம் அடைகிறான் அவன். கையில் பச்சை குத்திக்கொண்ட அண்ணாவின் படத்தை தோலுடன் வாட்டிக்கொள்ளும் காட்சி அவள் தனக்கான தவறுக்கு பிராயச்சித்தம் செய்துகொள்வதை காட்டும்.

பத்திரிகையாளர் ரவி தமிழ்மகன் தானோ என்றும் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. பத்திரிகைத் துறையின் நூக் & கார்னர் அனாயசமாய் சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ்மகன் இதில் சில சித்துவேலைகள் செய்துள்ளார். லட்சுமணரெட்டியை கொலை செய்ய நியமிக்கப்பட்டவன் பெயர் பெர்னான்டஸ். தூத்துக்குடியில் இருந்து பிழைப்பு தேடி வந்து கொழும்பு சென்று தோட்டத்தில் வேலை செய்து குடும்பத்தைக் காக்க இதற்கு ஒப்புக்கொள்கிறான்.

தமிழ்ச்செல்வனின் நண்பனாக வருபவனும் பெர்னான்டஸ். அந்த பெர்னான்டசின் வழித்தோன்றலாக இருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

வண்ணத்திரை ரிப்போர்ட்டர் ரவி செண்பகா என்னும் நடிகையை ரிப்போர்ட்டராக சந்திக்கிறான்.
திரைப்படத்தில் ஒன்றிப்போய் சீரழிந்து திரைப்படத்தாலேயே தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்த சிவகுரு (ஆறுமுக முதலியின் மகன்) நடிக்க வைத்த வனிதா என்பவளின் மகளாக இந்த செண்பகா இருக்கலாம் என்பதும் மறைமுகமாகக் காட்டப்பட்டுள்ளது.

தீப்பெட்டி வந்த பிறகும் அக்காலங்களில் காலையில் அடுப்பைப் பற்ற வைக்க பெண்கள் பக்கத்து வீட்டிலிருந்து வரட்டியில் கங்கோடு நெருப்பை வாங்கி வருவார்கள். நெருப்பை அணையாமல் பாதுகாப்பார்கள். இது மங்கம்மாவும், முத்தம்மாவும் பேசும் ஒருகாட்சியில் வருகிறது. விவசாய குடும்பங்களில் கூலி வேலை செய்பவருக்கும் உணவு (கூழோ, பழைய சாதமோ தான்) எடுத்து வைத்து வழங்குவதுண்டு. இந்தப் பண்பாடும் இந்நாவலில் வருகிறது. விவசாயம், நீர்நிலைகள் குறித்து பல செய்திகள் ஆங்காங்கு வந்து வாழ்வின் ஆதாரம் குறித்த விபரங்களை போகிற போக்கில் கொடுக்கின்றது. ஒரு காட்சியில், அந்தக் காட்சியில் இல்லாத, நெல் சேமித்து வைக்கும் இடம் குறித்த விவரணை வருகிறது.

ஐயப்ப பக்தர்களும், திராவிட கழக உறுப்பினர்களும் கறுப்பு நிற உடை அணிந்திருப்பது குறித்து பெரியாருக்குத் தெரியாத விஷயமாக மணியம்மை பெரியாருக்கு விளக்குகிறார். இந்த இடத்தில் 'அவர் குரல் வழக்கத்துக்கு மீறி நடுங்கியது....... காற்றின் வேகத்தாலோ என்னவோ கண்ணின் நீர் திரட்சி காது மடலுக்கு மேலே வழிந்து தெரிந்தது.' என எழுதுகிறார் ஆசிரியர். காட்சி தேவையான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், ஒன்று பெரியாருக்கு இவ்விஷயம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இரண்டு இந்த விஷயத்துக்கென அவர் குரல் நடுங்கவோ கண்களில் நீர் திரளவோ தேவையுமில்லை. புனைவை உண்மை போல் எழுதிச் செல்லும் நாவலில் ஆசிரியர் இது போன்ற சில இடங்களில் மட்டும் அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் போல் தோன்றுகிறது.

வேற்று மொழிப்பிரயோகங்கள் எழுதப்படும்போது சிறிது கவனமாக இருக்க வேண்டும். இங்கே ஹேமலதா தெலுங்கில் பேசுகிறாள். தியாகராசன் அவளை 'அழகாய் இருக்கிறாய்' எனச் சொல்லும்போது ' பின்னே ஏன் என்னை பிடிக்கவில்லை ' என்று சொன்னாய் என தமிழும் தெலுகும் கலந்து கேட்கிறாள். அது 'பின்னே எதுக்கு பிடிக்கலேதுன்னு செப்பினாவு' என இருந்தாலே போதும். இது போல் இன்னும் இரு இடங்களில் சரி செய்திருக்கலாம்.

காந்தி மறைவு, அண்ணா மறைவு எல்லாம் ஒரு வரிச்செய்திகளாக கடந்து செல்கின்றன. காந்தியின் படமும் சாவர்க்கரின் படமும் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது என்னும் தகவல் போல் பல செய்திகள் ஆங்காங்கே புள்ளி விபரங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

மன்னாரு என்னும் இளைஞனுக்கு அவனறியாமல் குடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததை, கருத்தடை ஆபரேஷன் சஞ்சயின் மூளையில் உதித்ததென நடேசன் கொந்தளிப்பான்.

பாஸ்கர் வந்து கருணாநிதிக்கு தான் தான் 'கலைஞர்' என்று அடைமொழி கொடுத்தது என்னும் விபரத்தை ரவியிடம் சொல்லும் காட்சி ஒன்று....என்னவோ போங்க... மனதைப் பிசைகிறது. இது போன்ற தங்களை கவனத்தில் கொள்ளாது தலைவருக்காக வாழும் எத்தனை நல்லுள்ளங்கள் சந்தடி வாக்கில் கவனிக்கப்படாமல் காணாமல் போயிருக்கின்றன. முழு நாவலில் ஆங்காங்கே தெரியாமல் எட்டிப்பார்க்கும் சோர்வை இது போன்ற சில விஷயங்கள் வந்து சரி செய்கின்றன.

பல பஞ்ச் டயலாக்கள் தென்படுகின்றன.

டயலாக் ஒன்றைக் குறிப்பிடுகிறேன். ஒன்றை நான் குறிப்பிடவில்லை

ரெட்டியார் பலராமனிடம் பெரியார் கூறியதாகச் சொல்வது 'அண்ணாதுரை கிட்ட இருக்கவனுங்க ஆட்சிக்கு வந்தா பணம் சம்பாதிக்கறதில தான் குறியா இருப்பாங்கன்னு சொன்னாரு'

ரேணு நடேசனிடம் ஒரு விஷயம் கேட்கிறாள். அவன் திமுக என்பதால் கோபத்துடன் பொறம்போக்கு ஆயிரம் சொல்வான். உண்மையைப் பார்ப்பியா. பிரேமா வந்தாளா? என்றெல்லாம் பேசுவான். அதற்கு முந்தைய டயலாக்கை இங்கே நான் குறிப்பிடவில்லை. புத்தகம் வாங்கி படித்துக்கொள்ளவும்.

காமராஜ் பெரியார் இருவரிடையே இருந்த நட்பு குறித்து ஒரு கதை சொல்லப்பட்டிருக்கும். அந்தக் காலகட்ட தலைவர்களின் மேன்மையைச் சொல்லும் சிறப்பம்சம். பெரியார் சிபாரிசை விரும்புவதில்லை, காமராசர் சிபாரிசு செய்வதில்லை என்பதை பதிவி செய்திருக்கும் லாவகம். தியாகராசனும் நடேசனும் இங்கே குறியீடுகள் மட்டுமே. இவர்களைப் போன்ற மக்களின் கருத்துகள் தெள்ளத் தெளிவாக பதியப்பட்டுள்ளன.

கடைசி அத்தியாயங்கள் அதிவேகம். மிகவும் ஷார்ப்பாக விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும்.

மறைந்து வரும் நீர்வளங்கள் குறித்தும், மறைந்த கிராமங்கள் குறித்தும் சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர்.

லட்சுமணன் 'எந்த ஊரு நீங்களெல்லாம்?' என ஒரு பெரியவரிடம் கேட்பார். அந்தப் பெரியவரோ ஏரியின் ஆழத்தை நோக்கி கைகாட்டுவார். அவர்கள் கிராமத்துக்குதான் அவர்கள் குழிவெட்டினார்கள் என்ற வாசகத்துடன் அந்த அத்தியாயம் முடியும். இன்னொரு இடத்தில் ஐந்து ஊர்கள் அந்த ஏரிக்குள் மூழ்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

பிரபாகரனும் கதாபாத்திரமாக வருகிறார். 'ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் தனக்கும் எம்ஜிஆருக்கும் சற்றும் பிரியமில்லை என்கிறார். 'தமிழீழம்தான் ஒரே தீர்வு' என்கிறார்.

நியூயார்க்கும் மிக்சர் மனிதர்களும் கவனத்தில் இருக்க வேண்டியவர்கள்.

முடிவும் கச்சிதமாய் வாசகர்களின் எண்ணவோட்டத்துக்கு விட்டு விடுகிறார். அதற்குப்பிறகான காலகட்டங்களில் நடந்த கூத்தையெல்லாம் இந்த நாவலில் சேர்க்க நேர்ந்தால் எப்படி எழுதியிருப்பார் என யோசிக்கத் தோன்றுகிறது.

374 பக்க நாவலுக்குள் இத்தனை விஷயங்களை உயிர்ப்புடன் நூற்றாண்டின் கதகதப்பு மாறாமல்
கொடுத்தது அர்ப்பணிப்புணர்வு இருந்தால் மட்டுமே சாத்தியாகும் விஷயம். உண்மை சம்பவங்களுக்கிடையே எங்கெல்லாம் புனைவைக் கலந்திருக்கிறார் என்பதும் யோசிக்கவியலாதபடிக்கு தெளிந்த நடையில் கொடுத்திருக்கிறார். கம்யூனிஸ்டுகளின் பார்வையில் இந்த நாவல் குறித்து வரும் விமர்சனம் எப்படி இருக்கும் என்னும் ஆவல் எழுகிறது. கம்யூனிஸ்டுகளின் அல்லது காங்கிரஸ் பார்வையில் இந்த நாவல் எழுதப்பட்டால் எப்படி எழுதப்பட்டிருக்கும் என்றும் தோன்றுகிறது.

கதாபாத்திரங்களின் குடும்ப விளக்க வரைபடம் இல்லாமலேயே கதையின் ஓட்டம் பின் தொடர நன்றாக இருக்கிறது. இருந்தாலும் அடுத்த பதிப்பில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இதையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கலாம்.
சமீபத்தில் இந்த நான்கு மாதங்களுக்குள் பல நுண் தகவல்கள் அடங்கிய கருவூலமாக இப்படியொரு மறுபடியும் மறுபடியும் வாசிக்கச் செய்த படைப்பினை நான் வாசிக்கவில்லை. ஒரு இழையிலிருந்து கிடைக்கும் ஒரு விபரத்தைத் தேடிக்கொண்டு பெரும் பாய்ச்சலாய் இன்னொரு தகவல் கிடங்குக்குள் போய்ச் சேரலாம்.

Labels: , வெட்டுப்புலி


1 கருத்து:

Vel Kannan சொன்னது…

பகிர்வுக்கு நன்றி தமிழ்மகன்

LinkWithin

Blog Widget by LinkWithin