சனி, நவம்பர் 10, 2007

திருவாளர் 50%... திருமதி 50%...









ஸ்ரீதர் இயக்கிய "தென்றலே என்னைத் தொடு' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெயஸ்ரீ. தொடர்ந்து "திருமதி ஒரு வெகுமதி', "தாலிதானம்' போன்ற குடும்பப்பாங்கான படங்களில் நடித்ததாலோ என்னவோ இப்போது குடும்பப் பாங்கான நிகழ்ச்சி நடத்தும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். சன் டி.வி.யின் திருவாளர் - திருமதி நிகழ்ச்சியை இவர் சமாளிப்பதே அலாதிதான். தம்பதியருக்கு அன்புச் சவால்விடுவதும் பின்பு அவர்களை கண்ட்ரோலுக்குக் கொண்டு வருவதும் இவருடைய ஸ்பெஷாலிட்டி.
இத்தனைக்கும் இவர் அமெரிக்காவில் இருந்து வந்து திருவாளர்- திருமதிகளைக் கலாய்த்துவிட்டுச் செல்கிறார் என்றால் யாராவது நம்புவார்களா?






26 -வது எபிசோட் நிகழ்ச்சியை நடத்தித் தருவதற்காகச் சென்னை வந்திருந்த அவரை மடக்கிக் கலாய்த்தோம்.

இங்கிருக்கும் தம்பதிகளைக் கலாய்ப்பதற்கு அமெரிக்காவில் இருக்கும் இருக்கும் உங்களைத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம்?

நான் அமெரிக்கா போய் 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளாக யாராவது வெளிநாட்டில் இருந்தால் இங்கே மறந்தே போயிருப்பார்கள். ஆனாலும் நான் இங்கேயே இருப்பதைப் போல ஒரு தோரணையை உருவாக்கி வந்திருக்கிறேன். அதுதான் இந்த நிகழ்ச்சி எனக்குக் கிடைப்பதற்குக் காரணம். ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் இங்கே மீடியாவுக்குத் தெரிகிறமாதிரி ஏதாவது செய்துவிட்டுச் செல்வதுதான் அதற்குக் காரணம். ஒருமுறை வந்தபோது கே.எஸ். ரவிகுமார் இயக்கிய "பிஸ்தா' படத்தில் நக்மாவின் அக்காவாக நடித்தேன். அடுத்தமுறை வந்தபோது ராமராஜன் இயக்கிய "விவசாயி மகன்' படத்தில் தேவயானியின் அக்காவாக நடித்துவிட்டுச் சென்றேன். இங்கேயே இருந்து கொண்டு படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிற மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறேன். ராதிகாதான் அதிரடியாக இந்த வேலையைக் கொடுத்து நிரந்தரமாக திரையில் தோன்ற வழி செய்தார்.

நான் அமெரிக்காவில் இருக்கும்போதும் ராதிகா, சுஹாசினி போன்றவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். ராடான் டி.வி.க்காக ராதிகா தயாரித்த இந்த நிகழ்ச்சிக்கு நான் பொருத்தமானவளாக இருப்பேன் என்று முடிவெடுத்து என்னை அழைத்தார். ஒவ்வொருமுறை இந்தியா வரும்போதும் அடுத்த சில வாரங்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து விடுகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்தால் போதும், தேவையான நிகழ்ச்சிகள் ரெடி!.

என்னுடைய இரண்டு மகன்களும் குழந்தைகளாக இருந்தபோது அடிக்கடி வரமுடியாத சூழ்நிலை இருந்தது. இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். பெரியவனுக்கு 13 வயது ஆகிவிட்டது. (அட, அவ்வளவு பெரிய பையனா?) இனிமேல் அடிக்கடி வந்து போகமுடியும் என்பதால் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன்.

இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின்போது, இது நிகழ்ச்சி என்பதையும் மறந்து தம்பதிகளை எல்லைமீறிப் போகும்படி செய்கிறீர்களே நியாயமா?

நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே அதுதானே? அப்படி எல்லை மீறுகிறவர்கள் சுவாரஸ்யம் கருதி அதைப் புரிந்தே செய்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். நிகழ்ச்சி நன்றாக வருவதற்குக் கலந்து கொள்பவர்களின் "இன்வால்வ்மெண்ட்' முக்கியமாக இருக்கிறது.

கணவன் மனைவி பிரச்சினை என்பது பேசித் தீர்த்துக் கொள்ளக்கூடியதுதான் என்பதே இதன் அடிநாதமான அம்சம். பிரச்சினைகளைப் பேசாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்திருப்பதால் அது தீர்ந்து விடப்போவதில்லை. பேசுங்கள்... சண்டையிடுங்கள்... இறுதியில் முடிவுக்கு வாருங்கள்... என்பதே எங்கள் நிகழ்ச்சியின் நோக்கம்.

வெளியிடங்களில் உங்களைச் சந்திக்கிற தம்பதிகளிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவம் ஏதாவது உண்டா?

தம்பதியரைச் சிக்கலில் மாட்டிவிட்டு ரசிப்பது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அப்பாவும்- அம்மாவும் மாட்டிக் கொண்டு முழிப்பது குழந்தைகளுக்குத் தமாஷாக இருக்கிறதோ, என்னவோ? பாஸ்டன் நகரில் நாங்கள் ஒரு ஹோட்டலில் பிட்ஸô சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது எங்களுக்கு அருகே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஓர் இந்தியக் குடும்பத்தில் இருந்து ஒரு சிறுமி என்னிடம் வந்து திருவாளர் நிகழ்ச்சியைப் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டாள். எங்கள் வீட்டுக்கருகே எனக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. அப்படி அவர்கள் புகழும்போது என்னுடைய பெரிய மகனின் ரியாக்ஷனைப் பார்க்க வேண்டுமே... "இதெல்லாம் ரொம்ப ஓவர்' என்பதுபோல கண்ணை மேலே உருட்டி பாவனை காட்டுவான். சின்னவனுக்கு அம்மாவை எல்லோரும் பாராட்டுவது ஆச்சர்யமாக இருக்கும். "எப்படிம்மா உன்னை எல்லாருக்கும் தெரியுது?' என்று ஆச்சரியமாகக் கேட்கிறான்.

அது சரி... இன்னும் "உங்கள்' திருவாளர் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?






என் கணவர் பெயர் சந்திரசேகர். இப்படி நிகழ்ச்சியெல்லாம் நடத்த அனுமதித்திருப்பதிலிருந்தே அவர் எனக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவர் சிலிகான் வேலியில் வங்கி அதிகாரியாக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு நான் பொழுதுபோகாமல் இருப்பதைப் பார்த்து என்னை சாஃப்ட்வேர் படிக்க வைத்து அங்கு பணியாற்றவும் உதவினார். திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு படித்து வேலைக்குப் போனேன். எனக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார். குடும்பப் பிரச்சினைகளில் இருவரும் சேர்ந்தே முடிவுகள் எடுக்கிறோம். ஆண்டுதோறும் வெளிநாட்டுச் சுற்றுலா செல்வோம். அதற்குத் தடையில்லாதவாறு என்னுடைய நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்ள சொல்வதுதான் அவருடைய ஒரே கண்டிஷன். குடும்பத்தில் திருவாளர், திருமதி இருவரும் 50% 50% ஆக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பம் 100% மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்தியத் தம்பதிகள் } அமெரிக்கத் தம்பதிகள் உங்கள் பார்வையில்?

குடும்பங்கள் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கின்றன. அங்கேயும் மாமியார் சண்டை, நாத்தனார் சண்டை இருக்கிறது. ஒரே வித்தியாசம் அங்கே ஆங்கிலத்தில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். சமயங்களில் 'தேங்க்ஸ் கிவ்விங் ஃபங்ஷன்' சண்டைக்கான ஒரு காரணமாக அமைந்துவிடும்.

அது என்ன தேங்க்ஸ் கிவ்விங் ஃபங்ஷன்?

அமெரிக்கர்களுக்கு கிருஸ்துமஸ்ஸýம் தாங்க்ஸ் கிவ்விங்கும் முக்கியமான விழாக்கள். கிருஸ்துமஸ் டிசம்பரில் வரும் அதற்கு முந்தைய மாதத்தில் அதாவது நவம்பர் கடைசி வியாழக்கிழமை நன்றி தெரிவிக்கும் விழா.

அமெரிக்காவில் வாழ்பவர்களுக்குச் செவ்விந்தியர்கள் அளித்த விழா இது. சோளத்தையும் வான்கோழியையும் விருந்துக்குப் பயன்படுத்துவார்கள். யாருக்கு நன்றி சொல்லி கெüரவிக்க நினைக்கிறோமோ அவர்கள் வீட்டுக்குச் சென்று இப்படி விருந்தளிக்க வேண்டும். இப்போதும் அமெரிக்கப் பெண்மணிகள் இந்த வருஷம் தேங்க்ஸ் கிவ்விங் எங்கள் பெற்றோருக்குத்தான் என்பார்கள். ஆண்கள் தங்கள் பெற்றோர் வீட்டுக்குத்தான் போக வேண்டும் என்பார்கள். நன்றி சொல்வதற்கு அவர்களுக்குள் போராட்டமே வெடிக்கும்.

திருமதி ஒரு வெகுமதி.... திருவாளர் திருமதி ஒப்பிட முடியுமா?

அது சினிமா.... இது டி.வி. அங்கு என்னை இயக்கினார்கள். இங்கு நான் இயக்குகிறேன். சினிமா கொஞ்சநாள் கழித்து டி.வி.க்கு வந்து விடுகிறது. டி.வி. நிகழ்ச்சிகள் சினிமாவில் வருவதற்கு வாய்ப்பில்லை.

தமிழ்மகன்

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin