திங்கள், ஜூலை 24, 2006

படிக்காவிட்டால் போதுமா?


சினிமாவில் சில விஷயங்கள் தொடர்ந்து பழக்கப்படுத்தப்பட்டு வருகின்றன. 'உச்' கொட்டினால் நாய்கள் இரண்டு முன்னங்கால்களையும் தூக்கிக் கொண்டு நிற்பதைப் போன்றோ, குரங்குகள் 'ஆட்றா ராமா' என்று பிரம்பைக் காட்டினால் ஆடுவது போலவும் ரசிகர்களை ஒருவகைப் பழக்கத்துக்கு ஆட்படுத்தி வைத்திருக்கிறார்கள், சினிமா துறையினர்.
பல சமயங்களில் சமூகம் பழக்கப்படுத்தி வைத்திருக்கும் நடைமுறைகளுக்கும் (அல்லது சமூகத்தில் நடைமுறையில் இருக்கும் பழக்கங்களுக்கும்) இதற்கும் இமாலய வித்தியாசமிருக்கும். குறிப்பாகக் கல்வி என்பது குறித்து சினிமாவில் சித்திரித்து வரும் வேடிக்கைகள் வேதனையானவை. படித்தவனை அயோக்கியனாகச் சித்தரிப்பது தமிழ் சினிமாவின் வாடிக்கை. 'படிக்காத மேதை' என்று பெயர் வைப்பார்கள். படிக்காதவன் கள்ளம் கபடமற்றவன் என்பது அவர்களின் தீர்மானம்.

கர்மவீரர் காமராஜர் படிக்காத மேதையாக இருந்ததற்காக படிக்காமல் இருப்பதை ஒரு தகுதியாக்கிவிட முடியுமா? அதை காமராஜர்தான் விரும்புவாரா? அப்படி விரும்பியிருந்தால் 14 ஆயிரம் பள்ளிக்கூடங்களைத் திறந்திருப்பாரா? படித்தால் மட்டும் போதுமா? என்ற சந்தேகமும் சினிமாகாரர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. படிக்காதவன் வெகுளியாக எல்லா துன்பங்களையும் ஏற்றுக் கொள்வான், தியாகத் திருவுறுவாக இருப்பான். படித்த அவனுடைய அண்ணனோ இல்லாத தில்லுமுல்லு வேலைகளையும் செய்வான். தன் சுயநலத்துக்காகச் சுற்றயிருப்பவர்களை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் வஞ்சிப்பான்.

மேலை நாடுகளில் படித்துவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பும் 'ரத்தக் கண்ணீர்' எம்.ஆர். ராதா பெற்ற தாயை எட்டி உதைப்பார். காமுகனாக கண்டவளோடு சுற்றுவார். சிகரெட் பிடிப்பார். பெரும்பாலும் வில்லன்கள் எல்லோரும் படித்தவர்களாக இருப்பது சினிமாவில் வலியுறுத்தப்பட்டு வரும் நடைமுறை. நம்பியாரும் அசோகனும் எம்.ஆர். ராதாவும் கோட்டு சூட்டு போட்டபடி சதிவேலைகளில் ஈடுபட்டு வந்திருப்பதை உணரமுடியும். படித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று வாதிடுவதல்ல நமது நோக்கம். எழுத்தறிந்தவர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்படும் நமது நாட்டில் கல்வியின் மேன்மையை வலியுறுத்தும்படியான படங்களைவிட இத்தகைய படங்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டத்தான் இந்தக் கட்டுரை.

பாரதிராஜா வந்தார். கிராமத்துப் பெண்ணை ஏமாற்றும் காமுகனாக ஒரு மருத்துவரைச் சித்திரித்தார். சமீபத்தில் வெளியான 'கடல்பூக்கள்' படத்திலும் ஒரு மீன் ஆராய்ச்சி மாணவனால் ஒரு குப்பத்துப் பெண் ஏமாற்றப்படுகிறாள். பாரதிராஜாவுக்குப் படித்தவர்களைக் கெட்டவர்களாகக் காட்ட வேண்டும் என்கிற நோக்கமில்லை. ஆனால் சினிமாவை சினிமா பார்த்ததன் மூலமாகவே உருவாக்குவதால் நிகழ்ந்த விபத்து இது.

-- தமிழ்மகன்

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin