வெள்ளி, நவம்பர் 09, 2007

மெட்ராஸ் டூ அயோவா!
ஆசியாவிலேயே சினிமா ஸ்டூடியோக்கள் மிக அதிக அளவில் இருந்த இடம் சென்னை என்றால் ஆச்சர்யமாக இருக்கும். ஏறத்தாழ 20 ஸ்டூடியோக்கள் சின்னதும் பெரிதுமாக சென்னையில் இருந்தன. இப்போது இரண்டு, மூன்று ஸ்டூடியோக்கள் தவிர மற்றவை எல்லாம் அப்பார்ட்மென்டுகளாகவும் கொடோவுன்களாகவும் மாறிவிட்டன. சினிமாவில் பிரமாண்டங் களைக் காண்பித்துவிட்டு நிஜத்தில் காணாமல் போன அந்த ஸ்டூடியோக்களைப் பற்றி ஆய்வு செய்துவருகிறார் அமெரிக்கப் பேராசிரியர் சொர்ணவேல். ஒருமாத பயணமாகச் சென்னை வந்திருக்கும் அவரைச் சந்தித்தோம்.

உங்களைப் பற்றியும் உங்கள் ஆய்வைப் பற்றியும் சில வார்த்தைகள்...?

நான் "அயோவா பல்கலை'யில் ஃபிலிம் ஸ்டடீஸ் டிப்பார்ட்மென்டில் பேராசிரியர். சிகாகோவிலிருந்து 3 மணி நேர தூரத்தில் எங்கள் பல்கலை அமைந்திருக்கிறது. நான் திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவன். பூனாவில் டி.எஃப்.டி. முடித்தேன். சிலகாலம் டைரக்டர் சேகர்கபூரிடம் பணியாற்றினேன். கடந்த ஆறு ஆண்டுகளாக அயோவா பல்கலையில் பணியாற்றுகிறேன்.

நீங்கள் இப்போது செய்துவரும் ஆய்வு எத்தகையது? அதற்கு என்ன அவசியம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

"தி மெட்ராஸ் ஸ்டூடியோ சிஸ்டம்' என்பது என் ஆய்வின் தலைப்பு. மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையில் இங்கு ஸ்டூடியோக்கள் இயங்கின. ஆனால் அவை இருந்ததற்கான தடயங்களைக்கூட இப்போது பெற முடியாத நிலை. அவை பற்றிய சரியான புத்தகங்களும் இல்லை. அப்போது கோல்டன் ஸ்டூடியோ மிகப் பெரிய ஸ்டூடியோவாக இயங்கி வந்தது. ஆனால் அந்த இடத்தில் இப்போது அந்த ஸ்டூடியோ ஃப்ளோர்கள் கொடவுன்களாக இருக்கின்றன. அங்கு விசாரிக்கச் சென்றால் "இங்கே ஸ்டூடியோ இருந்ததா' என்று நம்மையே ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள். உலக சினிமாவோடு போட்டி போட்டு வியாபாரம் செய்யும் நிலைக்கு தமிழ் சினிமா உயர்ந்திருந்தாலும் நம் சினிமாவுக்கான சரித்திரம் ஆதாரம் போதுமானதாக இல்லை. அதேசமயம் இந்தி பட உலகுக்கு சரித்திர சான்றுகள் உள்ளன. எங்கள் பல்கலையிலேயே இந்தி திரையுலகம் சம்பந்தமான புத்தகங்களை எங்கள் பல்கலையே பிரசுரித்திருக்கிறது. தமிழில் அத்தகைய நிலை உருவாக வேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்த ஆய்வு.

இந்த ஸ்டூடியோக்களின் அரிய சாதனைகள் என்று நீங்கள் கருதும் சில அம்சங்கள்?

ஏவி.எம்.ஸ்டூடியோ புத்தகங்களாக சில சம்பவங்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறது. ட்ராலி இல்லாத நேரத்தில் ரயில் தண்டவாளங்களைப் பயன்படுத்தி மெய்யப்பச் செட்டியார் படப்பிடிப்பில் புதுமைச் செய்திருக்கிறார். எஸ்.எஸ். வாசன் பிரம்மாண்டமான செட்டுகளால் பிரமிக்க வைத்தார். "சந்திரலேகா' ஆங்கிலப் படங்களுக்கு நிகராக தயாரான படம். மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் ஆங்கிலப் படங்களைத் தழுவி பல படங்களை உருவாக்கினார். வாகினி, பிரசாத் ஸ்டூடியோக்கள் பிரம்மாண்டமான ஃப்ளோர்களை வைத்திருந்தார்கள். இந்தி படக்குழுவினர் எல்லாம் இந்த பெரிய தளங்களுக்காகவே இங்கு வந்து படம் எடுத்திருக்கிறார்கள். பட்ஷிராஜாவின் "மலைக்கள்ளன்' தமிழிலும் பிறகு இந்தியிலும் தயாரான படம். திலிப் குமார், மீனா குமாரி போன்ற அந்நாளைய பெரிய நட்சத்திரங்களை வைத்து சென்னையில் உருவாக்கப்பட்ட படம். அரங்குகள் அதை வடிவமைத்த விதம், அங்கு படமாக்கப்பட்ட விதம் என்று என் ஆய்வில் முக்கிய பகுதிகள் உண்டு.

தமிழ் திரையுலகம் குறித்து ஆங்கிலத்தில் பெரிய அளவில் புத்தகங்கள் வெளிவராதது முக்கிய குறையாக இருக்கிறதா?

பெரிய சாதனைகளைச் செய்துவிட்டு அதை வெளியே தெரிவிக்காமல் இருக்கிறோம். அதுதான் குறை. நம்மைவிட குறைவாகச் சாதனை செய்தவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு. தியோடர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் நூல் எழுதியிருக்கிறார். வெங்கட் சாமிநாதன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி போன்றோர் விமர்சன கட்டுரை வடிவில் சில நூல்கள் தந்திருக்கிறார்கள். அறந்தை நாராயணன், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், ராண்டார்கை போன்றோர் தகவல் திரட்டு வடிவத்தில் நூல்கள் தந்திருக்கிறார்கள். எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஹரிகரன் போன்றவர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் முக்கியமானவை. "பராசக்தி' படத்தைப் பற்றி மட்டுமே எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஒரு நூல் எழுதியிருக்கிறார். இன்னும் சில நூல்களும் கிடைத்திருக்கின்றன. ஆயினும் இவை போதாது. முழு தமிழ் சினிமாவையும் பற்றிய போதுமான திரட்டாக இவற்றை மட்டும் சொல்ல முடியாது.

உங்கள் ஆய்வில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் காலகட்டம்?

1947-லிருந்து 1975 வரை. ஸ்டூடியோக்களின் பிரம்மாண்டமும் இந்தக் காலகட்டத்தில்தான் முழுவீச்சில் இருந்தது. அதன் பிறகு ஸ்டியோவிலிருந்து காமிராக்கள் வெளியே பிரயாணிக்கத் தொடங்கிவிட்டன. அதற்கு முக்கிய காரணம், சினிமா வண்ணத்தில் வெளியாக ஆரம்பித்தது. இன்னொரு காரணம் அதிக எடையுள்ள மிட்ச்சில் காமிராவிலிருந்து எடை குறைந்த ஹாரி காமிராக்கள் உருவானது. இது வெளியே கொண்டு செல்ல ஏதுவானது. பிறகு ஹாண்டி கேமிராக்கள் உருவாகின. இது மேலும் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு உதவியது. இதையெல்லாம்விட முக்கிய காரணம், சினிமாவில் உருவான புதிய அலை, புதிய கருத்தோட்டம், எதார்த்தவாதம், புதிய தொழில்நுட்பம் ஆகியவை. அதன்பிறகு அரங்குகள் என்பவை கனவுக் காட்சிகளுக்கானது என்று மாறிப்போனது.

உங்களுடைய பார்வையில் தமிழ்சினிமா பற்றி?

தொழில்நுட்ப ரீதியாக அதி முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். வி.சி. கணேசன் (சிவாஜி) அறிமுகமான "பராசக்தி' படத்தையும் அவர் பெயரில் ரஜினி நடித்திருக்கும் படத்தையும் ஏவி.எம். நிறுவனம் தயாரித்திருக்கிறது. அதிலும் ஹீரோ வெளிநாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார். இதிலும் ரஜினி வெளிநாட்டிலிருந்து வந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார். அதிலும் கல்யாணி என்ற கதாபாத்திரம் அப்பாவியாக இருக்கிறார். ஸ்ரேயாவும் ஜாதகப்படி திருமணம் செய்தால் கணவர் இறந்துவிடுவார் என்று நம்புபவராக, முடிவெடுக்க முடியாதவராக அழுகைப் பாத்திரமாக இருக்கிறார். அது திராவிடக் கொள்கை பேசியது. இது குளோபலைசேஷன் பேசுகிறது. சம்பவங்கள் வேறு, தொழில்நுட்பம் வேறு. யோசித்துப் பார்த்தால் அடிநாதமாக ஒரு ஃபார்முலா இதில் ஒளிந்திருப்பதைப் பார்க்கலாம். தமிழ் சினிமாவுக்கு தொட்டுத் தொடரும் ஒரு பாரம்பர்யம் இருப்பதைப் பார்க்கிறேன்.

தமிழ்மகன்

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin