சனி, நவம்பர் 10, 2007

வீட்டில் இருந்தே விண்வெளி ஆய்வு!





விஞ்ஞானம் பல அறிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானம் படித்த அறிஞர்களால் இன்றியும் நிகழ்த்தியிருக்கிறது. டைனமோ கண்டுபிடித்த மைக்கேல் ஃபேரடே, மரபியல் சோதனைகளை நிகழ்த்திய கிரிகெர் மென்டல் தங்கள் கல்லூரிகளில் அதற்கான விஞ்ஞானப் படிப்புகளைப் படிக்காமல் விஞ்ஞானிகள் என்று போற்றப்படுகிறவர்கள். சென்னை பாடியில் ஆதம் ஆரம்பப் பள்ளிக் கூடம் நடத்திவரும் ஜெகநாதன் பெனலன் அப்படிப்பட்ட ஒருவர்தான்.

""நான் ஒரு விசித்திரப் பிறவி. பகலெல்லாம் தூங்கி இரவில் கண்விழித்துக் கிடப்பேன். மண்ணுலகைவிட விண்ணுலகம்தான் எனக்கு அதிக பரிச்சயம்.

இருபது ஆண்டுகளாக என் அறையைப் பகிர்ந்து கொள்வது புத்தகங்கள்தான்'' என்று அவர் படுக்கையில் இறைந்து கிடக்கும் புத்தகங்களைக் காட்டுகிறார். விண்வெளி சம்பந்தமான ஆய்வறிக்கைகள், சஞ்சிகைகள், கார்ல்சேகன் புத்தகங்கள் என்று பாதியிடத்தைப் புத்தகங்கள் அடைத்துக் கொண்டிருக்கின்றன. இயல்பாக நமக்குள் கேள்வி பிறக்கிறது.

எப்படி உங்களுக்கு விண்வெளி ஆய்வில் ஈடுபாடு ஏற்பட்டது?

நான் பிறந்து ஒன்றரை வயதில் என் தாயார் இறந்து விட்டார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தேன். அம்மாவைக் கேட்டு அழும்போதெல்லாம் பாட்டி நிலாவைக் காட்டி "உங்க அம்மா அங்கதான் இருக்கா வந்துடுவா' என்பார். எனக்கு நிலாமீது மெல்ல மெல்ல ஈர்ப்பு ஏற்பட்டது. வானம் என்னுள் எல்லையற்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

யாருமற்ற நான், என் சொந்த அக்கா வீட்டில் தங்கிப் படித்தேன். பாலிடெக்னிக் படிப்பை முடித்துவிட்டு என் மைத்துனர் காமாட்ஷி, புலவர் குழந்தை, மன்னை நாராயணசாமி ஆகியோர் பழக்கத்தில் கலைஞரின் "பரப்பிரம்மம்' நாடகத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் பள்ளிப்பருவம் முடித்த இளைஞனாக இருந்தேன். அந்த நாடகத்தை 40 முறைக்கு மேல் நடத்தியிருக்கிறேன். சிவாஜி, கலைஞர் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். அது ஒரு கட்டம். பின்னர் வாழ்க்கை என்னைத் துரத்தியது. என் பாலிடெக்னிக் படிப்பை ஒட்டி பாடியில் தொழில்துறையில் இறங்கினேன். நிறைய சம்பாதித்திருக்க முடியும் என்றாலும் என் மனம் தொடர்ந்து அமைதியையும் விண்வெளியையும் நாடிக் கொண்டிருந்தது. பள்ளிக் கூடம் ஒன்று துவங்கி அதை என் மனைவியின் பொறுப்பில் விட்டுவிட்டு முழுநேர விண்வெளி ஆய்வில் இறங்கினேன்.

வீட்டில் இருந்தபடியே ஆய்வு செய்கிறீர்களா? இது எந்த வகையில் பயனளிக்கிறது?

வீட்டில் இருந்தே விண்வெளியைப் பார்ப்பதற்கான சகல வசதிகளையும் வைத்திருக்கிறேன். இவற்றைப் பாடியில் இன்டஸ்ட்ரி வைத்திருக்கும் பலர் எனக்கு ஸ்பான்ஸர் செய்திருக்கிறார்கள். என்னைப் போன்றவர்கள் சேர்ந்து "டேன் அஸ்ட்ரானமி அúஸôசியேசன்' நடத்தி வருகிறோம். அப்துல் கலாம், மு. அனந்தகிருஷ்ணன், முன்னாள் தமிழக அரசு செயலர் டி.வி. வெங்கடராமன் போன்ற பலர் எங்களுக்குப் பெரிய ஆதரவளித்துப் போற்றியிருக்கிறார்கள். நான் அந்த அமைப்பின் ஃபவுண்டர்

செகரட்டரி.

இதனால் இந்தியா முழுக்க இருக்கும் ஸ்பேஸ் அப்ஸர்வேட்டரியிடம் நல்ல தொடர்பு ஏற்பட்டது. வடமூலையில் இருக்கும் ஒருவரின் பார்வைக்குக் கிட்டாத ஒரு நட்சத்திரத்தைத் தென்பகுதியில் பார்க்க முடியும். அந்த மாதிரி சமயங்களில் அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் ஆராய விரும்பும் கோள்களையோ, நட்சத்திரத்தையோ எங்களை அப்ஸர்வ் செய்யச் சொல்லுவார்கள். எங்களுக்குத் தேவையானபோது அவர்களிடம் செல்வோம்.

உங்கள் அமைப்பின் வேறு செயல்பாடுகள் என்ன?

அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடைக்கானலில் இருக்கும் ஸ்பேஸ் அப்ஸர்வேட்டரி, பிர்லா கோளரங்கம் போன்ற இடங்களிலும் ஆய்வுக்குக் குழுவாகச் செல்வோம். என்னுடைய கட்டுரைகள் பல பிர்லா கோளரங்கத்தின் பிரைவேட் சர்குலேஷன் இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உதகையில் மலைச் சிகரங்களில் கூடாரம் அமைத்தும் ஆய்வுகள் மேற்கொள்வோம்.

லண்டனில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலும் எங்கள் அமைப்பைப் பதிவு செய்து வைத்திருக்கிறோம். எங்கள் கட்டுரைகள் தான். "தீஸிஸ்' வகையைச் சார்ந்தவை அல்ல. விஞ்ஞானிகளின் கட்டுரைகள் தீஸிஸ் எனப்படும். எங்களைப் போன்றோர் ஆய்வுகளை "ஹைபாதீஸிஸ்' வகை கட்டுரைகள் என்பார்கள்.

உங்களுடைய கட்டுரை களுக்குக் கிடைத்த வரவேற்பு ஏதாவது?

சூரியனிலிருந்து ஏராளமான நியூட்ரினோக்கள் வெளியாகின்றன. ஆனால் அவை பூமியை வந்தடைவதில்லை. என்னுடைய ஆய்வுக் கட்டுரை ஒன்றில் அவை பூமிக்கு நியூட்ரினோக்களாக வருவதில்லையே தவிர, அவை வேறு வடிவங்களாக இங்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன என்று எழுதியிருந்தேன். பென்சில்வேனியாவைச் சேர்ந்த டாக்டர் ராம்னட் டேவிஸ் என்ற விஞ்ஞானி அதே ஆய்வைச் செய்து, நியூட்ரினோக்கள், தாவோ நியூட்ரினோவாகவும் மூவி நியூட்ரினோவாகவும் உருமாறி பூமிக்கு வருவதாகச் சொன்னார். அவருக்கு 2006 ஆம் ஆண்டின் நோபல் பரிசு கிடைத்தது. இது என்னுடைய ஆய்வுக்குக் கிடைத்தப் பெருமையாக நினைக்கிறேன்.

இத் துறையில் நீங்கள் வியக்கும் இந்திய விஞ்ஞானிகள்...?

நிறைய இருக்கிறார்கள். ஆனால் மறக்கப்பட்டுவிட்ட விஞ்ஞானிகளைப் பற்றித்தான். என்னுடைய கவலை. 1921- ஆம் ஆண்டில் கொடைக்கானல் அப்ஸர்வேட்டரியில் தன் ஐந்தாண்டுகால ஆய்வுக்குப் பின் ஏ.ஏ.நாராயண ஐயர் என்ற விஞ்ஞானி வீனஸ் கிரகம் எதிர் கடிகாரச் சுற்றாகச் சுழல்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்.

அது வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்களால் சிலாகிக்கப்பட்டு அவர்களின் பதிவேட்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இதுவரை யாராலும் எடுத்துச் சொல்லப்படவில்லை. "அஸ்ட்ரானமி இன் இந்தியா' என்ற நூலிலும் விடுபட்டுள்ளது. இந்நூல் புதுதில்லியில் உள்ள "இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாடமி' வெளியிட்ட ஆவணநூலாகும்.வீனஸ் கிரகம் இடப்பக்கம் சுழல்வதை 1963-க்குப் பிறகு அங்குச் செயற்கைகோள்கள் அனுப்பிய பிறகுதான் அறிவித்தார்கள். இந்தப் பேட்டியின் மூலம் மறந்துபோன அந்த சாதனை வெளி உலகத்துக்குத் தெரிந்தால் அதுவே போதும்.

உங்கள் ஆய்வு மையத்தில் பொது மக்களை அனுமதிக்கிறீர்களா?

ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு எட்டுமணியிலிருந்து பத்துமணிவரை மக்களை அனுமதிக்கிறேன். இது தவிர "அஸ்ட்ரானமி ஆன் வீல்ஸ்' என்ற பெயரில் எனது ஆய்வுச் சாலையை தமிழகம் முழுதும் கொண்டு செல்ல இருக்கிறேன். அதை செப்டம்பரில் அப்துல்கலாம் துவங்கி வைக்க ஏற்பாடு செய்து வருகிறேன்.

தமிழ்மகன்

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin