ஞாயிறு, ஜூலை 27, 2008

மனக்குகை

தமிழ்மகன்


நினைவுக் குழப்பங்களில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார் சாமிக்கண்ணு. சங்கராச்சாரியார் கடவுள் இல்லை என்று பிரசங்கம் செய்ததாகக் கூறுவதும் போப் ஆண்டவர் கம்யூனிஸம்தான் சமுதாயத்துக்கு ஒரே தீர்வு என்று அறிக்கை வெளியிட்டதாகக் கூறுவதும் கடவுளை நம்பிக் கொண்டிருக்கும் உலக மக்களுக்கு எத்தகைய மன அதிர்ச்சியை ஏற்படுத்தும் சாமிக்கண்ணுவுக்கு ஓரளவுக்குப் புரிந்தது. "கடவுள் இல்லை என்பவர்களைவிட சதாநேரமும் அதையே நம்பி ஏமாந்து கொண்டிருப்பவர்களுக்குத்தான் கடவுள் என்று ஒன்று இல்லை என்று மிகத் துல்லியமாகத் தெரியும். ஆனால் ஒருபோதும் சங்கராச்சாரியும் போப்பும் அந்த உண்மையைச் சொல்வதே இல்லை. அப்படிச் சொல்லிவிட்டால் ஒரு நொடியில் உலகம் உருப்பட்டுவிடும்'' என்று தான்தோணி (அந்தோணி என்ற பெயரை அப்படி மாற்றிக் கொண்டவர்.) பேசும்போது உடம்பெல்லாம் சிலிர்த்துக் கைதட்டியவர்தான் சாமிக்கண்ணு. ஆனால் அந்த இரண்டுபேர் கடவுள் இல்லை என்று சொல்வதால் மக்கள் எப்படி நிலைகுலைந்து போவார்கள் என்று அஞ்சினார். இன்று நமக்கு ஏற்பட்ட நிலைதானே அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்ற கசப்பான உண்மையில் பரிதாபப்பட்டார்.

பெரியார் ரகசியமாக வெள்ளைப் பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தார் என்று ஒருவன் பிரசங்கம் செய்து கொண்டிருந்தான். அது ஒரு மதம் சார்ந்த அரசியல் கட்சியின் கூட்டம். அந்தக் கூட்டத்தில் பெரியார் குறித்து அப்படித்தான் பேசுவார்கள் என்பது அவர் அறிந்ததுதான். இந்த மாதிரி அத்தகையவர்கள் பேசும்போது 'எவனாவது வீட்டில் ரகசியமாக சாமி கும்பிட்டுக் கொண்டு 95 வயசுவரை சாமி கிடையாது பூதம் கிடையாது என்று சொல்லுவானா.. அப்படி ஆசையாக இருந்தால் ஆமாம்பா சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டேன் என்று தைரியமாகத் சொல்லிவிட்டுப் போகிறார். வீட்டில் ஒன்றும் வெளியில் ஒன்றும் செய்வதால் அவருக்கு என்ன லாபம்?' என்று பதிலடி கொடுத்துவிட்டு வேலை பார்த்தவர்தான். சாமிக்கண்ணு.

மனது ஊசலாடிக் கொண்டிருந்த ஒரு அதீத தருணத்தில் அவருடைய தத்துவக் கோட்டையை அந்தப் பேச்சு ஆட்டம் காண செய்துவிட்டது. பெண் ஏன் அடிமையானாள்?, ஆரியமாயை, சோதிடப் புரட்டு, பெரியார் சிந்தனைகள், பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டம், பெரியார் பெயரை உச்சரித்தபடி தீமிதித்து நாக்கில் வேல் குத்தி முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து எல்லாம் பார்த்தாகிவிட்டது. 15 வயதில் தேங்காய்க்குப் பிள்ளையார் உடைப்பதில் ஏற்பட்ட ஆர்வம் 50 வயசு வரைக்கும் வாழ்வின் சகல இடுக்குகளிலும் புகுந்து லட்சிய மனிதனாக நடைபோட வைத்தது. தாலி மறுப்பு- சாதி மறுப்புத் திருமணம் செய்து, சொந்த பந்தங்களுக்கு விரோதமாக செயல்பட்டார். வீட்டில் ஒரு தீபாவளி, அமாவாசை, கிருத்திகை, பெயர் ராசி, நல்ல நேரம் ராகுகாலம், முகூர்த்தம், பெற்றவர்களுக்குத் திதி, திவசம் எதுவும் கிடையாது. ஒரே மகள் ஓவியாவை பையனைப் போலத்தான் வளர்த்தார். கிராப் வெட்டி, சட்டை பேண்ட் போட்டு, விளையாட்டு வீராங்கனையாக வளர்த்தார். தடகள போட்டியில் மாநில அளவில் சாம்பியன். ஓவியா சக்தியின் வடிவம் - பராசக்தி, அடுத்த பி.டி. உஷா என்று தினமானியின் இலவச இணைப்பு வார சஞ்சிகையில் பாராட்டி எழுதியிருந்தார்கள்.

35 ஆண்டுகள் நாத்திக வெளியில் குங்குமம், விபூதி தீண்டாமல் வாழ்ந்த வாழ்க்கை. கையில் கறுப்புக் கயிறு, நெற்றியில் விபூதி என்று யாராவது எதிரில் தென்பட்டாலே ஒன்று அவன் அயோக்கியனாக இருக்க வேண்டும், இல்லையென்றால் உலகம் தெரியாத அப்பாவியாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்த சாமிக் கண்ணுவுக்கு இது இரண்டாம் பிறவி போல இருந்தது.

நேற்று கபாலிசுவரர் கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிடுகிற அளவுக்கு அவருக்கு ஒரு ஆவேசம் வந்ததுவிட்டது. கோயிலுக்கு அருகே செல்லும்போதே ஒரு அருவருப்பு ஏற்பட்டு பக்கத்துத் தெருவில் புகுந்து தப்பித்து வந்தவர் மாதிரி நின்றார். பிறன்மனை நோக்கியதுபோல் படபடவென்று அடித்துக் கொண்டது. வேறு திசையில் செயல்பட்டு யாராவது பார்த்துவிட்டிருப்பார்களோ என்று பயந்து போய் அங்கும் இங்கும் வெறித்தார். என்ன இருந்தாலும் கோவிலுக்குள் நுழைகிற தைரியம் தமக்கு எப்படி வந்ததென்று பதறினார்.

வாழ்வில் எப்போதும் ஏற்படாத இடர்.. ஒருவேளை பெரியாரே சாமி கும்பிட்டிருந்தால்? "என்னுடைய கருத்தைச் சொல்லிட்டேன். உங்க பகுத்தறிவைப் பயன்படுத்தி உங்களுக்கு எது சரீன்னு படுதோ அதன்படி வாழுங்க'' என்று வாழ்நாளெல்லாம் சொன்னவர் அவர் எப்படி... சேச்சே... ஒருவேளை வாழ்நாளெல்லாம் சொல்லிவிட்டதாலேயே அதிலிருந்து முரண்பட முடியாமல் போயிருக்குமோ அவருக்கு?

மனசு படபடவென அடித்துக் கொண்டது. தெருவெல்லாம் சுற்றிச் சுற்றி ஆயாசமாக அவர் வந்து நின்ற இடத்தில் ஒரு பிள்ளையார் கோவில். அதற்குப் பெயர் கோவிலா என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை. மூன்று தெரு கூடுகிற இடத்தில் தெருக் குத்தான இடத்தில் ஒரு பிள்ளையாரை நிறுவுவார்களே... பிளாட்பாரத்திலேயே ஒரு ஓரமாக.. அந்த வகைப் பிள்ளையார். தன் அம்மா மாதிரியே பெண் வேண்டும் என்று ஒவ்வொரு முச்சந்தியிலும் பிள்ளையார் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். 'இப்படி சொல்லி வெச்சு சைட் அடிக்கிற ஆசாமிய ஈவ் டீஸிங்ல உள்ள போட வேணாமா?' என்று கூட்டத்தில் கிண்டலடித்து யாரோ பேசிய போது குலுங்கிக் குலுங்கிச் சிரித்திருக்கிறார்.

நாமா அப்படிச் சிரித்தோம் என்று ஒரு நிமிடம் சந்தேகமாக இருந்தது. போன பிறவியில் சிரித்தது மாதிரி இருந்தது அவருக்கு. ஐயோ போன பிறவியா? மறுபடி பதறினார். அதுவும் நிஜமா? கடவுள் என ஒன்று இல்லாமலா எல்லாரும் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆதிகாலம் தொட்டு சாமி கும்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்கு ஒரு ஆதாரமுமா இல்லாமல் போகும். எல்லோருமா காட்டுமிராண்டிகள். ஒருவருமா சுயபுத்தி இல்லாதவர்கள்? பிள்ளையாரைப் பார்த்தார். உடைக்காமல் முதல் முறையாக உற்றுப் பார்த்தார். அவர் சாந்தமாக உட்கார்ந்திருந்தார். உலகையே ரட்சித்து போஷிக்கும் கடவுளா... எல்லாருக்கும் புரிந்தது நமக்கு மட்டும் புரியாமல் போய்விட்டதா?

கற்பூர வாசனையும் ஊதுபத்தி வாசனையும் அவருக்குத் தாங்க முடியாத நெடியாக இருந்தது. இது நாள் வரை அவ்வளவு பக்கத்தில் இந்த வாசத்தை நுகர்ந்ததில்லை. அறியாமையின் வீச்சமாக இருந்தது அது. இதையும் பக்தியின் பகுதியாக நினைக்க வேண்டும், பழக வேண்டும் என்றும் அடிமனதில் ஏதோ ஓர் ஆணை பிறந்தது. தானாக நினைத்தோமா, மனசில் வேறு யாரோ சொல்கிறார்களா? பிள்ளையாரின் முன்பாகவே வெகுநேரம் நின்றார். பார்வதி குளிக்கும்போது அழுக்கை உருட்டி காவலுக்கு செய்த உருவம்தான் பிள்ளையார் என்று பெரியார் திடலில் பேசக் கேட்டதும் ஒரு சேர ஞாபகம் வந்தது. யாரடா நீ புதியவன் என்று வெளியே போயிருந்த சிவபெருமான் பிள்ளையாரின் தலையைச் சீவிவிட்டாராம். அடடா இது நம் மனைவியின் அழுக்கில் உருவானவன் என்று தெரிந்து வேறோரு தலையைத் தேடித் திரிந்த போது எதிரே வந்த யானையின் தலையை வெட்டி பிள்ளையாருக்குச் சூட்டினாராம். இப்படி ஒரு கதை.

அயன்புரம் மணிவண்ணன் இந்தக் கதையைச் சொல்லிவிட்டுக் கேட்கிற சந்தேகங்கள்... ஒரு பெண்ணுக்கு எவ்வளவு நாள் குளிக்காமல் இருந்தால் இவ்வளவு அழுக்கு சேரும்? உலகத்தையே காத்து ரட்சிக்கிற கடவுளும்கூட மனிதனைப் போலவே குளிக்க வேண்டுமா? கடவுள் குளிப்பதை அவர் தயவு இல்லாமல் யார் வந்து வேடிக்கை பார்த்துவிட முடியும்? சிவபெருமான் என்ன வேலையாக வெளியே போய்விட்டு வந்தார்? ஏழெழு லோகத்தையும் அண்ட சராசரத்தையும் அளந்து கொண்டிருப்பவருக்கு தன் வீட்டில் இப்படி காவலுக்கு ஒரு பையன் உருவாக்கப்பட்ட விஷயம் தெரியாதா? குளியல் அறைக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னதற்காக ஒரு சிறுவனின் தலையை வெட்டி எறியக் கூடவர்தானா கடவுள்? மீண்டும் ஒட்டுவதென்றால் அதே தலையை ஒட்டித் தொலைக்க வேண்டியதுதானே? அதற்காக எதிரே வந்த ஒரு யானையைக் கொல்லுவது எத்தனை பெரிய குற்றம்? மனிதன் தலையும் யானையின் தலையும் சேருமா? இவ்வளவு முட்டாள்தனமான ஒரு காட்டுவாசிக்கதையை கம்யூட்டர் யுக மனிதன் நம்பலாமா? ஒரு கையில் சாப்ட்வேர் புரோகிராம், இன்னொரு கையில் களிமண் பிள்ளையார் எப்படிச் சாத்தியம்... திருந்துமா இந்த சமுதாயம்? நெத்தியடியாக கேள்விகள் போடுவார்.

ஒருவேளை மணிவண்ணன் சொன்ன இந்தக் கதையே பொய்யோ? விநாயகருக்கு நிஜமாகவே வேறு ஒரு சரித்திரம் இருக்குமா?

கடவுளுக்கு ஏது சரித்திரம்? அவர் சரித்திரத்துக்கு அப்பாற்பட்டவராக அல்லவா இருப்பார்? சரித்திரம் என்ன... மனிதன் பிறப்பதற்கு முன்னால் அல்லவா கடவுள் பிறந்திருப்பார்? மனிதர்கள் பிறப்பதற்கு முன்னால் கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார்? அவரைப் பற்றி யோசிக்கவோ அவருடைய இருப்பு பற்றிய புரிதல் கொள்ளவோ ஆள் இல்லாத இடத்தில் அவர் இருந்தார் என்பதற்கு என்ன பொருள்?

இன்னும் கிண்டல் போகவில்லையே? ஜீவாத்மா, பரமாத்மா, துவைதம், அத்வைதம் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் லட்சம் பாதையில் ஒன்றில் மட்டும் பயணம் செய்துவிட்டு மற்ற வழிகள் எல்லாமே நேர்வழிகள் அல்ல என்று கூறிவந்தது என்ன நியாயம்? கடவுளை தரிசிக்கும் மனசு வாய்ப்பிப்பதே ஒரு கொடுப்பினைதான். அதை நாம் இழந்துவிட்டோம். யாரோ ஒரு பெண் விளக்குக்குக்கு எண்ணெய் ஊற்றிவிட்டு கற்பூரம் ஏற்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அதுமாதிரி நாமும் செய்ய முடியுமா என்று பார்த்தார். முதலில் வணங்கிவிட்டு பிறகு கன்னத்தில் போட்டுக் கொள்ள வேண்டுமா அல்லது கன்னத்தில் போட்டுக் கொண்டு வணங்க வேண்டுமா? அந்தப் பெண் செய்த போது அவர் கவனிக்கவில்லை. அடுத்து யாராவது வருகிறார்களா என்று காத்திருந்தார். இந்த வயதுக்குப் பிறகு யாரிடமாவது இதைக் கேட்க முடியுமா? கேட்டால் நையாண்டி செய்வதாக நினைப்பார்களா?

நிஜமாகவே ஒரு கடவுள் இருந்தால் அவர் ஏன் பெட்ரான் ரஸ்ஸல், இங்கர்சால், பெரியார், காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் போன்றவர்களின் புத்திக்குப் புலப்படாமல் போனார்? இப்போது பெரியார், சாமி கும்பிட்டு வந்ததாகக் கூறப்படுவதுபோல இவர்கள் எல்லோருமே கும்பிட்டு வந்திருந்தால்? ஐயோ... சாமிக்கண்ணுவின் துவண்டுபோனார். நாத்திகம் பேசுவோர் அனைவருமே பொய்யர்களோ? சூது நிறைந்த குயுக்தியான கதைகளைச் சொல்லி மனிதர்களைக் குழப்பிவிட்டு அவர்கள் மட்டும் ரகசியமாக வழிபட்டவர்களோ? ஆத்திகர்களில் கற்பழிப்பவனும் போலிச் சாமியாரும் பித்தலாட்டக்காரனும் இருப்பதாகச் செய்தித்தாளில் பார்க்கிறோம். நாத்திகர்களில் மட்டும் அயோக்கியர்களும் ஊரை ஏமாற்றுகிறவர்களும் இருக்க மாட்டார்களா என்ன?

தெரு இருண்டுவிட்டது. பிள்ளையாரும் சரியாகத் தெரியவில்லை. அங்கே கிண்ணங்களில் வைக்கப்பட்டிருந்த குங்குமத்தையும் விபூதியையும் ஒரு பேப்பரில் கொட்டி மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். அவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. குபீர் உஷ்ணத்தால் தாக்குண்டு வியர்த்துக் கொட்டியது. நாம் செய்கிற இந்த காரியத்தை தோழர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் கவ்வி நாவரண்டு போனது. கால்கள் துவள அங்கேயே உட்கார்ந்துவிடலாமா என்று நினைத்தார். ஆனால் அவரையும் மீறி அவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து கொண்டிருந்தார்.

ஸ்பார்ட்டகஸின் தோல்விதான் ஏசுவைக் கொண்டுவந்தது. ஏசுவின் தோல்வியில்தான் காரல் மார்க்ஸ் வந்தார்... உண்மையாக இருக்குமா?
சற்று உரக்க 'காரல் மார்க்ஸ்' என்றார். யாரோ இவர் சொன்னதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனார்கள். இவருக்குத் தான் சத்தமாகச் சொன்னோமா என்று தெரியவில்லை. ஏசுவுக்கு பதிலா புத்தர்... மார்க்ஸுக்குப் பதிலா பெரியார்... இல்ல. இல்ல. என்று வேகமாகத் தனக்குத் தானே தலையாட்டி மறுத்துக் கொண்டார்.

வீட்டுக்கு வந்த பின்னும் யாருடனும் அவர் பேசவில்லை. தனது அறையில் உள்புறம் தாளிட்டுக் கொண்டு உலவினார். சாப்பிட அழைத்துக் கதவைத் தட்டிய மகளிடமும் மனைவியிடமும் அவர் எரிச்சலடைந்தார். சாப்பாடும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்றார். அவருக்கே அவருடைய நடவடிக்கைப் புதிதாக இருந்தது. இவ்வளவு ஆவேசமாக வாழ்க்கையில் தாம் ஒருமுறையும் இருந்ததில்லை என்று நினைவு வந்தது. கடந்த ஆறுமாதமாக தாம் பிள்ளையாரைப் பெரியார் வழிபட்டாரா என்ற குழப்பத்தில் இருந்ததை ஒவ்வொரு கட்டமாக நினைத்துப் பார்த்தார்.

முதலில் எவனோ வெத்து வேட்டுப் பயல் பெரியாரைப் பற்றி வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தார். பிறகு அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார். நெருப்பில்லாமல் புகையுமா ரக சிந்தனை... ஏன் பெரியார் மட்டும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவரா என்று நினைத்தார். அப்படி நினைக்கிற தைரியத்தையும் பெரியாரே தமக்கு வழங்கியிருப்பதாகச் சமாதனம் சொல்லிக் கொண்டார். குடம் பாலில் விழுந்த துளி விஷம். நியாயம் கிடைக்க வேண்டுமானால் சார்பு நிலை இன்றி யோசிக்க வேண்டும் என்றும் முன் முடிவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் நினைத்தார். தோழர்களிடமிருந்து விலகி நின்றார். ஆனால் அவருக்கு ஐம்பது ஆண்டு முடிவுகள் ஆணிவேராக இருந்தது. அசைக்க முடியாத ஆணிவேர் என்ற தைரியத்தில் அதன் அடி மரத்தை ரம்பம் கொண்டு அறுத்துப் பார்த்தார். படிப்படியாக தாம் தமக்குத் தாமே பேசிக் கொள்ள ஆரம்பித்திருக்கும் நிலைக்கு வந்திருப்பதை அறிந்தார். ஆனால் இது வருத்தப்படும் விஷயமாக அவருக்குத் தோன்றவில்லை. மாறாக மகிழ்ச்சியாக இருந்தது. மனது லேசாக பாரமற்று இருந்தது. தொடர்ந்து இப்படியே இருக்கவே அவர் விரும்பினார். போதையின் மனப் பிரளயம்போல ஓயாத சிக்கல் மனதில் புரண்டு கொண்டிருந்தது. ஆனால் அதை யாராவது சரி செய்து பழையபடி ஆக்கிவிடுவார்களோ என்ற சந்தேகம் வந்தது. ஆதலால் குடும்ப உறுப்பினர்கள் யாராவது அவரை உற்று நோக்கினால் தம்மை சரி செய்யத்தான் அப்படி பார்க்கிறார்கள் என்று பயந்தார். உடனே சகஜமாக இருக்கவோ, அல்லது அவர்களை மிரட்டும் தோரணையில் கத்தவோ செய்தார்.

வெளியில் இருந்து வந்ததும் தாம் இயல்பாக இருப்பதாகவே வெளியில் காட்டிக் கொள்ள வேண்டும் என்று சிரமப்பட்டார். யாரையும் சந்திக்காமல் தனியாக இருப்பதே அதற்கு சிறந்த வழி. வெளியில் இருந்து கதவைத் தட்டித் தட்டிப் பார்த்தார்கள். கதவைத் திறந்து இவர் போட்ட கூச்சலில் அனைவரும் படுக்கைக்குப் போய்விட்டார்கள். சட்டைப் பையில் இருந்த விபூதியையும் குங்குமத்தையும் எடுத்து நெற்றி நிறைய அப்பிக் கொண்டார். முதல் முறையாக குங்குமம் வைக்கப்பட்ட தன் முகம் அவருக்கு விநோதமாக இருந்தது. சிறிய தோல் பையைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்தார். புரோக்கர் என்று சொல்லிக் கொண்டார்.

சாப்பிடாமல் இருந்ததில் கைகால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. திடீரென்று பயமாக இருந்தது. கதவைத் திறந்து சாரதாவையும் ஓவியாவையும் பார்த்தார். மகள் கட்டிலின் மீது தூங்கிக் கொண்டிருந்தாள். கீழே சாரதா.
மனைவியின் அருகே சென்று படுத்துக் கொண்டார். அதை வரவேற்பவள் போல அவளும் அவரை மார்போடு அணைத்து முந்தானையால் அவரைப் போர்த்திக் கொண்டாள்.

"என்ன ஆச்சுங்க... ஏன் இப்படி மனசைப் போட்டு குழப்பிக்கிறீங்க. நாங்கல்லாம் உங்களை நம்பித்தானே இருக்கோம்'' என்றாள்.

சட்டென சுதாரித்தார் சாமிக்கண்ணு. அவள் அழுதழுது தலையணையை ஈரமாக்கி வைத்திருப்பது தெரிந்தது. இப்போதும் அழுது கொண்டிருக்கிறாள். இவள் நம் மன சஞ்சாரத்தை நிறுத்தி நம் நிம்மதியைக் கெடுக்கப் பார்க்கிறாள். இனி இவளை நம்ப முடியாது. நாலு பேரிடம் புலம்பியோ, டாக்டரை அழைத்து வந்தோ நம்மை சரி செய்ய நினைப்பாள். அதாவது சரி செய்வதாக நினைத்து நிம்மதியைக் கெடுப்பாள்.நிலைகொள்ளாமல் மூளையின் புயலில் தத்தளிக்கும் இந்த உலகின் லௌகீகத்திலிருந்து பிரித்துக் கொள்ளும் நிம்மதி இவளால் கெடப்போகிறது. இவள் அழ ஆரம்பித்துவிட்டாள். நாம் இயல்பாக இல்லை என்பதை இவள் உணரத் தொடங்கிவிட்டாள். ஆபத்து நெருங்கிவிட்டது. சாமிக்கண்ணு சரேல் என அவளிடமிருந்து உருவிக் கொண்டு எழுந்தார்.

"இனிமே ஓவியா காலேஜ் போக வேண்டியதில்லை... வீட்டைவிட்டு எங்கயும் அனுப்பாதே.''

சப்தம் கேட்டு ஓவியா திடுக்கிட்டு எழுந்தாள்.

"அப்பா என்னாச்சுப்பா?''

"உனக்கு ஒண்ணுந்தெரியாது. நீ நாளையிலிருந்து வெளிய போகாதே..''

"அப்பா'' ஓடிவந்து அவரை அணைத்துக் கொண்டு கலங்கினாள்.

"வேணாம்மா... உன்ன பராசக்திங்கிறான்... அப்புறம் புள்ளையார்தான் எனக்கு மருமகனா வருவான்... அதெல்லாம் வேணாம்... நான் சொன்னா சொன்னதுதான்... நீ வீட்டைவிட்டு வெளிய போக வேணாம்... சொல்லிப்புட்டேன்'' உருமியபடியே குறுக்கும் நெடுக்கும் நடந்தார் சாமிக்கண்ணு.

வீட்டுக்கு டாக்டரை அழைத்து வந்திருந்தார்கள். டாக்டர் மெதுவாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தார்.

"சார் நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். என்னை சரி பண்ணனும்னா ஒரே வழிதான் இருக்கு. காஞ்சிபுரத்துக்கும் ஈரோட்டுக்கும் கூட்டிட்டுப் போங்க''

"போய் அண்ணா, பெரியார் வீடெல்லாம் பாக்கணுமா?''

"ஈரோட்ல பெரியார் வீடு. வீட்டைப் பார்த்தா அவர் சாமி கும்பிட்டாரான்னு எனக்குத் தெரிஞ்சு போய்டும். காஞ்சிபுரம் போறது அண்ணா வீட்டுக்கு இல்ல. சங்கர மடத்துக்கு அவனுங்க அவ்வளவு அயோக்கியனுங்களான்னு நேர்ல பார்க்கணும்.''

டாக்டர் வெளியே வந்து சிரித்துக் கொண்டே, "சரியான பெரியார் பைத்தியம்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin