திங்கள், ஜூலை 24, 2006

நாகரிகமான ரெக்கார்ட் டான்ஸ் ?




இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தியச் சினிமா நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகள் தினமும் காட்சிகள் போல நடைபெறத் துவங்கிவிட்டன. தமிழ்நாட்டில் கமல், ரஜினி, சரத்குமார், விஜய், பிரசாந்த், குஷ்பு, தேவயானி, ரம்யா கிருஷ்ணன், நக்மா, ரோஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹரிஹரன், எஸ்.பி. பாலசுப்ரமணியம் என அனைத்துத் தரப்புக் கலைஞர்களும் வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்று பார்த்தால், அபஸ்வரம் ராம்ஜி, எஸ்.வி. ரமணன், தியாகராஜன் (பிரசாந்த்), கங்கை அமரன், இசையமைப்பாளர்கள் தேவா, சின்னி ஜெயந்த் ஆகியோரைச் சொல்லலாம். கடந்த ஆண்டில் இந்தியாவில் ஷாரூக்கான், சல்மான்கான், தபு, அனில் கபூர் உள்ளிட்ட பலர் ஐரோப்பிய நாடுகளில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

கேரளத்திலிருந்து பாசில் தலைமையில் ஒரு குழு துபாய்க்குப் படையெடுத்தது. ஆந்திர நடிகர்களும் கலை நிகழ்ச்சிகள் மூலம் காசு கொழிக்கிறார்கள். ''இந்தக் கலைநிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் பணமும் புகழும்தான்.... நடிகர்களின் இந்த ஆர்வத்துக்குக் காரணம்'' என்கிறார் அபஸ்வரம் ராம்ஜி. வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகள் குறித்து அவரிடம் பேசியதிலிருந்து : ''இந்தி நடிகர்கள்தான் இதைப் பிரமாதமாய்ப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஷாரூக்கான் இப்போது நம்பர் ஒன் நடிகர். பிஸியாக -ருக்கிறார். ஆனால் அவர் கலந்து கொள்ளாத கலை நிகழ்ச்சிகள் மிகவும் குறைவு. (வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சியில் பல கோடிகள் சம்பாதித்திருப்பதாக அவர் வீட்டில் சோதனை நடந்திருக்கிறது.) விளம்பரப் படங்களிலும் நடிக்கிறார். இங்கிருப்பவர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைக் கெளரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள். பிரபுதேவா 'பீக்'கில் இருந்தபோது உலகத் தமிழர்கள் பலரும் அவருடைய கலை நிகழ்ச்சிக்காகப் போட்டி போட்டார்கள். ஆனால் அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

இப்போது அஜீத்தின் நேரம். அவரும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆனா 'பீக்' ல இருக்கிற நடிகர்களைத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள். இந்த விஷயத்தில் பிரசாந்த் இதை நல்லா பயன்படுத்திக்கிறார். அவர் செய்வதுதான் சரி. நான் முதன்முதலாக 77'ல ஸ்டார் நைட் நடத்த ஆரம்பிச்சேன். அப்ப ஜெய்சங்கர்தான் எங்க நிகழ்ச்சியின் சென்டர் பிகர். அதுக்கப்புறம் 60-70 வெளிநாட்டுக் கலைநிகழ்ச்சிகள் நடத்தியிருக்கேன். நடிகர்-நடிகைகளை மையமா வெச்சு நிகழ்ச்சிகளை நடத்தறது இன்னொரு வகை. நாங்க நடத்தினதிலேயே அதிக கேட் கலெக்ஷன்னு சொன்னா அது சிங்கப்பூர்ல கமல் தலைமையில் நடந்த நிகழ்ச்சிதான். ஒரு கோடியே 14 லட்சம் கலெக்ஷன் ஆச்சு. இதே மாதிரி ரஜினியை வெச்சு என் அண்ணன் எஸ்.வி. ரமணன் லண்டன்ல நடத்தின நிகழ்ச்சியும் மிகப் பெரிய கலெக்ஷனைத் தந்தது. வெளிநாட்டு ஜனங்க கடந்த 10 வருஷமா கேட்டுக்கிட்டு இருக்கிற ஆர்ட்டிஸ்ட்னா அது கவுண்டமணி, செந்தில். ரெண்டு பேரும் சேர்ந்து நிகழ்ச்சி நடத்த சம்மதிச்சா அதுக்குப் பெரிய வரவேற்பு இருக்கும்!'' என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரு 'க்ளு' கொடுக்கிறார் ராம்ஜி.

'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள நினைக்காதது ஏன்?' அஜீத்திடம் கேட்டோ ம். ''என்னுடைய லட்சியமெல்லாம் சினிமா, சினிமா, சினிமாதான். விளம்பரப் படங்களில் நடிப்பது, வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சி என்று கவனத்தைத் திருப்ப விரும்பவில்லை. மற்றவர்களுக்கு நேரம் எப்படியோ. எனக்கு அடுத்த ஆண்டு வரை எந்த நிகழ்ச்சிக்கும் தேதி தர முடியாத அளவுக்கு 'டைட்' ஆக இருக்கிறது. நான் கூச்ச சுபாவம் உள்ளவன். மேடையில் தோன்றி நடிப்பதோ, நடனம் ஆடுவதோ என்னால் ஒருபோதும் முடியவே முடியாது. கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்'' என்று காரணங்களை அடுக்கினார் அஜீத். ''வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவது பணம், புகழுக்காக மட்டுமல்ல. கடல் கடந்து பரவியிருக்கும் தமிழர்களுக்கு கலைஞர்கள் தரும் மன திருப்தி'' என்கிறார் தொடர்ந்து வெளிநாட்டுக் கலைநிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வரும் தியாகராஜன். ''வடநாட்டில் இருந்து செல்லும் நடிகர்களாகட்டும், தென்னிந்தியாவில் இருந்து கலை நிகழ்ச்சி நடத்தச் செல்லும் நடிகர்களாகட்டும் யாரும் இந்தியக் கலையை அங்கு அறிமுகப்படுத்தியதாகத் தெரியவில்லை. வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சி என்பது ஃப்ளைட் ஏறிப் போய் நடத்தப்படும் நாகரிகமான ரெக்கார்ட் டான்ஸ்'' என்கிறார் கலைநிகழ்ச்சிகளில் விருப்பமில்லாத ஒரு நடிகர்.

-தமிழ்மகன்

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin