வியாழன், மார்ச் 24, 2011

காவியப் பாடம்!


அமெரிக்காவில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வரும் எழுத்தாளர் அமர்நாத் எழுதிய உறுதுணை தேடுமின் என்ற நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை."திடீரென்று', "உறுதுணை தேடுமின்' என்கிற நாவல் இரண்டையும் அடுத்தடுத்து வாசிக்கக் கொடுத்தவர் எழுத்தாளர் எஸ். ஷங்கர நாராயணன். இரண்டும் அமர்நாத் எழுதியவை.
எஸ். ஷங்கரநாராயணன் மூலமாகத்தான் அமர்நாத்தைப் பார்க்கிறேன். படிக்கிறேன். எழுத்தாளர்களை ஆராதிப்பதில் எஸ்.ஷ.வுக்கு நிகராக இன்னொருத்தரை நான் பார்த்ததில்லை. செல்போன், ஈ மெயில் இல்லாத காலத்தில் என்னை தொடர்பு கொள்ள அவரிடம் இருந்த ஒரே கருவி, சைக்கிள். என்னைப் பார்ப்பதற்காக அண்ணாநகரிலிருந்து ஓட்டேரிக்கு சைக்கிளில் தேடிவந்தார். என் மதிப்பு எனக்குள் உயர்ந்த தருணம்.
ஒரு எழுத்தாளர் தேடி வந்து பேசுவதெல்லாம் எனக்குப் புதிது. இதைப் படித்தீர்களா? அதைப் படித்திருக்கிறீர்களா? என்று நிறைய ஆர்வம் கிளறிவிட்டவர் அவர்தான். இப்போது அமர்நாத் எழுதிய கதைகளைக் கொடுத்ததும் அதே ஆர்வத்தோடு படித்து முடித்தேன்.
அமர்நாத்தை வியப்பதற்கு இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. அவர் அமெரிக்காவில் வாழ்கிறவர், விஞ்ஞானி.
இந்த இரண்டு அடிப்படைகள் போதும் ஒருவர் மொழி ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கு. ஆனால் அமர்நாத் படைப்பிலக்கிய ஆர்வம் கொண்டு இருப்பதே அவரைப் பாராட்டுவதற்கு போதுமான காரணமாக இருக்கிறது.
எதிர் மறையான விஷயங்களையே தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் அவர். அவருடைய கதைக்களம் அமெரிக்கா. விஞ்ஞான பின்னணியில் கதைகள் எழுதுகிறார். தடையாக இருக்கும் என்று நினைத்த இரண்டு பிரச்னைகளும் தீர்ந்தன.
உறுதுணை தேடுமின்..
ஆண், பெண் உறவுச் சிக்கல்கள் கதையின் அடிநாதம். கண்ணகியைப் பிரிந்த கோவலன் மாதவியிடம் சிலகாலம் இருந்துவிட்டுத் திரும்பி வருவது போன்ற மெல்லிய ஒற்றுமை உறுதுணை தேடுமினுக்கும் இருப்பதால் இதில் இடம்பெறுகிற அத்தியாயங்களுக்குக் காதை தலைப்புகள் இட்டு பெருமைபடுத்துகிறார்.
செல்வகுமாரி அமெரிக்காவில் பணிபுரியும் பெரியசாமியை மணந்து, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும் கணவனின் போக்கை புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பவள். கணவன் நீக்ரோ பெண் சுகத்துக்காக வேதியியல் ஆய்வுக் கூடத்தில் எம்பிபிபி என்ற வேதிபொருளை உருவாக்குகிறான். அது ஒரு போதைப் பொருள்.
அந்த நீக்ரோ பெண்ணுக்கு அது தேவை. பெரியசாமிக்கு அந்த நீக்ரோ பெண் தேவை. செல்வகுமாரியும் பெரியசாமியும் இயல்பாக பிரிந்து போகிறார்கள். நீக்ரோ பெண்ணோ இன்னும் நிறைய எம்பிபிபி தயாரிக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறாள். பெரியசாமி அதில் உருவாகும் ஆபத்தை உணர்ந்து விலக முடிவெடுக்கிறான். அம்பிகா என்ற அவனுடைய முன்னாள் தோழி உதவுகிறாள். பெரியசாமி அம்பிகாவோடு சில காலம் வாழ்கிறான். அவளுடைய பதவியும் வேலை மாற்றங்களும் பெரியசாமியை அவளைச் சார்ந்து பின் தொடர்ந்து செல்லுமாறு செய்கின்றன. அந்த வாழ்விலும் தயக்கங்கள் ஏற்பட்டு, அவளிடமிருந்தும் பிரிந்து வந்து கல்லூரி பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்குகிறான்.
தமிழகம் வந்து சேர்ந்த செல்வகுமாரி துணையாக இருந்த தந்தையை இழந்து, உடனிருந்த சகோதரியின் போக்கு பிடிக்காமல் தனியாக இரண்டு குழந்தைகளுடன் வாழ்கிறாள். அவளை மணக்க விரும்பும் ராகவனின் நோக்கம் புரிந்து அவனைத் தவிர்க்கிறாள். காலம் அவளைத் தன்காலில் நிற்கும் தைரியத்தைக் கொடுக்கிறது. பிறகு அமெரிக்காவுக்கே திரும்புகிறாள். இந்த செல்வகுமாரிக்கு அமெரிக்க நாசூக்கும் நாகரிகமும் நன்றாகவே கைவந்துவிடுகிறது. வேலைக்குப் போகிறாள். மூத்த மகன் அமெரிக்கனின் சதி திட்டத்தால் செக்ஸ் வலையில் வீழ்கிறான். இதே நேரத்தில் கணவனும் எந்தவித குற்றமும் இல்லாமல் செக்ஸ் குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறான். எல்லாம் ஒரு புள்ளியில் சரியாகி செல்வகுமாரியும் பெரியசாமியும் மீண்டும் இணைகிறார்கள்.
இந்தக் கதையை அமெரிக்கப் பின்னணி இல்லாமல் சொல்லுவதும் வேதியியல் பின்புலம் இல்லாமல் சொல்லுவதும் இயலாத காரியம்.
இதைத்தான் அமர்நாத்தின் பலமாக மாறியிருக்கிறது என்றேன்.
உரைநடையில் அமைந்த வேகமான நடை. பெரும்பாலும் பேச்சுகள் மூலமாகவே கதை நகர்கிறது. நறுக்குத் தெறிப்பதுபோல ஓரிருவரியில்தான் விவரணைகள்.
சிக்கனமான தந்தி வாக்கிய அமைப்பைப் போன்றது அமர்நாத்தின் வாக்கிய அமைப்பு. இது அமெரிக்க வாழ்க்கை முறையால் அவருக்கு ஏற்பட்டுவிட்ட ஓட்டமெடுக்கும் நடையமைப்பாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தேன். எந்த அவசரத்தின் பாதிப்பு இல்லாமலும் அவர் அப்படி அவசர நடையில் எழுதுவதைத் தம் பாணியாகக் கருதியும் இப்படி எழுதியிருக்கலாம் என்ற முடிவுக்கே வரமுடிந்தது. அவருடைய எல்லா கதைகளிலும் சரவணப்பிரியா, சாமிநாதன் என்ற கதாபாத்திரங்கள் இடம்பெறுவது போல அது அவருடைய எழுத்து பாணி.
கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வாசகனும் அதே ஓட்டம் ஓடவேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் நம்பகத் தன்மையை வெளிப்படுத்த பிரயத்தனப்படுவதும் சில இடங்களில் மிகுந்து காணப்படுகிறது. உதாரணத்துக்கு... "சனி காலை எட்டுமணி தாண்டியபோது சென்ட்ரல் அபார்ட்மென்ட் தொகுப்பிலிருந்து வெளியே வருமிடத்தில் ஆண்டர்சன் தெருவின் ஓரத்தில் சரவணப்பிரியா காத்திருந்தாள். சாமி பயன்படுத்தும் பழைய நிஸôன் காரின் கண்ணாடி ஜன்னல்கள் கறுப்பாக இருக்குமென்று அதை ஓட்டி வந்தாள்.'
இதில் கிழமை, நேரம், பொழுது, இடம், இடத்தில் அடையாளம், பயன்படுத்தும் வாகனம், அதைப் பயன்படுத்தியதற்கான காரணம் என்று எல்லாவற்றையும் ஓரே வரியில் சொல்லிச் செல்கிறார்.
"வெள்ளி மாலை. குமாரி ஹோம் டிப்போவுக்குச் சென்று லிசா குறிப்பிட்டபடி லேடெக்ஸ் பெயின்ட் இருபது காலன் வாங்கி வந்தாள். தோசைக்கு அரைத்துவைதாதாள். சனி காலை வாழைப்பழம் சேர்த்துத் தயாரித்த மாஃபின்கள் சாப்பிட்ட பிறகு பழைய உடையில் இருவரும் வேலையைத் தொடங்கினார்கள். சுவர்களைச் சுத்தம் செய்து அவை உலரும்போது மதிய உணவாக தோசை. தொட்டுக் கொள்ள காரக்குழம்பு.'
பிற்காலத்தில் புரட்டிப் பார்த்து ஆச்சர்யப்படும்படியான மெய்கீர்ததி ஆவணங்களைப் போலவும் டைரி குறிப்புகளைப் போலவும் கிழமை, நேரம், சாப்பிட்ட உணவு, வாங்கிய பெயின்ட்டின் பெயர், வாங்கிய அளவு, வாங்கிய கடையின் பெயர் என்று ஏராளமான தகவல்களைத் தருகிறார். இது நாவலின் பல இடத்திலும் தொடர்கிறது. கிட்டத்தட்ட எல்லா அத்தியாயத்திலும் கிழமை, நேரம், இடம், மாதம் என்று சொல்லிச் செல்கிறார்.
அமர்நாத்திடம் கவனிக்க வேண்டிய அம்சம் இது. அமர்நாத் கவனிக்க வேண்டிய அம்சமும்கூட.
இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு பெற்றோரை இழந்து கணவரைப் பிரிந்து போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கை. அவளைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ஆண்கள் கூட்டம். மகனுக்கு சர்க்கரைநோய் என்று குமாரிக்குப் போராட்டமான வாழ்க்கை. அவளுடைய வாழ்க்கை எத்தனை வலி நிறைந்தது, சுமையானது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவளை அவர் எங்கும் நிலைகுலைந்து அழுது புலம்ப வைக்கவில்லை. வாசகன் தானாகவே அதை உணர வேண்டும் என்று அமர்நாத் நினைத்திருக்கலாம். வாசகர்கள் கதைச் சித்தரிப்பில் எந்த அளவுக்கு ஆழ்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இதில் எழுத்தாளரின் வெற்றி அமையும்.
அமெரிக்க வாழ்க்கையில் இருக்கும் ஆடம்பரமும் கொஞ்சம் சபலப்பட்டால் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் ஆபத்தும் மிக நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கா சென்றுவிட்டதால் பாலசந்தரின் 47 நாட்கள், அவர்கள் போன்ற திரைப்படங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்திப் பேச இப்போதைய படங்களுக்குத் தகுதி இல்லை என்றும் அவர் நினைத்திருக்கலாம்.
அவருடைய நாவல்களில் அவர் பயன்படுத்தும் நாவல்களின் பெயர்களும் பழையவை. இருபது வருடத்துக்கு முந்தைய சம்பவங்களைச் சொல்லும்போது அந்தப் படங்களும் நாவல்களும் அந்தக் காலத்தைச் சேர்ந்ததாகத்தானே இருக்க முடியும் என்று சமாதானப்படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் நிகழ்காலப் பதிவிலும் இன்றைய கதைகளும் சினிமாக்களும் இடம் பெற்றிருந்தால் அதை மேலும் சமன்செய்திருக்கும்.
நவீன கோவலன்}கண்ணகியின் காதை எப்படியிருக்கும் என்ற சுவையான கற்பனையை இது விவரிக்கிறது. இதில் மாதவி, கண்ணகி எல்லோருமே 21-ம் நூற்றாண்டு பெண்கள். யாரும் ஐந்து செகண்டுகளுக்கு மேல் அழுகிற சாதியில்லை. சொல்லப் போனால் ஆண்கள் பாடுதான் திண்டாட்டமாக இருக்கிறது. செக்ஸ் குற்றச் சாட்டுகள் பெண்களைவிட ஆண்களைத்தான் அதிகம் பாதிக்கின்றன. நாவலில் யாரும் நீதி கேட்டு சிலம்பை உடைக்கவில்லை. அவரவர் நியாயம் அவரவரிடம் அப்படியே இருக்கின்றன. அடுத்தவர் நியாயம் நம்மை பாதிப்பதாக இருந்தால் நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கையை நாவலின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
உறுதுணை எது என பிரிதல் நிமித்தம் உணர்வது காவிய மரபில் இருந்து இன்றுவரை மனித குலம் கண்டுணர்ந்த பாடம். அதை அமெரிக்க, விஞ்ஞான பின்னணியில் தந்திருக்கும் அமர்நாத்துக்கு வாழ்த்துகள்!

-தமிழ்மகன்,
சென்னை-50.
10.10.10

வெளியீடு
சொல்லங்காடி,
சென்னை-19.
cell : 96770533933

bookudaya@rediffmail.com

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

கடைசி கால உறுதுணை
வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளம்
உறுதுணையின் அடையாளங்கள் இல்லாமல் மனிதனின் முகவரியை சொல்ல முடியாது.

LinkWithin

Blog Widget by LinkWithin